திருமணங்கள் உலகெங்கும் நிறுவனப்படுத்தப்பட்டுவிட்டன. தமிழர் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் திருமண முறைகளைக் கடந்த ஓரிரு கட்டுரைகளில் கண்டறிந்தோம். தந்தை வழி சமூகங்கள் நிறைந்த உலகில் தாய் வழி சமூகங்கள் உண்டா என தேடிப் பார்த்தால், ஆசியாவில் மட்டுமே இந்தோனேஷியா, சீனா மற்றும் இந்தியாவில் பழங்குடியினர் இன்றும் தாய்வழி இனக்குழுக்களாக வாழ்த்து வருகின்றனர்.

தாய்வழிச் சமூகம் என்பது  தந்தை வழிக்கு பதிலாக, தாய்வழி வழியே ஒரு குடும்ப வம்சாவளியை கடைபிடிக்கும் குழுவாகும். ஒவ்வொரு சமூகமும் அதன் மூதாதையர் வம்சாவளி உறவைக் கணக்கிடுகையில் சில அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது. குடும்பம், திருமணம், திருமணத்துக்குப் பிந்தைய குடியிருப்பு போன்ற விடயங்கள் இதை நிர்ணயம் செய்கின்றன. ஒரு பொதுவான மூதாதையரின் வம்சாவளியைக் கண்டறியும் தனிநபர்களின் குழுவை ஒரு பரம்பரை என்கிறோம். எனவே, ஒரு தாய் வழி சமூகத்தில், தனிநபர்கள் பெண் வம்சாவளியின் மூலம் உறவினர்களாக தொடர்புபடுத்தப்படுகிறார்கள்.

சீனாவின் ஒரு பழங்குடி சமூகம் தனித்துவமாக இன்றும் வாழ்ந்து வருகிறது.சீனாவின் யுனான் மற்றும் சிச்சுவான் பகுதிகளில் ஏறத்தாழ 40,000 மக்கள்தொகை கொண்ட மூசோ (Mosuo) பழங்குடி மக்கள் இன்றும் தாய்வழிச் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

https://www.theguardian.com/lifeandstyle/2017/apr/01/the-kingdom-of-women-the-tibetan-tribe-where-a-man-is-never-the-boss

இச்சமூகத்தின் தனித்துவமான பண்பாட்டு மரபாக இருப்பது Walking marriages என அழைக்கப்படும் ‘நடை மணங்கள்’. பெண்கள் தங்கள் தேவைக்கேற்ப, எத்தனை துணைகளை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம். அர்ப்பணிப்பு கொண்ட உறவுகள் அங்கு எதிர்பார்க்கப்படுவதில்லை. சட்டங்கள், திருமண நிறுவன அடிப்படையிலான சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை.

நடை மணம் பின்பற்றும் பெண்ணின் அழைப்பின் பேரில், ஆண் அவளுடன் இரவு தங்குவான். மறு நாள் அந்த ஆண் தன் வீட்டிற்கு சென்றுவிடுவார். இணையர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்வதில்லை. ஒரே ஆணுடனும் ஒரு பெண் காலம் முழுக்க வாழ்வதில்லை. ஒருவேளை குழந்தை பிறந்தால், இன்னாரின் குழந்தை என்பதை குழந்தை பிறந்த ஓராண்டு நிறைவுக்குப் பிறகு ‘தந்தை’யின் தாய் மற்றும் உறவினர்கள் பரிசுகளுடன் வந்து குழந்தையைப் பார்த்துப் போனால் தெரிவதுண்டு. இல்லையேல் அதை யாரும் பொருட்படுத்துவது இல்லை.

குழந்தைகள் பெண்களால் வளர்க்கப்படுவதோடு, அவர்களின் ஆண் உறவினர்கள் (பெரும்பாலும் அவர்களின் சகோதரர்கள்) தகப்பன் என்ற இடத்தை நிறைவு செய்வர். சிறு வயது முதலே குழந்தை வளர்ப்பு என்ற பொறுப்பை ஆண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பெண்களே குடும்பத் தலைவிகளாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பர். மேலும் அவர்கள் ஆண்களின் வருமானத்தில் தங்கியிருப்பதில்லை. விவசாயமும் கால்நடைகளும் வாழ்வாதாரமாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சகல வேலைதிறன்களையும் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்கிறார்கள்.

உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் மனம் ஒத்துப்போகாமல் போகும்போது அவர்களாகவே பிரிந்து விடுவர். திருமணம் தாண்டிய உறவுகள், கசப்பான விவாகரத்து எல்லாம் இல்லை! குழந்தைகள் தாயினாலும் தாய்வழி ஆண் உறவுகளாலும் வளர்க்கப்படுவதால், தாய் தந்தையர் உறவு சீர்குலையாமல் பேணப்படுகிறது. இணையர்களின் உறவும் பிரிவும் குழந்தைகளை பாதிக்காத சமூக அமைப்பு வரவேற்கப்பட வேண்டியதொன்றே.

இந்தோனேசியாவின் மேற்கு தீவுகளைச் சேர்ந்த ‘மினங்கபா’ (Minangkabau) மக்களும் தாய்வழி முறையை கடைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர்.

http://www.mcgkl.org/Lectures+%26+Excursions+-+Recent+reviews_170_1.htm

திருமணங்களில் மணமகளின் குடும்பத்தாரே திருமண திட்டமிடல், துணை தேடல் போன்ற முக்கிய விடயங்களை செய்வதுண்டு. அதிலும் பெண்ணின் தாயாரும் அவரின் குடும்பத்தாருமே மாப்பிள்ளை வீட்டாருடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு முடிவு செய்யும்போதும், பெண்ணின் தந்தை இவற்றில் பங்கு கொள்ள மாட்டார்.

திருமணத்தின் பின் மணமகன் பெண் வீட்டிற்கு குடிபெயர்ந்து விடுவார். பெரும்பாலும் திருமணமாகிய பின் ஆண்கள் வேலைவாய்ப்பு தேடி பிற ஊர்களுக்கோ அல்லது வேற்று நாடுகளுக்கோ சென்று விடுவர். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தாயின் பெயரை தமது குடும்ப பெயராக ஏற்றுக் கொள்வர். பூர்விக சொத்து பெண்களுக்கே வழிவழியாக வழங்கப்படுகிறது. பெண்கள் தம் சகோதரிகளிடையே சொத்துகளைப் பங்கிடுவர்.

உலகின் மிகப்பெரிய தாய்வழிச் சமூகமாக கருதப்படும் மினங்கபா இனக்குழுவின் மக்கள்தொகை 5 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் இஸ்லாமின் வருகையும் அதன் பின்னர் இரண்டு நூற்றாண்டுகளாக இருந்த ஐரோப்பிய காலனித்துவமும் இச்சமூகத்தை மாற்றியமைத்த போதும், நிலவுடமையும் சொத்துரிமையும் பெண்களில் கைகளிலே இன்றும் உள்ளது.

வட இந்தியாவின் காசி (Khasi) மற்றும் கரோ (Garo) பழங்குடியினர் தாய் வழிச்சமூகமாக வாழ்கின்றனர். தாயின் பெயர் குடும்பப் பெயராக குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறது. மறுமணங்கள் நடந்தாலும் குழந்தைகள் தாயுடன் வாழ்கின்றனர்.

https://www.culturalsurvival.org/publications/cultural-survival-quarterly/bribri-women-lead-way-community-based-tourism-costa-rica

கோஸ்டாரிக்காவின் பிரிபிரி (BRIBRI) இனத்தவர் 12,000 -35,000 வரையிலான சனத்தொகை கொண்ட தாய் வழி இனக்குழுக்களாக வாழ்த்து வருகின்றனர். கென்யாவின் உமோஜா (Umoja) கிராமம், ஆண்கள் இல்லாத சமுதாயமாக 1990 இல் உருவாக்கப்பட்டது. பாலின ரீதியான வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள் மட்டுமே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பெண்களும் குழந்தைகளும் சுற்றுலா பயணிகளுக்கு கிராமத்தை சுற்றிக் காட்டுவதையும் பெண்கள் உரிமைகள் பற்றி பிறருக்கு அறிவூட்டுவதையும் தொழிலாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். கானாவின் அகான் (Akan) மக்களும் தாய் வழி சமூகமாக இயங்கி வருகின்றனர்.

https://www.nbcnews.com/news/nbcblk/kenya-s-umoja-village-sisterhood-preserves-past-prepares-future-n634391

நம்முடைய சமூகங்களில் விவாகரத்து என்ற விடயம் பொது வெளியிலோ, நீதி மன்றங்களிலோ எங்கு வந்தாலும் பெரும் விவாதத்தை உண்டு பண்ணுவது குழந்தைகளின் எதிர்கால நலனே. இதனாலேயே பல கசப்பான ஆரோக்கியமற்ற திருமணங்கள், வேறு வழியில்லாமல் நிலைத்து விடுகின்றன. 

தாய்வழிச் சமூகங்களில் காணப்படும் குடும்ப அமைப்பு, கூட்டு குடும்பக் கூறுகளுடன்தான் இயங்குகிறது. தனிக்குடும்ப அமைப்பின் அலகுகள் அதில் இல்லை. ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களின் சிக்கலும் அவற்றுக்கு இல்லை. இதனால் குழந்தை வளர்ப்பு யாருக்கும் கடினமாக அமைவதில்லை. பிரிவின்போது யார் குழந்தையை வளர்ப்பது போன்ற உரிமை பிரச்னைகள் இங்கு எழுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு ஆணும் தனது சகோதரியின் குழந்தைகளை தம் வாரிசுகளாகக் கருதி, அவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவார். அதனால் தான் உறவு கொள்ளும் பெண்ணின் குழந்தைகளைத் தன் வாரிசுகளாக உரிமை கோருவதில்லை.

அதே வேளை இருபாலாரும் காதலையும் பாலுறவையும் ரசித்து, ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

நவீன சமுதாயங்களில் பாலுறவை ஒழங்குபடுத்தவும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப்பத்திரமாகவே திருமணங்கள் இருக்கின்றன. இவற்றுக்கு நேர் எதிராக தாய் வழி சமூகத்தினர், குழந்தைப் பேறையும் இனணயர்களின் உறவுகளையும் முற்றாக வேறுபடுத்தி பார்க்கின்றனர். நடை மணங்களின் நோக்கம் முற்று முழுதாக காதல் அல்லது பால் ஈர்ப்பு அடிப்படையிலானது. இங்கு உறவும் பிரிவும் வழமையானது.

நியூ மெக்சிக்கோ பல்கலைக்கழகத்தின் அண்மைய ஆய்வுகளின்படி, தாய்வழிச் சமூகத்தில் வாழும் இப்பெண்கள் ஒப்பீட்டளவில் ஆரோக்கியம் நிறைந்தவர்களாக இருப்பதாக நிறுவப்பட்டுள்ளது.

கால ஓட்டத்தில் நம்  சமூகம் மீண்டும் தாய் வழிச் சமூகமாக மாறிவிடாதா  என எண்ணத்தோன்றுகிறது அல்லவா?

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.