ஹாய் தோழமைகளே,

போன வாரம் நாம் பேசிய பயிற்சியை எழுதி இருப்பீர்கள்.  உங்களுக்குள்ளே நிறைய விஷயங்கள் மனதில் ஓடி இருக்கும். நிறைய நேரம் நம் எதிர்பார்ப்புக்கும் நிஜத்திற்கும் உள்ள இடைவெளிதான் மனம் சம்பந்தபட்ட அத்தனை பிரச்னைக்கும் காரணம். நம் கருத்தும் எதிர்பார்ப்புமே நமது மூடை முடிவு செய்கிறது.

நாம் பேசிய அதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். அலுவலகத்தில் இருந்து வரும்போது அலங்கோலமாக இருக்கும் வீடு நிச்சயமாக சோர்வைத்தரும். ஆனால், அனைத்தையும் இன்றே சரி செய்ய வேண்டும் என்கிற perfectionist எதிர்பார்ப்பும், அதையும் நான் மட்டுமே செய்ய வேண்டும் என்கிற நமது சொந்தக் கருத்துமே இந்தக் கோபத்திற்கும், அதனால் வந்த தலைவலி, உடற்சோர்வுக்கும் காரணம்.

ஒரு வேளை வீட்டிற்கு வந்த உடனே கணவர், பிள்ளையை அழைத்து, இன்று உதவிக்கு வரும் பெண் வராததால் என்னால் தனியாகச் சமாளிக்க இயலாது என வேலையைப் பிரித்துக் கொடுத்து இருந்தால், சோர்வுடன் எடுத்த அதே ஓய்வை நிம்மதியுடன் எடுத்து இருக்கலாம்.

அதே போல் சில வேலைகளை நாளைக்காகத் தள்ளியும் வைத்திருக்கலாம். எல்லாருக்குமே சுமை குறைந்திருக்கும். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் நம் மனதில் உள்ள கருத்துகளை, ஆழமான நம்பிக்கைகளை, நமது எதிர்பார்ப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து நம்மை அறிந்து கொள்வதும், தேவைப்படின் சரிசெய்து கொள்வதும் மிகுந்த மன அமைதியைத் தரும்.

சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.

இப்போது journaling அடுத்த படியைப் (step) பார்ப்போம்.

ஒரு மாதம் முழுக்க நாம் நம்மைப் பாதித்த விஷயங்களை எழுதியதும் அடுத்த படியைத் தொடங்கலாம். எழுதுவது வாழ்வு முழுக்கத் தொடர வேண்டிய ஒரு பழக்கம். ஒவ்வொரு நாளும், நாம் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம், மனதளவில் வளர்கிறோம், மாறுகிறோம். அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் பார்க்கும் பார்வை வேறுபடுகிறது. போன வருடம் நாம் கடுப்பான அதே விஷயத்திற்கு இன்று புன்னகைத்துக் கடக்கக் கற்றுக் கொண்டிருக்கலாம். போன வருடம் நாம் பதில் சொல்ல பயந்த கேள்விக்கு இன்று நெத்தியடியாகப் பதில் சொல்லலாம். போன வருடம் அநாயசமாகச் செய்த ஒரு வேலைக்கு நாம் இன்று நிறைய மெனக்கெட வேண்டி வரலாம். நாம் மாறும் போது நம்மை பற்றிய நமது எண்ணங்களும் மாற வேண்டும். எனவே தொடர்ந்து தினமும் எழுதுங்கள்.

நீங்கள் குறைந்தது ஒரு மாதம் எழுதிய பின் அதைப் படித்துக் கீழ் வரும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.

  1. எந்த உணர்வு உங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறது?
  2. அந்த உணர்வின் பிடியில் (peak point, உச்சகட்ட உணர்வு) நீங்கள் இருக்கும் போது உங்கள் மனதை எது போன்ற எண்ணங்கள் ஆக்கிரமிக்கின்றன?
  3. Peak point எவ்வளவு நேரம் நீடிக்கிறது?
  4. அந்த நேரத்தில் உங்கள் செயல்கள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?
  5. எந்த விஷயம் / நிகழ்ச்சி / மனிதர் / நியாபகம் உங்களை நிகழ்காலத்திற்கு வர உதவியது?

நாம் ஒரு மாத காலத்தில் பல விதமான உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கலாம். ஆனால், அடிக்கடி எந்த உணர்வின்வயப்பட்டு இருக்கிறோமோ, எதனால் பாதிப்பு அதிகமோ அதுதான் நமது பலவீனம்.

நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பலவீனம் இருக்கலாம். உங்கள் பலவீனம் கோபமாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. மகிழ்ச்சியாகக்கூட இருக்கலாம், பயமாகக்கூட இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் அதை அறிந்துகொள்வது முதல் படி. பின் நமது உடலையும் மனதையும் இது எப்படிப் பாதிக்கின்றதென்பதைப் புரிந்து கொள்வது. சில சமயம் நாம் ஒரு குறிபிட்ட உணர்வின் பிடியில் இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், நமது உடலும், மனமும் கொடுக்கும் சமிஞ்சைகள் (signals) புரிந்து கொண்டால், நாம் எந்த உணர்வின் ஆதிக்கத்தில் இருக்கிறோம் என்பது புரியும். (முதல் வழி நோயை நேராக உணர்வது, இரண்டாம் வழி அறிகுறிகள் வாயிலாக உணர்வது..)

சரி இப்போது, உங்களின் பலகீனமான உணர்வு புரிந்துவிட்டது. அது தரும் உடல், மன பாதிப்புகளும் புரிந்துவிட்டது. அடுத்த அந்த peak point எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். அதுதான் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம். உச்சகட்டமாக ஓர் ஐந்து நிமிடம் கோபம் நீடிக்குமென்றால், அந்த ஐந்து நிமிடத்தை நாம் நம்மை எப்படித் திசை திருப்பிக் கொள்வதென்பதையும் யோசிக்கலாம்.

இதற்கான விடையும் இந்த journaling உங்களுக்குத் தந்துவிடும். எதனால் இந்தக் கோபம் மட்டு பட்டதென்கிற விஷயம், அதுதான் நமது மந்திரச்சாவி.

அது உங்கள் குழந்தையின் சிரிப்போ தோழமையின் அருகாமையோ, இணையரின் அணைப்போ, பெற்றவரின் அன்பு, நல்ல இசை, பிடித்த ஜோக், சூப்பர் சாப்பாடு, ஏன் ஒரு கிளாஸ் டீ யாகக்கூட இருக்கலாம்.

எதுவாகினும் உடனே கிடைக்கக் கூடிய விஷயமென்றால் அதைச் செயல் படுத்துங்கள். ஒரு வேளை அதற்கான சூழல் இல்லாவிடில், இந்த உணர்வு ஒன்றும் ஜெயிக்க முடியாதது இல்லை, வந்தது போலவே போய் விடக்கூடிய ஒன்று என்பதை நினைவில் வையுங்கள். ஒரு நிமிடம் மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக வெளியேற்றி, பின்னர் உங்களுக்குப் பிடித்த, உங்கள் மனதை மயக்கி ஆட்கொள்ளும் அந்த விஷயத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கற்பனையில் மெதுவாக இதழ் விரிந்து உங்கள் கவனம் திசை மாறுவதைக் காண்பீர்கள்.

உங்களை அறியாமலேயே உங்கள் உச்ச உணர்வில் இருந்து வெளி வந்திருப்பீர்கள். உங்களைச் சுற்றி எதுவுமே மாறவில்லை. ஆனால் உங்களுக்குள் வந்த சிறிய மாற்றம் பல எதிர்மறை விளைவுகளைத் தவிர்த்துவிடும்.

இந்த அழகிய நுட்பத்திற்குப் பெயர் ABCs of emotion.

A Awareness – அறிந்து கொள்ளுதல்

B Balance – சமப்படுத்திக் கொள்ளுதல்

C Curiosity – ஆழமாக அறிந்து கொள்ளுதல்

s Support – சரி செய்துகொள்ளுதல்.

ஆனால், இந்த வழி சிறிய தடுமாற்றங்களுக்கு உதவியாக இருக்கும். அந்த நேரப் பாதிப்பில் இருந்து நம்மைக் காக்கும். நம்மை நீண்ட நாள் பாதிக்கும் உணர்வுகளுக்கு இது தற்காலிகத் தீர்வு தரும்.

இந்தப் பயிற்சியில் இரண்டாவது கேள்விக்கான பதில் இங்கு நாம் உபயோகப்படுத்தவில்லை. ஆனாலும் தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த படியைப் பயிற்சி செய்ய அது உபயோகப்படும்.

வாருங்கள் மந்திரக் கோலைச் சுழற்றலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.