வேதியியல் துறை
உலகத்தில் உள்ள எல்லா பொருள்களும் ஏன் நாம் உயிர் வாழ இன்றியமையாத ஆக்சிஜன் முதற்கொண்டு உணவுகள், மருந்துகள் எல்லாமே வேதிப்பொருட்களே. பொருட்களின் மாற்றங்கள் எல்லாம் வேதியியல் மாற்றங்களே. உணவு செரிமானம் ஆதல், பால் தயிராதல், இட்லி மாவு புளித்தல் இப்படி எல்லாமே வேதியியல் மாற்றங்கள்தான்.
அன்டோயின் லவாய்சியர்( Antoine levoisier) என்ற பிரெஞ்சு விஞ்ஞானியே நவீன வேதியியலின் தந்தை எனப்படுகிறார். சுவாசிக்க ஆக்சிஜன் தேவை என்றும் அதுவே நாம் உண்ணும் உணவை எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு சக்தியாக மாறுகிறது என்றும் சொன்னவர் அவர்.
நவீன கால வளர்ச்சிக்கு வித்திட்டவை வேதியியல் கண்டுபிடிப்புகளே. இத்தகைய வேதியியலை நான் பயின்றதை பெருமையாகக் கருதுகிறேன். ஆனாலும் எனக்கு முதலில் இயற்பியல்தான் பிடித்திருந்தது. எனது தந்தை பெண்களுக்கு வேதியியல்தான் பொருத்தமானது என்று அந்தத் துறையை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.
எங்கள் தலைமுறை திருமணத்திற்கு முன் தந்தையின் பேச்சையும் திருமணத்திற்கு பின் கணவரின் பேச்சையும் கேட்டோம். தற்போது பிள்ளைகளின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.*
*எழுத்தாளரின் கருத்து அப்படியே குறிப்பிடப்பட்டுள்ளது. Statement of fact.
இளங்கலை இயற்பியல், விலங்கியல், தாவரவியல் என்ற மூன்று துறைகளுக்கும் வேதியியல் ஒரு துணைப்பாடம். எனவே அதிக மாணவிகளுக்கு அறிமுகமான துறை வேதியியல் துறைதான். பேராசிரியைகள் சூழலுக்கு ஏற்ப கண்டிப்பாகவும் தோழமையுடனும் நடந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் எல்லையை நன்கு உணர்ந்து இருந்தார்கள். நிறைய பேர் தமிழ் வழியில் படித்து வந்திருப்பதால், உடைந்த ஆங்கிலத்தில்தான் பேச முடியும். எங்களை ஊக்கப்படுத்தி பேச வைப்பார்கள்; உச்சரிப்பைச் சரி செய்வார்கள். ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக் கொண்டது அங்குதான்.
நாள்தோறும் கைக்குட்டை வைத்துக் கொள்வது, இருமல்- தும்மல் வந்தால் எக்ஸ்கியூஸ் மீ என்று கூறுவது என பல நல்ல வழக்கங்கள் (manners) அங்குதான் கற்றுக் கொண்டேன்.
எங்கள் துறையில் ஏழு பேராசிரியைகள் இருந்தனர். எங்கள் துறைத் தலைவர் முனைவர் பட்டத்திற்காகவும் , மற்றவர்கள் எம்.ஃபில். பட்டத்திற்காகவும் படித்துக் கொண்டிருந்தார்கள். அந்த காலத்தில் கைடு (Guide) எல்லாம் கிடையாது. பேராசிரியைகளின் நோட்ஸ்தான் மாணவிகளுக்கு படிப்பதற்கு சிறப்பாக பயன்பட்டுக் கொண்டிருந்தன.
எங்களது மூன்று பாட பிரிவுகளுக்கும் மூன்று பேராசிரியர்கள். மூவருமே மிகச் சிறப்பாக நோட்ஸ் கொடுப்பார்கள். அவர்கள் நோட்ஸ் எழுதி வைத்துக்கொண்டு அதை வாசிப்பது என்பது கிடையாது. பாடம் நடத்தும் போதே அப்படியே கொடுப்பார்கள். ரொம்ப இலக்கண சுத்தமாக இல்லாமல் எளிமையான அவரவர்க்கு என்று தனி நடையில் இருக்கும்.
முற்பகல் பாடவேளை ஒரு மணிக்குதான் முடியும். அதற்குள் பசிக்கத் தொடங்கிவிடும். நம்மை அறியாமலே நாம் கைக் கடிகாரத்தில் மணி பார்த்தால் போதும், பாடத்தை விட்டு விட்டு அனுபவப் பாடத்தை சொல்லித் தரும் பேராசிரியர் எங்கள் துறையில் உண்டு. நாள்தோறும் தயிர்சோறும், மாவடு ஊறுகாயும் கொண்டுவரும் தோழியின் மதிய உணவு டப்பாவை திறந்து மூடும் குறும்புத் தோழிகளும் உண்டு. தயிர் சோற்றுடன் ஊறுகாயின் வாசம் வகுப்பு முழுவதும் நிறைந்திருக்கும். எங்களுடன் இணைந்து அவர்களும் சிரிப்பார்கள். திட்டியது இல்லை.
வேதியியல் ஆய்வுக்கூடம் பெரியது. ஆறு பேர் எதிரும் புதிருமாக மொத்தம் 12 பேர் செய்முறை செய்ய வசதியாக பெரிய மேடை. அதன் நடுவில் செல்ஃப்களில் ரியேஜன்ட்ஸ் வைக்கப்பட்டிருக்கும். கீழே இருக்கும் கப்போர்டில் நமது அப்பரெட்டஸை வைத்துக் கொள்ளலாம். ஹைட்ரஜன் சல்பைடு அப்பரெட்டஸ் ஒரு மூலையில் அமைக்கப்பட்டிருக்கும். அதன் அழுகிய முட்டை நாற்றத்தோடு தான் செய்முறை செய்ய வேண்டும். பியூசி படிக்கும் போது கஷ்டமாக இருந்தது. பின்னர் பழகி விட்டது.
கடைசியாக ஒரு அறையில் வேதியியல் செய்முறைக்கு உரித்தான தனித்துவமான கருவிகள் இருக்கும். துல்லியமாக எடை பார்க்கப் பயன்படும் வேதியியல் தராசில் எங்களது செயினை எடை பார்த்தோம். மிகத் துல்லியமாக எடை பார்க்கப் பயன்படும் Fractional weight Box இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது. தசம எண்களில் புள்ளிக்குப் பின் மூன்றாவது எண்ணைக் கூடத் துல்லியமாக எடுப்பது இந்தக் கம்பிதான். இது இல்லை என்றால் வேறு Fractional weight Box தான் வாங்க வேண்டும்.
பேராசிரியர்கள், தன்னார்வமாக பாடங்களில் வரும் எளிய சோதனைகளை செயல்முறையாக செய்து காண்பிப்பார்கள். ஒருமுறை இன்-ஆர்கானிக் பாடம் எடுக்கும் பேராசிரியர் சோடியம் நைட்ரேட்டையோ அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டையோ அடிப்படையாக வைத்து ஒரு கலவையை வகுப்பறையின் பின்னால் வடாகம் ஊற்றுவது போல் ஊற்றி வைத்தார்கள். அவை ஒவ்வொன்றாக பொட்டு வெடி வெடித்தது போல் வெடித்தது. அடுத்து எப்போது வெடிக்கும் என காத்திருந்தது திரில்லாக இருந்தது.
ஒருமுறை பாடத்திட்டத்தில் இல்லாத செய்முறையாக 5 பழங்களில் விட்டமின் சி மற்றும் அசிடிட்டி அளவுகளைக் கண்டுபிடித்தோம். இன்னொரு முறை மை, பற்பொடி, லிப் ஸ்டிக், கிரீம் என பத்து பொருள்கள் செய்தோம். எங்கள் வகுப்பில் பெரும்பாலானோர் லிப் ஸ்டிக் போட்டிருந்தார்கள். எங்களை எல்லோரும் வியப்புடன் பார்த்தபோது, நாங்கள் செய்தது என்று பெருமை அடித்துக் கொண்டோம்.
ஒருமுறை செய்முறை செய்யும்போது அரை மணி நேரம் கரைசலை கொதிக்க விட வேண்டி இருந்தது. அப்போது மதிய இடைவேளை; பேராசிரியர்கள் சென்று விட்டார்கள். அரை மணி நேரத்தில் வந்து விடலாம் எந்த நம்பிக்கையில் நாங்களும் கரைசலை கொதிக்க விட்டபடி சாப்பிடச் சென்று விட்டோம். அவ்வாறே அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு வந்து பார்க்கும்போது புன்சன் பர்னர் (Bunsen burner) எரியவில்லை. கேஸ் யூனிட் அணைக்கப்பட்டு இருந்தது. சற்று நேரத்தில் எங்கள் துறைத் தலைவர், பொருளாதாரத் துறைத் தலைவரான அவர்களுடைய தோழியுடன் வந்தார்கள். மற்றவர்களுக்கு பிற்பகல் வகுப்புகள் தொடங்கவில்லை. பர்னரை எரிய விட்டுச் சென்றதால் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று நன்றாகத் திட்டி வெளியே போகும்படிக் கூறிவிட்டார்கள். நாங்கள் மன்னிப்பு கேட்க தயாரான பின்னும் கொஞ்சமும் சட்டை பண்ணாமல் கோபமாகப் பேசி வெளியே அனுப்பி பாதி கிளாசால் ஆன கதவை படார் படார் என்று அடித்து மூடி விட்டார்கள்.
இவர்கள் ஏசும்போது அவர்களது தோழி ஒரு கிண்டல் சிரிப்புடன் இருந்தார்கள். எங்களுக்கு அது ரொம்ப கடுப்பாக இருந்தது. பேராசிரியர்கள் போகும்போது பர்னரை எரிய விட்டுச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்க வேண்டும். இன்னொரு துறை பேராசிரியர் முன் எங்களை ஏசியது, வெளியே தள்ளி கதவை சாத்தியது எங்களுக்கு ரொம்ப அவமானமாகவும், கோபமாகவும் இருந்தது. மதிய இடைவேளை முடிந்து வகுப்புகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள், பேராசிரியர்கள், முதல்வர் முதற் கொண்டு நாங்கள் வெளியே நின்று கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி சென்றார்கள் (முதல்வர் எதுவும் கேட்கவில்லை). அந்தக் கடுப்பும் சேர்ந்து கொண்டது. எனவே நாங்கள் மன்னிப்பு கேட்பதில்லை என்று தீர்மானித்தோம்.
எங்களது பொருள்கள் அனைத்தும் ஆய்வகத்தின் உள்ளே இருந்ததால், டே ஸ்காலர் மாணவிகளுக்கு விடுதி மாணவிகள் பணம் கொடுத்து வீடு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் வீட்டில் என்ன கூறினார்களோ தெரியவில்லை. மறுநாள் வகுப்புகளுக்குச் சென்றோம். எப்போதாவது கரும்பலகையில் திருக்குறள் எழுதி போடுவோம். அன்று தீயினால் சுட்ட புண் என்ற குறள் எழுதிப் போட்டோம்.
துறைத் தலைவர் வருவதற்கு முன்பே எங்கள் மேல் மிகுந்த அன்பு கொண்ட எங்கள் வகுப்பு பேராசிரியை ஓடி வந்தார்கள். துறைத்தலைவர் ரொம்ப கோபமாக இருப்பதாகவும் மன்னிப்பு கேட்டால்தான் வகுப்புகளுக்கு பேராசிரியைகள் வருவார்கள் என்றும் கூறிச் சென்றார்கள் (கடைசி நாள் அவர்கள் வகுப்பில் மட்டும்தான் நாங்கள் அழுதோம்). துறைத்தலைவர் வந்ததும், வகுப்புத் தலைவர் மன்னிப்பு கேட்பதைத் தொடங்கி வைக்க எல்லோரும் கோரசாக அவளுடன் சேர்ந்து கொண்டோம். அப்போதும் கொஞ்சம் டோஸ் விட்டு விட்டு வகுப்புகளுக்கு அனுமதி அளித்தார்கள். ஆய்வகத்திற்குச் சென்று பொருள்களை எடுத்துக் கொண்டோம்.
இப்போது நினைத்துப் பார்த்தால் நாங்கள் அன்றே மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் பி.ஜி. அசிஸ்டன்டாக வேலை பார்த்தபோது ஆய்வகத்தை விட்டு கிளம்பும்போது எல்லா பர்னர்களும் அணைக்கப்பட்டு இருக்கிறதா என்று சரி பார்த்து விட்டுதான் செல்வேன். காரணம் அன்று அவர்கள் காட்டிய கண்டிப்புதான். அதன் தீவிரத் தன்மை இந்த வயதில்தான் புரிந்தது.
இயற்பியல்

எங்கள் முதல் துணைப்பாடம் – இயற்பியல். அது நான்கு பருவங்கள்; ஒவ்வொரு பருவத்திற்கும் 50 மதிப்பெண்கள். பெரும்பாலோர் ஐம்பதுக்கு 40க்கு மேல் மதிப்பெண்கள் பெறுவர் அந்த அளவிற்கு சிறப்பாகப் பாடம் நடத்துவார்கள். இயற்பியல் செய்முறைகளும் ரொம்ப சுவாரசியமாகவும் புதுமையாகவும் இருக்கும். அதன் துறைத் தலைவர் சிஸ்டர் நிர்மலா மேரி, செய்முறைகளைப் பொறுமையாக, தெளிவாகச் சொல்லித் தருவார். மிகவும் அன்பானவர்.
இயற்பியல் துறையில் செமினார் எடுக்கச் சொல்வார்கள். மேடை பயத்தால் நிறைய பேர் மறுத்து விடுவார்கள். நான் சில செமினார்கள் எடுத்துள்ளேன். அன்று சேலைதான் உடுத்த வேண்டும். மற்றபடி அரைத்தாவணி தான் உடுத்தி இருப்போம். பேராசிரியை செமினாரின் இடையே மாணவிகளிடம் கேள்வி கேட்கச் செய்து செமினாரை கலகலப்பாக்குவார்கள்.
கணக்கு
அடுத்த துணைப்பாடம் கணக்கு. இயற்பியலுக்கும் கணக்கு துணைப்பாடம் என்பதால் அவர்களுக்கும், எங்களுக்கும் ஒன்றாகவே வகுப்பு நடக்கும். கணக்குப் பேராசிரியர்களும் நன்றாகவே பாடம் நடத்துவார்கள். கணக்குப் பாடம் மிகவும் சவாலானது. நாள்தோறும், வீட்டுப்பாடம் செய்வது என்பது ‘தலையை பிச்சிக்கும்’ என்று சொல்லும் படி சிரமமாகவே இருக்கும். கணக்குதான் முதல் பாட வேளை. கணக்குப் பேராசிரியர் வகுப்புக்கு மாணவர்கள் பிந்தி வந்தால் நேராக உள்ளே வந்து உட்கார்ந்து கொள்ளலாம்; எக்ஸ்கியூஸ் மீ என்று கேட்டு அதற்கு அவர்கள் பதில் சொல்ல என்று நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பது அவரது கருத்து. அல்லாமல் பிந்தி வந்தால் அலுவலகத்தில் 25 பைசா கட்டி சீட்டு வாங்கி வர வேண்டும்.
பி யு சி யில் ஒரு புது பேராசிரியர் கணக்குப் பாடம் எடுத்தார்கள். அவர்கள் ரொம்ப பயந்த சுபாவம். பாடம் எதுவும் புரியவில்லை. பள்ளி கணக்கிற்கும் கல்லூரி கணக்கிற்கும் துளி கூட தொடர்பு இராது (தற்போதும் பதினொன்றாம் வகுப்பு கணக்கு பாடம் அவ்வாறு தான் உள்ளது). கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து எங்கள் வகுப்பில் சில மாணவர்கள் முதல்வரிடம் சென்று புகார் கொடுத்தார்கள்.உடனே அவர்களை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் எந்த அளவு முதல்வர் அணுகுவதற்கு எளியராகவும் படிப்பில் அக்கறை கொண்டவராகவும், மாணவிகளின் பேச்சை மதிப்பவராகவும் இருந்தார் என்பதற்காகதான்.
மொழிப்பாடங்கள்
தமிழ் ஆங்கிலம் இரண்டுமே முதல் இரு ஆண்டுகள்தான். எல்லோருமே நன்றாக பாடம் எடுப்பார்கள். முதல் வருடம் வந்த தமிழ்ப் பேராசிரியர் கம்பீரமான தோற்றத்துடன் பேச்சாளர்களைப் போல் இலக்கியத்தில் இருந்து மேற்கோள் காட்டி பாடம் எடுப்பார்கள். கவிதைப் போட்டிகளுக்கு என்னிடம் கவிதை வாங்கி அனுப்புவார்கள். அப்படி மாணவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதில் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்.
ஆங்கில பேராசிரியர்களின் உச்சரிப்பு ரொம்ப ஸ்டைலாக இருக்கும். ஆங்கிலத்துறையில் நிறைய பேராசிரியர்கள் பார்க்கவும் ஸ்டைலாக இருப்பார்கள். பியூசி- யில் ஆங்கில பாடத்தில் ஆறு துணைப்பாட நூல்கள். நிறைய பேர் தமிழ் வழிக் கல்வி என்பதால் பாடம் எடுப்பது சவாலான விஷயம் தான். அதில் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் (Around the World in 80 Days) என்ற துணைப்பாட நூல் மறக்க முடியாத ஒன்று. அந்த துணைப்பாட நூலால் பல நாட்டு பண்பாடு, கலாச்சாரங்கள் கொஞ்சமாவது அறிமுகம் ஆனது.
அனைத்து பேராசிரியர்களுமே வாழ்வியலில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகை இல்லை.
தொடரும்…
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.
அன்று ‘தீயினால் சுட்ட புண்’ என்று வருந்தச் செய்த அறிவுரையைப் பின்னாளில் அனுபவப் பாடமாக எடுத்துக் கொண்டது அருமையான உணர்வு.
நன்றி
அன்புத் தோழியின் எழுத்து வடிவமைப்பு மிகவும் அருமை. முன்னாளில் கல்லூரியில் கற்ற அனுபவ பாடங்கள் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது சிறப்பாகும். வாழ்க வளமுடன்.
நன்றி
Chemistry lab அனுபவங்களை மிகவும் அழகாக வாழ்க்கையோடு இணைத்து எழுதியுள்ளது மிகவும் அருமை.