லெற்றீசியா தங்கம்

‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு.  கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி, ஒரு கலைக்கல்லூரி மற்றும் ஒரு தொழிற்பயிற்சி கூடம் ITI உண்டு. அனைத்திலும், தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்கள் பெண்கள்.

இவற்றில் பெண்கள் நடுநிலைப் பள்ளியின் தலைமை என்பது மட்டும் எப்போதும் பெண்களிடம்தான் உள்ளது. இவர்களில் இருவர், பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே வகுப்பில் படித்த வகுப்புத் தோழர்கள். இன்னொருவர், இவர்கள் இருவருக்கும் இரு ஆண்டுகளுக்குப்  பின்னால் அதே பள்ளிகளில் படித்த பள்ளித் தோழர். 

மேலும் ஊரின் பஞ்சாயத்துத் தலைவரும் பெண்தான். இப்படி ஒரு ஊரின் தலைமை இவர்களிடம் எவ்வாறு வந்தது; அதற்காக இப்பெண்கள் முன்னெடுத்த முயற்சி என்ன? என்பதைச் சொல்லுவதே இப்பகுதியின் நோக்கம். 

இவர்களில் காமராஜர் நடுநிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர், லியோன் லெற்றீசியா தங்கம்தான் பெரியவர் என்பதால் அவரிடமிருந்து தொடங்கலாம். 

காமராஜர் நடுநிலைப் பள்ளி

1945-ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்திலேயே, இந்து ஆதார பள்ளி என்ற பெயரில் துவக்கப் பள்ளியாக இப்பள்ளி தொடங்கப்பட்டது. முதலில் ஒரு குடும்பம்தான் தொடங்கியிருக்கிறது. தொடங்கியவர் யார் எனச் சரியாகத் தெரியவில்லை. யாராக இருந்தாலும், கல்வியின் மீது அவர் கொண்டிருந்த நாட்டத்தைத்தான் அது சொல்கிறது. பின்னர், பனிமய அன்னை கோவில் நிர்வாகம், பள்ளியை விலைக்கு வாங்கியது. ஆனாலும் அதே பெயர்தான் தொடர்ந்தது. கிறிஸ்தவ நிர்வாகத்தில் இந்து பெயர் கொண்ட பள்ளி. இதுதான் இந்தியா.

பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. எட்டாம் வகுப்பு முடித்த முதல் அணி 1964-ம் ஆண்டு வெளிவந்தது. அதனால், பள்ளி 1961-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வெளிவந்த முதல் குழுவில் முதல் மதிப்பெண் பெற்றவர் மருத்துவர் ஸ்டீபன் ராஜா. 

காமராஜர் இறந்தபின், அப்பள்ளி 1976-ம் ஆண்டு காமராஜர் நடுநிலைப் பள்ளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மழலையர் பள்ளியும் இதனுடன் இணைந்து செயல்படுகிறது.

லெற்றீசியா – தங்கம், ஜோதி ஆசிரியர் இவர்களின் மூத்த மகளாக 1965-ம் ஆண்டு பிறந்தவர். அப்பா வெளியூரில் பணி செய்ய, அம்மா உள்ளூர் பள்ளி ஆசிரியராக இருந்தார். இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகளுடன் பிறந்தவர். அம்மா வீட்டின் ஒரே மகள் என்பதனால், அவர்களின் அம்மாவும் அப்பாவும் உடனிருந்தனர். இதனால் தாத்தா பாட்டியின் அரவணைப்பும் இணைந்தே கிடைத்தது. 

பள்ளிப்படிப்பு, இளங்கலை பொருளாதாரம் என அனைத்தையும் உள்ளூரில் கற்றவர், முதுகலைப் பொருளாதாரம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் படித்தார். பின் B Ed, இளங்கலை தமிழ், முதுகலை தமிழ் மூன்றும் தொலைத்தொடர்பு வழியில் படித்தார். ஆசுகவி போன்று கேட்டவுடன் கவிதை எழுதக் கூடியவர். சிறப்பாகப் பாடக் கூடியவர். கதை, கட்டுரை எழுதக் கூடியவர்.

8.3.1995 அன்று காமராஜர் நடுநிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். சேர்ந்து இரண்டு மாதத்தில் (3.5.1995), வேளாங்கண்ணி சேகர், லெற்றீசியா திருமணம் நடைபெற்றது. கணவரும் கள்ளிகுளத்தைச் சார்ந்தவர் என்பதால், பணியைத் தடையில்லாமல் தொடர முடிகிறது.

தனது பள்ளி அனுபவங்கள் குறித்து லெற்றீசியா இவ்வாறு குறிப்பிடுகிறார் – “முப்பது  ஆண்டுகளுக்குமேல் ஒரே பள்ளியில் பணி புரிந்து நூற்றுக் கணக்கான மாணவர்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிவதால் என் பொறுப்பு மேலும் கூடியிருக்கிறது. ஆனாலும் இது என் ஒருவரின் முயற்சி அல்ல. மாணவர்கள், என்னுடன் பணிபுரியும் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், அரசு என அனைவரின் கூட்டு முயற்சியால்தான் என் செயல் சிறப்புறுகிறது.

படிப்புடன் கூடிய இணைச் செயல்பாடுகள், பண்பாட்டு நன்னெறி வகுப்புகள், மாணவர்களைப் பக்குவப்படுத்தும் பயிலரங்கங்கள் என மாணவரின் நிலையை உயர்த்துவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம். ஆண்டுதோறும் அரசு நடத்தும் NMMS தேர்வில் பல மாணவர்கள் வெற்றிக் கனிகளை எட்டிப் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரி நான்கு மாணவர்கள் இக்கனியைத் தட்டிப் பறிக்கின்றனர் என்றால் அது ஆசிரியரின் கடும் உழைப்பினால் என்பதை உறுதியாகச் சொல்ல இயலும்.” 

பள்ளியில் கொண்டாட்டங்கள்

உலக சுகாதார நாள் நிகழ்வு
பள்ளி சுற்றுலா

“அனைத்து சமய மாணவர்களும் படிக்கும் இப்பள்ளியில் எல்லா விழாக்களும் சிறப்புற நிகழ்கின்றன. மாதந்தோறும் மாணவர் மன்றம் நடைபெறுகிறது. கலை இலக்கியத் திறன் வளர்க்கும் மன்றங்கள் உள்ளன. பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இசை, சிலம்பம், கராத்தே, ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளும் சீராக இயங்குகின்றன. உலகமே திண்டாடிக்கொண்டிருந்த கொரோனா காலகட்டத்தில்கூட, கல்வி தடைபடாமலிருந்தது என்றால் அது ஆசிரியர்களின் பெரும் முயற்சியே!

இவற்றையெல்லாம் பார்த்துப் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இன்னமும் பலரும் சேர்க்க வேண்டும் என்பதே என் ஆவல்.

இவையெல்லாம் பள்ளியின் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெற இயலாது. பழைய மாணவர்களில் பலர் நன்நிலையில் இருக்கிறார்கள். பாங்காய்ப் பள்ளிக்குப் பல உதவிகள் செய்கிறார்கள். பழைய ஓட்டுக் கட்டடமாய் இருந்த பள்ளியின் தெற்குக் கட்டடத்தைப் பழைய மாணவர்கள் புதுப்பித்துக் கொடுத்தார்கள்.  

அனைத்துக் கட்டமைப்புகளையும் நிர்வாகம் செய்து தருகிறது. அரசும் தன்னால் இயன்ற முன்முயற்சிகளை எடுக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் காலை உணவுத்திட்டத்தை, நமது சட்டமன்ற அவைத்தலைவர் எம் பள்ளியில்தான் தொடங்கி வைத்தார். குழந்தைகளுடன் அவர் அமர்ந்து உணவு உண்டது; ஊட்டி விட்டது எல்லாம் அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம். 

இவ்வாறு என் பணியில் என்னைத் திறம்படச் செய்ய ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. கடந்த ஆண்டு ஆசிரியர் நாளன்று (5 9 2024) வள்ளியூர் Lions Club எனக்கு நல்லாசிரியர் விருது கொடுத்தது. 

இவை அனைத்தையும் சிறப்புறச் செய்வதற்கு உறுதுணை இருந்த, பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர், ஆசிரியர், என்னுடன் பணிபுரிந்த, புரியும் ஆசிரியர், இவர்கள் எல்லாருக்கும் மேலாக என்னை வழிநடத்தி வரும் பனிமய அன்னை அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்!”

இவ்வாறு லியோன் லெற்றீசியா தங்கம் தனது அனுபவத்தைச் சொல்கிறார். 3.6.1965 அன்று பிறந்த இவர், வரும் ஜூன் முப்பதாம் நாள் (இன்று) பணி ஓய்வு பெறுகிறார். ஒரே மகளும், இரண்டு பேரக்குழந்தைகளும் கொண்டுள்ள லெற்றீசியா ஆசிரியரின் ஓய்வுக் காலமும் சிறப்பான காலமாக அமைய வாழ்த்தும் அன்பும்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.