‘1812-ம் ஆண்டு கர்னல் மன்றோ கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தமிழ்ச் சமூகத்து பெண்ளுக்கு, குப்பாயம் அணிந்து கொள்ள உரிமை வழங்கியபோது திருவிதாங்கூர் மிஷன் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்த மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 677.1* ஆக, அந்த 677 பேரில், பெண்கள் பாதிபேர் என்று கொண்டாலும் கிட்டத்தட்ட 350 பேர் பெண்களாக இருந்திருக்கலாம். அந்த 350 பெண்கள் மட்டுமே குப்பாயம் அணிந்து கொள்ள முடிந்தது. 350 பெண்கள் மட்டும் குப்பாயம் அணிந்ததற்க்காக, ஒரு கலவரத்தை உருவாக்கிய ‘உயர் சாதியினர்’ எத்தனை பெரிய காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? இக்கலவரத்தை தடுக்க சிறிதளவுகூட முயற்சி செய்யாமல், கலவரத்துக்கு ஆதரவு கொடுத்த ‘பிராமண வர்ணத்தினர்’ சாதி இந்துக்கள் என்றழைக்கப்பட்டவர்களைவிட பெரிய காட்டுமிராண்டிகள் அல்லவா?ஆக 1812ல் கிறிஸ்தவ மதம் மாறியிருந்த (கிட்டத்தட்ட) 350 பெண்களைத் தவிர, மீதமிருந்த லட்சக்கணக்கான சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கு மார்பை மறைக்கும் உரிமை வழங்கப்படவில்லை.’

ரிங்கல்தொபே பயணத்தின் முடிவும் சார்ல்ஸ் மீட்டின் தொடக்கமும்

1813-1814-ம் ஆண்டில் திருவிதாங்கூரில் ஏற்பட்ட பஞ்சம் பற்றியும் ரிங்கல்தொபே நண்பர்களிடம் உதவி வசூலித்து மக்களுக்கு குளம், கிணறு வெட்டிக் கொடுத்தது பற்றியும் முந்தைய அத்தியாயத்தில் படித்தோம். அதனைத் தொடர்ந்து ரிங்கல்தொபேயின் உடல்நலம் குன்றியதுடன் ஏழ்மைநிலைக்கும் ஆளானார்.

திருவனந்தபுரத்துக்கு சென்று நண்பர்கள் பலரிடம் உதவி கேட்டும் கிடைக்கவில்லை. தன் குடும்பத்திடம் உதவிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். திருவிதாங்கூரின் மிஷனரிகளிடம் உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். நண்பர்கள் யாரிடமும் உதவி கிடைத்ததாகத் தெரியவில்லை. இங்கிலாந்தில் இருந்து ரிங்கல்தொபேக்கு வந்த உதவி பற்றி, ரிங்கல்தொபே அறியாமல் போனது, ஏனென்ற காரணம் வரலாற்றில் கிடைக்கவில்லை. இறுதியாக 1816-ம் ஆண்டு திருவிதாங்கூரில் இனி தங்க இயலாது என்று உணர்ந்தவராக, திடீரென்று திருவிதாங்கூரிலிருந்து வெளியேறினார் ரிங்கல்தொபே.1*

அவர் வெளியேறியதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை. எங்கோ, கிழக்கு திசை நோக்கி ஏதோ வேலையாக சென்று விட்டதாக பேசிக்கொண்டார்கள். இறுதியாக மெட்ராசில் (சென்னையில்) இருந்த கிறிஸ்தவ மதபோதகர் தாம்சன் என்பவரை சந்தித்ததாகத் தெரிகிறது. கிறிஸ்தவச்சாணார் சாதிப் பெண்களின் மார்பை மறைக்கத் துணி கொடுத்த ரிங்கல்தொபே, தாம்சனை சந்தித்த போது, நல்லதொரு உடைகூட அணியாதவராக, சட்டைக்கு மேல் அணியும் கோட் அணியாதவராக காணப்பட்டார். தலையில் வைக்கோலால் செய்யப்பட்ட தொப்பியை அணிந்திருந்தார். கடல்வழியாக பயணம் செய்யப் போவதாக தாம்சனிடம் ரிங்கல்தொபே கூறியுள்ளார். அதன் பிறகு ரிங்கல்தொபே எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.2*

அவரின் மர்மமான இந்த முடிவுக்கு, பார்ப்பனீயத்துக்கு எதிராகக் குப்பாயம் கொடுத்ததுதான் காரணமா?

சார்ல்ஸ் மீட்

ரிங்கல்தொபேக்குப் பிறகு மயிலாடியிலிருந்த லண்டன் மிஷன் சொசைட்டிக்கு தலைமைப் பொறுப்பேற்ற மதபோதகர் சார்ல்ஸ் மீட். 1817 டிசம்பரில் குளச்சலுக்கு வந்த சார்ல்ஸ் மீட், மயிலாடி கிறித்தவ மிஷனின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சில நாட்களிலேயே, கர்னல் மன்றோவின் அறிவுரைப்படி லண்டன் மிஷன் சொசைட்டியின் தலைமையிடத்தை மயிலாடியிலிருந்து நாகர்கோயிலுக்கு மாற்றினார். சார்ல்ஸ் மீட் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஓராண்டுக்குள் 3000 சாணார்கள் (நாடார்கள்) நாகர்கோயில் மிஷன் சொசைட்டியில்(LMS) இணைந்தார்கள். அவர்களில் 900 பேர் மதம் மாறாமலேயே, ரிங்கல்தொபேயுடனும் மிஷனுடனும் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.3*

‘திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நம்ப முடியாததாக இருக்கிறது. தாமரைக்குளம் என்னும் கிராமத்தில் மட்டும் ஆயிரத்துக்கும்( 1000) மேற்பட்டவர்கள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் அடைந்துள்ளனர். நாகர்கோயிலில் உயர் சாதி மக்கள் பலரும் கிறித்தவர்களாக மதம் மாறியுள்ளனர்’ என்று நவம்பர் 24, 1818 அன்று சார்ல்ஸ் மீட் குறிப்பிடுகிறார். ‘நேற்று (ஓரே நாளில்) வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த 50 குடும்பங்கள், நாகர்கோயில் கிறித்தவ சபையில், மதம் மாறியுள்ளார்கள்’ என்றும் டிசம்பர் 14, 1818 அன்று கிறிஸ்தவ மதபோதகர் நீல் (Knill) எழுதுகிறார்.4*

இதில் திருவிதாங்கூரின் ‘தாமரைக்குளம்’ என்னும் கிராமம் அய்யா வைகுண்டர் பிறந்த ஊரான சுவாமி தோப்பிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த மற்றும் வாழ்கின்ற மக்கள் பெரும்பாலும் நாடார் சாதி மக்களே! 18,19-ம் நூற்றாண்டின் பதிவேட்டின்படி சாணார் சாதி மக்கள், ரிங்கல்தொபே சுயநலக் காரணங்களுக்கான மதமாற்றத்தை தடுத்ததுபோல், சார்ல்ஸ் மீட் தடுக்கவில்லை என்பதை யூகிக்க முடிகின்றது.

மதமாற்றம் செய்வதில் ரிங்கல்தொபேயின் கொள்கைகளை பின்பற்றாத சார்ல்ஸ் மீட், தலைவரி, முலைவரி முதலான வரிக்ககொடுமைகளிலிருந்து கிறிஸ்தவ மக்களை மீட்கும் போராட்டப்பணியை, ரிங்கல்தொபே விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பெண்கள் குப்பாயத்துடன் தோள்சீலையும் அணிந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த தோள்சீலைப் புரட்சிகளையும், பத்மனாதபுரத்து அரண்மனை நீதிமன்றம் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக, கிறித்தவ மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கு தோள்சீலை அணியும் உரிமையைக் கொடுத்து தீர்ப்பளித்ததையும் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

இரண்டாம் தோள்சீலைப் போராட்டமும், கலவரங்களும்

கன்னியாகுமரியின் விளவங்கோடு தாலுகாவின் நட்டலம் கிராமத்தை சேர்ந்த சவேரியாள் ஞானப்பூ, அன்னாள் ஆகிய இருவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த பெண்கள். இவ்விருவரும் ரவிக்கை அணிந்து சந்தைக்கு சென்றதைப் பார்த்து கோபம் கொண்ட அந்த கிராமத்துத் தலைவரும், மல்லம்பிள்ளை என்பவரும் அவ்விரு பெண்களையும் மிரட்டி அவர்களின் ரவிக்கையைக் கிழித்தெறிந்தனர். அந்த கிராமத்தின் ‘பிரவர்த்தகர்’ ஒருவரின் தூண்டுதலும் துணையும் அந்த கிராமத்து தலைவருக்கும், மல்லன் பிள்ளைக்கும் ரவிக்கைகளைக் கிழித்து, பெண்களை மானபங்கம் செய்ய உத்வேகம் அளித்தது.

பிரவர்த்தகர் என்பது திருவிதாங்கூரின் வரிவசூல் செய்யும் அதிகாரிக்கான பதவியின் பெயர்.

சவேரியாள் ஞானப்பூவும், அன்னாளும் தாங்கள் உறுப்பினராக இருந்த தேவாலயத்தில் நடந்த வன்முறை குறித்து புகார் செய்தனர். தேவாலய போதகர் பிரவர்த்தகரிடம் புகார் செய்தபோது, “இவர்கள் ரவிக்கை அணிந்தால் மீண்டும் கிழித்து அடிப்போம்” என்று பிரவர்த்தகர் வீர வசனம் பேசினார்.

குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த நீதியுடையாள், குணமுடையாள் ஆகிய இருவரும் கிறிஸ்தவ மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள். அவர்கள் ரவிக்கை அணிந்து கல்லங்குழி சந்தைக்கு சென்ற போது, பூதமாடன் செட்டி, மல்லன் பிள்ளை ஆகிய இருவரும், அவர்களது ரவிக்கைகளைக் கிழித்தெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். குழிவிளை சந்தைக்கு சென்ற யேசுவடியாள் என்ற ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்ணின் ரவிக்கையும் அதே பூதமாடன் செட்டி, மல்லன் பிள்ளை ஆகியோரால் கிழித்தெறியப்பட்டது.

‘பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை

போடாதே என்றடித்தானே சிவனே அய்யா’

  • அருள்நூல்

வேதமாடன் என்பவரின் வீட்டு பெண்களும், ஆறுமுகம் என்பவரின் வீட்டுப் பெண்களும் சந்தைக்கு ரவிக்கை அணிந்து சென்ற போது சங்கரன் பிள்ளை என்பவர் அவர்களை வழிமறித்து மிரட்டினார். அப்பெண்கள் வீட்டுக்குச் சென்று விளக்கமாறுகளை எடுத்து வந்து சங்கரன் பிள்ளையை எதிர்த்தனர். ஆண்கள் கம்பு மற்றும் ஆயுதங்களுடன் எதிர்த்தனர். சங்கரன் பிள்ளை பயந்து ஓடினார். விளக்கமாறுகளும் புரட்சி செய்திருக்கின்றன.

இதற்கிடையில் ஒடுக்கப்பட்ட சாதி ஆண்களும் பெண்களும், ஆங்காங்கே  கூலியின்றி ஊழியம் செய்ய மறுத்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்துக்கு செல்வதைக் காரணம் காட்டி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நாயர் ஜென்மிகள்*, மற்றும் நம்பூதிரி ஜென்மிகளின் நிலங்களிலும், கோயில்களிலும் ஊழியம் செய்ய மறுத்து வந்த கிறிஸ்தவ நாடார்கள், நாளடைவில் தாங்கள் செய்த வேலைக்கான (ஊழியத்துக்கான) கூலியைக் கேட்கத் தொடங்கினார்கள். ஒடுக்கி வைத்த மக்களை ‘ஊழியம்’ செய்ய வைத்துப் பிழைத்த சாதியினர் எரிச்சலடைந்தனர்.

*ஜென்மி என்பது நிலவுடைமையாளர்களைக் குறிக்கும் சொல், கிட்டத்தட்ட ‘பண்ணையார்’ என்ற பொருள் தரும் சொல் ‘ஜென்மி’.

கண்ணனூர் தேவாலய சபையைச் சேர்ந்த கிறிஸ்தவச் சாணார்* ஒருவர், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஊழியம் (கூலியில்லாத வேலை) செய்ய மறுத்தார். 1826-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 21, ஞாயிற்றுக்கிழமையன்று, நாயர் சாதியினர் சிலர், அவரைத் தூக்கிக் கொண்டு வந்து வலுக்கட்டாயமாக ஊழியம் செய்யப் பணித்தனர்.

*வரலாற்றில் பதியப்பட்ட சாதிப்பெயரை அந்தக் கால செய்தியைக் கொடுக்கும் முகமாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பத்மநாதபுரத்து அரண்மனையில் இருக்கும் யானைகளுக்கு தென்னை ஓலைகளை சுமந்து சென்று கொடுக்கச் சொல்லி, கட்டாயச்சட்டமாக ஓலைகளை சுமக்க வைத்தனர். கிறிஸ்தவச் சாணாராக* அறியப்பட்ட இசக்கி மாடன் என்பவரும் அவருடைய சகாக்களும், செய்தியறிந்து அவ்விடத்துக்கு வந்தனர். ஊழியம் செய்து கொண்டிருந்த நபரின் தலையிலிருந்து ஓலைச்சுமையை இறக்கினர். அந்த ஓலைகளை நாயர் சாதியைச் சேர்ந்த ஒருவரின் தலையில் ஏற்றி, கண்ணனூர் ஆலயம்வரை சுமக்க வைத்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த நாயர் சாதியினர், கண்ணனூர் ஆலயத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில், கம்பு, கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஒன்று கூடினர். விபரம் அறிந்த சாணார்*(நாடார்) சாதி மக்கள் தாங்கள் குடியிருந்த இடங்களிலிருந்து தப்பியோடித் தலைமறைவாயினர். கோபமாக வந்த நாயர் சாதியினர் ஆளில்லாத வீடுகளை அடித்து உடைத்ததுடன் உடமைகளை கொள்ளையடித்தனர். கண்ணனூர் தேவாலயத்தைக் கொளுத்திச் சாம்பலாக்கினர்.

‘நாருவட்டி ஓலை நாள்தோறும் கேட்டடிப்பான்

தோண்டிக்கும் பாய்க்கும் சுமடு அதுக்கும் ஓலை

வேண்டியதெல்லாம் எடுத்து விரைவில் வா என்று அடிப்பான்’

  • அகிலத்திரட்டு அம்மானை

மேற்சொன்ன ‘ஊழிய மறுப்பு புரட்சி’ சம்பவத்துக்குப் பிறகு, நம்பூதிரிகளின் ஏற்பாட்டால் உருவாக்கப்பட்ட ‘நாயர் படை’யின் அதிகாரத்தை, நாயர் சாதி பயன்படுத்தத் தொடங்கியது. நாயர் படையினர் இரவு நேரங்களில், மரண ஆயுதங்கள் மற்றும் விளக்குகளுடன், ஊரைச் சுற்றித் திரிவதும், மிஷனரிகளுடன்  சம்மந்தப்பட்டவர்களைத் தாக்குவதும் வாடிக்கையாகியது. நாயர் படையினர் செல்லும் இடமெங்கிலும் இருந்த தேவாலயங்களும், தேவாலயங்களோடு இணைந்த பள்ளிக்கூடங்களும் எரிக்கப்பட்டன.

ஓர் இரவு நேரத்தில் சார்லல்ஸ் மீட்டுக்காக ரொட்டி வாங்கச் சென்ற அவரது வேலைக்காரர், நாயர் படையினரால் தடுக்கப்பட்டார். நாயர் படை விசாரித்த போது, தான் படையைச் சேர்ந்தவன் என்றொரு பொய்யைச் சொல்லி வேலைக்காரர் தப்பி வந்தாராம். அப்போது நாயர் படையினர் ‘இவன் சார்ல்ஸ்மீட்டுடன் தொடர்பு கொண்டவனாக இருந்திருந்தால் இவனை கொலை செய்துவிட வேண்டும்’ என்று பேசிக் கொண்டதை வேலைக்காரர் கேட்டிருக்கிறார். இத்தகவலை C.M. ஆகர் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

1828-ம் ஆண்டு வெடித்த கலவரம் ஆற்றூர், கண்ணனூர், திற்பரப்பு, அருமனை, உடையார் விளை, புலிப்புனம் போன்ற ஊர்களில் பற்றி எரிந்தது. கல்குளம், விளவங்கோடு ஆகிய தாலுகாக்களின் ரிவென்யூ இன்ஸ்பெக்டரான ஈஸ்வர பிள்ளை என்பவரின் தலைமையில், பிடாகைக்கார்ரகளும், நாயர் வீரர்களும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டனர். கிறிஸ்தவ தேவாலயங்கள் தீக்கிரையாயின. சாணார் முதலாக சாதி வித்தியாசமின்றி கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர். கிறிஸ்தவர்கள் பலர் ஒன்றாகக் கட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். கிறிஸ்தவ மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சாதியினர் பலரும் தீவிரவாதிகளாகவும் தேசவிரோதிகளாகவும் முத்திரைக் குத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கிறிஸ்தவ மக்களை ஒடுக்கவும் அடிக்கவும் அம்பு, வில், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினர். இந்த ஆயுதங்களுடன் சுற்றி சுற்றி வந்த நாயர் படையினரைக் கண்டு பீதியடைந்து ஒடுங்கினர்.

ஆற்றூர் தேவாலயங்களும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழ்ச் சமூகத்து மக்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டன. ஆற்றூர் பள்ளியின் ஆசிரியர் ஒருவருடன் சேர்ந்து புரட்சி செய்த பல கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கட்டி, யானையால் இழுத்துச் செல்லப்பட்டு, தக்கலை சிறையில் அடைக்கப்பட்டனர். சாலையில் கிடந்த பிணம் ஒன்றின் கொலைப்பழி கிறிஸ்தவர்கள் மீது சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 90 வயது மூதாட்டி ஒருவரின் காதுகளை அறுத்து அவரின் கம்மல்கள் சூறையாடப்பட்டது. பம்படிக்கோணத்தில் வேதமாணிக்கம் என்னும் பெயர் கொண்ட நபர் நாயர் வீரர்களால் கொலை செய்யப்பட்டார். கர்னல் மெக்காலேவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.5*

விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுகாக்களில் நிகழ்ந்து, ஆவணங்களில் பதிவான சில சாதிவெறி நிகழ்வுகளை இதுவரை பார்த்தோம்.

தோவாளை அருகிலுள்ள தாழக்குடி கிராமத்தில் மாடத்தி என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் உடல் சோர்வின் காரணமாகவும், பட்டினியாலும் ஊழியம் செய்யச் செல்லவில்லை. ஒரு நிலவுடைமையாளரின் கொத்தடிமை என்பது மாடத்தியின் சமுதாய அடையாளமாக இருந்தது. எனவே அவளின் உரிமையாளரான நிலவுடமையாளன் அவளை இழுத்து வரச்செய்து எருமை மாட்டுக்கு இணையாக கலப்பையில் பூட்டி சேற்று வயலில் உழும்படி செய்தான். ஏர் ஓட்டுபவன் எருமை மாட்டை தார்க்குச்சியால் குத்தி முடுக்கி விட, எருமை மாடு வேகமாக இழுத்தது. எருமை மாட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய மாடத்தியையும் தார்க்குச்சியால் குத்தி விரட்டினான் அவன். வலியுடன் கலப்பையை இழுத்து, சோர்ந்து போய் கலப்பையில் பூட்டிய நிலைமையிலேயே இறந்து போனாள் மாடத்தி. இச்சம்பவம் 1881-ம் ஆண்டின் திருவிதாங்கூர் மறைமாவட்டக்குழுவின் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.6*

தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் நாயர் சாதியினருக்கு இணையான செல்வாக்குடன் வாழ்ந்து வந்த வெள்ளாளர் சாதியினரும், நாயர் சாதியினருடன் இணைந்து ஒடுக்கப்பட்டப் பெண்கள் தோள்சீலை அணிந்ததற்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபட்டனர். பூதபாண்டியில் இருந்த வெள்ளாளர் சாதியினர், மறவர் சாதியினர், மற்றும் சில ஆதிக்க சாதியினரும் இணைந்து திட்டுவிளை பகுதியில் வாழ்ந்த கிறித்தவ மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நிகழ்த்தினர். பூதப்பாண்டியில் ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியரும், 13 கிறித்தவர்களும் பூதப்பாண்டி சத்திரம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் ஆங்கிலேயரின் அரசுப் பதிவேட்டின் படி இந்துக்கள்.

சார்ல்ஸ் மீட், மற்றும் அவருடைய சமகாலத்தில் நாகர்கோயில் கிறித்தவ மிஷனரியின் மதபோதகராக இருந்த சார்ல்ஸ் மால்ட் ஆகிய இருவரும் 1828-ம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் கர்னல் மாரிசனிடம், கலவரக்காரர்களிடம் கிறித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மனு அளித்தனர். கர்னல் மாரிசன் அப்போதைய திருவிதாங்கூர் திவான் வேங்கட ராவிடம், இப்பிரச்சினை குறித்து விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.7*

இந்நிலையில் சார்ல்ஸ் மீட், ஏற்கனவே நிறைய கலவரங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த, நெய்யூரிலிருந்த, கிறிஸ்தவ மிஷனுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

1829-ம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதியன்று, மண்டைக்காட்டிலிருந்த கிறிஸ்தவ சபையில் வைத்து, சார்ல்ஸ் மீட் மீது, கொலைவெறி தாக்குதல் நிகழ்த்த ஆதிக்கச் சாதியினர் சிலர் திட்டம் தீட்டினர். இதைத் தெரிந்து கொண்ட சார்ல்ஸ் மீட் உதயகிரி கோட்டையில் முகாமிட்டிருந்த ராணுவ தளபதி ஷிபால்டுக்கு இத்தகவலை ரகசியமாக அனுப்பினார். ஷிபால்டு தக்கச் சமயத்தில் வந்து சார்ல்ஸ் மீட்டை காப்பாற்றினார். நெய்யூர் பகுதிக்கு ராணுவம் அனுப்பப்பட்டது.8*

1829ஆ-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி, வழக்கு பத்மநாதபுரம் அரண்மனை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தோள்சீலை அணிந்த, சாணார் (நாடார்), பறையர் முதலான ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த  கிறித்தவப் பெண்கள், நீதிமன்றத்துக்குள் நுழைய முற்படும் போது, நாயர் படையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். ‘ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மார்பை துணியால் மறைத்தபடி, நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது’ என்று நாயர் படையினர் கூறினர்.9*

மீண்டும் நினைவுபடுத்துகிறேன், 1829 வரை கிறிஸ்தவ மதத்துக்கு மாறாத, திருவிதாங்கூரின் சாணார்* (நாடார்) முதலான ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் தோள்சீலையோ குப்பாயமோ அணியவில்லை, அணியும் உரிமை கிடைக்கவும் இல்லை.

தொடரும்…

தரவுகள்:

  1. CHRISTIANITY IN TRAVANCORE, G.T.MACKENZIE, 1901, PAGE NO: 50.
  2. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H.HACKER(LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO: 28.
  3. CHRISTIANITY IN TRAVANCORE, G.T.MACKENZIE, 1901, PAGE NO: 50.
  4. THE MISSIONARY REGISTER FOR MDCCC XIX, CONTAINING THE PRINCIPAL TRANSACTIONS OF THE VARIOUS INSTITUTIONS FOR PROPAGATING THE GOSPEL WITH THE PROCEEDINGS, AT LARGE, OF THE CHURCH MISSION SOCIETY, PAGE NO: 344.
  5. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE(A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D.PETER.M.A,..M.LITT,..Phd, Dr.IVY PETER,M.A.,B.T,.P.hd, first edition:2009, page no: 44,46,45,47.  கீழ்க்காணும் பாரதிய ஜனதா கட்சியின் இணையதள நூலகத்தில் ‘HISTORY OF KANYAKUMARI DISTRICT’ என்ற புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். https://library.bjp.org:8080/jspui/bitstream/123456789/1120/1/History%20of%20Kanyakumari%20District%20E-Book.pdf 
  6. தமிழகத்தில் அடிமை முறை, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு ஏப்ரல் 2005, பக்கம் எண்: 69
  7. LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE(A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D.PETER.M.A,..M.LITT,..Phd, Dr.IVY PETER,M.A.,B.T,.P.hd, first edition:2009, page no:48.
  8. A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H.HACKER(LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO: 38. & LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE(A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D.PETER.M.A,..M.LITT,..Phd, Dr.IVY PETER,M.A.,B.T,.P.hd, first edition:2009, page no: 47.
  9. THE LAND OF CHARITY, REV.SAMUEL MATTEER F.L.S, 1871, PAGE NO: 280.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.