“என்ன டிபன்?”

“தோசை, தக்காளி சட்னி”

“அங்க என்ன?”

“இங்கேயும் அதே தோசை தான்”

இரு குடும்பத் தலைவிகள் இரவு ஏழு மணிக்கு செல்போனில் பேசும்போது இந்த உரையாடல் நிச்சயம் இருக்கும்.

இந்த அதே தோசைக்கும் அதே இட்லிக்கும் இடையேயான சலிப்புக்கு இடையே பேசப்படாமல்போன அரிசி உளுந்து ஊறவைத்தல், அதனைக் கழுவுதல், அரைத்தல், கரைத்தல், பாத்திரங்களில் ஊற்றி வைத்தல், அரைத்த இயந்திரத்தைக் கழுவி வைத்தல் என சுமார் மூன்று மணி நேர உழைப்பு உள்ளதை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.

வாசிப்பின் தொடக்க காலத்தில் பலரது ஆதர்ஸமாக இருக்கிற முக்கிய எழுத்தாளர் ஒருவரது இட்லி மாவு குறித்த பதிவு ஆண்கள் பலரது எண்ண ஓட்டமாகவே புரிந்துகொள்ளவேண்டி உள்ளது.

சிறுபிள்ளைவரை இட்லி என்றாலே ‘இட்லிதானே’ என எண்ணியது மாறி, இட்லிக்கான பதமான மாவு தயாரிப்புக்குப் பின்னால் இருக்கிற உழைப்பும் களைப்பும் இட்லியின் மதிப்பையே கூட்டியிருக்கிறது.

https://solpudhithu.wordpress.com/2016/12/04/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/u2-2/

சூழல் அல்லது அலுவல் காரணமாக வெளியே இரண்டு நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டாலே, அடுத்து மனம் தேடுகிற முதல் வீட்டு உணவு இட்லி தான்.

“இட்லி போதும்” என எவ்வளவு எளிதாகச் சொல்லிவிடுகிறோம்? நம்மை எளிமையானவராகக் காட்டிக்கொள்ள நினைக்கிற நேரங்களில் நாம் ஆர்டர் செய்கிற உணவு இட்லி தான்.

ஆனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், வேலைக்கும் சென்றுவிட்டு வீட்டையும் கவனிக்க படும் பாடுகளில் முதன்மையானது இந்த மாவு அரைத்தல்.

வார இறுதியின் விடுமுறை நாளே இட்லிக்கு மாவு அரைக்கத்தான் என்பதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கிரைண்டரின் ரீங்காரம் கேட்காத வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அலுப்புக்கும் சோர்வுக்கும் இடையே மாவு அரைத்துக் கரைத்து முடிக்கிறபோது ‘அப்பாடா! அடுத்த மூன்று நாள்களுக்கு மாவு பற்றிய கவலை இல்லை’ என்று பெருமிதமும் நிம்மதியும் கொள்கிற அளவுக்கு தமிழ்க் குடும்பங்களின் வீடுகளில் மாவு அரைத்தல் பெரும் கடமையாகிவிட்டது.

இவ்வளவு மெனக்கெடலோடு வீட்டில் அரைக்கிற மாவை நாமே தாம் “அதே இட்லி”, “அதே தோசை” எனச் சலிப்போடும் சொல்லி, உழைப்பை மழுங்கடித்து விடுகிறோம்.

ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்தலைவியின் முகத்தை சற்றே கவனித்துப் பாருங்களேன். வழக்கத்தினும் குழப்பமாகவும் கூடுதல் இறுக்கமாகவும் இருக்கும்.

இட்லிக்கு அரிசி இருக்கிறதா, உளுந்து இருக்கிறதா, மளிகை சாமான்கள் ஏதும் குறைந்தால் வாங்கி வைக்க வேண்டுமே, வாஷிங் மெஷினில் துணியைப் போட வேண்டுமே, கறியோ மீனோ சமைக்க வேண்டுமே, மாவு அரைக்கவும் இடையே ஒரு கூடுதல் டீயும் கூடுதல் ஸ்நாக்ஸும் செய்ய வேண்டுமே என மனம் முழுக்க பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க அந்த முகம் குழம்பாமல் எப்படி இருக்கும்?

உழைப்பின் அருமையை உணர்கிற குடும்ப உறுப்பினர்களை உருவாக்குவதே, இன்றைய காலத்தின் தேவை.

“எங்க அம்மா செஞ்சா இட்லி பஞ்சு மாதிரி இருக்கும்”, “மல்லிப்பூ போல இருக்கும்” போன்ற சிலாகிப்புகளால் நாம் அவர்களை உண்மையிலேயே ஏமாற்றி உழைப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் உணரத்தான் வேண்டும்.

சிலர் இன்னும் ஒருபடி மேலை போய், “இட்லிக்கு அம்மியில அரைக்கிற மிளகாய்ச் சட்னிபோல வருமா?” என்று பேசிப்பேசி இன்னும் ஊர்ப்பக்கங்களில் அம்மியோடும் மிளகாயோடும் போராடும் அம்மாக்கள் இருக்கிறார்கள்.

இப்படித் தொடர்ந்து அரைத்தலிலும் கரைத்தலிலும் ஏற்பட்ட சலிப்பின் காரணமோ என்னவோ, பெண்களுக்கு உப்புமா மீதான விருப்பம்கூட இட்லி தோசைகளில் இருப்பதில்லை என்பதே உண்மை.

மூன்று வயதில் ஆண்பிள்ளைகளை அனுப்புகிற அதே பள்ளிக்குத் தானே பெண்பிள்ளைகளையும் அனுப்புகிறோம்? அவன் படித்து வளர்கிற அதே வீட்டுப்பாடம், தேர்வைத் தானே அவளும் செய்கிறாள்?

இதில் கூடுதலாக அரிசி உளுந்து அளவறிந்து ஊறவைக்கவும், மாவு அரைக்கவும் பெண்குழந்தைகள் மட்டும் ஏன் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது? ஒருவேளை கற்றுக்கொள்ளாமலே கல்யாணம் வரை வளர்ந்துவிட்டாலும், கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் பெண்ணுக்கு மட்டுமே ஏன் ஏற்படுகிறது? மாவு பாக்கெட்டை கடையில் வாங்கினால் வயிற்றுக்குக் கெடுதல், சுகாதாரம் குறைவு போன்றவை எல்லாம் உண்மையெனில் அந்தச் சுமையைப் பெண் மட்டும் ஏன் சுமக்க வேண்டும்?

வார இறுதி நாளில் பெண் தனது அலுவல் வேலையை வீட்டில் செய்வதை ஆண்களால் ஏன் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை? ‘நீ என்னதான் வெளியே சென்று பொருள் ஈட்டினாலும் நீ வீட்டுக்கு உரியவள். இது உன் வேலை’ எனப் பெண் வேலையாக ஒதுக்கும் அல்லது கண்டும்காணாது போகிற மனப்பான்மை ஆண் மூளைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஊறிப்போய்க் கிடக்கிறது. சமத்துவம் பேசுகிற ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இவற்றிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டு உழைக்கும் குடும்பத்தைச் சார்ந்த ஆண்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பெண்ணியம் எனும் சொல் தெரியாது. ஆனால் அந்த ஆண்கள் வீட்டில் சமைப்பார்கள்; வீட்டைப் பராமரிப்பார்கள். அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்!

ஒரு பெண் அம்மாவாகவும் மனைவியாகவும் இருக்கிற காரணத்துக்காகவே அவள் இத்தனைச் சுமைகளைச் சுமக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயமில்லை என்பதை வளரும் இளம் தலைமுறை ஆண்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லையெனில் குடும்ப அமைப்புகளில் ஏற்படுகிற இந்த உழைப்புச் சுரண்டலைக் கண்கூடாகப் பார்க்கிற வளரிளம் பெண்களுக்கு, குடும்ப அமைப்பின் மீதான நம்பிக்கையும் பிடிப்பும் குறைந்து, நாளடைவில் குடும்ப அமைப்பு சிதைய இந்த மாபெரும் உழைப்புச் சுரண்டலே அடித்தளம் அமைத்துவிடும். பிறகு ‘அய்யோ போச்சு; அம்மா போச்சு’ என்பதில் பயனில்லை.

இன்று ஆண்களும் பெண்களும் ஒரேபோலவே உழைக்கிறார்கள் எனும்போது, ஒரேபோலவே களைப்பும் ஏற்படும் என்பதையும் நாம் உணரத்தான் வேண்டும்.

வீட்டு வேலை என்பது வீட்டில் உள்ள அனைவரது பங்கீட்டிலும் செய்யப்பட வேண்டியது. எந்த ஒரு வீட்டிலும் வார இறுதிக்கான கேளிக்கையை மாவு அரைப்பதைக் காரணம் சொல்லி, ஆண்கள் கிரிக்கெட் விளையாடப் போகாமல் இருப்பதில்லை. ஒரு வாசிப்புக் கூட்டத்துக்குப் போக விரும்புகிற பெண், அடுத்த வேளை உணவுக்கான ஏற்பாட்டைச் செய்யாமல் போக முடிவதில்லை என்பது கசப்பான உண்மை.

குடும்பப் பெண் என்கிற சொல்லாடலைப் பொதுமைப்படுத்தி குடும்ப ஆண் என்றும் மனதுக்குள்ளேனும் சொல்லிப் பாருங்கள். குடும்ப ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்தால் மட்டுமே, குடும்பத்தில் உறவுகள் மேம்படும். அப்போது இட்லியும் இனிக்கும். தோசையும் சுவைக்கும்!

முகப்புப் படம் நன்றி: தோழர் வத்திராயிருப்பு கௌதமன்

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.