நண்பர்களே, நீங்கள் ஒரு புதிய இடத்திற்கு குடி பெயர்கிறீர்கள் என்றால், வாடகைக்கு வீடு தேடும்போது குறைந்தபட்சம் எவ்வளவு நாட்கள் தேடுவீர்கள்? ஒரு மாதம், இரண்டு மாதங்கள்?

ஆனால், என் விஷயத்தில், எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே ஆரம்பித்த தேடல், திருமணம் ஆகி சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடித்தது. பிறகுதான் ஒரு நல்ல வீடு கிடைத்தது. திருமணம் ஆன பின்னரும், ஓராண்டாக நானும், என் கணவரும் வெவ்வேறு இடங்களில்தான் தங்கியிருந்தோம், அதன் பிறகுதான் ஒரு வீட்டில் குடியேற முடிந்தது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா?

‘பார்வையற்றவர்களுக்கு வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியாது’

‘அவர்கள் மற்றவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள், அதனால் அவர்களால் வீட்டைப் பராமரிக்க முடியாது’

இது போன்ற தவறான புரிதல்கள்தான்.

பார்வையற்ற இருவர் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள்கூட தெரியாமல் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைவார்களா? 

இருவருக்கும் எந்த வேலையும் செய்யத் தெரியாமல் ஏன் திருமணம் செய்யப் போகிறார்கள்? ஏன் அவர்கள் தனியாக வாழ்வதற்காக ஒரு வீடு தேடப் போகிறார்கள்? என்கிற ஒரு அடிப்படைப் புரிதல் கூடச் சமூகத்திற்கு இல்லை என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

பொதுவாக எல்லா புதுமண தம்பதியருக்கு அவர்களின் முதல் ஆண்டு மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்திருக்கும். ஆனால் சமூகத்தின் இந்த புரிதலின்மையினால், எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை எழுத இந்த ஒரு அத்தியாயம் போதாது.

பார்வையற்றவர்கள் என்பதால், நாங்கள் எவரையும் சார்ந்திருப்பதில்லை; எங்களுடைய வேலைகள் அனைத்தையும் செய்து கொள்வதற்குச் சிறப்புப் பள்ளிகளிலேயே எங்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஒரு சிறிய இடத்தில் எப்படித் தனியாகத் தடுமாறாமல் நடந்து போவது என்பதில் தொடங்கி, தலை சீவுவது, பவுடர் இடுவது, துணி துவைப்பது, தட்டுகளைக் கழுவி வைப்பது, அலமாரிகளை ஒழுங்காக அடுக்கி வைப்பது, வெண் கோல் (White Cane) பிடித்து நடந்து செல்வது, சமையல் செய்வது, போன்ற அனைத்துப் பயிற்சிகளையும் அங்கே எங்களுக்குக் கொடுக்கிறார்கள்.

இதை மொபிலிட்டி அண்ட் ஓரியன்டேஷன் ட்ரெய்னிங் (Mobility and Orientation Training) என்று சொல்வார்கள். இந்தப் பயிற்சிகளை ஊக்குவிப்பதற்காகப் பள்ளிகளில் தேர்வுகளும் போட்டிகளும்கூட நடத்துவார்கள்.

பொதுவாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் பார்வையற்ற குழந்தைகளை யாரும் கவனித்துக் கொள்வதில்லை. நாங்கள்தான் எங்களைப் பார்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளைப் பெறுகிறோம். ஒரு பத்து வயதுக்குள்ளேயே எங்களுடைய வேலைகளை நாங்களே செய்துகொள்ளும் அளவுக்கு எங்களைப் பழக்கிவிடுவார்கள்.

என்னுடைய பள்ளியைப் பொறுத்தவரை, ஆறாம் வகுப்பிலேயே சமையல் பயிற்சி உட்பட அனைத்துப் பயிற்சிகளையும் கொடுக்கத் தொடங்குவார்கள். பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியிலிருந்து பதினேழு அல்லது பதினெட்டு வயதில் வெளியே வரும்போதே ஒரு குழந்தை, தனக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்ளும் அளவுக்கு பக்குவமடைந்துவிடும்.

சரி எங்களைப் போன்ற பார்வையற்றவர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்கிறேன். வாருங்கள்!

காலையில் நான் எழுந்ததும் என் படுக்கையிலிருந்து இறங்கி, நான் பிரஷ் எங்கு வைத்திருப்பேனோ அங்கு செல்வேன். பிரஷ்ஷைத் தொட்டுப் பார்த்ததுமே இது என்னுடைய பிரஷ்ஷா அல்லது என் கணவருடைய பிரஷ்ஷா என்று என்னால் அடையாளம் காண முடியும்.

முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு பொருளைக் கையில் எடுத்ததுமே அதன் எடை, வடிவம் ஆகியவை எங்களுக்குத் தெரியும். முழுதாகத் தடவிப் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

பெரும்பாலும், பற்பசை பயன்படுத்தும்போது என்ன டெக்னிக்கைப் பயன்படுத்துவோம் என்றால், பேஸ்ட்டை விரலில் எடுத்து, அதன் பிறகு பிரஷ்ஷில் தடவுவோம். அப்படி வைக்கும்போது எவ்வளவு பேஸ்ட் எடுத்திருக்கிறோம் என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும்.

பல் துலக்கிய பிறகு, “பற்கள் சுத்தமாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வீர்கள்?” என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி வரலாம். பல் விளக்கி முடித்ததுமே வாயில் ஒரு புத்துணர்வு (fresh feel) கிடைக்கும். அதை வைத்து நாங்கள் நன்றாகப் பல் துலக்கிவிட்டோம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும் அதே நுட்பங்களைத்தான் குளிப்பதற்கும் பயன்படுத்துவோம். என்னுடைய சோப்பு எது, அதன் வாசனை எப்படி இருக்கும், எவ்வளவு சோப்பு காலி ஆகியிருக்கிறது, அதன் வடிவம் என்ன போன்ற அனைத்து விஷயங்களையும் தொட்டு உணர்ந்து எளிதாக அடையாளம் காண முடியும்.

இப்படியாக தொடு உணர்வு மூலம் உணர்ந்து, அனைத்தையும் தெரிந்து கொள்வோம். ஆனால் தொடு உணர்வில் எங்களால் அறிய முடியாதது ஒன்றுதான். வண்ணங்கள்.

உடை அணிவதில் நாங்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் அது. இந்த வண்ண பாவாடைக்கு இந்த சட்டை பொருந்துமா என்பது எங்களுக்குத் தெரியாது. அதனால், வீட்டில் பார்வை உள்ளவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் கேட்டுக்கொள்வோம். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கேட்டுக்கொள்வோம். அதுமட்டுமல்லாமல், தற்போது நிறையத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

அவற்றின் உதவியுடன், ‘இந்த வண்ணத்திற்கு இது பொருந்துமா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, எங்களுக்குத் தேவையான உடைகளை அணிந்து கொள்வோம். ஒரு புதிய உடை வாங்கும்போது, எடுத்துக்காட்டாக ஒரு ஜீன் மற்றும் ஒரு டி-ஷர்ட் வாங்கினால், அந்த செட்டை அப்படியே தனியாக மடித்து வைத்துக் கொள்வேன். இது எனக்கு எளிதாகிறது.

உடை அணிந்தாயிற்று, அடுத்தது தலை சீவுவதுகூட தொடு உணர்வு மூலமே செய்துவிட முடியும். ஆனால் பவுடர் போடுவது…  அதுதான் சில சமயங்களில் நாங்கள் சொதப்பும் விஷயம்.

பவுடர் ஒரு இடத்தில் அதிகமாகவும், ஒரு இடத்தில் சுத்தமாக இல்லாமலும் போய்விடும். அந்த மாதிரி சமயங்களில், யாரிடமாவது பவுடர் அதிகமாகப் படிந்திருக்கிறதா என்று கேட்டு, அதைச் சரிசெய்து, முகம் முழுவதும் ஒரே மாதிரி பரவும்படி தடவிக் கொள்வோம்.

பொதுவாகவே, பார்வையற்றவர்களுக்குப் பர்ஃப்யூம்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களில் பலர், நான் உள்பட, நிறைய பர்ஃப்யூம்களைச் சேகரித்து வைத்திருப்போம். ஒவ்வொரு பர்ஃப்யூமிற்கும் ஒரு தனித்துவமான வாசனை இருக்கும், அதை வைத்தே நாங்கள் அவற்றைப் பிரித்தறிந்து கொள்வோம்.

அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்லும்போது, “ஏம்மா, நீங்கல்லாம் ஏன் தனியா வரிங்க? உங்களுக்கு அம்மா அப்பா இல்லையா?” என்று சிலர் கேட்கும்போது “இருக்காங்க” என்று பதில் அளித்தால், “உங்களைப் பொய் கடைக்கு அனுப்பிவிட்டிருக்காங்க பாருங்க!” என்பதே அவர்களது மறுமொழியாக இருக்கும்.

ஏன் எங்களுக்கு பொருள்களைப் ‘பார்த்து’ வாங்கத் தெரியாதா? அல்லது, எங்களுக்கு தனியாக நடக்கத் தெரியாது என்கிற நினைப்பா? பள்ளியில் எங்களுக்கு, நிற்கும் இடத்திலிருந்து, முன்புறம் எது, பின்புறம் எது, இடப்புறம் எது, வலப்புறம் எது என்பதைத்தான் முதலில் பயிற்றுவிப்பார்கள். இதனால் திசைகளைக் கணித்து எங்களால் எங்கு வேண்டுமானாலும் தனியாக நடந்து செல்ல முடியும். அதுபோக எங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என்று உணர்த்த வெண்கோல் இருக்கிறதே!

சிலர் நினைப்பது போல், அடி கணக்கு வைத்து நடப்பதில்லை. திடீரென்று எனக்கு குமட்டிக்கொண்டு வருகிறது என்று வைத்துக்கொள்வோம்! அந்த நேரத்தில், நான் கழிவறைக்கு செல்ல, 1 2 3 என்று அடிகளை எண்ணிக்கொண்டிருந்தால், என் நிலைமை என்னவாகும் என்பதை  உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

கடைகளில் காய்கறிகள் வாங்க வேண்டுமென்றால், ஒரு திரைப்படத்தில் “முருங்கைக்காயை முறுக்கிப் பார்த்து வாங்கணும், தக்காளியை அமுக்கிப் பார்த்து வாங்கணும்” என்று திரு விஜய் சொல்வது போலதான் நாங்களும் வாங்குவோம். எல்லா காய்கறிகளையும் இப்படி வாங்க முடியாது அல்லவா?

அந்த நேரத்தில் கடைக்காரர்களை நம்பித்தான் வாங்க வேண்டியிருக்கும். கடைக்காரர்கள் ஏமாற்றுவதும் உண்டு. நான் என்ன செய்கிறேன் என்றால், பீ மை ஐஸ் (Be My Eyes) என்ற ஒரு செயலி வைத்திருக்கிறேன். அதன் வேலை என்னவென்றால், பார்வையற்றவர்களைப் பார்வை உள்ள ஒரு தன்னார்வலருடன் வீடியோ கால் மூலம் இணைப்பதுதான்.

அந்த வீடியோ காலில் எங்களுக்கு என்ன பார்வைத் துணை (visual assistance) அல்லது பார்வை உதவி (visual help) தேவையோ, அதை நாங்கள் அவரிடம் கேட்டுக்கொள்வோம். நான்  ஒருநாள் முட்டை வாங்கும்போது, கொஞ்சம் சேதமடைந்த (damaged) முட்டைகளைக் கொடுத்துவிட்டார்கள். நான் கடைக்காரரிடம் முறையிட்டபோது, ‘நீங்கள்தான் தெரியாமல் எங்கேயாவது மோதி உடைத்திருப்பீர்கள்’ என்று பிரச்னையை முடித்துவிட்டார்.

ஆனால், இது மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருந்தது. ஒருமுறை முட்டை வாங்கும்போது, நான் பீ மை ஐஸ் செயலிக்குக் கால் செய்து, அங்கு வந்த தன்னார்வலரிடம், ‘நல்ல முட்டைதானா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். நான் இப்படி இன்னொருவரிடம் சரிபார்க்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்த பிறகு, நான் எந்தப் பொருள் வாங்கினாலும், நல்ல பொருளாக கொடுக்கிறார்கள்.

சின்னக் கடைகளில், தெரிந்த கடைகளில், என்ன பொருள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொள்வது எளிது. ஆனால், பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பிராண்டுகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதும், எங்களுக்குத் தேவையான பொருள்களை நாங்களே தேர்ந்தெடுத்து வாங்குவதும் முடியாத காரியம்.

 ஏனெனில், அந்தக் கடைகள் எங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்த எளிதான (user-friendly) அமைப்பில் இருப்பதில்லை. எங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொடுக்கவும் யாரும் இருக்கமாட்டார்கள்.

பெரும்பாலும் பார்வை உள்ள நண்பர்கள் யாரையாவது எங்களுடன் அழைத்துச் செல்லும் நிலைதான் இருக்கிறது. அல்லது, கடையிலேயே வேலை பார்க்கும் யாராவது ஒருவர் உதவி செய்ய வருவார்கள். வந்தாலும், அவர்களுக்கும் சில நேரங்களில் எங்களுக்கு பொருள்களை பற்றி விளக்கிச் சொல்லக்கூடிய பொறுமை இல்லாமல் போய்விடும். இந்த நேரத்தில்தான் எங்களுக்கு மீண்டும் தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

இது அல்லாமல் பணப் பரிமாற்றம் என்பது எங்களுக்கு ஒரு தனி சவால். நாணயம் என்றால் அதன் வடிவத்தை வைத்தும், நாணயத்தின் விளிம்புகளை வைத்தும் நாங்கள் அவற்றை அடையாளம் கண்டுகொள்வோம். ஆனால், ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பது சவாலானது.

பழைய ரூபாய் நோட்டுகளைப் பொறுத்தவரை, நூறு ரூபாய் நோட்டு சற்றுப் பெரியதாகவும், ஐம்பது ரூபாய் நோட்டு நூறு ரூபாய் நோட்டை விடச் சற்றுச் சிறியதாகவும் இருக்கும். ஆனால், இப்போது புழக்கத்தில் உள்ள புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் இருக்கின்றன. என்னதான் நோட்டுகளை அடையாளம் காண சற்றே உயர்த்தப்பட்ட கோடுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நோட்டுகளில் அச்சிடப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில காலத்துக்குள் பயன்பாடு காரணமாக, கோடுகள் சரிவரத் தெரிவதில்லை. கோடுகளைத் தொட்டுணர்ந்து அடையாளம் காண்பதைவிட தொழில்நுட்பம் மூலம் அறிந்துகொள்வது எளிது.

அதேபோல், நாணயங்களைப் பொறுத்தவரை, ஒரு ரூபாய் நாணயமும் இரண்டு ரூபாய் நாணயமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால், அவற்றை அடையாளம் காண்பதும் சில சமயங்களில் சிரமமாக இருக்கும்.

இங்கும் எங்களுக்கான ஹீரோ தொழில்நுட்பம்தான். ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்காகவே பல செயலிகள் வந்துவிட்டன. ரூபாய் நோட்டை எங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு நேராகக் காட்டினால், அந்தச் செயலி அதை ஸ்கேன் செய்து, ‘இது நூறு ரூபாய் நோட்டு’, ‘இது ஐம்பது ரூபாய் நோட்டு’ என்று படித்துக் காட்டும்.

இந்த செயலிகளின் உதவியுடன், எங்கள் பணத்தை நாங்கள் தனித்தனியாகப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்வோம்.  கடைக்காரர்களிடம் பணம் கொடுக்கும்போது, ‘இது பத்து ரூபாய் நோட்டு’ என்று சொல்லி, அவர்களையும் சரிபார்த்துக்கொள்ளச் சொல்வோம்.

மீதிச் சில்லறை வாங்கும்போது, எத்தனை ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வோம். எடுத்துக்காட்டாக, நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, ஐம்பது ரூபாய் மீதி வர வேண்டும் என்றால், அதில் எத்தனை பத்து ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன, எத்தனை இருபது ரூபாய் நோட்டுகள் இருக்கின்றன என்று கேட்டுப் பெற்றுக் கொள்வோம். என்னைப் பொறுத்தவரை, நான் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துபவள்.

இப்போது பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் (QR Code Scanner) வசதி வந்துவிட்டது. பத்து ரூபாய் சாக்லேட் வாங்கினாலும், ஸ்கேன் செய்து பணம் செலுத்திவிட்டு வந்துவிடுவேன். கூகுள் பே, ஃபோன்பே (Google Pay, PhonePe) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் எங்கள் வாழ்க்கையை மிக எளிதாக்கிவிட்டன.

காபி போடும் நிகழ்விலிருந்து சமையலின் ஒவ்வொரு படிநிலையிலும் எங்கள் புலன்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. சமையலைப் பொறுத்தவரை, எல்லாம் சத்தமும் வாசனையும் சுவையும் தொடு உணர்வும்தான். காபி தூள், டீ தூள், சர்க்கரை இவற்றின் தனிப்பட்ட வாசனை, சுவை மற்றும் தொடு உணர்வின் மூலம் அவற்றைப் பிரித்தறிய முடியும்.

பார்வை உள்ள எங்களுக்கே உப்பு எது, சர்க்கரை எது என்று தெரியவில்லை என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதில் எளிது: ஒவ்வொரு மசாலாப் பொடிக்கும், காபி தூள், டீ தூள், சர்க்கரை போன்ற பொருள்களுக்கும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் டப்பாக்களைப் பயன்படுத்துவோம்.

டப்பாவைக் கையில் எடுத்ததுமே, அது எந்தப் பொருள் என்று அதன் வடிவம், எடை மூலம் தெரியும். அதிலேயே இருக்கும் ஸ்பூனைத் தொட்டு, தேவையான அளவு மசாலாப் பொடியை எடுத்து, சரியாக எடுத்திருக்கிறோமா என்பதை உணர்ந்து கொள்வோம். தேவைப்பட்டால், சுவைத்துப் பார்த்து இனிப்பு, காரம், உப்பு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்வோம்.

அடுப்பைப் பற்ற வைப்பது மிகவும் எளிது. லைட்டரை பர்னருக்கு நேராக வைத்துப் பற்றவைக்கும்போது, ‘டப்’ என்ற ஒரு சத்தம் கேட்கும். சாதாரண லைட்டரை அழுத்தும் சத்தத்திற்கும், அடுப்பு பற்றிக்கொண்டால் வரும் சத்தத்திற்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கும். அந்தச் சத்தம் கேட்டால், அடுப்பு பற்றிக்கொண்டது என்று உணர்ந்துவிடலாம்.

அதே சமயத்தில், அடுப்பிலிருந்து வரும் சூடான காற்று கைகளில் படும்; அதைக் கொண்டும் அடுப்பு பற்றிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மசாலாப் பொடிக்கும் ஒரு பிரத்யேக வாசனை உண்டு, ஒரு பிரத்யேக சுவை உண்டு. அதைக் கொண்டே இது எந்த மசாலாப் பொடி என்பதைக் கண்டுபிடித்து விடுவோம். இதுபோக, சிலர், பிரைலி முறையில் எழுதி டப்பாக்களில் ஒட்டியும், அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனால், எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து மிக வேகமாகச் சமையல் செய்ய முடியும். தாளிக்கும்போதுகூட, எல்லாம் சத்தம் தான்.

எடுத்துக்காட்டாக, எண்ணெய் அதிக சூடாக இருந்தால் ஒருவித சத்தம் கேட்கும், அப்பளம் பொரித்தால் வரும் வாசனைதான், உளுந்து வறுபடும்போதும் வரும். பூரி உப்பி வரும்போது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று ஒரு சத்தம் வரும். அந்தச் சத்தத்தையும், பூரியின் வாசனை மாறுவதையும் வைத்து, பூரி பொங்கி வருகிறது என்பதைக் கண்டுகொள்வோம்.

கரண்டியால் திருப்பிப் போடும்போது, பூரி கொஞ்சம் எடை குறைவாக (lightweight) இருப்பதை வைத்து, அது நன்றாகப் பொங்கி வந்துவிட்டது என்பதையும் கண்டுபிடிக்கலாம். இப்படி ஒவ்வொரு சமையல் விஷயத்திற்கும் எங்கள் தொடு உணர்வு, வாசனை, செவிப்புலன் இவற்றின் உதவியுடன் எங்களால் சுவையாகவே சமைக்க முடியும்.

காய்கறிகளில் புழு அல்லது பூச்சி எதுவும் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, நாங்கள் பார்வை உள்ள நபர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோம். மற்றபடி, காயைக் கையால் தொட்டுப் பார்க்கும்போது, எங்கு நறுக்க வேண்டும், எந்த வடிவத்தில் நறுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சமையல் செய்வதற்கு முன்னரே, நாம் சாப்பிட்டிருப்போம் இல்லையா? அப்போது குழம்பு அல்லது பொரியலில் உள்ள காய்கறிகள் என்ன வடிவத்தில் வெட்டப்பட்டிருக்கும் என்று நமக்கு தெளிவு இருக்கும். அந்த வடிவத்தைப் போலவே சமையல் செய்யும்போதும் காய்கறிகளை நறுக்கிக் கொள்வோம்.

‘பார்வையற்றவர்களுக்கு வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாது’ என்ற தவறான எண்ணமும் பலரிடம் இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாங்கள் எங்கள் அன்றாட வேலைகளை நாங்களே செய்துகொள்ளும்போது, வீட்டை மட்டும் எப்படிச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் இருப்போம்?

சரி, நாங்கள் எங்கள் வீட்டை எப்படிச் சுத்தம் செய்கிறோம் என்று சொல்கிறேன். பார்வை உள்ளவர்கள் துடைப்பத்தை வைத்துக்கொண்டு நின்று, கண்ணால் பார்த்து, தூசி எங்கு இருக்கிறது என்று கூட்டிச் சுத்தம் செய்வார்கள்.

ஆனால், நாங்கள் உட்கார்ந்து கொள்வோம். ஒரு கையால் தரையைத் தொட்டுப் பார்த்து, தூசி இருக்கிறதா என்று உணர்ந்து கொள்வோம். மற்றொரு கையால் துடைப்பத்தைப் பிடித்து, அந்த இடத்தை முழுமையாகப் பெருக்கிச் சுத்தம் செய்வோம். வீட்டைத் துடைக்கும்போதும் அதே முறைதான்.

ஒரு கையால் அழுக்கு எங்கு இருக்கிறது என்று தொட்டுப் பார்த்துக் கொண்டே வந்து, இன்னொரு கையால் துடைப்போம். இப்படிச் செய்யும்போது, எங்கு அழுக்கு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். கவனம் செலுத்தி, அந்த இடத்தை முழுமையாகத் துடைக்க முடியும். மற்ற பார்வை உள்ளவர்கள் செய்வதைவிட, நாங்கள் சற்று அதிக நேரம் செலவழிப்போம். அழுக்கு இருக்கும் இடங்களையும், தேவைப்படும் இடங்களையும் நன்கு திரும்பத் திரும்பச் சுத்தம் செய்து, அழுக்கு சேரவிடாமல் பார்த்துக் கொள்வோம்.

எங்களது அன்றாட வாழ்க்கை என்பது வெறும் தகவல்களைத் தாண்டி, நாங்கள் ஒவ்வொரு கணமும் புலன்களையும் பயிற்சியையும் நவீன தொழில்நுட்பத்தையும் எப்படி ஒருங்கிணைத்து வாழ்கிறோம் என்பதைப் பற்றியது.

இந்த அத்தியாயத்தில், ஒரு பார்வையற்றவரின் அடிப்படைப் பயிற்சி, சுயசார்புப் பணிகள், வீட்டைப் பராமரித்தல், சமையல் செய்வது, கடைகளில் பொருள்கள் வாங்குவது, மற்றும் பணப் பரிமாற்றம் வரை பல விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம். அன்றாட வாழ்க்கையில் இன்னும் பல நுணுக்கங்களும் சுவாரசியமான விஷயங்களும் உள்ளன. அவை அடுத்தடுத்த அத்தியாயங்களில் தொடரும்.

எங்கள் அன்றாட வாழ்க்கை குறித்து வேறு ஏதேனும் கேள்விகள் உங்களுக்கு இருக்கிறதா? தயங்காமல் மின்னஞ்சல் மூலம் கேளுங்கள் – strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘உணர்வுகளின் உலகம்’ என தலைப்பிட்டு எழுதுங்கள்!

தொடரும்…

படைப்பாளர்

பிருந்தா கதிர்

தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.