இன்று காதலர் தினம் மட்டும் அல்ல. நூறு கோடிப் பெண்கள் உடல்மேல் செலுத்தப்படும் பாலியல் வன்முறை, வன்முறை (அடி உதை போன்ற கொடுமைகள்), பாலியல் சீண்டல், வன்புணர்வு, டேட்டிங் கொடுமை – இவற்றுக்கு எதிராக ‘One Billion Rising’ என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்ந்தெடுத்த நாளும் இதுவே.

2012ஆம் ஆண்டு ஆரம்பித்து இன்று உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமான முழக்கத்தோடு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் வன்முறைகள் இன்றும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பள்ளி மாணவியைக் கூட்டு வன்முறை செய்த ஆசிரியர்களின் நிகழ்வு உள்பட பல கொடுமைகள், வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

உலகம் எங்கும் தீவிர வலது சாரி அரசுகளும் பழமைவாத கொள்கைகளும் அரியணை ஏற ஆரம்பித்திருக்கின்றன. ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே, இனிமேல் இரண்டே இரண்டு பாலினம்தான் – ஆண் அல்லது பெண் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் அதிபர். இதனால் பல இலட்சக்கணக்கான மாற்றுப்பாலினத்தோர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது போன்ற தீவிர வன்முறையை வேறெங்கும் கண்டிருக்க முடியாது.

நூறு கோடி எழுச்சி(One Billion Rising) பெண்கள், மாற்றுப்பாலினம் ஆகியோருக்கு எதிரான வன்முறையை எதிர்த்து விழிப்புணர்வைப் பரப்புவது ஆகும். 2013 ஆம் ஆண்டில் ‘மாற்றம்’ என்றகொள்கையில்  அனுசரிக்கப்பட்டது. அப்போது சுற்றுப்புறச் சூழல், போர்களால் பெண்களுக்கு நேரும் வன்முறைகள், தந்தை அல்லது ஆண்கள் வழி (patriarchy) வரும் ஆதிக்கம், ஆகிய அனைத்தையும் எதிர்த்து விழிப்புணர்வைப் பரப்பினார்கள்.

பின்வந்த 2014, 2015 ஆம் ஆண்டுகளில், புரட்சி(Revolution) – ஒரு சமூக மாற்றத்தை விரும்பி பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்கான முயற்சிகளும் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன.

2017இல் சேர்ந்து கூட்டாக நிற்போம், துணை நின்று வன்முறையை எதிர்ப்போம் என்ற பொருள் படும் படி ‘பெண்கள் மற்றும் சிறுமிகள் சுரண்டப்படுவதற்கு எதிராக ஒற்றுமையில் எழுச்சி’ (Rising solidarity)   என்ற பொருளில் அனுசரிக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில், சமையல் வேலை செய்யும் பெண்கள் முதல், உடல்நலம் காக்க வீட்டிற்கு வரும் கடைநிலை பெண்கள் வரை பல வழிகளில் பெண்கள் வன்முறையை எதிர்கொள்கின்றனர்.  பல அடுக்குகளைக் கொண்ட இந்தச் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகள், பெண்களைத் தொடர்ந்து அடிபணிய வைக்கின்றன, ஒடுக்குகின்றன.

இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசுகளால் பொருளாதார சுரண்டல் பூகோள ரீதியில் திணிக்கப்படும்போது, உழைப்புக்காக ஏழைப் பெண்களை ஏற்றுமதி செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

பூமியைத் தவறாகப் பயன்படுத்துவதும், இலாபச் சேவையிலும், பிற நாடுகளின் இலாபம் மற்றும் வளர்ச்சிக்கான சேவையிலும் வன்முறைகள் கண்டும் காணாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பழங்குடியினப் பெண்கள், திருநங்கைகள், புலம்பெயர்ந்த பெண்கள், வீட்டுப் பணியாளர்கள், ஆவணமற்ற பெண்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் விவசாயத் துறையிலுள்ள பெண்கள் என மிகவும் விளிம்புநிலை பெண்களுக்குச் சுரண்டல் இழைக்கப்படும் போது கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. 2017இல் இந்த நூறுகோடி எழுச்சி செய்த விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான அனைத்து வகையான சுரண்டல்களையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கையை முன்வைத்ததாகும்.

அதற்கடுத்த ஆண்டில், ‘எழுந்திரு, எதிர், ஒன்றுபடு’ தாரக மந்திரமானது. உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையின் மீது பாசிச, ஏகாதிபத்திய, தாக்குதல்களின் மூர்க்கமான தீவிரப்பாட்டால் வரையறுக்கப்பட்ட காலட்டம் இது. இந்த நேரம், ‘எழுந்து நிற்போம், எதிர்த்து நிற்போம் ஒன்றுபடுவோம்’ என்ற நூறு கோடி எழுச்சியின் குரல் பொருத்தமாக எதிரொலித்தது.

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள  விளிம்புநிலை மக்களான உழைக்கும் வர்க்கம், சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் – தாக்கத்தை அனுபவித்து, தங்கள் அடிப்படை நலன்கள் மற்றும் உரிமைகள் மற்றும் வீடுகள் மீதான இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பெண்களின் உரிமைகளை ஆதரித்தல், பழங்குடி நிலங்கள் மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பாசிசம் மற்றும் கொடுங்கோன்மை, பாகுபாடு மற்றும் இனவாதம், சுற்றுச்சூழல் சூறையாடல் மற்றும் அழிப்பு, பெருநிறுவனப் பேராசை, பொருளாதார வன்முறை, வறுமை, அரசு மிருகத்தனம் மற்றும் ஒடுக்குமுறை, போர் மற்றும் இராணுவ வாதம் ஆகியவற்றுக்கு எதிராக எழுச்சி ஆகியன இந்த விழிப்புணர்வில் அடங்கின என்றால் மிகையாகாது.

2019ஆம் ஆண்டு ‘எழுச்சி: பரப்புரையில் இருந்து வாழ்க்கை முறைக்கு’ மற்றும் நூறுகோடி எழுச்சி வழிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து பெருகிக்கொண்டே வர,  முதலாளித்துவம், காலனித்துவம், இனவாதம், ஏகாதிபத்தியம், சுற்றுச்சூழல் சூறையாடல் மற்றும் போர் ஆகியவற்றின் பின்னணியில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துவது அவசியம்.

பெண்களே நீண்டகாலமாகப் பிளவுபட்டு இருக்கிறார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்க, அனைவரும் பிணைக்கப்பட வேண்டும். இந்த எழுச்சி அதற்கான முதல்படி. இது ஒரு வாழ்க்கை முறை, உலகில் இருப்பதற்கான ஒரு வழி. நாம் எழுவது ஒரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் இந்த உணர்வு நாம் செய்யும் அனைத்திலும் எழ வேண்டும். தைரியமாக இருக்கவும், ஆழமாகச் செல்லவும், பிரதிபலிக்கவும், படிக்கவும், கேட்கவும், கற்றுக்கொள்ளவும்,

ஏனெனில் எழுச்சி இனி ஒரு பரப்புரை அல்ல – அது ஒரு வாழ்க்கை முறை.

தொடர்ந்த ஆண்டுகளில் தொற்றுநோயால், வன்முறைகள் பெருக ஆரம்பித்தன.

வலதுசாரி தேசியவாதம், வெள்ளை மேலாதிக்கம், பாசிசம், கொடுங்கோன்மை, புலம்பெயர்ந்தோர் மீதான வெறுப்பு மற்றும் அச்சம், பெண் வெறுப்பு, பெண்ணியக் கொலை, ஓரினச்சேர்க்கை, டிரான்ஸ்ஃபோபியா, பெருநிறுவனப் பேராசை மற்றும் காலநிலை அழிவு ஆகியவற்றின் அதிகரித்து வரும் அலையின் மத்தியில் மக்கள் சிக்கிக் கொண்டார்கள். பாசிஸ்டுகள், கற்பழிப்பாளர்கள், காலநிலை மறுப்பாளர்கள், கொள்ளையடிப்பவர்கள் ஆகியோரை நாம் வெல்ல முடியாது. உலகெங்கும் நோய், போர்கள் என நிலையற்ற தன்மை, நாடிலிகளும் வீடிலிகளும் பெருக அவர்கள் மீதான வன்முறைகளும் பெருகின. சேர்ந்து நிற்பது ஒன்றே வழியாகவும் ஆறுதலாகவும் இருக்க முடியும்.

2021: 

‘தோட்டங்களின் எழுச்சி’ என்பது தொற்றுநோய் முடிந்து வாழ்க்கை ஆரம்பித்த இந்த வருடத்தின் நூறுகோடி எழுச்சியின் கீதம். என்பது மறுமலர்ச்சி, மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான ஒரு அழைப்பு.

2022: உலகில் உள்ள அனைத்துப் பெண்களையும் ஒருங்கிணைக்கும் அழைப்பாக இருந்தது. ஆணாதிக்கம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மற்றும் இனவாதம் போன்ற கொடிய அமைப்புகளின்அழிவுகரமான விளைவுகளைப் பலருக்கும் எடுத்துச்சொல்ல அதன் பின் இருக்கும் நுண்ணரசியலைப் புரியுமாறு சொல்ல அந்த வருடம் பல திட்டங்களும் செயல்பாடுகளும் இருந்தன.

கடந்த இரண்டு வருடங்களில், பெண்களின் உண்மையான சுதந்திரத்திற்காக அழைப்பு விடுத்தோம். ஆணாதிக்கத்திலிருந்தும் அதன் சந்ததிகளிடமிருந்தும் விடுதலை, முதலாளித்துவத்தின் தண்டனையில் இருந்து தப்பிப்பது, வறுமை, அடக்குமுறை, பிரிவினை, சுரண்டல், அவமானம், கட்டுப்பாடு, தனிமனித வாதம், பேராசை, வன்முறை… இதற்காகப் பல ஊடக வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டன. கதை, நாடகம், நடனம் என்று எந்த மூலமாக இருந்தாலும் பொருள் ஒன்றே. புதிய சமுதாயம் உருவாக்குவது; ஒற்றுமையை வலுப்படுத்துவது…

முன்னெப்போதும் இல்லாத பாசிசம் மற்றும் பாசிச அரசாங்கங்கள் அனைத்துச் சுதந்திரங்களையும் அழிக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பெண்களுக்கான கருச்சிதைவு உரிமைகள்கூட மறுக்கப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இது எவ்வாறு வெளிப்படுகிறது? இது வெவ்வேறு வடிவங்களை எடுத்தாலும், அது ஒரே மாதிரியாகத் தெரிகிறது. பாசிசம் என்ற வார்த்தை. இன்று உலகில் நிகழும் பேரழிவுக்கு எதிராக – பாசிசத்தின் எழுச்சிக்கு எதிராக ஒரு சக்தியாக எவ்வாறு அதிகரிக்கப் போகிறோம், இவை அனைத்தும் குறிப்பாகப் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன? நாடுகள், பெண்களின் உடல்கள், பூமி மற்றும் மக்களின் மனங்கள் மற்றும் இதயங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரப் பெண்களாக என்ன செய்யப்போகிறோம்?  ஒரு நாட்டில் பெண்களின் கருவைச் சுமக்கும் உரிமைகள் அரசால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்னொரு நாட்டில் திருமண வழி வன்புணர்வு தவறில்லை எனத் தீர்ப்பு எழுதப்படுகிறது. பிறிதொரு நாட்டில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. போர்களில் பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. முக்கிய முடிவுகள் எடுக்கும் இடங்களில் பெண்களுக்கான இடம் இல்லை.  

நம்முடைய உடல் நமதானது. வலுவானது. ‘எழுவோம். இரத்தம் உரைந்து கல்லாய் மாறி காலை இடறினாலும் எழுந்திருப்போம், நடக்க அல்ல, பறக்க’ என்கிற கவிதை வரிகளைப் போல எழுந்திருப்போம்! நடனமாடி நம் உடலைக் கொண்டாடுவோம்! மகிழ்ந்திருப்போம்!

படைப்பாளர்

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.