திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா எனும் பெண் திருமணமாகி மூன்று மாதங்களுக்குள் குடும்ப வன்முறை காரணமாக உடல் மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். இனி வாழ விருப்பம் இல்லை என முடிவெடுத்து தனது குடும்பத்தாருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியபின், தன் உயிரை மாய்த்துள்ளார்.

திருமண உறவில் தோல்வி அடைந்தால் இனி வாழவே கூடாது; உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என அந்தப் பெண் சிந்திக்கும் அளவிற்கு நம் சமூகத்தில் குடும்ப அமைப்பும் சமூக கட்டுமானமும் அபாயகரமாக உள்ளன. ஆகவே ‘குடும்ப அமைப்பு பெண்களுக்கு பாதுகாப்புதான்’ என மேலோட்டமாக பேசி விடுவதில் உள்ள ஆபத்துகளை இப்போது நாம் தெட்டத் தெளிவாக உணரக் கூடியதாக உள்ளது.
சேவல்கள் கூவினால் விடியுமா?
திருமணமான பெண் தன் பிரச்னைகளை வெளிப்படையாக முன்வைப்பதற்கு, ஜனநாயகரீதியான அமைப்புகளாக குடும்பங்கள் நடைமுறையில் இல்லை. பெண்ணைப் பெற்றவர்கள், பெற்றதில் இருந்து அவளை ஒருவனிடம் கையளிப்பது என்பதையே பெரும் கடமையாகக் கருதுகின்றனர். திருமணத்துக்காகவும் குழந்தை பெறுவதற்காகவும் மட்டுமே பெண்கள் படைக்கப்பட்டார்கள் என்று இன்னும் நம்பிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்!
ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்கிறார்கள், இப்படி பொய்கள் மேல் கட்டப்படும் உறவு வெறும் கடுதாசியாலும் தாலிக் கயிறாலும் நிலைக்கக் கூடியதா?
தனக்கு ஒவ்வாத துணை என உணரும் போது கூட, தன்னுடைய துன்பமான நிலையை பற்றி பெண்கள் சிந்தித்து செயலாற்றுவதில்லை. தன் பெற்றோர்கள் இதனால் முகம் கொடுக்க போகும் இன்னல்களை எண்ணி, திருமண உறவுகளை முறிக்கத் தயங்குகின்றனர். அது மட்டுமல்ல விவாகரத்தை நாடும் தன்னை இந்த சமுதாயம் எவ்விதமான கண்ணோட்டதுடன் பார்க்கப் போகின்றது என்ற பயமும் பெண்களை ஆட்டிப் படைக்கிறது.
இதையும் தாண்டி, அந்தப் பெண் துணிச்சலாக தன் மீதான அடக்குமுறை, ஒவ்வாமைகளுக்கு எதிராகப்பேசினால் அவ்வளவுதான். அவர் மீதான எதிர்மறை விமர்சனங்கள் ஆண்களாலும், ஏன் பிற பெண்களாலும்கூட வைக்கப்படுகிறது.
குடும்ப எல்லைக்கு வெளியே தன் பிரச்னைகளைப் பெண் பேசக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. திருமண உறவோ, living together உறவோ எவ்வகையான உறவு முறையாக இருப்பினும், எவரேனும் ‘மன உளைச்சல் வந்தாலும், தனிப்பட்ட பிரச்னைகள் ரகசியம் பேணப்பட வேண்டும்’ என அறிவுறுத்தப்படுமாயின், அங்கே ஆபத்து என எச்சரிக்கையடைய வேண்டும்.
விவாகரத்து என்ற முடிவை எடுப்பதற்கு முழு சுதந்திரம் பெண்களுக்கு இன்றும் தமிழ் சமூகத்தில் உண்டா ? ‘ஆரம்பத்தில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், போகப் போக சரியாகி விடும்’, ‘அனுசரித்துப் போ’ என்பது தாரக மந்திரமாகப் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
‘குடும்பம் என்றால் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நாங்கள் எல்லாம் எத்தனை பேச்சுகளையும் அடிகளையும் வாங்கிக் கொண்டு குடும்பம் நடத்தினோம்’ – இது மிகவும் மோசமான குடும்ப வன்முறைகளை இயல்பாக்கம் செய்யும் ஆபத்தான புத்திமதிகளாக பெண்களிடம் சொல்லப்படுகிறது.
‘உன்னிடம் பொறுமையும் தாங்குதிறனும் இல்லை, இதுக்கெல்லாமா விவாகரத்து பண்ணுவது?’ போன்ற அதட்டல்கள். தலைவலியும் காய்ச்சலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வருகிறதா? அவரவருக்கு அவர் வலி. அதை அளவிட நாம் யார் ? ‘குழந்தைகள் பிறந்தால் எல்லாம் சரியாகி விடும்’ என்று இன்றும் சொல்கிறார்கள். பல குடும்பங்களில் குழந்தைப்பேறின்போதும் அதன் பின்னரும்தான் குடும்ப வன்முறைகளே அதிகரிக்கின்றன. பெண்களை துன்பகரமான திருமண உறவில் தொடர்ந்து தக்க வைப்பதற்கான ஒரு உத்தி தான் இது.
குழந்தைகள் இருந்தால், ‘அவர்களின் எதிர்காலம் பற்றி யோசித்து பார், அப்பா இல்லாமல் குழந்தை வளரலாமா?’, ‘இது சுயநலம்’ – இம்மாதிரியான பேச்சுக்களால் மனமுடந்து மீளாத பெண்கள் உண்டு.
குடும்ப வன்முறைகளை தினமும் கண்டு வளரும் பிள்ளை, அதே விஷயங்களை பெரியவனானதும் செய்யும். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக குடும்ப வன்முறை கடத்தப்படுகிறது.
‘அதிகம் படித்து விட்டோம் என்கிற திமிரில் பேசுகிறாய்’, ‘பணம் சம்பாதிக்கிறோம் என்ற இறுமாப்பு’ என்று பெண்களின் சுயாதீன திறமைகளை ‘குறைபாடுகளாக’ சித்தரிக்கும் பெற்றோரும் உறவினரும் நம்மிடையே உண்டு. தம் பேச்சை கேட்காவிட்டால் எவ்விதமான பண உதவிகளையோ, இதர வசதிகளையோ செய்யாத குடும்பங்களையும் கண்டுள்ளேன்.
விவகாரத்து வாங்கிய பெண்களை, இரண்டாம் தர பாவனைப் பொருள்கள் போல் நோக்குகின்ற கேவலமான பொதுப் புத்தி நம் சமூகத்தில் உண்டு. படித்த பண்டிதர், பாமரர் என்ற பாகுபாடே இல்லாமல் மறுமணம் புரிவோருக்கு தாம் ‘வாழ்க்கை வழங்குவதாகவும்’ அதனால் அப் பெண்கள் வாழ்நாள் முழுவதும் தமக்கு நன்றியுணர்வு உடையவர்களாக இருக்க வேண்டும் என்ற மனநிலையோடு பல ஆண்கள் உள்ளனர்.
மேற் கூறிய பலவகையான சிக்கல்தன்மையான சமூக பிரச்சினைகளால் பெண்கள் விவாகரத்தை நாடுவது என்பது மிகவும் கடினமாக விடயமாக விடுகிறது.
இக்கட்டுரையின் நோக்கம் இச்சூழ்நிலைகளில் தற்கொலை நியாயப்படுத்துவது அல்ல. மாறாக பெண்களை தற்கொலை முடிவுக்கு கொண்டு செல்லும் கொடூரமான கல்யாணங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என வலியுறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். திருமண முறிவோடு தனித்து வாழும் சூழலை அப் பெற்றோரும் சுற்றத்தாரும் ஏற்படுத்தி இருந்தால் இந்தத் தற்கொலை நிகழ்ந்திருக்குமா?
விவாகரத்து பண்ணுவதால் என்ன குடிமுழுகி விட போய் விடுகிறது?கலாசார சீர்கேடு என்ற முழங்குபவர்கள், அந்த ‘கலாசாரம்’ என்றால் என்ன என்று முறையான விளக்கம் பெரும்பாலும் செல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
கலாசார முகமூடியோடுதான் பெண்ணடிமைத்தனமும் பாலின பேதங்களும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகின்றன என்ற உண்மையை ஒப்புக் கொள்ள விரும்பாத கள்ளத்தனத்தை என்ன சொல்வது? ஆணாதிக்கம் என்பது கலாசாரம் என்ற பெயரில் பெண்கள் தாங்கும் ஒன்றாக இன்னும் உள்ளது. சேவல்கள் கூவித்தான் விடிகிறது என்று இன்றும் நம்புகிறார்களா?
தங்கமுட்டை இடும் கோழிகளா பெண்கள்

திருமணத்தின் போது சீதனமாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாகக் கூறி, 300 பவுன் நகை போட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ரூ.70 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இவ்வளவு செலவு செய்து, ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்தும் ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை. ரிதன்யாவிடம் மாமனார், மாமியார் ஆகிய இருவரும் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தங்கமும் பெண்ணடிமைத்தனமும் பொதுவாக பொருத்திப் பேசப்படும் விஷயங்கள் அல்ல. ஆனாலும் தங்கத்தின் மீதான ஆசை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் அந்தஸ்து, பெண்களை பொருளாதார ரீதியாக குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குக் காரணமாக அமைகிறது. தங்கம் பெரும்பாலும் பெண்களின் திருமணத்தின்போது சீதனமாக அல்லது பரிசாக வழங்கப்படுகிறது. இது பெண்ணின் அந்தஸ்தை குறிப்பதாகவும், அவளது குடும்பத்தின் கௌரவத்தை வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. தங்கம் வீடுகளில் ஒரு பெரும் முதலீட்டாக பார்க்கப்படுகிறது.
டிரம்பின் அமெரிக்க வர்த்தகக் கொள்கை மாற்றங்களால் தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் பெரும் பேசு பொருளாகியுள்ளது. 2030 ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 23,000 ரூபாயை எட்டும் என சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்திய நாட்டுப் பெண்களிடம் ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய 24,000 டன் தங்கம் உள்ளது. இது உலக ஆபரணத் தங்கத்தில் 11 விழுக்காடு என்று உலக தங்க மன்றம் (World Gold Council) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
அதிக தங்க சேமிப்பைக் கொண்டிருக்கும் உலகின் முதல் ஐந்து நாடுகளின் ஒட்டுமொத்த தங்க சேமிப்பைவிட, இந்திய நாட்டுப் பெண்களிடம் உள்ள தங்கத்தின் அளவு அதிகம். இந்தியாவின் மொத்த தங்கத்தில் தென்னிந்தியா 40 விழுக்காட்டை வைத்திருக்கிறது. தமிழ் நாடு மட்டும் 28 விழுக்காட்டை கொண்டிருக்கிறது. இது இந்தியப் பொருளியலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% வரை கொண்டிருக்கிறது.
திருமணத்தின்போது கொடுக்கப்படும் சீதனம், பெண்ணின் குடும்பத்தினரால் அவரது கணவன் வீட்டாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. சில சமயங்களில் அந்த தங்கம் பெண்ணின் விருப்பமின்றி பயன்படுத்தப்படுவதோடு, பெண்ணின் பொருளாதார நிலை, தங்கத்தை வைத்திருப்பதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அவளின் கணவனோ அல்லது குடும்பத்தினரோ, தங்கத்தை வைத்து அவளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அல்லது அவள் மீது அதிகாரம் செலுத்தவும் முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில், தங்கம் ஒரு பெண்ணின் அடிமைத்தனத்திற்குக் காரணமாக அமைகிறது.
பெண், மண், பொன் இவையெல்லாம் ‘புனிதமான’ உடைமைகளாகவே நம் சமூகத்தில் பார்க்கப்படுகின்றன. ‘லட்சுமி கடாட்சமாக’ போற்றப்படுகின்றன. மார்க்ஸ், தங்கம் மற்றும் பணம் குறித்து தனது மூலதனம் (Das Kapital) புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். இதில், தங்கம் ஒரு பண்டமாக எப்படி முதலாளித்துவ சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குகிறார். மார்க்ஸ், முதலாளித்துவத்தில் தங்கம் ஒரு பண்டமாக எப்படி சுரண்டலுக்கு வழிவகுக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். பெண் ஏன் அடிமையானாள் என்கிற பெரியாரின் நூலில், ‘பெண், நகை மாட்டப்படும் நிலையாக உபயோகிக்கப் படுகிறாள்’ என்று சுட்டிக் காட்டுகிறார்.
எனவே, தங்கம் ஒரு பெண்ணுக்கு அவசர பணத்தேவைக்காக உதவினாலும், அவளது குடும்ப பொருளாதார நிலையை மேம்படுத்தவும் உதவும் ஒரு பொருளாக இருந்தாலும், சில சமூகங்களில் அது அவளது சுதந்திரத்தைப் பறித்து, அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும் ஒரு கருவியாகவும் உள்ளது.
படைப்பாளர்
அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.