மே 2023

‘கற்பூர நாயகியே கனகவல்லி,

காளி மகமாயி கருமாரியம்மா’ என்று தெருவில் இருந்த ஒலிப்பெருக்கியில் பாடல் ஒலிக்கத் தொடங்கிய போது மணி காலை 7.

ஜன்னலில் கிடந்த திரைச்சீலைக் காற்றில் சற்றுச் சலசலத்து வானம்  மேகமூட்டத்துடன் இருப்பதைக் காட்டியது. சற்று நேரத்தில் மழை வந்தாலும் வரலாம் என்கிற ரீதியில் மப்பும் மந்தாரமுமாக வானம் காட்சியளித்தது.

“அவள நம்பி வந்த மக்க வெயில்ல வாடக்கூடாதுன்னு மழயா இறங்கி வாரா நம்ம முத்துமாலயம்மா” என்று  கீழறையில் அவள் ஆச்சியின் குரல் ஒலித்தது . உண்மையில் இந்தச் சித்திரை வெயிலிலும் அந்த ஒரு நாள் எப்படித்தான் மழை பொழிகிறது என்பதை நினைத்து அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும். நாத்திகனான அவள் சித்தப்பா அதற்கும் ஒரு பதில் வைத்திருப்பார்,

“பைனி வாங்கிட்டு வந்துறோம், மாம்பழம் ரெடி பண்ணுங்க அண்ணி” என்று அம்மாவுக்கு அன்புக் கட்டளை இட்டுவிட்டுச் சிரித்தவாறே கடந்து செல்லும் கோயம்புத்தூர் சித்தப்பா, குடும்பத்தில் பிறந்தது முதலாக விளையாட்டுத் தோழர்களான ‌பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள், வெளியூரில் வேலை பார்க்கும் அண்ணன் தம்பிகள், வேறு ஊர்களில் வசிக்கும் தோழிகள், உறவினர்கள் என்று எல்லாரும் குடும்ப விசேஷங்களுக்கு அல்லாமல் ஒன்றுகூடுவது இந்தச் சித்திரை மாதக் கொடையில்தான்.

ஒரு வாரத்துக்கு முன்னரே கால் நட்டு, முளைப் பரத்தி, கோயில் அடைக்கப் பந்தலிட்டு, ஆங்காங்கே சின்னப் பந்தல் போட்டு, தோரணம் கட்டி, தெரு முழுவதும் சீரியல் செட்டு கட்டி, பெரிய குழாய்களை ஆங்காங்கே வைத்து ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேட்காத விதத்தில் சத்தமாக சாமி பாட்டு ஓடி என்று ஒரு வாரம் ஊரே கலகலக்கும்.

மற்ற காலத்தில் ஆள் அரவமற்று மிஞ்சிப் போனால் ஒரு பத்து பதினைந்து வீடுகளில் மட்டுமே ஆள் நடமாட்டம் இருக்கும் தெருவில், இந்த ஒரு வாரமோ  தெருவாசல் தொடங்கி தெருக்கோடி வரை  நிறுத்த இடமில்லாமல் பக்கத்திலிருக்கும் ஆசாத் நகரில்கூட கொண்டு விட்டுவிட்டு வருமளவுக்கு அத்தனை கார்கள். அத்தனை மனிதர்கள்!

வேலை வாய்ப்புத் தேடி வெளியூருக்குக் குடிபெயர்ந்த கூட்டம் தன் சாதி சனத்தைப் பார்க்கவென்று ஓடிவருவது, வருடம் முழுக்கக் காத்திருப்பது  இந்த நாட்களுக்காகத்தான். முதலில் புரட்டாசியில் கொடுத்த கொடையைச் சித்திரைக்கு மாற்றியதன் காரணமும் அதுதான்.

பிள்ளைகளுக்குப் பள்ளி விடுமுறை நாட்களைக் கணக்கு பண்ணி வைத்தால் அனைவரும் வந்து கலந்து கொள்ள முடியும் என்பதால். கோயிலிலே மூன்று நேரமும் சாப்பாடும் போட்டு விடுவார்கள்.

நாராயணசுவாமி கோயில் குருபூஜையில் தொடங்கி, சனிக்கிழமை ராத்திரி விளக்கு பூஜை, பின் வில்லுப்பாட்டு, சாம பூஜை, பின் சனி மதியம் மஞ்சள் பானைக்குப் பின் பானக்காரம், மறுபடியும் ராத்திரி வில்லுப்பாட்டு, அடுத்த நாள் மதியம் ஊரேக் கூடி உண்ணும் அன்னதானம், பின் அன்று மாலையில் தொடங்கும் அம்மன் கோயில் கொடை விழா.

மாலை தொடங்கும் விளக்கு பூஜைக்குக் கோயில் திண்ணையில் அமர இடம்பிடிக்க மதியமே கொண்டு விளக்கு வைத்துவிடும் முன்னெச்சரிக்கை பெண்மணிகளின் விளக்கைத் தள்ளி வைத்து அமர்ந்து கொள்ளும் உசார் பெண்மணிகள், பின் அதற்கு வரும் சின்ன சண்டைகளும் இல்லாமல் கோயில் கொடை எப்படிக் களைகட்டும்?

சில வருடங்களுக்கு முன் செவ்வாய் மதியம் இருந்த மஞ்சள் பானையைத் தூக்கி அடுத்த நாள் மதியம் போட்டுவிட்டுப் புதிதாகத் தொடங்கப்பட்ட காலையில் அம்மனுக்குப் பால்குடம் எடுத்து ஊரைச் சுற்றி வருதல், பின் உச்சிகாலப் பூஜைக்குப் பின் தெருவுக்குள் கும்பம் எடுத்து சாமியாடி பூசாரி வருவாரா மாட்டாரா என்கிற கேள்விக்கு மதிய பூஜை முடியும் வரை யாருக்கும பதில் தெரியாமல்தான் இருக்கும்.

ஒரு வாரமாக முளைப்பாரிக்குத் தண்ணீர் தெளித்தவர்களைத் தவிர யாரும் பாரத்திராத முளை ஓடுகளில் மூடிய ஓலைக் கொட்டகையில் வளரக்கப்பட்ட முளை முதல் முறையாக எல்லார் பார்வையிலும் படும்.

யார் முளை அதிகம் வளர்ந்திருக்கிறது. யாருடையது குறைவாக வளரந்திருக்கிறது என்று அவர்கள் சரியாக விரதமிருந்தார்களா என்று அதை வைத்துக் கணக்கிடும் கூட்டம் உண்டு .

பின் முளை வைத்திருந்தவர்கள் எல்லாரும் தன் வீடுகளுக்குச் சென்று தலைக்கு எண்ணெய் வைத்து, குளித்துப் புத்தாடை உடுத்தி முளையைக் கோயிலுக்கு எடுத்துச் செல்ல கொட்டுக்காரன் வரும் முன் வண்ணப் புத்தாடைகளில் கிளம்பி வந்து, நடுவில் பூசுற்றி அலங்கரித்த முளைப்பாரியைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகளாகக் குழந்தை முதல் குமரி வரை ஏன் கும்மி அடிப்பார்கள்.

நடுசாம பூஜையும் அதற்குப் பின் அரை மணிநேரம் வானத்தை வண்ணமயமாக்கும் வாணவேடிக்கை என்ன, பின் அலங்கரித்த சப்பரத்தில் அம்மன் வீதிஉலா வரும் அழகென்ன என்றெல்லாம் நினைத்த போது அவளையும் அறியாமல் அவளுக்குள் ஒரு பரவசம் தொற்றிக் கொண்டது. ஒரு வருடம் முழுக்க ஊரே காத்திருக்கும் திருவிழா. அவளும்தான்.

அவள் எண்ணவோட்டத்தைத் தடுக்கும் விதமாக ஒலிப்பெருக்கியிலிருந்து, ‘பால்குடம் எடுக்கும் பக்தர்கள் உடனே கோயிலுக்கு முன்பாக வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம். மேளதாளக் கலைஞர்கள் எங்கிருந்தாலும் உடனே விநாயகர் கோயில் முன்பாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பு தொடர்ந்தது.

சற்று நேரம் கழித்து இன்னொரு குரல், ‘காலை உணவு தயாராகிவிட்டது. உடனே அனைவரும் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என்று இரண்டு மூன்று முறை அறிவித்து அடங்கியது.

அவள் அம்மாவும் பெரியம்மாவும் காலையிலே கோயில் சுற்றிக் கும்பிடச் சென்று வந்துவிட்டார்கள் என்பதைச் சமையல் மேஜையில் இருந்த கோயிலிலிருந்து உணவு வாங்கிவிட்டு வந்திருந்த தூக்குப் பாத்திரங்கள் சொன்னது. சூடாக ஒரு காபியைப் போட்டுக் கொண்டு மாடி பால்கனியில் அமர்ந்தவாறு சுற்றும்முற்றும் நடந்தவற்றை அமைதியாகக் கவனித்தாள்.

தெருமுனையில், பரமன்குறிச்சி அரங்கன்விளை முத்துமாலையம்மன் கோயில் கொடை விழா மற்றும் ஶ்ரீமன் நாராயண சுவாமி குருபூஜைக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம் என்று விழாக் குழு சார்பாக அம்மனின் படம் போட்ட ஒரு பேனரும், இளைஞரணி சார்பாக ‘அதிரடி’  ‘அராஜகம்’ ‘தல ‘ ‘தளபதி ‘ ‘மாஸ்ட்டர்’ ‘பீஸ்ட்’ ‘மெர்சல் ‘ ‘துணிவு’ ‘வலிமை ‘ ‘மங்காத்தா’ என்று அடைமொழிகளுடன் பெயர்களும் ஒளிப்படங்களும் நிறைந்த இன்னொரு பேனரும் இருந்தன.

அந்தக் களேபரம் ஒருவித அமைதியைத் தந்தது என்பதை மறுப்பதிற்கில்லை. வாழ்க்கையின் ஓட்டத்தில் இதுபோன்ற பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்தான் ஆசுவாசம் தரும் இளைப்பாறல்.

“ஏ அபி . எப்ப வந்தே சென்னைல இருந்து?”

“என்ன இப்பிடி இளச்சிட்ட?”

“எப்ப கல்யாணச் சாப்பாடு போடப் போறே?”

“அக்ஷயா வருவாளா?”

“ஃபாரின்ல புருஷனோட இருக்காளாமே?”

“பிள்ள குட்டி எல்லாம் நல்லா இருக்காமா?”

“ஒரு எட்டு ஊருப்பக்கம் வந்து அந்தப் பிள்ளய அப்பா அம்மாவுக்குக் காட்டக் கூடாதாக்கும்?”

இதுதான் கிராம்புறங்களில் பிரச்னை. ஒரு வீட்டு பிரச்னை ஊருக்குள் எல்லாருக்கும் தெரிந்த பிரச்னை ஆகிவிடும். அதில் எல்லாரும் தன் மூக்கை நுழைப்பார்கள்.

அடுத்த வீட்டில் கொலை விழுந்தாலும் கண்டு கொள்ளாமல், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் நகர வாழ்க்கையை ஒரு தராசிலும் அடுத்த வீட்டுக்கு ஓர் அவசரம் என்றால் ஒரு நொடிகூடத் தயங்காமல் உதவும், தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் சொல்லிவிடும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை மறு தராசில் வைத்தால் அவள் தராசு பின்னதை நோக்கியே சரியும்.

“அவ இல்லாம வீடே அமைதியா இருக்குல்ல? ராட்சசி, எதாவது பண்ணிட்டே இருப்பா…” என்ற தம்பியின் குரலில் தெரிந்த ஏக்கத்தை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக எப்போதும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அன்பாக இருப்பவர்களைவிட அடிதடி போட்டவர்கள் பிரியும் போதுதான் அதிக வேதனை.

ஆனால், யாரும் அவளைக் குறித்துப் பேசுவதில்லை. அவளையும் அவனையும் சித்தப்பாவையும் தவிர.

எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்த அவளை எப்படி அவர்களால் அத்தனை எளிதில் மனதிலிருந்து தூக்கி எறிய முடிந்தது? அதை ஏன் என்று கேட்காமல் எப்படி இவளால் மூன்று வருடம் இருக்க முடிந்தது?

விடையில்லாத கேள்விகள், இருவருக்கிடையிலும் முடிவில்லா அமைதியாக நீண்டது.

அமைதியாக இருவரும் காபி குடித்தார்கள்.‌ ஆனால் வெகுவிரைவில் அவள் மனதை அலைக்கழிக்கும் நிகழ்வு நடக்கும் என்று அப்போது அவள் அறியவில்லை.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.