மரபணுப் பொறியியல் (Genetic engineer) ஆக வேண்டும்! உலகத்திலுள்ள மரபணு சார்ந்த நோய்கள் எல்லாவற்றிற்கும் தீர்வு காண வேண்டும் என்று பிளஸ் டூ வில் நான் கண்ட கனவு வெறும் கனவாகவே கலைந்தது.

25 வருடங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமே இருந்த அந்தப் படிப்பு இருபது பேர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. வெயிட்டிங் லிஸ்டில் வெகு நாள் காத்திருந்து பின்பு கிடைக்காமல் போனது.

வெண்பா எழுதிய ‘தாயனை’ புத்தகம் என் பழைய நினைவுகளைத் தட்டி எழுப்பியது. வெண்பா மரபணுப்பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் பயின்றவர். அவருடைய அறிவிற்கும் அதை இனிய தமிழில் வெளிப்படுத்திய விதத்திற்கும் என் உளங்கனிந்த வாழ்த்துகள்.

என்னுடைய உரை இந்தப் புத்தகத்தின் சாராம்சமாக இருக்கும் என்று நம்புகிறேன்.  DNA என்பதன் தமிழாக்கம்தான் தாயனை. ஒரு தலைமுறையினரின் குணங்களை, தனித்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் தாயனை, நம் ஒவ்வொருவரின் தனித்துவமான பண்புகளுக்கும் முதல் காரணமாக விளங்குகிறது.இந்த உலகத்தில் நாம் தோன்றி வளர்ந்த நாள் முதலே நம் மரபணுக்களில் மாற்றங்களும் நிகழ ஆரம்பித்தது.

‘இவள் நன்றாக பாடுகிறாளே!’ என்று சொல்லும்போதே ‘அவள் அப்பாவின் ஜீன் அவளுக்கு இருக்கு!’ என்று ஒரு கூட்டமே குரல் எழுப்பும். மரபணுக்கள் நல்ல குணாதிசயங்களை மட்டும் கடத்தினால் நன்றாகத்தான் இருக்கும்.

ஆனால், அது புற்றுநோயையோ நீரிழிவு நோயையோ அடுத்த தலைமுறைக்குக் கடத்தினால், சங்கடம்தான்.

மரபணு மாற்றத்தின் எதிர்மறை தாக்கத்திற்கு நாமே பிள்ளையார் சுழி போட்டிருக்கிறோம். நம் உணவு முறை, சுற்றுசூழல், பழக்கவழக்கம் என்று எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கி விட்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பால் செரிமானம் ஆகவில்லை. பாலை அருந்தியவர்கள் சிலர் இறந்து போனார்கள். மரபணு சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாறி பால் ஒவ்வாமை பலருக்கு சரியாகியது. குறிப்பாக ஐரோப்பியர்களுக்குப் பால் ஏற்றுக்கொண்டது. ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் பால் ஒவ்வாமை இன்றும் ஒரு பெரும் சவாலாகவே இருக்கிறது.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதற்குப் பசுமைப் புரட்சி ஒரு சான்று. பசுமைப் புரட்சி அதிக விளைச்சலைக் கொடுத்து, உணவு பற்றாக்குறையைச் சரிசெய்தது. ஆனால், தொழில்நுட்பத்தின் பிடியில் சிக்கிக்கொண்ட இயற்கை விவசாயம் படாதபாடு பட்டது. பூச்சிக்கொல்லிகள், கலப்பு காய்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம். தொழில்நுட்பம் நம்மைப் பெரும் சோம்பேறிகளாக்கி, விதையற்ற பழங்களை நம் கைகளில் தந்தது. இந்த மரபணு மாற்றப்பட்ட உணவுகளினால் சர்க்கரை நோயும் கெட்ட கொழுப்பும் வேண்டாத விருந்தாளிகளாக நம் உடலுக்குள் நுழைந்து நம் ஆரோக்கியம் கேள்விக்குறியானதுதான் மிச்சம்.

குழந்தை கீழே விழுந்து மண்டை வீங்கியவுடன் ‘ஐயோ! வீங்கிடுச்சே’ என்று நாம் அலறி அடித்துக்கொள்வோம். ஆனால், அந்த வீக்கம் அந்தக் காயத்தைக் குணமாக்க நம் நோய் எதிர்ப்பு செல்கள் செய்யும் அற்புதமான ரோந்து பணி என்று எவ்வளவு பேருக்குத் தெரியும்! எறும்பு, கொசு கடித்த இடத்தில சிறு சிவப்பு நிறத் தடிப்பும் நம் நோய் எதிர்ப்பு செல்களின் வேலையே! வலி, வீக்கம், காய்ச்சல் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அசத்தலாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்பது பொருள்.

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

நம் உடலில் தேவையில்லாத உறுப்பு என்று எதுவும் இல்லை. பெண்களுக்குப் பெரிமெனோபாஸ் காலத்தில் உதிரப்போக்கு மிக அதிகமாக இருக்கும். ‘புள்ளகுட்டி பொறந்தாச்சு, இனி இந்த யூட்ரஸ் என்கிற கர்ப்பப்பை தொல்லை எதுக்கு, கட்டி எதுவும் வந்தா சமாளிக்க முடியாது’ என்று பல பெண்கள் ஹிஸ்டெரக்டமி என்கிற கர்ப்பப்பை அகற்றம் அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்கிறார்கள்.இதனால் உடலிலும் மனதிலும் பாதிப்பு அடைகிறார்கள். ஹார்மோனல் இம்பேலன்ஸ், ஹெர்னியா என்கிற குடலிறக்கம், ஹைப்பர்டென்ஷன்,உடல் எடை கூடுதல், கேன்சர் என்று கர்ப்பப்பை அகற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தும் பக்கவிளைவுகளைச் சந்திக்கிறார்கள்.

ஆரோக்கியமான குழந்தை வேண்டுமென்று ஆசைப்படும் ஒரு பெண், தன் 25 – 30 வயதிற்குள் குழந்தையைப் பெற்றுக்கொள்வது மிகச் சிறந்தது. ஒவ்வொரு பெண்ணும் தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே அவள் வாழ்நாளுக்குத் தேவையான கருமுட்டைகளுடன் பிறக்கிறாள். அவள் பருவமடைந்த நாளிலிருந்து மாதம் ஒன்று என்கிற கணக்கில் கருமுட்டை முதிர்ச்சி அடைந்து, கருத்தரித்தலுக்குத் தயாராகிறது. கருத்தரிக்காத முட்டைகள் உடைந்து உதிரப்போக்கு ஆவதுதான் நம் மாதாந்திர மாதவிடாய் என்று அழைக்கப்படுகிறது. நம் உணவு பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றால் நம் தாயனை மாற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், நம் உடலில் நடக்கும் வேதியியல் மாற்றங்களால் கருமுட்டைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். 35 வயதிற்கு மேல் குழந்தையின்மை ஒரு பெரும் மனச்சுமையாக மாறும். லட்சங்கள் செலவாகும். கருத்தரித்தல் மையங்கள் முன்பு நிற்கும் நிலைமை ஏற்படும்.           ஐ.வி.எஃப் முறையில் பெண்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிறது. சுகப்பிரசவமும் அரிது, பிறக்கும் குழந்தைகள் பருமனாக, சில பக்கவிளைவுகளுடன் பிறக்கும்.

‘கட்டுனா என் மாமனைத்தான் கல்யாணம் கட்டுவேன்.’ ‘என் அக்கா பொண்ணுனா எனக்கு உசுரு’ என்று உருகும் உள்ளங்களுக்கு ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட். ஒரு சமூகமே , உங்கள் தலைமுறையே உங்களின் உன்னத காதலால், உடலாலும் மனதாலும் பாதிப்பு அடைய 75% வாய்ப்புள்ளது. மரபணு பிறழ்வுகள் அதிகம் ஏற்பட சொந்தத்தில் நடக்கும் திருமணங்கள்தாம் காரணம். ‘இல்ல, அவர் இல்லனா நான் எப்படி வாழ்வேன்’ என்று விடாப்பிடியாக இருந்தால் ஒரு மரபியல் ஆலோசகரின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கேட்ட பிறகே திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்கள் வருங்கால தலைமுறையை இரைக்காதீர்கள்.

தாயனை மாற்றங்களால் ஏற்படும் மரபணு குறைபாடுகளின் விளைவே குழந்தைகளில் நாம் காணும் ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், அரச நோய் என்றழைக்கப்படும் ரத்தம் உறையாத்தன்மையான ஹீமோபிலியா , டைப் 1 டயாபடீஸ், சிஸ்டிக் பைப்ரோசிஸ், செரிப்ரல் பால்ஸீ, சில பல கேன்சர்கள் போன்ற கொடிய நோய்கள். வித்யாசாகர் என்கிற சிறப்புப் பள்ளியில் ஒருநாள் முழுவதும் அத்தகைய குழந்தைகளுடன் ஒரு பயிற்சிப் பட்டறை நிகழ்ந்தது. மனம் உடைந்து போனேன். நம் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் நம் கைகளில் இருக்கிறது. மரபணுக் குறைபாடுகளின் விழிப்புணர்வு மிக முக்கியம்.

அறிவில் மட்டும் நம் அடுத்த தலைமுறை மேலோங்கி இருப்பர் என்பது விதி. ஆரோக்கியத்தில் என்பது கேள்வி என்று வெண்பா நமக்கு ஒரு பெரும் கடமையை நினைவூட்டுகிறார்.

கைக்கு அடக்கமான அற்புதமான புத்தகம். ‘குட் திங்க்ஸ் கம் இன் ஸ்மால் பாக்கெட்ஸ்’ என்பார்கள். வெண்பாவும் அவருடைய புத்தகமும் அப்படித்தான்!

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் இவர் எழுதிய தொடர், தற்போது ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் நூலாக வந்திருக்கிறது.