இருப்பிட மரபும் பாலின பேதமும்

உணவு, உடை மற்றும் இருப்பிட மரபுகள் பாலினப் பாகுபாட்டுக் கட்டமைப்புக்கு அடிப்படைக் காரணிகளாக இருந்து வருகின்றன. இவற்றில் உணவு மரபுகள் பெண்களைப் பலவீனமாக்குபவையாகவும் உடையணி மரபுகள் பெண்களின் தன்னம்பிக்கையைச் சீர்குலைப்பவையாகவும் இருக்கின்றன. இருப்பிட மரபுகளோ பெண்களை அடிமைகளாக மாற்றும் நிறுவனங்களாக உள்ளன. பாலினச் சமத்துவத்தை அடைவதற்கு இருப்பிட மரபுகளில் உள்ள பாலினப் பாகுபாட்டைப் புரிந்துகொள்வதும் புனரமைப்பதும் அவசியமாகிறது.

ஆதியில் ஓரிடத்தில் நிலைகொள்ள முடியாத சூழலில் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் உயிரைத் தற்காத்துக்கொள்ளவும் ஓடித் திரிந்த மனித இனம் குழுவாக உணவு மற்றும் நீராதாரம் உள்ள ஓரிடத்தில் நிலையாகக் குடிகொள்ளத் தொடங்கியபோது தாய் மைய பொதுமை வாழ்வியல் மெல்லச் சிதைந்து தந்தை மைய வாழ்வியல் தழைத்தோங்கியது.

தந்தைமைய வாழ்க்கை முறையில் தோன்றி வளர்ந்த குடும்பக் கட்டமைப்பில் பெண்களுக்கென்று எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. எனவே விலங்குகளின் அச்சுறுத்தல்களிலிருந்தும் தட்பவெப்ப சூழல்களிலிருந்தும் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள பின்னாளில் வடிவமைக்கப்பட்ட நிலையான இருப்பிடங்களின் மீதான உரிமைகள் அனைத்தும் ஆண்களுக்கே உரியதாக ஆக்கப்பட்டன. இருப்பிடம் போன்றே இனக்குழுக்களின் விளைச்சல் மற்றும் மேய்ச்சல் சார்ந்த நிலங்களின் உரிமைகளையும் ஆண்களே வழிவழியாகப் பெற்று நிர்வகித்து வந்தனர்.

தந்தை மைய வாழ்க்கை முறையின் ஆரம்பக் காலகட்டத்தில் தந்தை அடையாளம் குழந்தைகளின் அடிப்படை அடையாளமாகக் கருதப்பட்டதன் விளைவாகப் பெண்கள் களவு (காதல்) வாழ்வில் கருவுற்றால் பிறக்க இருக்கும் குழந்தையின் தந்தை அடையாளம் கருதி, கூடிய ஆணின் வாழ்விடத்திற்குச் சென்று வாழும் வழக்கம் தோன்றியது. அதன் நீட்சியாகத்தான் திருமணம் முடித்ததும் மணமகன் வீட்டிற்கு மணமகள் செல்லும் வழக்கம் தோன்றியது.

தனக்குப் பின் தன் நிலபுலங்களைக் காக்கும் ஆண் குழந்தைகளை உயர்ந்த இடத்தில் வைத்து வளர்பதும்; பருவத்தில் வேறு ஆணுடைய வாழ்விடம் புகும் பெண் குழந்தைகளை இரண்டாம் தரத்தில் வைத்து வளர்ப்பதுமான பாலினப் பாகுபாட்டு வழக்காறுகள் வலுவடைந்து மரபுகளாகப் பரிணமித்தன.

இனத்தின் குடியிருப்பு மற்றும் குடியிருப்பு சார் நிலத்தையும் நீராகாதாரத்தையும் பிற இனக்குழுக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பாத உணர்வை இனத்தூய்மையைப் பேணும் பொருட்டாகக் காரணம் காட்டி, பெண்கள் சுயமாக ஆண்களைத் தேர்ந்தெடுத்து, காதலுற்று வந்த மரபு தந்தையர்களால் சிதைக்கப்பட்டு, பெண் குழந்தைகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் தந்தையர்களே கைப்பற்றிக்கொண்டனர். பெண்கள் திருமணம் என்கிற சடங்கில் கைமாற்றப்படும் பண்டமாக ஆக்கப்பட்டனர் என்பதைத் திருமணத்தை பற்றி விவரிக்கும்,

கொளற்குஉரி மரபின் கிழவன் கிழத்தியை

கொடைக்குரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே (தொல் – 1088)

என்கிற தொல்காப்பிய நூற்பா வழி அறியலாம். வாழ்விட மற்றும் வாழ்விடம் சார் நிலத்தின் மீது அதிகாரத்தை நிறுவியிருந்த தந்தை மையச் சமூகம் பெண்களை அடிமைகளாக்கும் மரபுகளை விரிவுபடுத்தின.

தந்தை வீட்டில் இருக்கையில் தந்தை எடுக்கும் முடிவுகளுக்கும் கணவன் வீட்டில் இருக்கையில் கணவன் எடுக்கும் முடிவுகளுக்கும் பெண்கள் கீழ்படிந்து இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. “இன்னொருத்தன் வீட்டுக்குப் போறவ, எடுக்குற முடிவுல எல்லாம் அவ தலையிட வேண்டாம்” என்றவாறு தந்தை வீட்டிலும் “வேறொரு வீட்டில் இருந்து வந்தவ, அவளுக்கு என்ன தெரியும் நம்ம குடும்பத்தைப் பற்றி” என்றவாறு கணவன் வீட்டிலும் பெண்கள் மூன்றாம் நபராகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர்.

வாழ்விடத்தின் மீது உரிமையற்று இருந்ததால் குடும்ப அமைப்பின் அதிகாரப் பகிர்வுகளிலிருந்து பெண்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டதன் பின் குடும்பங்கள் ஆணாதிக்க நிறுவனங்களாகவே வளர்ந்தன.

ஆண்களின் மிகைப்படுத்தப்பட்ட இச்சைகளைத் தணிக்கும் போகப் பொருளாகவும் குழந்தைப் பெற்றுப்போடும் இயந்திரமாகவும் குடும்பங்களால் உபயோகப்படுத்தப்பட்ட பெண்களை, ஆண்களின் இச்சைக்கு இணங்க இயலா நாட்களில் தற்காலிகமாக வீடுகளிலிருந்து விலக்கி வைக்கும் மரபுகளும் தோன்றி வளர்ந்தன.

கர்ப்பிணி பெண்களைத் தாய் வீட்டிற்கு அனுப்புவது, மாதவிடாய் நாட்களில் பெண்களை வீட்டிலிருந்து விலக்கி வைப்பது என்பது இருப்பிட மரபில் தோன்றி வளர்ந்த மோசமான பாலினப் பாகுபாட்டுப் பராம்பரியங்களாகும்.

நிலையான இருப்பிடக் கட்டமைப்பு உருப்பெற்று வளர்ந்து வந்த காலகட்டங்களில், ஆண் தன்னுடன் இணைந்த பெண்ணின் மாதவிடாய் சமயங்களிலும் கருவுற்றிருக்கும் காலங்களிலும் வீட்டோடு இருக்காமல் முறையற்ற இச்சைகளைத் தணித்துக்கொள்ளும் பொருட்டு பரத்தையர்களிடம் செல்வது என்கிற வழக்கம் நிலவி வந்தது. மாதவிடாய் சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் பெண்களிடத்தில் ஆண்கள் உறவுகொள்ளக் கூடாது (தீண்டக் கூடாது) என்கிற காரணத்தால் பெண்களின் மாதவிடாயைத் தீட்டு என்றும் பிரசவித்த காலத்தைத் தீட்டுக் காலம் என்றும் வழங்கும் சொல்லாடல்கள் தோன்றின.

தலைவியின் மாதவிடாய் காலத்தில் தலைவன் பரத்தையர்களை நாடிச் செல்லும் பதிவுகள் தொல்காப்பியத்தில் (தொல்காப்பியம்: கற்பியல்-46) இடம்பெற்றிருக்கின்றன. மாதவிடாய் நீராடிய செய்தியைத் தலைவி பரத்தையர் சேரியில் இருக்கும் தலைவனிடத்தில் தெரிவிக்கத் தனது தோழியைச் சிவப்பு நிற ஆடை அணியச் செய்து அனுப்பும் செய்தியைப் பரத்தையர் பிரிவு பற்றிப் பேசும்,

செவ்வணி அணிந்து சேவடி விடும்புகழி (நம்பி அகப்பொருள்:205-7)

என்கிற இலக்கண நூற்பாவின் வழி அறியலாம். இவ்வாறாக, பெண்களின் மாதவிடாய் மற்றும் பிரசவித்த காலங்களில் ஆண்கள் பரத்தையர்களை நாடிச்செல்வதும் பிறகு திரும்புவதும் என்று இருந்த சூழலில் மாதவிடாய் மற்றும் பிரசவித்த காலங்களில் பெண்கள் தங்கள் தலைவனின் பிரிவை எண்ணி வருந்தி வாடியிருப்பதையும் அவன் திரும்பி வருகையில் வரவேற்க காத்திருப்பதையும் வாடிக்கையெனக் கொண்டிருந்த வாழ்வியலில் இருப்பிடம் மற்றும் நிலத்தின் மீதான அதிகாரத்தின் மையத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களை, ஆண்களின் உயிரற்ற/உணர்வற்ற உடைமைகளாகவே மாற்றியிருந்தன.

ஒருத்திக்கு ஒருவன் என்றும் ஆண்களுக்குப் பலதாரம் என்றும் ஆணாதிக்க மரபு வேரூன்றியபோது பெண்ணுடல் ஆண்களுக்குப் பயன்படாத நாட்களில் (மாதவிடாய், கருவுற்றிருக்கும் / பிரசவித்த காலம்) பெண்களை உறைவிடத்திலிருந்து விலக்கி வைக்கப் பழகினர். ஆண் தனது முறையற்ற காமத்திற்காக முன்பைப் போல பரத்தையர் உறைவிடம் நோக்கிச் செல்லாமல், மாதவிடாய் இல்லாத மற்ற மனைவியுடன் கூடும் வாய்ப்பைப் பலதார மணமுறை ஏற்படுத்திக் கொடுத்ததால் மாதவிடாயான தீண்ட வசதியற்ற பெண்ணைத் தீட்டென்று ஒதுக்கி வைப்பது இயல்பு வழக்கானது.

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சமைத்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்பது போன்ற மூட நம்பிக்கைகள் தோற்றுவிக்கப்பட்டு மேலும் தீட்டு மரபுகள் வலுப்படுத்தப்பட்டன.

இருப்பிடம் மற்றும் இருப்பிடம்சார் நிலத்தின் மீதான உரிமை பெண்களிடமோ அல்லது பாலினச் சமத்துவத்துடன் அனைவருக்குமானதாகவோ இருந்திருந்தால் மாதவிடாயைத் தீட்டாகக் கருதி பெண்களை வீட்டைவிட்டு விலக்கி வைக்கும் மரபும், கர்ப்பிணி பெண்களைத் தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மரபும் தோன்ற வாய்ப்புகள்கூட அமைந்திருக்காது.

பிற உயிரினங்களின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்யும் வீடுகள் பெண்களை அச்சுறுத்தும் ஆணாதிக்கக் கோட்டைகளாக வளர்ந்து வந்துள்ளன.

பிறந்த வீடு, புகுந்த வீடு என்று நிலையாகத் தங்கள் சொந்த வீடின்றி உயிரற்றப் பொருளைப் போல் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படும் பெண்களுக்கென்று சுயமும் சுதந்திரமும் இருந்துவிடக் கூடாதென்பதில் இருப்பிட மரபுகள் கவனத்துடன் வரம்பு முறைகளை நிர்ணயித்திருக்கின்றன. உதாரணமாக, காதலுக்காகவோ கனவுகளுக்காகவோ பிறந்த வீட்டிலிருந்து வெளியேறும் பெண்களை ஓடுகாலிகளாகவும் திருமண வல்லுறவு போன்ற குடும்ப வன்முறைகளிலிருந்து விடுதலை பெற வெளியேறும் அல்லது வரதட்சணை போன்ற காரணங்களால் வெளியேற்றப்படும் பெண்களை வாழா வெட்டிகளாகவும் தூற்றுகின்றன.

பன்னெடுங்காலமாகப் பொன்னையும் புதையலையும் பொத்தி வைத்துப் பாதுகாப்பதைப்போல பெண்களைப் பாதுகாக்கிறோம் என்று பொய்யுரைத்து, அடக்கியாண்டு பழகிய சமூகம், பெண்கள் வெளியில் வந்து பொருளாதாரத் தன்னிறைவு அடைவதையும் அன்றாட வீட்டுப் பணிகளில் பாலினச் சமத்துவப் பங்களிப்பை உறுதி செய்வதையும் கையாளத் தெரியாமலும் ஆண்களின் உளவியலுக்குள் புகுத்தப்பட்டுள்ள முறையற்ற காம உணர்வுகளை முறைப்படுத்தத் தவறியும் வரும் சமூகம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குப் பெண்கள் வீட்டைவிட்டு வெளிவருவதைக் காரணமாகக் காட்டுவதும் பெண்கள் வீட்டோடு இருப்பதையும், மீறி வெளிவரும் பெண்கள் இரவு நேரங்களில் குறிப்பாக மாலை ஆறு முதல் எட்டு மணிக்கு மேல் வெளியில் இருப்பதைத் தவிர்பதையும் தீர்வாகக் காட்டியும் வருகின்றது.

“வீடுகள்தாம் பெண்களின் பாதுகாப்பு” என்று வலியுறுத்தி வீட்டின் பாதுகாப்பைப் (பராமரிப்பு பணிகளை) பெண்கள் மட்டுமே சுமக்க வழிவகுக்கின்றது. வீட்டைத் தவிர பணியிடம், கல்விக்கூடம் போன்ற பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முயற்சிக்காத சமூகம் வீட்டைப் பாதுகாப்பானது என்று கூறி பெண்களின் இரு நூற்றாண்டுகளுக்கு மேலான போராட்டம் நிறைந்த முன்னேறிய பயணத்தை பின்னோக்கித் தள்ளவே முற்படுகின்றது.

பெண்களுக்கு எதிரான பாரம்பரியமான குடும்ப வன்முறைகளை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அது அவரவர் தனிப்பட்ட விவகாரங்கள் என்று ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்க வலியுறுத்தி வந்த சமூகத்தில் வீடுகளுக்குள் எப்படிப் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்? பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றிருந்த கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து வந்ததை ‘Corona Virus Crisis: No Lockdown For Domestic Violence’ ‘The Silent Pandemic In Indian Households: Domestic Violence’ போன்ற தலையங்கத்தோடு சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. தேசிய மகளிர் ஆணையத்தின் (National Commission For Women) தரவுகளின்படி குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் பிரிவில் (Protection From Domestic Violence) பதிவான வழக்குகள் பெண்களுக்குத் தங்களின் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

கடந்த நான்கு வருடங்களில் ஆணையத்தில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள் (ஆண்டு மற்றும் வழக்குகளின் எண்ணிக்கை) முறையே 2019 – 2,960; 2020 – 5,297; 2021 – 6,684; 2022 – 6,982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகளில் 80 சதவீதக் குற்றங்களைப் பாதிக்கப்படும் பெண்கள் வழக்காகப் பதிவு செய்ய முன்வருவதில்லை என்பதையும் கடந்து இத்தனை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. மேலும் குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு வழங்கும் பிரிவில் பதிவாகியுள்ள இவ்வழக்குகள் பெண்களுக்கெதிராகப் பதிவாகியுள்ள மொத்த வழக்குகளின் (பாலியல் துன்புறுத்தல், வன்முறை, வரதட்சணை போன்ற மற்ற குற்றங்களை உள்ளடக்கிய மொத்த வழக்குகள்) விகிதத்தில் 20 சதவீதம் இடம்பெற்றிருக்கின்றன.

குடும்ப வன்முறைகளைப் பெண்கள் நெருங்கிய உறவினர்கள்/நண்பர்கள் இடத்தில்கூடப் பகிர்ந்துகொள்ள தயங்குகின்ற சூழலில் அனைத்தையும் உடைத்து வழக்காகப் பதிவு செய்ய வரும் பெண்களை, “அவன் வீட்டில் இருந்தால் அவன் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்; அவன் வீட்டில் இருக்கிறோம் என்கிற நினைப்பில் அனுசரிச்சு வாழப்பழகு” என்று இருப்பிட மரபைக் காரணம் காட்டி பின்வாங்கச் செய்யும் சமூகத்தில் வீடுகள் எப்படிப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்?.

பெண்களின் பாதுகாப்பை, சுய மரியாதையை, நிறைவை, மகிழ்வை, சுதந்திரத்தை, உரிமையை ஒருபோதும் ஆண்களின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்ட வீடுகளால் கொடுத்திட ஒருகாலும் முடியாது.

இருப்பிட மற்றும் நிலம் சார்ந்த உரிமைகள் சரிபாதியாக பெண்களின் கையகப்படும் பொழுதே வீட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; குடும்ப வன்முறைகள் குறையும். பாலினப் பாகுபாட்டில் வளர்ந்த இருப்பிட மரபு சிதைந்து பாலினச் சமத்துவ வாழ்வியல் வீடுகளில் உதயமாகையில் அதன் புத்தொளி சமூகத்திலும் படரும். அப்பொழுது பெண்களின் பாதுகாப்பைப் பெண்களே பார்த்துக்கொள்வார்கள். “பெண்களைப் பாதுகாக்கத்தான் கடவுள் ஆண்களைப் பலமாகப் படைத்தான்” போன்ற கட்டுகதைகளுக்கும் தேவையிருக்காது.

இருப்பிட மற்றும் இருப்பிடம்சார் நிலத்தின் உரிமையை வழிவழியாகப் பெற்றுவரும் ஆண்கள் (தந்தையானாலும் கணவனானாலும் சகோதரனானாலும் மகனானாலும்) வீட்டின் முதலாளியாக மட்டும் இல்லாமல், வீட்டில் வசிக்கும் பெண்களின் முதலாளியாகவும் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை ஆண்களுக்கு பாலினப் பாகுபாட்டு இருப்பிட மரபுகள் வழங்கியிருக்கின்றன என்பதையும் பெண்களின் சுதந்திரத்தை மறுத்து அவர்களை அடிமைகளாக உற்பத்திச் செய்யும் ஆரம்பச் சாலைகளாக இருப்பிடங்கள் செயல்படுகின்றன என்பதையும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

திருமணம் முடிந்து கணவன் வீடு செல்லும் ஒரு பெண் படித்து கணவனின் பதவியை ஒத்த பதவியில் இருந்து ஊதியம் பெரும் உழைப்பாளியாகவும் திறமைசாலியாகவும் இருந்தாலும் கணவனுக்குக் குளியல் துண்டு எடுத்துக் கொடுப்பதில் இருந்து சிறு சிறு அன்றாட வேலைகளில்கூடப் பெண்கள் சேவகம் செய்ய வேண்டும் என்கிற வழக்கு சிதையாமல் தொடர்வதற்கு ‘வீடு அவனுடையது’ என்கிற எண்ணம் காரணமாக இருக்கின்றது.

திருமணத்திற்கு முன் பணி செய்து பொருளாதாரத் தன்னிறைவு காணும் பெண்கள், திருமணமாகி கணவன் வீட்டுக்குச் சென்ற பின் பணியிடம்-வீடு தொலைவு மற்றும் பயணச் சூழல் கருதி பணயிலிருந்து விடுபட வற்புறுத்தி, புகுந்த வீடு விரும்பும் எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றெடுத்து வளரும் வரை பணி அனுபவங்களை மறக்கடிக்கச் செய்யும் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனைக்கூடக் கையாள வாய்ப்பளிக்காத குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்ப பணிகளில் ஓய்வின்றி உழைக்க வைத்துவிட்டு, குழந்தை வளர்ந்ததும் புகுந்ந வீடு அனுமதிக்கும் பணி மற்றும் பணியிடத்திற்குச் சென்று மீண்டும் முதலிலிருந்து பணி நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் தொடங்க வேண்டிய இக்கட்டான நிலைக்குள் பெண்கள் அழுத்தப்படுகின்றனர்.

தொழில் வாய்ப்பில் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப் பின் என்கிற இத்தகைய சிக்கல்கள் ஆண்களின் வாழ்க்கையில் ஏற்படுவதில்லை. பெண்களை ஒரு சொத்தைப் (பொருள்) போல கைமாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பினை இருப்பிட மரபு கொடுப்பதால் ஆண்களுக்குத் தொழில் வாழ்வு வசதியாக வாய்க்கின்றது. சொத்தாகக் கைமாற்றப்படும் பெண்கள் குறைந்தபட்சம் இருப்பிடம்சார் சொத்துகளைக் கைவசப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாலே இருப்பிட மரபில் பாலினச் சமத்துவத்தை விதைத்து சமூகத்தில் சமத்துவத்தை நிறுவ முடியும்.

பெண்களுக்குச் சொத்துரிமையை உறுதி செய்வதும் உலகின் சொத்துகளில் சமபங்கு பெண்கள் வசமாவதை உறுதிபடுத்துவதும் மனித உரிமையின் அடிப்படையாகும். பெண்களுக்கான சொத்துரிமைக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கப்படாத நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தும் பல்வேறு பண்பாட்டுக் காரணங்களாலும் வழக்காறுகளாலும் பெண்களுக்கு நிலபுலத்தின் மீதான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, தழிழகத்தின் நில உடைமைச் சாதிகள் பலவற்றில் பெண்களுக்கு நிலபுலங்களைப் பங்கிட்டுக் கொடுத்தால் தாய் வீட்டுக்கு ஆகாது என்பதை வலியுறுத்துகின்ற, ‘வேறு வீட்டுக்குக் கட்டிக்கொடுத்த பொண்ணு அப்பன் சொத்தில் பங்கெடுத்தால் ஊடு வெளங்காது’ போன்ற ஆணாதிக்க வழக்குகளைக் கொண்டு செயல்படுகின்றன. சில சமயங்களில் நிலத்தை விற்று வரும் பணத்தை பெண்ணுக்குச் சீராகக் கொடுக்கும் வழக்கமும் இருந்து வருகின்றது. சீர் என்று தந்திரமாக அழைக்கப்படுகின்ற வரதட்சணையைக் கொடுப்பதால் நிலபுலங்களில் பங்கெடுக்க பெண்களுக்கு உரிமை இல்லை என்றும் சாதியக் குடும்பங்கள் வலியுறுத்தி வருகின்றன. சீர்முறையென்னும் வரதட்சணையை மறுத்து ஆண் மகன்களைப் போன்றே பெண் மகள்களும் குடும்ப சொத்துகளில் பங்கெடுத்து நிர்வகிக்க பழக வேண்டும்.

பெண்கள் இருப்பிடம் மற்றும் நிலத்தின் உரிமைகளைப் பெறுவது என்பது பெண்ணுரிமைகளின் நுழைவாயிலாகத் திகழ்கின்றது. 1. இருப்பிட மற்றும் இருப்பிடம்சார் நிலத்தின் உரிமையை அடைவது, 2. பாலினப் பாகுபாட்டு உணவுப் பாரம்பரியங்களில் இருந்து வெளியேறி ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது, 3. வசதிகரமான (Comfortable) உடைகளைத் தட்பவெப்ப சூழலுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து அணிவது ஆகிய மூன்று நடவடிக்கைகளையும் பெண்கள் விரும்பியவண்ணம் செயல்படுத்திக் கொள்கின்ற பொழுதும் செயல்முறைப்படுத்துவதற்கான சூழல் உருவாகின்ற பொழுதும் இந்தச் சமூகம் சமத்துவத்தை நோக்கிய சீரான பயணத்தைத் தொடங்கும்.

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.