இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும் அவ்வளவு சுவையாக இருக்கும். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமே விருந்தோம்பலுக்குப் புகழ் பெற்றது. அடுத்தவர் பசியறிந்து, குறிப்பறிந்து உணவு கொடுப்பவர்கள். தேவையறிந்து உதவி செய்பவர்கள்.
இவை இவரின் அம்மாவிடமிருந்து பிள்ளைகள் பெற்ற விழுமியங்கள். ‘பள்ளியில் ஆசிரியைக்கு உடல்நலமில்லை’ என வீட்டில் மகள் போய் சொன்னால், அம்மா மருந்து உணவு கொடுத்து விடுவார்கள். அப்படி எந்த பலனும் எதிர்பார்க்காமல் உணவளிப்பவர். “இரி, சோமா (chommaa) இருக்கியா? சாப்பிடு” என அவர் பிறந்து வளர்ந்த திருக்குறுங்குடி ஊரின் மண்வாசனை மாறாமல் இன்றும் உபசரிப்பவர். அவர்கள் குடும்பத்தில் யார் வீட்டில் ‘சாப்பிடுகிறாயா’ எனக் கேட்டாலும், கூச்சத்தையும் மீறி அனைவரும் சரி என சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் சாப்பாடு அவ்வளவு சுவையாக இருக்கும். நாச்சியார் அதில் ஒருபடி மேல்.
நாச்சியார், என் பள்ளித்தோழி. ஒரு அக்கா; இரு தம்பிகள்; ஒரு தங்கை என அன்பான குடும்பம். நாங்கள் படிக்கும் காலகட்டத்தில் அப்பா கிராம முன்சீப். எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியின் போது கிராம முன்சீப் பதவியை ஒரே நாளில் எடுத்துவிட, அவரது வேலையும் போனது.
கிராம முன்சீப் அதாவது village magistrate என்பது விரிவாக்கம் இவர்களின் வேலை கிராமங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, நிலம் மற்றும் வீட்டுத் தீர்வை விதிப்பு மற்றும் வசூல், பிறப்பு இறப்பு பதிவு, இருப்பிட சான்று போன்றவை வழங்குதல், பவுண்டி பராமரிப்பு வழக்குகளை விசாரித்து தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் அதிகாரம் போன்றவை முன்சீப்புக்கு வழங்கப்பட்டிருந்தது. முன்சீப்புக்கு கீழே மூன்று தலையாரிகள் பணியாற்றினார்கள். வள்ளியூரிலிருந்து காவல்துறையினர் கள்ளிகுளம் வந்தால், கிராம முன்சீப்பிடம் இருக்கும் பதிவேட்டில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். சம்பளம் சொற்பம். இவையெல்லாம் பரம்பரையாக வரும் பதவிகள் என்பதால், கிராம முன்சீப் நடைமுறையை ஒழித்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம பணியாளர்கள் பதவிகளைக் கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர். இவையெல்லாம் இன்றைய தலைமுறை தெரியாத வரலாறு.
நாங்கள் ஒன்பது பத்து படித்த காலகட்டத்தில், மழையில்லா பஞ்சம். விளைச்சலுமில்லை. தோட்டத்தை விட்டு விட்டு, சென்னை போன தோட்டக்காரர்கள், தோட்டத்தை விற்று போனவர்கள், என பலர் தோட்டத்தால் வாழ்விழந்த தருணம். ஊரில் தாண்டவமாடிய வறுமை வீட்டிலும் வந்தது. என்ன வறுமையானாலும் பெண்கல்வி என்பது ஊரின் அடிநாதம். அதன்படி, வறுமை சூழ்ந்தாலும் அனைவரும் படித்தோம். அவ்வாறே நாச்சியார் உள்ளூர் கல்லூரியில் கணிதம் படித்தார். படிக்கும்போது ஒரு தடவை தேர்வுக்கட்டணம் கட்ட இயலாமல், வீட்டில் நின்ற மரத்தை வெட்டியதாகச் சொல்வார். இதுதான் பல வீடுகளில் அன்றைய நிலைமை.
திருமணம், குழந்தைகள் என வாழ்க்கை இனிமையாகக் கடந்து கொண்டிருந்தது. மிக மிக அன்பான கணவர். குடும்பம் ஒரு பொருளைப் பார்த்துவிட்டால் அதை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்; தேவையைப் பூர்த்தி செய்துவிட வேண்டும் என நினைத்தவர். இத்தனைக்கும் அவரும் பெரிய பணக்காரரில்லை. இளமையிலேயே தந்தையை இழந்து, நன்றாகப் படிக்கும் மாணவராக இருந்தாலும் படிப்பைத் தொடர இயலாமல் சிறு வயதிலிருந்தே சிறு சிறு வேலைகள் செய்தவர். திருமணத்திற்குப் பிறகு தான் சிறிய அளவில் இரும்பு பீரோ, கட்டில் போன்றவை செய்து விற்கும் சிறு தொழிற்கூடம் ஒன்றை நிறுவினார். வாழ்க்கை சிறிது மேல்நிலை அடைந்தது. சிறு வீடு ஒன்றும் கட்டினார்கள். இவ்வாறு பத்து ஆண்டுகள் கடந்தன.
என் அம்மாவிற்கு நாச்சியார் இன்னொரு மகள். தீபாவளி பொங்கல் முதல் சிறு சிறு விழாக்கள் வரை அனைத்திற்கும் அம்மாவுக்கு உணவு வரும். நாங்கள் யாரும் அப்போது ஊரிலில்லை. அதனால், சும்மா அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தால்கூட, உணவு கொண்டுதான் வருவார். இது போக, பொடி வகைகள், இட்லிப் பொடி, கூழ் வத்தல், வடகம், ஊறுகாய் என எப்போதும் இருக்குமளவிற்குக் கொண்டு வந்து கொடுப்பார். எனக்கு இன்றும் அவரிடமிருந்துதான் அனைத்தும் வருகிறது.
ஒரு நாள் ஊரில் விழுந்த இடி நாச்சியாரின் வாழ்விலும் விழுந்தது. அது ஒரு கோடைக்காலம். கோடை மழை இடி மின்னலுடன் வருவதுண்டு. அவ்வாறு பெய்த மழையில் மின்கம்பி அறுந்து சுவரில் விழுந்திருந்திருக்கிறது. இதை யாரும் கவனிக்கவில்லை. தரையில் அமர்ந்து மதிய உணவு உண்ட சங்கரண்ணன் (நாச்சியாரின் கணவர்), கையைத் துடைத்துக் கொண்டே, மோட்டார் போடச் சென்றிருக்கிறார். சுவரைத் தொட, அங்கேயே உயிர் பிரிந்துவிட்டது. ஒரு நிமிடத்திற்கு முன் உட்கார்ந்து சாப்பிட்ட தரையில் இப்போது படுக்க வைக்கப் படுகிறார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், உயிர் பிரிந்து விட்டது என்கிறார் மருத்துவர்.
நாட்கணக்கில் உணவு இல்லை; உறக்கமில்லை; சுருண்டு சுருண்டு படுக்கிறார் நாச்சியார். குடும்பத்தில் சடங்குகள் சம்பிரதாயங்கள் இயல்பாக நடந்து கொண்டே இருக்கின்றன. எதையும் உணரும் நிலையில் அவர் இல்லை. இனி அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டும். வருமானம் குறித்துச் சிந்திக்க வேண்டும்.
குடும்பத்தினர் ஆதரவாகவே இருந்தார்கள். “நாம் உழைத்துக் கொடுப்பதற்கும், அண்ணன் தம்பி தருவதற்கும் வேறுபாடு உண்டு. நல்ல தொழில். இதை எடுத்து நடத்து” என என் அம்மா வற்புறுத்தத் தொடங்கினார்கள். அதுவரை நாச்சியாருக்கு வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாது. வீடு, குடும்பம் என்றே வாழ்ந்த இல்லத்தரசி. அவருக்குக் கலக்கம்; குடும்பத்தினருக்குத் தயக்கம்.
ஏற்கனவே சங்கரண்ணனோடு தொழில் முறையில் வரவு செலவு வைத்திருந்த அனைவரும் இவருக்கும் உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர். கடனுக்குத் தகடு தருகிறேன்; பெயிண்ட் தருகிறேன் என இவருக்கு விற்க சில கடைக்காரர்கள் முன்வர, உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கும் கடைக்காரர்கள் முன்வந்தார்கள். உள்ளூர் மக்கள், தெரிந்தவர்கள், அவரின் வீட்டிக்கு வந்தே தங்களுக்கு என்ன தேவை எனச் சொல்லி வாங்கிச் சென்றார்கள். பணத்தை வாங்கிவர, கொண்டு செல்ல என நண்பர்கள், உறவினர்கள் முன்வந்தார்கள். வங்கி ஊழியர்கள் முன்வந்தார்கள். வீட்டிலிருந்தே அனைத்தையும் நிர்வகிக்கத் தொடங்கினார். இவ்வாறு தொழில் நல்லவிதமாகத் தொடர்ந்தது.
ஆனால் இப்படி ஒரே சொற்றொடரில் ஏதோ எளிமையாக நாம் கடந்துவிட முடியாது. தொழில் என்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிக்கல் வரத்தான் செய்யும். பெண் என்னும் போது இன்னமும் சிரமம். இவருக்கும் இது உண்டு. சரியான நேரத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றால் திடீரென டிங்கர் வரவில்லை; பெயின்டர் வரவில்லை என இருக்கும். சில நாள்கள் அவர்கள் வந்து இருப்பார்கள். வேலையிருக்காது. அவர்களைத் தக்கவைக்க ஏதாவது வேலை கொடுக்கவேண்டும். பண நெருக்கடி உருவாகும்.
இப்படிப் பல சிக்கல்கள். இவ்வளவு இருந்தும் அவ்வப்போது இருக்கும் நகைகளை அடகு வைத்து தொழிலைப் பெருக்குவது; நிலம் வாங்குவது; விற்பது என அதுவும் நடந்துகொண்டே இருக்கும். எப்போது எந்த நகை கையிலிருக்கும்; நிலம் கையிலிருக்கும் என யாருக்கும் தெரியாது. ஒருபக்கம் பணத்தை வைப்புத்தொகை எனப் போட்டால், அடுத்தப்பக்கம் அதிலிருந்து கடன் வாங்குவார்; கட்டுவார். ஐம்பது லட்சம் கையில் கொடுத்து ஒரு மணிநேரத்தில் கேட்டால் எதுவுமிருக்காது. அவ்வளவு commitments இருக்கும். சட்டென்று புரட்டுவது, அடைப்பது எல்லாம் எப்படி இவரால் செய்ய முடிகிறது என எனக்கே வியப்பாக இருக்கும். இப்படி, சிரத்தையாக இருப்பதால் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைத்து, திருமணம் செய்து வைக்க முடிந்தது.
இவை எல்லாவற்றையும் செய்வதற்கு; வாழ்க்கை என்னும் பந்தயத்தில் ஓடுவதற்கு உந்துதல் என்ன என்றால், பிள்ளைகள் மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்புதான். பிள்ளைகள் தான் உலகம். அவர்கள் வாழ்க்கை தான் தன் வாழ்க்கை எனத்தான் அவரின் வாழ்க்கை தொடர்கிறது.
பொறியியல் படித்த மகள் இப்போது கனடாவில் குடும்பத்துடன் இருக்கிறார். மகன் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த அதே அக்டோபர் 15 அன்று பிறந்தவர். அதுவே அவருக்கு விமானப் பொறியியல் (aeronautical engineering) படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. மிக நன்றாகவே படிக்கும் மாணவர். லண்டனில் மேற்படிப்பு படிப்பதற்கு உதவித்தொகை கிடைப்பதாக இருந்தது. அதனால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட தடைகள், உதவித்தொகையை நிறுத்தி விட்டன. ஆனாலும் மகன் விரும்பினார் என்பதால் மிகுந்த சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்தார். திருமணம் செய்து வைத்தார்.
பிள்ளைகளின் வாழ்க்கையினுள் குறுக்கிடாமல், ‘அம்மா மட்டுமே உன்னை வளர்த்தேனே’ என அவர்களின் உணர்வுகளைத் தூண்டாமல், எட்ட இருந்தே அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து நிறைவாக வாழ்க்கையைத் தொடர்கிறார். பிள்ளைகளும் மருமக்களும் அம்மாவைப் புரிந்து கொண்டு நிபந்தனையற்ற அன்பைச் செலுத்துவது அவரை இன்னமும் நிறைவுள்ளவராக ஆக்கியிருக்கிறது.
இளம் வயதிலேயே ஏற்பட்ட தனிமை, பார்ப்பவர்களின் பார்வை; கண்ணோட்டம், சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றையெல்லாம் கடந்தும், உள்வாங்கியும் ஒரு பெண் வாழ்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அப்படி வாழ்ந்து காட்டும் சாதனைப் பெண் நாச்சியார் என் தோழி என்பதில் எனக்கு என்றென்றும் பெருமையே!
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.
பெண்களின் வெற்றிதான் சமுதாய முன்னேற்றம்.
Inspiring and Insiprstion athai. 🙏💖✨
ஒவ்வொரு கதையிலும் ஒரு வரியில் அவர்களுடைய கஷ்டங்கள் முடிந்தாலும் அதன் பின் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானது கிடையாது. வெற்றியடையும் ஒவ்வொரு பெண்களுக்கும் சல்யூட் .
குடும்பமே கோயில்
குடும்பமே குழந்தைகளின் அஸ்திவாரம்
குடும்பம் ஒரு பொக்கிஷம்