“வரலாற்றில் இதெல்லாம் சகஜம்தானே?” என நினைத்தவளாக, பௌர்ணமிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டுக்குப் (சின்னமனூர்) போய்விட்டேன்.
அதிகாலை மூன்று மணிக்குக் கிளம்பி பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கூடலூர் சென்றோம். வழக்கமாக கண்ணகி கோவில் போகும் தம்பிகள் குழு அது. அந்த அதிகாலையில் கூடலூரில் வயது வித்தியாசமின்றி கூட்டமான கூட்டம் மலையேறுவதற்காகக் காத்துக்கிடந்தது. தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் வரிசையாக வர, கூட்டம் தள்ளுமுள்ளுடன் அதில் அடைந்து கொண்டது. கூடவே நாங்களும்.
கூடலூரைக் கடந்த சிறிது நேரத்திலேயே “அதோ அந்த மலைகள் தெரியுது பாருங்க, அந்த மூன்றாவது மலையில் ஒரு டவர் தெரியும், அங்கதான் இருக்கு கண்ணகி கோவில்” ஜன்னல் வழியாக தங்கை கணவர் சேர்மத்துரை கை காட்டிய இடத்தில் பார்த்தால்… அந்த இருட்டில், எங்கோ தூரத்தில் மூன்று, நான்கு மலைகள் மட்டுமே மங்கலாகத் தெரிந்தது எனக்கு.
பார்க்கும்போதே லேசாகத் தலை சுற்ற ஆரம்பித்தது. மனதிற்குள் இது சாத்தியமில்லை என முடிவு செய்து விட்டேன். பளியங்குடி சென்றடைந்தோம். இன்னும் இருட்டு விலகவில்லை. பளியங்குடி என்ற கிராமத்திலிருந்து காட்டுவெளியில்தான் மலையேற வேண்டும், மற்றநாள்களில் பயன்பாட்டில் இல்லாததால் அடர்ந்து கிடக்கும் காட்டை, நடந்து செல்லும் அளவுக்கு ஓரளவு வனத்துறையினர் சீர்படுத்தி வைத்திருக்கின்றனர். கூட்டம் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தது. நடக்க முடியாதவர்கள், குமுளியிலிருந்து கேரளா அரசு ஏற்பாடு செய்துள்ள ஜீப்களில் பணம் செலுத்தி செல்லும் வசதியும் இருக்கிறது.

“நாம வேணா…குமுளி போயிடுவோமா?” என பலகீனமாக கேட்க, சேர்மதுரையும் அவரது நண்பர்களும் சிரித்து விட்டனர். அத்தனை மெதுவாகப் பேசியும் அவ்வழியே சென்ற பாதசாரிகளில் ஒருவர் நின்று, “அக்கா, இனிமேட்டிக்கு நீங்க எப்ப குமுளி போய் எப்ப மலையேறுரது, நேத்து நைட்டுல இருந்து குமுளி பஸ் ஸ்டாண்டுல காத்துக் கிடக்குறவுங்களுக்கே வரிசைப்படி ஜீப்பு கிடைக்க பத்து மணியாயிடும், பேசாம நடந்துடுங்க” என்று இலவச அறிவுரை வழங்கிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் வேகுவேகு வென நடந்து சென்றார். பளியங்குடியில் பேருந்து இறக்கி விட்ட இடத்திலிருந்து மலையடிவாரத்தை அடைய சிறிதுதூரம் நடக்க வேண்டும். “சரி வா, நாமும் அதுவரை நடப்போம்” என தங்கையையும் இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.
மலையடிவாரத்தில், வனத்துறையினர் பாதசாரிகளின் பைகளை பரிசோதித்துவிட்டு, ஐந்து பேர் கொண்ட குழுவிற்கு 5 லி தண்ணீர் போத்தல் கொடுக்கிறார்கள். தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டே ஒரு பெரியவர் “நான் ரெண்டு பக்கமிருந்தும் மலையேறி இருக்கேன், தமிழ்நாட்டுக் காரங்கதான் தண்ணி கொடுப்பாங்க, அன்னதானம் போடுவாங்க, கேரளாக்காரங்க பச்சத்தண்ணீர் கூட கொடுக்க மாட்டாய்ங்க” என அங்கலாய்க்க, குறும்புக்கார தம்பி ஒருவர், “அவங்கதான் நமக்கு ‘தண்ணீர்’ கொடுக்க மாட்டாங்களே…” என சிலேடையில் அழுத்தி பதில்சொல்ல, வனத்துறை அதிகாரிகளும் சேர்ந்து சிரிக்கின்றனர்.
சித்திரை மாதத்திய மெலிதான குளிர் இதமாக இருந்தது. அருகிலேயே மருத்துவமுகாம். உடன்வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, அங்கிருந்த பலகை ஒன்றில் நாங்கள் இருவரும் வாகாக உட்கார்ந்து கொண்டோம். எங்கள் பேச்சு இயல்பாகவே கண்ணகி கோவில்குறித்தும், தங்கை மலையேறிய அனுபவம் குறித்தும் திரும்பியது. சொல்லத் தொடங்கினாள்.
மொத்தம் மூன்று மலைகள். இரண்டு மலைகளில் ஏறி இறங்கி, மூன்றாவது மலையின்மீது ஏறிவிட்டால் பிறகு சமதளப்பாதையிலேயே கோவில் வளாகத்திற்குச் சென்று விடலாம். இந்த மலைகளில் நாம் ஏறும்போது, கீழே முட்புதர், நடுவில் சோலைக்காடுகள், மேலே புல்வெளிகள் என இயற்கையின் அத்தனை வடிவங்களையும் பார்க்க முடியும். அடர்ந்த காடுகளாக இருப்பதால், வனத்திற்குள் யாரும் வழி தவறி சென்று விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் ஆங்காங்கே நிற்கிறார்கள்.
மேகமலை வனவிலங்குகள் சரணாலயத்திற்குள் இந்தப் பகுதி வருவதால், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. செல்லும் வழியெங்கும் நிறைய விலங்குகளின் கால்தடங்களை நாம் பார்க்க முடியும். அவற்றுள் யானைகள் நடமாட்டம்தான் மிக அதிகம். இரண்டாவது மலைதான் மிகவும் செங்குத்தானது, கவனமாக ஏறவேண்டும். அதன் உச்சிக்குச் சென்றபிறகு, யானைக்காடு, மூலிகைக்காடுகளைக் கடந்துவிட்டால் பிறகு சமமான பகுதிதான். அந்தப் பகுதியை அடைந்தவுடன், மலையேறிய களைப்பில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்து விடுகிறார்கள்.

‘மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை’ வழக்கமாக, கண்ணகி கோயிலில் வழிபாடுகள் செய்வதுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு இந்து அறநிலையத்துறையின் சார்பில் அன்னதான அறிவிப்புப் பலகைகளைப் பார்க்க முடிந்தது. மலையேறிவிட்டாலும், நீண்ட வரிசையில் குறைந்தது இரண்டு மணி நேரம் நின்றால்தான் கோவிலுக்கருகில் போக முடியும்.
கண்ணகியின் சிலை காணாமல் போய்விட்டதால், அதே சாயலில் உள்ள சிலை செய்து, முகத்தில் சந்தனம் பூசி வெள்ளிமுகம் வைத்துக் கும்பிடுகிறார்கள். விழா நடக்கும்போது, சாமியாடி, ஒரு புதருக்குள்ளிருந்து தாலியையும் சிலம்பையும் எடுத்து வருவது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. கண்ணகி பிறந்த சோழ நாட்டிலிருந்து நான்கு மாவட்ட மக்களின் சார்பாக கண்ணகிக்கு பிறந்த வீட்டுச் சீதனம் வருகிறது. கண்ணகிக்கு அபிஷேகம் செய்ய காவிரியிலிருந்து புனித நீர் கொண்டு வரும் மக்கள், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையிடம் ஒப்படைத்து நீராட்டச் சொல்கிறார்கள். ஆனால் கோவில் மொத்தமும் இடிபாடுகளும் கற்களுமாகத்தான் கிடக்கிறது.
பேச்சை பாதியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறோம். குடும்பமாகவும் நண்பர்களாகவும் பெரும்பாலும் குழுக்களாகவே மலையேறிக் கொண்டிருக்கிறார்கள். போவோரிடம் பேச்சுக் கொடுத்ததில் பொள்ளாச்சி, சென்னையிலிருந்தெல்லாம் வந்திருப்பது தெரிகிறது. யூ டியூபர்ஸ் கையில் கேமரா ஸ்டிக்குடன் ஆங்காங்கே பைட் வாங்கிக்கொண்டே மேலே செல்கிறார்கள். ஒன்பது மாதக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு பெரியவர் மலையேறிக்கொண்டிருக்க, 70 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் கம்பை ஊன்றிக்கொண்டு சந்தோஷமாக வருகிறார். அதையெல்லாம் பார்க்க எங்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாகக்கூட இருந்தது.

“திரும்பிப்பார்த்த அம்மன் கதை தெரியுமா உங்களுக்கு?” என தங்கை கேட்க, “தெரியாதே” விழிக்கிறேன். அவளே தொடர்கிறாள். “மதுரையை எரித்த கண்ணகி மதுரை எல்லையை (இன்றைய விராட்டிபத்து என்னும் இடம்) கடந்தவுடன் நின்று தன் கணவனைப் பறி கொடுத்த மதுரையைத் “திரும்பிப்பார்த்து” ஓ வென்று கதறி அழுதுவிட்டு கை வளையல்களை உடைத்து விட்டு தலையை விரித்துப் போட்டு தலைவிரி கோலமாக தன் இலக்கற்ற பயணத்தைத் தொடர்ந்தாள். அந்த இடத்தில் (தோராயமாக ஒரு இடத்தில்) ஒரு கல்லை நட்டு வைத்து உள்ளூர்வாசிகள் இன்று வரை “திரும்பிப் பார்த்த அம்மனாக” வழிபட்டு வருகிறார்கள்”. அட… என்னே மதுரை மக்களின் உணர்வு..?
மீண்டும் சிலப்பதிகாரத்திற்குள் மனம் நுழைகிறது. சேரன் செங்குட்டுவன், பாண்டிய மன்னர்கள் என உண்மையான அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும் கண்ணகியின் மதுரை எரிப்பும், அக்னிப்பிரவேசமும் மெய் வரலாற்றில் சாத்தியமில்லை. சிலப்பதிகாரம், வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள அழகான கற்பனைக்காவியம் மட்டுமே. அதனால் கண்ணகிக்கான கோட்டம் என்பது ஆய்வுகளின்வழி உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்று உண்மையா என்ற ஐயத்தைக் கடந்து, தமிழகத்தின் கலை, நாகரீகம், மத மரபுகளுடன் கூடிய ஒரு நினைவிடமாகவும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் நிற்கிறது.
நன்றாக விடிந்து விட்டது. மலைகளைப் பார்க்கிறோம். எறும்பு வரிசைபோல் தடம்மாறாமல் தங்கள் இலக்கு நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கும் காட்சி அத்தனை அழகாக இருந்தது. மலையேற முடியாத ஏமாற்றம் மனதிற்குள் சுழன்று கொண்டிருந்தாலும், ‘அடுத்த ஆண்டு கட்டாயம் வருவேன்’ என சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல உறுதியெடுத்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறினோம்.
“இந்தக் கோட்டம் இருக்கும் இடம் குறித்து நிறைய குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையில் யாருக்குத்தான் சொந்தம்?” தங்கை ஆர்வமுடன் கேட்க, விளக்க ஆரம்பித்தேன். இன்றைய நிலவரப்படி, கோவில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டுக்குச் சொந்தம், கோவிலுக்கான (குமுளி வழியான) பாதை கேரளாவிற்குச் சொந்தம், கோவிலைப் பராமரிக்கும் பணி கேரள தொல்லியல் துறைக்குச் சொந்தம் என்ற இடியாப்பச் சிக்கலில் உள்ளது மங்கலதேவி கோட்டம். ஆனால், கண்ணகி கோட்டத்திற்கான தமிழர் உரிமை என்பது பன்னெடுங்கால நெடிய வரலாறு. பொ.ஆ.1772-ம் ஆண்டு சேர அரசரான பூங்கையாத்துத் தம்பிரான் ரவிவர்மாவுக்கும் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவிற்கும் இடையேயான எல்லைப்போர், காட்டூர் என்று அழைக்கப்பட்ட உத்தமபாளையத்தில் தீர்த்து வைக்கப்பட்டது. இதற்குப்பின்னால் உத்தமபாளையம் தாலுகா முழுவதுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தது எனச் சேரமன்னர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
1817-ம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய சர்வேயில் கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியில் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 1839 மற்றும் 1896-ம் ஆண்டின் நில அளவை ஆவணங்கள், 1893-ம் ஆண்டின் இந்திய நில அளவை வரைபடம், 1916-ம் ஆண்டு இந்திய சர்வேயர் ஜெனரல் வரைபடம், 1932-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை மாவட்ட கெஜெட், அரசு ஆணை 182 (1.05.1918) சென்னை, பொது அரசியல்) ஆகிய ஆவணங்களின் படி இக்கோட்டம் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. 15.11.1883 அன்று வெளியிடப்பட்ட புனித ஜார்ஜ் கெசட் 719 -721-ம் பக்கங்களில் பிரசுரமான வெளியீட்டுப்பிரிவு 25-ல் ‘வண்ணாத்திப்பாறை ஒதுக்கப்பட்ட காடுகள்’ என இப்பகுதி குறிப்பிடப்பட்டதுடன், இக்காட்டிலுள்ள மங்கலதேவி கோவில் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் கூறப்பட்டுள்ளது.

1913 லும் 1915 லும் ஆங்கில அரசு வெளியிட்ட எல்லை காட்டும் வரைபடங்களிலும் தமிழகத்தின் எல்லைக்குள்ளேயே கண்ணகி கோட்டம் அமைந்துள்ளது. 1934-ம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள மதுரை மாவட்ட கெசட்டில் மதுரை மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வண்ணாத்திப்பாறை ஒதுக்கப்பட்ட காட்டில் இக்கோவில் உள்ளது என்பதும், கூடலூர் கிராமவாசிகள் இக்கோவிலுக்கு வழிபடச் செல்வதற்காக 12 அடி அகலத்தில் வழித்தடம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது – அரசு ஆணை எண் 183 (பொது அரசியல்). 1975-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நில அளவைப் பதிவேடுகள் துறை இணை இயக்குநர் கணேசன், கேரள மாநில அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்படி, கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தூரம் தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது இரு மாநிலத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், ஒரு காலத்தில் வண்டிப்பாதை எங்களுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொண்டிருந்த கேரளா, இன்றைக்கு கண்ணகி கோட்டமே எங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது.
“15.03.83 அன்று கண்ணகி கோவிலுக்குள் கேரள அரசு துர்க்கா தேவி சிலையை பிரதிஷ்டை செய்தது. கண்ணகி கோவில் என்பதனால் தமிழர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதால், துர்க்கை கோவிலாக மாற்ற முயற்சிக்கிறது கேரள அரசு. மத்திய தொல்பொருள் துறை, பழம்பெருமை வாய்ந்த கோவில்களில் புதிய சிலைகளை அமைப்பதற்கு அனுமதிப்பதில்லை. அந்தவகையில் துர்க்கை சிலை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தனது சமூக வலைதளக் கட்டுரையில் பதிவு செய்கிறார் மூத்த வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன். இவர், கண்ணகி கோட்டம் அமைந்துள்ள இடம் தமிழகத்திற்குச் சொந்தமானது என்ற தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தவர்.
29.07.1981 முதல் இரு மாநில அரசுகளும் ‘மங்கலதேவி கோட்டம் தங்களுக்கே சொந்தம்’ என மத்திய அரசுடன் இதுகுறித்து கடிதப்போர் நடத்திக்கொண்டிருக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகமோ, இரு மாநில அரசுகளும் தங்களுக்குள் பேசி முடிவு செய்ய வேண்டுமென கை கழுவிக் கொண்டதால் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
1976 ல் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணிக்காக அன்றைய முதல்வர் மு.கருணாநிதி 20 இலட்சம் ஒதுக்கினாலும், திட்டம் தொடங்குவதற்கு முன் தமிழ்நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட திட்டமும் கலைந்து போனது. 1981 ல் முதல்வர் எம்ஜியார், கண்ணகி கோவில் புனரமைப்பு மற்றும் சாலை போடுவது குறித்து உறுதி கொடுத்து, 100 ஏக்கர் அளவில் கண்ணகி கோட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்தார் என்ற செய்தித்தாள் செய்தி, வெறும் செய்தியாக மட்டுமே மாறிப்போனது. 1986ல் கண்ணகி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கி புனரமைக்க வேண்டும் என திமுக சட்ட மன்ற உறுப்பினர் ரகுமான்கான் பேசியதாக, சட்டமன்றக் குறிப்புகள் கூறுகின்றன. 2014ல் கோவிலைப் புனரமைக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில், கேரளா அரசின் தொல்லியல் துறை தேவையான பணத்தை ஒதுக்கி, கோவிலை புனரமைக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால், வனத்துறை தலையீடுகளால் இன்று வரை தமிழ்நாட்டின் எல்லையில் கண்ணகி கோவிலுக்கான பாதையும் அமைக்கப்படவில்லை, கோவிலும் புனரமைக்கப்படவில்லை.
கண்ணகிக் கோட்டம் குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தங்களது கருத்துகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டே இருக்கிறார்கள். “கண்ணகி கோவில் விழாவிற்கு வந்த அரசர்களின் பட்டியலாக, இலங்கை மன்னன் கயவாகு, பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன், கொங்குச் சோழர்கள், வட இந்தியாவிலிருந்து கனக விஜயர்கள் பற்றிய விபரங்களை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கொடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள அரசர்கள் பலரும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தக் கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கணக்கிடுகிறார்கள்”, என்கிறார் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் கண்ணகி கோவில் அறக்கட்டளைத் தலைவருமான ராஜேந்திரன். கண்ணகி கோட்டத்தை சீரமைப்பது குறித்து அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இவரும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
“இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டும், சிலப்பதிகாரத்தில் உள்ள குறிப்புகளைக் கொண்டும், இதன் தொன்மையை அறிய முடியும். உண்மையில் இமய மலையிலிருந்து கல் எடுத்து வந்து இங்கு கோவில் அமைக்கப்பட்டதா என்று தற்போது கூட ஆய்வு செய்ய முடியும். நவீன அறிவியல் முறைகளைக் கொண்டு கற்களைச் சோதித்து, இந்தக் கோவில் கட்டப்பட்ட ஆண்டை கணக்கிட முடியும். அதேபோல, இந்த கோயிலைச் சுற்றி தொல்லியல் ஆய்வுகள் செய்தால், பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன். `
“கண்ணகியை செல்லத்தம்மன், ஒற்றை முலைச்சி, பகவதி அம்மன் என பல பெயர்களில் வழிபடுகிறார்கள். சிலப்பதிகாரம் சொல்லப்பட்டுள்ள வழியில் நான் பயணித்துப் பார்த்தேன். செல்லும் வழியெங்கும் கண்ணகி வழிபாடு வேறு வேறு பெயர்களில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் கண்ணகியின் கதை பலவிதங்களில் இன்றும் சொல்லப்படுகிறது, பாடல்களாகவும் பாடப்படுகிறது” என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.க.பெருமாள்.
“தம் குல, இன, ஊர் முன்னோர் இறந்து தெய்வமான பிறகு வழிபடும் முன்னோர் வழிபாட்டை உடையவர்கள் தமிழர்கள். இம்முறையில் தான் கண்ணகி இறந்து தெய்வ நிலைக்கு உயர்ந்ததைக் கொண்டு, கோட்டம் அமைத்து வழிபட்டிருக்கின்றனர். அதனால் கண்ணகி வழிபாடு என்பது நாட்டுப்புற தெய்வ வழிபாடாகும். அக்கால மரபுப்படி சேரன் செங்குட்டுவன் நடுகல்லை நட்டு வழிபட்டிருக்க வேண்டும், பிற்காலத்தில் கண்ணகி சிலை கோவிலில் நிறுவப்பட்டிருக்கலாம். அப்பகுதியில் வாழும் பளியர் எனும் பழங்குடி மக்களால் வணங்கப்பட்டு வந்த கண்ணகி, சோழர் காலத்திற்குப் பிறகு அனைத்து மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக மாறினார். அந்தக்காலத்தில் மலையில் வசித்த வேடுவ மக்கள், சித்திரா பௌர்ணமி நாளில் சிறப்பு வழிபாடு செய்து வந்த பழக்கமே இன்றும் தொடர்கிறது. வரலாறு, பழமை, பண்பாடு என முக்கியத்துவம் வாய்ந்த கண்ணகி வழிபாடு தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட ஒன்று” என்கிறார் ஐயா பழ.நெடுமாறன்.
மொத்தத்தில் இரு மாநில அரசுகளின் அலட்சியத்தினால், புறக்கணிப்பினால், 5000 அடி உயரத்தில் ஒரு வரலாற்றுச் சின்னம் பராமரிப்பின்றி இடிபாடுகளாகக் கிடக்கிறது. கண்ணகி சிலையற்ற அந்த கோட்டத்தில், தற்போது சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. பழமையான சிலையின் தொன்மை அறியாத மக்கள் புதிதாக வடிக்கப்பட்ட படிமத்தின் பூசையினைக் கண்டு மகிழ்கின்றனர்.
சித்திரை மாத முழு நிலவு நாளில் மட்டும் கண்ணகிக்கு சிறப்பு வழிபாடுகள் ஐம்பதினாயிரம் மக்கள்சூழ ஆரவாரமாய் நடக்க, மற்ற நாள்களில் ஆளரவமற்ற அந்த வனத்திற்குள் வனவிலங்குகளின் புகலிடத்தில் தனித்திருக்கிறாள் கண்ணகி.
சான்றுகள்
அழநாடு – அ.உமர் பாரூக்
கண்ணகியார் அடிச்சுவட்டில் – சி.கோவிந்தராசனார்
மங்கலதேவி கண்ணகி கோட்டம் – டாக்டர் துளசி இராமசாமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1887ல் வெளியிடப்பட்டது (A study of Mangala Devi kannaki Kottam)
வைகைக் கரை வரலாற்றுச் சுவடுகள் – சோ.பஞ்சுராஜா 2017
கண்ணகி கோயிலும் வைகைப் பெருவெளியும் – பாவெல் பாரதி 2018
வரலாற்று நோக்கில் மங்கலதேவி கண்ணகி கோட்டம், இரா. கணபதிராசன் தமிழாதன் 2019
படைப்பாளர்
ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.
‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.
அருமை..எளிமையான நடை…நேரில் சென்றது போல அனுபவம் கிடைத்தது..நன்றி