உலகம் தோன்றிய நாட்களில் திருமணம் என்கிற ஒன்று கிடையாது. கட்டற்ற பாலியல் உறவுகள்தாம் பெருகிக் கிடந்தன. நாளடைவில் நாகரிகம் வளர வளர சமுதாயம் என்கிற ஒன்றை ஏற்படுத்தி, எல்லாவற்றையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தார்கள். பாலியல் செயல்பாடுகளில் பெண்ணே அதிகமாகப் பாதிக்கப்பட்டதால் திருமணம் என்கிற ஒன்றை ஏற்படுத்தி, பாலுறவை முறைப்படுத்தி அதன் மூலம் குடும்பம் என்கிற அமைப்பு உருவாயிற்று. பெண்ணும், ஆணும் இணைந்து இல்வாழ்க்கை மேற்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமே திருமணம் என்று அறியப்படுகிறது. இப்போதெல்லாம் தன்பாலீர்ப்பாளர்கள் திருமணமும் பெருகி வருகிறது. உலகில் திருமணம் என்பது பொதுவான நடைமுறையாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு விதமான விதிகள், நெறிமுறைகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டன. அவ்வாறு திருமணம் என்கிற அமைப்பு உருவாகும் போது யாருடன் எல்லாம் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், யாரையெல்லாம் திருமணம் செய்யாமல் விலக்கி வைக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் ஏற்படுத்தினார்கள்.

சபிண்டம் அல்லது சக-பிண்டம் என்பது ஒரே மூதாதையர்களைக் கொண்ட உறவுகளைக் குறிக்கும் ஒரு சொல். ஒரே மூதாதையரின் பிண்டத்தில் ஒரு பகுதியில் இருந்து தோன்றியவர்கள் என்று பொருள். ஒரே குடும்பத்தில் ரத்த சொந்தத்தில் உள்ள உறவுகளில் யாரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று பண்டைய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதை எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றனர். சபிண்டா உறவு என்பது ‘தாய்வழி உறவாக இருந்தால் , மூன்று தலைமுறைக்கும், தந்தைவழி உறவாக இருந்தால் ஐந்து தலைமுறைக்கும்’ இந்த ரத்த உறவு தொடரும். இந்த உறவுகளில் திருமணம் செய்யக் கூடாது. ஏனென்றால், இவர்களை நமது உடன்பிறந்தவர்களைப் போல நினைத்துக் கொள்ள வேண்டும். 

தந்தை வழி, தாய் வழி  உறவுகள் என்றால் அவர்களது குழந்தைகளைச் சபிண்ட உறவுகள் என்று சொல்லலாம்.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இயற்றப்பட்ட ஒரு பொது சிவில் சட்டம் பேசு பொருளாகியிருக்கிறது. நெருங்கிய உறவுகளுக்குள் திருமண பந்தம் கூடாதென்பதுதான் அந்தச் சட்டம். ஆனால், இந்தியாவில் தந்தையின் சகோதரன் குழந்தைகளையும், தாயின் சகோதரி குழந்தைகளையும் உடன்பிறப்புகளாகக் கருதுகிறோம். அதே நேரத்தில் தந்தையின் சகோதரி குழந்தைகளையும், தாயின் சகோதரன் குழந்தைகளையும் திருமண பந்தத்திற்கு உட்பட்ட குழந்தைகளாகக் கருதுகிறோம். இது தென்னிந்தியாவில் மட்டுமல்ல. வட இந்திய சமூகங்கள் சிலவற்றில் கூட இந்தத் திருமண வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர்களது இணையர் வேறு குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்து திருமணச் சட்டம் 1955, பிரிவு 3(f) (ii) படி, ஒரு  பகுதியில் அல்லது ஒரு சமுதாயத்தில், அல்லது ஒரு குடும்ப வழியில், தொடர்ந்து ஒரு பழக்கத்தை, வெகுகாலமாகக் கடைப்பிடித்து வந்தால், அதை ‘பழக்க-வழக்கம்’ (Custom and Usage) என்பர். ஆனால், இந்தப் பழக்கவழக்கமானது பொதுவான சமுதாயக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கக் கூடாது. மேலும் ஒரு குடும்பத்திற்குள் மட்டும் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பழக்கவழக்கமானது இடையில் தொடராமல் விடுபட்டுப் போயிருக்கக் கூடாது.

இந்தச் சபிண்ட உறவுகளில் அத்தை மகள்/மகன், மாமன் மகள்/மகன் போன்ற உறவுகளும் அடங்கும். ஒரே மூதாதையரைக் கொண்ட உறவுகள் என்பதால் இவர்கள் தடை செய்யப்பட்ட உறவுகள் ஆவார்கள். இவர்களுக்குள் செய்து கொள்ளும் திருமணம் இந்து திருமண சட்டம் 1955இன் படி செல்லாது. என்றாலும் காலங்காலமாகக் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்கள் காரணமாக இத்தகைய திருமணங்கள் நடந்து வருகின்றன. இந்த வழக்கம் இல்லையெனில் இந்து திருமணச் சட்டத்தின்படி இந்தத் திருமணங்கள் தவறு.

என்னதான் பழக்க வழக்கம் என்று சொன்னாலும் பண்டைய இந்தியாவில் குடும்பச் சொத்துகள் வெளியே செல்லக் கூடாது என்பதற்காகவே இத்தகைய திருமணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது. ஏனெனில் இத்தகைய உறவுவழித் திருமணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. நெருங்கிய உறவுகள் ஏழ்மை நிலையில் இருந்தால் அங்கு திருமண உறவுகள் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது இல்லை. சாதி, மதம், இனம், மொழி, சமயம், பொருளாதாரம் என்று பல காரணிகள் இன்று திருமணத்தை நிச்சயிக்கின்றன. படித்தவர்கள் அதிகரித்து வரும் இந்நாட்களில்தான் சாதிப்பற்று இந்தத் தலைமுறையைப் பிடித்து ஆட்டுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்றால் சொந்தங்களுக்கிடையே இருக்கும் அகமணத் திருமண முறையை விடுத்து புறமணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் சாதி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து முற்றிலும் ஒழியும். ‘திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்’ என்றார் பெரியார். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப திருமண அமைப்பு காலப்போக்கில் மாற்றம் பெற்று வருகிறது.

உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்ட முன்வரைவு மசோதா மீது விவாதங்கள் நடத்தப்பட்டு  நிறைவேற்றப்பட்டது. முதல்வர் புஷ்கர் சிங் தாமி உரைக்குப் பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனவே, நாட்டில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.  இந்த நிலையில், பொது சிவில் சட்ட மசோதாவில் யார் யாரை திருமணம் செய்யக் கூடாது என்கிற பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி அம்மா, இறந்த தந்தையின் மனைவி  (தாய் இல்லாமல்), பாட்டி, தாய்வழி தாத்தாவின் இறந்த விதவை மனைவி, தாய்வழி பாட்டியின் தாய் (கொள்ளுப் பாட்டி), தாத்தாவின் இரண்டாவது மனைவி,  தாய்வழி தாத்தாவின் தாய், தந்தையின் தாய், தந்தைவழி தாத்தாவின் விதவை மனைவி (பாட்டி), தந்தைவழி பாட்டியின் தாய், தந்தைவழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி, தந்தைவழி தாத்தாவின் தாய், தந்தைவழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி, மகள், இறந்த மகனின் மனைவி, மகள்வழி பேத்தி, மகள்வழி பேரனின் இறந்த மகனின் மனைவி, மகன் வழி பேத்தி, சகோதரி, சகோதரியின் மகள், சகோதரனின் மகள், தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி, தந்தையின் சகோதரனின் மகள், தந்தையின் சகோதரியின் மகள், தாயின் சகோதரியின் மகள், தாயின் சகோதரனின் மகள் உள்ளிட்டோர்களைத் திருமணம் செய்ய தடை என்று  மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற சட்டம் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டால் நிச்சயம் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும். ஏனெனில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு நடைமுறையை உடனேயோ அல்லது ஒரேயடியாகவோ மாற்ற இயலாது. சிறிது சிறிதாகத்தான் மாற்றங்கள் வரும். எந்த ஒரு வழக்கமுமே மனிதனால் தன் விருப்பப்படி, தனக்குச் சாதகமாகவே அமைத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். அதன்படி இது போன்ற சட்டத்துக்கும் விரைவில் மாற்று கண்டுபிடிப்பார்கள்.

பைபிளைப் பொறுத்தவரை இந்த உலகத்தின் அத்தனை பேரும் ஆதாம் ஏவாள் குடும்பத்தின் பாகமானவர்கள் என்று சொல்கிறது. பழக்க வழக்கங்கள் என்பவை மனிதனால் உருவாக்கப்பட்டவையே. பேரழகி என்றும் கறுப்பழகி என்றும் வர்ணிக்கப்பட்ட உலக அழகி கிளியோபாட்ரா காலத்தில் அரச குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுக்குள்ளேயே திருமண உறவுகள் இருந்தன. ஏனென்றால் அரச பதவி வேற்று ஆள் கையில் போய்விடக் கூடாதென்பதற்காக இத்தகைய நடைமுறை இருந்தது. கிளியோபாட்ரா தன் தந்தையான பன்னிரண்டாம் தாலமியின் ஆட்சிக் காலத்தில் இணை ஆட்சியாளராக இருந்தார். இவரது தந்தை இறந்தபின் கிளியோபாட்ரா தன் சகோதர்கள் பதிமூன்றாம் தாலமி, பதினான்காம் தாலமி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டார். எகிப்திய வரலாற்றில் கி.மு.332 க்கு முந்தைய பாரோனிக் காலத்தை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள் எகிப்திய மன்னர்கள் சில சமயங்களில் தங்கள் சகோதரிகள் அல்லது ஒன்றுவிட்ட சகோதரிகளைத் திருமணம் செய்திருக்கின்றனர். எகிப்தின் ரோமானிய ஆட்சியின் போது அரச குடும்பம் அல்லாதவர்களும் உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொண்டிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இன்கா, ஹவாய் போன்ற அரச குடும்பத்திலும் இந்த வகை திருமண உறவுகள் இருந்திருக்கின்றனவாம். தூய்மையான ரத்தக் கோடுகளைப் பாதுகாப்பதற்காக அதாவது பிற குடும்பத்தினரின் ரத்தம் கலக்கக் கூடாதென்பதற்காகவும் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. காலம் மாற மாற  அறிவியல் வளர்ச்சி காரணமாக நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தைகள் மரபணுக் குறைபாடுகளுடனோ அல்லது உடற் குறைபாடுகளுடனோ பிறக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கம் மாறத் தொடங்கியுள்ளது.

ஒரே சாதியில் அல்லது இனத்தில் திருமணம் செய்யும் போது ஒரு வகையில் சகோதர உறவாகவும், இன்னொரு வகையில் திருமண உறவாகவும் அமையக்கூடிய சாத்தியம் உண்டு. இதையும் மறுப்பதற்கில்லை. மேலும் இத்தகைய சட்டதிட்டங்கள் எல்லாம் வெறும் ஏட்டளவுக்குத்தான் நடைமுறைப்படுத்தப்படும். 

சில நேரம் இத்தகைய உறவுகளுக்குள் திருமணத் தடைச்சட்டம் நிறையப் பேருக்கு நல்லது செய்திருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் சொத்துகள் வெளியே செல்லாமல் இருக்க, இறக்கும் தருவாயில் இருக்கும் தாத்தா அல்லது பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, உறவு விட்டுப் போகாதிருக்க என்றெல்லாம் கட்டாயப்படுத்தப்படும் விருப்பமற்ற திருமணங்களில் இருந்து நிறைய பேர் விடுதலை பெற்றிருக்கலாம். சொந்த சாதியில் திருமணம் செய்துகொள்வதும் குறைந்து சாதிகளும் ஒழிந்து விடும். 

இந்தச் சபிண்ட உறவுகளுக்குள் திருமணம் செய்தல் பாவமா என்றால், அதை முடிவு செய்வது நம் கையில் இல்லை. ஏனென்றால் பாவம், புண்ணியம் என்பதெல்லாம் மனிதன் அவனுக்குத் தேவையான வகைகளில் வளைத்து விதித்ததுதானே. ஒவ்வொருவரின் நியாயங்களுக்கேற்ப இந்தப் பாவ,

புண்ணியங்கள் மாறுகின்றன. இது சரி, இது தவறு என்று எதையும் நாமே முடிவு கட்டிவிடலாகாது. ஏனென்றால் ஒரு பிரிவினருக்குச் சரி என்று தோன்றும் வழக்கம் இன்னொரு பிரிவினருக்கு முறையற்றதாகத் தோன்றும். இது அவரவர் வாழும் இடங்களுக்கு ஏற்ப, அந்த மக்களின் மனப்போக்குக்கு ஏற்ப வகுக்கப்பட வேண்டிய சட்டம். காலகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம் ஒரே சட்டத்தில் உடனே சட்டென மாறிவிடாது. என்றாலும் மாற்றங்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது.