”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை. ஒரு நல்ல தந்தைக்கான எதிர்பார்ப்புகளும் நல்ல தொழிலாளிக்கான எதிர்பார்ப்புகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன” என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜூலி மெக்.
உண்மையிலேயே வேலையில் ஆர்வம் உள்ள ஒரு தொழிலாளி அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும், சம்பளம் தருபவரின் நலனுக்காகக் கொஞ்சம் சொந்த நலனைப் புறந்தள்ளவும் தயாராக இருக்க வேண்டும். வீட்டிலிருந்து அவனுக்கு எந்த இம்சைகளும் கூடியவரையில் வரக் கூடாது என்று சமுகம் எதிர்பார்க்கிறது. அதேநேரம் தாயாக இருக்கும் ஒரு பெண், வேறு எதைவிடவும் குழந்தைகளின் நலனை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் சமூகம் நினைக்கிறது. ஆக, ஒரு பெண் நல்ல தொழிலாளியாக இருக்கலாம் அல்லது நல்ல தாயாக இருக்கலாம், இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியப்படாது. ஆண்களைப் பொறுத்தவரை ஒரு நல்ல தந்தை என்பவர் நன்றாக உழைத்து வேலை செய்து குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டால் போதும். ஆகவே ஒரு நல்ல தொழிலாளி நல்ல தந்தையாக மாறிவிடுகிறார். இந்த மனநிலையை சமூகம் மட்டுமல்ல, பொருளாதார அமைப்புகளும் பிரதிபலிக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் தாய்மையடைந்த பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையை நாம் அணுக வேண்டியிருக்கிறது. பிற பணிகளைவிடவும் தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வைக் கோரக்கூடிய அறிவியல் துறையில், குழந்தை பெற்றுவிட்ட ஒரு பெண் எப்படிப் பொருந்துகிறார்? அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
ஸ்டெம் துறைகளில் இருப்பவர்களுக்குத் தாய்மை என்பது ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் இதுபற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள சாரா தெபாட். “என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளர் என்னிடம், ‘குடும்பமா ஆய்வுலகப் பயணமா, ஏதாவது ஒன்றைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்துக்கொள்’ என்றார். இதனாலேயே தாய்மை பற்றி யோசிப்பது பயமாக இருக்கிறது” என்று பலர் தெரிவித்ததாக அவர் பதிவு செய்கிறார். தீவிரமான ஆய்வையும் தாய்மைசார்ந்த பணிகளையும் ஒரு பெண் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியாது என்று சமூகம் திரும்பத் திரும்ப பெண்களுக்குச் சுட்டிக் காட்டுவதாகவும், அதனால் ஸ்டெம் துறைகளுக்குள் வரும் இளம்பெண்கள் பயப்படுவதாகவும் அவர் சொல்கிறார்.

சமூகரீதியாகவும் சரி, ஆய்வுத்துறைக்குள்ளும் சரி, தாய்மை அடைவது என்பது ஒரு பெண்ணின் வேலைக்குக் குறுக்கீடாகவே பெரும்பாலும் சுட்டப்படுகிறது. அந்த மனநிலை ஒரு பெரிய தடையாக மாறுகிறது என்று பெண் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். பல திரைப்படங்களில் பெண் விஞ்ஞானிகள் குழந்தையற்றவர்களாகவே காட்டப்படுகிறார்கள். குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு அறிவியலிலும் சிறந்து விளங்கும் பெண்களை நாம் திரையில் அவ்வளவாகக் காண்பதில்லை. Gravity திரைப்படத்தில் வரும் சாண்ட்ரா புல்லக்கின் கதாபாத்திரம் தொடங்கி இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
திரைப்படங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களில் பெண் விஞ்ஞானிகளின் சித்தரிப்பானது தாய்மை குறித்த இந்தப் பொது மனநிலையை எப்படிப் பிரதிபலிக்கிறது என்று அழகாகக் குறிப்பிடுகிறார் கென்னா கேசல்பெரி. எக்ஸ்-ஃபைல்ஸ் என்கிற புகழ்பெற்ற தொடரின் முக்கியக் கதாபாத்திரமான டானா ஸ்கல்லியை உதாரணமாகக் காண்பிக்கிறார். 1990களில் இந்தத் தொடர் வெளிவந்தபோது ஸ்கல்லியின் கதாபாத்திரத்தைப் பார்த்த பல பெண்கள் உந்தப்பட்டு அறிவியல் துறைக்குள் வந்தார்கள். இது ஸ்கல்லி விளைவு (Scully effect) என்றே அழைக்கப்பட்டது. தொடரின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் தனது அறிவுத்திறனாலும் அறிவியல் பார்வையாலும் பல சிக்கலான பிரச்னைகளைத் தீர்ப்பார் டானா ஸ்கல்லி. ஒரு கட்டத்தில் ஸ்கல்லிக்குக் குழந்தை பிறக்கும். “அது ஒரு நல்ல வாய்ப்பு. ஒரே நேரத்தில் வேலையையும் கவனித்துக்கொண்டு குழந்தை வளர்ப்பிலும் வெற்றியடையலாம் என்று காட்ட ஸ்கல்லியின் கதாபாத்திரத்தை ஒரு முன்னுதாரணமாக ஆக்கியிருக்கலாம். தாய்மை அடைந்த விஞ்ஞானிகளும் அதைத்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தத் தொடரில் என்ன நடக்கிறது? குழந்தை பிறந்தபின் ஸ்கல்லி வேலையிலிருந்து விலகிவிடுவார். ஒருகட்டத்தில் திரும்ப வேலைக்கு வந்தே தீரவேண்டும் என்கிற கட்டாயம் வரும். வேறு வழியில்லாமல் தன் மகனைத் தத்து கொடுத்துவிட்டு மீண்டும் வேலை பார்க்கத் தொடங்குவார். இதனால் மனமுடைந்த அவரின் மகன் ஸ்கல்லியை வெறுத்து நிராகரிப்பான். ஸ்கல்லியால் இறுதிவரை தாய்மைக்குள் நுழைய முடியாமலேயே போகும். ஆனால், நிஜவாழ்க்கையில் இதுவா அதுவா என்று முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் எல்லா நேரத்திலும் இருக்காது. பெண்கள் அப்படித் தேர்வு செய்யவும் வேண்டியதில்லை, இரண்டையும் செய்யலாம்” என்கிறார் கென்னா.

பெற்றோராக ஆகிவிட்ட ஆண், பெண் இருபாலரிடமும் 2011ஆம் ஆண்டு ஒரு பரந்துபட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குழந்தை பிறப்புக்குப் பிறகு இரு தரப்பினரிடமும் ஆய்வுத் தரத்தில் எந்த மாறுபாடும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் பிரச்னை ஆய்வுத்தரத்தில் இல்லாமல் வேறு வழிகளில் முளைத்தெழுகிறது என்று ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தனர். ஸ்டெம் துறையைச் சார்ந்த பலரிடம் நிலவும் மனநிலையை அவர்கள் முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு பெண் விஞ்ஞானி தாயானால் அவளுக்கு அபராதம் விதிப்பதுபோலவும், தந்தையாக மாறிவிட்ட ஓர் ஆண் விஞ்ஞானியைக் கூடுதலாகக் கொண்டாடுவதும் இந்தத் துறைகளுக்குள் அதிகமாக நடக்கிறது. இதை Motherhood penalty & Fatherhood bonus என்று அவர்கள் வர்ணிக்கிறார்கள்.
“எப்படியாக இருந்தாலும் நீ திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றபின் தீவிர ஆய்விலிருந்து விலகிவிடுவாய், இல்லையா?” என்கிற கிண்டலான கேள்வியை எதிர்கொள்ளாத பெண் விஞ்ஞானிகளே இருக்க முடியாது.
ஆய்வுத்திட்டங்களுக்கான பல நேர்முகத் தேர்வுகளில், “உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறீர்களா?” என்கிற கேள்வி இப்போதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்கப்படுகிறது. “ஒரு தாயாக இருந்துகொண்டு இவ்வளவு கடினமான ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, எளிமையாக ஏதாவது செய்யலாமே” என்று தோழி ஒருவரிடம் ஒரு விஞ்ஞானி கேட்டாராம்.
ஸ்டெம் துறைகளில் இருக்கும் பல பெண்கள் இதுகுறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றை முன்வைத்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தால் அதிர்ச்சியாக இருக்கும். தாங்கள் கருவுற்றிருப்பதை அறிந்த மேற்பார்வையாளர்கள், முன்பு இருந்த ஆய்வுத்தலைப்பை மாற்றி தாங்களாகவே எளிய தலைப்பைத் தங்களுக்குத் தந்ததாகப் பல மாணவிகள் பதிவு செய்திருக்கிறார்கள். “குழந்தையெல்லாம் பிறந்தபின்னும்கூடச் சரியாகக் காலை ஒன்பது மணிக்கு ஆய்வுக்கூடத்துக்கு வந்துவிடுகிறார். இந்தப் பெண்ணுக்கு வீட்டில் வேலையே இருக்காதுபோல” என்று சக ஆய்வாளர்கள் தன்னைக் கேலி பேசியதாக இந்தியப் பெண் விஞ்ஞானி ஒருவர் வருத்ததுடன் பதிவு செய்திருக்கிறார். “எனக்கு நிறைய வேலை இருக்கும் என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். புதிய ஆய்வுத்திட்டத்தின்போது என் பெயரை அவர்கள் பரிசீலிக்கவேயில்லை. கேட்டால், ‘உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது… புது ஆய்வெல்லாம் எப்படி?’ என்று தயங்கித் தயங்கிச் சொல்கிறார்கள்” என்று வருத்தப்படுகிறார் இன்னொரு பெண் விஞ்ஞானி. இவற்றையெல்லாம்விடக் கொடூரமாக, “ஆய்வின் முக்கியமான கட்டத்தில் நீங்கள் கருவுற்றிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் கருக்கலைப்பு செய்யக்கூடாது?” என்று தனது ஆண் மேற்பார்வையாளர் கேட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆய்வு மாணவி கூறுகிறார்!

குழந்தை பெற்றுவிட்டால் ஒரு பெண்ணால் முழுமையாக ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது என்கிற பொது எண்ணம் ஒருபுறம் என்றால், தாயாகிவிட்ட பெண்களுக்கு எந்தவிதமான வசதிகளும் செய்து தராமலேயே அவர்களிடம் அர்ப்பணிப்பையும் ஆய்வுக்கட்டுரைகளையும் எதிர்பார்ப்பது இன்னொருபுறம். இதுவும் பிரச்னைக்குரியதுதான். “குடும்பமே இல்லை என்பதுபோல வேலை செய்ய வேண்டும், வேலையே இல்லை என்பதுபோல குழந்தையை வளர்க்க வேண்டும். இதுதான் தாயாக இருக்கும் பெண்கள்மீது உள்ள எதிர்பார்ப்பு. அறிவியல் பெண்களைப் பொறுத்தவரை தாய்மை என்பதே ஒரு ஷ்ரோடிங்கர் பூனைதான். இது ஒரு மிகப்பெரிய நகைமுரணாகவும் அவலமாகவும் தொடர்கிறது” என்கிறார் ஆராய்ச்சியாளர் ரெபெக்கா கலிசி. ஒரே நேரத்தில் உயிருள்ளதாகவும் உயிரற்றதாகவும் கருதப்படும் ஷ்ரோடிங்கர் பூனை என்கிற புகழ்பெற்ற அறிவியல் உருவகத்தை வைத்துத் தனது வருத்தத்தை இவர் சித்தரிக்கிறார்.
அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சியில், 43% ஸ்டெம் பெண்கள் குழந்தை பிறந்த பின்னர் முழுநேர வேலையை விட்டுவிட்டதாகத் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு விலகியவர்களில் 71% பேர் ஆராய்ச்சியல்லாத பிற துறைகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள். ஸ்டெம் துறையில் எதிர்பார்க்கப்படும் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் அங்கு தாய்மார்களுக்குக் கிடைக்கும் வசதிக்கும் உள்ள முரண்பாடே இதற்கு முக்கியக் காரணம். ஸ்டெம் துறையில் ஒரு பெண் தாயாகிவிட்டால் அவளுக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய தடைச்சுவர் எழும். அதை அவள் தகர்த்து எறிந்தால் மட்டுமே முன்னேற முடியும். இதை ’Maternal wall’ என்கிறார்கள் சமூகவியல் வல்லுநர்கள். எல்லாத் துறையிலும் உழைக்கும் பெண்கள் இதை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும் ஆய்வுத்துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஸ்டெம் துறைகளில் எப்படிப்பட்ட மாற்றங்கள் வேண்டும் என்பதைப் பல பெண் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலுக்குள் போவதற்கு முன்னால் ஒரு சிறு நிகழ்வைப் பார்க்கலாம். ’அறிவியல் மாநாடு அரங்குகளில் தாயாக இருக்கும் பெண் விஞ்ஞானிகளுக்கான வசதிகள்’ என்கிற தலைப்பில் 46 பெண் விஞ்ஞானிகள் சேர்ந்து ஒரு முழுமையான ஆய்வுக்கட்டுரையைத் தயாரித்தார்கள். அதில் பல பரிந்துரைகளையும் சேர்த்திருந்தார்கள். ஆய்வுக்குழுவினரில் முதன்மையானவர் ரெபெக்கா கலிசி. இந்த ஆய்வுக்கட்டுரையை சஞ்சிகைகளில் பிரசுரிப்பதற்குத் தான் பட்ட பாடுகளை அவர் வேதனையுடன் எழுதியிருக்கிறார். பல சஞ்சிகைகள் இந்த ஆய்வுக்கட்டுரையை முழுமையாக நிராகரித்திருக்கின்றன. ’அட, இவ்வளவு ஏன்? ஒரு சஞ்சிகையை நடத்தும் ஒரு ஆண் பொறுப்பாசிரியர், ஏன் ஆய்வுக்குழுவினரில் ஆண்கள் இல்லை, இந்த வசதிகளைப் பற்றி ஆண் விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்று கேட்டார். ஆண் விஞ்ஞானிகளின் பார்வை இல்லாததால் ஆய்வுக்கட்டுரையை அவர் நிராகரித்தார்’ என்று எழுதுகிறார். அதிகார மையங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் ஏன் முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.

உலகெங்கிலும் உள்ள பல பெண் விஞ்ஞானிகள், குழந்தை பிறந்ததற்குப் பிறகு பெண்களுக்குச் செய்து தரப்படவேண்டிய வசதிகளைப் பற்றிப் பல இடங்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசியிருக்கிறார்கள். சிலர் தங்களது பணியிடங்களிலேயே குரல் எழுப்பி அந்த வசதியைப் பெற்றிருக்கிறார்கள். புனேவில் உள்ள IISER ஆய்வுக்கழகத்தில் முதன்முதலாகக் குழந்தை பராமரிப்பு மையத்தை ஏற்படுத்திய மயூரிகா லாஹினி உட்பட இதற்குப் பல உதாரணங்களைச் சுட்டிக்காட்ட முடியும். மகப்பேறு காலம், குழந்தை வளர்ப்பு போன்ற வாழ்வின் முக்கியமான காலக்கட்டங்களில் பெண் விஞ்ஞானிகளின் சுமையைக் குறைக்க என்னென்ன செய்யலாம்?
- குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்கான வசதிகள் : குழந்தைப் பராமரிப்பு சேவைகள் விலை உயர்ந்தவையாக இருக்கும் நாடுகளில் அதற்கான மானியம் அல்லது பணிபுரியும் தாய்மார்களுக்கான ஊதிய உயர்வு.
- பணியிடத்தில் குழந்தை பராமரிப்பு மையங்கள்.
- பெண் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை அவர்களுடன் சேர்ந்து குழந்தையை வளர்க்கும் இணையர் (Co-parent) மற்றும் நேரடியான உயரதிகாரி ஆகிய இருவரும் அவர்களது பிரச்னைகளைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளுதல்.
- வேலைநேரம், வேலை இடம் போன்றவற்றில் நெகிழ்தன்மை.
- மகப்பேறு காலத்தில் ஆதரவு (Pre-partum assistance)
- பேறுகால விடுப்பு/ விடுமுறை (Maternity leave)
- பணியிடங்களிலும் மாநாடுகளிலும் பாலூட்டும் அறைகள், அதில் போதுமான வசதிகள்.
- பேறுகால விடுப்பு காரணமாகப் பணியிட ஒப்பந்தம் பாதிக்கப்படாது என்கிற வாக்குறுதி (Contract Security) – இது குறுகிய கால ஆய்வுத்திட்டங்களில் இருக்கும் பெண்களுக்கு முக்கியமானது.
- பொதுவாகவே பெண்களுக்கும் ஆண்களுக்குமான ஊதிய இடைவெளியைக் குறைப்பது.
- பெண் விஞ்ஞானி கருவுற்றதை அறிந்தபின்னர் அவர்களுடன் நேரடியாகப் பேசிய பின்பே ஆய்வுத்திட்டம் பற்றிய முடிவுகளை எடுப்பது.
இதில் பேறுகால விடுப்பு பற்றி விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. பேறுகால விடுப்பு பல பணியிடங்களில் வழங்கப்படுகிறது என்றாலும் ஸ்டெம் ஆய்வுத்திட்டங்களைப் பொறுத்தவரை பல குழப்பங்கள் நிலவுகின்றன. சம்பந்தப்பட்ட பெண் விஞ்ஞானி விடுப்பில் இருப்பார், அவர் இல்லாமலேயே ஆய்வு ஒரு தளத்துக்குச் சென்றிருக்கும். அந்தச் சூழலில் அவர் மீண்டும் வேலைக்கு வரும்போது ஆய்வுக்கட்டுரையில் அவர் பெயரைச் சேர்க்கலாமா இல்லையா என்பதுதொடங்கி அவர் பல பாரபட்சங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு வருடத்துக்கு எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள் என்பதை வைத்து ஒருவரது வளர்ச்சி மதிப்பிடப்படும் சூழலில் இது முக்கியமானது.
’அடுத்தடுத்து முன்னேறவில்லை என்றால் ஆய்வுக்குழுவிலிருந்து விலக்கப்படுவீர்கள்’ என்கிற கட்டாயம் இருந்தால் பெண்கள் பேறுகால விடுமுறையை எடுக்கவே தயங்குவார்கள். இதில் இருக்கும் ஒரு நுணுக்கமான பிரச்னையை முன்வைக்கிறார் பத்திரிகையாளர் திவ்யா காந்தி. “பேறுகால விடுப்பு வேண்டாம் என்று ஆய்வுக்கூடங்கள் நேரடியாகச் சொல்வதில்லை. ஆனால் ஒரு பெண் விஞ்ஞானி பேறுகால விடுப்பு எடுத்துவிட்டால் அடுத்தடுத்த ஆய்வுத்திட்டங்களில் அவரது பெயரைச் சேர்க்க மாட்டார்கள். இது பல இடங்களில் நடக்கிறது” என்கிறார். ஒருவகையில் இதுவும் நாம் Motherhood penalty என்ற வகைமைக்குள்தான் வரும்.

“பொதுவாக பெண்களுக்கான துறைகள் என்று கருதப்படும் கல்விப்புலத்திலோ மருத்துவ சேவைகள் (செவிலியர் போன்ற பணிகள்) சார்ந்த துறைகளிலோ இது பெரும்பாலும் நிகழ்வதில்லை. அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில்தான் அது அதிகமாக நடக்கிறது” என்கிறார் கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி இவோனா ஹெடிக். இதுபோன்ற துறைகளில், பேறுகால விடுப்பு முடிந்து வேலைக்குத் திரும்பும் பெண்களுக்குக் குறைவான சம்பளமே தரப்படுகிறது.
அது மட்டுமல்ல, பேறுகால விடுப்பு என்கிற இதே அம்சத்தை வைத்து Fatherhood bonus என்பதையும் புரிந்துகொள்ளலாம். அமெரிக்காவில் 2011ஆம் ஆண்டு நடந்த ஓர் ஆய்வில், குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக விடுப்பு எடுக்கும் ஆண்கள்மீது உயரதிகாரிகளுக்கு ஒரு நல்ல மதிப்பு வருவது தெரிய வந்திருக்கிறது. ஆக, பேறுகால விடுப்பு என்பது நடைமுறையில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதில் பல மனத்தடைகளைச் சமூகமும் பணியிடங்களும் உருவாக்குகின்றன. இன்னொருபுறம், பேறுகால விடுப்பின்போது எவ்வளவு சம்பளம் தரப்பட வேண்டும், எத்தனை வாரங்கள் அல்லது மாதங்கள் பேறுகால விடுப்பு என்பதிலும் ஸ்டெம் துறைகளுக்குள் குழப்பம் நிலவுகிறது.
பணியிடங்களின் பங்களிப்போடு, குழந்தை வளர்ப்பில் ஈடுபடும் பெண்களுக்குச் சமூகமும் குடும்பமும் ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். சமீபத்திய ஓர் அறிவியல் மாநாட்டில் பெண் விஞ்ஞானிகளுக்கான சிறப்பு நிகழ்வில் பேசிய பல ஆளுமைகளும் இதையே வலியுறுத்தினார்கள். பெண்கள் வீட்டு வேலை தொடங்கி அலுவலக வேலை வரை இருக்கும் எல்லாச் சிறு பொறுப்புகளையும் தாங்களே செய்து கஷ்டப்படவேண்டியதில்லை எனவும், அவர்களது குடும்பத்தினரும் சமூகமும் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
தாய்மை ஒரு பெரிய பொறுப்பு. அந்தப் பொறுப்பை எதிர்கொள்ளும் பெண்ணுக்கான ஆதரவையும் உதவியையும் சமுகம் நிச்சயமாக செய்ய வேண்டும். ஸ்டெம் துறைகளில் பெண்கள் நீடித்து நின்று தாங்கள் எட்ட விரும்பிய உயரங்களை எட்ட வேண்டுமானால் அதற்குப் பேறுகாலங்களிலும் சரி, குழந்தை வளர்ப்பின்போதும் சரி, அவர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சட்டங்கள் இயற்றுவது தொடங்கி மனப்போக்கை மாற்றுவது முதல் பல தளங்களில் இதற்கான முன்னெடுப்புகள் வேண்டும். அந்தப் பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டுமே தாய்மையின் ஷ்ரோடிங்கர் பூனையைச் சமாளிக்க முடியும்.
பல பணியிடங்களில் அவதூறுப் பேச்சுகள் பெண்களின் முக்கியப் பிரச்னைகளாக இருக்கின்றன, இது அறிவியல் துறையிலும் இருக்கிறதா?
(தொடரும்)
படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!