இன்று இருபத்தியோராம் நூற்றாண்டில் மரபியலைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மரபியல் என்பது இன்று பயன்பாட்டுக்கு வந்த சொல் கிடையாது. இதற்குப் பின்னால் பல நூற்றாண்டுகளுக்கான வரலாறு உண்டு. ஆம், இது தொல்காப்பியர் காலம் தொட்டே புழக்கத்தில் இருந்து வரும் ஒரு சொல் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தமிழர்களின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் பற்றி அலசி ஆராய்ந்த மிகத் தொன்மையான தமிழ் நூல்களில் ஒன்றுதான் தொல்காப்பியம். இந்நூலின் பொருளதிகாரத்தில் மரபியல் சார்ந்த சில பாக்கள் இடம்பெற்றுள்ளன‌. அது உயிரின வகைகளைப் பற்றி பேசுகின்றன.

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்ட றிவதுவே அதனொடு நாவே

மூன்ற றிவதுவே அவற்றொடு மூக்கே

நான்க றிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்த றிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தொர் நெறிப்படுத் தினரே”. (பொருள். மரபியல் – 27)

அறிவதுவே என்கிற சொல்லுக்கு ‘உணர்ந்து அறிதல்’ என்று பொருள். இது உலகில் உள்ள அத்தனை உயிர்களையும் அவற்றின் புலன்கள் வாயிலாக வகைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. உயிர்களின் உணர்புலன்கள் அதிகமாக அதிகமாக அவற்றின் திறமைகளும், சுற்றுச்சூழல் மாற்றத்தை அறியும் திறனும், அச்சூழலுக்கேற்ப மாறும் தன்மையும் அதிகரிக்கும். இதன் சாராம்சத்தைத்தான் பிற்காலத்தில் அறிவியலாளர் சார்லஸ் டார்வினின் ’survival of the fittest’ கோட்பாடும் கூறுகிறது.

இந்தப் புலன் சார்ந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாகச் சில குறிப்புகளும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

“புல்லும் மரனும் ஓரறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”. (பொருள். மரபியல் – 28)

தொடுதல் வழியாக அறியும் உயிரினங்களை ஓரறிவு உயிர்களாகத் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். மரங்களுக்கு உயிர் இருப்பதை நவீன அறிவியல் பல ஆராய்ச்சிகள் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அதை மிக எளிமையாக, இந்நூற்பா உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் தொடு உணர்வு என்பது பிற உயிர்களின் தொடுகை மட்டுமன்றி சூரிய ஒளி, காற்று, மழை, குளிர் போன்றவை ஏற்படுத்தும் ஒருவகை தாக்கமும் இதில் அடக்கம். இது போன்ற உதாரணங்கள் ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் உண்டு.

சரி, இதற்கும் நவீன மரபியலுக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், இது நவீன அறிவியல் கூறும் சில கோட்பாடுகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. பரிணாம வளர்ச்சியைப் பற்றி பேசுகின்ற போது டார்வினின் கோட்பாடுகளான ’இயற்கை தேர்வு’ (natural selection) மற்றும் ’பொருந்தி வாழ்வதே பிழைக்கும்’ (survival of the fittest) இரண்டையும் தவிர்க்கவே முடியாது. சுற்றுச்சூழல் மாற்றத்திற்கேற்ப உயிர்கள் பல்வேறு உடற்கூறு மாற்றங்களை மேற்கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழும் உடற்கூறுடைய உயிரினங்கள் பிழைக்கும் என்பதுதான் ’பொருந்தி வாழ்வதே பிழைக்கும்.’ உயிர்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கு இதுதான் பதில்.

ஆதிமனிதன் பிழைப்பிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் பல நிலப்பரப்புகளை நோக்கிப் பயணித்தான். அந்தப் பயணத்தில் பல்வேறு இடங்களில் அவன் கூட்டமாக வாழத் தொடங்கினான். அது ஒரு சமுதாயமாக உருவாகியதோடு மட்டுமல்லாமல் அந்த நிலப்பரப்பிற்கேற்ப பல உடற்கூறு மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அது வழிவழியாக மரபணுக்கள் மூலம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் தோல் நிறங்கள். ஐரோப்பியர்கள் வெள்ளையாக இருப்பதற்கு அவர்கள் குளிர்ப் பிரதேசத்தில் வாழ்கிறார்கள் என்பதுதான் காரணம். கடுமையான குளிரை எதிர்கொள்பவர்கள் அல்லது மிக குறைவான சூரிய ஒளி கிடைக்கும் பிரதேசங்களில் வாழ்பவர்கள் உடலில் தோல் கருமையை ஏற்படுத்தும் தோல் நிறமியான melanin மிகக் குறைவாகச் சுரக்கும். இது கம்மியாகச் சுரப்பதால்தான் ஐரோப்பியர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள். இந்தத் தோல் நிறமி சூரிய கதிர்வீச்சால் தோலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இயற்கையாகவே சூரிய ஒளி குறைவாகக் கிடைக்கும் இடத்தில் வாழ்பவர்களுக்கு இந்தத் தோல் நிறமியின் தேவை அதிகமிருக்காது.

ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இது அப்படியே நேர் எதிராக நடக்கிறது. சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழ்பவர்கள், அதன் பாதிப்பிலிருந்து விடுபட அவர்கள் உடம்பில் இயற்கையாகவே தோல் நிறமி அதிகம் சுரக்கும். அதனால் அங்கு வாழ்பவர்கள் கருப்பாக இருக்கிறார்கள். இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இரண்டும் கலந்தது போன்ற தோல் நிறங்கள் உண்டு. சரி இதில் எது நல்லது என்று கேட்டால், அந்தந்தச் சூழலுக்கேற்ப எது பொருந்தி வாழும் தன்மையை வழங்குகிறதோ அதுவே சிறந்தது.

கடும் குளிர்ப் பிரதேசத்தில் வாழ்பவர்களின் உடலில் வைட்டமின் டி குறைவாக இருக்கும். ஏனென்றால் வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து பெறப்படுவது. அதனால்தான் அங்கு வாழ்பவர்கள் சூரியக் குளியல் (sun bath) எடுக்கிறார்கள். இதுவே நம்மூர் நிலையில் சன் பாத் எடுப்பதைப் பற்றி நினைத்து பார்த்தாலே உடல் எரிகிறது. ஆனால், நம்மூர் மக்களுக்கு அவ்வளவு எளிதாகத் தோல் புற்றுநோய் வராது. காரணம் நம் உடலில் சுரக்கும் மெலனின் தோல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் ஓர் அரணாகச் செயல்படுகிறது. அப்படிப் பார்த்தால் இயற்கையில் எது நல்லது, எது கெட்டது என்று தீர்மானமாக எதையும் சொல்லிவிட முடியாது.

ஐம்புலன்களை வைத்து ஐந்தறிவு வரை வகைப்படுத்திவிடலாம். ஆனால், ஆறாம் அறிவாக இருப்பதுதான் என்ன என்கிற கேள்விக்கும் தொல்காப்பியத்தில் பதில் உண்டு‌. ஆறாம் அறிவாக இருப்பதுதான் மனன் என்னும் மனம். மனிதர்களுக்கு மனம் என்கிற ஒன்று இருப்பதால்தான் நாம் உலகின் முதன்மை உயிராகக் கருதப்படுகிறோம். இந்த மனம்தான் இன்று நமக்கிருக்கும் சிந்தனைத் திறனுக்கும், அறிவாற்றலுக்கும் காரணம். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும் இந்த மனமும் அது சார்ந்த சிந்தனைகளும்தாம் அடிப்படை. இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்ததற்கு மனிதனின் பகுத்தறிவும், ஆராய்ந்து அறியும் திறனும் தான் காரணம். அப்படி என்றால் மரபியல் என்பது மனிதன் சார்ந்தது மட்டுமா என்றால் அது உயிர்கள் சார்ந்தது.

ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்கள் அனைத்தும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறையினருக்குக் கடத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு மாமரத்தில் இருந்து இன்னொரு மாமரம் உருவாக முடியும் என்பதுதான் ஓரறிவு உயிரினங்களும் மரபணுக்களைக் கடத்துவதற்கான சான்று. இதைத்தான் மரபியலின் தந்தையான கிரிகர் ஜான் மெண்டல் (Gregor John Mendel) பட்டாணியில் நிகழ்த்திய ஆய்வு  உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு தாவரமோ அல்லது உயிரினமோ முந்தைய தலைமுறையின் சாயலையோ அல்லது பண்பையோ தான் கொண்டிருக்கும் என்னும் பெரும் கோட்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் மெண்டல். டார்வினையும் மெண்டலையும் அடிப்படையாக வைத்துதான் இன்றைய நவீன மரபியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் தொல்காப்பியம் போன்ற அடிப்படை அறிவியல் தகவல்களை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். அப்படி நாம் கவனிக்கத் தவறிய பல மரபியல் சார்ந்த தொழில்நுட்பங்களையும் அதன் விளைவுகளையும் உணர்ந்து அறிவதுதான் இத்தொடரின் நோக்கம்.

குறிப்பு – தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் – தொல்காப்பியத்தொண்டன் முனைவர் நா.க.நிதி.   

(https://www.tholkappiyam.org/mantrams/kovai/nigalvu_40_Dec_2020.php)

தொடரும்

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.