வெற்றிகரமாக ஆம்ஸ்டர்டாம் ஆபிஸைக் கண்டறிவதோடு என் சாகசப் பயணம் முடிவுற்றதா என்றால் இல்லை. மாலை மறுபடியும் ஒரு ட்ரெயின் பிடித்து பயிற்சி முகாம் நடைபெறும் சாண்ட்வூர்ட் (zandvoort ) என்னும் கடற்கரை நகரத்துக்குச் செல்ல வேண்டும்.

லண்டன் மற்றும் ஐரோப்பிய நகரங்களில், காலையில் நீங்கள் விடுதி அறையைக் காலி செய்து விட்டாலும், நம்முடைய உடைமைகளைப் பன்னிரண்டு மணி நேரம் வரை இலவசமாக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அப்படி நான் வைத்துவிட்டுப் போய் இருந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு, மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடைப் பயணம். இப்பொழுது என் கையில் இணையம் இருந்ததால் எந்தப் பயமும் இல்லை. NS sprinter எனப்படும் நெதர்லாந்தில் ரயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் செயலியையும் தரவிறக்கம் செய்து வைத்திருந்தது மிகவும் உபயோகமாக இருந்தது. எந்த பிளாட்பார்ம், எத்தனை மணிக்கு ட்ரெயின் வரும் என்கிற அத்தனை விவரங்களையும் துல்லியமாகக் கொடுத்தது. இப்போது யாரையும் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யாமல் நானே நேரடியாக பிளாட்பார்முக்குச் சென்று காத்திருந்தேன்.

இருபத்தைந்து நிமிடங்களில் சாண்ட்வூர்ட் சென்றடைந்தது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவுடன், ஒரு நிமிடம் பாண்டிச்சேரியில் இருப்பது போன்ற உணர்வு. அப்படியே பாண்டிச்சேரியை ஒத்திருந்தது நெதர்லாந்தின் சாண்ட்வூர்ட் கடற்கரை நகரம். வங்கக்கடலிலிருந்து வடகடலை சென்றடைந்தது என் பயணம். இது கோடைகாலம் என்பதால் இப்படி ஒரு கடற்கரை நகரத்தைத் தேர்வு செய்திருந்தனர் குழுவினர். பிரான்ஸ், ருமேனியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, நெதர்லாந்து என்று பன்முகத் தன்மை கொண்ட குழுவின் ஒரே இந்தியப் பங்களிப்பாளர் நான். கடற்கரை நகரம் என்றவுடன் துள்ளிக் குதித்து உற்சாகத்தை வெளிப்படுத்தாத ஆளு நான்தான். இப்படிக் ஒரு கடற்கரை சாலை வழியாகத்தான் தினமும் அலுவலகம் சென்று வருகிறேன் என்று சொன்னபோது ‘வாவ்’ என்று புருவம் உயர்த்தினார்கள். நானும் வெளிநாடுகளில் கடல் நீர் பச்சை நிறத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்திருந்தேன். ஆனால், எதிர்பார்த்ததிற்கு மாறாக, வட கடலும் வங்கக் கடல் போன்றே தோற்றமளித்தது எனக்கு அவ்வளவு உற்சாகமாக இல்லை.

மூன்று நாட்களும் பயிற்சி முகாம் முடிந்து, ஒவ்வொரு நாள் மாலையும் கடற்கரையில் இருந்த ஏதேனும் ஓர் உணவகத்தில் எங்களின் மாலைப் பொழுது கழிந்தது. சூரியன் மேற்கில் மறைவதைப் பார்த்துவிட்டே அறைகளுக்குத் திரும்பினோம். அதுவும் எங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இரவு 10.45 மணிக்குத்தான் மறையத் தொடங்கியது. பயிற்சி முகாம் முடிந்ததும், எல்லாரும் விமானமோ ரயிலோ ஏறி, மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல, நான் மட்டும் என் பயணக் காலத்தை நீட்டித்து, ஆம்ஸ்டர்டாமைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன்.

மீண்டும் ட்ரெயின், மீண்டும் அதே ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ஸ்டேஷன். லண்டனில் பிறந்து வளர்ந்து ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் குழு நண்பரிடம், நான் முன்பதிவு செய்திருந்த ஹாஸ்டலின் முகவரியைக் காட்டி அங்கே எப்படிச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் தெரிந்து வைத்திருந்தேன். அவர் அந்த ஹாஸ்டல் பெயரைப் பார்த்தவுடன், “ஓ .. இந்த இடமா? நானும் என் நண்பர்களும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கே தங்கி இருக்கிறோம். மிக அருமையான இடம்” என்று சான்றளிக்கக் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. பல சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை பார்த்துவிட்டே நான் முன்பதிவு செய்திருந்தாலும், அங்கே தங்கி இருந்த ஒருவர் நேரில் சான்றளிக்கும்போது நிம்மதியாக இருந்தது.

அங்கே எப்படிச் செல்ல வேண்டும் என்று அவர் சொன்னதை வரைந்து, அதை ஒளிப்படமாகப் பதிவு செய்தும் வைத்துக் கொண்டேன். நடைமேடை இரண்டிலிருந்து கீழே இறங்கி இடதுபுறம் திரும்ப வேண்டும் என்று தெளிவாக எழுதி இருந்தும், நடைமேடையில் இருந்து கீழே இறங்கியவுடன், என் எதிரே வாய்க்கால்களில் சென்று கொண்டிருந்த அழகானப் படகுகள் கண்ணில் பட்டன. அவ்வளவுதான், இடதாவது, வலதாவது என்று விட்டுவிட்டு நேரே அந்தப் படகுகளை வேடிக்கைப் பார்க்கச் சென்றுவிட்டேன். அந்த வாய்க்கால்களில் உள்ள பாலத்தின் சுவரில் இருந்த பூக்கள் மனம் கவர, அவற்றோடு ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன். இப்படி ஒரு படகில் ஏறித்தான் நானும் நான் தங்க வேண்டிய ஹாஸ்டலைச் சென்றடைய வேண்டும். அது நாள் முழுவதும் இயங்கும் இலவசப் படகுச் சேவை என்று அறிந்து வைத்திருந்தேன். ஆனால், இந்தப் படகுகள் இலவச சேவைப் படகுகளைப் போலத் தோற்றமளிக்கவில்லை. என் சந்தேகத்தை யாரிடமாவது கேட்கலாம் என்றால், அங்கே நின்றிருந்தவர்கள் அனைவருமே சுற்றுலா வந்தவர்கள். நிச்சயம் சரியான பதில் கிடைக்காது. ஒழுங்காக நண்பர் சொன்ன வழியைப் பின்பற்றி இருக்கலாம்.

சைக்கிளில் என்னைக் கடந்து சென்ற ஒருவரை நிறுத்தி, என் சந்தேகத்தைக் கேட்டேன். “நீங்கள் செல்ல வேண்டிய படகு ஸ்டேஷனுக்குப் பின்புறம் உள்ளது. அதற்கு நீங்கள் சுரங்கப்பாதையைக் கடந்து செல்ல வேண்டும். இவை அனைத்தும் சுற்றுலாப் படகுகள்” என்று விவரித்தார். “நானும் அங்கேதான் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு, நானும் வருகிறேன் என்று சொல்வதற்குள் பறந்துவிட்டார். மீண்டும் தேடுதல் பயணம், அந்தச் சுரங்கப்பாதை எங்கே இருக்கிறது? அங்கே இருந்த ஒரு காவலரிடம் வழி கேட்க, அவர் சுரங்கப் பாதைக்குச் செல்லும் வழியைக் காட்டினார். அதைக் கடந்து சென்றால் அங்கே F3 படகு காத்திருந்தது. சைக்கிள், பைக், கார் என்று எந்த வாகனமும் ஏற்றிக்கொள்ளக் கூடிய பெரிய சைஸ் படகு. அடுத்த கரையிலிருந்து ஒரு படகு வந்து நின்றவுடன், இந்தப் படகு தன் பயணத்தைத் தொடங்குகிறது. இப்படியாக இடைவெளியின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்தப் படகு சேவை.

இரண்டு நிமிடப் படகுப் பயணம்தான். அடுத்த கரையை அடைந்தாயிற்று. அங்கிருந்தே நான் தங்க வேண்டிய ஹாஸ்டல் கண்ணுக்குத் தெரிய மிக எளிதாக வந்து சேர்ந்தேன். மூன்று மணிக்குத்தான் அறைக்குள் செல்ல முடியும். நாம் வேண்டுமானால், லாக்கரில் உடைமைகளை வைத்துவிட்டுப் பின்னர் வரலாம். நான் பதினோரு மணிக்கே சென்று விட்டதால், லாக்கரில் உடைமைகளைப் போட்டுவிட்டு, தேவையானப் பொருட்களுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டேன். ஹோட்டலைப் போல இந்த ஹாஸ்டல்களில் உடைமைகள் வைக்கும் லாக்கர்கள் இலவசம் அல்ல. நான்கு மணி நேரத்துக்கு நான்கு யூரோக்கள் செலுத்த வேண்டும்.

இங்கே எல்லாமே தானியங்கி முறையில் இயங்குவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயந்திரத்தனமான வேலைகளுக்கு அவர்கள் மனிதர்களைப் பயன்படுத்துவதில்லை. லாக்கர்கள் இருக்கும் அறைக்குச் சென்று ‘rent a locker’ என்பதைத் தேர்வு செய்து, உங்கள் ரகசியக் குறியீட்டு எண்ணை அளித்தால், பணம் செலுத்துவதற்கான திரை தோன்றும். நம் வங்கி கார்டை தேய்த்தால் லாக்கர் திறந்து கொள்ளும். இதற்காக வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் நபர் எழுந்து வந்து உதவ வேண்டிய தேவையே இல்லாமல் இருந்தது. எந்த அளவுக்கு ஒரு பணியை நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எளிமைப்படுத்த முடியுமோ அவ்வளவு எளிதாக்கி இருந்தார்கள்.

மீண்டும் படகைப் பிடித்து அக்கரைக்குப் போய் ஊர் சுற்றக் கிளம்பினேன். இப்போது எனக்குப் பாதைகள் புரியத் தொடங்கி இருந்தன. ஓர் ஊரின் சாலைகள் நமக்குப் பழக்கமாகும்போதுதான் அந்த ஊர் நம்முடன் பழகத் தொடங்குகிறது. பழகாத சாலைகள் பயத்தையே தருகின்றன. ஆம்ஸ்டர்டாமைப் பொறுத்தவரை அத்தனை சாலைகளும் திட்டமிட்டு அமைக்கப்பட்டதுபோல மிக நேர்த்தியாக இருக்கின்றன. ஊரின் மையப் பகுதியில், டாம் ஸ்கொயர் எனப்படும் சதுரமான நிலப்பரப்பு. இதுதான் நகரின் முக்கிய மையப் பகுதி. இங்கிருந்துதான் நகரம் விரிவடைய ஆரம்பிக்கிறது. நான்கு திசைகளிலும் நான்கு நகரப் பகுதிகள். டச்சு மொழியில் ஊஸ்ட் (oost) என்றால் கிழக்கு (east), நூர்ட் (noord) என்றால் வடக்கு (north), ஸுய்ட் (Zuid) என்றால் தெற்கு (south), மேற்கை மட்டும் வெஸ்ட் என்றே அழைக்கிறார்கள். இந்த நான்கு திசைகளில் விரிவடையும் நகரம், பத்து கிலோமீட்டருக்கு மேலேயே பரபரப்பை இழந்து அமைதியாகி விடுகிறது. நகரத்தை விட்டு ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு ஹாஸ்டலை நான் புக்கிங் செய்ய முயன்றபோது, “ஏன் நகரத்தைவிட்டு ஹைவேயில் தங்குகிறீர்கள்” என்று ஏற்கெனவே அங்கு சென்று வந்த தோழமை ஒருவர் கேள்வி எழுப்பியபோது, சற்றே அதிர்ந்து போனேன். இங்கே திண்டிவனம்கூட சென்னைக்கு மிக அருகில் ஆகிவிட்டது. அங்கே ஆறு கி.மீ. கூட ஹைவே ஆகிவிட்டது. எனவேதான் நகரத்தின் மையத்தை ஒட்டிய ஒரு ஹாஸ்டலை நான் தேர்வு செய்து இருந்தேன். அது மிகவும் வசதியாக இருந்தது.

சரி, அது என்ன ஹாஸ்டல் என்று கேட்கிறீர்களா? அதுதான் கிளின்க் நூர்ட் ஹாஸ்டல்.

(தொடரும்)

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.