வாழ்க்கைப் பயணத்தைத் தவிர்த்து தனக்கான நேரம் ஒதுக்கி இளைப்பாறுதல் வேண்டி பெண்களால் நேரம் ஒதுக்க முடிகிறதா என்பது சந்தேகம்தான். கேள்வியாகக்கூட எத்தனை பெண்கள் மனதில் எழுமென்று தெரியவில்லை. பெரும்பாலும் தங்களுக்கான நேரம், தேவை, ஆசை என்பதை இவர்கள் மறந்தே போகிறார்கள். கூண்டுச்சிறையோடே இருக்கும் இவர்களின் வானமும் பூமியும் பிறந்த வீட்டில் தொடங்கி புகுந்த வீட்டில் முடியும் உலகமாகவே பெரும்பாலும் உள்ளது. தற்காலச் சூழலில் சில பெண்களுக்குப் பயணம் ஓர் அளவுக்குக் கைகூடி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று.
அப்படி என்ன இந்தப் பயணம் செய்துவிடப் போகிறது, எதற்குப் பயணம் அதுவும் பெண்களுக்கு? தேவையில்லாத ரிஸ்க், ஆபத்தைத் தானே விலை குடுத்து வாங்குவதா? இப்படிப் பலரும் பலவாறு சொல்வார்கள் அநேகமாக அது சகப் பெண்களின் குரலாக இருக்கும். இயற்கையிடம் இருந்து வெகு தொலைவு வந்துவிட்ட மனித இனம், தனக்குள்ளாகப் பல்வேறு சுவர்களை எழுப்பிக்கொண்டு அந்நியப்பட்டு கிடக்கிறது. இந்தச் சுவர்களைத் தகர்த்து நம்மை நாம் உணரவும், இயற்கையின் அங்கம் என உணரவும் பயணங்கள் தேவை. அதிலும் பெண்களின் நிலை இன்னும் மோசம், மூச்சு முட்டும் சமூகச் சூழலில் இருந்து கொஞ்சம் இறுக்கங்களைக் களைந்து சுதந்திரமாக சுவாசிக்கப் பயணம் நிச்சயமாகத் தேவை.
நாகரிகத்தின் மூலமே மனித இனத்தின் நகர்வுதான் என்பார்கள், அதில் பெண்ணின் பங்கு என்பது பிரதானம் என்றும் வாழ்தலுக்கான தெம்பும் நம்பிக்கையும் அவளிடம் இருந்தே கடத்தப்படுகிறது என்றும் மனிடவியல் ஆய்வுகள் நமக்குச் சொல்கின்றன. தாய் வழி சமூகமாக மனித இனக் குழுக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தவள் எவ்வாறு மொத்தமாகத் தன் இருப்புக்கான எல்லாவற்றிற்கும் துணை தேடும் ஆளாக மாறிப் போனாள்? அவளின் பொழுதுகள், வெளிகள் எவ்வாறு குடும்பத்திற்குள்ளும், நான்கு சுவர்களுக்குள்ளும் சுருக்கப்பட்டது? சமூகக் கலாச்சாரம் கட்டமைப்பு மூலம் உளவியல் ரீதியாகப் பெரும் தாக்குதல் உட்பட்ட அவர்களுக்கு உளவியல் வலு சேர்ப்பதுதான் அவர்களின் அடிமைத் தளைகளை நீக்க உதவும். அது பயணம் மற்றும் வாழ்வியல் சார்ந்த புத்தகங்கள் மற்றும் பகிர்வு வழிதான் சாத்தியப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
என் முந்தைய தலைமுறைப் பெண்களின் உறுதியின் பலனால் இன்று குறைந்தபட்சம் எனக்கான பொழுதுகளையும் வெளிகளையும் அனுபவிக்க முடிகிறது. இது எத்தனை பெரிய சலுகை என்று புரிய வைத்தது ஹெர்ஸ்டோரிஸ் மூலம் நிவேதிதா தோழர் ஏற்பாடு செய்த பெண்களுக்கான பயணத்தின் போதுதான். ஒரு சூழல், இடம், சமூக அமைப்பு, மதத்தின் ஆளுமை, கலாச்சாரம் இப்படிப் பல்வேறு காரணிகள் மூலம் பெண்ணின் நகர்வு தீர்மானிக்கப்படுகிறது என்று புரிந்துகொண்டேன். இரண்டு பயணங்களும் மறக்க முடியாத அனுபவமும் கற்றலும். முதல் பயணம் ’இரவு உலா.’ நான் இதுவரை அறிந்திடாத இரவின் உலகம். என் இரவுகள் எவ்வாறு கழிந்தன என்று யோசித்தால்? அம்மாவின் அழுகை, என்னையும் தங்கச்சியையும் தூங்க வைக்க அவர் கூறும் கதைகள், மிரட்டல்கள், அவரின் பேய் கனவுகளின் அலறல், அதில் இருந்து தப்பிக்க வாசல் எதிரில் அவள் வைக்கும் துடைப்பமும், பெரிய கத்தியும் , மழைக் காலத்தில் இரவின் அமைதியில் மிரட்டும் தவளை சத்தம், குடிசை ஓட்டை குழாய் நிரப்பும் தண்ணீர் சத்தம், இருளின் பயம் நீக்கும் குண்டு பல்பு, அம்மாவோடு பார்க்கும் நிலா , நட்சத்திரம் அவளோதான் என் சிறுவயது இரவின் ஞாபகம். அதன் பிறகு வேலை இரவு ஷிபிட் இருந்த போது இரண்டு ஆண்டுகள் பொழுதுகள் எதுவென்றே தெரியாத ஏதோ ஒரு மயக்க நிலையிலே கழிந்தன. நகரத்தின் இருள் போல் அல்லாமல் சில பயணங்களில் காட்டின் இருளை அனுபவிக்கும் பொழுது பீதி கலந்த வித்யாசமான உணர்வு. தனியே பயணம் செய்தபோது ஒரு போதும் ஆழ்ந்த உறக்கம் இருந்ததே இல்லை. தனிப்பட்ட மன குழப்பங்கள், வீட்டு சூழல், நல்ல பெண் வகைமையில் இருந்து நழுவும் போது வரும் ஏச்சுப் பேச்சுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு மண்டையில் நடத்தும் பெரிய வட்ட மேஜை மாநாட்டின் கூப்பாட்டில் தொலைந்தப் போன மண்டை வலி இரவுகள். இப்படித் தனிப்பட்ட இரவுகள்தாம் பெரும்பாலும். பயணங்களின் இரவுகளில் சந்திக்கும் மனிதர்கள் அவர்களின் வாழ்க்கை அந்த அந்த நேரத்து ஆச்சர்யம், மகிழ்ச்சி, சிலிர்ப்பு இப்படியான ஓர் உணர்வு கைகுலுக்கல் மட்டுமே இருக்கும்.

இந்த இரவு உலா காட்டிய இரவோ வேற மாதிரியானது, இரவின் மறுமுகம். அதன் நிஜம், எதார்த்தம் என் வாழ்க்கையின் சொகுசை உணர்த்தியது. (ஹெர்ஸ்டோரிஸ் பெண்கள் பயணம் குறித்து முழு தகவல், நங்கள் சென்ற இடத்தின் வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ள ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்). யாருக்கோ உழைக்கும் கட்டாயம், யாரோ சுக போகமாக உறங்க, அவர்களின் அன்றாடம் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இயங்க ஒரு மக்கள் கூட்டம் ஓடிக்கொண்டே இருக்கும் இரவு உலகம். பெசன்ட் நகர் கடற்கரையில் தொடங்கி லூப் ரோடு, மெரீனா, கிண்டி கத்திப்பாரா நகர சதுக்கம், காசிமேடு மீன் சந்தை, கோயம்பேடு மலர் அங்காடி, பின் கோயம்பேடு மெட்ரோ ரயில்நிலையத்தில் முடிந்தது. சென்னை தனக்குள் வைத்து இருக்கும் கதைகள், மனிதர்கள், வரலாறும் எத்தனை எத்தனை!! ஒவ்வோர் 10 ஆண்டுகளும் நகரம் மாறிக் கொண்டே இருக்கிறது என்று சென்னையின் வரலாற்றை நிவேதிதா தோழர் பயணம் முழுக்க எங்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தார். இதை எதையுமே கவனிக்காமல், எங்கேயும் கற்கவும் வழி இல்லாமல் போய்க்கொண்டிருந்த என் தனி மனித ஓட்டத்தை நிறுத்தி இந்த நகரத்தின் கதைகளைக் கேட்க வைத்தது இரவு உலா பயணம். சத்தமே இல்லாமல் அல்லது பொது குரலாக எழும்பவிடாமல் பெண்களும், உழைக்கும் மக்களும் புறம்தள்ளப்படும் போக்கைப் புரியவைத்தது.
24 மணி நேரமும் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒருபுறம் குப்பைகளைக் கையாளவே அவர்கள் பிறப்பெடுத்தார் போன்று நம் குப்பைகளை அவர்கள் மேல் வீசியவாறே சுத்தம் குறித்து நொந்து கொண்டு கடந்து செல்கிறோம். நள்ளிரவு பிரியாணி, இரவு முழுக்க இயங்கும் கிண்டி கத்திப்பாரா சதுக்க உணவுக் கடைகள் என இப்படி ஒருபுறம் நகரம் தன் இயல்புடன் அதற்கான மனிதர்களோடு கொண்டாட்டமாக மின்னிக் கொண்டிருக்க மறுபுறம் நகரத்திற்குச் சேவை செய்யவே பிறந்தார் போல் உழைக்கும் மக்கள். அத்தியாவசியத் தேவைகள் முதல் நம் அன்றாடம் இவர்கள் இன்றி ஸ்தம்பித்துப் போகும். பிணைக்கப்பட்ட வாழ்க்கை, வஞ்சிக்கப்பட்ட மனிதர்கள் என இந்த இரவு உலா என்னுள் எழுப்பிய கேள்விகளும் கற்றுத் தந்த பாடமும் ஏராளம்.

அடுத்த பயணம் பழவேற்காடு. தென் இந்திய மன்னர்கள் முதல் ஐரோப்பியர்கள் வரை ஆண்ட வளமான கலாச்சாரம், வரலாற்றுப் பாரம்பரியம், உயிர் பன்முகத்தன்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட இடம். பழவேற்காடு நாட்டின் இரண்டாவது பெரிய உவர் நீர் தடாகம், இங்கு பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது. ( பழவேற்காடு பற்றிய முழு வரலாறு மற்றும் தகவல்களுக்கு ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்). ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம், பரந்த நீல கடல் பரப்பில் படகுப் பயணம், தோழிகளோடு குளியல், சுவையான பதப்படுத்தப்படாத மீன் சாப்பாடு, பராமரிப்பு இல்லாத டச்சுக் கல்லறை, விஜயநகரக் காலத்து கோயில்கள், நேரம் குறைவு காரணமாக மசூதி பார்ப்பதற்கு வாய்ப்பு கிட்டவில்லை, பனை ஓலை கைவினைப் பொருட்கள், மீன் ஊறுகாய் என வண்ணமயமான சுவையான பயணம்.
சுய உதவி குழுக்கள், தன்னார்லர்கள் உதவியோடு பெண்கள் முன்னின்று பழவேற்காடு உணவு திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பையும் பழவேற்காட்டின் முக்கியத்துவத்தையும் புரிய வைத்து இன்று வரையிலும் போராடி வருகின்றனர். இயற்கை பேரழிவு, முதலாளித்துவப் பேராசை, அரசின் அலட்சியம் என எல்லாவற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும் முதல் நபர்கள் இவர்களாக இருப்பினும் ஒட்டுமொத்தத இயற்கைச் சூழலையும் நம் சொகுசு வாழ்கையையும் எளிய மக்களின் போராட்டங்கள், முன்னெடுப்புகள், உழைப்புகள்தான் தக்க வைக்கின்றன. இந்தப் பயணத்தில் நான் கண்டுணர்ந்த ஒன்று பெண்களின் உழைப்பைத் திருடி தனதாக்கிக் கொள்ளும் போக்கு, தனித்து அவர்களால் இயங்கவே முடியாது என்று மறைமுகமாக ஒரு உளவியல் தாக்குதல் இதை எல்லாம் அறிந்தும் பெண்ணானவள் தொடர்ந்து சமூகத்திற்கும் அவளின் அடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் பாதை வகுத்து கொண்டே இருக்கிறாள்.
அரேபியா குடியேற்றங்கள் பற்றிப் பேச்சு வந்தபோது நிவேதிதா தோழர் அரேபிய நாட்டில் அவர் தங்கி இருந்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஐயோ நாம் இருக்கும் சுழலும் இடமும் எவ்வளவோ பரவாயில்லை என்பதுபோல் இருந்தது. அதையொட்டி தோழர் நிவேதிதா சொன்ன செய்தி மிக முக்கியமான ஒன்று. மதம் நிறுவனமயமாகும் போது அது எவ்வாறு பெண்ணைப் பாதிக்கும், நாம் இருக்கும் சூழலில் இருக்கும் சிறப்பு உரிமைகளை (previlege) உணர்ந்து நாம் ஆற்ற வேண்டிய பணி என்ன, நம்மைச் சுற்றியுள்ள சமூகக் கலாச்சார மாற்றங்களை கவனிப்பது எத்தனை முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்தினார். பழவேற்காட்டில் பனை ஓலை கைவினைப் பொருட்களை இஸ்லாமியக் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் இடத்திற்குச் சென்றோம். இஸ்லாமியர்களின் வாழ்க்கை, மொழி, கலாச்சாரம், நம்பிக்கை, உளவியல் பற்றி அறிமுகம் கிடைத்தது. பனை ஓலைக் கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பாத்திமா, அங்குள்ள பெண்கள் அனைவரையும் சேர்த்து பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெற்றது பற்றியும், அந்த ஊரில் முதல் முறையாக ஒரு பெண் மேற்படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளார் என்றும் பெருமையாகப் பகிர்ந்துகொண்டார். ரொம்பவும் குறைந்த வெளியாக இருந்தாலும் பெண்கள் எத்தனை வலிமையாகத் தங்களுக்கான தேவைகளை, சுதந்திரத்தை உறுதி செய்துக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.
சுய உதவிக் குழுக்கள், தன்னார்வலர்கள் பழவேற்காட்டில் பெண்களின் மேன்பாட்டுக்குப் பெரிதும் உதவியுள்ளனர். பழவேற்காடு மீன் ஊறுகாய் தயாரிக்கும் பெண்களைச் சந்தித்தோம். எங்களின் ஊறுகாய் வாங்கும் ஆர்வத்தைக் கண்டு அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஊறுகாய் செய்முறை, வியாபார உத்தி, அவர்கள் எவ்வாறு கற்றுக் கொண்டனர் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொண்டனர். நிலத்திணையில் ஒன்றான நெய்தல் திணை மக்களின் இடம், மொழி, சமூக அமைப்பு, கலாச்சார முறை, பின்பற்றும் நம்பிக்கை, பெண்கள் நடத்தப்படும் விதம், வாழ்க்கை முறை தனித்துவமானது. நெடுங்காலமாக அவர்களின் இருப்பைக் கண்டுக்கொள்ளாத சமவெளியில் உள்ள மக்களைப் பற்றியும், அரசைப் பற்றியும், ’சுற்றுசூழல் பாதிப்புகளின் விளைவுகளை முன்னணியில் இருந்து அனுபவிக்கும் நாங்கள்தான் உண்மையில் இந்த நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்கிறோம் என்றும் எங்கள் பிரச்னைகளில் அக்கறை காட்டாத போதிலும் மீனவர்கள் நாங்கள் மக்கள் பிரச்னையில் என்றுமே துணை நின்றுள்ளோம்” என்று தங்களின் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். படகு சவாரி, ஆனந்த கலாட்டா குளியல் முடித்த பின்பு நங்கள் முதலில் சந்தித்தது ராஜலட்சுமியை. மீனவ சமூகத்தில் 70-80% வேலைகள் பெண்களால்தான் கையாளப் படுகிறது, ஆனால் மீனவப் பெண்களுக்கான அங்கீகாரம் சம வெளியில் உள்ள மக்களிடமும், அவர்கள் சமூகத்திலும் மிகவும் குறைவுதான். அவர்கள் சமூக வழக்கப்படி பெண்கள் ஊர் கூட்டத்தில் பேச அனுமதி இல்லை, பருவமடைந்த பின்பு கல்வி இல்லை, வலைக்குப் போக அனுமதி இல்லை, வலைக்குப் போகும் போது சகுனத் தடையாகச் சகப் பெண்களால் நம்பப்படுகிறாள், கழிப்பறை இல்லாத காலத்தில் பருவமடைந்த பின்பு இயற்க்கை உபாதைகள், காலைக் கடன்களுக்குக்கூட தனியாகப் பகல் நேரத்திலும் செல்ல முடியாது, இரவு நேரத்தில் தான் காலைக்கடன். அதற்கும் யாரேனும் ஒருவர் துணைக்கு வர வேண்டும், தினம் குளித்து நல்ல உடை அணிவதே பேசு பொருளாக்கப்படும். இவை அனைத்தும் அந்தக் குறுகிய உரையாடலில் ராஜலட்சுமி பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் மட்டுமே. 7ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத சூழ்நிலை, எப்பவும் போலவே இருக்கும் கட்டுப்பாடுகள், திருமணம், மூன்று குழந்தைகள் இப்படி இருந்தவரின் வாழக்கையை மொத்தமாகத் திருப்பிப் போட்டது சுனாமிதான். சுய உதவிக் குழுக்கள் அறிமுகம், தலைமைத்துவப் பயிற்சி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் மீனவ சமூக முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் ஒருவராக இருக்கிறார். ரேஷன் கார்டு, திருமணத் திட்டம், பெண் குழந்தைத் திட்டம் இப்படி அரசாங்கத் திட்டங்கள் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் மக்களிடம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து, பெண்கள் மீனவர் சங்கத்தின் தலைவர், மீனவ சங்கப் பொருளாளர், மீன் பிடி தடைக்கால உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயரக் காரணமானவர், மருத்துவர்கள் இல்லாத மருத்துவமனையில் இன்றைக்கு 24 மணி நேர மருத்துவர்கள் இருக்க முக்கியக் காரணமானவர், தொழில் சார்ந்து எல்லாமே அத்துப்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் 2 விருதுகள், வருடம் ஒருமுறை மாணவர்களுக்கு மீனவர்கள் பற்றியும், மீனவப் பெண்கள் பற்றியும் பாடம் எடுக்கும் சிறப்பு ஆசிரியர், இளக்காரம் செய்த வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் முதல் பெண்களுக்குப் பேச என்ன இருக்கிறது என அலட்சியம் செய்த சொந்த சமூகம் வரை இன்று தன்னையும் தன் சமூகத்துப் பெண்களையும் சுயமரியாதையோடு வழிநடத்தும் ராஜலட்சுமி அந்தக் கூனங்குப்பத்தில் தவிர்க்க முடியாத பேராளுமை!

சுற்றுசூழல், மீன் வரத்துக் குறைவு, படகு, எரிபொருள், பராமரிப்புச் செலவுகள், அரசின் அலட்சியப் போக்கு எனப் பல்வேறு காரணங்களால் இன்று உள்ள தலைமுறையினர் பாரம்பரியத் தொழிமுறையில் இருந்து விலகி உள்ளனர். இந்த விலகலும் பொருளாதார நெருக்கடியும் இளைஞர்களைத் தங்கள் படிப்பு சார்ந்து வேலைக்குச் செல்லவும் , பெண்கள் வேறு கம்பெனி சார்ந்த வேலைகளுக்குச் செல்லவும், ஆண்கள் குடும்ப வேளைகளில் பங்குகொள்ளவும் வைத்துள்ளது. குறிப்பாக உழைக்கும் மக்களின் உயிர்க்கொல்லியான குடிப் பழக்கம் குறைவதற்குக் காரணமாகவும் மாறியுள்ளது.
இப்படி ராஜலட்சுமி மட்டும் அல்ல இந்தப் பயணத்தில் பழவேற்காட்டில் சந்தித்த பெண்கள் அனைவரும் அவர்களின் மிடுக்கும் தைரியமும் என்னை ஆச்சரியமடைய வைத்தது. என் அம்மா சிறு வயதில் செய்யாத வேலை இல்லை. செங்கல் சூளை, வயல் வேலை, கட்டு வேலை, கட்டுமான வேலை எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். அவர் சுயமாகப் பொருளாதார ரீதியாகத் தன் வீட்டுக்கு உதவும் போது இருந்த தைரியம் அவர் திருமணத்திற்குப் பின்பு மொத்தமாகக் காணாமல் போனது. எங்களைச் சாக்கு வைத்து என் அப்பா அவரை வேலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அப்பாவின் அம்மாவோ, ’பட்டிக்காடு அது அதுங்க என்ன என்னலாம் பண்ணுறாங்க, வேலைக்குப் போறாங்க, இவ என உக்காந்து திங்குறா’ என்று பேசினார். இன்று நானும் என் தங்கையும் சுயசார்புள்ள பெண்களாக, பொருளாதார ரீதியாக ஒரு நிலைமைக்கு இருக்கக் காரணம் எங்கள் அம்மா மட்டுமே. நாங்கள் வளர்ந்த பின்பு ஒரு முறை எங்களிடம்,”நான் கம்பனிக்கு வேலைக்குப் போகட்டுமா, இங்க இருக்க எல்லாரும் போறாங்களாம்” என்றார். நாங்கள், “உனக்கு விவரம் பத்தாது நீ ரொம்ப வெகுளியா இருப்பமா, அதுலாம் வேணாம்” என்றோம். ஒரு கட்டத்தில் தைரியமாக இருந்தார் என்பதையே அம்மா மறந்து போனார். இன்று ஒரு பெண் தனியே ஆணின் துணை இல்லாமல், குடும்பம் இல்லாமல், குழந்தைகள் இல்லாமல் இந்தச் சமூகத்தில் வாழவே முடியாது, படிப்பு வேலை எல்லாமே போகிற இடத்தில் அவமானம் படாமல் இருப்பதற்கு தான் என்கிற கட்டமைப்புக்குள் சிக்கி ஒடுங்கிக்கொண்டார். ஒரு வேலை அன்று நாங்கள், “அம்மா உனக்குப் பிடித்ததைப் பண்ணுமா” என்று அவர் விருப்பத்திற்குத் துணை நின்று இருந்தால், என் அம்மாவும் தைரியமாகவும் மிடுக்காகவும் ஒளிர்ந்து இருப்பார்.
பெண்களுக்கு இடையே சத்தம் இல்லாமல் ஒரு வன்முறை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, அவர்களை ஒன்று சேர விடாமல். உருவக் கேலி முதல் பெண்கள் மேல் இருக்கும் கட்டமமைப்புகளின் அடுக்குகள் கணக்கற்றவை. இவற்றை ஆழ்ந்து கவனித்தால் மதம், சாதி, ஆணாதிக்கம் எனச் சமூகக் கலாச்சார அமைப்புகளின் பிரதிபலிப்பை நாம் காண முடியும். இவற்றைப் பெண் தனக்கு அறிந்தும் அறியாமலும் கடத்தும் ஊடகமாகச் செயல்படுகிறாள் என்பதும், அதுவே பெண்களுக்கு இடையே சத்தம் இல்லாத வன்முறையாக நிலைத்து நின்று பெண்களை ஒன்றிணைய விடாமல் தடை செய்கிறது. இதைக் கண்டுணர்ந்து அவளின் ஒட்டுக்குமுறைகளின் அடுக்குகளைக் களைய வாசிப்பும், பயணமும், பகிர்வும்தான் தன்னுணர்ந்து சவால்களை எதிர்கொள்ள உதவும். அதற்கான வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்த நிவேதிதா லூயிஸ் தோழருக்கும், ஹெர்ஸ்டோரிஸ் அமைப்பிற்கும் , உடன் பயணித்த தோழிகளுக்கும் என் நன்றிகளும் அன்பும்.
படைப்பாளர்

எஸ். திவ்யபாரதி
பிழைப்புக்கு ஐ.டி. ஊழியர். பெண்ணியம் வழியாக மனிதம் பேசவும் எழுதவும் ஆசையும். தேடலும் கொண்ட மனுஷி. இது ஹெர் ஸ்டோரிஸ் தளத்தில் வெளியாகும் இவரின் முதல் கட்டுரை.
அருமையான எழுத்து.
பயணங்கள், நமமை அறியாமல், நாமே பிறரை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிய வைக்கிறது!!