உலகம் பலவிதம் 1955 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இணையத்தில் திரைப்படம் மிகவும் சுருக்கமாக, சுமார் ஒன்றேகால் மணி நேரம் தான் இருக்கிறது. 

நடிகர்கள்

சிவாஜி கணேசன் 

பி.எஸ்.வீரப்பா

வி.கே.ராமசாமி

டி.கே.ராமச்சந்திரன்

தங்கவேலு

டிவி ராதாகிருஷ்ணன்

எம். ஆர். சந்தானம்

எஸ்.வி.சண்முகம்

எம்.ஏ கணபதி

லலிதா- இந்திரா

எம். லட்சுமிபிரபா

எம்.என்.ராஜம்

எம். சரோஜா

சி.கே.சரஸ்வதி

பேபி ராஜகுமாரி

திரைக்கதை டி.ஆர்.ரகுநாத் எழுதியது. இவ்வளவு தகவல்கள் தான் திரைப்படத்தில் உள்ளன. 

எடுத்தவுடன் அருணகிரி என்ற கிரி தூங்கி எழும்புகிறார். கழுகு அப்பா தம்பி கழுகாசலம் என ஒரு பெண் அழைக்கிறார். 

தந்தனத்தாம் பாடாம தலைய வாரினா கிராப் படியாதோ? 

அதக் கேக்காம இருக்க உங்களால முடியாதோ?

அதுக்கில்ல உங்கவீடா இருந்தா இஷ்டத்துக்கு அரட்டை அடிக்கலாம் இன்னொருத்தர் வீட்டில் இருந்துக்கிட்டு பிரத்தியாருக்கு இடைஞ்சல் இல்லாம பெருந்தன்மையா நடக்கலைன்னா …. 

இப்படி ஒரு பெண்ணுடன் கழுகின் உரையாடல் நடக்கிறது. அருணகிரியின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என்பது அந்த அம்மாவின் எண்ணம். வீட்டுக்குச் சொந்தக்காரனே சும்மா இருக்கிறான் நீங்க என்னனா இல்லாத அதிகாரமே பண்றீங்களே! இது கழுகின் எண்ணம்.

லீடரா இருக்கிறவன் கண்ணியமாவே நடந்துக்கிட்டாலும், இந்த நடுவுல இருக்கிற சோம்பேறிப் பசங்க தான் தொண்டர் படை தேரட்டுறதும், கண்ட இடத்தில கூச்சல் போட்டு மண்டை உடைபட்டு சாவரதுமா இருக்கிறாங்க. இது பெண்ணின் எண்ணம்.

இப்படித் தொடங்கும் வீட்டின் சூழ்நிலை நமக்குச் சொல்வது, அருணகிரி மட்டும் தான் இந்த வீட்டின் உரிமையாளர்கள்.

மற்ற மூவரும்? ஆண்கள் இருவரும் கிரியின் கல்லூரி நண்பர்கள். வீட்டில் இருக்கும் ஒருவர் பெயர் கழுகு; இன்னொரு ஆள் பெயர் பச்சை. மூவரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அந்த அக்கா எனப்படுபவர், வேலையாள் தானே என மற்ற இருவருக்கும் எண்ணம். ஆனால் உரிமையாளருக்கு அந்த எண்ணம் இல்லை. 

அந்த அக்கா என அழைக்கப் படுபவர் யார் என்பதை அறிய, அவரது பழைய கதை வருகிறது. ராஜபார்ட் ராமலிங்கம், அவர் மனைவி செல்லம், செல்லத்தின் தங்கை என பலர் இணைந்து பிரகலாதன் நாடகத்தை சிங்கப்பூரில் போடுகிறார்கள். நாடக அரங்கம் தீப்பிடிக்க, இவர்கள் மூவர் தவிர அனைவரும் இறந்து விடுகிறார்கள். உள்ளூர் பிரமுகர் ஒருவர், இவர்களை ஆதரிக்கிறார். அவரைக் கொன்று விட்டு அந்த ராமலிங்கம் மனைவியின் தங்கையை மட்டும் கூட்டிக் கொண்டுச் செல்கிறார். அந்த உள்ளூர் புரவலர் வேறு யாருமல்ல கிரியின் அப்பா தான். அவரிடம் இருந்த பத்திரங்கள் பலவற்றை இந்த அக்கா மிகவும் சிரமப்பட்டு கிரியிடம் கொண்டு வந்து கொடுத்ததால் தான் இப்போது கிரியால் இவ்வாறு செழிப்பாக வாழ முடிகிறது. அதனால் அவரைத் தன் வீட்டில் வைத்துக் காப்பாற்றுகிறார். அக்கா, தன்னால் இயன்ற வீட்டு வேலைகளை செய்கிறார். 

ஆனால் இந்தக் கதையில் நண்பர்கள் இருவருக்கும் நம்பிக்கை இல்லை. இந்திரா, கிரியின் வீட்டிற்கு வருகிறார். இவரும் இவர்கள் மூவருடனும் கல்லூரியில் படிப்பவர் தான். கூடுதலாக, கிரியின் காதலி.  

பச்சையின் தாய்மாமா ஆட்டம் பாம் அமிர்தலிங்கம். ஆட்டம் பாம் (மருந்து) செய்து விற்பவர். பணக்காரத் தனம் உள்ளவர். ஆனால் கதைகளில் ஆர்வம் உள்ளவர். அவரிடம் எழுத்தாளர் மரகத வல்லி என கிரியை அறிமுகப்படுத்தி வைத்து மாமாவை ஏமாற்ற நினைக்கிறார் பச்சை. 

கொடைவள்ளல் குமரப்பா இந்திராவின் மாமா. 

புலவர் பஞ்சவர்ணம் இந்திரா மற்றும் கிரியின் குடும்ப நண்பர். அவர் தன் மகள் நீலத்தை கிரிக்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். நீலத்தை பச்சை காதலிக்கிறார். இப்படி ஒவ்வொருவரின் பின்னணியுடன் கதை போகிறது.

ஒருநாள் செல்லம், புலவர் பஞ்சவர்ணம் வீட்டிற்குப் போகிறார். அங்கு கொடைவள்ளல் குமரப்பா வருகிறார். அவர் தான் இவரது கணவர், ராஜப்பா. கணவனைப் பார்த்த செல்லம் மயங்கி விழுகிறார். கணவனின் ஊர் செல்கிறார். அவர் இந்தியாவிற்கு வந்திருக்கிறார் என்பதை உறுதி செய்கிறார். 

ஒருவருக்கும் தெரியாமல் செல்லம் மறைத்து வைக்கப் படுகிறார். அல்லது மறைந்து வாழ்கிறார். இந்திரா, மாமாவிற்குத் தெரியாமல் அக்காவைச் சந்திக்கிறார். . 

இந்திராவின் ஊருக்கு நண்பர்கள் மூவரும் வருகிறார்கள். கழுகு இந்திராவின் வேலையாள் மகளுடன் பழகிவிட்டுப் பழியை கிரியின் மீது போடுகிறான். இந்திரா, கிரியின் மீது கோபம் கொள்கிறார். இதனால் கிரி எங்கோ போய்விட்டார்.

இந்தக் காலகட்டத்தில் புலவர் பஞ்சவர்ணம் மகள் நீலத்தைப் பச்சையுடன் இணைத்து வைக்கிறார். 

ராஜப்பா, இப்போது இந்திராவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முயற்சி செய்கிறான். இந்திரா வீட்டை விட்டு வெளியில் வருகிறார். 

இந்த நேரத்தில் உலகம் பலவிதம் என்ற பெரிய நாடகம் நடைபெறுகிறது. மரகதவல்லி என கிரியை அறிமுகம் செய்கிறார் அமிர்தலிங்கம். அப்போது தான் தான் மரகதவல்லி என்ற உண்மையான புலவர் வருகிறார். பல உண்மைகள் வருகின்றன. அனைவரின் பொய்யும் அம்பலமாகிறது. 

ஆட்டம் பாம் அமிர்தலிங்கம், பழமை வாதம் குறைந்து, வீட்டின் வேலைக்கார அம்மாவைத் திருமணம் செய்கிறார்.

கழுகு, வள்ளி இணைகிறார்கள். ராஜப்பா திருந்துகிறார் எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது. அவருக்குத் தண்டனை கிடைத்ததா இல்லையா எனத் தெரியவில்லை. 

திரைப்படத்தில் அவ்வளவு பகுதிகள் நீங்கி இருக்கின்றன. “குற்றம் நிரூபிக்கப் பட்டு தண்டனை அடைகிறார்.” என்கிறது “NADIGARTHILAGAMTV”. 

விக்கிபீடியா கொடுக்கும் தகவல்கள் 

எஸ். ஏ முருகேஷ் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரித்து உள்ளது.  திரைக்கதையை டி.ஆர்.ரகுநாத் எழுதியுள்ளார். வசனம் வி என் சம்பந்தம் எழுதியுள்ளார். 

இணையத்தில் புகைப்படங்கள் உள்ளனவா எனத் தேடிப்பார்த்த போது, குண்டூசி என்று ஒரு சினிமா இதழ் இருந்திருப்பது தெரியவந்தது. பல்வேறு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. வாய்ப்பு இருப்போர் வாசித்து மகிழுங்கள். 

டி.எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன்,  K. A. தங்கவேலு, புதுவை லோகநாதன், என். எஸ். பாலகிருஷ்ணன், பி. லீலா,  கே. ராணி, ஏ.ஜி. ரத்தினமாலா, டி.எஸ்.பகவதி, என்.எல்.ஞானசரஸ்வதி எம்.எல். வசந்தகுமாரி, ஜி. கஸ்தூரி எனப் பலரும் பாடியிருக்கிறார்கள். பாடல்களை,  தஞ்சை என்.ராமையா தாஸ், கே.பி.காமாட்சி சுந்தரம், ஏ.மருதகாசி ஆகியோர் எழுதியுள்ளனர்.ஒரு பாடலின் இடையில்,  ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே” என்ற நாட்டுப்புறப் பாடலும் உள்ளது. 

தஞ்சை என்.ராமையா தாஸ் அவர்கள் எழுதி எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

“அடிமையென்றே என்னாதே பெண்ணே

உலகம் மட்டில்லாத கொடுமை செய்தாலும் 

அடிமையென்றே என்னாதே பெண்ணே

இடம் கொடுத்தால் போதும் வருவார் பெண்ணே 

கல்யாணம் ஆகாத பெண்ணே – தரகர் 

இரக்கமே இல்லாமல் விலை பேசிடுவார் 

இல்லறத்தாய் என்று புகழ்வார் 

அதை எந்நாளும் நம்பாதே பெண் பேதை நீயே 

விளங்கின உன்னை மதிப்பார் 

பழங்கதையே பேசி முடிப்பார் 

அந்தப் பாவிகள் நினைத்தாலும் பகுத்தறிவாலே 

வாழப்பிறந்த பெண் நீயே 

கே.பி. காமாட்சி சுந்தரம் எழுதி, டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா பாடிய பாடல் 

வாழ்க்கை ஓடம் ஓடவும் வேணும் 

சென்று கரை சேர வேணும்- இன்பம் கண்டு கரை சேர வேணும் 

சேர்க்கையினால் வரும் இன்ப துன்ப அலைகள் சேர்ந்தே மோதிடுமே 

அதை 

பார்த்து பார்த்து துடுப்பை 

மாறி மாறி போட்டு வழி 

பார்ப்பதுவே இன்பந்தானே 

வசந்த கால தென்றலைப் போல் வந்தாய் -என 

வயதுக்கினிய இன்பமே நீ தந்தாய் 

இசைந்த வயதில் நீயும் நானும் ஒன்றாய் – இனி 

இணைந்து வாழ இன்பக் கரையைக் காண்போம்

தஞ்சை ராமையாதாஸ் எழுதி, ஏ.ஜி. ரத்னமாலா, கே. ராணி,

என்.எஸ். பாலகிருஷ்ணன், புதுவை லோகநாதன் பாடிய பாடல். 

உலகம் பலவிதம் ஐயா – இதை 

உணர்ந்து பாருங்க மெய்யா பொய்யா 

கலையும் கட்சியும் மலிஞ்சி போச்சிது 

காசு பறிக்க அது கருவியாச்சுது 

கொலையும் களவும் கூசாமல் நடக்குது 

குனிஞ்சவன் தலையில் குல்லா போடுது.

பற்பல விதமாய் ஊரை ஏய்க்கிது.

பச்சோந்தி போலே கலரை மாத்துது 

தற்பெருமையாலே தாண்டிக் குதிக்குது 

அற்ப விஷயத்துக்கு அடிதடி நடக்குது 

கூந்தலிலே பூவை வச்சி 

குலுக்கி மினுக்கி நடப்பதென்ன 

பங்காரு அடியே பங்காரு 

கோவிலுக்குப் போகையிலே 

குறுக்கே வந்து நிற்கலாமோ 

மன்னாரு மாமா மன்னாரு 

தாட்டுப் பத்திரி பொடவை ஒனக்கு 

தந்தவன் யாரு சொல்லடி 

பங்காரு அடியே பங்காரு

சிறுவாடு காசு சேத்து 

சேட்டுக் கடையில் வாங்கினேனே 

மன்னாரு மச்சான் மன்னாரு

கையிலிருந்த வளையல் ஒடஞ்ச 

காரணம் என்ன?

காரணத்தை சொல்ல இப்போ நேரமில்லை 

நேரமில்லையா- வாங்கு 

ஐயோ அம்மா அப்பா- என்னை கொல்லாதே 

அத்தை மகனை கட்டிக்கிட்டு 

அவஸ்தை படவும் வாணாம் -எங்க 

ஆத்தா ஊட்டுக்குப் போறேன் – நீயும் 

என்னை தேட வேணாம் 

மெய்யா பொய்யா பாருங்கோ -இதை 

உணர்ந்து பாருங்கோ மெய்யா பொய்யா

உலகம் பலவிதம் ஐயா 

பொருத்தமாயுள்ள புருஷன் பொஞ்சாதி 

பூனையும் எலிபோல் எகிறி பாயுது 

அர்த்தமே இல்லாத சந்தேகத்தாலே 

ஆணையும் பெண்ணையும் அம்பலமாக்குது 

கே பி காமாட்சி சுந்தரம் எழுதிய பாடல் இது. 

கடவுள் என்று ஒருவன் இருந்தால் – அவன் தன் 

கடமையை செய்ய வேணும்- அது 

கஷ்டமாயிருந்தால் மனிதனாய்ப் பிறந்து ஓர் 

கணமேனும் வாழ வேணும் 

கடவுள் என்ற பெயரைச் சொல்லி விளையாடுது உலகம்.

தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதிய பாடல் ஒன்று பெண்ணியம் பேசும் விதமாக உள்ளது.

அடிமையென்று எண்ணாதே பெண்ணே -உலகம் 

மடமையினால் உன்னை கொடுமை செய்தாலும் 

இடம் கொடுத்தால் போதும் வருவார்- பெண்ணே 

கல்யாணமாகாத பெண்ணே- தரகர் 

இரக்கமே இல்லாமல் விலை பேசிடுவார் 

இல்லறத் தாயென்று புகழ்வார் 

எந்நாளும் நம்பாதே பெண் பேதை நீயே 

விலங்கென உனை மதிப்பார் -பெண்ணே தொண்டு 

கிழங்களுக்கே துணிந்து பலி கொடுப்பார் 

பழங்கதையே பேசி முடிப்பார் -அந்த 

பாவிகள் நினைத்தாலே பகுத்தறிவாலே 

வாழப் பிறந்தவள் நீயே- வருங் 

காலத்தின் சுகதுக்கம் உணர்ந்திடுவாயே 

ஆலைக் கரும்பாக உனையே- உன் 

அன்னையும் தந்தையும் ஆட்டி வைப்பாரே 

மருதகாசி அவர்கள் எழுதிய பாடல் இது- 

உலகம் பலவிதம் என்றே சொல்லுவாங்க 

ஒரு வகையில் இந்த 

பங்களாவும் உலகும் ஒன்று தாம்க 

தலைவர்கள் தேசத் தொண்டர்

தருமவான் ஈயா லோபி 

கலைஞர்கள் கவிஞர் எனப் பலரும் 

தங்கிப் போவதாலே 

பணம் சேர்க்கக் கொள்கை தன்னை 

பலியிடும் கயவர் கூட்டம் 

குணங்கெட்ட பெண்ணும் குலமகளும் 

வந்து போவதாலே 

ஓடாத காரில் ஏறும் உல்லாச மைனர் சாரும் 

நாடாளுவோரும் பல ஸ்டாரும் – இங்கு காண்பதாலே 

பாட்டாளி வர்க்கம் எங்கள் 

கூட்டாளி என்றே பேசி 

தேட்டையே போடும் வெத்து வேட்டும் 

இங்கு சேருவதாலே 

சத்தியம் தவறா பக்தர் 

சாமியே இல்லை என்போர் 

அத்தனை பேரும் தினந்தோறும் 

வந்து போவதாலே 

மருதகாசி எழுதிய இப்பாடலில் ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே’ வருகிறது.

ஆசைக்கனவே நீ வா வா வா 

அழகு சிலையே நீ வா 

பேசுங்கண்ணே நீ வா வா வா 

பிரியா நிழலே நீ வா 

அருங்கலை ராணி ஆடும் ராணி 

பாடும் தேனீ 

அழகிய சுகுமாரன் நீ 

நறுமணம் வீசும் எழில் மிகு ரோஜா 

வெட்கமே இல்லையா, வீண் வம்பு ஏனையா 

விளையாட நேரம் காலம் இல்லையா 

அக்கம் பக்கம் யாரும் கண்டால் 

அவமானம் இல்லையா 

வெட்கமே ஆகுமா தர்க்கமும் ஞாயமா 

விளையாட நேரம் காலம் வேணுமாம் 

அக்கம் பக்கம் யாரும் கண்டால் 

நமக்கென்ன நஷ்டமா?

பட்டாடை கெட்டுப்போகும்- எட்டு 

கதர் பட்டே என் நெஞ்சைப் பாரு தொட்டு 

தொட்டாக்கா சுட்டுப் போடும் காலம் 

என்னைச் சுட்டாலும் பரவாயில்லை நீலம் 

அக்கம் பக்கம் யாரும் கண்டால் 

அவமானம் இல்லையா?

ஊரான் ஊரான் தோட்டத்துல‌

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி

காயிதம் போட்டான் வெள்ளக்காரன்

வெள்ளக்காரன் பணம் செல்லப் பணம்

வேடிக்கை பாத்தாலும் வெள்ளிப் பணம்

வெள்ளிப் பணத்துக்கு ஆசப்பட்டு

வேசம் கொலஞ்சாளாம் வீராயி 

கே பி காமாட்சி சுந்தரம் எழுதிய பாடல் இது 

உள்ளதை நீ சொல்லாதே 

உலகம் ஒப்புக் கொள்ளாதே 

நல்லதுக்கு காலமில்லே தங்க ரத்தினமே 

நாடு சிரிக்குமடி பொன்னு ரத்தினமே 

நல்லவர் பெறுதேக்கு நாளு ரொம்ப வேணுமடி 

மொள்ளமாரித் தனமே செய்தால், தங்க ரத்தினமே 

கொள்ளை லாபம் சேருமடி தங்க ரத்தினமே 

பாடுபடும் ஏழையெல்லாம் பட்டினியால் வாடுகிறார் 

படிப்பில்லா முட்டாளெல்லாம் பதவியில் வாழுகிறார் 

நாடறிய சொல்லாதடி தங்க ரத்தினமே 

நம்பவே மாட்டாரடி 

கண்ணுக்கு நிகரான பெண்ணுக்கு விடுதலை 

காண வேணுமென்று சொல்கிறான் -அந்த 

ஒண்ணுக்கும் உதவாத வெட்டிப்பயல் பெண்ணை 

உதை கொடுத்தே இன்பம் காண்கிறான் 

அது மட்டுமே 

ஆண்டவன் பேரையே சொல்லுறான் -தன்னை 

அண்டின பேரை கெடுகிறான் 

வேண்டும் பொருளை குவிக்கிறான் -இதை 

வெளியில் சொன்னா நம்ம திட்டுறான் 

 பிரகலாதன் கதைப் பாட்டு ஒன்று வீரப்பா குழுவினர் நடத்தினர். 

‘அகப்பட மாட்டான் அகப்பட மாட்டான் 

இவன் யாரு கையிலும் அகப்படமாட்டான் 

படவே மாட்டான் படவே மாட்டான்

இவன் யாரு கண்ணிலும் படவே மாட்டான் 

ஆமாம் இவன் யாருக்கும் அஞ்சிட மாட்டான் 

இந்த ராவணேஸ்வரன் ஆமா 

இவன் யாருக்கும் அஞ்சிட மாட்டான்’ 

என  K. A. தங்கவேலு ஒரு இராமாயண கதாகாலேட்சபம் நடத்துகிறார். கல்லூரி நாடகம் என கிருஷ்ணதேவராயர் நாடகம் போடுகிறார்கள். இது லலிதாவின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் நாடகம். இறுதியில் உலகம் பலவிதம் என ஒரு நாடகம் நடத்துகிறார்கள். இப்படித் திரைப்படம் முழுவதும் ஒரே நாடகம் மயம்தான். 

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.