தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை; தேரும் சிலப்பதிகாரமதை; ஊனிலே எம்முயிர் உள்ளளவும் நிதம்; ஓதி உணர்ந்தின் புறுவோமே‘ என்று போற்றப் பெற்றது சிலப்பதிகாரம். இன்றும் உலகத் தமிழர்களின் விரல்கள் மீட்டி மீட்டி இன்னிசையை எழுப்பிக்கொண்டிருக்கிறது என்றால் அது ஊழைப் பாடி வந்த நாட்டிய மங்கை மாதவியின் மகர யாழையே. ‘கானல் சோலையில் மாலை வேளையில் மாதவியின் யாழில், கோவலன் மீட்டியது அவல சுரமா? மாதவி மீட்டியது அவல சுரமா?’ என்று தொடர்ந்த வாதங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ் நிலைபெற்று உள்ளவரையிலும் இது போன்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவ்வகையில் கோவலன் மாதவி இருவரின் வரிகளில் எழுந்த இசைப்பாடல்களின் சுர பேதங்களைச் சற்றுப் பேசுவோம்.

ஊழால் பேரரங்கம் அமைத்து கோவலன், கண்ணகி, மாதவி, பாண்டிய மன்னன் என்னும் நான்கு மாந்தர்களை நடமாட வைத்து அவ்வாடலின் முடிவில், பரத்தையர் ஒழுக்கம் தவறு என்பதைக் கோவலனுக்கும் தட்டிக்கேட்காத மனைவியும் தவறிழைத்தவளே என்று கண்ணகிக்கும் பிறள் கணவனை நோக்காதது பெரும்பெண்மை என்பதை மாதவிக்கும் அவசரக் கதியில் தீர்ப்பு சொல்வது பிழையை ஏற்படுத்தும் என்பதைப் பாண்டிய மன்னனுக்கும் கூறாது கூறியவர் இளங்கோவடிகள்.

கதை மாந்தர்களாகிய கோவலன் மாதவி இருவரின் பாத்திரப் படைப்பில் மட்டுமல்லாது காப்பியத்திலும் அதனை அறத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டிய முக்கியமானதொரு திருப்பம் நெய்தலங்கானல் சோலையில் ஒரு மாலை நேரத்தில் நிகழ்ந்து விடுகின்றது.

’படைப்பிலக்கியத்தில் வெவ்வேறு வகைகள் உண்டு. குறிப்பாக, மடை திறந்தாற்போல, தன்னிச்சையாகப் பொங்கும் (eloquent and spontaneous) படைப்பு ஒரு வகை. இலக்கியக் கொள்கைத் தீர்மானங்களுடன் சொல்லவந்த கதையை எந்தெந்தக் களத்தில் அது நிகழ்கிறதோ, அக்களத்தின் பூகோளப் பின்னணியிலும், அக்களத்துகுரியப் பாரம்பரியக் கலை வடிவங்களைப் புலப்படுத்தும் கையேட்டு ஆவணமாகமாக ஆக்கிக் கூறும் படைப்பு இன்னொரு வகை. கம்ப ராமாயணம் முதல் வகை. சிலப்பதிகாரம் இரண்டாவது வகை’ என்பார் இந்திரா பார்த்தசாரதி.

நெய்தல் நில மக்களின் வாழ்வியல் பண்டு தொட்டு இன்று வரை இரக்கத்திற்குரியதாகவே இருக்கக் காண்கிறோம். நெய்தல் நிலத்து உரிப்பொருள் இரங்கல். இந்த உரிப்பொருள் அந்நிலத்தின் பூகோள அடிப்படையில் அமைந்தது என்பதில் நிலவியலாருக்கன்றியும் எவருக்கும் எள்ளளவும் ஐயம் இருக்காது. காலம் காலமாகக் கையற்று கழிவிரக்கம் கொள்ளச் செய்யும் அவல நிலையில் இந்நில மக்கள் வாழ்வதாலேயே இந்நிலத்தின் உரிப்பொருளை ‘இரங்கல்’ என்று அழைத்தனர்.

பிரிவினால் நொந்த காதல் நெஞ்சங்களின் துயரங்களைப் பாடும் நெய்தலின் இசையை ‘நோதிறம்’ என்பர். காதல் போயின் சாதல் என்பது தமிழரின் கற்பறம். ஆகவே ‘நோதிறம்‘ பாடும் இவ்விசைக்குப் பக்க இசையாக முழங்கப்படும் பறையிசையைச் ‘சாக்காட்டுப் பறை’ என்பர்.

கோவலன், பாண்டியன், பாண்டியன் மாதேவி, மாதரி, காவுந்தி அடிகள், பாண்டிய நாடு ஆகியவற்றின் அழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த நோதிறப் பாடல்களே சிலம்பில் கோவலனும் மாதவியும் பாடிய இவ்வரிப்பாடல்கள். இரங்கலுக்குரிய இத்திருப்பத்தைக் கானல்வரியில் வைத்திருக்கும் இளங்கோவடிகளின் இலக்கிய உத்தி எண்ணி எண்ணி வியத்தற்குரியது. மாதவி பாடிய கானல் வரிப்பாடலே கனகவிசயரின் முடி மீது கல் சுமந்து வரச்செய்தது என்பதை,

“மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம்

முடித்தலை நெரித்தது” (நீர்ப்படை: 49-50)

என்று வஞ்சிக் காண்டத்தில் மாடல மறையோனால் சொல்ல வைக்கிறார்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”(குறள்: 510)

என்னும் திருக்குறள் கோட்பாட்டை விளக்குவது கானல் வரி. கோவலன் வரிப்பாடல்கள் பாடுகின்றான். கோவலன் வேறு ஒரு பெண் மீது காதல் கொண்டான், அதனைக் குறிப்பால் உணர்த்துகின்றான் என்று மாதவி எண்ணுகின்றாள். தானும் ஓர் குறிப்பினள் போல், நிலத்தெய்வம் வியப்பெய்த, நீள்நிலத்தோர் மனம் மகிழ, யாழ் மீட்டி, மாதவியும் அவனுக்கு எதிர்ப்பாட்டுப் பாடுகின்றாள். இங்கு மாதவி வேறோர் ஆடவன் மீது காதல் கொண்டாள் என்று கோவலன் ஐயம் கொள்கின்றான். கோவலனுக்கு இந்த ஐயம் இப்போது எழுந்ததன்று. இப்போதெழுந்தது என்றால் மாதவி யாழைக் கொடுத்தவுடன் எடுத்த எடுப்பிலேயே வெறுப்புடன் பாடியவனே அவன்தான்.

இந்திரவிழாவின் போது மாதவியின் ஆட்டம் காண்கின்றான். அவளது ஆடலைத் தேவர்களும் மாறுவேடத்தில் வந்து கண்டுகளிக்கின்றனர். அப்போதே கோவலனுக்கு சந்தேகம் வந்து விடுகின்றது. அதன் காரணமாகத்தான் அவன் ஊடி இருக்கின்றான். இதனை,

“அந்தரத்துள்ளோர் அறியா மரபின்

வந்து காண்குறூஉம் வானவன் விழவும்

ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள

ஊடற் கோலமோ டிருந்தோன்” (கடலாடு: 73-76)

என்று காட்டுவார் இளங்கோவடிகள். பலவகையான ஒப்பனைகளைச் செய்துகொண்டு அவனுடன் கூடலும் ஊடலுமாக மாதவி இருந்திருக்கிறாள். இதன் பின்னரே கடல் விளையாட்டு காண இருவரும் கானலுக்குச் செல்கின்றனர்.

Indian dancer. Cartoon vector isolated character

கோவலன் கானல்வரி பாடியது யாரை நினைத்து என்பதில் ஆய்வாளர்கள் பலரும் வேறுபடுகின்றனர். கண்ணகியை நினைத்துப் பாடுகின்றான் என்று சிலரும் வயந்த மாலையை நினைத்துப் பாடுகின்றான் என்று சிலரும் கூறுகின்றனர். வயந்த மாலையை நினைத்துப் பாடியிருக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதை இக்காப்பியத்தின் மதுரைக்காண்டத்தில் வயந்தமாலை வடிவில் தோன்றிய வனசாரினி காட்டுகின்றது. கோவலன் பண்டும் பரத்தையர் பலரிடம் செல்லுபவன். அவனுடைய காதற் பரத்தையின் தோழி வயந்தமாலை. ஆகையால் அவள் வடிவில் சென்றால் நம்மையும் காமத்தோடு அணுகுவான் என்று வனதெய்வம் கருதி வயந்த மாலை வடிவில் வந்ததாம். வயந்தமாலை வடிவில் வந்த வனசாரினி,

“கானுறை தெய்வம் காதலிற் சென்று

நயந்த காதலின் நல்குவன் இவனென

வயந்தமாலை வடிவில் தோன்றி

பார்த்தரும் பண்ப நின் பனிமொழி யாது” (மதுரை:171-174)

என்று கேட்கின்றது. அவ்வாறென்றால் வனசாரினிக்குத் தெரிந்துள்ளது வயந்த மாலைபால் கோவலன் காமம் கொண்டிருந்தான் என்பது. அதனால்தான் அவ்வடிவில் வந்தது.

கோவலன் குறித்துப் பாடிய பெண் கண்ணகியோ, வயந்தமாலையோ அல்லது வேறு யாரோ இருக்கட்டும். ஆனால் தன்னை விடுத்து வேறு ஒரு பெண்ணை நினைத்துப் பாடுகின்றான் என்பது மட்டும் புலனாகியது மாதவிக்கு.

முதல் மூன்று பாடல்களில் காவிரியைப் பெருமையாகப் பாடுகிறான். காவிரியைப் பாடுவது போல கண்ணகியின் கற்பைக் கோவலன் பெருமை படுத்துகிறான். ஆனால், அதனை அறியாத மாதவி கோவலன் வேறொரு பெண்ணின்பால் காதல் கொண்டதாக நினைக்கின்றாள் என்று உரையாசிரியர்கள் எழுதுகின்றனர்.

ஐந்து வயதில் ஆடல் பயின்று, பன்னிரண்டாம் வயதில் நடன மேடைக்கு வந்தவள் மாதவி. பதினோரு வகை ஆடல் கலையில் வல்லுநள். அல்லி, கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லாடல், துடியாடல், கடையம், பேடு, மரக்கால், பாவைக் கூத்து எனப் பதினொரு வகை ஆடல்கள். எட்டுவகை இசைக் கரணம் உணர்ந்தவள். வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல், சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல், ஏருடைப் பட்டடை. சோழ மன்னனால் சிறப்புச் செய்யப் பெற்றவள். அவன் தந்த தலைக்கோலி எனும் பட்டத்தையும் பச்சை மாலையையும் பெற்றவள் மாதவி. இத்தனை பெருமைகளுடன் பரத்தையர் குலத்தில் பிறந்தாலும் கண்ணகிக்கு இணையாகக் கற்பறத்தைப் பேணியவள். ஆனாலும் பெண்களால் வெறுக்கப்பட்டவள். “கோவலன், கண்ணகி, மாதவி முதலியவர்களின் பண்பு நலன்கள் பற்றிய ஆராய்ச்சியும் தமிழில் பெருகியிருந்தால் இன்று இலக்கியக் கல்வி எவ்வளவோ பண்பட்டு உயர்ந்திருக்கும்; மாதவியைக் கண்மூடிப் பழிக்கும் பழிப்புரைகளும் பெருகாமல் போயிருக்கும்” என்று மு.வ. கூறுவதும் இவண் நோக்கத்தக்கது.

கோவலன் ஆயிரம் பொன் கொடுத்து மாதவியின் பச்சை மாலையை வாங்கி, மாதவி இல்லம் சென்றவன். கடிமணம் புரிந்து சுமார் ஐந்து ஆண்டுகளில் கண்ணகியை விடுத்து மாதவியே கதி என்று சுமார் 18 ஆண்டுகள் அவள் இல்லம் கிடந்தவன். மாதவியோ பரத்தையர் குலத்தில் உதித்த கற்புக்கரசி. சுமார் 18 ஆண்டுகள் கோவலனையன்றி வேறு ஆடவனைச் சிந்தையிலும் நினையாதவள். அப்படியிருக்க,

“கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவா தொழிதல் கயற் கண்ணாய்

மங்கை மாதர் பெருங்கற்பென்

றறிந்தேன் வாழி காவேரி” (கானல்வரி: 2)

என்று பாடுகின்றான் கோவலன். பரத்தைக் குலத்தில் பிறந்தும் தன் குல மரபை விட்டொழித்து கற்பறம் மேற்கொண்ட மாதவியின் கற்பு வாழ்வில் கல்லெறிந்த இவ்வரிப்பாடலே கோவலனைக் கள்வன் என்னும் சிலுவையைச் சுமக்கச் செய்தது; கொலைக்களம் புகச் செய்தது; மன்னனை மடியச் செய்தது; மதுரையை எரியச் செய்தது.

“சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் புலவி கொள்ளாது இருப்பதுதான் காவிரித் தாயின் கற்பின் அடையாளம் என்று கூறி ஆடவன் எத்தனை பெண்களுடன் உறவு கொண்டாலும் அவனைத் தாய் போல் தழுவிக் கொள்ளலே பெண்களின் பெருங்கற்பு” என்று கூறுகிறான். இதன் மூலம் அவன் மாதவியிடம் சொல்ல வருவது என்ன? அவன் யாரோடு காதல் கொண்டாலும் மாதவி, கண்ணகியைப் போலவே புலக்காமல் இருக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகின்றான். அவ்வாறென்றால் கோவலன் யாரோடு காதல் கொண்டுள்ளான். அதனைக் கண்டு மாதவி புலத்துள்ளாள் என்றுதானே பொருள். கோவலன் எப்படிப் பட்டவன்?

“காமக் களிமகிழ்வு எய்திக் காமர்

பூம்பொதி நறுவிரைப் பொழில் ஆட்டமர்ந்து

நாள்மகிழ் இருக்கை நாளங் காடியில்

பூமலி கானத்துப் புதுமணம் புக்கு

புகையும் சாந்தும் புலராது சிறந்து

நகையாடு ஆயத்து நன்மொழி திளைத்துக்

குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு

திரிதரு மரபிற் கோவலன்” (இந்திரவிழா:195-202)

இப்படிப் பட்டவன். அவன் மரபு எப்படிப் பட்டது? காமத்திலேயே மகிழ்வு எய்துகின்றான். பெண்களுடன் பொழிலில் ஆடிக் களிக்கின்றான். சூடிய பூக்களும் பூசிய அகிலும் சந்தனமும் மணம் வாடாது இருக்கும் கன்னிப் பெண்கள் கூட்டத்தில் நகை மொழிகளைப் பேசுகின்றான்; பாணரோடும் பரத்தரோடும் காமக் குறிப்பு மொழிகளைப் பேசித் திரிகிறான். இதுவே கோவலனின் மரபு என்கின்றார் இளங்கோவடிகள். இப்படிப் பட்ட இழிகுணங்கள் உடையவன் கோவலன். இவை, தென்றலைக் கூற வந்த இளங்கோவடிகள் தென்றலுக்கு உவமையாகக் கூறும் கோவலனின் இவ் ஒழுகலாறு.

கோவலன் புகார்க்காண்டத்தில் கண்ணகியுடன் மனையறம் படுத்த போது பேசுகிறான். மிக நீண்ட பேச்சு. கூடல் நிகழ்ந்த பின்னர் பேசிய காமம் நிறைந்த பேச்சுகள். இதனை,

தாரு மாலையும் மயங்கிக் கையற்றுத்

தீராக் காதலின் திருமுக நோக்கிக்

கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை” (மனையறம்: 35-37)

என்று கூறுவார் இளங்கோவடிகள்.

“திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும்

ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல்

திங்கன் முத்தரும்பவும் சிறுகிடை வருந்தவும்

இங்கிவை யணிந்தன ரென்னுற் றவர்கொல்”(மனையறம்: 69-72)

42 வரிகள் அடங்கிய இக்கட்டுரையுள் முழுவதும் மேற்கண்டது போன்ற காமம் சார்ந்த உடல் வர்ணனைகளே. கண்ணகியை விடுத்து மாதவியுடன் வாழும் காலத்தும் எப்போதும் கூடி இன்புற்றதை,

“அந்துகின் மேகலை அசைந்தன வருந்த

நிலவுப்பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்

கலவியும் புலவியுங் காதலற் களித்தாங்கு” (அந்திமாலை: 30 -32)

என்று அடிகளார் வடிக்கின்றார். அது மட்டுமல்ல. இந்திரவிழாவில் மாதவி பதினோரு வகைக் கூத்தினை ஆடுகின்றாள். கூத்து முடிந்து விடுகின்றது. அதற்கு ஊடுகின்றானாம் கோவலன். அப்போதும் மாதவியின் முதல் கடமை கோவலனின் ஊடலைத் தணிவிப்பதாக இருந்துள்ளது. இதனை,

“கூடலும் ஊடலும் கோவலர்க்கு அளித்துப்

பாடமை சேக்கைப் பள்ளியு ளிருந்தோள்”(கடலாடு: 109-110)

என்று அடிகளால் அறியலாம். ஒரு கலையரசிக்கு இந்தக் காதல் ஒரு சிறையாக இருந்திருக்கக் கூடும்.

ஊடல் என்பது தலைவியர் கொள்வது. கோவலன் மாதவி இருவரைப் பொறுத்தவரை கோவலனே ஊடுகின்றான். காதற்பரத்தை என்று கூறப்படும் மாதவியே ஒரு நிலையில் இவனது காமத்திற்கு ஈடு கொடுக்க இயாலாமல் துன்புற்று அஞ்சியிருக்கிறாள். பிரிவில் இருக்கும் காதலர்தான் மாலை வருகிறதே என்று அஞ்சுவார்கள். ஆனால், மாலை வந்தால் கோவலனுக்கு காதல் நோய் வந்துவிடுமே என்று மாதவி அஞ்சினாளாம். மாதவி எப்படி கோவலனைத் தாங்கியவள்? வா என்றழைத்த போதெல்லாம் காலம் தாழ்த்தாது வந்து போ என்று கூறிய போது தடையேதும் சொல்லாது சென்று கோவலனைத் தாங்கியவள். இந்தச் சூழலை ஆராயவேண்டும். மாதவியுடன் இருந்த போது அவன் மனம் போன போக்கில்தான் அவள் நடந்துள்ளாள்.

“நாகிள முத்தின் நகைநலங் காட்டி

வருகவென வந்து போகவென போகிய” (வேனிற் காதை: 81-82)

இப்படி நடந்து கொண்ட மாதவியை எல்லாம் நடிப்பு என்று ஏளனமும் செய்கின்றான். இவ்வாறெல்லாம் இருந்த அவளை விடுத்து வேற்றுப் பெண்ணை நினைக்கும் அவனை நினைத்து என்ன பயன் என்று அவளுக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

பின்னால் மதுரைக் காண்டத்திலும் கோவலன் காவுந்தி அடிகளிடம் நடந்தவை எவற்றையும் கூறாத போதும் அடிகள் கோவலனுக்கு அறிவுரை கூறுகின்றார். அது ஒரு மாபெரும் வணிகர் மகனுக்குக் கூறுவது போலவோ அல்லது ஒரு இளைஞனுக்குக் கூறுவது போலவோ பொதுவான அறிவுரை அல்ல.

“காமம் சார்பாக் காதலின் குழந்து

ஏமம் சாரா இடும்பை எய்தினர்”(ஊர்காண் காதை: 43-44)

என்கின்றார். இது ஒரு காமுகனுக்குக் கூறும் அறிவுரையாக இருக்கின்றது. காம உணர்வுடனே வாழ்ந்தவர்கள் முடிவில்லாத துன்பத்தை அடைந்துள்ளனர் என்று தேவையில்லாமல் காமம் பற்றி ஒரு துறவி அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு பெண்ணோடு மட்டும் தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளாது விலைமகளிர் பலரோடும் ஆடித் திரிந்த கோவலன் கற்பைப் பற்றிப் பேசுவது மாதவிக்குச் சினத்தை ஊட்டியிருக்கலாம். கற்பே சிறிதும் இல்லாத பரத்தனான கோவலன் காவிரியைப் புகழ்வது போலக் கற்பைப் பற்றி பேசுவதைப் பரத்தைக் குலத்தில் பிறந்தாலும் கற்பறம் பேணிய மாதவியால் எப்படி தாங்கிக் கொள்ள இயலும்? கலையோடு நுட்பமான அறிவும் நிறைந்து பொலிந்தவள் மாதவி. “கற்பென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் பொதுவில் வைப்பொம்” என்று முழங்கினானே பாரதி. அந்த அதிகாரத்தை அப்போதே தன் கையில் எடுத்துக் கொண்டவள் மாதவி. எப்படி? அவன் தன் மேனியிலிருந்த அவள் கையை நெகிழ விடுகின்றான். “பொழுதிங்கு கழிந்ததாகலின், எழுதும்” (கானல்வரி: 57) என்று கூறி எழுகின்றான். அதாவது பொழுது போயிவிட்டது எழு என்று கூறுகின்றான். மாதவி ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றாள். கோவலனை விட்டாக வேண்டும் என்று. எழவில்லை. அவன் செல்கின்றான். சென்ற பின்பு தனியளாக மாதவி இல்லம் புகுகின்றாள். கோவலன் மாதவியை விட்டு விட்டுச் செல்லவில்லை. மாதவிதான் கோவலனை விட்டு விடுகின்றாள். “எழுகென எழுந்த” அடிமைப் பெண் கண்ணகியைப் போல் அல்ல. எழுதும், என்ற உடன் எழாத புதுமைப் பெண் மாதவி.

ஆண்வழிச் சமூகமாக இருந்த காலத்தில் ஒரு பரத்தையர் குலத்தில் பிறந்தும் துணிவுடன் முதல் முதலில் பெண்ணுரிமை பேசிய பைந்தமிழ்ப் பாவை மாதவி என்பதில் மாதர் குலம் பெருமையடையலாம்.

படைப்பு:

ஆதிரா முல்லை

பேராசிரியராகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வரும் இவர் குமுதம் குழும இதழிலும் தினமலர், தினமணி முதலான நாளிதழ்களிலும் வலைத்தளங்களிலும், சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, ஆய்வு, பதிப்பு உட்பட பனிரெண்டு நூல்களை எழுதியுள்ளார். அறம் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் இலக்கிய அமைப்பின் செயலாளரான இவர் பல்துறையிலும் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி பெண்களை ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகின்றார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், பாரதியார் சங்கம் முதையவற்றில் இணைச் செயலாளராகவும் வளரி கவிதை இதழின் முதன்மை ஆசிரியராகவும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் என்னும் வலைத்தளத்தின் தலைமை நடத்துநராகவும் இருக்கும் இவர் ஆதிரா முல்லை என்னும் பெயரில் யூ டியூப் சேனல் வைத்து அதிலும் தமிழ் இலக்கியங்களை எளிமைப் படுத்தி பொதுவெளிக்குக் கொடுத்து வருகின்றார்.