1. இரயில் பயணங்களில்…

அனுமதியின்றி அறைக்குள் பிரவேசிக்கும் அடுத்த வீட்டுச் சுட்டிக் குழந்தையாக ஜன்னல் தாண்டி வேகமாக உள்ளே வந்து என்னைத் தீண்டிச் சென்றது மழை.

தூரத்தில் அவ்வப்போது இருளைக் கிழித்துக் கொண்டு ஒன்றிரண்டு மின்னல்கள் இறங்கின. அதைப் பின்தொடர்ந்து தடதடக்கும் இடியும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாகக் கூடவே வந்தது.

நடுங்க வைத்த வாடைக்காற்றைக் கிழித்துக் கொண்டு, சென்னை நோக்கி என் பயணத்தை இரவு 8.25 மணிக்குத் தொடங்கினேன்.

என்னை ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ என்று என் பயணிகள் அழைப்பார்கள் .

மூன்று மொழிகளில் திருச்செந்தூர் என எழுதப்பட்ட பதாகையைத் தாண்டி வயல்காட்டில் தலையில் கஞ்சிக் கலையம் சுமந்து வளைந்து நெளிந்து செல்லும் பருவப் பெண்ணாக வார இறுதியின் என் வழக்கமான ஜனக் கூட்டத்தைப் பதவிசாகச் சுமந்தபடி  பாலத்தைத் தாண்டி வேகம் எடுத்து, தலைவர் படத்தைத் திரையில் பார்க்கும் விடலைப் பையனாக விசிலடித்தபடியே அடைக்கலாபுரம் ரயில்வே கேட்டைத் தாண்டி காயல்பட்டினம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன்.

வழியில் என்னைப் பார்த்து உற்சாகமாகக் கையசைக்கும் குஞ்சு குளுவான்களைச் சில நாள்களாகக் காணாமல் தேடினேன். என்ன செய்வார்கள் பாவம்.  மழையால் வெளியே வராமல் இருக்கலாம். அடைமழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், வண்டியில் வழக்கமான கூட்டம்தான்.

தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலிருந்தும் திருச்செந்தூர் முருகனை வழிபட்டுவிட்டுத் திரும்பும் பக்தர்கள்தாம் அதிகம். மொட்டையடித்து சந்தனம் பூசிய தலைகளில் இருந்து பன்னீர கலந்த சந்தன வாசம் என் பெட்டிகளை நிறைத்தது. காவியும் பச்சையுடையும் அணிந்து, “அப்பனே, முருகா காப்பாத்தப்பா” என்று ஏதேனும் ஒரு பெட்டியிலிருந்து ஒரு பக்தனின் குரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.

பாலத்தின் ரயில் வேகக் கட்டுப்பாட்டுக்கு இணங்கி நான் மெல்ல ஊர்ந்து செல்லும் போது, ஜன்னல் வழியாகத் தெரிந்த ராஜ கோபுரத்தில் ஒளிர்ந்த வேலைக் கண்டு மீண்டும் ஒருமுறை மனமுருகி கும்பிடு போட்டு,

“அரோகரா” சொன்னவர்களும் அதில் கலந்து கொண்ட குழுக்களாக வந்திருந்த வெளியூர் ஐயப்ப சாமி பக்தர்களும் உண்டு. தனியாக வண்டி பிடித்து வர வசதி இல்லாதவர்களுக்காகத்தானே நான் இருக்கிறேன் என்று பெருமையாக நினைத்தபடி காயல்பட்டணத்தைக் கடந்து சென்றேன்.

கொஞ்ச காலமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகம்தான். ஜனங்களுக்குப் பக்தி  அதிகமாகிவிட்டது போல. அதற்கு கரோனா ஊரடங்கு விலக்கு போல ஊடகங்களின் பங்கும், பரிகாரம் சொல்லும் ஜோசியர்களின் பங்கும் அதிகம் என்று பயணிகள் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் தைப்பூசம், மாசித் திருவிழா , ஆவணித் தேரோட்டம், கந்த சஷ்டி, புதுவருடம், பொங்கல், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என்றால் மட்டுமே கூடும் கூட்டம் இப்போது எப்போதுமே வெள்ளி முதல் ஞாயிறு வரை என்று ஆகிவிட்டது.

ஒருவேளை அவர் ‘சுனாமியை வென்ற சுப்பிரமணியர்’ ஆனபோதிலிருந்து இவ்வளவு கூட்டமோ?’

“யாமறியோம் பராபரமே!” என்று ஒருமுறை பயணம் செய்த பெரியவர் ஒருவர் தன்னிடம் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுக் கொண்டே வந்த தன் குறும்புக்காரப் பேராண்டியிடம் சொன்ன இந்த வாக்கியம் அவனைக் குலுங்கி குலுங்கிச் சிரிக்க வைத்தது.

அவரும் பொக்கை வாயுடன் அதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லிச் சிரித்தார். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்ததாலோ என்னவோ எனக்கு அந்த வாக்கியம் மிகவும் பிடித்துவிட்டது.  நானும் சிரித்தேன் என்று அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், என்னோடு பயணிக்கும் அத்தனை பயணிகளையும் எனக்குத் தெரியும். அவர்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு வகிக்கிறேன். அதே போல் அவர்கள் வேதனையிலும்.

அதோ காயல்பட்டினத்தில் தன் மாமியுடன் ஏறிய அந்தச் சிறிய பெண் யாருமறியாமல் தன் விழிநீரைத் துடைத்துவிட்டு யதார்த்தமாக இருக்க முயற்சிக்கிறாளே, அவளின் வேதனையையும் நான் சுமக்கிறேன். அவளை இதற்கு முன் பல முறை பார்த்த நியாயம் இருக்கிறது. ஆனால், அப்போது அவள் தோழிகளோடு மகிழ்ச்சியாக இருந்தாள். சில முறை யாரோ ஒரு பையனும்கூட வந்ததாக என்று நினைத்தபோது நாடகம் பார்த்து அடுத்த வீட்டுக்கதையை விவாதிக்கும் இல்லத்தரசிகளில் ஒருத்தி போல் புரணி பேச மனமில்லாமல் பாதியிலே என் எண்ணத்தை நிறுத்திக் கொண்டேன்.

திருநெல்வேலியிலோ பாளையங்கோட்டையிலோ உள்ள  கல்லூரியில் அவள் படித்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் வார இறுதியில் வீட்டுக்கு வந்துவிட்டு வழக்கமாக அவள் திரும்புவது போல் இன்று தோன்றவில்லை. சோகமே உருவமாக அவள் முகமும், வழக்கத்துக்கு அதிகமான அவள் பைகளும், தலையில் முக்காடிட்டவாறு அவளோடு அமர்ந்திருக்கும் அவள் மாமியும் இந்தச் சந்தேகத்தைக் கொடுத்தது.

“அழாதே பெண்ணே, எல்லாம் சரியாகிவிடும்”

என்று நான் சொல்லவா முடியும்?

எனக்கு என்ன மனிதர்கள் போல் சிந்தித்து செயல்பட ஆறறிவா இருக்கிறது? இல்லை, பேச வாய்தான் இருக்கிறதா?

 ஊஊஊஊஊஊஊ

‘சிக்கு சிக்கு சிக்கு சிக்கு’ என்று கரும்புகையைக் கக்கியவாறு ஆறுமுகநேரி ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப‌ ஆயத்தமானபோது, கையில் ஒரு லாலிபாப்பைச் சப்பியவாறே கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு தன்னை வழியனுப்ப வந்த அப்பாவைப் பார்த்து வண்டிக்குள் இருந்து,

” பாத்துப் போப்பா. மழைல நனையாத. சளி புடிச்சுக்கும். அப்புறம் ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது. டாக்டர் பெரிய ஊசி போட்டுருவாரு. நாளைக்குச் சீக்கிரம் நீயும் இந்த டிரைன புடிச்சு சுஜய் பர்த்டேக்கு வந்துரு. டாட்டா. பாய்” என்று உற்சாகமாகக் கையசைத்தவாறே பெட்டியில் இருந்த மற்றவர்களை நோட்டம் விட்டுக்கொண்டு தன் அம்மாவுடன் நுழைந்த ஆறு வயது மதிக்கத்தக்க அந்தக் குறும்புக்காரி என் கவனத்தை ஈர்த்தாள்.

“அக்கா, அது நம்ம வீட்டாளுதான். மாசமா இருக்கா, சின்னாளும்கூட வருது. கொஞ்சம் பாத்துக்கோங்கக்கா. பிளீஸ்” என்று உரிமையுடன் கரையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த குர்தா அணிந்திருந்த பெண்ணிடம் அவளின் அப்பா வேண்டிக் கொள்ள,

தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்திலுருந்து தன் கவனத்தை ஒரு நொடியில் அவரிடமும் பின் நான்கைந்து மாத மேடிட்ட வயற்றை அணைத்துப் பிடித்தவாறு வந்தவளையும், அந்தக் குறும்புக்காரியையும் பார்த்து ஒரு புன்னகைத்துவிட்டு, “சரிண்ணா, நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாதீங்க”

என்று அந்தப் பெண் புன்னகைக்கவும், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அவர் ரயிலிலிருந்து சற்று விலகி அந்தக் குறும்புக்காரிக்கு டாட்டா காட்டவும், “இசக்கி, பத்திரம்மா. பாத்து. உக்காந்துக்க. எதுனா வேணும்னா இந்த அக்காவ கேட்டுக்க. நான் சொல்லிருக்கேன். அப்பப்ப போன்ல பேசிக்க. மச்சானுக்கு நீ கிளம்பிட்டன்னு சொல்லிருறேன்” என்று மழையின் சத்தத்திலும் அவன் குரல் சத்தமாகக் கேட்டது. எப்படியும் தன்னைவிட வயதில் சிறிய பெண்ணாக இருப்பாள் என்று தெரிந்தும் அக்கா ஸ்தானத்தை அளித்த அந்தப் பெண்ணை மீண்டும் அவன் நன்றியுடன் பார்க்கவும், நான் கிளம்பவும் சரியாக இருந்தது .

ஆம், என் பயணிகள் எல்லாருக்கும் பொதுவான ஒரு குணம் உண்டு. ஜாதி மத பேதங்கள் இன்றி உடன் வரும் அனைவரையும் ஒரு நொடிகூட சிந்திக்காமல் உறவு பாராட்டுவது.

“இங்கன உக்காருமா. பாத்து. இடிச்சிக்கப் போற. டிரைன் கிளம்புது பாரு. மாசமாக்கிர பொண்ணு . இப்புடி குடு உன் பைய. தோ கீழ வச்சிக்கிறேன். இறங்குறப்ப சொல்லு, நானே எடுத்துத் தரேன் இன்னா. நீ குனிஞ்சிகினு இருக்காத. எத்தினி மாசம்? ” என்று கரிசனமாகக் கேட்டவாறே அந்த மாமி சற்று இடம்விட்டு அமர்ந்தார்.

“தை வந்தா அஞ்சும்மா…” என்று சொல்லிவிட்டு கர்பிணிப் பெண்களுக்கென்று இருக்கும் ஒருவிதப் பாதுகாப்பு உணர்வுடன் இருக்கையைப் பிடித்தவாறு நிதானமாக அமர்ந்து தன் மகளைத் தேடினாள்.

“துப்பட்டா போடி…” என்று கரையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த திருச்செந்தூரில் ஏறிய பெண் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் தலைப்பை எழுத்துக் கூட்டி வாசிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிரித்தவாறே, “அது டி இல்லம்மா டு” என்று அவள் தவறைத் திருத்திக் கொண்டிருந்தாள். அந்த வாண்டு மீண்டும் தொடங்கியது, “துப்பட்டா போடுங்க தோழி” என்று இந்த முறை படிப்பில் சுட்டியான அந்த வாயாடி சரியாக வாசித்தாள்.

“சூப்பர்டா குட்டி. கரெக்டா வாசிச்சிட்டீங்களே. வெரி குட்” என்று அந்தப் பெண் பாராட்டி கை குலுக்கவும் அவளுக்குத் தலை, கால் புரியவில்லை. அந்தப் புத்தகத்தைக் கையில் வாங்க எத்தனித்தவளை, “அபி, சேட்ட பண்ணாம இருக்கணும். புக்க அக்காகிட்ட குடுத்துட்டு இங்க வா. அம்மா உன் தலையைத் துவட்டுறேன். ஈரத்தோட இருந்தா…”

“சளி பிடிச்சுக்கும். அப்புறம் ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது. டாக்டர் பெரிய ஊசி போடுவாரு” என்று கைகளை விரித்துக் கண்களை உருட்டி அம்மாவை முந்திக் கொண்டு பேசி முடித்தவளைப் பார்த்து அந்த பெட்டி சிரிப்பலையில் நிறைந்தது.

அதுவரை சோகமாக இருந்த அந்தப் பர்தா போட்ட பெண்ணுக்குக்கூட இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தபோதுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

அம்மாவிடம் சென்று தலை துவட்டிவிட்டு மீண்டும் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் வந்தாள். இனி தான் வாசிப்பது நடக்காது என்று உணர்ந்த அவளும் தன் புத்தத்தை மூடிவைத்து அவளுக்கும் தன் இருக்கையில் இடம்விட்டு அமர்ந்தாள். அதில் அமர்ந்தவள் கவனம் முழுக்க அடைக்காமல் இருந்த அந்த ஜன்னலிலும், வெளியே பெய்து கொண்டிருந்த மழை மீதும்தான் இருந்தது.

தன் அம்மா அருகிலிருந்த பாட்டியிடம் பேசிக் கொண்டு இருந்ததைக் கவனித்துவிட்டு, கையை வெளியே நீட்டப் போனாள்.

“உங்க பேர் அபியா? என் பேரும் அபிதான் தெரியுமா?” என்றதும் சேட்டைக்காரியின்  கவனம் திரும்பியது.

“உங்க பேரும் அபிராமியா?”

“இல்ல அபிநயா. ஆனா என்னையும் வீட்ல அபின்னுதான் கூப்பிடுவாங்க.”

“ஹையா, ஜாலி. நம்ம இரண்டு பேருக்கும் ஒரே பேரு.”

குழந்தைகளின் தனிச்சிறப்பு இதுதான். அவர்களை மகிழ்விக்க அதிகம் தேவையில்லை. சின்ன சின்ன விஷயங்கள் போதும்.

குரும்பூரிலும் நாசரேத்திலும் மேலும் இரண்டு பெண்கள் ஏறினார்கள்.

“அப்பாவுக்கு வேல இருக்கா. அதான் நாளைக்குச் சாயங்கால டிரைன்ல மாமா வீட்டுக்கு வருவாங்க. அப்புறம் புதன்கிழமை சுஜய் பர்த்டே கொண்டாடுவோமா. பீச்சுக்குல்லாம் போவோமே‌. ஜாலி ஜாலி.”

ஓர் அபி கதையளக்க அதே ஆர்வத்துடன் இன்னோர் அபி கதை கேட்டுக் கொண்டிருந்தாள். இந்த உற்சாகமான சம்பாஷனைக்கு இடையிலும் கடைசியாக ஏறிய பெண்ணின் முகத்தில் இருந்த கலவரத்தை கவனிக்க நான் தவறவில்லை. அவள் முகத்தில் இருந்த ஆறிய சிறு காயங்கள் எனக்குக் கவலையளித்தது.

“நம்ம சீட் எல்லாம் புல் ஆயிட்டு. நான் தனி சீட்டுல படுத்துப்பேனே” என்று குஷியாக அந்த குட்டி அபி இன்னும் பேசிக் கொண்டிருந்தபோதே, நெடுநேரமாக ஸ்ரீவைகுண்டத்திலே நகராமல் நிற்பதை உணர்ந்து இன்ஜின் பக்கமாக என் கவனத்தை திருப்பினேன்.

அங்கு பேசிக் கொண்டதைக் கேட்டதும் அடைமழையிலும்‌ வியர்க்கத் தொடங்கியது. இந்தச் செய்தி என் பயணிகள் யாருக்கும் தெரியாது.

ஏதோ ரயில் கடக்கக் காத்திருக்கிறோம் அதனால் தாமதம் என்று நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், வண்டி நெடுநேரமாக நகராததால் குழந்தைகள் மெல்ல சிணுங்கத் தொடங்குவது தெரிந்தது.

சில குறும்புக்கார வாலிபர்கள் நிலைமையை அறிந்து கொள்ள கீழே இறங்கி, “எலே, ஒரே தண்ணிலே. வண்டி மேல போவாது போலயே. இருட்டுக்குள்ள மாட்டுனோமா?” என்று சத்தமாகப் பேசத் தொடங்க, உள்ளிருந்த பயணிகளுக்கும் ஒருவிதப் பதற்றம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.

இருளும் பயமும் ஒன்றாக அவர்களைக் கவ்வத் தொடங்கியது.

என்னையும்தான்!

அவர்களைப் பாதுகாக்க என்னால் முடியுமா?

ஒருவேளை தண்ணீர் அதிகமாகி அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால்?

குழந்தைகள், பெரியவர்கள் என்று என்னை நம்பி வந்த எல்லாரும் நடுவழியில் நிற்க , என்னால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறதே!

ஐயோ நான் என்ன செய்வேன்?

“அம்மா பயமா இருக்கு” என்று தன் அம்மாவிடம் ஒண்டும் அந்தக் குறும்புக்காரியின் அமைதி என்னை அலைக்கழித்தது. பிள்ளைத்தாச்சியான அந்தப் பெண்ணின் படபடப்பு என்னையும் ஆட்கொண்டது.

என் பயணிகள் ஒவ்வொருவரின் வெவ்வேறு உணர்வுகளின் குவியலாக நான் நிலைகுலைந்தேன்.

அவர்களைப் பாதுகாக்க வேண்டியது என் கடமையல்லவா? என்ன செய்ய என்று தெரியாத கையறு நிலையில்தான் என்னோடு பயணிக்கும் பக்தர்களின் நிலைமையை முதல் முறையாக நான் உணர்ந்தேன்.

“அப்பனே முருகா எல்லாரையும் காப்பாத்துப்பா” என்கிற கூக்குரல் ஒலித்தது என்னிடமிருந்தா இல்லை என் பயணிகளிடம் இருந்தா என்று பிரித்தறிய முடியாத சூழ்நிலையில்தான் நானும் இருந்தேன்.

இந்த நாள் எங்கள் எல்லாருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று எனக்கு ஏனோ தோன்றியது.

டிசம்பர் 17, 2023.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.