சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக மட்டும் இருந்த நான், இன்று மீண்டும் அலுவலகத்தில் பணிபுரியப் போகிறேன். இத்தனை நாட்களுக்குப் பிறகு அலுவலகத்தை எதிர்கொள்ள சற்றுத் தயக்கமாக இருந்தது.

இன்னொரு தயக்கம் கையில் என் மகள். சற்று இளம் வெயிலில் அவளைச் சூரியனிடம் காட்டிச் செல்ல வந்தேன். அடுத்து அவளுக்குக் கஞ்சி ஊட்ட வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். சிறிது நேரம் விளையாட வைத்து விட்டு தூங்க வைக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்து அவளுக்கும் எனக்குமான ஒரு நாளின் பட்டியல் இன்று முதல் மாறப் போகிறது. இதை அவள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறாள் என்கிற பயம் என்னை வாட்டிக் கொண்டே இருந்தது.

அவளுக்குக் கஞ்சி ஊட்டி முடித்து விட்டு வேகவேகமாகக் குளித்து முடித்து தயாரானேன். அவளுக்குப் பால் கொடுத்துக் கொண்டே உணவை உண்டு முடித்தேன்.

என் அத்தையிடம் அவளைக் கொடுத்தேன். கைப்பையைத் தூக்கினேன். இப்பொழுதுதான் கடினமான தருணம். அவளிடம் விடைபெற வேண்டும்.

சொல்லிக்கொண்டு கிளம்பவா, சொல்லாமல் கிளம்பவா… என்னவென்று சொல்வது.. சொன்னால் புரிந்து கொண்டு சரியென்பாளா இல்லை, போக வேண்டாம் என்பாளா..

வாசலில் நின்று கொண்டிருந்த என் அத்தையின் கையில் இருந்தவள் என்னையே பார்த்தாள். நான் கிளம்பத் தயாரானேன். செருப்பை அணிந்து கொண்டேன்.

அவளைக் கை நீட்டி அழைத்தேன். என்னிடம் தாவிக் கொண்டு வந்தாள். கன்னத்தில் முத்தமிட்டேன். மறுபடியும் அவளை என் அத்தையிடம் கொடுத்தேன். என் முத்தமே அவளுக்கு நான் சொல்ல வருவதைச் சொல்லி இருக்கும் என நம்பினேன்.

கீழ் இறங்கி நடந்தேன். அவள் அழவில்லை. எங்கெங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேலும் அங்கு நின்று நான் கிளம்புவதைப் புரிய வைத்துக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. வண்டியில் ஏறிவிட்டு திரும்பிப் பார்த்தேன். அவள் அழவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பினேன். என் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

இதுதான் காரணம் என்று பிரித்துச் சொல்லத் தெரியவில்லை. அலுவலகத்தை அடைந்தேன். கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தைச் சரி செய்து கொண்டு உள்ளே நுழைந்தேன்.

என்னுடைய இருக்கையில் வேறொவர் இருந்தார். என்னைப் பார்க்கிங் ரோலில் வைத்திருந்தனர். மேனேஜரை சந்தித்துப் பேசினேன். தற்சமயம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை சிலவற்றை எனக்கு அளித்தார். வேறோர் இருக்கையில் அமர்ந்தேன். ஒரு சிலர் பணியிடம் மாற்றப்பட்டு சென்று இருந்தனர்.

ஏற்கெனவே இருந்தவர்கள் என்னிடம் வந்து என்னையும் குழந்தையையும் நலம் விசாரித்தனர். மீண்டும் என் மனிதர்களிடம் பேசுவது பரவசமாக இருந்தது.

பாப்பா என்ன செய்கிறாள் என வீட்டில் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவள் உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

இருக்கையில் அமர்ந்தேன். சில மாதங்களுக்குப் பின் கணினியைத் தொடுவது சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் பழைய வேகத்தை என்னில் இருந்து மீட்டெடுத்தேன். வேலை செய்வது எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் கண்களில் அசதி ஏற்பட்டது.

மதிய உணவு நேரம். வீட்டிற்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு வர அனுமதி கேட்டு மேனேஜரிடம் நின்றேன். இதற்காகவே அலுவலகத்திற்குப் பக்கத்திலேயே வீடு பார்த்து வந்தோம்.

புரிந்து கொள்ளும் மனப்பான்மை உடையவர்களும் அலுவலகத்தில் பலர் உள்ளனர்.

வேகமாகச் சென்றேன் வீட்டிற்கு. அப்பொழுதுதான் உறங்கி எழுந்து அழுது கொண்டிருந்தாள் என் மகள். அவளை வாரி அணைத்து இறுகப் பற்றிச் சில நிமிடங்கள் நின்றேன்.

என்னைப் பார்த்ததும் நான் அணைத்ததும் அவளும் அழுகையை நிறுத்தினாள். பால் குடிக்க வேண்டும் என்பதை எனக்குப் புரியும் செய்கைகளில் புரிய வைத்தாள்.

பால் கொடுக்க அமர்ந்தேன். சில நேரம் அவளுக்குப் பால் கொடுப்பது பிடிக்கும், சில நேரம் சலிக்கும், சில நேரம் வலி ஏற்படுத்தும். ஆனால், இப்பொழுது அவள் என்னிடம் பால் குடிப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இத்தனை நேரம் அவளை விட்டுவிட்டுப் போன எனக்கு, அவளைச் சமாதானம் செய்யக் கிடைத்த வாய்ப்பாகப் பால் கொடுப்பதை நினைத்து குளிர்ந்து போனேன்.

இருபது நிமிடங்கள் அவளுடன் இருந்து விட்டு, பத்து நிமிடங்களில் வேக வேகமாகச் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அலுவலகத்திற்கு விரைந்தேன். வேலைகளைப் பார்க்கத் தொடங்கினேன்.

ஐந்து மணி வரை வேலைகளைச் செய்தேன். நான் என்னென்ன வேலைகளை இனி செய்யப் போகிறேன் என்பதை புரிந்து கொண்டேன். வீட்டில் இருந்து இரண்டு முறை அழைப்பு வந்துவிட்டது. காலையில் உறங்கி விட்டாள். மதியம் சற்று நேரம் பொம்மைகளை வைத்து விளையாடியவள் சிணுங்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். அவளைச் சமாதானம் செய்ய முடியாமல் சிரமப்படுவதாக வீட்டில் இருந்தவர்கள் அழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

ஐந்து மணிக்குக் கிளம்புவதைக் கூற மீண்டும் மேனேஜரிடம் சென்று நின்றேன். 

ஓ.. இனி நேரத்திற்கு கிளம்பிடுவாளோ.. கேட்டா குழந்தை இருக்குன்னு சொல்வாங்க.. என்பது போல் பார்த்தார். 

நான் அவர் பார்வைக்கு எந்த விளக்குமும் கூறவில்லை.

புறப்பட்டேன். முகம் கழுவி, தயாராகிவிட்டு மகளுடன் விளையாட அமர்ந்தேன்.

அவள் இப்பொழுது தான் அங்கும் இங்கும் நகரத் தொடங்கி இருந்தாள். எந்தப் பொம்மை வேண்டும் என்பதைக் கை நீட்டிக் கேட்பாள். பொருட்களைக் கலைத்துப் போடுவாள். 

அவளுக்கு ஈடு கொடுத்து நானும் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் உட்கார்ந்துதான் வேலை செய்து விட்டு வந்தேன் என்றாலும் உடலில் ஓர் அசதி.

இருபது, முப்பது நிமிடங்கள் யாராவது அவளைப் பார்த்துக் கொண்டால், பத்து நிமிடங்கள் படுத்து எழுவேன். ஏதாவது சாப்பிடுவேன். இரண்டு பாடல்கள் கேட்பேன். எதற்கும் முடியவில்லை. அவள் செய்யும் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டு அவளுடன் இருந்தேன்.

என் அத்தை சட்னி அரைத்து இருந்தார். நான் இட்லி ஊற்றினேன். அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தேன்.

காலையில் இருந்து வீட்டில் உள்ளவர்கள் அவளைப் பார்த்துக் கொண்டனர். இனி யாரையும் தொந்தரவு செய்ய முடியாது. என்னை விட்டு அவள் நாள் முழுக்க இருப்பாளா என்று பயந்திருந்திருந்தேன். பயந்த அளவிற்கு இன்று அவ்வளவு அடம் பண்ணவில்லை. இதே போன்று எல்லா நாட்களும் இருக்குமா?

வீட்டில் உள்ளவர்கள் இன்றொரு நாள் முழுதாக அவளைப் பார்த்துக் கொண்டனர்.  அடம் பண்ணினாலும் ஏதேதோ செய்து சமாளித்துவிட்டனர். இதே போன்று தினமும் பார்த்துக் கொள்வார்களா?

அலுவலகத்தில் இருந்து இன்று சீக்கிரமே கிளம்பி வந்து விட்டேன். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தேன். இதே போல் தினமும் நடக்குமா?

என் மகள் நான் இல்லாத சமயத்தில் எப்படி உணர்ந்திருப்பாள்? நான் இல்லாத சமயத்தில் அவள் என்னை நினைத்து ஏங்கிப் போனாள்? நான் என்ன செய்வேன்?

இன்னும் பல கேள்விகள் என்னை ஆக்கிரமித்தன.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று நினைக்கும் போது சற்று நடுக்கமாகத்தான் இருந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.