தீட்டு என்கிற பெயரில் மாதவிடாய் நாள்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது நல்ல விஷயம்தானே? அவர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைக்கிறதே… என பொதுவாக இதைப் பெருமையாகப் பேசுபவர்கள் இங்கே அதிகம்.

என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும், ஏன் 101 டிகிரியில் காய்ச்சல் அடித்தாலும்கூட, எல்லா வேலைகளையும் பெண்கள் செய்தே தீரவேண்டிய கட்டாயம் இருக்கிறது. பெண்களே இதைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வது இன்றுவரை தொடரும்போது, இந்த மாதவிடாய் கால ஓய்வு கதையெல்லாம் நகைப்பிற்குரியதாகத் தோன்றவில்லையா?

‘இது போன்ற நாள்களில் பெண்கள், உடல் உபாதைகளுடன் களைத்துப் போவார்கள். அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். அந்தச் சமயத்தில் சாப்பிட உகந்த சத்தான உணவைக் கொடுத்து அவர்களை நிம்மதியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் இதற்குப் பின்னால் எதாவது பரந்த நோக்கம் இருக்கிறதா என்று கேட்டால், இவர்களால் பதில் சொல்ல இயலாது!

ஏனென்றால், இது அசிங்கம், அருவருப்பு, அந்த நேரத்தில் பெண்கள் ஒதுக்கப்படவேண்டியவர்கள் என்கிற கீழ்த்தரமான நம்பிக்கை மட்டுமே காரணம் என்று இதற்குச் சப்பைக் கட்டுக் கட்டுபவர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இருந்தாலும் இப்படியே சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள். காரணம் இப்படியெல்லாம் சொல்லி இதைப் புனிதப்படுத்தினால்தானே அடுத்து வரும் சந்ததியினர் இதை விடாமல் பின்பற்றுவார்கள்? குறிப்பாகத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வரும் மருமகள்கள் இதைத் தொடர வேண்டாமா? மாதவிடாய் என்ற பெண்மையைப் பறைசாற்றும் மாதாந்திர நிகழ்வை ‘கேவலமானது’ என அடையாளப்படுத்துவதன் மூலம் காலம் காலமாக பெண்ணை முடக்குவதும், அவள் உடல் பற்றிய அவமான உணர்வு கொள்ள வைப்பதும் இது தொடர்வதற்கான காரணங்கள்.

பார்ப்பனப் பெண்களின் மாதவிடாய் நாள்கள் முன்னர் எப்படி இருந்தது, நடுவில் எப்படி மாறியது, இப்பொழுது எப்படி இருக்கிறது என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இவர்கள் சொல்வது போல மாதவிடாய் நாள்களில் தூரமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள் ஓய்வாகத்தான் இருந்தார்களா என்று கேட்டால், இல்லவே இல்லை என்பதுதான் பதில்.

அக்கிரகார வாழ்க்கையில், மாதவிடாய் நேரத்தில் செய்வதற்கென்றே பெண்களுக்கு நிறைய வேலைகளை ஒதுக்கியிருந்தார்கள்!

மாட்டுக்கொட்டகை சுத்தம் செய்வது, புழக்கடையைச் சுத்தம் செய்வது, இயந்திரத்தில் (Dry) மாவு அரைப்பது, அரசி, மற்றும் இதர தானியங்களைச் சுத்தம் செய்து வைப்பது, கட்டுகட்டாக இலை தைப்பது போன்ற வேலைகளைச் செய்தனர். துணி துவைக்கும் வேலையைக் கூடச் செய்வார்கள். துவைத்த பிறகு, அந்தத் துணிகளின் மேல் தண்ணீர் ஊற்றி எடுத்து வேறு யாரும் கொடியில் காயவைப்பார்கள்.

சரி, உணவு தண்ணீராவது பெண்களுக்கு நேரா நேரத்துக்குக் கொடுத்தார்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. ‘நாய்கூட வாய் வைக்காத நசுங்கிப்போன சொம்புல தண்ணி’ என்று ஒரு திரை வசனம் வரும் இல்லையா, அதுபோல ஓர் ஒதுக்கப்பட்ட தட்டு, டம்ளர், சொம்பு என இந்த நாள்களுக்காகவே தனியாக வைத்திருப்பார்கள். யாராவது சாப்பாடு பரிமாற வரும்போது, ஓடிப்போய் ஒரு கோடியில் நின்றுகொள்ள வேண்டும்.

தூரமானவர்கள் சாப்பிட்ட பிறகு மீதம் இருக்கும் உணவு கூட (தீட்டு) ‘சேஷம்’ பட்டுவிட்டதாகக் கருதுவதால், ஆண்கள் மற்றும் மூத்த பெண்கள் யாரும் அவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிட மாட்டார்கள்.

அதனாலேயே, பகலில் பழைய சாதமும், இரவில் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மீதமுள்ள உணவும் கொடுப்பார்கள். அந்த உணவையும் எங்கே வைத்துப் போடுவார்கள் என்றால், மாட்டுக் கொட்டகை போல வீட்டின் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துத்தான். மற்ற நேரத்தில் வாயிற் திண்ணையில்தான் கிடக்கவேண்டும். இதில், திருமணமான பெண்கள், விதவைகள், இளம்பெண், நாற்பதைக் கடந்தவள், நோயாளி என எந்தப் பாகுபாடும் இல்லை.

சிறு பிள்ளைகளை வைத்திருப்பவர்களின் நிலை இன்னும் மோசம். பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க யாரையாவது எதிர்பார்த்து நிற்கவேண்டும். துணிகளுக்குத் தீட்டு படும் என்பதால் அந்தப் பிள்ளைகள் ஆடைகூட இல்லாமல் அலைந்துகொண்டிருக்கும். கேட்டால், புதுத் துணிக்குத் தீட்டு இல்லை என்பார்கள். ஆனால் மாதா மாதம் புது ஆடைகளுக்கு எங்கே போவது? வசதி படைத்தவர்களாக இருந்தால் இது போன்ற சில சவுகரியங்களை அனுபவிக்கலாம்.

வீட்டில் உள்ள இரண்டு பெண்கள், மூன்று பெண்கள் ஒரே நேரத்தில் மூலையில் உட்கார்ந்தால் அந்த வீட்டின் நிலை இன்னும் மோசம். அவர்களுக்குள்ளேயும் ஒருவரை ஒருவர் தீண்டக் கூடாது எனும் துணை விதியும் உண்டு.

அவர்களுக்குச் சமைத்துப் போட யாரும் இல்லை என்றால், பொருள்களைக் கொடுத்துவிடுவார்கள். தானே சமையல் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது அரிதினும் அரிதுதான்.

அந்த மூன்று நாள்களும் பெண்கள் குளிக்கக் கூடாது, உடை மாற்றக் கூடாது. மாதவிடாயின்போது குளிக்காமல், உடை மாற்றாமல் இருப்பது என்பதே பிணியின் கூடாரமாக உடலை மாற்றிவிடும். இது தவிர, கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது. பால் சாப்பிடக் கூடாது. வீட்டை விட்டு வெளியே செல்பவர்களின் கண்களில் படக்கூடாது. மடியாக உலர்த்தியிருக்கும் துணிகளை பார்க்கக் கூடாது. அவர்கள் செவியில் மந்திரங்கள் விழக்கூடாது. இப்படிப் பல கெடுபிடிகளும் இருந்தன.

நான்காவது நாள், ஏரியோ, குளமோ எதோ ஒரு நீர்நிலையில் போய் தாங்கள் உபயோகித்த பாய் படுக்கைகளைத் துவைத்து, நீராடிவிட்டு வரவேண்டும். அவர்கள் உடுத்தியிருந்த உடையை, துவைத்த பிறகு வைக்கோலைக் கொளுத்தி அந்த நெருப்பில் காண்பித்து அதன் பிறகுதான் வீட்டிற்குள் எடுத்துவரவேண்டும்.

அதன் பிறகு அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை மெழுகி சுத்தம் செய்ய வேண்டும். உபயோகித்த பாத்திரங்களைச் சாணி கொண்டு சுத்தி செய்ய வேண்டும். என்னதான் இப்படியெல்லாம் சுத்தம் சுத்தம் என எல்லோரும் பெருமை பீற்றிக்கொண்டாலும், மாதவிடாய் நாள்களில் மாட்டுக்கொட்டகையில் உட்காரும் பெண்களுக்குச் சுத்தமாவது, சுகாதாரமாவது. நோய்த் தொற்றுக்கள் ஏற்பட்டாலும், அதையும் அனுபவித்துப் போய்ச் சேர வேண்டியதுதான்.

தொன்று தொட்டு கடைபிடித்து வரும் இதுபோன்ற விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையாலும், உள்ளேயே உழன்று கொண்டிருக்கும் அருவருப்பைப் புறந்தள்ள இயலாமலும், ஊர் வாய்க்குப் பயந்தும் இதையெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொண்டு, விட்டுவிடாமல் கடைப்பிடித்தனர் குடும்பத்து ஆண்கள்.

மாமியார் மருமகளோ, நாத்தனார் மதனியோ, ஒற்றார் ஓர்படியோ (ஓரகத்தி) இதுபோன்ற விஷயங்களில் எல்லாம், ஆணாதிக்கத்தில் ஊறிப் போன பெண்தான் எதிரி. ‘நீ என்னைச் சொன்னால், நான் உன்னைச் சொல்ல மாட்டேனா?’ என்கிற மனநிலையில், ஒருவர் காலை வார மற்றவர் காத்திருப்பர்.

நாள் கிழமைகளில், திவச நாள்களில் மாதவிடாய் ஏற்பட்டால், ‘மூதேவி, தரித்திரம் பிடித்தவள்’ போன்ற பட்டங்கள் நிறைவாகக் கிடைக்கும். குற்ற உணர்விலேயே கூனிக் குறுகிப் போகவேண்டியதுதான். திவச நாள்களில் வீட்டுப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், அந்த மாட்டுக் கொட்டகையில்கூட இடம் கிடைக்காது. அக்கம் பக்கத்து வீட்டுத் திண்ணையில் ஒன்ற வேண்டியதுதான்.

கூட்டுக் குடும்பமாக வசித்த வரையில் வீட்டில் யாராவது ஒரு பெண் சமையல் செய்ய இருந்துகொண்டே இருப்பார்கள். அதனால் ஆண்களுக்குத் தினப்படி சமையலில் ஈடுபடவேண்டிய கட்டாயம் இருக்காது.

திருமணம் ஆகாத பெண்களை அடுக்களைக்குள் அனுமதிப்பதில்லை, எனவே ஆண்பிள்ளைகள் சமையல் செய்ய வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. முந்தைய தலைமுறைகளில், பூப்படைவதற்கு முன்பாகவே பெண்களுக்கு மணம் முடித்தாலும், அவர்கள் பூப்படையும் வரை பிறந்த வீட்டில்தான் இருக்கவேண்டும் என்கிற நடைமுறை இருந்ததையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

தூர இருந்துகொண்டே அம்மா சொல்லச் சொல்ல, பிள்ளைகள் சமையல் செய்த கதைகள் வீட்டுக்கு வீடு சொல்லக் கேட்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக நகர வாழ்க்கைக்கு நகர்ந்த பிறகு, நிறைய மாற்றங்கள் உண்டானது.

மாம்பலம், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் பார்த்தால், சமையல் அறை, புழங்கும் ஒற்றை கூடம் எனப் பெட்டி பெட்டியாகச் சிறு சிறு போர்ஷன்களாகக் கட்டி, வாடகைக்கு விட்டிருந்தனர். மாம்பலம் கோவிந்தன் சாலையில் மட்டுமே பார்த்தால் பத்தில் தொடங்கி, முப்பது நாற்பது போர்ஷன்கள் கொண்ட ஒண்டுக்குடித்தன வீடுகள் நிறைய இருந்தன. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே வாடகைக்கு விடுவார்கள்.

குறைந்தது நான்கு பேராவது வசிக்கும் குடும்பத்தில், இதுபோன்ற போர்ஷன்களில், நன்றாகக் கால் நீட்டிப் படுப்பதே பெரிய விஷயம் எனும்போது, மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் ஒதுங்க எங்கே இடம்? கதவு மூலையில் கை கால்களைக் குறுக்கிக்கொண்டு பல்லி போல ஒட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

இங்கேதான் ஆண்கள் சமையல் செய்தே தீரவேண்டிய கட்டாயம் உண்டானது. ஒன்று, வெளியில் சாப்பிட மாட்டார்கள், இல்லை சாப்பிடலாம் என்றாலும் செலவு கட்டுபடி ஆகாது.

போன அத்தியாயத்தில் சொன்னதுபோல, இதைச் சிலர் கடமையாகச் செய்தனர். நான் மேலே சொன்னது போல, அருவருப்பு காரணமாகவோ, அல்லது குடும்ப பழக்கவழக்கம் காரணமாகவோ, எங்கோ ஊரில் உட்கார்ந்திருக்கும் அம்மா பாட்டிகளைத் திருப்தி படுத்தவோ, பெண்களை வேலை செய்யவிடாமல், தனக்கும் செய்ய விருப்பம் இல்லாமல், ஆனாலும் தானே செய்துகொண்டு, ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டு மூன்று நாள்களும் மனைவியை உண்டு இல்லை எனச் செய்துவிடும் ஆண்கள் நிறைய இருந்தனர்.

குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்றாலும் அவர்களிடம்தானே கேட்க வேண்டியதாக இருக்கும். நாவினால் சுடாமல் செய்துவிடுவார்களா என்ன? பிள்ளைகள் பசி எனப் பிடுங்கினாலும், அவர்களையும் தூக்கிப் போட்டு பந்தாடுவார்கள். அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு புழுங்கி அழ வேண்டியதுதான். இரவு நேரங்களில் தன் மனைவியை, குழந்தையுடன் சேர்த்து வெளியில் தள்ளி கதவை தாளிட்டுக்கொள்ளும் அளவிற்கு சிலர் போவதும் உண்டு. அந்தப் பெண், வீட்டு வாயிலிலேயே,கொசுக்கடியைப் பொறுத்துக் கொண்டு, விடியும்வரை சுருண்டுகொண்டிருக்க வேண்டியதுதான். அந்தளவிற்கு இந்த தீட்டு எனும் விஷயம் ஒருவருடைய மனிதநேயத்தை அழித்துவிடுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

அதிகாலையே விழித்து, வரிசையில் நின்று தண்ணீர் பிடித்து, குளித்து, சமைத்து, காஃபி முதற்கொண்டே தானே போட்டுக்கொண்டு, பிள்ளைகளைப் பள்ளிக்குத் தயார் செய்து, அவர்களுக்கான மதிய உணவை டப்பாவில் அடைத்து, அவர்கள் தேவையைக் கவனித்து, பிறகு தங்கள் அலுவலக வேலைக்குச் செல்வதெல்லாம் ஆண்களைப் பொறுத்தவரை அவ்வளவு சுலபமா என்ன?

9 – 5 உத்தியோகத்துக்குச் சென்ற ஆண்களின் மனைவிகளெல்லாம், கிடைத்ததைச் சாப்பிட்டு, பாதி நேரம் பட்டினி கிடந்தது ‘அந்த’ நாள்களைக் கடத்தியவர்கள்தாம்.

இதில் கணவர் அந்த நேரம் பார்த்து எங்காவது வெளியூருக்கு சென்றுவிட்டால், ஒரு பெண், பிள்ளைக் குட்டியுடன் பிறந்த வீட்டுக்கோ மாமியார் வீட்டுக்கோ பயணப்பட வேண்டும். மாதவிடாய் காலத்தில் மனைவியை தாய் வீட்டுக்கு ‘அன்போடு’ அனுப்பிவைத்துவிடும் ஆண்கள் உண்டு. வீட்டில் மாதவிடாய் ஆன பெண் இருந்தால், ஆணுக்கு வேலை அதிகம் என்று இந்த ஏற்பாடு. அத்தனை உடல் உபாதைகளோடு, பிள்ளைகளை இழுத்துக்கொண்டு பேருந்து ஏறி நகரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு இப்படி மாதாமாதம் பயணித்த/ இன்னும் பயணிக்கும் பெண்கள் உண்டு.

இத்தோடு முடியாது, அந்த மூன்று நாள்களுக்கான வேலைகளையும், நான்காவது நாள் சேர்த்து வைத்து அந்தப் பெண் செய்தாக வேண்டும். இதில் எங்கே ஓய்வு? இரண்டு மூன்று நாள்கள் முடிவதற்குள் நான்கு யுகங்களும் கடந்தது போலிருக்கும்.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் என்றால், சமையல் செய்துவிட்டு பள்ளிக்கூடம் செல்லப் பழகிக் கொள்வார்கள். தேவை காரணமாக, திருமணம் ஆகாத பெண் பிள்ளைகள் அடுக்களைக்குள் நுழையக் கூடாது என்கிற சட்டதிட்டமெல்லாம் காலாவதியாகிப் போனது. இங்கேயும் ஆண்கள் எந்தக் குற்ற உணர்வும் இன்றி சிறுமிகளை சமைக்க, பிற வீட்டு வேலைகள் செய்ய தள்ளிவிட்டுவிட்டு, கைகழுவிக் கொண்டனர். அவர்களை அறியாமலே, சிறு வயதுமுதலே அதே சுழலுக்குள் தள்ளிவிடப்பட்டனர் பெண்கள். அம்மா இல்லையா, மகள் வேலை செய்யட்டும் என்ற கொடூர மனப்போக்கை என்னவென்று சொல்வது?

படித்து வேலைக்குப் போகத் தொடங்கிய பெண்களில் சிலர், துணிந்து இந்தத் தூரத்தைத் தூக்கித் தூர எறிந்தனர். ஆனாலும், இதை விட இயலாமல் பின்பற்றும் மற்ற ஆணாதிக்கம் பீடித்த பெண்களால் கீழாகவே பார்க்கப்பட்டனர். இதெல்லாம் அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை உணராமல், அவர்களுக்குள்ளேயே கூடிக் கிண்டல் செய்துகொள்வதும் உண்டு.

ஆண்களுக்கு வேண்டுமானால் இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் போகலாம், ஆனால் இது இயற்கையாக எல்லா பெண்களுக்குமே ஏற்படுவதுதானே! பிறகு ஏன் இவ்வளவு அருவருத்து தன்னையும் தாழ்த்திக் கொண்டு மற்றவரையும் தாழ்த்த வேண்டும்? ஆண்களைப் போலவே சிந்தனைப் போக்கு உள்ள பெண்களிடம் வேறென்ன எதிர்பார்த்துவிட முடியும்?

எது எப்படியோ, புத்தியில் பதிந்துபோன ஒன்றை மாற்றிக்கொள்ள மனமில்லாமல், இதையெல்லாம் புனிதப்படுத்தி, பெருமைப்படுத்தி, தானும் இதிலேயே உழன்றுகொண்டு, மற்றவரையும் இதிலேயே உழலவைப்பதில் எல்லோருமே திறமைசாலிகளாக இருந்தனர், இன்றும் இருக்கின்றனர். தப்பித்தவறி இந்த விதிகளை மீறி இதிலிருந்தெல்லாம் விலகி வெளியேற யாரேனும் முயன்றால், அவர்களைக் கீழ்த்தரமாகச் சித்தரிப்பதால் பலரும் இதை மீறத் தயங்கினார்கள்.

உண்மையில், உணர்ந்து செய்தாலும், அறியாமையால் உணராமலேயே செய்தாலும், இத்தகைய பார்ப்பனிய ஆணாதிக்க சிந்தனையில் ஊறிப்போன பெண்கள் ஆபத்தானவர்களாக சக பெண்களுக்கு அநீதி செய்பவர்களாகத் திகழ்கின்றனர்.

இந்த இரண்டுங்கெட்டான் வாழ்க்கையில் சிக்கித் தவித்த நவீன அம்மாக்களுக்குப் பிறந்த பெண்கள்தான் உண்மையில் பாக்கியசாலிகள். இவர்களெல்லாம் மாதவிடாய் நாள்களை இலகுவாகக் கடந்தவர்கள் எனலாம்.

அடுத்தடுத்த தலைமுறையினர் இதையெல்லாம் விட்டு எங்கேயோ போய்க்கொண்டிருந்தாலும், கண் பார்க்க ஒரு பெரும் சதவிகிதத்தினர் இன்றுவரை இந்த நடைமுறைகளின் மிச்சச் சொச்சத்தைத் தொடர்கிறோம் என்பதும் உண்மை. இதையெல்லாம் எழுதும்போது, 90களின் மத்தியில் நடந்த ஒரு பழைய சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது.

மேற்கு மாம்பலத்தில் ஒரு முக்கிய வீதியில் வசித்த பெண்மணி ஒருவர் எங்கள் அடுத்த வீட்டு மாமியின் வீட்டில் வந்து குளித்துவிட்டு உடை மாற்றி, அணிந்திருந்த உடைகளைத் துவைத்து எடுத்துக்கொண்டு போய்விடுவார். இது அடிக்கடி நடந்துகொண்டிருந்தது.

தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடிய காலகட்டம் அது. வீதிக்கு வீதி தொட்டி வைத்து லாரி மூலம் அரசாங்கம் விநியோகம் செய்த மெட்ரோ வாட்டரை வரிசையில் நின்று பிடித்து, சுமக்க முடியாமல் சுமந்து போய் வீட்டில் நிரப்பி, தண்ணீரைத் தங்கம் போலப் பார்த்துப் பார்த்துச் சேமித்து, சிக்கனமாகச் செலவு செய்த காலகட்டம் அது.

அதனாலேயே அந்த மாமி கொஞ்சம் புலம்புவார். கடைசியில் விஷயம் என்ன என்று கேள்விப்பட்ட பிறகு, சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை.

நான் மேலே சொன்னதுபோல, அந்தப் பெண்ணை, மாதவிடாய் முடிந்த தினங்களில், மேற்கு மாம்பலத்தில் இருக்கும் ஒரு குளத்தில் போய் குளித்துவிட்டு வரும்படி அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்பொழுதாவது ஒரு பூங்கா அமைத்து, அந்தக் குளம் சற்றே பார்க்கும்படி இருக்கிறது. அப்பொழுதெல்லாம் அது ஒரு திறந்தவெளி பொதுக் கழிப்பிடமாக, எருமைகள் ஊரும் குட்டையாக இருந்தது. மேலும் அது என்ன கிராமாந்திரமா? சூரியன் உதிக்கும் முன்னே மக்கள் நடமாடும் பரபரப்பான பகுதியாயிற்றே! ஒரு பெண்ணுக்கு இது எப்படி ஒரு நெருக்கடியைக் கொடுத்திருக்கும்! பாவம் அவரும்தான் என்ன செய்வார்? இப்படி ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்து, தன்னை பாதுகாத்துக் கொண்டார்!

பூப்படைவதற்குள் பெண்களைத் திருமணம் செய்துகொடுத்துவிடவேண்டும் என்கிற ஒரு சமூக அழுத்தம் இருந்ததால், முன்பெல்லாம் பெண்கள் பூப்படைந்ததை வெளியில் சொல்லாமல், ரகசியமாக வைத்திருப்பார்கள் என இந்தத் தொடரின் சென்ற பதிவைப் படித்துவிட்டு என் மாமியார் சொன்னார். தன் இளம்பிராயத்தில் அக்கிரகாரத்தில் வசித்த அவருக்கு இப்பொழுது எண்பது வயது.

இதுமட்டுமில்லை, அயலி படத்தில் வருவது போல, தங்கள் மாதவிடாய் நாள்களை, நாள் கிழமைகளுக்குத் தகுந்தபடி, வேலை செய்யவோ, வேலைகளிலிருந்து தப்பிக்கவோ (இதுதான் பெரும்பாலும் நடக்கும்) தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே இந்த ரகசியத்தைப் புதைத்துக் கொண்ட பெண்கள் எல்லாக் காலத்திலுமே இருந்திருக்கிறார்கள்!

இவர்களெல்லாம் பொல்லாதவர்களா அல்லது பிழைக்கத் தெரிந்தவர்களா? வாசகர்களாகிய நீங்களே சொல்லுங்கள்!

முதலில் பெண்கள் பூப்படைவதிலிருந்து தொடங்கும் பெண்களது இந்த மாதவிடாய் பயணம் அவர்களை வெகு தூரத்துக்கு இழுத்துச் செல்கிறது. ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், இது முடிவுக்கு வருவதற்குள் பெண்கள் ஒருவழியாகிப் போகிறார்கள் என்பதே உண்மை.

பெண்கள் பூப்படைந்தால், பார்ப்பனர்கள் விமரிசையாக மஞ்சள் நீராட்டுவிழா செய்வதில்லை. அது ஒரு மிகச்சிறிய சடங்காக, நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து, எளிமையாக செய்து முடித்துக் கொள்கிறார்கள். ஒரு பெண் குழந்தை பூப்படைந்தால் ‘கொழந்த திரண்டுட்டா’ என்றும் சொல்வதுண்டு. அதற்கு திரண்ட குளி (குளியல்) என்று பெயர். மஞ்சள் நீராட்டுவிழா, திரண்ட குளி, இவற்றைவிட, நாம் வாழும் இந்த நவீன யுகத்தில், ஆங்கிலத்தில் இதை ‘Puberty Function’ என்கிறார்களே அதைக் கேட்கும் பொழுது, இன்னும் நாராசமாக ஒலிக்கிறதல்லவா?

ஒரு பெண் குழந்தை, பருவம் அடைந்தால், கேள்விப்பட்டு வாழ்த்துபவர்கள் கூட, ‘என்ன பேரன் பிறந்திருக்கானா?’ என்றுதான் அந்தப் பெண்ணைப் பெற்றவர்களையும் வீட்டுப் பெரியவர்களையும் விசாரிப்பார்கள். ஆக, பெண்ணின் முக்கியத்துவும் திரண்டு அவள் பிள்ளை பெறுவதில் மட்டுமே இருக்கிறது, அவளது கருவறையின் திறப்பைதான் இப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது இதில் பட்டவர்த்தனமாக விளங்குகிறதல்லவா?

//மனைவியால் புத்திரர்கள் பிறப்பார்கள் ஆதலால் அவளால்தான் வம்சம் விருத்தி அடைகிறது. மனைவியின் நற்குணங்களால்தான் வம்சத்தின் நற்பெயர் நிலைநாட்டப்படுகிறது.//

மேலே மேற்கோள் காண்பித்திருக்கும் மநு நீதியை இங்கே தொடர்புப்படுத்திப் பாருங்கள், நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.

ஆனாலும்கூட மாதவிடாய் எனும் விஷயத்தைப் புனிதப்படுத்தத் தேவையில்லை, ஆனால் இயல்பாகக்கூட யாரும் இங்கே இதை ஏற்றுக்கொள்வதில்லை!

இன்னும் சொல்லப்போனால் பெண்ணின் குருதியில் உதித்து, பத்துமாதம் அவளது குருதியிலேயே வளர்ந்து, அவளது யோனி வழியாகப் பிறப்பதை உயர் ஜாதி புத்தி கேவலமாகவே எண்ணுகிறது. அதனாலேயே, சாதாரண மனிதனாக எண்ணாமல், தன்னை தெய்வீகப் பிறவியாகப் பிரகடனப் படுத்த இங்கே பலரும் முயன்று வருகிறார்கள். இதில், பெண்களும் அடக்கம் என்றால் அது மிகையில்லை.

இன்னும் எழுதுவேன்.

  • உள்ளிருந்து ஒரு குரல்