சரியான கேள்விகளை சரியான நேரத்தில் கேட்பதின் மூலம் உங்களால் அடுத்தவரின் உதவியைப் பெற முடியும் என்று தெரிவித்தேன் அல்லவா? நான் அதைத் தவறவிட்ட தருணத்தை விவரித்தது போல உபயோகித்தத் தருணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையிலிருந்து ஆம்ஸ்டர்டாம், லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்குப் போவதென்றாலும் அமெரிக்காவுக்குப் போவதென்றாலும் துபாய் அல்லது ஏதேனும் ஒரு மத்தியதரைக் கடல் நாடுகளின் நகரங்கள்தான் ட்ரான்சிட் பாயிண்ட் என்று சொல்லப்படும் இடைநிலை மையங்கள். இங்கிருந்துதான் நீங்கள் செல்ல வேண்டிய நகரத்துக்கான அடுத்த விமானத்தைப் பிடிக்க வேண்டும்.
பொதுவாகத் தனியாகப் பயணம் செய்யும்போது இது கொஞ்சம் பயமுறுத்தும் விஷயம்தான். நாம் செல்ல வேண்டிய விமானத்தைத் தவறவிட்டு விட்டால் என்ன செய்வது? இந்த விமானத்தில் இருந்து இறங்கி அடுத்த விமானத்தைப் பிடிக்க வழி தெரியாவிட்டால் என்ன செய்வது? அங்கே பசித்தால் வாங்கிச் சாப்பிட அந்த நாட்டு கரன்சி இல்லாவிட்டால் என்ன செய்வது? ரெஸ்ட் ரூம் உபயோகிக்க வேண்டும் என்றால் லக்கேஜை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று பலவிதக் குழப்பங்கள் நம்மைத் துரத்தும். மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் நேற்று ஒருவருடைய அனுபவமாக இருக்கலாம். அந்த அனுபவத்தைச் சரியான கேள்விகளின் மூலம் நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.

சென்ற வருடம் லண்டன் போய் இருந்தபோதும், எனக்குத் துபாய்தான் ட்ரான்சிட் பாயிண்ட். இரு விமானங்களுக்கு இடையிலான இடைவெளி நேரம், ஒருமணி நேரம் மற்றும் ஐந்து நிமிடங்கள். இரண்டு விமானங்களும் சென்றடையும், புறப்படும் டெர்மினல்களும் ஒன்றுதான். பிறகென்ன கவலை, என்னால் ஒரு மணி நேரத்தில் அடுத்த விமானத்தைப் பிடித்து விட முடியாதா என்று அதீத தைரியத்துடன் டிக்கெட் புக் செய்துவிட்டேன். பின்னர் எதிர் கொண்ட கேள்விகள் சற்றே பயத்தைக் கொடுத்தன. இங்கிருந்து செல்லும் விமானம் தாமதமாகச் சென்றால் என்ன செய்வாய்? இரண்டும் எமிரேட்ஸ் நிறுவனம்தானே, அவர்களின் தாமதத்திற்கு அவர்கள்தானே பொறுப்பு என்று லாஜிக் பேசினாலும், அப்படி ஏதாவது நடந்தால் என்ன செய்வது? அது என் தவறு இல்லை என்று நிரூபித்து, பின் அதற்குத் தீர்வு கண்டடையும் முறையில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளை நினைத்துப் பார்த்தாலே அயற்சியைக் கொடுத்தன.
“ஒருவேளை அடுத்த விமானத்தில் ஏறுவதற்கான கேட் மிகவும் தூரத்தில் இருந்தால் என்ன செய்வாய்?” என்கிற கேள்விகளுக்கு, “என்னால் ஓடிச் சென்றுவிட முடியாதா?” என்கிற என் பதில் விசித்திரமாகப்பட்டது. துபாய் விமான நிலையம் மிகவும் பெரிது. ஒரு டெர்மினலிலிருந்து இன்னொரு டெர்மினல் செல்ல ரயில் ஏற வேண்டும் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஓடிச் சென்று கேட்டை அடைவதா, அதற்கு நீ ஹுசைன் போல்ட் ஆக இருக்க வேண்டும் என்றனர்.
எனக்கு இந்தப் பயமுறுத்தல்கள் வேண்டாம் யாரேனும் தீர்வைச் சொல்லுங்கள் எனும்போது எல்லாரும் அது உன் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்று விலகிக் கொண்டனர். இத்தனை பயமுறுத்தல்களையும் மனதில் கொண்டு நான் என் அதிர்ஷடத்தைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பவில்லை. துபாயில் விமானம் இறங்குவதற்குச் சற்று முன்னர் ஏர் ஹோஸ்டஸிடம் என் நிலைமையை எடுத்துச் சொன்னேன். புரிந்து கொண்ட அவர் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். விமானம் தரையில் இறங்குவதற்குச் சற்று முன்னர், என்னை முன்வரிசையில் காலியாக இருந்த ஓர் இருக்கைக்கு மாற்றினார். விமானம் தரையில் இறங்கியவுடன், பிசினெஸ் கிளாஸ் பயணிகளுக்குப் பின்னர் முதல் ஆளாக வெளியே வந்தேன். அங்கிருந்து ஓட்டம்தான். வழி காட்டுவதற்கு ஆங்காங்கே இருக்கும் குறிப்புப் பலகைகளை பின்பற்றியபடி ஓடிக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் நான் ஏற வேண்டிய விமானத்தின் கேட் நம்பர் இருந்தது, அதை மனதில் குறித்துக் கொண்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன். அங்கே நம் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக எல்லா இடங்களிலும் ஆட்கள் இருந்தார்கள். வழியைக் கண்டறிவதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. எளிதான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் இருபதே நிமிடங்களில் என்னால் விமானம் ஏற வேண்டிய கேட்டை அடைய முடிந்தது. பின்னர் வெற்றிப் புன்னகையுடன் விமான நிலையத்தின் இலவச இணைய இணைப்பில் இணைந்து, போட்டோ எடுத்து எல்லாருக்கும் நான் லண்டன் செல்ல வேண்டிய விமானத்தை வெற்றிகரமாக பிடித்துவிட்டதை வாட்சப்பில் பகிர்ந்துகொண்டேன்.
இப்படியாக முன்கதை ஒன்று இருக்க, அதை நினைவில் வைத்தபடி, இந்த முறை கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரங்களுக்கு மேல் இடைவெளி இருக்கும்படி பார்த்து புக் செய்தேன். ஆனால், நடந்தது வேறு. ’ஏலே தப்பிக்கவா பாக்க’ என்று சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானம் 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதால், சரியாக ஒரு மணி நேரத்தில் அடுத்த விமானம் ஏறுவதற்கான நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டேன். இம்முறையும் ஓட்டம்தான். ஓடி ஓடி வழியைத் தவற விட்டுவிட்டு, நான் சரியான பாதையில் செல்லவில்லை என்று ஊகித்து, அங்கே இருந்த பணியாளரிடம் கேட் நம்பரைச் சொல்லிக் கேட்டபோது வந்த வழியே திரும்பிச் சென்று இன்னும் 20 நிமிடங்கள் நடக்கச் சொன்னார். 1.25க்குத் துபாய் விமான நிலையத்தில் இறங்கி 2.25 க்குப் புறப்பட இருக்கும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். என் கையில் இருந்த போர்டிங் பாஸில் சரியாக இரண்டு மணிக்கு போர்டிங் ஆரம்பித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளது. 1.40 வரை இப்படியே சுற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் மனம் வைத்தால் விமானத்தைப் பிடித்துவிடலாம். ஓட்டமும் நடையுமாக அடுத்த பதினைந்து நிமிடங்களில் என்னால் கேட்டை அடைய முடிந்தது. பிஸினெஸ் கிளாஸ் பயணிகளுக்கான போர்டிங் ஆரம்பமாகியிருக்க, இம்முறையும் ஜெயித்துவிட்ட திருப்தி.
துபாய் விமான நிலையத்தின் பிரம்மாண்டம் பயமுறுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு நண்பனைப் போல வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது. ஆங்காங்கே நின்றிருக்கும் விமான நிலையப் பணியாளர்கள் நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கின்றனர்.

சரி, இப்போது மீண்டும் ஆம்ஸ்டர்டாம் வருவோம். ஒருவழியாக ஸ்லோடேர்டிக் ஸ்டேஷன் போய் இறங்கி, நான் தங்க வேண்டிய ஹோட்டலைக் கண்டறிந்து, செக் இன் செய்து முடித்தபோது இரவு பத்து மணிக்கு மேல் ஆகி இருந்தது. சூரியன் அப்போதுதான் மெதுவாகக் கீழே இறங்கி இருந்தது.
நிம்மதியாக உறங்கி எழுந்து, அடுத்த நாள் அலுவலகம் செல்லத் தயாராகி, சரியாக அலுவலகம் இருக்கக் கூடிய பில்டிங் அருகில் வந்தாயிற்று. ஆனால், என் முன்னே உள்ள அந்த உயரமான கட்டிடங்களில் எது என் அலுவலகம் என்று தெரியவில்லை. ஆம்ஸ்டர்டாம் அலுவலகத்திற்கு இப்போதுதான் முதல்முறையாக வருகிறேன். நான் இன்னமும் என் மொபைல் நெட்ஒர்க்கைச் சரி செய்யவும் இல்லை. என்னைக் கடந்து சென்ற, ஒரு டச்சுப் பெண்மணியிடம் உதவி கேட்டேன். அவர் தன் மொபைலைக் கையில் கொடுத்து கூகிளை உபயோகப்படுத்தி என்னையே கண்டறிந்து கொள்ளச் சொன்னார். நம்புங்கள் இப்படியும் மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள்.
ஒருவழியாகச் சரியான பில்டிங்கைக் கண்டறிந்து உள்ளே சென்றாயிற்று. இப்போது நிம்மதியாக உட்கார்ந்து சாட் ஜிபிடி உதவியுடன் என் மொபைல் நெட்ஒர்க்கைச் சரிசெய்தேன். மொபைலைப் பொறுத்தவரை, எந்தவொரு சின்ன செட்டிங்ஸ் என்றாலும், அதை நானே செய்யாமல் வேறு யாரிடமாவது கொடுத்து செய்யச் சொல்வது வழக்கம். இப்படிப்பட்ட டெக்னிக்கல் சோம்பேறித்தனங்களை மொத்தமாகப் பெண்கள் தூக்கி எறிய வேண்டும். கையில் இணையம் வந்தவுடன்தான் இனி எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் வந்தது.
தனியாக வெளிநாடு செல்லும் பெண்கள் இங்கிருந்தே சிம் கார்டு வாங்கி ஆக்டிவேட் செய்துகொள்வது நல்லது. இப்படிப்பட்ட செட்டிங்ஸ் விஷயங்களையும் இங்கிருந்தே சரி செய்து கொண்டு செல்லும்போது, வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும்.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து தரங்கிணி
படைப்பாளர்:
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.