தேடிப் படித்தேன்
திடீரெனப் பத்திரிகைகளிலெல்லாம் மாதவி லதா என்றொரு பெயர் அடிபடவும் யார் அவரென்று தேடிப் பார்த்தேன். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. கலை, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு துறைகளில் பெண்கள் தொடர்ந்து இயங்கினாலும்கூட அவர்களின் பங்கு முழுவதுமாக வெளிப்படுவதில்லை, பேசப்படுவதில்லையெனும் தீராத வருத்தம் எனக்குள் உண்டு. எனவே லதாவைப் பற்றி நான் தேடிப் படித்ததை உங்களுடனும் பகிர விரும்புகிறேன்.
டாக்டர் ஜி. மாதவி லதா புவித் தொழில்நுட்பப் பொறியாளர், இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியரும்கூட. 1992இல் காக்கிநாடாவில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் இளங்கலைத் தொழில்நுட்பப் (பி.டெக்) படிப்பை முதல் வகுப்பில் முடித்தவுடன், வாரங்கலில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் (எம்.டெக்) பயின்று, அதில் தங்கப்பதக்கம் பெற்றார். புவி தொழில்நுட்பப் பொறியியலில் புலமை வாய்ந்தவரான மாதவி லதா, 2000ஆம் ஆண்டு ஐ.ஐ.டி, சென்னையில் புவி தொழில்நுட்பப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்தைத் தொடர்ந்து லதா, 2002 முதல் 2003 வரையிலும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் முதுகலை ஆய்வை மேற்கொண்டார். 2003 முதல் 2004வரை குவஹாத்தியிலுள்ள ஐ.ஐ.டியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு 2004இல் இந்திய அறிவியல் நிறுவனத்தில் சிவில் பொறியியல் துறையில் ஆசிரியர் உறுப்பினரானார்.
தற்போது பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) பல்வேறு கல்விப் பதவிகளில் பணியாற்றியபின் தற்போது IISc இல் நிலையான தொழில்நுட்ப மையத்தின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளார். மண் வலுவூட்டல், புவிசார் செயற்கை மற்றும் பாறை இயக்கவியல் உள்ளிட்ட புவி தொழில்நுட்பப் பொறியியலின் பல்வேறு துணைத்துறைகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறார். தொடர்ச்சியாகத் தனது துறையில் சிறப்பாகப் பணியாற்றிவரும் இவருக்கு 2021ஆம் ஆண்டு, இந்திய புவி தொழில்நுட்பச் சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழிநுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.

ஓர் ஆசிரியராக, மாணவர்களுக்கு இத்தகைய ஆளுமைகளை அறிமுகப்படுத்துவதில் எப்போதும் மகிழ்வேன். கண்ணெதிரில் அவர்களுக்கான உத்வேகமாக இவர்கள் திகழ்வர் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. நமக்கு முன்னால் வாழ்ந்தவர்களை விடவும், நாம் வாழும் காலத்திலேயே இருப்பவர்களை அறிந்து கொள்வது மேலும் உறுதியைத் தருமென்பதால் உள்ளூரில் இருப்பவர்களில் இருந்து உலக அளவிலுள்ள மனிதர்கள் வரையிலும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, இயன்றால் அவர்களைப் பள்ளிக்கும் வரவழைத்து, மாணவர்களிடையே பேசச் செய்வது எங்கள் பள்ளியில் வழக்கம். இப்படித்தான் நான் இவரைத் தெரிந்து கொண்டேன்.
உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானத்திற்கு இவர் பங்களித்துள்ளார் என்பதுதான் இன்றைய பரபரப்பு. இவர், ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தின் கட்டுமானத்தில் புவித் தொழில்நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். செனாப் தொடருந்து பாலம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே கட்ட 2002இல் முடிவு செய்யப்பட்டு 2003இல் அனுமதி பெறப்பட்டு, 2004இல் பணி தொடங்கப்பட்டது. பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட காரணத்தால் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் (2009) பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் 2010இல் இப்பணி, மீண்டும் தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் வடக்கு ரயில்வேயின் கீழ் வந்தாலும், இப்பகுதி முழுவது மலைகள் சூழ்ந்திருப்பதன் காரணமாக, கொங்கன் ரயில்வேயிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதன்பிறகு, ஆட்சி மாறினாலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று, இறுதியாக, 1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் இருப்புப்பாதை வளைவுப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு 2025 ஜூன் 6ஆம் நாள் நம் இந்தியப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுதான் கடல்மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான தொடருந்து பாலமாம். இந்தப் பாலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு வண்டி, கட்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே உள்ள 273 கி.மீட்டர் தொலைவை, சுமார் மூன்று மணி நேரத்தில் கடந்து விடுமாம். உருக்கு மற்றும் பைஞ்சுதைக் கற்காரையைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தப் பாலக் கட்டுமானத்தில் மாதவி லதாவின் பங்கு பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருந்தோம்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து, நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், ‘தன்னைப் பெரிய ஆளாக ஆக்க வேண்டாம்’ என்று சொன்னதுடன் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட மற்றவர்களின் பங்கையும் எண்ணற்ற தொழிலாளர்களையும் குறிப்பிட்டுச் சொன்னதுதான் மிக முக்கியம்.
‘நோ’ சொல்வோமா?

சிறுவயதிலிருந்தே என்னிடமிருந்த ஒரு பலவீனம், எனக்கு நோ சொல்ல முடியாதது. பெரிய துயரமென்பேன். கையில் நூறு ரூபாய்தான் இருக்கிறது, அடுத்து செலவுகளும் இருக்கின்றன என்றாலும் அப்போது யாராவது கேட்டால், இருப்பதை அப்படியேவோ அல்லது இவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்லி அதில் பாதியையோ கொடுத்துவிட்டு, திட்டு வாங்குவதோடு, கையில் காசுமின்றிப் பலமுறை சிரமப்பட்டிருக்கிறேன். ஏதேனும் கூட்டத்துக்குக் கூப்பிடுவார்கள்; எனக்கு ஆர்வமில்லா விட்டாலும்கூட, கேட்டுவிட்டார்களே என்று ஒத்துக்கொண்டு கஷ்டப்படுவேன். இப்படி இஷ்டமில்லாமல் பலமுறை கஷ்டப்பட்டிருக்கிறேன். படிக்க எடுத்த புத்தகத்தை முடிக்க முடியாது; நமக்குத் தேவையான புத்தகத்தைப் படிக்க முடியாது. ஐயய்யோ, அடுத்த வாரம் இந்தப் புத்தகம் பற்றிப் பேசணுமே, என்று இரவுபகலாகத் தேர்வுக்குப் படிப்பதுபோலப் படிப்பேன்.
மனத்தைக் கட்டுப்படுத்துதல், ஒருமுகப்படுத்துதல் சார்ந்த ஒரு பயிற்சிக்குச் சென்றிருந்தபோதுதான் ‘நோ’ சொல்வது பற்றி முதலில் கேட்டேன். அப்போதுதான் என்னைப் போலவே பலரும் அவதிப்படுவதையும் தெரிந்து மகிழ்ந்தேன்.
ஆரம்ப கட்டத் தயக்கங்களுக்குப் பின், ஒரு நூல் விமர்சனக் கூட்டத்துக்கு முதலில் மறுத்தபோது அவ்வளவு சந்தோஷம். அதுவரையிலும் தேவையற்ற விஷயங்களில் நுழைந்து நுழைந்து, செய்யவேண்டிய ஏராளமான வேலைகளை, முதன்மையானவற்றை வரிசையில் நிற்க வைத்துவிட்டு, தேவையற்ற ஆணிகளைச் சுமந்து அலைந்ததை இப்போது நன்கு உணர்ந்து கொண்டேன்.
என்னடா இது, மறுப்பதில் இப்படியொரு சந்தோஷமா என்றால், ஆம், நம் வேலையைக் கெடுக்கும் நேரக்கொல்லிகளில் இதற்கும் முக்கியமான பங்கு இருப்பதால் சொல்கிறேன், முதன்முதலில் சொன்னபோது, யாரோ ஒருவரை வருத்தப்படுத்துகிறோமே என்று வழக்கம்போல நினைத்தாலும் ஒத்துக்கொண்ட பின், திட்டியபடியே அதனை ஏற்றுக்கொள்வதை விடவும் ஒரு விஷயத்தை மகிழ்ச்சியாகச் செய்வது; இல்லாவிட்டால் செய்ய மறுத்துத் தவிர்ப்பது. அதனை முதலிலேயே ஒழுங்கு செய்துகொண்டால், எவ்வளவு நம்முடைய வேலைகளைச் செய்ய முடிகிறது என்பதை அறிந்து கொண்டேன். எனவே, தேவையற்ற விஷயங்களுக்கு ஒரு பெரிய ‘நோ’ சொல்வோம்.
ம.பொ.சியின் பிறந்தநாள் நிகழ்வு

ஜூன் 26, தாத்தாவின் பிறந்தநாள். பெரும்பாலும் வெளியூர்களிலேயே பணியாற்றியதால் பல நேரங்களில் அவருடைய பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொள்ள இயலாமல் போயிருக்கிறது. இந்த ஆண்டு சென்னையில் இருந்தேன்; அவருடைய சிலைக்கு மாலை போடலாமென்று நினைத்து, காலையிலேயே போய் வணங்கி விட்டு, செயலி வழியாக ஆட்டோவை அழைத்தேன். ஜி.ஆர்.டி கிராண்ட் உணவகத்திற்குள் அவர் காத்திருக்க, நான் அதன் வாசலில் நின்றபடியே சிறிதுநேரம் கண்ணாமூச்சு விளையாடினோம். எனக்கோ, அலுவலகத்துக்கு நேரமாகிறதே என்ற பதற்றம். ஓட்டுநரை அலைபேசியில் அழைத்தபோது, “அங்க ஒருத்தர் சிலை இருக்கே.. அங்கேதாம்மா இருக்கேன்” என்றார். நானும் அங்குதான் நிற்கிறேன் என்று சொல்லி ஒருவழியாக வண்டியில் ஏறியபின், அவர் ‘ஒருத்தர்’ என்று சொன்னது என் நினைவில் பளிச்சென்று வந்து நின்றது.
ம.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, சென்னை மீட்பு எல்லாவற்றையும் ஒரு கதை போலச் சொல்லிக்கொண்டே போனேன். அவரும் ஆர்வத்துடன் இடையிடையே கேள்விகள் கேட்டபடியே வந்தார். திருத்தணி, கன்னியாகுமரி மீட்டதையெல்லாம் சொன்னபோது அவர் ஆச்சரியப்பட்டதைப் பார்த்தபோது, நம் மக்கள் ஏன் இப்படி வரலாறே தெரியாமல் இருக்கிறார்களே என்று வருத்தமாக இருந்தது. தமிழ்வழியில் டிப்ளமோ படித்தவர்கள், பொறியியலில் இரண்டாம் ஆண்டு நேரடியாகச் சேரவும் தமிழாசிரியர்களுக்கும் பிற ஆசிரியர்களைப் போல ஊதியம் வழங்கவும் ம.பொ.சி தேவையான முன்னெடுப்புகளைச் செய்தார் என்றும் வசதியற்ற காரணத்தால் அப்படி டிப்ளமோ படித்து பின் பொறியியல் படித்த பொறியியலாளர்கள் சங்கம், சேலத்தில் அவருக்கு, அவருடைய நூற்றாண்டு நேரத்தில் சிலை வைத்த செய்தியையும் இடையில் வந்த அலைபேசி அழைப்பில் தகவலாகச் சொன்னேன்.
அலுவலகம் வந்து இறங்கியபோது, “பரவாயில்லை மேடம், நீங்க நிறைய தெரிஞ்சு வைச்சிருக்கீங்க” என்றார். “அவர் எங்க தாத்தாங்க” என்றேன். “அதனால் தாங்க நீங்க தெரிஞ்சு வைச்சிருக்கீங்க” என்று சொல்லிவிட்டுப் போயே போய்விட்டார் ஓட்டுநர்.
படைப்பாளர்

தி. பரமேசுவரி
‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ‘ம.பொ.சி பார்வையில் பாரதி, சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள், மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கிறார்.