கிணி கிணி, என்று அலாரம் அலற, தடால் புடாலென்று அடித்துப் பிடித்து எழுந்து அலாரத்தின் தலையில் உள்ள பட்டனை அழுத்தி நிறுத்தினாள் சூர்யா. அலாரம் சத்தம் அடங்கிவிட்டது. ஆனால், சூரியாவின் இதயத் துடிப்புதான் வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. பெட்ரூம் லைட்டின் மிதமான வெளிச்சத்தில் இருள் அடர்ந்த அந்த அறையில் ‘அது’ வந்து நின்று சூரியாவையே பார்த்தது.

அது ஒரு கிரீடம். அது தங்கத்தால் ஜொலித்தது. மாணிக்கம், பவளம், வைரம், வைடூரியம், மரகதம் எனப்பல ஒளிவீசும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த கிரீடத்தின் உச்சியில் அடர்ந்த மீசை ஒன்று இருந்தது. ஆம், அது ஒரு ஆண்.

கிரீடம்: போ போய் சீக்கிரம் சமையல் செய். வீட்டு வேலைகளை முடி. என்ன உனக்கு இன்னும் தூக்கம் வேண்டிக்கிடக்கு? பொம்பளையா, இலட்சணமா எழுந்து வீட்டு வேலை எல்லாம் செய்!

அது பல உத்தரவுகளை மிரட்டும் தொனியில் சொல்லிக் கொண்டேயிருந்தது.

சூரியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு உற்று உற்றுப் பார்த்தாள். கிரீடத்தைக் காணவில்லை. அது மறைந்து விட்டது. சரி மனபிரம்மை என்று அந்த கிரீடத்திலிருந்து விடுபட்டு, சூரியா கட்டிலைப் பார்த்தாள். அதில் அவளது கணவன் அசோக் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் எழுந்திருந்தாலும், அந்த கிரீடம் சொன்னதைத்தான் சொல்லி இருப்பான்!

சூரியா வேகமாக எழுந்து குளித்து சமைத்து, குழந்தைகளையும் கணவரையும் பள்ளிக்கும், அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தாள். பம்பரமாய் சுழன்று வேலைகளை முடித்துக் கதவை சாத்தியவுடன் அம்மாடியோ அம்மாடியோ என்று தனக்குத்தானே கூறி கதவைச் சாத்தித் தரையில் மல்லாக்கப் படுத்தாள். கிளிங் கிளிங், கிளிங் கிளிங் என்று அழைப்பு மணி அடித்தது. யாராக இருக்கும்? சூரியா வேகமாக எழுந்து வந்து கதவைத் திறந்து பார்த்தாள். அங்கு மல்லிகைப் பூப்போல சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் கல்லூரித்தோழி அமுதா.

“சூர்யா…” என்று கட்டிக்கொண்டு முத்தமிட்டாள் அமுதா. சூரியாவும் அமுதாவின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

“நல்லாருக்கியா சூரியா?”

” நல்லாருக்கேன் அமுதா…”

பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே என்று பாடி கல்லூரி வாழ்வை முடித்தவர்கள். முகங்களையும் நினைவுகளையும் இதயத்தில் பூட்டி விட்டு முகவரி சாவிகளை தொலைத்து விட்டவர்கள். இன்று தான் காலதேவனுக்கு இரக்கம் பிறந்து இருவரையும் சந்திக்க வைத்துள்ளது.

 அழகு, அறிவு, அன்பு எல்லாம் ஒருங்கே கொண்ட நல்லவள். சூரியாவின் உயிரே அமுதாதான். சூரியாவை, அவளது அப்பாவிற்குப் பிறகு நன்றாக புரிந்து கொண்ட ஒரே ஜீவன் அமுதா தான். அமுதாவின் இடத்தை சூரியாவின் கணவர் அஷோக்கால்கூட இன்று வரை பெற முடியவில்லை. அஷோக்கைப் பொறுத்தவரை கௌரவத்துக்காக தனக்கும் குடும்பம் வேண்டும் அவ்வளவுதான். அவனுக்கு சூரியாவைவிட பணத்தைத்தான் பிடிக்கும்.

சூரியா நினைவுகளில் மிதந்து கொண்டிருக்க, அமுதா தான் கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூவை சூரியாவின் கூந்தலில் சூட்டி அழகு பார்த்தாள். “உட்காரு அமுதா” என்று கூறி அமுதாவிற்குக் காபிபோட்டுக் கொடுத்துவிட்டு, மார்க்கெட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தாள் சூரியா. வகை வகையாக மீன் வாங்கினாள். அமுதாவுக்குப் பிடித்த மத்தி மீன் குழம்பும், இறால் தொக்கும் வைத்து, வஞ்சிரம் மீன் பொறித்து சாப்பிட வைத்தாள். சூரியாவின் மீன் குழம்பு ருசிக்கு அந்தக் கடவுளேகூட சப்புக் கொட்டுவார். அமுதா ருசித்துச் சாப்பிட்டாள். சூரியாவுக்கு மனசெல்லாம் நிறைந்தது.

வாழ்க்கைக் கதைகளைப் பேசிய போதுதான், அமுதா வறுமையில் உழலும் வாழ்வு அறிந்து சூரியா கலங்கிப் போனாள். அமுதா போகும்போது 1000 ரூபாய் கொடுத்து அனுப்பினாள்.

அமுதா செல்வச் செழிப்பில் இளவரசியாக வளர்ந்தவள்தான். அரண்மனை வாழ்வா? காதல் வாழ்வா? என்று கேள்வி வந்தபோது… அமுதா காதலைத் தேர்ந்தெடுத்தாள். மகிழ்ச்சியை மனிதர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற வாழ்க்கைப் பாடத்தை அமுதா சரியாக கடைபிடித்திருந்தாள்.

அமுதா மன நிறைவோடு, சூரியாவிடம் விடைபெற்று சென்று விட்டாள். ஆனால் சூரியாவுக்குத்தான் இதயத்தில் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. பீரோவிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்தபோது வந்த நடுக்கம் நேரம் ஆக ஆகக் கூடிக் கொண்டேயிருந்தது.

இப்போது, மீண்டும் அந்த கிரீடம் வந்து விட்டது. சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது. சூரியா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கணவர் அஷோக்கிடம் எப்படி சொல்வது? அமுதா வந்து போனதை சொல்ல முடியும்.

ஆனால்… அமுதாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததை சொல்ல முடியுமா? அந்த ஆயிரம் ரூபாய் சூரியாவின் அம்மா சூரியாவுக்குக் கொடுத்ததுதான். இருந்தாலும், அவளுடையது எல்லாமே அவனுடையதுதான். அவளுக்கென்று தனியாக எதுவும் இல்லை. அது அவளது புடவை, நகை, வீடு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லாமே அவளுடையது மாதிரிதான். ஆனால் அவளுடையது அல்ல. என்ன செய்வது?

அஷோக் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று தெரிந்தும், அமுதாவின் தூய்மையான அன்புக்காக, துணிந்து 1000 ரூபாய் கொடுத்து விட்டாள். ஆனால் நேரம் ஆக ஆக இப்போது துணிச்சல் குறைந்து, பயம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. உட்காரவும் நடக்கவும் என்று நிலை கொள்ளாமல் பிரசவ வலி கண்டவள் போல் துடித்தாள் சூரியா. எப்படி எப்படி சொன்னால் அஷோக் கோபப்படாமல் இருப்பான் என்று, நாடக ஒத்திகை போல், மனசுக்குள் தொடர்ந்து பேசிப்பார்த்துக் கொண்டே இருந்தாள். திருடன்கூட இப்படி பயப்பட மாட்டான். ஆனால், சூரியா திருட்டுக் குற்றம் செய்து விட்டது போல் பயந்தாள்.

ஒரு ஆயிரம் ரூபாய் நான் செலவு செய்யக்கூடாதா? எனக்கு அதுக்கு உரிமை இல்லையா? ச்சே… என்ன வாழ்க்கை இது? தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

இப்போது அவளுக்கு எதிராக அந்த கிரீடம் உட்கார்ந்து முறைத்தது. சூரியாவுக்கு அதைப் பார்த்ததும் வெறியே வந்துவிட்டது. சீவக்கட்டையை எடுத்து அதன் மீது வீசினாள். சீமார் தொப்பென்று கீழே விழுந்தது. கிரீடத்தைக் காணோம்.

மாலை மணி 6. குழந்தைகள் வந்து உணவு உண்டு வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தனர். இரவு மணி 8, அஷோக் வந்து விட்டான். அஷோக் சாப்பிட்டவுடன், “என்னங்க…” என்றாள் சூரியா.

“சொல்லு”

“என்னோட நெருங்கிய தோழி அமுதா வந்தாங்க.”

“ம்…”

“அவளுக்குப் பிடிக்குமேன்னு மீன் குழம்பு வெச்சுக் கொடுத்தேங்க.”

“ஏன் காலையில் செஞ்ச சாம்பாரே கொடுத்திருக்கலாம்தானே..? எதுக்கு வீணா செலவு பண்ற..?” சர்வ சாதாரணமாகக் கேட்டு. பார்வையாலேயே முறைத்துச் சென்றான் அஷோக். சூர்யாவுக்கு குப்பென்று வியர்த்தது.

மீன் குழம்பு வைத்ததற்கு வார்த்தையாலேயே சாட்டை அடி விழுந்து விட்டது. இனி ஆயிரம் ரூபாய் கொடுத்ததை எப்படி சொல்வது? சூரியா கிடந்து தவித்தாள். பொய் சொல்லியோ, மறைத்தோ அவளுக்குப் பழக்கம் இல்லை. பிடிக்கவும் இல்லை. அதே சமயம் உண்மையைச் சொல்லி, அதைக் கேட்டவுடன் அஷோக்கிடமிருந்து வருகின்ற அனல் சொற்களை தாங்கவும் சக்தியில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சங்கடத்தில் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.

அசோக் ஹாலுக்குச் சென்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சூரியா கொல்லைப் புறத்துக்கு சென்று துணிதுவைக்கும் கல்லில் உட்கார்ந்தாள். இப்போது தண்ணீர் பைப் மீது அந்த கிரீடம் உட்கார்ந்திருந்தது. சூரியாவுக்கு கிரீடத்தைப் பார்த்ததும் வெறுப்பு முந்திக் கொண்டு வந்தது. அந்த கிரீடத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ச்சே…” என்று கூறி மாமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

போன வாரம் பீச்சுக்குப் போன சம்பவம் அவள் மனக் கண்ணில் நிழலாடியது. சூர்யாவுக்கு மல்லிப்பூ வைத்துக் கொள்ள ஆசையாக இருந்தது. மல்லிகைப்பூ என்றால் சூர்யாவிற்கு உயிர், தலை நிறைய பூ வைக்கவேண்டும்.

“என்னங்க… பூ வேணும்” என்றாள். வெட்டி செலவு என்பது போல் ஒரு பார்வை பார்த்தான் அஷோக்.

“இந்தா இருபது ரூபாய்.”

“இருபது ரூபாய்க்கு அரை முழம் தாங்க வரும்.”

“போதும் ராத்திரி ஆகப் போகுதில்ல..? வீணா வாடித்தானே போகும்?” என ஒரே பேச்சில் முடித்து விட்டான்.

சூர்யாவுக்குப் பூ வைக்கும் ஆசையே போய் விட்டது. வேற வழியில்லை. அரை முழம் வாங்கி வைத்துக் கொண்டாள்.

அடுத்து ஒரு சம்பவம். அப்படித்தான் ஒரு நாள்…. சமைக்கவே முடியாதபடி சலிப்பாக இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனாலும் அவளுக்கு விடுமுறை இல்லை. அன்றுதான் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்ததெல்லாம் செய்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். செய்துகொடுக்க ஆசையாக இருந்தாலும், உடல் ஓய்வு கேட்டது. மேலும் அவளது உழைப்பை மதித்து எந்த அங்கீகாரமும் அஷோக்கிடமிருந்து வரவும் வராது. இன்று குழந்தைகள் அம்மா வீட்டுக்குப் போனது நல்லதாகிப் போனது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கலாம் என்று சூரியா நினைத்தாள்.

“ஏங்க… எனக்கு உடம்பு கஷ்டமா இருக்கு. இன்னைக்கு ஹோட்டல்ல போய் சாப்பிட்டுக்கலாமா? வீட்டுல வேலை தீருவதே இல்லைங்க” என்றாள் முனகலோடு.

“என்ன பெரிய வேலை? ரெண்டு மணி நேரத்தில் முடிஞ்சிரும். அப்புறம் சும்மாதான வீட்டுல இருக்க? எப்பப்பாரு…. அங்க வலிக்குது. இங்க வலிக்குதுன்னுட்டு” என்றான்.

சூரியாவுக்கு முகத்தில் அறைந்தது மாதிரி இருந்தது. துவண்டு படுத்தாள். சிறிது நேரத்தில், “சரி, சரி… போலாம்… கிளம்பு” என்றான் அஷோக்.

ஹோட்டலுக்கு வந்தார்கள். சூர்யாவுக்கு இடியாப்பம் பாயாவும், அசோக்குக்கு ரொட்டியும் கறி கிரேவியும் ஆர்டர் செய்தான். சாப்பிடும்போது இடியாப்பத்துக்கு ஒரு கப் பாயா போதவில்லை. இன்னொரு கப் ஆர்டர் செய்தாக வேண்டும். அந்த நேரத்தில்… “எதுக்கு இன்னொரு கப்… அதுக்கு ரூ.250 செலவு ஆகும். இந்தக் குழம்பு ஊற்றியே சாப்பிடு” என்று கூறிவிட்டு வேறு குழம்பு எடுத்துக் கொடுத்தான் அசோக்.

சூரியாவுக்கு முகம் வாடி விட்டது. ‘இப்ப 250 ரூபாய் அதிகமானாத்தான் என்ன, சாப்பிடறதுக்குத்தானே சம்பாதிக்கிறோம். தினமுமா சாப்பிடறோம்?’ என்று மனதுக்குள் குமுறினாள். சாப்பிடும் ஆசையும் போய்விட்டது சூரியாவுக்கு.

“நல்லா நிறைய குழம்பு ஊற்றி சாப்பிடும்மா…” என்று ஆப்பத்தைப் பியத்துத் தட்டில் போட்டுக் கொடுத்த அப்பாவின் நினைவு விழிகளை நீரால் நிறைத்தது. அவள் எதுவும் பேசவில்லை…. அமைதியாக சாப்பிட்டு எழுந்தாள். பெரும்பாலும் அஷோக்கை எதிர்த்து சூர்யா எதுவும் பேசமாட்டாள். ஆனாலும் அவளது விருப்பம். எண்ணம் எதுவும் அஷோக்குக்குத் தேவையாகவே இருந்ததில்லை.

ஆனால் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவளுக்கு மனதளவில் பெரிய காயத்தை உருவாக்கிக் கொண்டேயிருந்தது. யாரிடம் பேசுவது? வேறு வழியில்லை. அம்மாவுக்கு போன் போட்டாள் சூரியா. அதேநேரம்… பாத்ரூம் போக கொல்லைப்பக்கம் எழுந்து வந்தான் அஷோக்.

“ஹலோ… அம்மா…”

“சூரியா… என்னம்மா இந்த நேரத்தில்?” என்றாள் மீனாம்மாள்.

இரவு துணியில் கட்டி வைத்த முருங்கைக் கீரை பொல பொலவென்று காலையில் உதிர்வது போல, இது நாள் வரை தன் மனதில் வெடித்துக் கொண்டிருந்ததையெல்லாம் ஒரே மூச்சாய் கொட்டினாள் சூரியா.

“ஏம்மா… மாப்பிள்ளை கிட்ட என்னம்மா குறையிருக்கு? சாராயம் குடிக்கிறாரா? பொம்பள விஷயம்ன்னு ஏதாவது தப்பு தண்டா செய்யுறாரா? இந்த சின்ன விசயத்தையெல்லாம் பெருசாக்காம பொறுத்துப் போம்மா” என்று அம்மா சொன்னது, எரியம் தீயில எண்ணெய் ஊற்றிய மாதிரி இருந்தது சூரியாவுக்கு.

“ஏம்மா… நான் கூடதான் சாராயம் குடிக்கறதில்ல, வேற கெட்ட சகவாசம் எனக்கில்லதானே..?” என்றாள் கோபமாக.

“கை நிறைய சம்பாதிக்கிறவனா இருந்தால் போதும். அப்படிப்பட்ட ஆம்பள நல்லவன் அப்படித்தானம்மா, மனசுன்னு ஒண்ணு இருக்குதில்ல..? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறதுன்னு ஒண்ணு இருக்குதில்ல..? கட்டுன பொண்டாட்டிய மதிக்கணும். அவளோட கருத்தையும் கேட்கணும். அவ விருப்பத்தைக் காது கொடுத்து கேட்கணும். சம்பாதிக்கிற பணத்தில அவளுக்கும் சம உரிமை கொடுக்கணும். இப்படி எதைப் பத்தியுமே தெரியாதவன், எப்படிம்மா நல்ல ஆம்பளையா இருக்க முடியும்? ஒரு மனைவியைப் புரிந்து கொள்ளாத, சமமாக நடத்தாத ஆண்… குடிக்காமலிருந்தால் மட்டும் நல்லவனாகிவிடுவானா… அம்மா? நகையும், நல்லசோறும் போட்டால் போதுமா ம்மா..? வீட்டுல வளர்த்துற நாயும் நானும் ஒண்ணுதானாம்மா?” சூரியா வெடித்துப் பொங்கினாள்.

பேசிய வேகத்தில் அழைப்பை துண்டித்தாள். அணைத்து வைத்தாள்.

அதுவரை கதவோரத்தில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அஷோக் அதிர்ந்தான். சூர்யாவின் கேள்வி, ஆண் என்கிற அகங்காரத்தின் மீது சம்மட்டி அடியாய் விழுந்தது. சூர்யாவின் கதறல் அவனை என்னவோ செய்தது. தன் மனைவிக்கு இப்படியொரு பக்கம் இருப்பதையே இப்போதுதான் பார்க்கிறான். அவனுக்குக் கோபம் வரவில்லை. மாறாக… தன் இதயத்தைத் திறந்து சூரியாவைப் பார்த்தான். சூரியாவின் கேள்வி நியாயமானது என்றது அவன் உள்மனது.

“சூரியா…” என்றான் அஷோக் தழுதழுத்து…

சூர்யா சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

அஷோக் படிகளில் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான். அதே படிக்கட்டுகளில் தலைதெறிக்க உருண்டு கொண்டிருந்தது, அந்த மீசை வைத்த ஆண் கிரீடம்.

படைப்பாளர்

தே.தேன்மொழி

காங்கேயத்தைச் சேர்ந்தவர். வாசிப்பிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர்.