இணையத்தில் பெண்கள் எழுத ஆரம்பித்ததிலிருந்தே புத்தக விற்பனை சரிந்திருந்தது. இதில் லாக் டவுன் இன்னும் மோசமான தாக்கத்தை உண்டு பண்ணியது. புத்தக விற்பனையைப் பெருமளவில் சரித்தது.  

ஐந்நூறு வரை விற்றுக் கொண்டிருந்த நாவல்கள் தற்சமயம் ஐம்பதிலிருந்து நூறு வரை மட்டுமே விற்பனையாகிறது. அதனால் நஷ்டம் மட்டும் ஏற்படவில்லை. இடப்பற்றாக்குறை பிரச்னையும் உண்டானது.

விற்கப்படாத நூல்களைச் சேமித்து வைக்க இடமில்லாததால் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை புது நாவல்களை இறக்குபவர்கள் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே புதிதாகப் புத்தகங்களைப் பதிப்பித்தார்கள். சில பிரபலமான எழுத்தாளர்களுக்குத்தான் அந்த இரண்டு முறையும்கூட.

மேலும் சில பதிப்பகங்கள் புத்தகம் பதிப்பிப்பதைக் குறைப்பதற்குப் பதிலாகப் பதிப்பிக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டன. தேவைக்கு ஏற்ப புத்தகம் அடித்து விற்கத் தொடங்கினர். இதனை POD (print on demand) என்பார்கள். நூறுக்கும் குறைவாகவே புத்தகம் பதிப்பிக்கும் போது நூலின் விலையும் கூடி விடுகிறது. எழுத்தாளர்களுக்கு ராயலிட்டி கொடுப்பதும் இயலாத காரியமாகிவிடுகிறது.

இதனாலேயே குடும்ப நாவல் உலகம் அச்சுப் பதிப்பகங்களை விடவும் இணைய வாசிப்பு செயலிகள் பின்னே செல்ல ஆரம்பித்துவிட்டது. நூலகங்கள் சென்று வாசித்தவர்களும் கரோனா லாக் டவுனுக்குப் பிறகு இணையத்தில் வாசிக்கும் அனுபவத்தைக் கற்றார்கள்.

அதிலும் மாதத்திற்கு நூறிலிருந்து இருநூறு வரை செலவழித்து சப்ஸகிரைப் செய்தால் பிடித்தமான அத்தனை நாவல்களையும் வாசிப்புச் செயலிகளின் மூலம் வாசிக்க முடியும்.

அதிலும் பெரும்பாலான பெண் வாசகர்கள் பயணிக்கும் நேரம் அல்லது இரவு உறங்கும் நேரத்தில்தான் வாசிக்கிறார்கள். விளக்கை அணைத்துவிட்ட பிறகு புத்தகங்களை வாசிப்பது இயலாத காரியம்.

ஆனால் வாசிப்பு செயலிகளில் இதற்காகவே நைட் மோட் வசதி உண்டு. திறன்பேசியின் திரை கறுப்பிலும் எழுத்து வெள்ளையிலும் ஒளிரும். ஒரு வகையில் டிஜிட்டல் வாசிப்பில் இருக்கும் பாதகமும் இதுதான்.

அதிக நேரம் திறன்பேசியைக் கையில் வைத்திருப்பதும் திரையை வெறிப்பதும் உடல் நலத்திற்குக் கேடு என்று தெரிந்தபோதும் ஜனரஞ்சக வாசிப்பில் பெண்களுக்கு இருக்கும் அதீத ஆர்வம் அவற்றை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது.

இதுவே டிஜிட்டல் வாசிப்பு முறையிலிருக்கும் சாதகம் என்றால் காகிதத்தின் பயன்பாட்டைக் குறைப்பது. மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்குக் கெடுதல் என்கிற விழிப்புணர்வை மரங்களை வெட்டித் தயாரிக்கும் காகிதங்களைக் கொண்டு செய்யப்படும் புத்தகங்கள் மூலமாகவே ஏற்படுத்துவது எத்தனை பெரிய அபத்தம்.

இந்தச் சாதக பாதகங்களை எல்லாம் கடந்து வாசிக்கும் பழக்கம் டிஜிட்டல் மயமாக்கப்படுதலில் இருக்கும் அபாயகரமான விஷயம் என்பது அவை கார்பரேட்களின் வசம் சென்றிருப்பதுதான்.

குடும்ப நாவல் உலகத்தில் அதிகப் பிரபலமாக இருக்கும் வாசிப்பு செயலிகள் என்றால் கிண்டில் மற்றும் பிரிதிலிபி. இச்செயலிகளிலும் இலவசமாகப் படிக்கும் வசதிகள் உண்டு.

முக்கியமாக கிண்டிலில் குடும்ப நாவல் எழுத்தாளர்கள் தங்கள் நாவல்களை மாதத்திற்கு ஒரு முறை இலவசமாக வழங்குகிறார்கள். சபஸ்க்ரைப் செய்யாத வாசகர்களும் இதனால் பயன் பெற முடியும்.      

நூலகம் சென்று வாசிப்பவர்கள் ஒரு மாதத்திற்குக் குறைந்தபட்சம் மூன்று நூல்களை வாசிப்பார்கள். அதிகபட்சமாக ஐந்து. ஆனால் டிஜிட்டல் செயலிகள் இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை வாசிப்பதற்கான வழிமுறையையும் வசதியையும் உருவாக்கியுள்ள நிலையில், வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள அதிகமாகவும் அதிவேகமாகவும் எழுத எழுத்தாளர்களையும் தூண்டுகிறது.

வேகமாக வாசிப்பது சரி. அதே அளவுக்கு வேகமாக எழுத ஊக்குவிப்பதில் இருக்கும் சிக்கல்தான் எழுத்தின் தரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.

கார்ப்ரேட்கள் நுழைந்து ஆளத் தொடங்கிவிட்ட எல்லாத் துறைகளிலும் ஏற்படும் அதே பாதிப்புதான். குவாலிட்டிகள் தரைமட்டத்திற்குக் குறைத்தல், குவான்டிட்டிகளைப் பல மடங்கு அதிகரித்தல்.

கிண்டில் செயலியைப் பொறுத்தவரை நானூறு பக்கங்கள் கொண்ட நாவல்களை எழுதிப் பதிவேற்றம் செய்தால் ஓரளவு வருமானம் பார்க்கலாம். அதிகபட்சம் எழுநூறு பக்கம் எழுதிப் பதிவிட்டால் வெளிநாட்டு டாலர், உள்நாட்டு ரூபாய் என அப்படி இப்படி என்று ஒரு மாதத்திற்கு எட்டு முதல் பத்தாயிரம் வரை சம்பாதித்து விடலாம். ஆனால் இது ஒரு தோராயமான கணக்கு மட்டுமே. இதை விடவும் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் உண்டு.    

‘எங்களை வைச்சு காமெடி கீமடி பண்ணலையே?’ என்று கேட்பவர்களுக்கு, சத்தியமாக இல்லை.

இங்குள்ள நிறைய குடும்ப நாவலாசிரியர்களின் மாத வருமானம் இது. முன்பு சொன்னது போல அந்த நாவலின் வகை மட்டும் ரொமான்ஸாக இருந்தால் உங்கள் காட்டில் மழைதான். அதுவே ஆன்ட்டி ஹீரோ நாவலாக இருந்தால் அடை மழை.

Kdp அதாவது kindle selectஇல் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களுக்கு Kindle Edition Normalaized pages (Kenp read counts) அடிப்படையில்தான் ராயல்டி வழங்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை வாசிக்கப்படும் பக்கங்களைப் பொறுத்தது.  ஆனால், இந்த எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டால் சிக்கல்தான். அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்குள் அந்த எண்ணிக்கையை அப்படியே அறுபதாயிரம் வரை சரித்து நமக்கான ராயல்ட்டியை ஆறாயிரத்திற்கும் கீழ் இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்கள்.

‘உள்ளதும் போச்சு நொள்ளை கண்ணா’ என்ற நிலைமைதான்.

ஒரு வேளை பத்தாயிரத்திற்கும் மேல் கொடுக்கக் கூடாது என்பது அவர்களது கொள்கையாக இருக்கலாம். ஆனால் ஆரம்பக் காலகட்டத்தில் இந்த மாதிரி பிரச்னைகள் வந்ததில்லை. முதலில் அள்ளி அள்ளிக் கொடுப்பது போலக் காட்டிவிட்டு, பின்னர் இது போன்று சில வழிமுறைகளைக் கையாண்டு எழுத்தாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய வருமானத்தைக் குறைக்கிறார்கள்.

வாசிப்பு எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து இங்குள்ள பல குடும்ப நாவல் எழுத்தாளர்கள் ஃபேஸ்புக்கில் புலம்பித் தீர்த்துள்ளனர். புகார் செய்துள்ளனர். மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர்.

இதற்கெல்லாம் அவனிடமிருந்து வரும் ஒரே பதில். ‘வாசிப்பு எண்ணிக்கை தவறான முறையில் அதிகரித்துள்ளது’. இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத சில விதிவிலக்கான எழுத்தாளர்களும் இங்கு உண்டு. வேறு யார்? தி கிரேட் ஆன்ட்டி ஹீரோ ஸ்ட்ரீயோடிப்பிக்கல் எழுத்தாளர்கள்தாம்.

ஆனால் மற்ற செயலிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தாளர்களுக்கு வருமானம் தருவதில் கிண்டில் செயலிகளே பரவாயில்லை என்றளவுக்குதான் மற்ற வாசிப்பு செயலிகள் அல்லது ஒலிப்புத்தகச் செயலிகள் உள்ளன.

அதுவும் வருமானம் தருவதாகச் சொல்லி கதைகளின் டிஜிட்டல் உரிமைகளைப் பிடுங்கிக் கொள்ளுதல், ஒரு நாளைக்கு மூவாயிரம் வார்த்தைகளை எழுதி அனுப்பச் சொல்லிவிட்டு முப்பது அத்தியாயங்களுக்கு மேல் எழுதி அனுப்பிய பின் பணம் தராமல் இழுபறியில் விடுவது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்கிறார்கள்.

வீட்டிலிருந்தபடி ஏதாவது வருமானம் பார்க்க வேண்டும் எனும் பெண் எழுத்தாளர்களின் உழைப்பைச் சுரண்டுகிற வேலைதான் இது.

எழுத்தின் மூலமாகப் பணம் ஈட்டுவதை ஒரு பெரிய குற்றமாகப் பாவிக்க முடியாதுதான். ஆனால் அதில் பாதிக்கப்படுவது தரமான எழுத்துகளும் வாசிப்பும்தான். உருப்படியான ஒரு நாவலை எழுதுவதற்குக் குறைந்தபட்சம் ஒன்றிலிருந்து இரண்டு மாதமாவது ஆகும்.

ஆனால் இவர்கள் பத்து நாளிலும் பதினைந்து நாளிலும் எழுதி புதுப்புது நாவல்களாக இறக்குமதி செய்யும் போது அது போன்ற வகை நாவல்களே திரும்பத் திரும்ப வாசிப்புத் தேர்வுகளில் காண்பிக்கப்படுகின்றன.

அதிலும் வாய்ஸ் டைப்பிங்கிற்குப் பழக்கப்பட்டவர்களின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். இத்தனை வேகமாக எழுதிக் குவிக்கப்படுவதன் காரணத்தால்தான் இது போன்ற செயலிகளில் அட்சயபாத்திரமாக நூல்கள் சுரந்து கொண்டே இருக்கின்றன. தரம் மலிந்து கொண்டே வருகின்றன.

நேரமெடுத்து நிதானமாக எழுதிப் பதிவேற்றம் செய்யப்படும் நூல்களையும் அது போன்று எழுதும் எழுத்தாளர்களையும் தேடித் தேடித்தான் நாம் கண்டடைய வேண்டி இருக்கிறது.

இதுவே பிரதிலிபி செயலியை எடுத்துக் கொண்டால் அங்கே மாதாமாதம் புதுக் கதைகளை இறக்கும் எழுத்தாளர்களுக்குச் சுமார் ஐந்தாயிரம் வரை தருகிறார்கள்.  இங்கேயும் ஆன்ட்டி ஹீரோ கதைகளுக்குத்தான் அதிக வருமானம். அவர்களாக ஊக்குவிப்பது விளம்பரம் செய்வதும்கூட இந்த வகை எழுத்துகளைத்தான்.

இரண்டு வாரங்களாக பிரதிலிபி செயலி முகநூலில் என்னைத் துரத்தித் துரத்தி வாசிக்கச் சொல்லி விளம்பரம் செய்த நாவலின் சில வரிகளை இங்கே பகிர்கிறேன்.

‘திருமணம் நடைபெறுவதற்கான எந்த அடையாளமும் இல்லை அந்த வீட்டில். ஒரு குடிசை வீட்டு வாசலில் நடைபெறும் திருமணம். அங்குக் கூடி இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தாலி கட்ட வேண்டியவனோ சாதாரணச் சட்டை பேன்ட்டில் திறன்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் திருமணம் குறித்த சந்தோஷம் இல்லை. அதற்கு மாறாக எரிச்சல் முட்டி நின்றது.

ஆறடி ஆண் மகன். மீசை இல்லாத தமிழ் மகன். அவனைச் சுற்றி நின்றவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் படிக்காத மக்கள். சின்னஞ் சிறு பெண்ணை அழைத்து வந்து நாயகன் அருகில் நிற்க வைத்ததும் அவள் முகம்கூட பார்க்காது ஓரமாகக் கிடந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டிவிட்டான்’

இந்தப் பத்து வரிகளே உங்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கும். பத்துப் பொருத்தமும் பக்காவாகப் பொருந்தி இருக்கும் ஆன்ட்டி ஹீரோ நாவல் வகையில் சேர்த்தி என்று.

கடமைக்கு என்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்து நாயகன் அவளுடைய விருப்பு வெறுப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் பாலுறவு கொள்வதுதான் இந்த அற்புதமான காவியக் கதையின் ஆரம்ப அத்தியாயம்.

சொன்னால் நம்புவீர்களா? அந்த எழுத்தாளருக்கு மட்டும் முப்பதாயிரம் பாலோயர்ஸ். அந்த நாவல் மில்லியன் ரீட்ஸ் தாண்டி இன்னும் அதிவேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.

ஏன் முன்னேறாது? இது போன்ற காவியங்களைத்தானே அவர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். இது போன்ற நாவல்களை விளம்பரம் செய்து வாசகர்களைத் தங்கள் செயலிகளுக்குள் வரவழைக்கிறார்கள்.

ஆன்ட்டி ஹீரோ கதைகளில் தொடங்கி வேம்பயர் லவ், சி ஈ ஓ லவ் என்று வெளிநாட்டினரின் விருப்பமான வாசிப்புகளை இங்கே கொண்டு வந்து குப்பையாகக் கொட்டுகிறார்கள்.

கிண்டில், பிரதிலிபி மட்டும் இல்லை. சமீபமாக அதிகரித்து வரும் ஒலிப்புத்தகச் செயலிகளும் இதே வேலையைத்தான் செய்கின்றன. அவர்களது வியாபாரத்திற்குத் தோதாக எழுதுபவர்களை மட்டும் பிரபலப்படுத்துகின்றனர்.

டாப் நூறு மற்றும் பெஸ்ட் செல்லர்களைத் திறந்தால் ராட்சசனின் ரசிகை, ராவணனின் முயல்குட்டி, அசுரனின் தேவதை, மான்ஸ்டரின் தோட்டத்தில் வீசும் மல்லிகை வாசம், கயவனே கணவனே என்று பட்டியல்கள் இப்படியாக நீள்கிறது. இதெல்லாம்தான் வாசகர்களுக்கான பிரத்தியேகப் பரிந்துரைகளிலும் இடம்பிடித்திருக்கின்றன.

பாரதியார் கவிதைகள், சினிமா பாடல்களின் வரிகளைச் சுடுபவர்கள் தற்சமயம் ராட்சசன், ராவணன், அசுரன், மான்ஸ்டர் என்று தலைப்புகளை நோக்கி முன்னேறி இருக்கிறார்கள்.

அதுவும் நாயகன் என்றால் ராட்சசன், ராவணன் என்றும், நாயகி என்றாலே ரதி, தேவதை என்கிற ஸ்டீரியோடைப் மனநிலையிலிருந்து இவர்களும் வெளிவருவது இல்லை. வாசகர்களையும் வெளிவர விடுவதில்லை.

இது போன்ற கதைகளுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது எங்களிடம் சண்டைக்கு நிற்பவர்கள் முதலில் எடுத்து வைக்கும் வாதம் தாங்கள் நினைத்ததை எழுத எங்களுக்குச் சுதந்திரம் உண்டு என்பதுதான். ஆனால் ஆபாசமான கதைகளைப் பொதுவெளியில் விளம்பரப்படுத்தி விற்க, நமது சட்டத்தில் அனுமதி உண்டா?

சில வருடங்கள் முன்பு வரை மறைத்து ஒளித்து விற்கப்பட்ட ஆபாசக் கதைகள், இன்று பட்டவர்த்தன 18+ முத்திரையுடன் கிண்டில் பிரதிலிபிகள் செயலிகளின் பெஸ்ட் செல்லர்களாக வலம் வருகின்றன.

வாசிப்பு செயலிகளை விடுங்கள். இலக்கியவாதிகளின் படைப்புகள் தொடங்கி குடும்ப நாவல்கள் வரை பலவிதமான அச்சுப் புத்தகங்களை விற்கும் பிரபலமான இணையதளத்தில் கூட இந்த வகை ஆபாசமான நாவல்கள் விற்கப்படுகின்றன. அதுவும் என்ன பெயரில் தெரியுமா? புத்தம் புதுக் குடும்ப நாவல்கள் என்கிற பெயரில்.

இது குறித்துக் குடும்ப நாவல் எழுத்தாளர் கிருஷ்ணப்ரியா நாராயண் நேரடியாக அந்த இணையதள உரிமையாளரிடமே பேசினார்.

“18+ புத்தகங்களை வாங்குறது, விற்குறது எல்லாம் உங்க இஷ்டம்…. ஆனா அது ஏன் குடும்ப நாவல் கேட்டகிரில வெளியிடுறீங்க” என்கிற அவரின் கேள்விக்கு அப்போதைக்கு மழுப்பலான காரணங்களைச் சொன்னாரே ஒழிய, அதன் பிறகு அவர் எந்தவிதமான மாற்றத்தையும் தங்கள் இணையதளத்தில் செய்யவில்லை.  

இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம்  ஐந்து வருடங்களுக்கு முன்னதாக நடந்த ஒரு முக்கியச் சம்பவத்தை இங்கே பதிவிட வேண்டும். அப்போதுதான் குடும்ப நாவல்களும் ஆபாசமான கதைகளும் எப்படி ஒன்றோடு இன்னொன்று கலந்து போனது என்கிற காரணம் புரியும்.

(தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.