புதிய தொடர்

நானாக நான் – 1

‘நானாக நான் இருந்துட்டு போறேனே’ என்கிற வாக்கியத்தை பல இடங்களில் நாம் கடந்து வந்திருப்போம். ‘நானாக நான் இல்லை தாயே’ என்ற பாடல் நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிந்தித்துப் பார்த்தால் நாம் நாமாக இருப்பது என்பது எவ்வளவு முக்கியமானது என்று தெரிகிறது. 

ஒன்றிலிருந்து வேறொன்றாக பரிணமிப்பதும் சமூக சூழல்களுக்காக பிற காரணங்களுக்காக நாம் நம்மை வேறு வழியின்றி மாற்றிக் கொள்வதும் ஒன்றல்ல. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு. ஆண் தன் இயல்பு தன்மையினின்று பெரும்பாலும் மாறுவதே இல்லை. பெண்ணோ தன் இயல்பை மாற்றி ஆக வேண்டிய சூழலுக்கே பெரும்பாலும் தள்ளப்படுகிறாள். 

பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் மூத்த சகோதரிக்கு திருமணம் ஆனது. மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆன பிறகு, என் அம்மா கொலுசு போடுவதை நிறுத்தி விட்டார். கண் மை இட்டுக் கொள்வதையும், ஜடை போட்டுக் கொள்வதைம்கூட தவிர்த்து விட்டார். அதன் பிறகு எப்போதும் தலை முடியை கொண்டை போட்டுக் கொள்வார். காரணம் புரியாமல் நான் என் அம்மாவிடம் கேட்டபோது, ‘மருமகன் எடுத்துட்டு இதெல்லாம் செய்யக்கூடாது. இதெல்லாம் உனக்குப் புரியாது’, என்கிற காரணம் மட்டுமே வந்தது. இந்த சமூகத்தில் ஒருவர் தன்னை எப்படிக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதைக்கூட இச்சமூகத்தில் எழுதா விதிக்கு ஏற்ப சில பெண்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 

Photo by Anna Shvets from Pexels

நாம் நாமாக இருப்பதால் பல நேரங்களில் இச்சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறோம் அல்லது அவப்பெயரைச் சுமக்க நேரிடுகிறது. நான் நானாக இருக்கிறேன் என்று கூறும் அல்லது வாழும் பெண்களை அடம் பிடித்த அல்லது திமிர் பிடித்த பெண்களாகவே பார்ப்பது வருத்தமளிக்கிறது. 

நானாக நான் எனும் தலைப்பின் கீழ் ஏன் பெண்களைப் பற்றி மட்டும் பேச வேண்டும்? ஆண்களுக்கு பெரிதாக பிரச்சினைகளே இல்லையா, என்றால் அதற்கும் நம் சமூகக் கட்டமைப்பையே நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். ஆண் தன்னை அப்படி வேறொன்றாக தகவமைத்துக் கொள்கிறானா என்கிற கேள்வி மிக முக்கியமானது. பெண்ணின் மீதான அடக்குமுறை ‘கட்டுப்பாடு’ என்ற மெல்லிய வார்த்தைக்குள் மௌனமாக சுருண்டு கிடக்கிறது. 

பதின்ம வயதில் அதுவரை ஓடியாடிக் கொண்டிருந்த பெண்பிள்ளை வெறும் உடல் மாற்றமான பூப்பெய்தல் நடந்தவுடன் அடக்க ஒடுக்கமாக மாறி விட வேண்டும் என்கிற பேச்சும், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு வந்தவுடன், ‘இதுவரை எப்படி இருந்தியோ இனிமே இங்க இருக்கவங்கள அனுசரிச்சு கவனமா மரியாதையா நடந்துக்கணும்’, என்கிற வார்த்தைகளையும் சொல்லாத வீடுகளே கிடையாது. 

கேரளத்தில் சமீபத்தில் நடந்த விஸ்மயா கொலை வழக்கில்கூட அந்தப் பெண் கணவனால் துன்புறுத்தப்படுகிறாள் என்று தெரிந்தும் கூட ‘அனுசரித்துப் போ’ என்ற வார்த்தையைத்தானே அந்தக் குடும்பமும் அப்பெண்ணிடம் முன்வைத்தது. இங்கு பெண்ணின் கட்டுப்பாடு என்பது அடக்குமுறையின் வேறொரு வடிவமன்றி வேறேது?

நானாக நான் இருத்தல் என்பது அடங்காப்பிடாரித்தனமல்ல. இயல்பாக இருத்தல் அல்லது உண்மையாக இருத்தல் என்பதே பொருள்.

‘அடங்கமறு’ என்று கூறிய அண்ணலையும் இவ்விடத்தில் நினைவு கூறாமல் இருக்க முடியாது. அடிப்படை வாதங்களை உடைக்கும் போது, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும்போது, அறிவியலை நோக்கி நகரும்போது, உன்னதங்கள் என்ற பெயரில் உள்ள உடைசல்களை சரியாகப் புரிந்து கொள்ளும்போது, பால் பேதமின்றி எந்த ஒரு செயலையும் சிந்திக்கும் போது, நாம் நாமாகவே இருக்கவியலும் என்பது என் கருத்து. 

Photo by Karthik Sajjan on Unsplash

நன்றாக நடனமாடத் தெரிந்த, நடன அரங்கேற்றம் செய்த பெண்கள் பலரும் திருமணத்திற்குப் பிறகு மேடைகளில் நடனமாடுவது அவர்கள் குடும்பத்தாரால் தடை செய்யப்படுகிறது. ‘பாட்டுனா பரவாயில்லங்க… மேடையில் ஏறி ஆடுறதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு நல்லவா இருக்கு?’, இப்படி எவ்வளவு வார்த்தைகளை அந்தப் பெண்கள் கடந்து வந்திருப்பார்கள்?

ஒரு பழைய பாடல் உண்டு. ‘வளர்ந்த கலை மறந்து விட்டாள்’, என்று கணவன் கேட்க, ‘குடும்பக் கலை போதும்’, என்று மனைவி சொல்வாள். ஆக நாம் நாமாக இல்லாத இடங்களாக இந்த சமூக குடும்ப கட்டமைப்புகளுக்கு ஈடுகொடுக்க, நம் கலைகளையும் திறமைகளையும் கூட ஒதுக்கி வைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் பெண்கள் ஆளாகிறோம். 

திருமணத்திற்கு பிறகு தன் துறையில் ஜெயித்த பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்கிற பட்டியலை நீங்கள் எழுதத் தொடங்கினால், வெறும் எடுத்துக்காட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு நாம் கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

நான் தியாகியாக இருக்கும்போது, என் சொந்த நலன்களை பொருட்படுத்தாது என் குடும்பத்திற்காக மட்டுமே நான் வாழும் போது, பொது நியதிகளை கேள்வி கேட்காத போது, மதம் சார்ந்த மூட பழக்கங்களை விமர்சிக்காத போது, நான் நானல்லாமல் இருக்கும்போது இப்பொது சமூகத்திற்கு நல்லவளாகி விடுகிறேன் என்பது எவ்வளவு அபத்தமானது. 

‘நானாக நான்’, இன்னும் நிறைய விஷயங்களைப் பேசத் தூண்டுகிறது. ஆண் பெண் அரசியல், பெண்ணின் வாழ்க்கை, அவள் பாடுகள் என நீளவிருக்கும் கட்டுரைத் தொடர் மூலம் தொடர்ந்து உரையாடுவோம். உரையாடும் சமூகமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர இயலும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. கதைப்போமா??

தொடரும்…

படைப்பு:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.