பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே வழியத் தொடங்கியது. அப்படியே தரையில் அமர்ந்தாள். விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
ஷங்கர் அவளை அடித்தது குறித்தோ, அவள் அழுவது குறித்தோ எந்தக் குற்ற உணர்வுமின்றி சட்டையை அணிந்து, பொத்தான்களை மாட்டிக் கொண்டிருந்தான்.
“ஏய்.. எந்திரிச்சுப் போய் டிபன் எடுத்து வை. அப்படியே ப்ளாக் ஷூவை பளபளன்னு பாலீஷ் போட்டு வை. காலையிலயே அழுது வடியாத. உன் அழுமூஞ்சியைப் பாத்துட்டுப் போனா வெளங்கிரும்.” தீக்கங்குகளை இறைத்து விட்டு, கண்ணாடி முன் நின்று தலையை வாரத் தொடங்கினான்.
காயத்ரி எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே போனாள். உணவருந்தும் மேசையில் சப்பாத்திகள் அடங்கிய ஹாட்பேகையும், கேரட், பீன்ஸ் குருமா கிண்ணத்தையும் வைத்து விட்டு, சாப்பிடும் தட்டைக் கழுவி எடுத்து வந்தாள். தண்ணீரை வடிக்கும் போது அதில் முகத்தைப் பார்த்தாள். இடது கன்னத்தில் சிவப்பாக அவனது விரல் தடங்கள் பதிந்திருந்தன. மீண்டும் கண்கள் பொங்கின. சேலைத் தலைப்பில் கண்களை ஒற்றிக் கொண்டு, கண்ணாடி தம்ளரில் நீரை ஊற்றினாள்.
ஷங்கர் பூஜையறைக்குச் சென்று முணுமுணுப்பாக ஏதோ ஓதிவிட்டு வெளியே வந்தான். காயத்ரி சாமி கும்பிட மாட்டாள். ஷங்கரோ அவளுக்கு நேரெதிர். விழுந்து விழுந்து கும்பிடுவான். இரவு எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பூஜையறையில் விளக்கேற்றி விட்டுத்தான் அடுத்த வேலை செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட உத்தரவிட்டிருந்தான். அவளுக்குப் பிடிக்கவில்லையென்றாலும் வேறு வழியின்றி சகித்துக் கொண்டு செய்து கொண்டிருந்தாள்.
சாப்பிட வந்து அமர்ந்தவன், “ஏண்டி.. அந்த டார்க் ப்ளூ சட்டையை நான் எத்தனை ஆசை ஆசையாய் எடுத்தேன். காணோம்னு கேட்டா பொறுப்பில்லாம தெரியாதுன்னு சொல்றே?” என்றான் சப்பாத்தியைப் பிட்டு வாயில் திணித்துக் கொண்டே.
“ஏங்க நான் எத்தனை தடவை சொல்றது..? அந்த சட்டையை நீங்க போட்ட ஞாபகமே எனக்கு இல்லை. அதை நான் துவைக்கவேயில்லை. உங்க பீரோல தான் இருக்கும்.”
அவன் அவளை உக்கிரமாக முறைத்தான். “அப்ப நான் பொய் சொல்றேனா..?”
“அது எனக்குத் தெரியாது. அடிக்கிறதுக்கு இன்னிக்கு இது ஒரு சாக்கு.” அவன் சட்டென்று எழுந்து மீண்டும் அறையப் போனான். அவள் விலகிக் கொண்டாள்.
தட்டிலேயே கையைக் கழுவிக் கொண்டு நீரை ஒரே மூச்சில் குடித்து விட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு போனவன், டீபாய் மேலே அவள் பாதி படித்து குப்புறக் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தைத் எடுத்து வாசலில் விசிறியடித்து விட்டு வெளியே போனான். ஷூவை மாட்டிக் கொண்டு பைக்கை உதைத்து முறுக்கிக் கொண்டு போக்குவரத்தில் கலந்தான். அவனது கோபம், மோட்டார் சைக்கிளின் புகையாக வெளிப்பட்டது. அவள் கண்களில் வழிந்த நீரோடு கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
***
காயத்ரி கல்லூரி இறுதியாண்டு படிக்கையிலேயே ‘நல்ல சம்பந்தம்’ என்று ஷங்கரின் ஜாதகம், வங்கி வேலை, புகைப்படத்தைப் பார்த்த காயத்ரியின் தந்தை, வரன் கை நழுவிப் போய்விடக் கூடாதென்று அவசர அவசரமாகக் கல்யாணத்தை செய்து வைத்து விட்டு கடமை முடிந்ததென்று கை கழுவி விட்டார். அவனுக்கு பெற்றோர், நெருங்கிய உறவுகள் என்று யாருமில்லை. மாமியார், நாத்தனார் என்று பிக்கல் பிடுங்கல் ஏதுமில்லை என்று அவருக்கு ஒரு நிம்மதி.
அவள் கண்மூடித் திறப்பதற்குள் திருமண வாழ்க்கைக்குள் நுழைக்கப்பட்டு விட்டாள். என்ன ஏதென்று உணர்வதற்குள் அடுக்களைக்கும், படுக்கையறைக்கும் பழக்கப்படுத்தப்பட்டாள். ஷங்கர் தாலி கட்டும் போது ஓரக் கண்ணால் அவனைப் பார்த்தாள். ‘ம்.. ஓரளவு பரவாயில்லை. ஆள் என்னவோ ஹேண்ட்சமாகத்தான் தெரிகிறான்.’ தனக்குள் சிரித்துக் கொண்டாள். ஹோமத்தீயைச் சுற்றி வரும் போது அவனது கையைப் பற்ற நேர்ந்தது. அவனது உள்ளங்கை மென்மையாக இருந்தது. தன்னை ஒருமுறையாவது பார்க்க மாட்டானா என்று கொஞ்சம் ஏக்கமாக இருந்தது. அவன் அவளைப் பார்க்கவேயில்லை.
திருமணமான அன்று மாலை காயத்ரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். காயத்ரி குளித்து விட்டு புடவை மாற்றிக் கொண்டு வந்தாள். உறவுப் பெண்கள் அவளைச் சூழ்ந்து கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். அவள் லேசாக முகம் சிவந்திருந்த சமயம் அவன் வந்து அவளை அழைக்க, சுற்றியிருந்த பெண்கள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.
காயத்ரி அவனிருந்த அறைக்குள் போனாள்.
ஆசையாக ஏதாவது பேசுவானென்று தலையைக் குனிந்து நின்றிருந்தவளிடம், “பாத்ரூம்ல என்னோட இன்னரை கழட்டிப் போட்டிருக்கேன். அலசிப் போட்டுட்டு வா”, என்றதும், அவளின் கனவுக் கோட்டை, அவள் கண்முன்னே சரியத் தொடங்கியது.
அன்றிலிருந்து இன்றுவரை அவனது அடிப்படைத் தேவைகளைக் கூட அவள்தான் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாயிற்று. கல்யாணமான மூன்றாம் நாள் தனிக்குடித்தனம் போய்விட்டார்கள். அவள் வீட்டிலிருந்து நிறையப் புத்தகங்களை எடுத்து வந்தாள். “எதுக்கு இத்தனை குப்பைகளைத் தூக்கிட்டு வர்றே?” அவள் ஒன்றும் பேசவில்லை.
இந்த மூன்று நாள்களில் வாய் திறந்து அவன் அதிகம் பேசவில்லை. மீறிப் பேசியவையும் அவளை வேலை வாங்குவதாகவே இருந்தது. தேனிலவு எங்காவது சென்று மனம் திறந்து பேசி, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளலாம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அதற்கு வாய்ப்பின்றி நான்காம் நாள் காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனது ஷூக்களை பாலீஷ் போட அவளை ஏவினான். ஏமாற்றத்தில் இருந்தவள், அவனையே போடச் சொன்னாள். அப்போது தான் அவளை முதல் முறை அறைந்தான்.
“ஏய்… இங்க பாரு. என் வேலைகளைக் கவனிக்குறதுக்குத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கேன். புரியுதா? இதைத் தவிர உனக்கு வேற என்ன வேலை? நான் கிளம்பினதும் சீரியல் பார்த்ததுட்டு தூங்கத் தானே போறே? ஒரு வேலை சொன்னா முடியாதுன்னு சொல்றதை இன்னியோட மறந்துரு. போ… போய் ஷூவைப் பாலீஷ் போடு. டைமாகுது…” அதட்டினான்.
அவளுக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. பாலீஷோடு கண்ணீர்த் துளிகளும் கலந்து பாதணிகள் பளபளத்தன.
அவன் போன பிறகு அம்மாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னாள்.
“என்னடி… உலகத்தில் நடக்காத அதிசயத்தையா சொல்றே? புருஷன்னா அப்படித்தான் இருப்பாங்க. இதுக்கெல்லாமா கண்ணைக் கசக்கறது?கோவிச்சிட்டெல்லாம் இங்க வரக் கூடாது. அப்பாவுக்கு அவமானமாயிடும். உன் தங்கச்சி வேற இருக்கா. நாளைக்கு அவளுக்கும் நல்லது நடக்கணும்ல? சொந்தக்காரங்க முன்னாடி கேவலமாயிடும். உங்க சின்ன அத்தை ஊரெல்லாம் பரப்பிட்டு சிரிப்பா. இனிமே அவர் சொல்றதுக்கு முன்னாடியே பாலீஷ் போட்டு வெச்சிரு. அவரு சந்தோஷப்படுவாரு…” அம்மா முடிக்கும் முன் இவள் போனைத் துண்டித்தாள்.
யாருமின்றி வளர்ந்ததால், அன்பென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிறான் போல என்று எண்ணினாள். அவன் அன்பு காட்டாவிட்டால் என்ன..? நாம் அன்பு செய்வோம் என்று அவனுக்காகப் பார்த்துப் பார்த்து புதிய புதிய உணவு வகைகளைச் சமைத்தாள். அவனிடம் சிரித்துப் பேசத் தொடங்கினாள்.
அவன் சிறிதும் மாறவில்லை. “எதுக்கு வழியறே..? எதாச்சும் வேணுமா..?” அவளை ஏதாவது ஒரு வகையில் மட்டம் தட்டிக் கொண்டே இருந்தான். எவ்வளவு நன்றாகச் சமைத்தாலும் குறை கண்டுபிடித்தான். அத்தி பூத்தாற் போல எப்போதாவது சிரித்தான் என்றால் அது அவனது ‘தேவை’க்காகத்தான் இருக்கும். அதிலும் கூட நினைத்துப் பார்த்து சிரிக்கவோ, சிலிர்க்கவோ அவளுக்கு ஒன்றுமிராது. சமயங்களில் எரிச்சலாக இருக்கும். அவன் எல்லோரிடமுமே அப்படியா என்றால் அதுவுமில்லை. அக்கம்பக்கத்தில், வெளியிடங்களில் மற்றவர்களிடம் அவன் சிரிக்கச் சிரிக்கப் பேசும் போது, அவளுக்கு அதிசயமாக இருக்கும். சிரிக்கும் போது அழகாகத்தான் இருக்கிறானென்று நினைத்துக் கொள்வாள். ஆனால் அவளிடம் மட்டும் கடுகடுப்பாகவே இருப்பான். அவளுக்கு வாழ்க்கை சீக்கிரமே சலிப்புத் தட்டியது.
அதன்பின் இயந்திரம் போல் வேலைகளைச் செய்யப் பழகிக் கொண்டாள். முகத்தில் சிரிப்பு வற்றிப் போனது. ஆனால் அவன் இது எதையும் கண்டு கொண்டான் இல்லை. அவள் வீட்டில் வேலைகளற்ற பொழுதுகளில் வாசித்தாள். மனதை பிற விஷயங்களில் திருப்பினாள். கூடுமானவரை பொது அறிவை வளர்த்துக் கொண்டாள்.
ஒருமுறை அவனது நண்பனொருவன் வீட்டுக்கு வந்தான். அவளது சமையலை வாயாரப் புகழ்ந்தான். அவளுடன் பேசும்போது அவளது அறிவுப்பூர்வமான பேச்சைக் கேட்டு வியந்தான்.
“ஏண்டா ஷங்கர்… இவங்க எவ்வளவு நாலெட்ஜோட இருக்காங்க. சூப்பரா சமைக்குறாங்க. செம டேலண்டுடா… இவங்களை இப்படியே வீட்டுக்குள்ள போட்டு பூட்டி வெச்சுடாத” என்றான்.
“பின்ன? ஊர் சுத்த விட்டுட்டு நான் சமைச்சுப் போடவா..?” என்றான் வெடுக்கென்று. அவன் மனம் புரிந்து போயிற்று. அங்கே ஒரு வேண்டாத அமைதி நிலவியது. நண்பன் உடனே எழுந்து விடை பெற்றுச் சென்று விட்டான். அவனது பார்வையில் வழிந்த பரிதாபம் அன்றெல்லாம் அவள் மனதை அறுத்தது. காயத்ரி மிகவும் அவமானமாக உணர்ந்தாள். அதன்பின் ஒன்றுமில்லாத விஷயங்களுக்குக்கூட கைநீட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டான். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் அவள் ஒரு முட்டாள் என்பதை விதவிதமான வார்த்தைகளில் அவள் மனதில் பதிய வைக்க முயன்று கொண்டே இருந்தான்.
***
இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்தக் கருநீலச் சட்டையை எடுத்து வந்திருந்தான். படுக்கை இருந்த அந்தக் காகிதப் பையை அவள் பிரித்துப் பார்த்துவிட்டு அங்கேயே வைத்திருந்தாள். அப்புறம் மறந்தும் போய்விட்டாள். இன்று காலை அவன் குளித்து விட்டு வந்து அந்தச் சட்டையை தேடித்தான் இத்தனை களேபரம்.
காயத்ரி துவைத்த துணிகளை பக்கத்தில் ஒரு தள்ளுவண்டித் தாத்தாவிடம் தான் தருவாள். காலையில் கொடுத்தால் இஸ்திரி போட்டு மாலை அவரே கொண்டு வந்து தந்துவிட்டுப் போவார். அவளுக்கு அந்தச் சட்டையைத் துவைத்த நினைவே இல்லை. ஆனால் அவன் அடித்துச் சொன்னான்.
அவள் அவனது பீரோவை ஆராய்ந்தாள். அந்தச் சட்டை எங்கேயும் இல்லை. இஸ்திரித் தாத்தாவிடம் விசாரித்தாள். அவர் உதட்டைப் பிதுக்கினார்.
அன்று முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை. அவனிடம் அடி வாங்கியது வேறு மனதில் ஊகா முள்ளாக உறுத்திக் கொண்டே இருந்தது. அன்று மாலை வந்தவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
இரண்டு நாள்கள் கழிந்தன. அவள் அவனிடம் பாராமுகமாக இருந்தது அவனுக்கு உறைக்கவேயில்லை. அவள் வழக்கமாகச் செய்யும் வேலைகளில் தடங்கல் வந்தால், வழக்கம் போல் திட்டிவிட்டுச் சென்றான்.
அன்று மதியம். அவர்களது அறைக்குள் சென்றாள். படிக்க புதிய புத்தகங்கள் எதுவும் இல்லை. அந்த அறையில் ஒரு பெரிய அலமாரி இருந்தது. அதில் ஒரு அடுக்கில் அவன் முக்கியமான கோப்புகளை அடுக்கி வைத்திருந்தான். அங்கே ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று பார்க்க கை விட்டுத் துழாவினாள். அவள் கைகளில் ஏதோ தட்டுப்பட்டது. ஒரு காகிதப்பை.
உள்ளே பிரித்துப் பார்க்க, அந்தக் கருநீலச் சட்டை சமர்த்தாக உள்ளே கிடந்தது.
***
அன்று மாலை வந்தவனிடம் அந்தப் பையை நீட்டினாள். அவன் கேள்விக் குறியாக அவளைப் பார்த்தான்.
“இதோ உங்க டார்க் ப்ளூ ஷர்ட். அந்த ஃபைல் அடுக்குல மேல வெச்சீங்க போல. அது நழுவி ஃபைல்களுக்குப் பின்னால விழுந்திருக்கு…” அவன் சலனமின்றி வாங்கினான்.
“ம்ம்… சரி. இந்தா அயர்ன் பண்ணி வை”
சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான். “ஆமா… காஃபி எங்கடி..?” அதட்டினான்.
அவள் கைகளைக் கட்டிக் கொண்டு அவனையே தீர்க்கமாகப் பார்த்தாள்.
“போய் காஃபி போடு…” அவன் அன்றைய தினசரியை எடுத்துப் பிரித்தான்.
அவள் அசையாமல் நின்றிருக்கவே, ஏறிட்டான்.
“உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லியா?”
“எதுக்கு?”
“நீங்க பண்ண தப்பு, சட்டையை ஃபைல் அடுக்குல வெச்சது. அதை நான்தான் தொலைச்சிட்டேன்னு அடிச்சீங்களே, உங்களுக்கு உறுத்தலையா?..”
“ப்ச்… நான் வெச்சதை மறந்துட்டேன். அதுக்கென்ன இப்போ?” அவளுக்கு ரௌத்திரம் பொங்கியது.
“இது கொஞ்சம் கூட நியாயம் இல்லைங்க. அநியாயமா என்னை அடிச்சதுக்கு அட்லீஸ்ட் ஒரு ஸாரியாச்சும் சொல்லுங்க…” அவளுக்கு குரல் அடைத்தது.
“இதெல்லாம் ஒரு விஷயமா? போ… போய் காஃபி எடுத்துட்டு வா” அவன் அவளை அலட்சியம் செய்து விட்டு பேப்பருக்குள் புதைந்து கொண்டான்.
அவள் ஒருநிமிடம் அவனையே உற்றுப் பார்த்தாள். ஒரு பெருமூச்சோடு சமையலறைக்குள் போனாள். மனம் கனத்துக் கிடந்தது.
மறுநாள். அவன் வேலைக்குப் புறப்பட்டு சாப்பிட வந்தான். பூஜையறையில் விளக்கு ஏற்றப்படவில்லை. உணவு மேசை மீது ஹாட்பேகில் காலை உணவு எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. பக்கத்தில் தட்டும், நீர் நிரம்பிய தம்ளரும் இருந்தது. காயத்ரி இல்லை.
“காயத்ரி…” இரைந்தான்.
“போட்டு சாப்பிடுங்க. இதோ வரேன்” குரல் மட்டும் வந்தது. அவசரமாக விளக்கேற்றி விட்டு நேரமாகி விட்டதால் முணுமுணுத்தவாறே எடுத்துப் போட்டு சாப்பிட்டான்.
பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். அவனது ஷூக்கள் புழுதி படிந்து அப்படியே கிடந்ததைப் பார்த்து அவனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
“ஏய்.. இங்க வாடி.” இரைந்தான். “தினமும் உனக்கு க்ளாஸ் எடுக்கணுமா? சீக்கிரம் பாலீஷ் போடு. இதைவிட வேற என்ன வேலை வெட்டி முறிக்கிற?” அவள் கையில் ஒரு புத்தகத்துடன் வெளியே வந்ததைப் பார்த்து அவனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. பல்லைக் கடித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“இனிமே உங்க ஷூவுக்கு நீங்களே பாலீஷ் போடுங்க. உங்களோட அடிப்படைத் தேவைகளை நீங்களே பாத்துக்குங்க. கை நீட்டுற வேலையெல்லாம் இனி வேண்டாம். நான் ஒன்னும் உங்களுக்கு சேவை மட்டும் செய்ய அவதாரம் எடுத்து வரலை. எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. புரியுதா..?” அவள் நிதானமாகப் பேசிவிட்டு உள்ளே போனாள்.
பின்னாலேயே அவளை அடித்துத் துவைக்கும் ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவன், அதிர்ந்து நின்றான். அவன் முகத்தில் வந்து மோதி விழுந்தது அந்தக் கருநீலச் சட்டை. குனிந்து எடுத்தவன் மீண்டும் அதிர்ந்தான். சட்டை கத்திரிக்கோலால் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தது.
“ஏய்.. என்ன திமிருடி உனக்கு..?” ஓங்கிய கையைப் பிடித்து நிறுத்தினாள் காயத்ரி.
“இங்க பாரு.. உன்னோட மேல் ஷாவனிசத்தை எங்கிட்ட காட்டாதே. அதான் இந்தச் சட்டைக்காக ஏற்கனவே என்னை அடிச்சிட்டியே? இங்க சும்மா உக்காந்து தின்னுட்டு உன் ஷூவை பாலீஷ் போட என்னைக் கட்டிக் குடுக்கலை. இன்னிலேருந்து வேலைக்குப் போறேன். ரெண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல சேல்ஸ் கேர்ள் வேலை.
உனக்கு நான் அடிமையில்லை ஷங்கர். இனிமேல் வீட்டு வேலைகளை ஷேர் பண்ணப் பழகிக்கோ. என்னை சக மனுஷியாப் பாரு. இதுக்கெல்லாம் உனக்கு விருப்பம் இல்லைன்னா, நான் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன். அடுத்தவங்களுக்காக என் தன்மானத்தை அடகு வைக்க முடியாது…” அவள் பேசியவாறே கையில் இருந்த புத்தகத்தை ஒரு சிறிய ஹேண்ட் பேகில் வைத்துக் கொண்டு வெளியே வந்து செருப்பை அணிந்து கொண்டாள்.
“அப்புறம் ஷங்கர்.. நீ போகும்போது வீட்டைப் பூட்டி சாவியை இந்த க்ளிப் டப்பாவுக்குள்ள வெச்சிடு. ஈவினிங் பார்க்கலாம். பை…” என்றவளின் குரலில் இருந்த உறுதி அவனை வாயடைக்க வைத்தது.
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.