“மயினி (மதினி) நீங்க நடக்கனும்னு மனசார நினைச்சீங்கனா, நிச்சயம் நடந்திடுவீங்க, நேத்துப் பொறந்த பச்சப்புள்ளயிலிருந்து பல்லுப்போன தாத்தா வரைக்கும் எல்லா வயசுக்காரங்களும் நடக்குறாங்க தெரியுமா? உங்களால முடியும், எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” – ஆண்டில் ஒருநாள் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கும் கண்ணகி கோட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, தங்கை அம்பிகையின் கணவர் சேர்மத்துரை, அரை மணி நேரமாக பெருமுயற்சியுடன், எனக்கு உளவியல் ஊக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தான் பார்த்து ரசிப்பதை தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்பும் இயற்கைக் காதலர் அவர். ஒவ்வொரு ஆண்டும், ‘நானும் வருகிறேன்’, எனக்கூறி அடம்பிடிப்பதும், குறிப்பிட்ட நாள் நெருங்க நெருங்க பயத்துடன் மறுத்துவிடுவதுமாக நான்கு ஆண்டுகளாக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறேன். 17 ஆண்டுகளாக இடைவிடாது கண்ணகி கோட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் அவர், 18-வது முறையாக இந்த ஆண்டு (2025) செல்லவிருக்கிறார்.

இரண்டுமுறை அவருடன் சென்று வந்த தங்கையை திரும்பிப்பார்த்தேன். ‘நீயும் வருகிறாயா?’ என்ற என் கண்களிலிருந்த கேள்வியைப் புரிந்துகொண்டவள், “அய்யோ சாமி, என்னைக் கூப்பிடாதீங்க க்கா… என்னால முடியாது. அதுகிடக்கு மூணு மலை, நெட்டுக்குத்தலா… ஏறமுன்ன, மூச்சுவாங்கி கிறுகிறுத்துப்போகுது, நீங்க போகனும்னா சந்தோஷமா போயிட்டு வாங்க…” பரிகாசமாக கையெடுத்துக் கும்பிட்டாள். குழப்பமாக இருந்தது. அனிச்சையாக இடது காலை தடவிப் பார்த்துக்கொண்டேன். கடந்த ஆண்டே, ‘முழங்காலில் இரண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையெனில் நடப்பதே கஷ்டமாகிவிடும்’ என்று அறிவுறுத்திய (பயமுறுத்திய) மருத்துவர் முகம் நினைவுக்கு வர, யோசனையாக இருந்தது.

“கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை போல… போகணும்னு இருக்கு, போனா கால் பஞ்சராயிடும்னு பயமாவும் இருக்கு,” என புலம்பத் தொடங்கியவுடன், “சரி, பௌர்ணமிக்கு முதல் நாள் நீங்க சின்னமனூர் வந்திடுங்க, காலையில் பளியங்குடி மலையடிவாரம் வரைக்கும் நாம் ரெண்டு பெரும் இவங்க குழுவோட போவோம். அங்க போற வர்ற மக்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தைரியம் வந்திடும். அடுத்த வருடத்திற்குள் காலை சரி பண்ணுங்க, நானும் வர்றேன். ரெண்டுபேரும் சேர்ந்து மலையேறுவோம்” என திடீர் பஞ்சாயத்து தலைவியாக தங்கை மாற, சபை கலைந்தது. 

 தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி என்னுமிடத்திலிருந்து சுமார் 6.6 கிலோ மீட்டர் மலையேற்றத் தொலைவில் இருக்கிறது மங்கலதேவி கோட்டம் என்கிற கண்ணகி கோட்டம். 6.6 கி.மீ என்று அரசாங்கப் பதிவேடுகளில் இருந்தாலும், ‘வளைந்து வளைந்து செல்லும் பாதை, எங்கள் அலைபேசி கணக்குப்படி 9 கி.மீ வருகிறது’ என தனது 17 வருட அனுபவத்தில் சொல்கிறார் சேர்மத்துரை. கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளியிலிருந்து கிளம்பினால், அவ்விடத்தைச் சென்றடைய, 9 கி.மீ செங்குத்தான மலைப்பயணம், 6 கி.மீ அடர்ந்த காட்டுப்பயணம் என 14 கி.மீ. பயணிக்க வேண்டியிருக்கிறது.

மக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நாயகி, கண்ணகிக்காக கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் 2000 ஆண்டு பழமையான இந்த ஆலயம், சுற்றிலும் பசுமை சூழ்ந்த மலை உச்சியில், கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் (4,386 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கண்ணகி கோபத்துடன் மதுரை மாநகரை எரித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி 14 நாள்கள் நடந்து சென்று நெடுவேள்குன்றம் எனும் மலையில் இருந்து கோவலனுடன் விண்ணேறியதாக (அந்த விண்ணேற்றிப்பாறை இன்று பேச்சு வழக்கில் வண்ணாத்தி பாறையாகி விட்டது!), இலக்கியம் சொல்கிறது.

சேரமன்னன் செங்குட்டுவன் இமயத்திலிருந்து கல் எடுத்து, கண்ணகிக்கு சிலை வடித்து கோயில் கட்டி சிறப்பித்தான் என்கிறது வரலாறு. இலக்கியமும் வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கும் இக்கோயில் பகுதிக்குள் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட, கோலாகலமாக இரு மாநிலங்களும் சேர்ந்து கண்ணகியைக் கொண்டாடுகின்றன. 

மங்கலதேவி கோட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்வதற்காக செய்திகளைச் சேகரிக்கத் தொடங்க, ஆடி மாதக்காற்று போல பல்வேறு செய்திகள், ஆதாரங்கள், நேர்காணல்கள், நூல் குறிப்புகள், அரசு ஆணைகள், ஆவணங்கள் என்னைச் சுற்றி சுழன்றடித்தன. ஒன்றுதொட்டு ஒன்றாக காலத்தின் முன்னும் பின்னுமாக என்னை இழுத்துக்கொண்டு சென்றன. தேவையற்ற செய்திகள் தவிர்த்து, தமிழர் வாழ்வியல் நூலாம் சிலப்பதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

 கடுஞ்சினத்துடன் மதுரையை எரித்து(!) விட்டு, மேற்கு வாயில் வழியாக மிகுந்த வெறுப்புணர்வுடன் மதுரையை விட்டு வெளியேறுகிறாள் கண்ணகி. ‘செல்வம் போனது, சீரும் போனது, புலவரும் போனார், புரவலரும் போனார், பல பாட்டியரும் போனார் – கண்ணகியும் போனாள், அழல் கொண்டு அழிந்தது மதுரை, விழல் கொண்டு சென்றாள் கண்ணகி’ (சிலம்பு 53:183) என்கிறார் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில்.

 ‘உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு’ (சிலம்பு 23:185) அதாவது, வையை ஆற்றின் கரையைப் பற்றி நடக்கிறாள், என்று தொடங்கும் சிலப்பதிகாரத்தின் அடுத்தடுத்த வரிகளில், ‘அவ்வாறு நடந்தவள், வைகை ஆறு பரவிப்பாயும் சுருளிமலைத் தாழ்வாரத் தொடராம் நெடுவேள் குன்றத்தில் அடிவைத்து ஏறி வந்து, மலை மீது மூங்கில் புதர்கள் அடர்ந்த வேங்கைக் கானலில் வந்து நின்று கோவலனுடன் விண்ணேறித் தெய்வமாகிறாள்’ என்று முடிகிறது. இக்காட்சியை நேரில் கண்ட குன்றக் குறவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் வியந்துகூற, மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் குன்றக்குறவர்கள் கூறியதைத் தாமும் கண்டதாக சாட்சி கூறுகிறார்.

அதனைக்கேட்ட சேரன் செங்குட்டுவனும் அவன் மனைவியும் கண்ணகிக்கு கோயில் கட்டத் தீர்மானித்து அதற்காக, இமயமலை சென்று அங்கிருந்து கல்லெடுத்து, கங்கையில் நீராட்டி இக்கோயிலை அமைத்தனர் என்பதெல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்த கதை(!)தான். அதுசரி, கண்ணகி, மங்கல தேவியாகி எப்படி கோட்டம் கொண்டாள்? இரண்டாயிரம் ஆண்டு பழமையான இந்த கண்ணகிக் கோட்டம் பொதுமக்கள் பார்வைக்கு எப்படி வந்தது? என்ற என் மனதில் தோன்றிய கேள்விக்கும் வரலாற்றாளர்களின் வழியாக விடை கிடைத்தது. 

நிச்சயம் செய்யப்பட்ட மணமகனோ அல்லது மணமுடித்த கணவனோ கொடூரமான முறையில் இறந்துவிட்டால், அவர்களின் மனைவியர் தங்கள் மானம் காக்க வேண்டியும் மனம் உடைந்தும் தங்களை மாய்த்துக்கொள்வது முன்பொரு காலக்கட்டத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் வழக்கமாக இருந்திருக்கிறது. பெரும்பாலும் தீப்பாய்ந்தே இறந்த அந்தப் பெண்களை ‘மாலைத்தெய்வம்’ என்றுகூறி தெய்வமாக நினைத்து வழிபடுவார்கள். அவர்களை மாலைக்காரியம்மன் என்றும் தீப்பாய்ந்த அம்மன் என்றும் கூறுவதுண்டு. தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திராவில் ‘பெறந்தாளு வழிபாடு’ என்றும், கர்நாடகத்தில் ‘மங்களம்மா’ என்றும் கூறப்படுவது இந்த மாலையம்மனே.

ஒரு காலகட்டத்தில் தாலிச் சிறப்புக் கருதி மாலையம்மன் என்ற பெயர் மங்கலம்மன், மங்கலதேவி, மங்கல மடந்தை என்று திரிபுபட்டிருக்க வேண்டும். ‘மங்கலமடந்தை’ என சிலம்பு கூறுவது கவனிக்கத்தக்கது. ஒரு பெண் தன் வாழ்வில் ஏற்பட்ட கொடூரத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் தீயில் இறங்கி தெய்வமான இடத்தில் எழுப்பப்பட்ட கோவில் மங்கலதேவி கோவிலாகியது. அது சரி, இங்குள்ள மங்கலதேவி கண்ணகிதான் என்று எப்படி நிறுவினார்கள்? 

கூடலூர் மக்களின் வாழ்வில் மங்கலதேவி மலை (கண்ணகி தெய்வமான இடம்), மங்கலதேவி எஸ்டேட்(மலையைச் சார்ந்து இருக்கும் எஸ்டேட்), மங்கலதேவி காடு என்பதெல்லாம் அன்றாட புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள். காலம் காலமாக கூடலூர் மக்களுக்குப் பாத்தியப்பட்டதாக இருந்தது அந்த மலைக்கோவில். தாங்கள் அம்மனாக வழிபடும் அந்தக் கோவிலே, ‘கண்ணகி கோட்டம்’ என்று கூடலூர் மக்கள் நம்பி வந்தாலும், வாய்வழியாக அச்செய்திகளை வழிவழியாக கடத்திவந்தாலும், எழுத்துப்பூர்வமான எந்தத் ஆதாரங்களும் அவர்களிடத்தில் இல்லை. 

கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய சங்க மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த புலவர் சோமசுந்தரனார்தான் முதன்முதலில் 1957-ம் ஆண்டு மங்கலதேவி கோட்டமே, கண்ணகி கோட்டமாகும் என்று முறையாக அறிக்கைவிட்டதோடு, அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு கு. காமராசர் அவர்களிடம் முறையிட்டு கண்ணகி கோட்டத்தைச் சீர்படுத்தவேண்டும் என்றும் சுற்றுலா மையமாக்க வேண்டும் என்று வாதாடியிருக்கிறார். ஆனால் ஏனோ அக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. 1966-ம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர், கண்ணகிக் கோட்டம் பற்றிய ஆய்வுக் கருத்துகளை தங்கள் ஆண்டறிக்கையில் வெளியிட்டார்கள். 1965-ம் ஆண்டு பேராசிரியர் சி. கோவிந்தராசனும், 1976-ம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் செ. இராசு அவர்களும்  சிலப்பதிகாரம் சொல்லும் வழித்தடத்தையும் கண்ணகி கோவில் அமைவிடத்தையும் ஒப்பிட்டு, தங்கள் கருத்துகளை ஆய்வு நோக்கில் முன்வைத்தனர். 

மதுரையை விட்டு புறப்பட்ட கண்ணகி, யானைகள் போன்ற வனவிலங்குகள் திரியும் காட்டுப்பகுதியாக இருந்த வருசநாடு காடுகளில் நுழைந்து மலைகளில் ஏறினாள். இம்மலையின் தொடர்ச்சியாகிய சுருளி மலையில் அலைந்து திரிந்தவள், இறுதியில் சுருளி மலையின் மேற்குத் தொடர்ச்சியான (இன்றைய)மங்கலதேவி மலைக்கு வருகிறாள். அம்மலை யானைமுகம் போன்ற அமைப்புக் கொண்ட தனிக்குன்றாக இருந்திருக்கிறது. அந்த யானைக் குன்றின் பிடரி போன்ற பகுதியில் வேங்கை மரக் கானல்கள் நிறைந்த மூன்று சோலைகள் இருந்தன. அவற்றில் நடுவிலுள்ள சோலையில் வேங்கை மர நிழலில் வந்து கண்ணகி தங்குகிறாள். பின் அம்மலைவாழ் மக்கள் காண, அவர்கள் வியக்க… உயிர்துறந்து தெய்வமாகிறாள். 

“மங்கலமடந்தைக் கோட்டத்து ஆங்கண்

செங்கோட்டு உயர்வரைச் சேணுயர் சிலம்பில்

பிணிமுக நெடுங்கற் பிடர்தலை நிரம்பிய

அணியகம் பலவும் ஆங்கவை இடையது

கடிப்பகை நுண்கலும் கவரிதழ்க் குறுங்கலும்

இடிகலப்பு அன்னா இழைந்துகு நீரும்

உண்டோர் சுனை” 

சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில், குறிப்பிடப்படும் இக்காட்சியைப் படித்து விட்டுச் சென்றால், கனவில் கண்டதை கண்முன் பார்ப்பதுபோல் இருக்கும். யானை போன்ற குன்றின் கழுத்துப் பக்கத்திலுள்ள மூன்று வேங்கைமரச் சோலைகளும் அருகே சுனையும் இருக்கிறது. மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவன் தங்கிய பேரியாற்றங்கரை இங்கிருந்து பார்க்கும்போது தெரிகிறது. கண்ணகி தெய்வமானதைக் கண்ட குன்றக்குறவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் சொன்னார்கள் என்கிறது சிலம்புச் செய்தி. இன்றும் குறவர்கள், மலைசாதியினர், பழியர் இன மக்கள் இம்மலையடிவாரத்தில் இருக்கின்றனர். இங்கு வாழும் முதுவர் இன மக்கள் கண்ணகியோடு மதுரையிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. முதுகில் குழந்தைகளைச் சுமந்து கொண்டு வந்து கண்ணகியோடு தங்கிவிட்டதால் முதுவர்கள் என்று அழைக்கப் படுகிறார்களாம். 

தெய்வமான இடத்தில் முதல் கோவில் கட்டுவது திராவிட மரபு, ஆகவே மலைவளம் காணவந்த செங்குட்டுவன் கண்ணகி தெய்வமானதைக் கேள்விப்பட்டு கோவில் கட்டினான். சேரன் அமைத்த கோவிலுக்குப் பிற்காலத்தில் பலரும் திருப்பணி செய்திருக்கிறார்கள். இராஜராஜ சோழனும் பாண்டியர்களும் நாயக்கர்களும் பின்னால் வந்த பூஞ்சையாத்துத் தம்பிரான் போன்ற கேரள மன்னர்களும் சாத்து என்ற வணிகக் கூட்டத்தினரும் அவரவர் காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து வந்திருக்கிறார்கள். இதன் கட்டுமானம் சுமார் பொ.ஆ.1 – 2ம் நூற்றாண்டுவாக்கில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டாலும், தற்போது காணப்படும் கட்டடங்கள் சோழர் காலத்தையவை எனலாம். கோட்டை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் (985 – 1014 CE) மற்றும் பாண்டிய அரசர்களின் கல்வெட்டுகளிலிருந்து அந்த இடம் பண்டைய காலத்தில் வழிபாட்டு மையமாக இருந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இம்முற்றத்தில் மொத்தம் நான்கு கற்கோவில்கள் இருக்கின்றன. வடக்கு வாசல் பக்கம் உள்ள கற்சுவர்கள் கொண்ட கற்கோயிலின் மேல் விதானமும் கல்லால் ஆனதாக இருக்கிறது. முற்கால சோழர்கள் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் அழிவின் விளிம்பில் நிற்கிறது. இக்கோவிலில் கல்வெட்டு இருக்கிறது; ஆனால் சிலை இல்லை. இரண்டாவது கோவிலே பழமையான மூலக் கோயிலாகும். இதுவே சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இங்கிருந்த சிதைந்த நிலையிலிருந்த சிலையைத்தான் கண்ணகி சிலை என்று நினைத்து பேராசிரியர் சி. கோவிந்தராசனார் 1963-ம் ஆண்டு எடுத்துச் சென்று விட்டார் என்கிறார்கள். மூன்றாவது கோவிலாக சிவன் கோவில், இதன் காலம் ஏழாம், எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம். இங்குதான் ராஜராஜ சோழனின் கல்வெட்டு இடம் பெற்றுள்ளது. முன்பு லிங்கம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தில் தற்போது கேரள அரசு துர்கை சிலையை வைத்துள்ளது. முதல் மூன்று கோவில்களும் கிழக்கு நோக்கி அமைந்திருக்க, நான்காவது கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சுவர்களில் பொ. ஆ. 989-ம் ஆண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. சோழப்பேரரசன் ராஜ ராஜ சோழன், சேர நாட்டை வென்று, இப்பகுதி வழியாக வரும்போது வெண்வேலான் குன்றில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு வந்து வழிபட்டதாகவும் கோயிலுக்கான அற நிவந்தங்களும், மானியங்களும் வழங்கியதாகவும் இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கல்வெட்டில் தெய்வத்தின் பெயர், ஸ்ரீ பூரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணகி கோட்டத்தில் சோழர் கல்வெட்டுகள் இரண்டும், பாண்டியர் கல்வெட்டுகள் ஏழுமாக மொத்தம் ஒன்பது கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குலசேகரப் பாண்டியனின் பொ.ஆ.1268-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இம்மலை பூரணகிரி என்றும், தெய்வத்தின் பெயர் ஸ்ரீ பூரணகிரி ஆளுடைய நாச்சியார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடலூர் அழகர் கோயில் கல்வெட்டைச் சேர்த்து மொத்தமுள்ள பத்து கல்வெட்டுகளிலும் பூரணி, ஆளுடைய நாச்சியார், உடைய நாச்சியார், காவிரிப் பெண் ஆளுடைய நாச்சியார், மங்கல தேவி என்னும் பெயர்களே தெய்வத்தின் பெயர்களாகக் குறிப்பிடப்பட்டுளனவேயன்றி எந்தக்கல்வெட்டிலும் கண்ணகி என்ற பெயர் நேரிடையாக இடம்பெறவில்லை. ஆனால் இலக்கிய சான்றுகளின் அடிப்படையிலும், சிலப்பதிகார நிலவியில் அடிப்படையிலும் உள்ளூர் மக்களின் வழிபாட்டு முறைகள், நாட்டார் வழிபாட்டு கதைகளின் மூலமும் இது கண்ணகி கோயில் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்கிறார்கள்.

“மங்கலதேவி கோட்டத்தில் நான்கு கல்கட்டிடங்கள் கல் கூரையுடன் இருக்கின்றன. அவற்றுள் ஒரு பெரிய கட்டிடத்தில் ஒரு விக்கிரகம் இருக்கிறது, இந்த விக்கிரகத்தை உத்தேசித்துத்தான் ஜனங்கள் போகின்றார்கள்” என்று 1883-ம் ஆண்டு கெசட் கூறுகிறது (புனித ஜார்ஜ் கெசெட் – 1883, 13, நவம்பர் – 1ஆவது பாகம், பக்கம் 719 – 721) ஆக, இந்தச் சிலையைத்தான் மக்கள் கண்ணகி சிலையாக எண்ணி, வழிபட்டு வந்திருக்கிறார்கள். 

யாரிந்த சி. கோவிந்தராசன்? அவர் ஏன் கண்ணகி சிலையைத் தூக்கிச் சென்றார்? என்ற ஆவல் மிக, அவரைப்பற்றிய செய்திகளைத் தேடுகிறேன்.

சிலப்பதிகாரத்தின்பால் தீராப் பற்றுக் கொண்ட பேராசிரியர் சி. கோவிந்தராசனார், சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்று நம்பியதால், கண்ணகி பயணித்த பாதை வழியே 1945-ம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கினார். அவரது பயணத்தை வாசிக்கும்போது மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கிறது. 1945-ம் ஆண்டு மயிலாடுதுறை அருகில், கடற்கரையில் குடிசைகளும் மணற்பரப்பும் கள்ளிச்செடிகளும் அடர் புதர்களும் சவுக்குத் தோப்புகளும் சூழ்ந்திருந்த பட்டணமே பண்டைய புகார் நகரம் என்று உணர்ந்து கொண்டார். அங்கிருந்த மீனவர்களின் துணையோடு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை மீனவர்கள் கண்டனர். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற்பகுதிகள், சுண்ணாம்புக் காரைகள், பாசிபடிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து அவர் கைகளில் தந்தனர். கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப்பரப்பே, கண்ணகி பிறந்த காவிரிப்பூம்பட்டிணம் என்று உறுதி செய்தார்.

இப்படி பூம்புகாரில் தொடங்கியவர், கண்ணகியின் வழித்தடத்தில் ஆய்வு செய்துகொண்டே மதுரை செல்வதற்கு பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இளங்கோவடிகள் விட்டுச்சென்ற குறிப்புகளின் உதவியுடன் மேலும் முன்னேறினார். மதுரையில் இருந்து வையை ஆற்றின் தென் கரையை பின் பற்றி நடந்தார். சுமார் 40 மைல்களுக்கும் மேல் பயணித்தவர் சுருளி மலைத் தொடரை அடைந்தார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்து கொண்டார். வருஷ நாட்டின் மலை அடிவாரப்பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் கீழக்கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றினைக் கண்டுபிடித்தார். முற்கால பாண்டியர் காலத்து தமிழ் எழுத்துகளிலிருந்த அக்கல்வெட்டில் ‘மங்கல தேவி’ அம்மன் பூசைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி பொறிக்கப்பட்டிருந்தது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்த பொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள் இடையர் குல மகளான மாதரியிடம் கூறும் காட்சி இவருக்கு நினைவிற்கு வர மங்கலதேவியும் கண்ணகியும் ஒருவரே எனப் புரிந்து கொள்கிறார்.

945-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 1963-ம் ஆண்டு நவம்பர் 17-ம் நாள் மலையினுள் மறைந்து கிடந்த கோவிலைக் காணும் நிகழ்வுடன் நிறைவேறியது. மங்கல தேவி மலையின் மேற்பரப்பில் செடி கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகானப் படிக்கட்டு. அதற்கு முன்னர் அரைகுறையான இடிபாடுகளுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை, சுனையினைச் சூழ்ந்து அடர்ந்து நிற்கும் காட்டு வேங்கை மரங்கள். ஒவ்வொரு கோவிலாகப் பார்த்துக்கொண்டே சென்றவர், மிகப் பழமையான, பலி பீடத்துடன் கூடிய கோயிலைப் பார்த்ததும் அதிசயித்து நின்றார். உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில் ஒரே கல்லில் இரண்டு கைகளுடன் இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில் விரிந்த கூந்தலுடன் ஒரு பெண்ணின் சிலை. இடதுபுற மார்பு சிறியதாக இருந்தது. இது குறித்து கண்ணகி தன் ஒற்றை மார்பை அறுத்துக்கொண்ட கதைகள் புழங்குகின்றன. இதே போன்ற சிலைதான் மதுரை செல்லாத்தம்மன் கோயிலில் உள்ள கண்ணகி சிலையின் அமைப்பு என்று சொல்கிறார் ஆய்வாளர் துளசி. இராமசாமி.

செல்லத்தம்மன் கோயில் கண்ணகி சிலை

‘யுரேகா…யுரேகா…’ என குதிக்காத குறையாக, தனது வாழ்நாள் கனவை நேரில் நனவாகக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்தார். அந்தச் சிலையை தன்னுடன் எடுத்துக்கொண்டார்.

நன்னெறிக்கழகத்தின் சார்பில், 21.03.1965 அன்று சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றிய செய்தியை முதல் முதலில் உலகிற்குத் தெரியப் படுத்தினார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, தனது கண்டுபிடிப்பு பற்றி, சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். இவரது முயற்சிகளுக்காக, 2012-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி சிறப்பித்தார்.

“இவரே முதன்முதலாக கண்ணகி கோட்டத்தை கண்டறிந்து வெளியுலகிற்கு அறிவித்ததாக உலகம் நம்பியது. ஆனால் நடந்ததே வேறு” என்கிறார் டாக்டர் துளசி. இராமசாமி. தனது ‘மங்கலதேவி கண்ணகி கோட்டம்’ என்ற நூலில். அவரது கோணத்திலிருந்து நடந்தவற்றை விளக்குகிறார். 1957-ம் ஆண்டு புலவர் சோமசுந்தரனார் கண்ணகி குறித்து அறிக்கை வெளியிட்டு, முதலமைச்சர் காமராசர் அவர்களிடம் சீர்படுத்த கோரிக்கையும் வைத்த நிலையில் அவருடைய மாணாக்கர்கள் இரா. கணபதிராசன், தா. இராமசாமி ஆகிய இருவரும் இதே சிந்தனையாகச் செயல்பட்டு வந்தனர். கணபதிராசன் அவர்களின் நாட்குறிப்பேட்டில் அவ்வப்போது கண்ணகி, மங்கலதேவி மலையில் தெய்வமானதைக் குறிப்பிட்டு, இக்கோட்டம் குறித்து உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

1959-ம் ஆண்டு கூடலூர் வந்த பேராசிரியர் திருநாவுக்கரசிடம் இதுகுறித்து விவாதித்திருக்கிறார். 1959-ம் ஆண்டு ‘கூடலூர் மங்கலதேவி கண்ணகி கோட்ட சீரமைப்புக் குழு’ உருவானது. அதன் தலைவராகப் பொறுப்பேற்ற கூடலூர் தா. இராமசாமி, செயலாளர் இரா. கணபதிராசன், தமிழாதன், பொருளாளர் அக்கீம் போன்றவர்கள் கண்ணகி கோட்டம் குறித்த ஆய்வுக் குறிப்புகளைத் தொகுத்தும் கண்ணகி கோவிலுக்குச் சென்று ஆய்வு செய்தும் இடத்தை உறுதி செய்தனர். ‘மங்கலதேவி கோட்டமே கண்ணகி கோட்டம்’ என்று முறையாக ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென்ற நோக்கில் கரந்தை பேராசிரியர் சி. கோவிந்தராசனை அழைத்துவந்தனர். 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் நாள் அக்குழுவினரே அவரை அழைத்துக்கொண்டு மங்கலதேவி மலைக்குச் சென்றார்கள்.

மதுரையின் மேற்கு கோட்டை வாசல் வழியாகக் கிளம்பிய கண்ணகி, நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, குன்னூர், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக நெடுவேள் குன்றத்தை அடைந்திருப்பதாக அவர் முடிவுக்கு வந்தார். அப்போது உடைந்து கிடந்த சிலையை பார்த்தவர், அதுவே கண்ணகி சிலை என்று நினைத்து ஆய்வு நடத்த வேண்டுமென்று கூறி, சிலையை தன்னுடன் எடுத்துக் கொண்டு சென்று விட்டார். அவர் தன்னுடைய ஆய்வை தமிழக மக்களுக்கு பத்திரிக்கை வாயிலாக வெளியிட்டு, தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று கூடலூர் தமிழ் இலக்கியக் கழகம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த… பேராசிரியரோ, தனக்கு போதிய அவகாசம் வேண்டுமென்றும், மீண்டும் தான் அந்த இடத்தில் ஆய்வு செய்ய கூடலூர் மக்கள் துணை நிற்க வேண்டுமென்றும் பதிலளிக்க… இருபக்கமும் கடிதப்போக்குவரத்து தொடர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. 

1965-ம் ஆண்டு அவசரம் கருதி வெளியிடுவதாகக் கூடலூர் தமிழ் இலக்கியக் கழகத்திற்கு பெயரளவில் ஒரு கடிதம் எழுதிவிட்டு, கரந்தை தமிழ்ச் சங்கத்தின் மாத இதழான, ‘தமிழ்ப் பொழில்’ இதழில் “மங்கலதேவி கோட்டமே கண்ணகிக்கோட்டம், இதுவே சேரன் செங்குட்டுவன் கட்டிய கோவில், இங்குள்ள சிலையும் இமயத்திலிருந்து கொண்டு வந்த கல்லில் அமைக்கப்பட்டது” என்றும் தானே முதன்முதலில் கண்ணகி கோட்டத்தை ஆய்வு செய்து கண்டறிந்ததாகவும் கட்டுரை எழுதி வெளியிட்டார். இதனால் சி. கோவிந்தராசன் அவர்களே முதன்முதலில் கண்ணகி கோட்டம் ஆய்வு செய்து கண்டறிந்தவர் என்று நம்பும்படியாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், அவருக்கு முன்னரே, கே.ஜி. கிருஷ்ணன் தலைமையில் இயங்கிய மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கல்வெட்டுக்களைப் படியெடுத்துச் சென்று 1965-ம் ஆண்டு தங்களது ஆண்டறிக்கையில் மங்கலதேவியே, கண்ணகி என்று நிறுவினர்” என்கிறார் துளசி. இராமசாமி. 

இந்திய தொல்லியல் துறை 1965-1966-ம் ஆண்டு வெளியிட்ட Indian Archaeology A Review நூலில் இடம்பெற்றுள்ள கீழ்கூடலூர் கல்வெட்டு தகவல். இதில் ‘ஆளுடை நாச்சியார்’ என குறிப்பிடப்படுகிறார் கண்ணகி (https://nmma.nic.in/nmma/NAS1/nmma_doc/IAR/Indian%20Archaeology%201965-66%20A%20Review.pdf)

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.