மனோகரா 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.  1930களில் பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதி நடத்திய மேடை  நாடகம்.  பின் கே.ஆர். ராமசாமி, மேடை நாடகமாகப் போட்டுக் கொண்டு இருந்து இருக்கிறார். பம்மல் சம்பந்தம் அவர்கள், இந்த நாடகத்தை 1936-இல் படமாக எடுத்து இருக்கிறார். அதில் ராஜாவாக (மனோகரன் அப்பா) அவரே நடித்தும் இருக்கிறார். படம் பம்பாயில் உருவாகும் போது பல சிக்கல்களைச் சந்தித்தது, இயக்குநர்கள் மாற்றப்பட்டனர்- அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது! படம் ஒரு தடயமும் இல்லாமல் போய்விட்டது

1953 வெளியான அதே பெயர்கொண்ட படம், மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு மற்றும் இந்தியிலும்  வெளியிடப்பட்டது. இன்றும் “பொறுத்தது போதும்; பொங்கி எழு” என்று பேசப்படுகிறது என்றால், திரைப்படத்தின் வீச்சைப் புரிந்து கொள்ளலாம்.

மனோகர் பிக்சர்ஸ் தயாரித்த மனோகரா 

கதை நாடகப் பேராசிரியர் ராவ் பகதூர் P சம்பந்தர்

திரைக்கதை & வசனம் கலைஞர் மு. கருணாநிதி

மனோகரனாக சிவாஜி கணேசன்

புருஷோத்தமனாக சதாசிவ ராவ்

உக்ரசேனனாக எஸ்.ஏ.நடராஜன்

சத்தியசீலராக ஜாவர் சீதாராமன்

ராஜபிரியனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன்

வசந்தனாக டி.வி.ராதாகிருஷ்ணன்

விகடனாக பாண்டியன்

டாக்டராக வி.எம்.ஏழுமலை

புத்த யனாக எம்.ஆர்.சாமிநாதன்

கேசரிவர்மனாக எம்.கே.முஸ்தபா

வசந்தசேனையாக டி.ஆர்.ராஜகுமாரி

பத்மாவதியாக ப.கண்ணாம்பா

விஜயாவாக கிரிஜா

வசந்தசேனையாக பி.கே.சரஸ்வதி (நாடகம்)

பண்டாரி பாய் பத்மாவதியாக (நாடகம்)

மாலினியாக முத்துலட்சுமி

நடனம்

குமாரி கமலா

எழுத்து போட்டவுடன், கேசரிவர்மன் என்பவர் மூலிகை, மருந்துகள் மூலம் அரூபமாகி விட்டார். அதாவது அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனால் அவர் இருப்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு வித்தையைக் கண்டுபிடிக்க அவருக்கும் அவரின் குருவுக்கும் 18 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. மனைவி வசந்தசேனை போன்று சிலை செய்து வைத்து தனது கோபத்தை அணையாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார். தனக்கு நஞ்சு கொடுத்த அந்த மனைவியைப் பழிவாங்க அவர் புறப்படுகிறார். 

மன்னர் புருஷோத்தமன் ஏற்கனவே ராணி பத்மாவதியை மணந்து, அவர்கள் இருவருக்கும் மனோகரன் என ஒரு மகன் இருக்கிறார். மன்னன் இப்போது வசந்தசேனையுடன் வாழ்கிறான். பத்மாவதி வசந்தசேனையைப் பிரியும் வரை கணவரிடம் வருவதில்லை என்கிற கொள்கையுடன் வாழ்ந்து வருகிறார்.  வசந்தசேனை, தனக்குப் பிறந்த குழந்தை, மன்னரின் குழந்தைதான் என அனைவரையும் நம்ப வைக்கிறாள். அவன் பெயர் வசந்தன். 

 ஆண்டுகள் உருண்டோடுகின்றன. வசந்தசேனையின் கைப்பாவையாக மன்னன் இருக்கிறான். வசந்தசேனை, தான் பட்டத்து அரசியாக ஆக வேண்டுமெனத் திட்டம் தீட்டுகிறாள். 

இப்போது முன்கதையைச் சிறிது பார்க்கலாம். கேசரிவர்மன், மனைவி வசந்தசேனையுடன் சோழ மன்னர் புருஷோத்தமனின் அவையில் இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார். அப்போதே வசந்தசேனை கர்ப்பமாக இருக்கிறார். அரசன்- வசந்தசேனை காதலால், வசந்தசேனை கேசரியின் பாலில் விஷம் கலக்கிறாள். கேசரி இறந்து விட்டதாக நினைக்கிறது உலகம். ஆனால் ஒரு முனிவரின் உதவியுடன் கண்ணுக்குத் தெரியாத மாய மனிதனாக கேசரி திரும்புகிறார். பழிவாங்க முயல்கிறார். இது தான் வசந்த சேனை -கேசரிவர்மனின் முற்காலக் கதை.

இந்த காலகட்டத்தில் இளவரசன் மனோகரனின் பிறந்த நாள் வருகிறது.

அதற்கு வசந்தசேனையின் கதையைச் சிறிது மாற்றி நாடகமாகப் போடுகிறார்கள். போடுபவர், கேசரிவர்மன். கோபத்தில் வசந்தசேனை நாடகத்தை நிறுத்துகிறாள். கேசரிவர்மன் உயிரோடு இருக்கிறாரோ என அவளுக்குச் சந்தேகம் இப்போதுதான் வருகிறது. 

அப்பாவின் இந்த வாழ்க்கை முறை மீது மனோகரன் கோபம் கொண்டாலும், தனது தாயின் கட்டளையை மீறியதில்லை. அம்மாவோ, கணவன் மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என நினைக்கிறார். அம்மாவின் அப்பாதான் சோழ மன்னர் எனக் கதை போகிறது. அப்படியானால், இவர் மூலம் தான் அப்பா மன்னராகி இருக்க வேண்டும். அந்த தாத்தாவின் அரியணை பாண்டிய நாட்டில் இருக்கிறது. அப்பா மீது கோபம் கொள்வதற்குப் பதில் அந்த அரியணையை மீட்டு வா என மடைமாற்றம்தான் செய்கிறார் அன்னை. ஆனாலும் மனோகரா புறப்படுகிறார்.

மனோகரனும் அவரது நண்பன் ராஜபிரியனும் அரியணையை மீட்கிறார்கள். பாண்டிய மன்னர் இறக்கிறார். அதனால், பாண்டிய இளவரசி விஜயா, ஆண் வேடமிட்டு வந்து, மனோகரனைக் கொல்ல வருகிறார். அதே நேரம், வசந்தசேனை அனுப்பிய ஆளும், மனோகரனைக் கொல்ல வருகிறான். விஜயா கத்தியதால் மனோகரன் தப்பிக்கிறார். அவரது துணிவை மெச்சிய மனோகரன், விஜயாவைத் தனது மனைவியாக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார். 

மன்னர், அரியணையில் தனது தாயாருடன் அமராமல், வசந்தசேனையுடன் அமர்வதை மனோகரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த காலகட்டத்தில் வசந்த விழா வருகிறது. அதில், வசந்தசேனை, மனோகரன் பகை முற்றுகிறது. கோபமடைந்த மன்னர், வசந்த சேனையிடம் மன்னிப்பு கேட்கும்படி கட்டளையிட, மனோகரன் மறுத்ததால், மரண தண்டனை விதிக்கிறான். 

வசந்தசேனையும் ஒரு சதித்திட்டம் தீட்டி, பத்மாவதிக்கும் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அரசியைச் சிறையில் அடைக்கிறாள். இன்னொரு பெண்ணுடன் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன், மனைவி மீது சந்தேகம் வந்தவுடன், ஒரு விசாரணை கூட நடத்தாமல் தண்டிக்கிறான். 

விஜயாவையும் வேறு காரணம் சொல்லி, வசந்தசேனை சிறையில் அடைக்கிறாள். 

மனோகரன் மரண தண்டனைக்காகத் தேரில் அழைத்துச் செல்லப்படும்போது, கண்ணுக்குத் தெரியாத மனிதனாக வாழும் கேசரி வர்மன் காப்பாற்றுகிறார். மனோகரன், அமைச்சர் சத்தியசீலர் மற்றும் ராஜபிரியன் உதவியுடன், அட்சயன் என்ற தூதுவராக, மாறுவேடத்தில் அரண்மனைக்குள் நுழைந்து வசந்தசேனையின் கீழ் வேலை செய்கிறார்.

மன்னன் புருஷோத்தமனின் எதிரி உக்ரசேனன். இவன், வசந்தசேனையின் முன்னாள் காதலன். இப்போது, வசந்தசேனையின் அழைப்பின் பேரில், முனிவர் வேடமணிந்து அரண்மனைக்குள் நுழைகிறான். மாறுவேட மனோகரன் படுக்கையறையில் இருக்கும் வசந்தசேனையையும் உக்ரசேனனையும், மன்னர் பார்க்கும் படி செய்கிறார். மன்னர், அவளைக் கேள்வி கேட்க, வசந்த சேனை, மன்னரையும் சிறையில் அடைக்கிறாள். 

விஜயா சிறையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க, வசந்தசேனை குழந்தையைக் கொண்டு வந்து அதையும் கொல்லும்படி உத்தரவிடுகிறாள். மனோகரன், குழந்தையைப் பார்க்கும் ஆவலில், சிறைக்குச் செல்கிறார். 

அந்த நேரத்தில், உண்மையான அட்சயன் தப்பித்து உக்ரசேனனைச்  சந்திக்கிறான். மனோகரனின் வேடம் தெரிந்து விடுகிறது. மனோகரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுகிறார். வசந்தசேனை, குழந்தையைக் கொல்ல முயல்கிறாள். மன்னரை விடுவித்துத் தங்களை வாழவிடும்படி அரசி கெஞ்சுகிறார். வசந்தசேனை எக்காளமாகப் பேசுகிறார். அரசி பத்மாவதி பொறுமை போதும் என்று முடிவு செய்து, “பொறுத்தது போதும்; பொங்கி எழு மனோகரா” என்கிறார். தூணில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த மனோகர், தன்னைத் தானே விடுவித்துக் கொள்கிறார். அமைச்சர், சத்தியசீலர், ராஜபிரியனின் படைகள் வருகின்றன. உதவிக்குக் கேசரி வருகிறார். 

வசந்தனைக் கத்தியை வீச, வசந்தன் மீது, கத்தி விழுந்து, வசந்தன் இறக்கிறான். கேசரிவர்மனால் வசந்தசேனை கொல்லப்படுகிறார். மனோகரா குடும்பம் இணைகிறது. 

கலைஞர், உணர்ச்சிப் பூர்வமாக உரையாடல் எழுதி இருக்கிறார்.  அழுத்தமான சொல்லாடல்கள், வீரத்தை, காதலை ஏற்ற இரக்கத்துடன் சொல்லும் அழகான மொழி நடை. விவிலியத்தில் வரும் சாம்சன் கதையில் வரும் தூணெல்லாம் உடைந்து விழுவது போன்ற காட்சியை எல்லாம் எழுதியவர் கலைஞர்தான். 

“வீரனே, என் விழி நிறைந்தவனே, வீரர் வழி வந்தவனே என்று யாரைச் சீராட்டி, பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனை, சங்கிலியால் பிணைத்து சபைநடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டுமென்ற உங்கள் தணியாத ஆசைக்குப் பெயர், கட்டளையா தந்தையே?

அரசே, தந்தையின் முன் தனையனாக அல்ல. பிரஜைகளில் ஒருவனாக இதைக் கேட்கிறேன். குற்றமென்ன செய்தேன் கொற்றவனே, குற்றமென்ன செய்தேன்? கூற மாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம். இதோ, அறம் கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள்… இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும். நான் என்ன குற்றம் செய்தேன்?”

ஒருவர் : குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

அரசன் : இது உங்களுக்கு சம்மந்தம் இல்லாதது.

மனோகரன் : சம்மந்தமில்லாதது சபைக்கு வருவானேன். 

மனோகரா, நீ சாவிற்குத் துணிந்து விட்டாய்.

ஆமாம். நீங்கள் வீரராக இருக்கும்பொழுது பிறந்தவன் அல்லவா நான். சாவு எனக்குச் சாதாரணம். ஆண்டவனின் உத்தரவிற்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். 

தந்தையின் ஆணையைக் கேட்டு, தாயாரின் தலையை வெட்டியெறிந்த பரசுராமனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்.”

இப்படியான வசனங்கள் படம் முழுவதும் உள்ளன. எழுபதுகள் வரை பிறந்த பெரும்பாலானோர் இப்போது திரைப்படத்தைப் பார்த்தாலும், அதனுடன் இணைந்து அனைத்து வசனங்களையும் சொல்லுவார்கள். அவ்வளவிற்கு ‘ஒலிச்சித்திரம்’ மூலம் அனைவர் மனதினுள்ளும் சென்ற வசனங்கள் இவை. பெரும்பாலான திருமண வீடுகளில் ஒலிபரப்பப் பட்டவை. 

கலைஞர், மனோகரா திரைப்படத்தின் வசனத்தை மட்டும் தனி நூலாக வெளியிட்டு இருக்கிறார். உவமைக் கவிஞர் சுரதா 1944ஆம் ஆண்டு ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்திற்கு எழுதிய வசனம் புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. அவ்வாறு வெளியான முதல் திரைப்படம் அதுதான். 

பராசக்தி திரைப்படத்தின் உரையாடலைத் தொடர்ச்சியாகப் பல காட்சிகள் பார்த்து, எழுதி, அதைப் புத்தகமாக ஒருவர் போட்டு இருக்கிறார். அதைப்பார்த்து பிற்காலத்தில் கலைஞர், மனோகரா திரைப்படத்திற்கான வசனத்தைத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் என்கிறார் எழுத்தாளர் கிருஷ்ணவேல்.

எழுதினால் மட்டும் போதுமா? அதற்கு உயிர் கொடுக்க வேண்டாமா? உயிர்கொடுத்தவர் நடிகர் திலகம். என்ன உச்சரிப்பு, ஏற்ற இறக்கம்,; முகபாவனை; உடல் மொழி; அதற்கேற்ற இளமை என நடிகர் திலகம் முத்திரை பதித்து உள்ளார். அவரின் வீரம் பேசப்பட்ட அளவிற்கு அவரின் காதல் காட்சிகள் பேசப்படவில்லை. “வேல் விழி மாதரிடம் வீரர்கள் ஜெயித்தார்கள் என்பதற்குச் சரித்திரமே கிடையாது இளவரசி” என்று போதையுடன் கூறுவது எல்லாம் காவியம். மனோகரனாகவே வாழ்ந்து இருக்கிறார். 

அடுத்துச் சொல்ல வேண்டியவர் கண்ணாம்பா. வசனம் பேசுவதற்கென்றே பிறந்தவர் நடிகர் திலகம். ஆனாலும் அவருக்கு இணையாகத் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட, கண்ணாம்பா, தமிழ் வசனங்களைத் தெலுங்கில் எழுதி வைத்துக் கொண்டு பேசினார் என்றால் பெரும் வியப்பு தான். அவரது “பொறுத்தது போதும் பொங்கி எழு” என்பது இன்றும் பலரின் மனதில் இருக்கிறது என்றால், அது அவரின் வெற்றியும் கூடத்தான். 

வசந்தசேனையாக வரும்  டி.ஆர். ராஜகுமாரி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  

எஸ் எஸ் ராஜேந்திரன், மனோகரனின் நண்பராக வருகிறார். ஆலமரத்தடியில் இருக்கும் செடி ஊருக்குத் தெரியாதது போல, கலைஞர், நடிகர் திலகம், கண்ணம்மா, டி.ஆர். ராஜகுமாரி என அனைவரையும் பற்றிப் பேசுபவர்கள், எஸ் எஸ் ஆர் அவர்கள் குறித்துப்  பேசுவதில்லை. அவரும் நடிகர் திலகத்திற்கு ஈடுகொடுத்து நடித்து இருக்கிறார். “அரசர் விடுத்த அவசர ஆணை கேட்டு அடலேறு என வந்து கொண்டு இருக்கிறான் மனோகரன். அமைதியாகத்தான் வருகிறான் மனோகரன். ஆனால் எரிமலை குமுறுவதற்கு முன் எச்சரிக்கை செய்ய வந்து இருக்கிறேன்… தீப்பொறி கிளம்பும்,  தீப்பொறி கிளம்பும்” என மனோகரன் வருமுன்னே இவர் கொடுக்கும் கட்டியம் என்பது அவரது திறமைக்கு ஒரு சான்று.

சிறிது உளவளர்ச்சி குன்றிய சிறுவனாக, காக்கா ராதாகிருஷ்ணன் “சந்தேகமில்லை சந்தேகமில்லை” என மிக இயல்பாக நடித்துள்ளார்.

பண்டரிபாய், திரைப்படத்தில் வரும் நாடகத்தில் நடித்து இருக்கிறார். 

மனோகரனின் அப்பாவாக, தெலுங்கு நடிகர் சதாசிவ ராவ் வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் தான் எனக்குத் தெரிந்தவரை முதன் முதலில் கலைஞர் என்கிற அடைமொழி மு கருணாநிதி என்கிற பெயருடன் வருகிறது. 

எல்.வி.பிரசாத் திரைப்படத்தை இயக்கி உள்ளார். தமிழில் இது அவருக்கு முதல் திரைப்படம். தெலுங்கு திரையுலகின் முன்னோடிகளில் ஒருவரான இவர் நடிகை மாதவியின் தாத்தா.

எம் சுந்தரம் திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறார். 

S. V. வெங்கட்ராமன் மற்றும் T. R. ராமநாதன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

பாடல் வரிகளை கே.டி.சுந்தரம், சுரபி, செல்லமுத்துகவி மற்றும் உடுமலை நாராயண கவி எழுதியுள்ளார்கள்.

ஏ.எம்.ராஜா, ராதா ஜெயலட்சுமி, T. V. ரத்தினம், S. V. வெங்கட்ராமன், T. A. Mothi, டி.ஆர்.ராஜகுமாரி C. S. பாண்டியன், ஜிக்கி ராதா ஜெயலட்சுமி போன்றோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

சிங்கார பைங்கிளியே பேசு, 

நிலவிலே உல்லாசமாக ஆடலாம் 

என்னை பார் என்னழகைப் பாரு கண்ணாலே 

சந்தேகம் இல்லை சந்தேகம் இல்லை 

இன்பனாளிதே இதயம் காணுதே

வசந்த விழா வசந்த திருவிழா

போன்றவை இத்திரைப்படத்தில் உள்ள பிரபல பாடல்கள். 

பம்மல் சம்பந்தம் அவர்கள் எழுதிய கதை இது. மனோகரா என ஆண் பெயரில் கதை இருந்தாலும், ஒரு அம்மாதான் இந்த கதையின் கருவாக இருக்கிறார். அம்மா சொல்லுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மகன். அது நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தினாலும் சரி, தனது குடும்பத்தை அழிவிற்கு இழுத்துச் சென்றாலும் சரி அம்மா சொல்வதைத் தட்டாமல் மகன் செய்வதுதான் கதை. அந்த அம்மாவோ கணவனின் ஆசை அதுவும், முறையற்ற, நாட்டையே அழிக்கக் கூடிய ஆசைக்காகத் தான் இதைச் செய்கிறார். அவர் தனது கணவருக்காக இதைச் செய்கிறார் என்றால், மருமகள், தனது கணவனின் வாழ்க்கை அழிந்து விடக்கூடாது “அத்தை அவரை அனுப்பாதீர்கள்” எனச் சொல்வதைக்கூட அந்த அம்மா கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார். அப்படிப் போன மனோகரன் தான் மரண தண்டனை விதிக்கப் படுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், தாய் சொல்லைத் தட்டாத மகனின் கதை என இருந்தாலும்,  தாய் சொல்லை மகன் தட்டக் கூடாது; அந்த தாய், கணவனின் விருப்பத்திற்காக எந்த எல்லை வரையிலும் போகலாம்; அந்தக் கணவன்தான் குடும்பத்தின் தலைவன்; அவனுக்காகத் தான் அனைத்துக் குடும்ப உறுப்பினரும் இயங்க வேண்டும் என்பதுதான் கதையின் அடிநாதம். எந்தக் கணவனுக்காகப் பொறுமையைக் கைக்கொண்டாரோ அந்த கணவனே, சிறைப்பட்டதால் இறுதியில் மனைவி பொங்குகிறார். தன் மகன் இறப்பது குறித்தோ, பேரன் இறப்பது குறித்தோ அவர் அழுதாரே தவிரப் பொங்கவில்லை. மன்னர் நலனே மக்கள் நலன்; குடும்பத்தலைவன் நலனே குடும்பநலன் என்பதைச் சொல்லாமல் சொன்ன கதை இது.  

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.