கேள்வி
பாப்பாக்கு 5 மாதம் முடிந்து விட்டது. என்ன மாவு கொடுக்கலாம்? எப்படி ஊட்டணும்?
பதில்
90ஸ் கிட்ஸ் பெண்ணுக்கு குழந்தை பிறந்தாச்சு! சாப்பாடு பழக்குவது ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் தெரியும். ஏனென்றால் வீட்டில் அக்கா, அண்ணி போன்றோர் நடத்தும் சாப்பாட்டு யுத்தத்தை பார்த்திருப்பார்கள் அல்லவா! அந்த பயம் மனதில் படிந்திருக்கும்.
அம்மா தாயே! மாத்தி யோசி என்று சொல்வதைப் போல் மாத்திக் கேளு கண்ணேனு நான் சொல்லட்டுமா? மாவு எதற்கு குழந்தைக்குத் தரணும்? “என்ன ஊட்டலாம்? எப்படி ஊட்டலாம்” என்பது தான் சரியான கேள்வி! அதற்குத்தான் தகுந்த பதிலை என்னால் தர முடியும். ஏன் தெரியுமா? விற்கப்படும் இணை உணவு மாவுகளைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது! நான் பயன்படுத்தவும் இல்லை. என்னிடம் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு வரும் குழந்தைகளுக்கு எழுதிக் கொடுத்ததும் இல்லை. என் இரு மகள்களுக்கும் முதலில் என்ன கொடுத்தேன் தெரியுமா?
கேழ்வரகுக் கூழ், பொடித்த வெள்ளைச் சக்கரை, வீட்டில் வெண்ணை வாங்கி காய்ச்சிய நெய். அதன் ருசியே ருசி! எனக்கு எப்படித் தெரியும் என்றால், சில நாட்கள் ஓரிரு ஸ்பூன் மீதி இருக்கும் அல்லவா? அது எனக்குத்தான். கேழ்வரகை வாங்கி சுத்தம் செய்து, கழுவி, வெயிலில் காய வைத்து, இரவு ஊற வைத்து, காலையில் ஆட்டுக்கல்லில் அரைத்து, பால் எடுத்து நிழலில் காயவைத்து டால்கம் பவுடர் பதத்தில் தமிகவும் நைசாக தயாரித்து கொடுத்த எனது தாயார் திருமதி தங்கம்மாளுக்கு என் நன்றியை தெரிவிப்பது என் கடமை.
ஒன்பது மாதங்கள் வரை எப்படி உணவு தர வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பிறந்த ஆறு மாதங்கள் முடிந்தவுடன், 180 நாள்கள் முடிந்த பிறகு வீட்டில் தயாரித்த, எளிதில் செரிமானம் அடையக்கூடிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைக்குத் தர ஆரம்பிக்க வேண்டும். தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகள் தர வேண்டும். ஏன் ஆறு மாதங்கள் என்ற Cut Off என்கிறீர்களா?
- 6 மாதங்கள் வரை தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள்( தண்ணீர் உள்பட) மட்டுமே குழந்தை வளர்வதற்கு போதுமானது. அதனால்தான் தாய்ப்பால் மட்டும் தர சொல்கிறோம். கோடை காலங்களில்கூட தண்ணீர் தரத் தேவையில்லை. 6 மாதங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து இணை உணவுகளை ஊட்டினால், உடல் வளர்ச்சி அதிகமாகும். சதை மற்றும் எலும்பு வளர்ச்சி அதிகமாகும். உப்பு சேர்த்து தருவதால், குழந்தைக்குத் தாகம் ஏற்படும். தண்ணீரும் இடையிடையே தர வேண்டும்.
- ஆறு மாதம் ஆன பிறகு முன் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்.
- ஆறு மாதங்களில்தான் குழந்தைக்கு நாக்கை நீட்டி, உணவை வாங்கி, உள் இழுத்து ருசித்து வாயில் அசை போட்டு விழுங்கி, என்பதுபோன்ற சாப்பிடும் செயல்பாடுகளுக்கு பழக்கம் மெதுவாக ஏற்படும்.
- இந்தப் பருவத்தில்தான் உமிழ் நீர் தேவைக்கேற்ப சுரக்க ஆரம்பிக்கும். வாயில் உணவு போட்டவுடன் அதிகமாக உமிழ்நீர் சுரக்கும். உமிழ்நீரில் அமைலேஸ் (Salivary Amylase) மற்றும் ட்யலின் (Ptyaline) என்ற இரண்டு செரிமான நொதிகள் (Digestive Enzymes) சுரந்து, மெது மெதுவாக போதுமான அளவை எட்டும். மாவுச்சத்தின் செரிமானம் இந்த இரண்டு நொதிகளால் வாயிலிருந்து ஆரம்பிக்கிறது. நாம் தரும் இட்லி, சாதம் போன்ற மாவுச்சத்துப் பொருள்களின் செரிமானம் வாயிலேயே நடந்து விடுகிறது. முதிர்ச்சி அடையாத பிஞ்சு செரிமான பாதையின் வேலை இதனால் எளிதாகிறது.
- உணவு சாப்பிட தயாராகிவிட்ட குழந்தை, நமக்கு பல விதங்களில் அதைத் தெரிவிக்கும். நாம் சாப்பிடும்போது அதையே உற்றுப் பார்க்கும்! கைகளை நீட்டி உணவை எடுக்கும். உதடுகளைச் சுவைக்கும். நாக்கை நீட்டும். வாயில் எச்சில் ஒழுகும். ஆ- ஊ என்று சத்தம் எல்லாம் கூடக் கொடுத்து, மறைமுகமாக எனக்கும் ஊட்டி விடு என்று கண்களாலேயே உங்கள் செல்லம் பேசுமே!
- ஆறு மாதங்களில்தான் கழுத்தில் தலை சரியாக நின்று நமது இடுப்பில் அல்லது நாற்காலிகளில் நிமிர்ந்து உட்கார்ந்து உணவை வாங்கிக் கொள்ளும் திறன் ஏற்படும்.
- இந்த வயதில் பலவித உணவுகளை, பலவித ருசிகளை குழந்தைக்குப் பழக்குவது எளிது. இது வளரும் குழந்தைக்கு நல்ல உணவு பழக்கத்தை ஏற்படுத்த உதவும்.
- இந்த வயதில் உணவு ஊட்டத் தொடங்கினால், உணவு ஒவ்வாமை வரும் வாய்ப்புகள் குறைவு.
- தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கை உணவுகள் தருவதால் குழந்தை சீரான எடையுடன் நன்கு வளரும்.
- கடைகளில் விற்கப்படும் வினை உணவு மாவுகளால் பாதிப்புகள் அதிகம். உங்கள் பர்ஸுக்கும் தான். அதனால் வீட்டில் தயாரித்த நமது குடும்பத்தின் பழக்க வழக்கங்களுக்கு உட்பட்ட உணவு வகைகளை இணை உணவாகப் பயன்படுத்தி அருமையான பயன்களை பெறலாமே!

உங்கள் குழந்தை மிகுந்த புத்திசாலி! ஆமாம்! 6 மாதத்திலும் குழந்தை அறிவாளிதான்! நிறைய திட்டங்கள் தீட்டி(Strategies) நீங்கள் ஊட்டும் திட உணவுகளை எதிர்க்க முயற்சி செய்வான். வேண்டாம் என்று வாயால் சொல்லத் தெரியாது. மற்றபடி எல்லாம் முயற்சிகளும் செய்வான். அதையெல்லாம் புரிந்துகொண்டு நீங்கள் எதிர்வினை பண்ணியாகணும். இதற்கு உங்களுக்கு யுத்திகள் தேவை!
- இது நாள் வரை பால்- அதாவது திரவ உணவு மட்டுமே உட்கொண்ட பழக்கம் இல்லையா? திட உணவு நல்ல கூழாக மிருதுவாக இருந்தாலும், இது உணவு என்பதே குழந்தைக்கு புரியாது. எதையோ வாயில் வைக்கிறார்கள் என்ற ஒரு எண்ணத்தில் துப்பி விட முயற்சிக்கும். இது இயற்கையான எதிர்வினை (Reflex Action). இதனால் குழந்தைக்கு அந்த உணவோ ருசியோ பிடிக்கவில்லை என்று முடிவு செய்து விடக்கூடாது. ஒவ்வொரு முறை ஒரு புது உணவை வாயில் கொடுத்தாலும் இப்படித்தான் துப்ப முயற்சி செய்யும். எனவே இதற்கு பெரிய அளவு பொறுமை கட்டாயம் தேவை! திரும்ப திரும்ப முயற்சி செய்து கொடுத்தால் தான் குழந்தை உணவை ருசிக்க ஆரம்பிக்கும். விழுங்கவும் ஆரம்பிக்கும்.
- ஒவ்வொரு உணவைப் பழக்குவதற்கும் ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் ஆகலாம். இட்லியை பொறுமையாகப் பழகிவிட்டு, பிறகு ஊத்தாப்பத்தை தர வேண்டும்.
- மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து மிகவும் கூழாக உணவுப் பொருள்களை கொடுக்கக் கூடாது. இப்படிப் பழக்கினால், பிறகு அந்த மிருதுத் தன்மையுடன் உள்ள உணவை மட்டும் சாப்பிடுவான். கையால் பிசைந்து கரண்டி/ மத்து அல்லது Masher-ல் நன்கு கடைந்து உணவு தர வேண்டும். மிக்ஸியின் சூடு மற்றும் அரைபடும் வேகத்தால் பல ஊட்டச்சத்துக்கள் சிதைந்து உணவு பயனற்றதாய் போகும்.
- குழந்தை வாயில் உள்ள உணவை நாக்கால் விழங்க ஆரம்பிக்க பழக வேண்டும். நாம் சிறிது சிறிதாக உணவை வைத்து பொறுமை காக்க வேண்டும். குழந்தை எளிதில் விழுங்குவதற்காக ஒவ்வொரு வாய் உணவிற்கும் தண்ணீர் தரக்கூடாது. இது சரியான பழக்கம் அல்ல. தண்ணீரால் சீக்கிரம் வயிறு நிரம்பி சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும்.
- குழந்தைக்கு பசி நன்கு ஏற்படும் நேரத்தைப் புரிந்து கொண்டு, உணவை ஊட்டவேண்டும்.
- உணவு நேரங்களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக:
காலை உணவு – 8-9 மணிக்குள்
மதியம் – 12 -1 மணிக்குள்
மாலை – 4 -5 மணிக்குள்
இரவு – 7-8 மணிக்குள்
என்று பிரித்துக் கொண்டு இதே நேரத்தை சரியாக கடைபிடித்து உணவு கொடுத்தால் எளிதில் ஒரு வழக்கம் ஏற்படும்.

- உணவு நேரத்துக்கு 1 அல்லது 1 1/2 மணி நேரத்திற்கு முன்பாக பால் (தாய்ப்பால்) தரக்கூடாது.
- நல்ல பசியுடன் குழந்தை இருக்கும் போது உணவு ஊட்டுவது நல்லது. குழந்தை முரண்டு பிடிக்காமல் சாப்பிடும். உணவை குழந்தை ஏற்றுக் கொள்ளவில்லையானால் அல்லது துப்பிவிட்டால் உடனே பாவம் பசிக்குமே என்று பால் கொடுத்து விடாதீர்கள். துப்பினால் முகத்தைத் திருப்பினால் பால் கிடைத்துவிடும் என்று உங்கள் மேதாவி குழந்தை 1-2 தடவைகளிலேயே புரிந்து கொண்டு வேண்டுமென்றே துப்பும்.
- குழந்தை சாப்பிட விரும்பவில்லையானால் ஒரு மணி நேரம் விளையாட அல்லது தூங்க விட்டு பிறகு உணவை கொடுக்க வேண்டும்.
- பால், சர்க்கரை போன்றவற்றை சேர்த்து பிசைந்து உணவு ஊட்டுவது சரியல்ல. பிறகு இட்லி அளவைவிட, தொட்டுக்கொள்ளும் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும். பால் மற்றும் இனிப்பு சுவையிலிருந்து மாற்றி பலவித ருசிகளையும், உணவு வகைகளையும் பழக்குவதுதானே நல்லது? அந்தந்த வேளைக்குப் புதிதாகத் தயாரித்த உணவுகளை கொடுக்க வேண்டும். இது கட்டாயம். ப்ரிட்ஜில் வைத்து கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
- குழந்தைக்கென்று தனிக் கிண்ணங்கள், தட்டுகள்,ஸ்பூன்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அவை எவர்சில்வர், வெள்ளி போன்ற உலோகங்களாக இருந்தால் மிகவும் நல்லது. பிளாஸ்டிக் கப், ஸ்பூன் வேண்டாமே!
- உங்கள் கைகளையும், குழந்தையின் கைகளையும் சாப்பாடு கொடுப்பதற்கு முன் நன்கு சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- உணவு ஊட்டுபவர் கை நகங்களும் குழந்தையின் கை நகங்களும் சீராக வெட்டி சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? நகக்கணுவில் கிருமிகள் தங்கி நோய்த் தொற்று ஏற்படலாம். குழந்தை உணவைத் தொட்டு பிசைந்து விளையாடி எடுத்து வாயில் வைக்க, ருசி பார்க்க நாம் விட வேண்டும். குழந்தையின் கைகளைத் தட்டி விடக்கூடாது.
இத்தனை ஆலோசனைகளையும் பார்த்து பயப்பட வேண்டாம். உணவு என்ற மகிழ்ச்சியான அனுபவத்தைக் குழந்தைக்குத் தருவதற்கான முன்னேற்பாடுகளாக இவற்றைப் பாருங்கள். உங்கள் குழந்தையோடு ஒரு நல்ல அனுபவத்தைப் பெறப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.