18 வருடங்களுக்கு முன்பு விமான பயணங்கள் எங்கள் வாழ்வில் அவ்வளவு சாதாரணமாக நுழையாத நேரத்தில், சில சூழ்நிலைகளால் நான் மட்டும் அமெரிக்காவுக்கு தனியாக பயணப்பட வேண்டிய சூழ்நிலை உருவானது.
எனக்கு மிகவும் குதூகலம். அந்த காலகட்டத்தில் எனக்கும் வெளி உலகிற்குமான தொடர்பு, என் கையில் கிடைத்த வெகு சில புத்தகங்களும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியும்தான்.
நான் மதுரையில் பிறந்தவள். அப்பொழுதுதான் சில மாதங்களுக்கு முன் சென்னைக்குக் குடியேறி இருந்தோம். அதுவரையில் தனியாக மதுரையை விட்டு வெளியில் கூட பயணப்பட்டதில்லை.
அம்மாவிற்கு ஒரே பதற்றம். என் வீட்டுக்காரருக்கு என்னை அனுப்புவதில் தடை ஏதும் இல்லை என்றாலும் அனுப்புவது சரியா, பிரச்னை ஏதும் இல்லாமல் சென்று விடுவாளா என்று பல கேள்விகளுடன் பதைபதைப்பு. என் பையன், ‘யோசிக்காதே அம்மா நீ கிளம்பி வா’ என்று ஊக்கப்படுத்தினான். என் இரண்டாவது பையன் என்னுடன் இருந்தான். அவனுக்கு முழு நம்பிக்கை, நான் தனியாக செல்லும் இந்த பயணத்தை சமாளித்து விடுவேன் என்று…
இந்தப் பயணத்திற்கு முன் நான் விசா அனுமதிக்கு தயாராக வேண்டி இருந்தது.இந்த விசா நேர்முகத் தேர்வில் சரியாக செயல்படவில்லை என்றால் பயணத்தையே மறந்து விட வேண்டியதுதான். அப்பொழுது இணையதள அணுகல் இலகுவாக இல்லை. எல்லோர் கையிலும் கைபேசி இல்லாத நேரம். வீட்டில் தொலைதூரத் தொலைபேசி வசதி இருந்தாலும், இணையதள ஆற்றல் குறைபாட்டால் பொது தொலைபேசி நிலையங்களை நாடவேண்டிய அவசியமான காலம் அது. என் மகனின் பதவியின் தன்மை,பொருளாதார நிலைமை அங்கு சென்று எங்கு தங்க போகின்றேன் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகின்றேன் என்ற எளிமையான கேள்விகளுக்குத்தான் தயாராக வேண்டி இருந்தது. இந்த தகவல்களில் ஒன்று இரண்டு பேசும் பொழுதே தொலைபேசி தொடர்பு அற்றுவிடும், மின் அஞ்சலில் அனுப்பும் சில தகவல்களை அச்சுபடி எடுத்து வாசித்து புரிந்து தயார் செய்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த நேர்காணலுக்கு தயார் செய்யும் பதில்கள் ஒன்றும் கடினம் இல்லை. ஆனால் கேள்வி கேட்கப்படும் பொழுது, நமது பதில்களை முன்வைத்து முன்னிலை படுத்துதல் தான் முக்கியம் என்று பலவாறாக சொல்லப்பட்டது.
எது எப்படி இருந்தாலும் பள்ளியில் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள ஊட்டிய தன்னம்பிக்கையும் என் தந்தை சில அலுவல்களுக்கு என்னை தனியாக அனுப்பிய அனுபவத்தாலும், சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணல் திருப்திகரமாக முடிந்தது.
நான் அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. விமான புறப்பாடு நேரம் இரவு இரண்டரை மணி. வீட்டில் சில ஏற்பாடுகளை செய்துவிட்டு கிளம்பி செல்கையில் ஒருவிதமான சுதந்திர உணர்வு. விமான நிலையத்திற்குள் சென்றாகிவிட்டது. குடியேற்ற ஒப்புகை சீட்டு கணினி மயம் ஆவதற்கு முன் படிவங்களை நிரப்பி விட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. குடியேற்ற ஒப்புகை சீட்டு சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், எனக்கு அதுவரை பரிச்சயமான உலகத்தை பின் விட்டு, எனக்கு அறிமுகம் இல்லாத ஒரு உலகத்திற்குள் முன்னோக்கி சென்றேன்.
எல்லோரும் அவர் அவர்களுக்குள் சுருங்கி ஓர் பொதுவார்த்தனமான செயற்கைப் புன்சிரிப்புடன் அவர்வர் இலக்கை நோக்கி நடந்தனர். வெகு சிலருக்கே அவர்கள் செல்லும் வழி பரிச்சயம் ஆனதாக இருந்தது. சிலர் அவர்களுடனே ஆட்டு மந்தை போல் சென்றனர். இன்னும் சிலர் அங்கு இருந்த டிஜிட்டல் போர்டுகளை பார்த்துக் கொண்டே தாங்கள் ஏறும் விமானம் நிற்கும் வாயிலின் அருகாமையில் சென்று இருக்கையில் உட்கார்ந்தோம். விமானம் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. அப்பொழுது சிறிது ஆசுவாசமாக அமர்ந்து இருந்தோம். அந்த நேரத்தில் உலகையே வென்ற ஒரு பெருமிதம்தான்.
சிறிது நேரத்தில் விமானம் எல்லோரும் ஏறுவதற்கு தயாராக இருந்தது. எல்லோரும் வரிசையில் சென்று ஏறினோம். என்ன ஒரு ஒழுங்கு! எங்கு ஒழுங்கு ஒரு விதி முறையாக ஆக்கப்படுகிறதோ அங்குதான் ஒழுங்கு கடைபிடிக்கப்படுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. எல்லோரும் வரவேற்கபட்ட விதம் எல்லோர் இருக்கைகளுக்கும் வழிகாட்டப்பட்ட நேர்த்தி எல்லாம் என்னை வெகுவாக கவர்ந்தது. விமானமும் புறப்பட்டது.அது அதிகாலை 3 மணி ஆகையால், எல்லோரும் சிறிது கண் அயர்ந்து விட்டோம்.
சில மணி நேரங்களில் கண் விழித்த பொழுது, ஜன்னல் வழி பார்க்கையில் சூரியன் உதயமாகிக் கொண்டே இருந்ததை பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கிழக்கில் இருந்து மேற்கில் பயணித்த பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்தது ஒரு புதிய அனுபவம். மேகக் கூட்டங்களின் இடையே விமானம் பயணித்த பொழுது, மேகக் கூட்டங்களின் பக்கத்தில் இருந்து அவை உருவம் மாறுவதை வேடிக்கை பார்த்தது, என்னுள் இருந்த குழந்தையின் குதூகலத்தை வெளிக்கொணர்ந்து.
11 மணி நேர பயணத்திற்கு பிறகு விமானம் மாறி பயணப்பட வேண்டி இருந்தது. இறங்கியவுடன் கழிவறைகளைத் தேடிப்பிடித்து இயற்கை கடன்களை முடித்துவிட்டு நான் ஏறும் விமானம் நிற்கும் வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். விமானம் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. அங்கு ஒரு டாலருக்கு ஒரு காபி வாங்கி தனியாக உட்கார்ந்து குடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அந்த விமான நிலையம் ஜெர்மானிய விமான நிலையம், ஆதலால் எங்கும் ஆங்கில பெயர் பலகைகள் காணப்படவில்லை. பிரெஞ்சு வாசகங்கள் அங்கங்கே காணப்பட்டன. அவ்விமான நிலையம் மிகப்பெரியதாக இருந்தது. நான் இறங்கிய வாயிலிலிருந்து மற்றொரு விமானம் ஏறும் வாயிலுக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டியிருந்தது. நான் சரியான வழியில் தான் சென்று கொண்டிருக்கின்றேனா என்ற சந்தேகத்துடனே நடந்து கொண்டிருக்கையில், நடுவில் ஓர் தானியங்கி ரயிலில் பயணப்பட வேண்டி இருந்தது. அந்த ரயிலில் ஏறிவிட்டேன், ஆனால் நான் செல்ல வேண்டிய இடத்திற்குத்தான் சென்று கொண்டிருக்கின்றேனா என்று எனக்கு உள்ளுக்குள் பயம். இவற்றையெல்லாம் தாண்டி ஒரு வழியாக நான் செல்ல வேண்டிய வாயிலை அடைந்து விட்டேன். பின்பு இன்னும் ஒன்பது மணி நேர பயணத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று அடைந்தேன்.
தனியாக நான் 18 வருடங்களுக்கும் முன் மேற்கொண்ட இந்த பயணத்தை இன்று நினைத்துப் பார்த்தாலும், ஒரு சுதந்திரமான மகிழ்ச்சி நிறைந்த அனுபவமாகத் தெரிகிறது. இதில் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், பெண்கள் தனியாக பயணப்படும் பொழுது அவர்களின் தன்னம்பிக்கை கூடுகின்றது. அவர்களின் உலகம் விரிகின்றது. பெண்களின் எண்ணங்கள் மேலும் ஆக்கபூர்வமாக விரிவடைகிறது.
படைப்பாளர்

பானு லட்சுமி
மதுரையில் வசிக்கிறார். இளங்கலை ஆங்கிலமும் முதுகலை ஆற்றுப்படுத்துதல் உள சிகிச்சையும் பயின்றவர். சில ஆண்டுகள் சென்னையில் மருத்துவமனையிலும் சொந்த மையத்திலும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி அளித்தவர். பள்ளியிலும் பணியாற்றியவர். குழந்தைகளை சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் உரையாடுவது உண்டு. இணையரின் பணி நிமித்தம் ஆந்திராவிலும் எத்தியோப்பியாவிலும் வசித்தவர். அமெரிக்காவுக்கும் பயணித்தவர். இவரின் ‘ஷாலு மாலுவின் பயணம்’ என்கிற சிறார் நூலை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அருமை பானுலட்சுமி மேம் 💜 💐