முதல் தேதி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படம் இந்தியில் 1954 ஆம் ஆண்டு வெளியான பஹேலி தாரிக் (Paheli Tarikh) படத்தின் ரீமேக். பி.ஆர். பந்துலு தனது பத்மினி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்து இருக்கிறார். இதுவே பத்மினி பிக்சர்ஸ் பேனரில் தயாரித்த முதல் திரைப்படம். கன்னடத்தில் பி.ஆர். பந்துலு நாயகனாக நடித்து இருக்கிறார். தாதா மிராசி அவர்கள் எழுதிய கதைக்குத் திரைக்கதை வசனம் எழுதித் தாமே இயக்கியுள்ளார் பா நீலகண்டன்.
நடிகர்கள்
சிவாஜி கணேசன்
அஞ்சலி தேவி
கிருஷ்ணன்
டி.ஏ.மதுரம்
கே.டி.சந்தானம்
ஸ்ரீரங்கம் ரங்கமணி
பி.சுசீலா
ராஜகோபால்
மாஸ்டர் ரங்கநாதன்
பேபி உமா
ராகினி , பேபி சரஸ்வதி (நடிகை சச்சு) மற்றும் பலர் நடனமாடியுள்ளனர்.
டி.ஜி.லிங்கப்பா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை கே.டி.சந்தானமும், உடுமலை நாராயண கவியும் எழுதியுள்ளனர். பின்னணி, இசை அரசர் தண்டபாணி தேசிகர் எனப் போடுகிறார்கள். மற்றும் டி.வி.ரத்தினம், கோமளா, ராணி எனப் போடுகிறார்கள். N. S. கிருஷ்ணன் & T. A. மதுரம் பாடிய பாடல்களும் உள்ளன.
சிவஞானம் ஒரு வங்கியில் பதினைந்து ஆண்டுகளாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அவரது மனைவி லட்சுமி. இரு குழந்தைகள் மற்றும் தங்கையுடன் வாழும் குடும்பம். வரும் வருமானத்திற்குள் செலவைச் சரிக்கட்டத் திணறும் எளிய குடும்பம்.
இவர்களின் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள். சதானந்தம், சாந்தம்மா. சதானந்தமும் அதே வங்கியில் தான் வேலை செய்கிறார். சாந்தம்மாவின் அப்பா வசதியானவர் என்பதால், இவர்களுக்குப் பணம் என்பது பெரிய சிக்கல் இல்லை.
இந்தக் காலகட்டத்தில் வங்கி மூடப்பட, இரு குடும்பத்தின் மாதச் சம்பளமும் நிற்கிறது. சிவஞானம் குடும்பம் வறுமையால் தள்ளாடுகிறது. எங்குச் சென்றாலும் வேலை இல்லை என்ற பதில் தான் கிடைக்கிறது. வேலை கிடைத்துவிட்டதாகப் பொய் சொல்லி ஒரு மாதத்தை ஓட்டுகிறார்.
இப்படி இருந்த காலகட்டத்தில், மகனும் அப்பாவிற்காக வேலை தேடுகிறான். தான் இறந்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என நினைத்து சிவஞானம் தற்கொலைக்கு முயலுகிறார். எமலோகம் போகிறார். அங்கிருந்து, பூமியில் குடும்பம் படும் துயரங்களைப் பார்க்கிறார். இவர் கிடைக்கும் என நினைத்த பணத்தையும் திருடன் வந்து திருடிச் சென்று விடுகிறான். மனைவி தற்கொலை செய்கிறார். இவர் கதறுகிறார்.
அப்போதுதான் தெரிகிறது. தற்கொலைக் கடிதம் எழுதியவர் அப்படியே தூங்கியிருக்கிறார். இவர் இறந்ததிலிருந்து நடந்தவை எல்லாம் கனவு என.
நிகழ்ந்தது இது தான். முந்தின நாள் மகன் வேலை தேடினார் அல்லவா. சிறுவனின் சொற்களால் கவரப்பட்ட ஒருவர், தனது செயலாளராகச் சிவஞானத்திற்கு வேலை கொடுக்கிறார். தற்கொலை செய்து கொண்டால் காப்பீட்டுப் பணமும் கிடைக்காது; இப்படித் தற்கொலை செய்வதாக இருந்தால், உலகில் முக்கால்வாசி பேர் இப்போது உயிருடன் இருக்க மாட்டார்கள் என சதானந்தம் சொல்லும் அறிவுரையுடம் திரைப்படம் இனிதே நிறைவு பெறுகிறது. அதாவது முதல் நாள் காலை தொடங்கி, இரண்டாம் நாள் வரை நடக்கும் நிகழ்வுகளே இத்திரைப்படம்.
சிவாஜியை அழ மட்டுமே வைத்த முதல் திரைப்படம் இது எனச் சொல்லலாம். முழுக்க முழுக்க சோகம்தான். ஆனால் அந்தக் காலகட்டத்திலிருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்கொலைக்கு யாரையும் இழுத்துச் சென்றுவிடக்கூடாது என்ற நல்ல கருத்திற்காக இவ்வாறு எடுத்து இருக்கலாம். திரைப்படம் முழுவதும் வன்முறையை மட்டுமே காட்டிவிட்டு, இறுதிக் காட்சியில் மட்டும் ஒரு கருத்தை வைக்கும் இன்றைய திரைப்படங்களை ஒப்பிடும்போது, இது மேலானது என்றே எனக்குத் தோன்றியது.
T. V. இரத்தினம் அவர்கள் பாடிய தலைப்புப் பாடல் (title song) இரண்டு பிரிவாக இருக்கிறது. முதல் பிரிவில் எழுத்து போடுகிறார்கள். இரண்டாவது பிரிவில் குடும்பம் சம்பளம் வாங்கி வர இருக்கும் தலைவனை எதிர்பார்த்துப் பாடுகிறார்கள்.
அகம் குளிர முகம் பிறக்கும் முதல் தேதி
முதல் தேதி இன்று முதல் தேதி
நாடு முழுவதும் மகிழ்வோடு எதிர்பார்க்கும் தேதி
சம்பளம் பெறப்போகும் விருப்பத்தில் தொழிலாளி
தன்னை மறக்கின்ற முதல் தேதி
தன் பணம் போகுதென்ற எண்ணத்தில் முதலாளி
சஞ்சலப்படுகின்ற முதல் தேதி
காசுக்கு காசு வட்டி கூசாமலே வாங்கும்
கல்நெஞ்சக்காரனுக்கும் முதல் தேதி
பேராசையால் தண்ணீரில் பாலைக் கலந்து விற்று
மோசமே செய்பவர்க்கும் முதல் தேதி
சின்ன சின்ன பொம்மை வேணும்
லட்டு மிட்டாய் தின்பதற்கு வாங்கி வரணும்
விளையாட
சின்ன சின்ன பொம்மை வேணும்- சாப்பிடுவதற்கு
சாக்கலேட்டு வாங்கி வரணும் என்று
செல்லமாக தந்தையிடம்
பிள்ளைகள் வாய்திறந்து
சொல்லி அனுப்புவதற்கு எல்லாம் காரணம்
முதல் தேதி இன்று முதல் தேதி
சினிமா பார்க்கப் போகணும்
ஹலோ மைடியர் சீக்கிரமா வந்து சேரணும்
சினிமா பார்க்கப் போகணும்
ஆபீசை விட்டு சீக்கிரமா வந்து சேரணும் -என்று
கனி மொழியாலே கணவனிடம்
முதல் தேதி இன்று முதல் தேதி
ஜோப்படி திருடன் ஜாக்கிரதை
பார்த்து புரிந்துகொள்ள முடியாது
பிக் பாக்கெட் அடிப்பதும் தெரியாது
காத்துக் கொண்டிருப்பான் -சம்பளம் வாங்கினால்
கவனம் இருக்கணும் முதல் தேதி
அடுத்து வரும் இரு பாடல்களும் உடுமலை நாராயண கவி இயற்றி என்.எஸ்.கிருஷ்ணன் பாடியவை. மிகவும் புகழ்பெற்ற பாடல்கள்.
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் – தேதி
ஒண்ணிலே இருந்து – சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
…….
பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே – மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே
இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே – தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே – ஆமா
சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு
கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே
கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே – தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே – கொஞ்சம்
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே – எந்த
நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசை படும்
பணத்தை எங்கே தேடுவேன்
அரசர் முதல் ஆண்டியும் ஆசை படும்
பணத்தை எங்கே தேடுவேன்
கருப்பு மார்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
கருப்பு மார்கெட்டில் கலங்குகின்றாயோ
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ
கிண்டி ரேசில் சுத்தி கிறுகிறுத்தாயோ
கிண்டி ரேசில் சுத்தி கிறுகிறுத்தாயோ
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
பூமிக்குள் புதைந்து புதையலானாயோ
பொன் நகையாய் பெண் மேல் தொங்குகின்றாயோ
பூமிக்குள் புதைந்து புதையலானாயோ
பொன் நகையாய் பெண் மேல் தொங்குகின்றாயோ
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இருப்பு பெட்டிகளில் இருக்கின்றாயோ
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ
சுவற்றுக்குள் தங்கமாய் பதுங்கி விட்டாயோ
சூடஞ் சாம்பிராணியாய் புகைந்து போனாயோ
எங்கே தேடுவேன்
பணத்தை எங்கே தேடுவேன்
உலகம் செழிக்க உதவும் பணமே…
பணமே… பணமே… பணமே…
பிரபலமாகாத பாடல் ஒன்று இருக்கிறது. கே.டி.சந்தானம் எழுதி ஏ.பி.கோமளா அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேளுங்கள். விளையாட்டாய் குழந்தைகளுக்கு அறம் சொல்லிக்கொடுக்கும் பாடல் இது. நடிகை சச்சு குழந்தையாக ஆடுகிறார். இணைந்து ஆடும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதமான ஆடை அலங்காரத்தில் ஆடுவதும், ஏழைக்குழந்தை ஒன்று அதைப் பார்த்துக் கொண்டு இருப்பதும், திரைப்படத்தின் கதையை அப்படியே சொல்கிறது. கூடவே பகுத்துண்ண வேண்டும் என்று சொல்லி முடிகிறது.
எல்லோரும் கேளுங்க நீங்க
எல்லோரும் கேளுங்க
ஒரு நல்ல விளையாட்டு சொல்லப்போகிறேன்
உல்லாச பயணம் மகாபலிபுரம்
செல்வது போல் விளையாடலாம்
அங்கு உலகம் வியக்கும்
சிற்பக்கலைகளைக் காணலாம்
அங்கயற்கண்ணி பாரடி அலை வீசும் அழகுக் கடலை
தங்கமயமாய் செஞ்சிட்ட மாலை
செங்கதிரோனின் உலகை
சங்கீதமான மாலையோடு சங்கீத ஒலி கூடட்டும்
அடி ராகினி ஒரு பாட்டுப்பாடி லல்லியும் பப்பியும் ஆடட்டும்
எல்லாம் இன்ப மாயம் பூவிமேல்
இயற்கயினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மாயம்
அல்லா தானவும்
அதற்கு மேலே மறந்து போச்சு
அதுவும் சரிதான் நேரமாச்சுது
அவுருங்க மூட்டையைப் பார்க்கலாம்.
டிபன் ஐட்டத்தை சொல்லுங்க கேட்கலாம்
பாம்பே அல்வா மைசூர் பாகு பனாரஸ் பர்பி பூரி டில்லி பாதுஷா திபெத் ஐஸ் க்ரீம் ஆந்திர பெசரெட்டு கேரள அவியல்
எல்லாம் இரவல் பட்சணம் ஏண்டி இது தானா உங்கள் லட்சணம்
செந்தமிழ் நாட்டு சிற்றுண்டி எல்லாம்
கொண்டு வந்தேன் இதோ பாரு.
இது என்றும் திகட்டாத இட்லி தோசை
இடியப்பம்க்கு நிகர் ஏது? தொன்று தொட்டு வந்த சர்க்கரைப் பொங்கல் தொண்டையில் இனிக்கும் பாயசம்
வந்தவர்க்கெல்லாம் தந்து மகிழும்
வாசம் கமழும் அதிரசம்
தேன்குழல் சீடை முறுக்கு
திரட்டுப்பாலும் இருக்கு
பலகாரம் மலை போலெ இருக்குது
குவிஞ்சி கிடக்குது ஆமாம்
பசியில்லே புளி ஏப்பம் எடுக்குது
பசியில்லாத போது ஒன்றும் புசிக்கக் கூடாது
ஆனால் பண்டத்தைப் பாழாக்கி எறியக்கூடாது
அதனால் பசித்தவர் இருந்தால் பார்த்துக் கூப்பிடு.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.