குடும்பம் என்கிற கட்டமைப்பு, அதிகாரத்திற்கு அடிபணியும் பண்பை வளர்க்கிறது. திருமணம் என்பது இரு நபர்களின் கூட்டுறவாக காண்பிக்கப்பட்ட போதிலும், நடைமுறையில் ஆண் மட்டும் குடும்பத்தில் தலைவனாக அடையாளப்படுத்தப்படுகிறான்.

அவனின் பெண் துணையும் குழந்தைகளும் பொருளாதார ரீதியாக அவனை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். பெண்கள் சம்பாதித்தாலும்கூட அவர்களின் தொழில்கள், மேலதிக வருமானம் தரக்கூடியவையாக மட்டும் பார்க்கப்படுகின்றன. பெண்களின் பிரதான தொழில் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பதே என்று இன்றளவிலும் சமூகத்தில் பரவலாக சொல்லப்படும் கருத்தியலாக இருக்கிறது.

1973 இல் பெண்ணியமும் சமவுடைமையும் என்ற கட்டுரைத் தொகுப்பில் டயான் பீலி (Dianne Feely), அரசாங்க உதவித்தொகைகளை ( State benefits) எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களை, சமூகம் ‘ஒட்டுண்ணிகள்’ எனவும்; மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சும் சோம்பேறிகளாக தூற்றப்படுகின்றனர் எனவும் குறிப்பிடுகிறார்.

https://againstthecurrent.org/atc217/the-movement-the-plants-the-party/

சமூகமானது, சிறுவயது முதலே தன் சமூக அங்கத்தவர்களை பராமரிக்கும் பொறுப்பை தன்னகத்தே கொண்டிருக்குமாயின், தனிக்குடும்பங்கள் மீது தற்போது உள்ள பொருளாதாரச் சுமை இருக்காது. குழந்தைப்பருவம் முதல் மனிதர்களை பராமரிக்கும் பொறுப்பை சமூகம் ஏற்றுக் கொள்ளுமாயின் சமூக மற்றும் வர்க்க வேறுபாடுகள் நம் சமூகத்தில் நிலவியது. குடும்பம் என்ற அலகை கடுமையாக விமர்சித்த டயன், இளைஞர்களும் பெற்றோரும் குடும்பம் என்ற கட்டமைப்பால்  பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார்.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முழுமையாக ஏற்றுக் கொள்வது தாய்மார்களே. அன்றைய காலகட்டத்திலிருந்து பெருமளவு நாம் மாறி விடவில்லை. இன்றும் கூட குழந்தைகள் நோய்வாய்ப்படும் போது, தாய்மார்களே அருகில் இருந்து கவனித்துக் கொள்கின்றனர். வேலைக்கு போகும் பெண்கள்கூட விடுப்பு எடுத்துக் கொண்டோ அல்லது பணிகளை சீக்கிரமாக முடித்துக் கொண்டோ குழந்தைகளை கவனித்துக் கொள்கின்றனர். ஆண்கள் ஆங்காங்கே குழந்தை பராமரிப்பு வேலைகளை செய்தாலும், பெரும்பாலும் பெண்களே குழந்தைகள் உடல்நலம் குன்றும்போது முதன்மையாக செயற்படுகின்றனர். குடும்பம் என்கிற கட்டமைப்பு வழக்கொழிந்து வேறு சமூக அமைப்புக்கள் தோன்றும் பட்சத்தில், பொருளாதார மற்றும் சட்ட ரீதியான பிணைப்புகள் அழிந்து விடும். ஆனால் மக்கள் தொடர்ந்து கூட்டாகவோ இணையர்களாகவோ சேர்ந்து வாழ்வார்கள். ஆனால் அவர்கள் வெறுமனே திருமண சான்றிதழுக்காகவும் பொருளாதாரத் தேவைகளுக்காகவும் வாழப்போவதில்லை.

டயன், 1917 இல் ரஷ்யப் புரட்சியின் லெனின் ஆட்சியில் பெண்களுக்கு கிடைத்த அரசியல் மற்றும் சட்ட உரிமைகள் பற்றி விதந்துரைத்துள்ளார். இனி ரஷ்ய புரட்சி பற்றி சற்றுப் பார்ப்போம். பிரெஞ்சுப் புரட்சியும் அமெரிக்க விடுதலைப் போரும்  தொழிலாளி வர்க்க சித்தாந்தமான மார்க்சியத்தின் தோற்றமும் ஒரு பொற்காலத்தை உருவாக்கியது என்றே கூறலாம். ஜெர்மன் தத்துவம், பிரெஞ்சு சோஷலிசம், பிரிட்டிஷ் பொருளாதாரம் என்கிற மூன்று உள்ளடக்கக் கூறுகளும் கொண்ட மார்க்சியம், தொழிலாளர் வர்க்க உணர்வை ஊட்டியது. 1848ல் மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதி வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கை ஒரு மைல்கல். இவை எல்லாம் உருவாக்கிய பின்புலத்தில்தான் ரஷ்யப் புரட்சி நடந்தது.

1917 பிப்ரவரியில் நிகழ்ந்த ரஷ்யப்  புரட்சியில் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த பெண்கள் முன்னணியில் நின்று போராடியது, அரசியலில் பெண்கள் பங்கேற்பு பற்றிய மாற்று பார்வைக்கும் சிந்தனைக்கும் வழிவகுத்தது.

நகரங்கள், கிராமங்களில் இருந்தும் படித்த பெண்களும், விவசாயப் பெண்களும், பெண் தொழிலாளிகளும் தெருவிலிறங்கி கொடுங்கோலன் ஜார் மன்னனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரப்   போராடினர். கிராமங்களில் பெண்கள், பல நூற்றாண்டுகளாக அக்கிரமம் செய்த நிலப்பிரபுக்களை ஓட ஓட விரட்டியடித்தனர். பெண்கள் செங்கொடியையும்  கம்யூனிசத்தையும் தூக்கிப் பிடித்தனர் என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. புரட்சிக்குப் பின்னர் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதையும் சோவியத் ஒன்றியம் நிரூபித்தது.

லெனின், மக்களிடம் தகித்துக் கொண்டிருந்த புரட்சிகர உணர்வுகளை சரியாக அடையாளம் கண்டு, பக்குவப்படுத்தி, முறைப்படுத்தி,  தொழிலாளி வர்க்கப் புரட்சியாய், மார்க்சிய வழியில் முன்னெடுத்தார். ரஷ்யாவில் உருவான சோஷியல் ஜனநாயக கட்சியில், கொள்கை ரீதியில் ஏற்பட்ட பிளவு, மென்செவிக் (சிறுபான்மை), போல்செவிக் (பெரும்பான்மை) எனும் இருபிரிவினரை ஏற்படுத்தியது. போல்செவிக் கட்சியினர் மார்க்ஸிய கோட்பாடுகளின் அடிப்படையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை தீவிரமாக எதிர்த்தனர். விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு, வறிய விவசாயிகளும், தொழிலாளர்களும் சேர்ந்து அமைக்கும் பொதுமக்கள் குடியரசே அவசியம் எனக் கூறி அவர்களைத் தம் வசப்படுத்தினர். அரசு சிதறும் பட்சத்தில் அதனைக் கைப்பற்றும் வகையில் சூழ்நிலைகள் அமையப்பெற்றன. இதனால் ரஷ்யாவின் சூழ்நிலைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தொழிலாளர் அரசாங்கம் ஒன்றினை அவர்களால் உருவாக்க முடிந்தது. புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஓர் பேரியக்கமாக போல்செவிக் கட்சியை மாற்றியமைத்தவர் அதன் தலைவர் லெனின் ஆவார். இது ரஷ்ய கம்யூனிச கட்சியாக பெயர் மாற்றம் பெறுகிறது.

ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியால் குறுகிய காலத்தில் ரஷ்யாவில் எழுத்தறிவின்மையையும் வறுமையையும் ஒழிக்க முடிந்தது. ரஷ்யாவின் பொருளாதாரமும் வேளாண்மையும் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றன. வாக்குரிமை தொடங்கி ஊதியம் வரை, பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன. தொழிற்சாலைகளும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. நிலப் பிரபுக்கள், மத நிறுவனங்கள் போன்றோரின் நிலங்களைக் கைப்பற்றி, விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், ‘அனைத்து நிலங்களும் அரசுக்கே சொந்தம்’ எனும் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ‘தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கமாக லெனின் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்படுகிறது’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்ததாக 8 மணி நேர வேலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அடுத்த ஓராண்டு காலத்துக்குள் பெண்கள் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக வரலாற்றுப் புகழ்பெற்ற அரசமைப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் ரஷ்யாவில் நிறைவேற்றப்பட்டன. 18 வயது நிரம்பிய, வெளியில் வேலை செய்து அல்லது தனது வீட்டு வேலைகளைச் செய்து உழைத்து வாழ்கிற ஆண், பெண் அனைவருக்கும் வாக்குரிமையும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமையும் அளிக்கப்பட்டது.

ஆண் – பெண் வேறுபாடு இல்லாமல் சம வேலைக்குச் சம ஊதியம், வேலை பெறும் உரிமை உள்ளிட்ட ஆண் – பெண் சமத்துவம் உறுதி செய்யப்பட்டது. கருவுற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப் பேறுக்கு முன்னர் இரு மாதமும், பின் இரு மாதமும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் தனிச் சிறப்பான பராமரிப்புகள், வேலையின்போதும் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான இடைவேளைகள், பணியாற்றுமிடத்தில் ஓய்வறைகள், பண உதவிகள் உள்ளிட்ட உரிமைகள் சட்டமாக்கப்பட்டன.

திருமணம் – விவாகரத்து போன்றவற்றிலிருந்து மதம் விலக்கப்பட்டது. இருதரப்பும் விவாகரத்துக்கு உடன்பாட்டால், உடனடியாக விவாகரத்து வழங்கப்பட்டது. ஒருவர் மட்டும் விவாகரத்து கோரி நின்றால், இரண்டு மாதங்கள் காத்திருப்பு காலமாக இருந்தது. திருமணமும் விவாகரத்தும் தனிப்பட்ட விவகாரங்களாக மாறின.

கருக்கலைப்பு தண்டனைக்கு உரிய குற்றம் என்கிற முந்தைய சட்டம் களையப்பட்டு, கருக்கலைப்பு சட்டபூர்வமானது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான வசதிகள் தொடங்கப்பட்டன.

மேலும் ‘யாருக்கும் காயம் ஏற்படுத்தாமலும், யாருடைய நலன்களையும் ஆக்கிரமிக்காமலும் உள்ள உடலுறவு விஷயத்தில் அரசோ, சமுதாயமோ தலையிடக் கூடாது’ என்பது அரசின் கொள்கையானது.

லெனின் அரசு, சலவை நிலையங்களையும் பொதுச் சமையலறைகளும் (Communal Laundries and Kitchens) நிறுவியது. அத்துடன் குழந்தை காப்பகங்கள் அமைத்துக் கொள்வது முதன்மைப் பணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. டயனின், ‘பெண்களும் ரஷ்ய புரட்சியும்’ என்கிற மற்றுமொரு கட்டுரையில், 1920களில் இது சம்பந்தமாக மேற் கொள்ளபட்ட உணவு தயாரிப்பு பற்றிய ஆய்வொன்றைக் குறிப்பிடுகிறார். ரஷ்யாவில் உணவு தயாரிப்புக்கு 36 மில்லியன் மணித்தியாலங்கள் தேவைப்படுகிறது எனக் கூறிய அந்த ஆய்வு, பொது சமையலறைகள் மூலம் பெறப்படும் தொழில்மயமாக்கம், உணவு தயாரிப்புக்கு வெறும் 6 மில்லியன் மணித்தியாலங்களையே எடுத்துக் கொள்கிறது எனக் கூறுகிறது.

1919 இல் மொஸ்கோவில் பெண் தொழிலாளர்கள் காங்கிரஸ் கருத்தரங்கு உரையில், “பெண்கள் முழு உரிமைகளை பெற்றாலும்கூட, வீட்டு வேலை என்பது அவர்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்பதே உண்மை. பெரும்பாலான சமயங்களில் பெண்களின் செய்யும் வீட்டு வேலை என்பது பயனற்றது, கடினமானது, காட்டுமிராண்டித்தனமானது! அது எந்த வகையிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழி செய்யப்போவதில்லை” என லெனின் கூறிய வார்த்தைகள் பிரபல்யமானவை.

பெண்விடுதலை பற்றி லெனின் (Lenin on Women Emancipation) என்கிற நூலில், சோவியத் குடியரசில் பெண் தொழிலாளர்கள் இயக்கத்தின் பணிகள் என்ற தலைப்பில் மேற்கூறிய முழு உரையும் பதிவாகியுள்ளது. 1918 இல் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு உரையில், ‘வெறுமனே சட்டங்களால் மட்டும் பெண் விடுதலையை பெற்று விட முடியாது. நகரங்கள் கடந்து கிராமங்கள் தோறும் அரங்கேறும் மதரீதியான பாரபட்சங்களை, பெண் ஒடுக்குமுறையை, விழிப்புணர்வூட்டும் பிரச்சாரங்களும் கல்வியும் மூலமே களையலாம்’ என துல்லியமாகக் கணித்து கூறினார். பல இடங்களில் லெனின் உரைகளும் பெரியாரின் பெண் விடுதலை எழுத்துகளும் ஒத்துப் போகின்றன என்பது நம் அவதானிப்பு.

முதலாளித்துவமும் பெண்களின் உழைப்பும் என்ற தலைப்பில் 1913 இல் ஆற்றிய லெனினின் உரை புரட்சிகரமானது. பெண்களின் உழைப்புச் சுரண்டலின் வடிவம் மட்டும் மாறுகிறது, ஆனால் சுரண்டல் என்பது இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. அடிமைத்தனம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் எல்லாமே இவ்விடயத்தில் ஒரே மாதிரியான தன்மைகளை கொண்டுள்ளன என்பது லெனின் வாதம்.

“நாம் அதிகாரத்துக்கு வந்த முதல் ஓர் ஆண்டுக்குள் செய்த சாதனையில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, உலகில் பல பத்தாண்டுகளில் எவரும் செய்யவில்லை. இந்தச் சாதனை பற்றிப் பெருமைகொள்ள நமக்கு  உரிமை உள்ளது.பெண்களைத் தாழ்வாக நடத்தும் இழிவான சட்டங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நொறுக்கித் தள்ளிவிட்டோம். ஆனால், கட்டிடம் கட்டுவதற்காக மனையைச் சுத்தப்படுத்தியிருக்கிறோமே தவிர, இன்னும் கட்டிடத்தைக் கட்டிவிடவில்லை என்பதும் நமக்குத் தெளிவாகவே தெரிகிறது!” எனக் கூறிய லெனின், “உண்மையான பெண் விடுதலையிலிருந்தே உண்மையான கம்யூனிஸம் தொடங்குகிறது!” என உரக்கவும் சொன்னார்.

ஒன்பது உரைகளை உள்ளடக்கிய, ‘பெண் விடுதலை பற்றி லெனின்’ என்ற நூல் ( Lenin on Women Emancipation) தமிழில், ‘ஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும்  காதலற்ற முத்தங்களும்’ என்ற பதிப்பில், கிளாரா ஜெட்கினின் கட்டுரைகளையும் கொண்ட தொகுப்பாக வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அரசியல் பேசுவோம்…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.