வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல் கொள்ளும் நிலை, மன்னிப்புக் கேட்கும் நிலையின் போதுதான் பாதிக்கப்பட்டவர்கள் வன்முறையைக் காட்டும் நபர் மீது எந்தக் குற்றமும் இல்லை என நம்பத் தொடங்குகிறார்கள். தங்கள் செயலை, நடவடிக்கைகளை மாற்றத் தொடங்குகிறார்கள். தங்களை அடக்கி ஆள்பவர் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர் மீதும் முழு நம்பிக்கை கொண்டு அவர்களைத் திருப்திப்படுத்த அவர்கள் விரும்பும் வண்ணம் எல்லாமே செய்ய ஆரம்பித்து முழுக்கத் தன்னம்பிக்கை இழக்க ஆரம்பிக்கிறார்கள்.
தங்கள் குழந்தைகளைக்கூட அதிகாரம் உள்ள தந்தையின்/தாயின் மனம் கோணாமல் நடக்கப் பழக்குகிறார்கள். இதைச் செய்யாதே அப்பாவிற்கு/அம்மாவிற்குக் கோபம் வரும் அல்லது பாட்டி/ தாத்தாவிற்குக் கோபம் வரும் என்பது போல. எப்படியாவது அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்து சினத்தில் இருந்து தப்பித்தால் போதும் என்பது முதல் ஆத்திச்சூடியாகிறது. எது தவறு சரி என்பது அல்லாமல், இதுதான் தான் செய்ய வேண்டியது, அப்படி மீறி அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சினம் வந்தால் தான் செய்தது தவறு என்கிற எண்ணம் ஆழப்பதிகிறது.
குழைந்து குழைந்து மன்னிப்புக் கேட்கும் போதெல்லாம் அது நடிப்பு எனப் புரியாமல், உருகிப் போகிறார்கள். இந்தக் குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறார்/ள் என்ன மன அழுத்தமோ அதை நம்மிடம் காட்டிவிட்டார், அதனால் என்ன, என்ன இருந்தாலும் நாம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது, இன்னும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் எனத் தீயில் இட்ட வெண்ணையாக உருகுகிறார்கள்.
இன்னும் கவனமாக ஆதிக்கம் செலுத்துபவரின் மனம் கோணாமல் நடக்கப் பழகி தன் விருப்பு வெறுப்புகளை மறந்து போகிறார்கள். தன்னம்பிக்கை குறைந்து அவரையே சார்ந்து வாழத் தொடங்குகிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், மெல்ல மெல்லத் தங்கள் ‘இரையை’த் தனிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
மற்றவர்களிடமோ உறவினர்களிடமோ பேசத் தொடங்கினால், அவர்களுக்குத் தான் ஆதிக்கம் செலுத்துவது தெரிந்துவிடும் என்கிற அச்சத்தில் அல்லது தனது உறவினர் மெல்லத் தன் கட்டுப்பாட்டிலிருந்து விலக நேரிடும் என்கிற எண்ணத்தில் தனிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.
எப்போது பொது விழாக்களுக்குச் செல்ல நேர்ந்தாலும், தனது ’பொஸசிவ்’ அல்லது உரிமை நிலைநாட்டி உன்னை விட்டு என்னால் ஒரு நிமிடம்கூடச் செலவழிக்க இயலாது எனச் சொல்லி மனைவி அல்லது பிள்ளைகளைத் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்திருப்பார்கள். பிறகு அவர்கள் உறவினர்களுடன் நண்பர்களிடம் பொழுதைக் கழிப்பதை, திரைப்படங்கள் அல்லது வெளியே செல்வதைக் குறைத்து முற்றிலும் இல்லாமல் செய்துவிடுவார்கள். இது முற்றிலும் அவர்களையே சார்ந்திருக்கச் செய்யும். எனவே ஓர் அவசர நிலை வந்தால்கூட உதவிக்கு யாரையும் நாட முடியாது.
இதை உணராமலேயே மகிழ்ச்சியாகவும் மெல்லச் சார்புநிலைக்கு மாறிவிட்ட போதில் திடீரெனச் செய்யாத சின்ன சின்ன தவறுக்கும் சினமும் வன்முறையும் தலைகாட்டத் தொடங்கும். இப்போதுதான் அந்தத் தவறைக் காரணம் காட்டி பொருளாதாரமும் செய்யாத அதிகப்படியா செலவும் காரணமாகி கையைவிட்டுப் போகும்.
”இது எவ்வளவு செலவாகி இருக்கு பாத்தியா? நமக்காகத்தானே சொல்றேன். இல்லை விலை ஏறிப்போயிருக்கு, உனக்குத் தெரியலைன்னா விட வேண்டியதுதான். ஏன் இழுத்துப் போட்டுச் செய்யற?” எனக் கோபம் வர தானாகவே பொருளாதாரக் கட்டுப்பாடு கைமாறும்.
இனி ஒவ்வொரு செலவுக்கும் எதிர்பார்க்க வேண்டும். ஒப்புதல்கூட, அது நாளாவட்டத்தில் பாதிக்கப்பட்டவரின் ஆசைகள், கனவுகளையும் சுருக்கி வெறும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் கேட்க வைக்கும். இதில் எப்படி விலங்கை உடைத்து வெளியேறுவது? கஷ்டப்படுவதைக்கூட யாருடனும் தொலைபேசி உரையாட முடியாது.
வாழ்க்கையே ஆதிக்கம் செலுத்தும் நபரைச் சார்ந்திருக்கும் போது வேறு வழியில்லாமல் எல்லாவகையான வன்முறைகளையும் பொறுத்துப் போக ஆரம்பிக்கிறார்கள். தன்னம்பிக்கை குறைந்து தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கிறது. எது சரி, எது தவறு என்று பகுத்து அறியும் உணர்வும் குறைகிறது.
பொருளாதாரம் முதல் பொழுதுபோக்கு வரை, சின்ன சின்ன செயல்பாடுவரை எல்லாவற்றிற்கும் சார்ந்து வாழச் செய்தபின், மெல்ல ஆதிக்கம் மற்ற விஷயங்களில் பரவும். அயல்நாடுகளில் வசிப்பவர்களாக இருந்தால், “பாஸ்பார்ட்டைக் கொடு, அதை நீட்டிக்க வேண்டும்” என வாங்குவார்கள், திருப்பித்தர மறப்பார்கள் அல்லது விசாவிற்குச் சார்ந்திருக்க வேண்டிவரும். வெளிநாட்டுப் பயணங்கள், தாயகம் செல்வது ”எனக்கு விடுமுறை இல்லையே” எனப் போலியான காரணங்களால் தள்ளிப்போடப்படும். வாகனம் ஓட்டும் உரிமங்கள் பெற்றுக்கொள்ள அனுமதி கிடைக்காது.
இன்னும் சிலர் பணிக்குச் செல்வார்கள், குழந்தைகளைப் பள்ளிக்கும் விளையாடும் இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். ஆனால் குறித்த நேரத்தில் வீடு திரும்ப வேண்டும். போக்குவரத்து நெரிசல் என்றாலும் தாமதமானால், ஆதிக்கம் செலுத்தும் இணையரிடம் இருந்து வன்முறை வெளிப்படும். கேட்டால், கரிசனம் என்று சொல்வார்கள். ஏற்கெனவே தாமதம், தலைவலி அலுவலக அழுத்தம் இதில் வீட்டில் நுழைந்தவுடன் எதிர்ப்படும் வன்முறை என மீளா அழுத்தங்களில் சிக்கிக்கொள்வோர் பலருண்டு. இப்போது தொழில் நுட்பம் எந்த நேரத்தில் எங்கே இருக்கிறார்கள் எனப் பார்க்க டிராக் செய்ய வசதியாகப் போய்விட்டது.
இன்னும் சிலர், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளை விட்டு வெளியே வர பல பெண்கள் அஞ்சுவது பலவகைக் காரணங்களுக்காக. வீட்டுச் சூழ்நிலை, சமூகச் சூழல், குழந்தைகள் நிலை. தன்னாலேயே தனியாக வாழ இயலாத தன்னம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை கூடிய நிலை. அதையும் மீறி வெளியேறிச் சென்றால், இதுவரை பட்ட அல்லல்களைச் சொன்னால்கூட யாரும் நம்பக்கூட முடியாது. ஏனெனில் ஏற்கெனவே எந்தத் தகவலையும் வெளியே எதையும் சொல்லக்கூட முடியாத நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்கள். எனவே இந்தத் தகவல்கள் எல்லாம் புதிதாக இருக்கும் . எனவே உறவினர்களையோ நண்பர்களையோ நம்ப வைப்பது கடினம்.
இந்தச் சக்கரம் காதல், மன்னிப்பு கேட்கும் படலம் முடிந்தபின் திரும்பவும் அதிகாரம், அடக்குமுறையில் சுழலும். இப்படியே மாறி மாறி சுழலுவதால் இதிலிருந்து வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களால் மீளமுடியாது. அதீத மன அழுத்தம், சில நேரம் தன்னைவிட மென்மையானவர்களிடம் சினமாக மாறும். சில நேரம் தற்கொலைகளில் முடியும். இதை எப்படித்தான் தடுப்பது? வரும் வாரங்களில் காணலாம்.
(தொடரும்)
பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.