சமூகவலைதளக் குடும்ப நாவல் உலகத்தில் ‘ஆன்ட்டி ஹீரோ’ என்று சொன்னாலே போதும். குதுகலமாகிவிடுவார்கள். அதுவே அவர்கள் விரும்பிய ஆன்ட்டி ஹீரோ கதைக்குப் பொங்கல் வைக்கிறேன் என்று மட்டும் சொல்லிப் பாருங்கள். அவ்வளவுதான். ‘ஓதலவா நன்னு ஒதலவா’ என்று ஆக்ரோஷமான சந்திரமுகியாக மாறிவிடுவார்கள்.

அதன் பின் குடும்ப நாவல் உலகம் கலவரப் பூமியாக மாறிவிடும். அப்படிச் சில கலவரங்களில் நானுமே வீரத் தழும்புகள் எல்லாம் பெற்றதுண்டு. அதில் சமீபமாக நிகழ்ந்த ஒரு சம்பவம்.

‘மாமன்னன்’ படம் வெளியானது. அந்தப் படத்தின் கதாநாயகனை விடுத்து வில்லனைச் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக்கினார்கள். ஆனால் அந்தப் புகழ்ச்சி ரத்தினவேலு என்கிற கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்த ஃபஹத்திற்குத் தரப்பட்டதில்லை. உள்நோக்கத்துடன் ஆதிக்கச் சாதி வெறிபிடித்தவர்கள் செய்த வேலைதான் அது.

இப்படியாக ஒரு கூட்டம் ரத்தினவேலுவின் படத்தை முகநூலில் பகிர்ந்து சாதிய எண்ணங்களுக்குக் கொம்பு சீவி விட்டுக்கொண்டிருந்த நிலையில், ‘ஊரே பற்றி எரியும்போது பிடில் வாசித்தானா நீரோ மன்னன்’ என்கிற கதையாகக் குடும்ப நாவல் எழுத்தாளர்களுள் சிலர் இந்த ரத்தினவேலுவின் காட்சிகளைப் பகிர்ந்து சிலாகித்துக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த நம் வாய் சும்மா இருக்குமா? பொறுக்க முடியாமல், ‘ஆன்ட்டி ஹீரோவைக் கொண்டாடும் மனநிலைதான் இது’ என்று குத்தலாக ஒரு பதிவைப் போட்டுவிட்டேன். அவ்வளவுதான் பல நூறு வாட்ஸ் கரண்ட் கம்பியில் கை வைத்த கதையாகிப் போனது. ஷாக்கடித்துத் தள்ளிவிட்டார்கள்.

நான் இதைச் சொன்னதும், முன் முடியெல்லாம் நட்டுக்கிட்டு நிற்கும் கருகிப் போன வடிவேலின் முகம் வந்து போயிருக்குமே உங்களுக்கு! அன்றைய என்னுடைய நிலைமையும் அதேதான்.

‘அடி கொடுத்த கைப்பிள்ளைகே இந்தக் கதினா, அப்போ அடி வாங்கின கட்டதுரைக்கு’னு என்று ஒரு கூட்டம் எப்போதும் போல என்னை உசுபேற்றிவிடும் வேலையைச் செவ்வனே செய்தது. இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்தான். இது போல பல சம்பவங்கள். பல அடிகள். பற்பல தழும்புகள்.

அது சரி. கல்பாக்கத்திற்கும், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்குமே பவர் கொடுக்குமளவுக்குச் சக்திவாய்ந்த இந்த ஆன்ட்டி ஹீரோக்கள் யார்?

வாருங்கள். ஒரு சுவாரசியமான ஆன்ட்டி ஹீரோ கதை ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு.  

கதையின் நாயகி மாயா. மிகவும் புத்திசாலியான துருதுருவென்ற பெண். அம்மா, அப்பா, தம்பி என்று  அழகான சிறிய குடும்பம்.

ஆன்ட்டி ஹீரோக்களின் அக்மார்க் பணக்காரத் திமிர் பிடித்த நாயகன் சுதாகர். கம்பீரமான, கவர்ச்சிகரமான தோற்றம் உடையவன். அவனைத் தற்செயலாகச் சினிமா அரங்கத்தில் பார்க்கிறாள் மாயா. பொதுவெளியில் அநாகரிகமாக ஒரு பெண்ணை அவன் அணைத்தபடி நின்றிருந்த விதம் மாயாவை எரிச்சல்படுத்துகிறது. ஆரம்பப் பார்வையிலேயே அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போகிறது.  

ஒருமுறை அவள் தன் வீட்டின் அருகில் இருந்த மாங்காய் மரத்தின் மீது ஏறி, காய்களைப் பறித்துக் கொண்டு, இறங்க எத்தனிக்கும் போது எதிர்பாராவிதமாகத் தவறி விழப் போக, அங்கே வந்த சுதாகர் அவளைத் தாங்கிப் பிடிக்கிறான். தவறான முறையில் அவளைத் தீண்டுகிறான் (எல்லாம் ரொமான்ஸ் கதையிலும் இப்படி ஒரு காட்சி வந்துவிடும்).

அவனுடைய அத்துமீறிய செய்கையில் கோபமடைகிற மாயா, “நக்குகிற நாய்க்குச் செக்குனு தெரியுமா… சிவலிங்கம்னு தெரியுமா” என்று அவனைக் கடிந்து கொண்டதோடு நிறுத்தாமல், கன்னத்தில் அறைந்தும் விடுகிறாள். (ஓர் ஆணைப் போய்… அதுவும் ஆறடி வளர்ந்த பணக்கார ஆணைப் போய் ஒரு பெண் கைநீட்டி அடிக்கவும் திட்டவும் செய்யலாமா? குடும்ப நாவல் உலகத்தைப் பொறுத்தவரை இது தண்டனைக்குரிய குற்றம்).

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத சுதாகர் வஞ்சத்துடன் மாயாவை ஊர், பேர், மொழி என்று எதுவும் தெரியாத ரகசிய பங்களா ஒன்றில் கடத்திக் கொண்டுவந்து அடைத்துக் கொடுமைப்படுத்துகிறான். (ஆன்ட்டி ஹீரோக்களுக்கு மட்டும் இது போன்ற கடத்தல் பங்களா எங்கிருந்துதான் கிடைக்கிறதோ?) 

பட்டினிப் போடுவது, நாயை வைத்து மிரட்டுவது, கையை உடைப்பது, கடும் மழையில் அவளை வெளியே நிறுத்தி குளிரில் உறைய வைப்பது என்று அவளை முடிந்தளவு கொடுமைச் செய்கிறான். அவளாக வந்து அவனிடம் மண்டியிட வேண்டுமென்பது அவனின் எதிர்பார்ப்பு. (இதெல்லாம் செஞ்சாதானே அவன் ஆன்ட்டி ஹீரோ!)

அவள் கெஞ்சிக் கதறிப் பார்த்தாலும் எந்த இடத்திலும் மனமிறங்கி வராமல் தன் கொடுமைகளைத் தொடர்கிறவன், அவள் உடல் மிகவும் பலவீனப்பட்டிருந்த சமயங்களில் அவளின் விருப்பமின்றி அவளுடன் உறவு வைத்துக் கொள்கிறான். (இதெல்லாம்தான் ஆன்ட்டி ஹீரோ அகராதியில் ரொமான்ஸ்).

இத்தனை கொடுமைகளுக்கு இடையிலும் மாயாவும் சுதாகரும் லகுவாகப் பேசிக்கொள்ளும் காட்சிகளும் கதையில் உண்டு. நாளடைவில் இருவருக்கும் இடையில் மெல்ல மெல்ல நட்பு மலர்கிறது. (கடத்தியவனுடனே பிணைப்பு உண்டாகிற மனநிலை. இதனை ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என்பார்கள்).

அவள் கருத்தரித்த பிறகு தன்னுடனேயே இருந்து விடச் சொல்லி சுதாகர் கேட்க, மாயா உறுதியாக மறுக்கிறாள். ஐந்து மாதக் கர்ப்பிணியாக அவளைத் திருப்பி அனுப்புகிறான். (என்ன ஒரு பெருந்தன்மை?)

அவள் குடும்பத்தினர் யாருமே அவள் சொல்வதை நம்பவில்லை. அவளை ஏற்க மறுக்கிறார்கள். அவளை அவமானப்படுத்திப் பேசுகிறார்கள். அதன் பின்பு தன்னந்தனியாகக் குழந்தை பெற்று நிராதரவாக நிற்கும் மாயா, மீண்டும் சுதாகர் கடத்தி வைத்திருந்த ஊருக்கே திரும்புகிறாள். சுதாகரே அவளை காரில் அழைத்துச் செல்கிறான்.

குழந்தையை அவனிடம் தந்துவிட்டு அவள் செல்ல எண்ணுகிறாள். ஆனால், அவன் அவளைத் தன்னுடனேயே இருந்துவிடச் சொல்லிக் கேட்க, அவள் மறுத்துத் திரும்பிச் செல்ல எத்தனிக்கும்போது, அவன் வீட்டுக் காவல் நாய் அவளைக் கடித்துக் குதறிவிடுகிறது. (பின்ன ஹீரோ சார் சொன்னா கேட்கணுமா இல்லையா… அதுவும் ஆன்ட்டி ஹீரோ வேற!)

சுதாகர் எதிர்பாராமலே இந்தச் சம்பவம் நிகழ்ந்து முடிந்துவிட, இதனால் மாயா மரணிக்கும் நிலைக்குச் சென்று விடுகிறாள். அந்தச் சமயத்தில் மாயாவின் தோழி மூலமாக நடந்தவற்றை அறிந்த அவள் பெற்றோர், அவளைப் புரிந்துகொண்டு தேடி வருகிறார்கள். அவளை வீட்டில் வைத்துச் சிகிச்சை தந்து சுதாகர்தான் கவனித்துக்கொள்கிறான்.

சுதாகரைச் சந்தித்த அவன் பெற்றோர் கோபத்துடன் நிந்தித்தாலும் மகள் இருக்கும் நிலையில் அவளை அங்கிருந்து அழைத்துப் போக இயலாமல் தவிக்கிறார்கள். வேறுவழியின்றி அவன் அம்மா அங்கேயே தங்கி மகளைக் கவனித்துக் கொள்கிறார்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் சுதாகரின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் மூலமாக அவன் மிகவும் நல்லவன், வல்லவன் என்றெல்லாம் தெரிய வருகிறது. அதுவும் அந்த ஸோ கால்ட் ஆன்ட்டி ஹீரோ கருணைக் கடல் அங்குள்ள மலைக்கிராமப் பெண்களைப் படிக்க வைக்கிறாராம். (பத்துப் பெண்களை இலவசமா படிக்க வைச்சா ஒரு பெண்ணைக் கடத்தி வந்து பலாத்காரம் செய்யலாம் போல.)

மறுபுறம் சுதாகர் வளர்ந்த விதம்தான் அவனுடைய இந்தக் குரூரச் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பு என்று நாயகி நினைக்கிறாள். (இவனுக அம்மா, அப்பா இவனைச் சரியா வளர்க்காததுக்கு எங்கிருந்தோ வந்த பொண்ணு… இல்ல இல்ல கடத்திட்டு வந்த பொண்ணு… நாயிடமும் பேயிடமும் கடி வாங்கணுமாம். அதற்குப் பிறகு இவனுங்க போனா போகுதுன்னு திருந்துவானுங்களாமாம்.)

இறுதியாக மாயாவிடமும் அவள் பெற்றோரிடமும் சுதாகர் மன்னிப்பு வேண்டுகிறான். அவர்கள் மன்னிப்பது மட்டுமல்லாது மகளை அவனுக்குத் திருமணமும் முடித்து வைக்கிறார்கள். (கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்கும் புனிதச் செயல்!)

அதிலும் பாருங்கள். மாயாவின் அம்மா இறுதிக் காட்சியில் சுதாகருக்காக மகளிடம் பரிந்து பேசி, சேர்ந்து வாழச் சொல்லி மகளுக்கு அறிவுரை வழங்குகிறார். (அதுவரைக்கும் சுதாகர் மண்டையை உடைக்கணும்னு கொந்தளிச்சுட்டு இருந்த என் மனசாட்சி மாயாவின் அம்மாவையும் போட்டுத் தள்ளிட்டா என்னனு காண்டாகிடுச்சு.)

சுதாகரை மன்னித்ததைக்கூட நாம் போனால் போகிறது என்று விட்டுவிடலாம். ஆனால், உண்மை தெரிந்த பிறகும் மாயாவின் பெற்றோர் அவனை அடிப்பது போல அல்லது காரி உமிழ்வது போன்ற ஒரு காட்சிகூட எழுதப்படாததைத்தான் என்னால் மன்னிக்கவே முடியவில்லை. (வேறு என்ன? ஆன்ட்டி ஹீரோ கெத்தைக் காப்பாற்றுவது?)

அதுவும் காவல்துறையில் புகார் செய்வது பற்றியும் பேசப்படவில்லை. ஒரு வேளை அவன் பணம் படைத்தவன் என்பதால் அவன் செய்தது எல்லாம் மன்னிக்கக்கூடிய குற்றமாகிவிடுகிறதா?

சுதாகரைக் கைது செய்ய வைப்பதற்குப் பதிலாக அவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அடிப்படுவது, மிதிப்படுவது, கடிபடுவது எல்லாம் நாயகிதான். ஆனால், நாயகன் ஒரு சின்ன தூசிகூடப் படாமல் திருந்திவிடுகிறான்.(ஒரு நியாயம் வேணாமாடா?)

இந்த நாவலின் பெயர் மயங்குகிறாள் ஒரு மாது. ரமணிசந்திரன் நாவல்களில் மிகவும் பிரபலமான ஒன்று. குடும்ப நாவல் உலகத்தில் சுதாகருக்கு என்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

சுதாகர் போன்று அவர் எழுதிய மற்ற நாவல்களின் நாயகர்களும் அயோக்கியர்கள். சைக்கோக்கள். சாரி சாரி. ஆன்ட்டி ஹீரோக்கள். அப்படிதான் இங்குச் சொல்ல வேண்டும்.

அதேநேரம் மயங்குகிறாள் ஒரு மாது நாவலில் மாயாவிற்கு நேர்ந்த கொடுமை ஒன்றும் நம் சமூகங்களில் நடக்காதது இல்லை. இது போன்ற சைக்கோபாத்துகள் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கடத்தப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு என வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத துயரங்களை அனுபவித்த பெண்களின் உண்மைக் கதைகளை நாம் செய்திகளில் பார்க்கவும் கேள்விப்பட்டிருக்கவும் செய்வோம். இந்த நாவலைப் படித்ததுமே அது போன்ற ஒரு செய்தி என் நினைவில் வந்து குதித்தது.

சொந்த மகளை 24 வருடங்களாக வெளியுலகத்தையே பார்க்காமல், ஏழு வருடத்திற்கும் மேலாகத் தன்னுடைய வீட்டின் அடித்தளத்தின் ரகசிய அறையில் அடைத்து வைத்து வன்கொடுமை செய்திருக்கிறான் ஓர் ஈனப்பிறவி. ஒட்டுமொத்த உலகத்தையே அதிரச் செய்த குற்றச்செயல்களில் இது மிக முக்கியமான ஒன்று.

அந்தப் பெண் அச்சிறிய அடித்தளத்திற்குள்ளே கருத்தரித்து, குழந்தை பெற்று, அந்தக் குழந்தைகளை வளர்த்து என்று நினைத்துக்கூடப் பார்க்க முடியாத கொடூரங்களை அனுபவித்திருக்கிறாள்.

Joesf Fritzl case, father trapped daugter in basement – உங்களுக்கு மனதைரியம் இருந்தால் கூகுளில் தேடி இந்தச் செய்தியை வாசித்துக் கொள்ளலாம். நான் கல்லூரிப் படிக்கும்போது கேட்ட இந்தச் செய்தி இன்னும் என் மனதைவிட்டு நீங்காமல் அரித்துக் கொண்டிருக்கிறது.

அந்தப் பெண்ணின் நிலை மாயாவின் துயரத்திற்கு ஈடானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்தக் கொடூரத் தந்தைக்கும் சுதாகருக்கும் என்ன வேற்றுமை இருக்கிறது, உறவு முறையைத் தவிர.

என்னுடைய இந்த ஒப்புமை அந்த நாவலின் ரசிகைகளுக்குக் கோபத்தை வரவழைக்கக்கூடும். சரி இரண்டும் வேறு வேறு என்று வைத்துக் கொண்டால் கூட கடத்துதல், அடைத்து வைத்தல், கொடுமை படுத்துதல், பலாத்காரம் செய்தல் போன்றவை எப்போது மன்னிக்கக் கூடிய குற்றங்களாக மாறின?

கடத்தலிலும் கொடுமைப் படுத்தலிலும் இதெல்லாம் மன்னிக்கக் கூடியவை அல்லது மன்னிக்க முடியாதவை என்று எழுத்தாளர்கள் எப்படித் தரம் பிரிக்கிறார்கள்? ஆறடி வளர்ந்து ஆடம்பரமும் பணமும் நிறைந்த நாயகர்கள் செய்தால் அது மன்னிக்கக்கூடிய குற்றமாக மாறிவிடுகிறதா?

இந்தக் கதை ஓர் உதாரணம் மட்டும்தான். இது போன்று பல உதாரணங்கள் ரமணிசந்திரன் நாவல்களில் உண்டு.

தொடுகோடுகள் நாவல்களில்தாம் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டதில் அவளைக் கடத்திச் சென்று அவள் உணராமலே பலாத்காரம் செய்துவிடும் நாயகன். ‘மானே மானே மானே’ நாவலில் தன்னிடம் பணிபுரியும் நாயகியைத் தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கும் நாயகன். ‘நாள் நல்ல நாள்’ நாவலில் நாயகியைப் பழிவாங்க அவளைத் திருமணம் செய்து தனி பங்களாவிற்கு அழைத்துவந்து தன் நண்பர்கள் மூலமாகச் சொந்த மனைவியையே கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயலும் நாயகன்.

இந்த நாவல்களில் சொல்லப்படும் குற்றங்கள் எதுவும் கற்பனை இல்லை. சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்கிற கொடூரங்கள்தாம் இவை எல்லாம். ஆனால் ஆன்ட்டி ஹீரோ என்கிற பெயரால் இவற்றை எல்லாம் ரொமான்டிசைஸ் செய்யப்படுவதுதான் ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

இந்தக் கதையில் வரும் நாயகர்கள் எல்லாருமே நாவலின் முதல் பாதியில் கீழ்த்தரமாக நடந்து கொண்டுவிட்டு, பின் இரண்டாம் பாதியில் தண்டனைகள் ஏதும் இல்லாமல் மனம் திருந்திவிடுகிறார்கள். மன்னிக்கப்பட்டும் விடுகிறார்கள்.  

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் இந்த நாவல்களைப் பெண்கள் கண்மூடித்தனமாக ரசித்ததும் பொழுது போக்கின் நோக்கத்துடன் வாசித்ததும் ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இன்றும் இந்தப் பிற்போக்குத்தனங்களை எப்படி இவர்களால் கொண்டாட முடிகிறது?

போதாக்குறைக்கு ரமணி அம்மாவைத் தொடர்ந்து வந்த பல பெண் எழுத்தாளர்கள் இந்த ஃபார்மூலாவை பத்திரமாகப் பாதுகாத்து அப்படியே அடுத்த சந்ததிக்கும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம் இந்த வகை நாவல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் வாசகர்களும் இங்கு உண்டு. அப்படியாக ஆன்ட்டி ஹீரோக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுக்கும்போது, ‘இது வெறும் கதை. வெறும் கற்பனை. பொழுதுபோக்கு வாசிப்பு’ என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுவதோடு நிறுத்தாமல், ஒரு பெருங்கூட்டமாகச் சுற்றி வளைத்து கேள்வி கேட்பவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுகிறார்கள்.

மேலும் ஆஃல்பா ஆண்களை ரசிக்கும் மனநிலைதான் ஆன்ட்டி ஹீரோ ரசனையில் பிரதிபலிப்பதாக இது போன்ற கதைகளை வாசிக்கும் பெண்கள் கருதுவது உண்டு.

ஆனால் உளவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி, ‘பெண்ணின் மறுபக்கம்’ நூலில் ஆஃல்பா ஆண் பற்றிக் கூறுகையில்…

‘பெண்களை அடக்கியாளும் எண்ணமோ அவசியமோ மனப்பான்மையோ நிஜ ஆஃல்பா ஆண்களுக்கு இருப்பதேயில்லை. ஆனால், ஆஃல்பா இல்லாத ஆணின் நிலை? அவன் எப்போதுமே இவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்று தவித்துக் கொண்டிருப்பான். பெண்ணை ஆதிக்கம் செய்து அவள் சிறகுகளை வெட்டி, பல்லைப் பிடுங்கி, அவள் நடமாட்டத்துக்குத் தடை விதித்து, அவளைப் பத்திரமாகத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முயல்வான் பலவீனமானவன். 

அவன் தன் இயலாமையை மறைக்கப் பெண்களை இம்சிப்பது வேறு பெரும் அசவுகரியத்தைக் கொடுக்க, “இந்தத் தரங்கெட்ட மனிதனிடமிருந்து எப்போது தப்பிப்போம்” என்கிற நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். இந்தப் போக்கு மேலும் ஆணை அச்சுறுத்துவதால் இப்படிப்பட்ட குறை ஆண்கள் தங்கள் ஆளுமையை ஈடுகட்ட, “நான் எவ்வளவு பெரிய ஆம்பளைன்னு நிரூபிக்கிறேன் பார்” என்று பெண்களின் மீது வன்முறை பலாத்காரம், துஷ்பிரயோகம் என ஆக்ரோஷத்தை இன்னும் அதிகமாக வெளிப்படுத்துகிறார்கள்’

உளவியல் நிபுணர் ஷாலினியின் கருத்துப்படி பார்த்தால் ‘ஆன்ட்டி ஹீரோக்கள் = ஆஃல்பா ஆண்கள்’ என்கிற சித்தாந்தமே சுக்கு நூறாக உடைந்து போகிறது. இன்னும் கேட்டால் சுதாகர் போன்ற நாயகர்கள் பலவீனமானவர்கள் என்பதைத்தான் இந்த வரிகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன.

எனவே இந்த ஆன்ட்டி ஹீரோ ரசனை என்பதே போலித்தனமானது. தன் விரல்களால் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் வேலை. இதனை இந்தக் குடும்ப நாவல் உலகம் எப்போதாவது உணருமா?

ஒரு வேளை அவர்கள் உணர நினைத்தாலும் இது போன்ற களங்களை வைத்துச் சுற்றிச் சுழலும் வியாபார உலகம் அவர்களை உணரத்தான் விட்டு விடுமா? 

அடுத்த அத்தியாயத்தில்…

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.