அமெரிக்காவில் அட்சிசன் என்ற இடத்தில் 1897-ம் ஆண்டு பிறந்தார் அமெலியா எர்ஹாட். அவரும் அவருடைய தங்கையும் தாத்தா – பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார்கள். பிற குழந்தைகளைப் போலவே அமெலியாவும் பூச்சிகள் பிடிப்பது, மரம் ஏறுவது, நீச்சல் அடிப்பது, விளையாடுவது என்று இயல்பாகக் குழந்தைப் பருவத்தைக் கழித்தார்.

பத்து வயதில் தன் தந்தையுடன் ஒரு கண்காட்சிக்குச் சென்றார் அமெலியா. அப்போதுதான் அவர் கண்களில் ஒரு விமானம் பட்டது. ஆனால், அது அவ்வளவாகக் கவரக்கூடிய நிலையில் இல்லை.

அவருக்குப் பதினாறு வயதானபோது செய்தித்தாள்கள், பத்திரிகைகளில் வந்த பெண் சாதனையாளர்கள் பற்றிய செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், சட்டம், இயந்திரப் பொறியியல் போன்ற ஆண்கள் கோலோச்சும் துறைகளில் பெண்கள் காலடி எடுத்து வைத்த செய்திகள் அவரை மிகவும் கவர்ந்தன.

1917-ம் ஆண்டு முதல் உலகப் போரில் பங்கு பெற்ற வீரர்கள் காயமுற்றதைக் கண்டார் அமெலியா. உடனே நர்ஸ் பயிற்சி எடுத்துக்கொண்டு, அவர்களுக்காக மருத்துவம் பார்த்தார்; உணவு தயாரித்துக் கொடுத்தார். அப்போது அமெலியாவுக்கு சைனஸ் பிரச்னை அதிகம் இருந்தது. கடுமையான தலைவலி, சுவாசக்கோளறுகளில் அவதியுற்றார். அந்தக் காலகட்டத்தில் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும்போது நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தார். அதில் இயந்திரவியல் புத்தகங்கள் அதிகம்.

ஒருபக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் வேலை என்று இருந்த அமெலியாவுக்கு சாம் சாப்மென் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. சில மாதங்களில்…

‘அமெலியா, நீ இப்படிக் குழந்தைகளுடன் வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.’

‘சாம், உன் குணத்தை வெளிப்படுத்தியதுக்கு நன்றி. குட்பை.’

அமெலியா மீண்டும் ஒரு கண்காட்சிக்குத் தன் தோழியுடன் சென்றபோது, ஒரு சிவப்பு நிற விமானத்தை அருகில் பார்த்தார். அது ஏதோ ஒரு செய்தியை அவரிடம் சொல்வதாகப் பட்டது. விமானத்தின் மேல் அவருக்கு ஆர்வம் பிறந்தது.

1920-ம் ஆண்டு அமெலியா தன் அப்பாவுடன் ஒரு விமானதளத்துக்குச் சென்றார். அங்கு ஃப்ராங்க் ஹாக்ஸ் என்ற பைலட் அமெலியாவை அழைத்துக்கொண்டு, விமானத்தில் ஒரு சுற்றுச் சுற்றி வந்தார். அந்தப் பயணம்தான் அமெலியாவின் வாழ்க்கையைத் திசை திருப்பியது.

அமெலியா விமானத்தை ஓட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார். அப்போது பைலட் பயிற்சி பெறுவதற்கு ஏராளமான சட்டதிட்டங்கள் இருந்தன. கடினமான உழைப்பு தேவைப்பட்டது. ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு, பழைய விமானம் ஒன்றை வாங்கினார் அமெலியா.

1922-ம் ஆண்டு அந்த விமானத்தில் 14,000 அடிகள் உயரம் பறந்த முதல் பெண் பைலட் என்ற சாதனையைப் படைத்தார் அமெலியா. அதனைத் தொடர்ந்து நிறைய முயற்சிகள். 1927-ம் ஆண்டு 500 மணி நேரம் தனியாளாகப் பறந்து மற்றுமொரு சாதனையை நிகழ்த்தினார். அந்த நேரத்தில் விமானங்களுக்கு விற்பனை பிரதிநிதியாக இருந்தார், செய்தித்தாள்களில் விமானங்களைப் பற்றிக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

1928-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் வாய்ப்பு அமெலியாவைத் தேடி வந்தது. அந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பட்னம். அவர் புத்தகப் பதிப்பாளரும்கூட. விமானத்தில் ஒரு பெண்ணை அனுப்பி, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க வேண்டும். அவருடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுத வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் நோக்கம்.

அமெலியாவுக்கு இந்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தன்னுடைய பறக்கும் ஆர்வத்துக்கு இது சரியான தீனி என்று நினைத்தார். இந்தப் பயணத்தில் அமெலியா ஒரு பயணி மட்டுமே. இருபது மணி நாற்பது நிமிடங்களில் அந்த விமானம் அட்லாண்டிக்கைக் கடந்து தரை இறங்கியது.

‘இந்தப் பயணம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. விமானத்தில் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டையைப் போல்தான் நானும் பயணம் செய்திருக்கிறேன். மற்றபடி இதில் என்னுடைய திறமை எதுவும் வெளிப்படவில்லை’ என்று கூறினார் அமெலியா.

அவர் அப்படிச் சொன்னாலும் அரசாங்கமும் மக்களும் அட்லாண்டிக்கைக் கடந்த முதல் பெண் என்று அமெலியாவைக் கொண்டாடினார்கள். அமெலியா புத்தகம் எழுதினார். நிறைய இடங்களுக்குச் சென்று உரையாற்றினார். குறிப்பாக பெண்கள் இந்தத் துறையில் வருவதற்கு ஊக்கப்படுத்தினார். ஜார்ஜ் பட்னம் அமெலியாவின் புகழை எல்லோரும் அறியும் வண்ணம் பரப்பிக்கொண்டிருந்தார்.

அமெலியாவின் திறமை மேலும் மேலும் மெருகேறிக்கொண்டிருந்தது. அவருடைய தைரியம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. விடாமுயற்சி மலைக்க வைத்தது.

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியாவுக்கு, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அமைப்பில் 99 பெண்கள் பைலட்டாகச் சேருவதற்கு விண்ணப்பித்தார்கள். அமைப்பின் பெயரே ’நைண்ட்டி நைன்ஸ்’ என்று வைத்து, பெண்களுக்கு மனப்பயிற்சி, உடற்பயிற்சி, விமானப் பயிற்சி போன்றவற்றை அளித்தார். பெண்களுக்கான சட்டச்சிக்கலைத் தீர்த்து வைத்தார். அந்த அமைப்பின் முதல் தலைவராகவும் ஆனார் அமெலியா.

ஜார்ஜ் பட்னமும் அமெலியாவும் அதிக நேரம் தங்கள் வேலை விஷயமாகச் செலவிட நேரிட்டது. இருவருக்கும் ஏராளமான விஷயங்களில் ஒற்றுமை இருந்தது. நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. விவாகரத்து பெற்றிருந்த ஜார்ஜ், அமெலியாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால், அமெலியாவுக்குத் திருமணத்தின் மீது விருப்பம் இல்லை. ஆறாவது முறையாக ஜார்ஜ் தன் விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

’அன்பு ஜார்ஜ்,

எனக்குத் திருமணத்தில் ஆர்வம் இல்லை என்பது தாங்கள் அறிந்ததே. திருமணம் என்று ஆன பிறகு அங்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் இருக்காது. என்னுடைய லட்சியத்தை விட்டுக்கொடுக்க நேரிடும். அப்படி ஒரு வாழ்க்கையை வாழ எனக்கு விருப்பம் இல்லை. நான் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. நாம் நல்ல நண்பர்களாகவே இருக்கலாம்.’

‘அன்பு அமெலியா,

என்னைத் திருமணம் செய்துகொள்வதால் உன் திறமை வீணாகும் என்று நினைக்க வேண்டாம். அறிவும் துணிவும் உழைப்பும் கொண்ட ஒரு பெண்ணை நான் திருமணம் என்ற பந்தத்தில் வைத்து சிறைப்பிடித்து வைப்பேனா? திருமணம் ஆன பிறகும் நீ உன் விருப்பம் போல் செயல்படலாம். உன்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் நான் ஆதரவாக இருப்பேன். எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் உன் லட்சியத்தில் குறுக்கிட மாட்டேன். நம் திருமணத்தால் நீ இன்னும் பெரிய உயரத்துக்குச் செல்லப் போகிறாய் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். என்ன சொல்கிறாய் அமெலியா?’

பன்னிரண்டு வயது மூத்தவரான ஜார்ஜைத் திருமணம் செய்துகொள்வதில் அமெலியாவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. ஆனால், அமெலியா மகிழ்ச்சியோடு திருமணத்துக்குச் சம்மதித்தார்.

தேவாலயத்தில் திருமண உறுதி ஏற்பின்போது,

‘அமெலியாவாகிய நான் என் கணவர் ஜார்ஜுக்கு அன்புடையவளாகவும் காதலுடையவளாகவும் அடங்கி நடப்பவளாகவும் இருப்பேன் என்று உறுதி ஏற்கிறேன்…’

கணவரிடம் அன்பாகவும் காதலாகவும் இருப்பேன் என்று உறுதி ஏற்கிறேன். ஆனால், அடங்கி நடப்பேன் என்று சொல்ல மாட்டேன்…’

‘என்ன சொல்கிறாய் அமெலியா?’

‘அவள் விருப்பப்படியே உறுதி ஏற்கட்டும்’ என்று சிரித்தார் ஜார்ஜ்.

**

ஜார்ஜ் பட்னம் அமெலியா

வாழ்க்கை சுவாரசியமாகச் சென்றது. 1932-ம் ஆண்டு. ஜார்ஜும் அமெலியாவும் பேசிக்கொண்டிருந்தபோது அந்த யோசனை வந்தது. அமெலியா தனியாக அட்லாண்டிக்கைக் கடக்க விருப்பம் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஜார்ஜ்.

‘நீ வெற்றியுடன் திரும்பும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்’ என்று ஜார்ஜ் வழியனுப்பி வைத்தார். அமெலியா தனியாக விமானத்தை ஓட்டிச் சென்றார்.

வழியில் மோசமான வானிலை காரணமாக எங்கும் மேகங்கள் மறைத்திருந்தன.

அப்போதுகூட, ‘இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைக்கப் போகும் வெற்றி என்னைச் சார்ந்தது மட்டுமில்லை. ஒட்டு மொத்த பெண்களுக்கும் உத்வேகமூட்டக்கூடியது’ என்று நினைத்தார் அமெலியா.

எரிபொருள் மிகக்குறைவாக இருந்தது. ஆனாலும் பதற்றம் அடையவில்லை. மெதுவாக ஒரு சமவெளிப் பகுதியில் விமானத்தை இறக்கினார். அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரிடம் விசாரித்தபோதுதான் அது அயர்லாந்தின் ஒரு பகுதி என்று தெரியவந்தது.

இந்தப் பயணத்தின் மூலம் அமெலியா இரண்டு சாதனைகளைச் செய்திருந்தார். ஒன்று, தனியாக ஒரு பெண் அட்லாண்டிக்கைக் கடந்திருப்பது, இன்னொன்று எங்கும் தரையிறங்காமல் பயணம் செய்திருப்பது.

அமெலியாவின் சாதனையைக் கொண்டாடினார் ஜார்ஜ். இருவரும் லண்டனில் சில காலங்கள் தங்கியிருந்தனர். திரும்பி வந்தவர்களுக்கு நியு யார்க்கில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேஷனல் ஜியாகிரபிக் சொஸைட்டி கொடுத்த ஸ்பெஷல் கோல்ட் மெடலை அமெலியாவுக்கு வழங்கினார் அமெரிக்க அதிபர். அந்த ஆண்டின் மிகச்சிறந்த பெண்ணாக அமெலியா கெளரவிக்கப்பட்டார்.

சாதனை மூலம் கிடைத்த புகழைக் கொண்டு, பெண்களுக்கான விஷயங்களில் அக்கறை செலுத்தினார். 1935-ம் ஆண்டு பர்டியூ பல்கலைக்கழகத்தில் கெஸ்ட் லெக்சரராக, வான்வழிப் பயணத் துறையில் பணியாற்றினார். தேசியப் பெண்கள் கட்சியின் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.

1937-ம் ஆண்டுக்குள் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி ஒப்பற்ற பெண்ணாக வலம் வந்தார் அமெலியா. அப்போது உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஆக்கிரமித்திருந்தது.

அமெலியாவுடன் ஃப்ரெட் நூனன் என்பவரும் சேர்ந்து உலகத்தைச் சுற்றி வர வேண்டும் என்று முடிவானது. அரசாங்கமும் மக்களும் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தனர். விமானம் கிளம்பும் நேரத்தில் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சிறிது நாள்கள் பயணம் தள்ளிப் போனது.

மீண்டும் விமானம் தயார்.

’ஜார்ஜ், நான் கிளம்புகிறேன். தரையிறங்கும் இடங்களில் உங்களுக்குக் கடிதங்களை அனுப்பி வைக்கிறேன்… நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’

‘இதே போல் நீ பத்திரமாகத் திரும்பி வரவேண்டும் அமெலியா…’

’என் விருப்பமும் அதுதான். உங்களைப் பார்க்க கண்டிப்பாகத் திரும்பி வருவேன் ஜார்ஜ்…’

ஜார்ஜ் விமானம் பறந்த திசையை நோக்கிப் பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.

அமெலியாவுக்கு இந்தப் பயணம் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது. பல நாடுகள். பலவிதமான மக்கள். தரையிறங்கும் இடங்களில் தவறாமல் ஜார்ஜுக்கு கடிதங்களை அனுப்பிக்கொண்டிருந்தார்.

மியாமி, வெனிசூலா, பிரேசில், ஆப்பிரிக்கா, இந்தியா, பர்மா, பாங்காக், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, லே, நியு கினியா என்று 22,000 மைல்களைக் கடந்தார் அமெலியா. இன்னும் 7,000 மைல்கள் கடக்க வேண்டியிருந்தது. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஹெளலாந்து தீவில் இறங்கி எரிபொருள் நிரப்ப வேண்டும்.

வானிலை மிகவும் மோசமாக இருந்தது. ரேடியோ சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை. அமெலியாவுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நேரம் கடந்தது. அமெலியாவிடம் இருந்து வந்த சமிக்ஞைகள் குறைந்துகொண்டே வந்தன. ஒருகட்டத்தில் அதுவும் நின்றுபோனது. அமெலியாவும் நூனனும் மறைந்து போனார்கள்.

அமெரிக்க அரசாங்கம் பல மில்லியன் டாலர்களைச் செலவு செய்து வான் வழியாகவும் கடல் வழியாகவும் தேடும் பணியை மேற்கொண்டது. ஜார்ஜும் இரண்டு ஆண்டுகள் தன் சக்திக்கு மீறி அமெலியாவைத் தேடிக்கொண்டிருந்தார். அமெலியா புரியாத புதிராகவே இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெலியா சென்ற விமானத்தின் பாகங்கள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

அமெலியா ஜார்ஜுக்கு எழுதிய கடைசிப் பயணக் கடிதங்கள் புத்தகமாக வந்துள்ளது. ஜார்ஜும் அமெலியாவின் தங்கையும் அமெலியாவைப் பற்றி புத்தகங்களை எழுதிருக்கிறார்கள். அமெலியாவைப் பற்றி திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன.

வாழ்க்கை முழுவதும் செய்ய வேண்டிய சாதனைகளை 39 வயதுக்குள் செய்து முடித்துவிட்டார் அமெலியா. அவர் பெறாத விருதுகளே இல்லை. இன்றுவரை அவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. திருமண வாழ்க்கை ஆறே ஆண்டுகளில் முடிந்துபோனாலும் அமெலியா – ஜார்ஜ் முழுமையான, அர்த்தமுள்ள, காதல் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.