ஆன் எஸ்லே

தலைப்பைப் படிக்கும்போது அபத்தமான கேள்வியாகத் தெரிகிறதா? நிச்சயம் அபத்தம்தான். இந்தக் கேள்வியைக் கேட்பதும் அதற்கான பதில்களை உருவாக்குவதும் பெரும்பாலும் சக ஆண்களாகவும் ஆண் மேற்பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இன்னும் அபத்தம். ஆனால், ஸ்டெம் துறைகளில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

2015ஆம் ஆண்டில் சான்ஃப்ரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் விளம்பரம் வெளியானது. அதில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் பங்குபெற்றிருந்தார்கள். “இந்த விளம்பரத்தில் வருபவர்கள் உண்மையாகவே ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊழியர்கள்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. குறிப்பாக இதில் அழகான பெண்களின் ஒளிப்படங்கள் இடம்பெறுகின்றன. “இவ்வளவு அழகாக இருப்பவர்கள் எப்படிப் பொறியாளர்களாக இருக்கமுடியும்?” என்று பலர் கேள்வி எழுப்பினர். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. iLookLikeAnEngineer என்கிற ஹேஷ்டேக் ஒன்று உருவானது. பலதரப்பட்ட வயது, உருவம், இனம், பாலினத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் தங்கள் ஒளிப்படத்தை இந்த ஹேஷ்டேகுடன் பதிவிட்டனர். உருவத்துக்கும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பொறியாளர்கள் நிரூபித்தனர்.

ஒருவர் சிறந்த விஞ்ஞானியா இல்லையா என்பது அவர் செய்யும் வேலையைப் பொறுத்தது, உடையைப் பொறுத்தது அல்ல. ஆண் விஞ்ஞானிகள் என்று வரும்போது இந்தத் தெளிவான பார்வை இருக்கும். ஆனால், பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. பெண்களை எல்லா இடத்திலும் பின்தொடரும் உடைப் பிரச்னை ஸ்டெம் துறையிலும் அவரைப் பாதிக்கிறது என்பதே கவலைக்குரிய நிதர்சனம். ஸ்டெம் பெண்களுக்கும் உடைக்குமான தொடர்பில் பல்வேறு இழைகள் உண்டு. ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்க்கலாம்.

மரபணுவில் பல ஆராய்ச்சிகள் செய்து நோபல் பரிசு பெற்றவர் பார்பரா மக்ளிண்டாக். ஆராய்ச்சியில் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்பதற்காக நின்றுவிடாமல் தன் கேள்விக்குப் பதில் கிடைக்கும்வரை விடாமல் தேடக்கூடியவர். பல்வேறு தடைகளை மீறி முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். அவர் சந்தித்த முக்கியமான பிரச்னைகளில் ஒன்று உடை. குறிப்பாக அவர் விரும்பி அணிந்த பேண்ட்-சட்டை பெரிய சர்ச்சைக்குள்ளானது. 1930களில் பெண்களுக்கான உடை என்பது பாவாடை-சட்டைதான். ஆனால் மணிக்கணக்கில் சோள வயல்களில் நின்று வேலை செய்யவேண்டி இருந்ததால் பேண்ட்-சட்டை அணிந்ததோடு முடியையும் குட்டையாக வெட்டிக்கொண்டார் பார்பரா. அன்றைய காலகட்டத்தில் அது ஒரு மிகப்பெரிய புரட்சி. அது மட்டுமல்லாமல் பார்பராவுக்குத் தன்னம்பிக்கையும் அதிகம். இது போதாதா? “பிரச்னைக்குரியவர்” என்று அவரை முத்திரை குத்தினார்கள் சக விஞ்ஞானிகள். இதைப் பற்றி எழுதும் வரலாற்று எழுத்தாளர் ரேச்சல் இக்னோடோவ்ஸ்கி “பேண்ட்-சட்டை அணிந்த ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பிரச்னைக்குரியவளாகத்தான் பார்க்கிறது” என்கிறார்.

சந்திரயான்

பல ஆண்டுகளுக்கு முன்புவரை நாசாவில் பணியாற்றிய பெண்களுக்கு உடை கட்டுப்பாடுகள் இருந்தன. ஓர் ஆய்வகம் என்றால் அங்கும் இங்கும் ஓடவேண்டியிருக்கும், வேலை செய்ய வேண்டியிருக்கும், இதற்கான சௌகரியமான உடை எது என்றெல்லாம் யோசிக்காமல், “பெண்கள் எல்லாரும் ஸ்கர்ட் அணிய வேண்டும், ஹை ஹீல்ஸ் அணிய வேண்டும்” என்றெல்லாம் அபத்தமான விதிகள் இருந்தன. “இதை யாரும் எழுதி வைக்கவில்லை, ஆனால் எல்லாரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்” என்கிறார் நாசா கணிதவியலாளர் ஆனி ஈஸ்லி. 1950களில் இவர் நாசாவில் வேலைக்குச் சேர்ந்தார். “எனது மேற்பார்வையாளரிடம் பேசினேன். தொடர்ந்து உரையாடினேன், அடுத்த நாள் பேண்ட்-சட்டை அணிந்து வேலைக்குச் சென்றேன். அது பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது” என்று நினைவுகூர்கிறார். 

1970ஆம் ஆண்டில் நாசா வெளியிட்ட உள் சுற்றறிக்கை ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார் எழுத்தாளர் ஏமி ஷிரா டீடெல். “பெண்களே, பேண்ட்-சட்டை அணிவது ஒரு பெண் விஞ்ஞானியாகவும் அமெரிக்க அரசுப் பணியாளராகவும் சரியாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என்று தொடங்கும் அந்தச் சுற்றறிக்கை, “உங்களது மேற்பார்வையாளருக்கு பேண்ட்-சட்டை அவமானகரமாக இருக்காது என்றால் நீங்கள் அந்த உடையை அணியலாம்” என்று முடிகிறது. முழுச் சுற்றறிக்கையைப் படிக்கும்போது வேதனையாகவும் கொஞ்சம் அபத்தமாகவும் இருக்கிறது. சமகாலத்தில் பெண்கள்மீது திணிக்கப்படும் உடைக்கட்டுப்பாடுகளுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல அந்தக் காலத்தில் வெளியான இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முக்கியமான வானவியலாளரான ரூபி பெய்ன் ஸ்காட்டும் இதேபோன்ற ஒரு கட்டுப்பாட்டைச் சந்தித்தார். விண்வெளி ஆய்வகத்தில் பெண்கள் டிரவுசர் உடைகள் அணியக்கூடாது என்றும், ஆண் விஞ்ஞானிகள் டிரவுசர் அணியலாம் என்றும் ஒரு சுற்றறிக்கை வந்தது. பெண்கள் பாவாடை-சட்டைதான் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. வெறுத்துப்போனார் ரூபி. “இது அபத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எனது ஆராய்ச்சிக்காக நான் உயரமான ஒரு வான்கம்பியின்மீது ஏறித் தரவுகளைச் சேகரிக்கிறேன். பாவாடையை அணிந்து நான் ஏணியில் ஏறப்போவதில்லை. இந்த வேலைக்கு டிரவுசர் அணிவதுதான் சரியானது” என்று வாதாடினார். எதிர்ப்புகளை மீறி தனக்குச் சௌகரியமான ஆடைகளையே அணிந்தார்.

பார்பரா மெக்ளிண்டாக்

ஒரு காலத்தில் பெண் விஞ்ஞானிகள் பாவாடை-சட்டை அணிய வேண்டும் என்கிற விதி இருந்தது. இப்போதோ, அதீதப் பெண்மையுடன் இருக்கும் உடைகளை அணியும் பெண் விஞ்ஞானிகள் குறைவாக மதிப்பிடப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அது என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.

மேலை நாடுகளில் இந்தப் போக்கு அதிகமாக இருக்கிறது. அதீதப் பெண்மையுடன் இருக்கும் உடைகளை அணிவது, மேக்கப் போட்டுக்கொள்வது, ஹை ஹீல்ஸ் அணிவது போன்றவற்றைச் செய்யும்போது பெண் விஞ்ஞானிகள் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை. “புறத்தோற்றத்தில் கவனமாக இருப்பவர்கள் எப்படி அறிவாளிகளாக இருக்க முடியும்?” என்கிற எண்ணத்தால்தான் இது நடக்கிறது. “நான் வேலை செய்யும் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒரு சக ஆண் பேராசிரியர், வகுப்பு தொடங்கிய முதல் நாளில் புதிய மாணவர்களைப் பற்றி என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். ‘வகுப்பில் சில மாணவிகள் இருக்கிறார்கள். கண்ணுக்கு மேக்கப் போடுவதில் அவ்வளவு நேரம் செலவழித்திருக்கிறார்கள் என்பது பார்த்தாலே தெரிகிறது. இவர்கள் எப்படி அறிவியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க முடியும்?’ என்று அவர் என்னிடம் கேட்டார். வேதனையாக இருந்தது” என்று பதிவு செய்கிறார் அறிவியலாளர் க்ரேஸி.

இந்த எண்ணம் சிறுமிகள் மனதிலும் பதிந்திருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆராய்ச்சி. டயானா பெட்ஸ் மற்றும் டெனிஸ் செகாக்வாப்டேவா ஆகிய இருவரும் 2012ஆம் ஆண்டில் பள்ளி மாணவ-மாணவியர் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தினார்கள். சில ஒளிப்படங்களை மட்டும்வைத்து, “இவர் என்ன வேலை செய்கிறார்?” என்று மாணவியரைக் கேட்டார்கள். பெரும்பாலான மாணவியர் பெண்மையுடன் தோற்றமளிப்பதையும் அறிவியலையும் தொடர்புபடுத்துவதில்லை என்று அந்த ஆய்வில் தெரிய வந்தது. பெண்மைக்கும் அறிவுக்குமான தொடர்பைப் பற்றிய சமூகப் புரிதலையே இந்த மாணவியர் பிரதிபலித்திருக்கிறார்கள்.

இஞ்சினியர் ஹேஸ்டாக்

பொதுவாகக் களப்பணிகளில்கூட இது ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதில்லை, ஒரு மாநாடு என்று வரும்போது பெண் விஞ்ஞானிகளின் உடை பெரிய பேசுபொருளாகிவிடுகிறது. விஞ்ஞானிகள் என்றால் எப்போதும் அறிவியல் தேடலிலேயே இருப்பார்கள், அவர்களுக்குப் புறத்தோற்றத்தைப் பற்றி அக்கறை இருக்காது என்று பொதுச் சமூகம் நம்புகிறது. ஆகவே ஓர் ஆண் விஞ்ஞானி கலைந்த தலையுடன் டிஷர்ட், டிரவுசர் அணிந்து மாநாட்டுக்கு வரும்போது யாரும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால் அதே மனநிலையில் ஒரு பெண் விஞ்ஞானியையும் பார்ப்பார்களா என்பதுதான் கேள்வி.

உடை சார்ந்த தனது அனுபவத்தை விரிவாகப் பதிவு செய்கிறார் ஒரு பெண் வேதியியலாளர்:

“முதலாமாண்டில் தொளதொளவென்று ஜீன்ஸும் சட்டையும் அணிந்தேன். எனது பேராசிரியர் ‘நல்ல உடைகளை அணிந்துகொள். அப்போதுதான் உன்னை ஒரு பொருட்டாக மதிப்பார்கள்’ என்றார். மூன்றாமாண்டில் அழகான சட்டைகளையும் அளவு பொருத்தமான பேண்ட்களையும் அணிந்தேன். எனது பேராசிரியர், “ஆடையில் கவனம் செலுத்துவதைக் குறைத்துக்கொள். உனது உடை வேலை செய்ய சரியானதாக இல்லை. யாரும் உன்னைப் பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். உயர்கல்விக்குப் போகும்போது வெறுப்பு வந்துவிட்டது, என்ன வேண்டுமானாலும் அணியலாம் என்கிற மனநிலையில் இருந்தேன். சௌகரியமான அளவில் ஜீன்ஸ் பேண்ட்டும் டிஷர்ட்டும் அணிவேன். மாநாடுகளுக்குச் செல்லும்போது கோட் அணிந்துகொள்வேன். எனது பேராசிரியர், ‘உன்னை நீயே மதிக்கவில்லை என்பதுபோல உடை அணிகிறாய். நீ மதிக்கும் அளவில்தான் உன்னை மற்றவர்களும் மதிப்பார்கள்’ என்றார். நான் யோசித்தேன். மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர் அணிந்த அதே உடையைத்தான் அணிந்திருக்கிறேன், ஆனாலும் அவர் என்னைக் குறை சொல்கிறார். எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அடுத்த மாநாட்டில் கொஞ்சம் விலை உயர்ந்த ஷூ, பெண்களுக்கான சட்டை, பொருத்தமான பேண்ட் அணிந்தேன். ஒரு மாநாட்டுக்கு இவ்வளவு அலங்காரமா என்று கேட்டார்கள். அதற்கு அடுத்த மாநாட்டில் விலை உயர்ந்த ஷூவுக்கு பதிலாகக் கால்வலியைக் குறைக்கும் ஷூ ஒன்றை அணிந்தேன். அந்தக் காலணி மாநாட்டில் அணிவதற்குப் பொருத்தமானது அல்ல என்றார்கள். பெண்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றுகிறார்கள் என்றால் அவர்கள் என்ன அணிந்தாலும் யாராவது குறை சொல்வார்கள் என்று புரிந்துகொண்டேன்.”

ஆண்களுக்கான உடை அமைப்புக்கும் பெண்களுக்கான உடை அமைப்புக்குமே அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார் ஓர் ஆடை வடிவமைப்பாளர். ஆண்களுக்கான அலுவலக உடை என்பது, வடிவமைப்பிலேயே சமமானதாகவும் முயற்சி எதுவும் இல்லாமல் எளிதில் அணிந்து வேலை செய்யக்கூடியதாகவும் இருக்கிறது. “அதிலும் குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் இந்தப் பிரச்னையை அதிகமாகச் சந்திக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட உடை, அலங்காரத்தில் இருந்தால்தான் அவர்களுக்கு மதிப்பு கிடைக்கிறது” என்று குறிப்பிடுகிறார் ஆல்கா ஆண்டர்சன். ஆண்கள் நிறைந்த ஆய்வுக்கூடங்களிலோ மாநாடுகளிலோ ஒரு சம அந்தஸ்தைப் பெறுவதற்கு இந்தச் சிக்கலான பாதைக்குள் நுழைந்து தனக்கான சரியான உடையைப் பெண் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். தலைமுடியை என்ன செய்யலாம்? தொங்கும் தோடுகள் போடலாமா அல்லது சிறு தோடுகள் போதுமா? மேக்கப் போடலாமா, கூடாதா? பெரிய வடிவங்கள்/பளீர் நிறம் கொண்ட உடைகளை அணியலாமா கூடாதா? பேண்ட்-சட்டை அணியலாமா, பாவாடை சட்டை அணியலாமா? நகபாலிஷ் போடலாமா கூடாதா? இப்படி எண்ணற்ற கேள்விகள்.

மங்கள்யான்

இதை உடைக்கும் சில பெண்களும் இருக்கிறார்கள். 2011ஆம் ஆண்டில் நாசாவில் உரையாற்றிய ரீட்டா கிங் என்கிற விஞ்ஞானி, வேண்டுமென்றே பளபளப்பான பார்ட்டி உடையை அணிந்து சென்றார். “எனக்குச் சிறுமிகள் ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள். விஞ்ஞானிகளும் பளபளப்பாக இருக்கலாம் என்று நீங்கள் காட்டுங்கள். நாசாவில் பேசும்போது பளபளப்பான உடையை அணிந்துசெல்லுங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். அதற்காக அந்த உடையை அணிந்தேன்” என்று விளக்கம் தந்தார்.

இந்தியச் சூழலுக்கு வருவோம். 2014ஆம் ஆண்டில் இந்தியா செவ்வாய் கோளுக்குச் செயற்கைக்கோள் அனுப்பியபோது, இஸ்ரோவில் பணியாற்றிய பெண்கள் பலரும் அதைக் கொண்டாடிய ஒரு ஒளிப்படம் வெளியானது. வெகு விரைவிலேயே அந்தப் படம் வைரலானது. தனிப்பட்ட முறையில் அந்தப் படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நேரடியான விஞ்ஞானிகள் அல்லர் என்பதும் இஸ்ரோவில் வேலை செய்யும் நிர்வாகப் பணியாளர்கள் என்பதும் பிறகு தெரிய வந்தது. மங்கள்யான் திட்டத்தில் பணியாற்றிய பெண் விஞ்ஞானிகளின் ஒளிப்படங்களையும் தேடிப் பார்த்தேன். பெண் விஞ்ஞானி என்றால் மேரி க்யூரியின் படத்தையும் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கறுப்பு வெள்ளைப் படங்களையும் பார்த்துப் பழகிய எனக்கு மங்கள்யான் விஞ்ஞானிகளின் ஒளிப்படம் புத்துணர்ச்சியைக் கொடுத்தது. நம் வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்ற தோற்றம் கொண்ட இவர்கள் மிகப்பெரிய ஒரு விண்வெளி ஆய்வில் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைப் பார்க்கும் பள்ளி மாணவிகளுக்கு எவ்வளவு உத்வேகம் பிறக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

ரீட்டா கிங்

2023ஆம் ஆண்டு. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலாவின் தென் துருவத்தில் இறங்கியது. சந்திரயான் திட்டத்தில் பங்கேற்ற இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகளுடைய படம் வெளியானது. படம் வைரலானது. இந்த முறை ஒளிப்படத்துடன் வெளியான பதிவுகளுடைய தொனி வேறாக இருந்தது. “இவர்கள் ஜீன்ஸ் அணியத் தேவையில்லை, சேலை அணிந்தே ஜெயித்திருக்கிறார்கள்”, “நவீனம் என்பது பெண்கள் சிகரெட் பிடிப்பதோ, மது அருந்துவதோ அல்ல, இதுதான் நவீன பெண்ணியம்”, “இந்திய உடையான சேலையை அணிந்து இந்தப் பெண் விஞ்ஞானிகள் வெற்றிபெற்றிருக்கிறார்கள்”, “பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களால் உண்மையில் இஸ்ரோ விஞ்ஞானிகளைக் கையாள முடியாது. பெரிய பொட்டு, பூ வைத்துக்கொண்டு சேலை அணிந்து வேலை செய்கிறார்கள், நிலாவுக்கு ராக்கெட் அனுப்புகிறார்கள்”, “பெண்ணியம் என்றால் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, மார்டன் உடைதான் அணிய வேண்டும் என்று சொல்வார்களே, அவர்கள் எங்கே? இந்தப் பெண்கள் அந்தத் தோற்றத்தில்தான் சாதனை செய்திருக்கிறார்கள்”, “புடவை-பொட்டு-தலையில் பூ – நெற்றியில் குங்குமம் – தாலி, இவை அடக்குமுறையின் வடிவங்கள் அல்ல, பலத்தின் வடிவங்கள், இதைத்தான் சந்திரயான் 3 பெண்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்” என்று கணக்கிலடங்காத பதிவுகள்.

அலுப்பாக இருந்தது. இதுபோன்ற பதிவுகள் வருவதற்கு அடிப்படைவாத அரசியல் சூழலும் ஒரு காரணம், ஆனாலும் இவற்றை எளிதாகக் கடந்துபோக முடியவில்லை. பெண் விஞ்ஞானிகளை முன்மாதிரிகளாகக் காட்டி, மாணவிகளை அறிவியல் துறைக்குள் வருவதற்கு ஊக்கம் கொடுப்பதற்கோ, “உன் அம்மாவையும் சித்தியையும்போலத் தோற்றம் கொண்டவர்கள் ஜெயிக்கிறார்கள் பார், உன்னால் முடியாதா?” என்று ஸ்டெம் பெண்களை ஊக்குவிப்பதற்கோ இந்தப் படங்களைப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் உரையாடல் எங்கேயோ திசைமாறிப் போய்விட்டது. நிலாவுக்கே ராக்கெட் விட்டாலும் பெண்களின் உடை மட்டும்தான் பேசுபொருளாக இருக்கும் என்கிற நிதர்சனம் முகத்தில் அறைந்தது.

இந்தியாவில் ஸ்டெம் பெண்கள்மீது இருக்கும் பிற உடைக்கட்டுப்பாடுகளை விரிவாகப் பேசுகிறார் சத்யேன் போர்டலோய். முனைவர் பட்டப்படிப்பில் இருக்கும் பெண்கள்மீது கடுமையான உடைக்கட்டுப்பாடுகள் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கல்லூரியில் ஏதாவது ஒரு விழா என்றால், பெண் ஆராய்ச்சியாளர்கள் நிச்சயமாக சேலை அணிய வேண்டும், சேலை பாரம்பரிய உடையாக இல்லாத வடகிழக்கு மாநிலப் பெண்களுக்கும் இதுதான் விதி என்கிறார். ஆண்களுக்கு இதுபோன்ற எந்த விதிகளும் இல்லை என்று சொல்லும் அவர், இதைச் செய்ய மறுத்ததால் தனக்குத் தெரிந்த ஒரு பெண் ஆராய்ச்சியாளர் மறைமுகமாகத் தண்டிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறார். முக்கிய விருந்தினர்கள் கல்லூரிக்கு வரும்போது முனைவர் பட்ட மாணவிகள் மட்டும் சேலை அணிந்துகொள்ள வேண்டும் என்பது பல இடங்களில் இருக்கும் எழுதப்படாத விதி. நானும் அவ்வாறு நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன். இந்த விதி சக ஆண் மாணவர்களுக்குக் கிடையாது. “ஃபார்மல் உடை அணிந்துகொள்ளுங்கள்” என்று மட்டும் அவர்களிடம் சொல்வார்கள்.

பெண்மை நிறைந்த உடை அணிந்தால் மதிக்க மாட்டார்கள் என்பது போன்ற மேலை நாட்டு நம்பிக்கைகள் இந்தியாவின் ஸ்டெம் துறைகளில் அவ்வளவாகக் கிடையாது. இங்கு இருக்கும் விவாதத்தின் மையப்புள்ளி, அது மேலை நாட்டு உடையா அல்லது இந்திய உடையா என்பதுதான். இந்திய உடை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மேலை நாட்டு உடை என்றால் அதன் அளவுகளையும் தன்மையையும் பொறுத்து எதிர்வினை இருக்கும். இந்தியாவில் நடக்கும் அறிவியல் மாநாடுகளில் பெண் விஞ்ஞானிகள் சேலை, சுடிதார், பேண்ட்-சட்டை போன்ற மூன்றுவித உடைகளைத்தான் அணிந்துவருகிறார்கள். இதற்குப் பெரும்பாலும் எதிர்வினை எதுவும் வருவதில்லை. தினசரி ஆய்வகத்துக்கு எந்த உடை அணிய வேண்டும் என்பதிலும் பல்கலைக்கழக வளாகங்களில் ஏதாவது விழாக்கள் நடக்கும்போது எந்த உடை அணிய வேண்டும் என்பதிலும்தான் பிரச்னை வருகிறது.  இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், உயர்பதவிகளில் இருக்கும் ஆண் விஞ்ஞானிகள் பலரும் உள்நாட்டு மாநாடுகளுக்குக்கூட கோட்-சூட் அணிந்து வருவது வழக்கமாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் மனநிலை என்னவென்று தெரியவில்லை.

சமூகத்தில் ஆண்களுக்கும் சில உடைக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவை இவ்வளவு கடுமையானவையாகவும் சிக்கலானவையாகவும் இருப்பதில்லை. ஆய்வகத்தில் வேலை செய்யும் ஆண்களுக்கான உடை என்று வந்துவிட்டால்,  பாதுகாப்பு மற்றும் சௌகரியம் தொடர்பான உடைக்கட்டுப்பாடுகள் இருக்கும், அவ்வளவே. மாநாடுகளுக்கு வரும் ஆண் விஞ்ஞானிகள், காலையில் களப்பணியை முடித்துவிட்டு அதே உடையில் வந்து சிறப்புரை நிகழ்த்துவார்கள். ஆனால் பெண் விஞ்ஞானிகளுக்கு அந்த சௌகரியம் இருப்பதில்லை. என்ன உடை அணிய வேண்டும் என்று முடிவெடுப்பதே பெரிய தலைவலியாகப் போய்விடும். யோசிக்காமல் ஏதாவது உடையை அணிந்து சென்றுவிட்டால் கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் சொல்லவேண்டியிருக்கும்.

பெண் என்பதால் நீ ஸ்கர்ட் அணிந்துதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்வது அடக்குமுறை என்றால், பூக்கள் போட்ட ஸ்கர்ட்டை அணிந்த ஒரு பெண் விஞ்ஞானியை நான் மதிக்க மாட்டேன் என்று சொல்வதும் அடக்குமுறைதான். தேடல்கள் நிறைந்த அறிவியல் துறையில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. மனித இனத்தின் எதிர்காலத்துக்கான பல பதில்களை அறிவியல்தான் தரவேண்டும். அந்தத் துறையில் இருந்துகொண்டு, இருக்கும் எல்லா முக்கியப் பிரச்னைகளையும் விட்டுவிட்டுப் பெண்களின் உடையைப் பற்றிப் பேசுவது சமூகத்தில் நிலவும் பாலின ஏற்றத்தாழ்வுகளைத்தான் பிரதிபலிக்கிறது.

இதில் இன்னும் சில கேள்விகளையும் எழுப்ப வேண்டும். பெண்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் என்றால், பால் நெகிழ்தன்மை கொண்டவர்கள், திருநர்கள் போன்றவர்களின் நிலை என்னவாக இருக்கப் போகிறது? சமூகம் மறுத்த பாலின அடையாளத்தை வெளிப்படையாகப் பறைசாற்றிக்கொள்வதே தனக்கான அரசியல் என்று நினைக்கக்கூடிய ஒரு திருநங்கையோ திருநம்பியோ இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள் தாக்குப்பிடிக்க முடியுமா? பால் நெகிழ்தன்மை கொண்டவர்கள் எந்தப் பாலினத்துக்கான கட்டுப்பாட்டின்கீழ் வருவார்கள்? இதை யார் முடிவு செய்வார்கள்?

ஆய்வகத்தில் பெண்களுக்கான சரியான உடை, பெண்களுக்கான பாதுகாப்புக் கவசங்கள் என ஸ்டெம் பெண்களுக்கான உடை விஷயத்தில் சரி செய்வதற்காக எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. ஜூலை 2020ஆம் ஆண்டில் உலகிலேயே முதல்முறையாக, பெண் விண்வெளி வீரர்கள் மட்டுமே பங்குபெறும் விண்வெளி நடை (Spacewalk) நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசியில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்த உடைகளில் பெண்களுக்குப் பொருந்தும் உடைகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வு கைவிடப்பட்டது. இப்படி எத்தனையோ பிரச்னைகள் இருக்க, “பெண் விஞ்ஞானிகள் என்ன உடை அணிந்தால் சரியாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்புவதும், அதற்கான பதில்களை ஆண் விஞ்ஞானிகள் விவாதிப்பதும் தேவையற்றது. எது சௌகரியமான உடையோ அதுவே சரியான உடை. இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

பாலின ஏற்றத்தாழ்வு ஒருபுறம் என்றால், சாதி மற்றும் இனம்சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஸ்டெம் பெண்களும் இதுசார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களா?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’, ‘சூழலியலும் பெண்களும்’ ஆகிய தொடர்கள் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகங்களாகக் கொண்டாடப்படுகின்றன!