அமெலியா இயர்ஹாட் (Amelia Earhart) ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களைப் பிரிக்கும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண் விமானி என்கிற சாதனைக்கு உரியவர்.

தொழில்நுட்பமும் விமானங்களும் பெருமளவில் முன்னேற்றத்தை அடைந்திருக்கும் இன்றைய நாளில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க, விமானத்தில் எட்டு மணி நேரமாகிறது. ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னால் இன்றுபோல அதிநுட்பத் திசைகாட்டும் கருவிகளோ ஆற்றல் வாய்ந்த விசைப்பொறிகளோ இல்லாத காலத்தில் 20 மணி நேரம் ஆனது. கூடவே மிகவும் அபாயகரமான அந்தப் பயணத்தைத் துணிச்சல்மிக்கவர்கள் மட்டுமே மேற்கொண்டனர். அப்படிப்பட்ட மனவுறுதிகொண்டவராக இருந்த அமெலியா இன்றளவும் வீராங்கனையாகவும் பெண்களின் பிரியமான சாதனையாளராகவும் இருக்கிறார்.

அமெலியா 1897, ஜூலை 27 அன்று அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் சாமுவேல் இயர்ஹாட், ஏமி இணையருக்குப் பிறந்தார். அமெலியாவின் தாய் ஏமி முற்போக்கு எண்ணமுள்ளவர். தன்னிரு மகள்களையும் அடக்குமுறைக்கும் பழமைவாதத்துக்கும் ஆளாக்காமல் வளர்த்தார். வீட்டருகே இருக்கும் மரங்களில் ஏறி இறங்குவது, எலிகளை ரைஃபிளால் சுடுவது, பனிச்சறுக்கு வண்டியில் நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக்கொண்டு சறுக்குவது எனத் திறந்தவெளியில் பொழுதைக் கழிப்பார்கள் அமெலியாவும் அவர் தங்கை கிரேஸும்.

சிறுவயது முதலே எதையும் முன்னெடுத்துச் செய்யும் தலைமைப் பண்புமிக்கவராக இருந்தார் அமெலியா. ஏழு வயதில் ரோலர் கோஸ்டர் ஒன்றைப் பார்த்ததும் மரப்பெட்டியையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் கொண்டு மாமாவின் உதவியுடன் தானே ஒரு ரோலர் கோஸ்டரைச் செய்தார். அதில் உட்கார்ந்துகொண்டு கீழே சறுக்க முயன்றபோது கைகால்களில் சிராய்த்துக்கொண்டதும் ஆடையைக் கிழித்துக்கொண்டதும்தான் மிச்சம். ஆனால், முகத்தில் சிரிப்புடன் தூசியைத் தட்டியபடி எழுந்துவந்த குட்டி அமெலியா, “வானத்தில் பறப்பதுபோல இருந்தது” என்று தங்கையிடம் உற்சாகத்துடன் கூறினார்.

பத்து வயதில் அயோவா மாகாணக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது அங்கிருந்த விமானத்தில் பறக்கலாமா என்று தந்தை கேட்டபோது அமெலியாவுக்குப் பெரிதாக நாட்டமில்லை. லொடலொடவென்று ஆடிய அந்தப் பழைய விமானத்தைப் பார்த்துப் பயம்தான் ஏற்பட்டது. 1919ஆம் ஆண்டில் டொரண்டோ நகரில் நடைபெற்ற கனடிய தேசியப் பொருட்காட்சியின் விமானக் கண்காட்சிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு விமானி, திடலின் ஓரத்தில் நின்றிருந்த அமெலியாவையும் அவர் தோழியையும் அச்சுறுத்துவதுபோல அவர்களுக்கு மிக அருகில் தன் விமானத்தை ஓட்டிச் சென்றார். “அந்த நேரத்தில் எனக்கு எதுவுமே புரியவில்லை. என்னருகே உரசியபடி சென்ற அந்தக் குட்டிச் சிவப்பு விமானம் என்னிடம் ஏதோ சொல்ல விரும்பியது என நினைக்கிறேன்” என்று பின்னொரு நாளில் அந்தச் சம்பவம் குறித்து நினைவுகூர்ந்தார் அமெலியா.

இப்படியாக 22 வயது வரையிலும் விமானத்துடன் முரண்பாடான உறவைக் கொண்டிருந்த அமெலியாவின் வாழ்வு, விமானத்துடன் பின்னிப்பிணைந்தது 1920ஆம் ஆண்டில்தான். லாங் பீச்சில் இருந்த வான்வெளிக் களத்துக்கு தந்தையுடன் போயிருந்தபோது ஃபிரேங்க் ஹாக்ஸ் என்கிற புகழ்பெற்ற விமானியுடன் பயணம் செய்தார் அமெலியா. விமானம் சில நூறு அடிகள் மேலே எழுந்ததுமே பறப்பதுதான் தனக்கான வாழ்க்கை என்று முடிவுசெய்துவிட்டார்.

அடுத்த ஆண்டு முழுவதும் விமானம் ஓட்டும் பயிற்சிக்கான கட்டணத்தைச் சேமிப்பதற்காக வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டார். பயிற்சி முடிந்த சில மாதங்களில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு ‘கேனரி’ என்று பெயர்சூட்டினார். 1922இல் 14 ஆயிரம் அடி உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்ற முதல் பெண் விமானி என்கிற சாதனையைப் படைத்தார். அடுத்த ஒரே வருடத்தில் விமானம் ஓட்டும் உரிமத்தைப் பெற்று உலகின் 16வது பெண் விமானியானார்.

1927இல் சார்ல்ஸ் லின்பெர்க் என்கிற விமானி அட்லாண்டிக் பெருங்கடலைத் தனியொருவராக விமானம் மூலம் கடக்கும் சாதனையைப் படைத்தார். அடுத்ததாக, 1928, ஜூன் மாதத்தில் அதே சாதனையைப் படைக்கும் வாய்ப்பு அமெலியாவைத் தேடி வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் பயணத்தில் வேறு இரண்டு விமானிகளுடன் ஒரு பயணியாகத்தான் உடன்சென்றார் அமெலியா. இருந்தாலும் அது அருஞ்செயலாகவும் சாதனையாகவும் கருதப்பட்டது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெரும் சாதனையாளராகக் கொண்டாடப்பட்டார். “ஸ்டுல்ஸ்தான் எல்லாவற்றையும் செய்தார். நான் ஒரு உருளைக்கிழங்கு மூட்டையைப்போல பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு நாள் இதைத் தனியாகச் செய்து பார்க்க வேண்டும்” என்றார் அமெலியா.

அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் வட அமெரிக்கக் கண்டம் முழுவதையும் மேலும் கீழுமாகக் கடந்த முதல் பெண் விமானி என்கிற சாதனையைப் படைத்தார். “விமானத்தின் விசைக்கோலை மென்மையாகக் கையாளத் தெரிந்த ஒரு பிறவி விமானி” என்று தொழில்முறை விமானிகள் பலரும் அமெலியாவின் திறனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தேசிய வானூர்தியியல் சங்கத்தில் அலுவலராகப் பதவியேற்றபோது பெண்களிடையே விமானம் ஓட்டும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் அவர்கள் புதிய சாதனைகளைப் படைக்கத் தேவையான ஊக்கத்தையும் உதவியையும் அளித்தார்.

முன்பே மனதில் உறுதிபூண்டிருந்தது போலவே 1932, மே மாதத்தில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் தனி விமானப் பயணத்தை மேற்கொண்டார் அமெலியா. கனடாவில் இருந்து கிளம்பி எங்குமே தரையிறங்காமல் விமானத்தை ஓட்டிச்சென்று ஏறக்குறைய 15 மணி நேரத்தில் அயர்லாந்தில் தரையிறங்கினார். அந்தச் சாதனைக்காக பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் உயரிடத்தைச் சேர்ந்தவர்களின் நட்பையும் பெற்றார். அடுத்தடுத்து வெவ்வேறு அண்டை நாடுகளின் நகரங்களுக்கிடையே தனியாகவும் தரையிறங்காமலும் விமானமோட்டி புதிய சாதனைகளைப் படைத்தார். நீண்ட பயணங்களின்போது உறங்கிவிடாமல் இருக்க மற்ற விமானிகளைப்போலத் தேநீரோ காபியோ அருந்தும் பழக்கம் இல்லாதவர் அமெலியா. மயக்கம் வராமல் இருக்கப் பயன்படுத்தப்படும் உப்பை அவ்வப்போது முகர்ந்துகொள்வார்.

பதவிகளும் சொகுசான வாழ்க்கையும் வசதியும் தேடி வந்தாலும் விமானத்தில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற மாபெரும் வேட்கையைக் கொண்டவராக இருந்தார் அமெலியா. அவருக்கு முன் வேறு பலர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும் தனக்கென புதிய இலக்கொன்றை வைத்திருந்தார். தன் பயணத்துக்காகப் பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துக்கொண்ட பாதை, அதுவரை மற்றவர்கள் தேர்ந்தெடுத்த பாதையைவிட அதிக தூரத்தைக் கொண்டது. ஏறக்குறைய 47 ஆயிரம் கி.மீ. வான்வழிப் பயணம் செய்யவேண்டும். பர்டியூ பல்கலைக்கழகத்தின் பொருளுதவியுடன் அவருடைய பயன்பாடுக்கேற்ற வகையில் விமானத்தை வடிவமைத்தது லாக்ஹீட் வானூர்தி நிறுவனம்.

1937, ஜூன் 1, மயாமி நகரிலிருந்து கிழக்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்கினார்கள் அமெலியாவும் சக விமானி ஃபிரெட் நூனனும். அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு இடங்களில் எரிபொருளுக்காகத் தரையிறங்கினார்கள். ஜூன் 29 அன்று தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் நியூ கினீ தீவை அடைந்தபோது 35 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்திருந்தனர். அங்கிருந்து ஜூலை இரண்டாம் தேதி கிளம்பி சுமார் 4,200 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஹௌலாண்ட் தீவை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் இரண்டு கப்பல்கள் கடலில் நிறுத்தப்பட்டிருந்தன.

பயணத்தின்போது ரேடியோ கருவி மூலம் கப்பல்களோடு தொடர்பில் இருந்த விமானம் திடீரென நடுவானில் மறைந்துபோனது. கிட்டத்தட்ட 12 நாட்கள் நடைபெற்ற தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. அமெலியாவும் ஃபிரெட்டும் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது. அவர்களின் திடீர் மறைவு குறித்துப் பலவிதமான ஊகங்கள் இன்றுவரை உலவினாலும் என்ன நடந்தது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அமெலியா மறைந்துவிட்டார் என்கிற செய்தியை அதிகாரபூர்வமாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டது.

விமானம் ஓட்டுவதில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் என்றாலும் அமெலியாவின் விடாமுயற்சியும் பெண்களால் எதையும் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையும் ஆண்களுக்குச் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற உறுதிப்பாடும் இன்றும் பல பெண்களை வழிநடத்துகிறது.

படங்கள்: விக்கிபீடியா

படைப்பாளர்:

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் என இரு மொழி எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். சென்னையில் வசிக்கிறார். ‘சந்தமாமா’ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான குழந்தைகள் புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI), துளிர் – குழந்தைப் பாலியல் வன்முறைத் தடுப்பு (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.