அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது தமிழில் பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி போன்றவை இல்லாமல் வெளிவந்த முதல் இந்தியப் படம்.
வீணை S. பாலச்சந்தர் அவர்கள் எழுதிய கதைக்கு ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதி இருக்கிறார். வீணை S. பாலச்சந்தர் இயக்கிய இத்திரைப்படம் A. V. மெய்யப்பன் அவர்களால், தயாரிக்கப்பட்டது. மாருதி ராவ் அவர்களின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்பட்டிருக்கிறது. உண்மையில் தொழில்நுட்பம் குறித்த எந்தப் புரிதலுமில்லாத எனக்கே பிரமிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மை தான்.
பின்னணி இசையை ஏவிஎம்மின் சொந்த இசைக் குழுவான சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஆர்கெஸ்ட்ரா அமைத்துள்ளது.
வணிக ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இன்றளவும் பேசப்படும் ஒரு திரைப்படமாக இது உள்ளது. திரைப்படம், 1955 தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.
பாடல்கள், சண்டைக் காட்சி, நடனக் காட்சி இவை தான் ஒரு திரைப்படத்தின் முகவரி என நினைத்து வந்த காலகட்டத்தில், இல்லை கதை தான் அதன் ஆணிவேர் என நிரூபித்த திரைப்படம் இது. இதே பெயரில் பிற்காலத்தில் 1996 ஆம் ஆண்டு, ஒரு துப்பறியும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
இத்திரைப்படம் அகிர குரோசவாவின் ‘ரசோமன்’ (Akira Kurosawa’s Rashomon 1950) என்னும் திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்கிறது இணையம்.
சென்னையில் முதல் உலகப்போரின் போது நடந்த தாக்குதலை மையமாக வைத்தே கதை பின்னப்பட்டுள்ளது. அதை அப்படியே இரண்டாம் உலகப்போர், ஜெர்மனிக்குப் பதில் ஜப்பான் என மாற்றி இருக்கிறார்கள்.
இந்தியாவில் முதல் உலகப்போரின் போது தாக்கப்பட்ட ஒரே நகரம் நமது சென்னை. 22.09.1914 அன்று நகரத்தில் பெரும் வெள்ளம். ஆயுத பூசைக்கான காலகட்டம். அன்று ஜெர்மானிய எம்டன் கப்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பிரிட்டன் படைகள், சுதாரித்து, எதிர்தாக்குதல் நடத்த அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. விடிந்ததும் உண்மை தெரிந்த மக்கள் பலர் ஊரை விட்டே ஓடி இருக்கின்றனர். இந்த முதல் உலகப்போரில் நடைபெற்ற நிகழ்வை, இரண்டாம் உலகப்போர் காலகட்டம் என மாற்றிக் கதையைப் புனைந்திருப்பது நன்றாகவே இருக்கிறது.

ஜாவர் சீதாராமனின் குரலில் “இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கிக் கொண்டிருந்தன. எந்த நேரம் என்ன நடைபெறுமோவென்று எல்லோர் மனதிலும் ஒரு அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது ஒருநாள் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு வீட்டில்…”
எனத் திரைப்படம் தொடங்கும். உடனே துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கும். சிவாஜி கணேசன் உயிரை விடுவார். ஆம் வானொலிப் பொறியாளர் ராஜன் (சிவாஜி கணேசன்) வீட்டில் சுட்டுக் கொல்லப் படுகிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் நோக்குடன், காவல்துறை அதிகாரி மற்றும் புலனாய்வுத் துறை (C.I.D.) அதிகாரி (ஜாவர் சீதாராமன்) வருகிறார்கள்.
குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த பணத்தின் அளவு அதே அறையில் கிடைத்த வங்கிச் சீட்டுடன் ஒத்துப்போகிறது. அதனால் பணத்திற்கான கொலை அல்ல என உறுதியாகிறது.
இருவரும் ராஜனின் வீட்டைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் விசாரணையைத் தொடங்குகிறார்கள். ‘கொலையாளி, ராஜனின் தம்பி பட்டாபியாக இருக்கலாம்; பட்டாபி குடும்பச் சொத்தில் தனக்கானப் பங்கைக் கேட்டான், ஆனால் அவனும் அவனது மனைவியும் அதை வீணடித்து விடுவார்கள் என்று எண்ணி ராஜன் கொடுக்கவில்லை. இதுவே பட்டாபியைக் கொல்லத் தூண்டியிருக்கலாம்’ என்கிறார், பக்கத்து வீட்டுச் சின்னையா.
பட்டாபி, தங்களுக்குள் முரண் இருந்ததை ஒத்துக் கொள்கிறார். ஆனால் தான் கொல்லவில்லை; கோபத்தில் தன் மனைவி ஹேமா செய்திருக்கலாம் என்கிறார்.
ஹேமா, நடனக் கலைஞரான அம்புஜத்துடன் ராஜனின் திருமணத்திற்கு புறம்பான உறவு இருப்பத்தைச் சொல்லி, அம்புஜம் அவரைக் கொன்றிருக்கலாம் என்கிறார்.
அம்புஜம், சின்னையா தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்கிறார். சின்னையா, ராஜனின் பக்கத்து வீட்டுக்காரர். அம்புஜத்தைத் தனது ஆசை நாயகியாக வைத்து இருந்த பெருந்தனக்காரர். அம்புஜத்திற்கு ராஜன் மீது நாட்டம் செல்கிறது. சின்னையா கண்டிக்க, அம்புஜம் வீட்டை விட்டு வெளியேறுகிறார். தனியாக ராஜனால் குடியமர்த்தப் படுகிறார்.
தான் கருவுற்றிருப்பதை அறிகிறார். அதே நேரம், சென்னையில் ஜப்பானியப் போர்க் கப்பல், குண்டு வீசுகிறது. ஊரில் இருந்த அனைவரும் ஊரை விட்டே வெளியில் செல்கிறார்கள். அவ்வாறு, தன்னையும் கூட்டிச் செல்லுமாறு, அம்புஜம், ராஜனுக்குக் கடிதம் கொடுத்து விடுகிறார். அந்தக் கடிதத்தை, அதைக் கொண்டு போன சிறுவனிடம் சின்னையா வாங்கிப் படித்து இருக்கிறார். அதனால் அவர் தான் கொன்று இருக்க வேண்டும் என்பது அம்புஜத்தின் வாதம்.
சின்னையாவிடம் முதலில் விசாரித்த போது, “குண்டு சத்தம் கேட்டு ராஜன் இறந்ததாக சொன்னபோது, குண்டு சத்தம் கேட்டதும் இறந்தது ராஜன்தான் என உங்களுக்கு எப்படித் தெரியும் என கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பி விட்டதாக, புலனாய்வு செய்யச் சென்ற இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இது நம்மைத் திசை திருப்பும் தேவையற்ற இடம் என விரைவில் நமக்குப் புரிந்து விடுகிறது. ராஜன் இறக்கும் போது, முழுவதுமாக வெளியில் புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகவே இருந்து இருக்கிறார். அதனால் அம்புஜம் சொல்வது சரியாக இருக்குமோ என்ற கோணம் வருகிறது.
ராஜன் அவ்வாறு புறப்பட்டிருந்தாலும், அதற்குக் கொஞ்சம் முன்னால், வெளியில் சென்று வந்திருக்கிறார் என அவர் பூட்ஸின் மீது இருந்த புழுதி சொல்கிறது. பூட்ஸில் கைரேகையை அழித்த கொலையாளியின் கண்ணீரும் இருக்கிறது என்கிறார்கள். இப்போதே தெரிந்து விடுகிறது கொலை செய்தவர் ராஜனுக்கு மிகவும் வேண்டியவர் என்று.
அவர் அறையில் கிடைத்த வளையல் துண்டுகள், வானொலி ஒலிபரப்புத் தொடர்பான சிறு பொருள்கள், பைக்காரா அணை, மேட்டூர் அணை, பாபநாசம் அணை, ஏதோ பவர் ஸ்டேஷன் என விமானப்படைக்குத் தேவையான புகைப்படங்கள் இப்படி இவர்களின் புலனாய்வு செல்கிறது. விமானப்படைக்குத் தேவையான புகைப்படங்கள் தான் என்ற முடிவிற்கு எதற்காக வந்தார்கள் எனத் தெரியவில்லை. வேறு எதற்கும் இவை தேவைப்படாதா என்ற கேள்வி உள்ளத்தில் உடனே வந்தது.
அதிகாரி கல்லூரி முதல்வரிடம் போய் விசாரிக்கிறார் . இவரிடம் தான் ராஜன், உஷா மட்டுமல்லாமல், ராஜனின் தம்பி பட்டாபியும் படித்தவர்கள். ஒருமுறை ஆங்கிலேயர் கொடி பறந்த இடத்தில், மூவர்ணக்கொடியை மாற்றி ஏற்றிய உஷா, அது குறித்து தண்டனை வேறு நபருக்கு வழங்கப்பட்டபோது, தான் தான் செய்ததாக ஒத்துக்கொண்டவர்; அவ்வளவு நேர்மையானவர் என்கிறார், கல்லூரி முதல்வர். அவ்வளவு நேர்மை; நாட்டுப்பற்று கொண்டவர். தனக்காக பிறர் தண்டனை அனுபவிப்பதாக இருக்கும் பட்சத்தில் தானே குற்றத்தை ஒப்புக் கொள்வார். இப்போதே தெரிந்து விடுகிறது கொலை செய்தவர் யார் என்று. ராஜன் திறமையானவர் என்றும் பட்டாபி கோபக்காரன் என்றும் கல்லூரி முதல்வர் சொல்கிறார்.
CID அதிகாரி ஒரு கடைக்குப் போய் நன்னாரி சர்பத் வாங்கிக் குடிக்கிறார். ‘அனைத்துக் கடைகளும் குண்டு போடுவது குறித்து பயத்தில் பூட்டியிருக்க நீ மட்டும் ஏன் திறந்து வைத்திருக்கிறாய்?’ என கேட்க, தனது நண்பர், நாடகம் போடுவதாகவும், அவருக்கு உதவும் பொருட்டு, வருபவர்களுக்குத் துண்டுப் பிரசுரம் கொடுப்பதற்காகத் திறந்து வைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். அங்கு நாடகம் (தூக்குத் தூக்கி) குறித்த துண்டுப் பிரசுரம் இருக்கிறது. நாடகத்தில் வரும் புகழ்பெற்ற சொல்லாடல், ‘கொலையும் செய்வாள்’ பத்தினி. இப்போது கொலையாளி யார் என முழுவதும் நமக்குத் தெரிந்து விடுகிறது.
இப்போது CID அதிகாரி உஷாவிடம் சென்று, அவர்கள் வாழ்க்கை குறித்து விசாரணை நடத்துகிறார். உஷா, தங்கள் காதல் பிறந்த, திருமணம் நடந்த கதை என அனைத்தையும் சொல்கிறார்.
சென்னைக் கல்லூரி சங்கக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. மகாத்மா காந்தி, காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய், வந்தே மாதரம், நேருஜி ஜிந்தாபாத் என ஆங்காங்கே பதாகைகள் உள்ளன. காந்தியின் புகைப்படம் உள்ளது.
“அன்னை பாரதி ஆண்டு அருள் செய்வாய். வெள்ளையனை விரட்டி விட்டுத் தான் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவர்களை நினைப்பார்கள்” என மாணவர்கள் சொல்கிறார்கள். ஒருவர் வந்து பேசுகிறார். ஒருவர் உண்டியல் குலுக்குகிறார். ராஜன் வந்ததும், அனைவரும் “ராஜன், பிரின்சிபாலின் ஒற்றன். கவர்மென்டரின் இலவச சம்பளத்தில் படிப்பவரின் புத்தி வேறு எப்படி இருக்க முடியும்? ஏகாதிபத்தியம் ஒழிக கருங்காலி ஒழிக இலவச சம்பளம் ஒழிக” என கூச்சலிடுகிறார்கள்.
“இதே அவசர புத்திக்காரர்கள் என்னை ஆதரித்துக் கை தட்டுவதையும் நீ பார்க்கப் போகிறாய்” என சொல்லிக் கொண்டுதான் ராஜன் மேடை ஏறுகிறார்.
“உங்கள் கூச்சலால் வெள்ளையர்கள் வெளியேறப்போவது இல்லை. சாக்ரடீஸ் விஷம் வைத்துக் கொல்லப் பட்டார். ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்து’ என்று சொன்ன இயேசுநாதர், ‘வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தைக் காட்டு, பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே’ என்று சொன்னதற்காக, அவரை சிலுவையில் அறைந்து வரவேற்றார்கள். அந்த பெரிய மனிதர்களுக்கே இந்த வரவேற்பு என்றால், என்னைப் போன்று எளிய மனிதர்களுக்கு இத்தகைய வரவேற்பு கிடைத்ததில் என்ன வியப்பு?
இலவச சம்பளம் வாங்குவதில் என்ன கேவலம்? அரசாங்கம் என் அறிவுக்கு அளித்த சன்மானம் அது. மாணவர்களில் யார் தான் சொந்த உழைப்பில் வருவதைக் கொண்டு படிக்கிறார்கள்? நீங்கள் உங்கள் தாய் தந்தையரிடம் இலவசப் பணம் வாங்குகிறீர்கள். தாய் தந்தையற்ற நான் அரசாங்கத்தின் உதவியால் படிக்கிறேன்.
உங்கள் தலைவன் யார்? இந்த அரசியல் ஆந்தையா? நீ எந்த கல்லூரி மாணவன், இந்த கூட்டத்திற்கும் உனக்கும் என்ன தொடர்பு? (அவர் கல்லூரி மாணவர்கள் அல்லர்) உண்டியல் குலுக்கும் இவன் யார்? கைதட்டுவதற்கு ஒரு பொருள் வேண்டாம்? எது தேசபக்தி?
பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வது அவர்கள் வாழ்வில் உயர்வு பெற, கல்லூரியில் படிக்கும் நாம் செய்வதால் என்ன பலன்? நம் தலைவர்களை விடுதலை செய்து விடுவார்களா? மாணவர் பருவம் விதை விதைக்கும் பருவம். அதில் வெறுப்புக்கோ அரசியல் வேகத்துக்கோ இடம் கிடையாது. வருங்கால இந்தியாவின் சிற்பிகளாக வேண்டுமானால், நாம் இங்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்… ஒழுக்கம் கட்டுப்பாட்டை நாம் இன்று பழகவில்லை என்றால் என்றுமே பழக முடியாது.”
இப்படி ராஜன் முழங்க, இப்போதும் அனைவரும் கைதட்டுகிறார்கள்.
அடுத்து, உஷா மைக்கைப் பிடிக்கிறார். “தன் சொத்து சுகங்களை விட்டுப் போராடும் நமது தலைவர்களை எந்த காரணமும் இன்றி கைது செய்வதற்கு நாம் எப்படித் தான் கண்டனம் தெரிவிப்பது? 40 கோடி 400 வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டது ஏன்? ராஜனின் தாயார் இறக்கும் தருவாயில் இருந்தால் ராஜன் என்ன செய்வார்? அழமாட்டார்; தன்னுடைய சிந்தனையைத் தூண்டுவார்; இல்லையா?
கஜினி முகமது சோமநாத புரம் ஆலயத்தை இடித்த போதும், முகலாயர்கள் படையெடுத்த போதும், பிரிட்டிஷ் காரர்கள் பதுங்கிப் புகுந்த போதும் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம்? சிந்தித்துக் கொண்டிருந்தோம் நாமிருக்கும் நாடு என்ற உணர்ச்சி வேண்டும்” என முழங்க அதற்கும் அனைவரும் கைதட்டுகிறார்கள்.
சிந்தித்துக் கொண்டே இருப்பது கோழைத்தனம் என்பதாக, வளையலைப் போட்டுக் கொள்ளுங்கள் என ராஜனை உஷா சொல்ல; புடவை கட்டிக்கொள் மற்றவர்கள் சொல்கிறார்கள். இந்தச் சொல்லாடல் இன்றும் உள்ளது தானே!
“உங்களுடைய பெண்மைக்கு ஒரு வணக்கம். தேசபக்திக்கு ஒரு வந்தனம்’ என சொல்லி ராஜன் வெளியேறுகிறார்.
ராஜனுக்கு நேர்ந்த அவமானம், உஷாவிற்கு ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகிறது.
நான்கைந்து மாதம் கழித்து 30 ரூபாய் பணத்தில் ஒரு ரேடியோ கிடைக்கும் அளவிற்குத் தன்னிடம் தொழில் நுட்பம் இருப்பதாகவும், அதற்குப் பணக்கார நண்பர்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்ற விண்ணப்பத்துடன், ராஜன் உஷாவின் அப்பாவிடம் வருகிறார். இதுவும் நாட்டுப்பற்று தான், லட்சியம் தான் என உஷா எண்ணுகிறார். ராஜனிடம் மன்னிப்பு கேட்கிறார்.
“ஒரு காலத்தில் வானுயர்ந்த கோபுரங்கள் கட்டிய நாம், இன்று நிமிர்ந்து பார்க்கும் வலிமையற்று நிற்கிறோமே ஏன்? உலகிற்கு மருத்துவத்தைத் தந்த நாம், கண்கள் பஞ்சடைக்க இருக்கிறோமே ஏன்? காரணம் அறியாமை. கைத்தொழில், விஞ்ஞானம், அரசியல், சுகாதாரம், விவசாயம், பொது வாழ்வு முறையில் இருக்கும் அறியாமைக்கு நமது இமயத்தைத் தான் ஒப்பிட வேண்டும். அவற்றைப் போக்கத் தான் நான் ரேடியோவின் உதவியை நாடுகிறேன்” என ராஜன் தனது விளக்கத்தைக் கொடுக்கிறார்.
ரேடியோ தொடர்பாக அடிக்கடி ராஜன் வர, இருவருக்கும் காதல் மலருகிறது. திருமணமும் நடைபெறுகிறது.
இவ்வளவு கதையையும் கேட்ட புலனாய்வுத்துறை அதிகாரி, ஒரு முடிவிற்கு வருகிறார். ஒரு நாடகத்திற்கு ஏற்பாடு செய்கிறார். இதுவரை சந்தேகம் கொண்டு விசாரித்தவர்களிடமும், உஷாவிடமும் ஆளுக்கொரு துப்பாக்கி கொடுக்கிறார். உள்ளே இருக்கும் குண்டு உண்மையானது அல்ல எனச் சொல்லியே, அனைவரையும் சுடச் சொல்கிறார். உஷா தவிர அனைவரும் சுடுகிறார்கள். உடனே, பட்டாபியையும் அவர் மனைவி ஹேமாவையும் கைது செய்யச் சொல்கிறார்.
‘எனக்குக் கொலையாளி யார் எனத் தெரியும்’ என உஷா மீதிக் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்.
ராஜனின் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த எந்த செல்வந்தரும் உதவவில்லை; அரசும் கை விரித்து விட்டது. ராஜன், அவ்வப்போது ஜப்பான் போய் வருகிறார். வீட்டில் செல்வம் கொழிக்கிறது.
‘அந்த நாள்’ ஊரெல்லாம் ஒரே வெள்ளம். எங்குமே மின்சாரம் இல்லை. ஆனால் ஜெனரேட்டர் வைத்து, ராஜன் ஒரு அறைக்குள் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறார். ‘நிலைமை சுமூகமாக இருக்கிறது, மூட்டையை இறக்குங்கள்’ என்கிறார். உஷா கேட்டதும், “முந்திரிப் பருப்பு மூட்டை அனுப்பச் சொல்லியிருக்கிறேன்” எனச் சமாளித்து விட்டு வெளியில் போகிறார்.
உஷா அறையைத் திறந்து பார்த்தால், வெளியூர் போவதற்கான எல்லா ஆயத்தங்களும் ராஜன் செய்திருப்பது தெரியவருகிறது. அப்போது ஜப்பானில் இருந்து தகவலும் வருகிறது. “இன்றிரவு 11 மணிக்கு சென்னையின் மீது குண்டு விழும்” என்பது தான் அந்த தகவல்.
ராஜன் வீடு வந்து சேருகிறார். அடுத்தும் தகவல் வருகிறது. “உடனுக்குடன் நிலவரம், சேதத்தின் அளவு குறித்து தெரிவிக்கவும். அடையாருக்கு மூன்று மைல் தூரத்தில் அவருக்கு நீர்மூழ்கிக் கப்பல் காத்திருப்பதாகவும் அங்கிருந்து ரங்கூன் / ஜப்பான் வா. வரும் போது, மேப் கொண்டு வா” என மீண்டும் தகவல் வருகிறது.
ராஜன் உஷா இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. வெளியில் குண்டு வெடிக்கிறது.
“அரசு என் திட்டத்தை எள்ளி நகையாடியது; ஜப்பான் என் அறிவைப் பயன்படுத்துகிறது. இந்த ஆட்சி முறையை மாற்றி அமைக்க நாற்பது கோடி மக்களில் நான்கு கோடியை விலையாகக் கொடுத்தால் தான் என்ன? பிரெஞ்சுப் புரட்சி தான் மக்களாட்சியை உருவாக்கியது. இறப்பின் மடியில் தான் பிறப்பு என இருக்கட்டுமே! ஜப்பானின் உதவியுடன், நாம் விடுதலை அடைய வாய்ப்பு உண்டு. அந்நிய நாட்டின் உதவி இல்லாமல் நாடு விடுதலை அடையாது. அப்படி சுதந்திர நாடு ஏற்பட்டால், தூதராகவோ, ஆளுநராகவோ நான் திரும்புவேன்.”
இது ராஜனின் தரப்பு.
“இப்ரஹிம் லோதியை எதிர்க்க பாபர் வரவழைக்கப் பட்டார். ஆற்காடு நவாபுகள் ஆங்கிலேயரை அழைத்தார்கள். ஜப்பானும் அப்படி ஆகி விட்டால்? அந்நிய நாட்டின் உதவி இல்லாமல் நாடு விடுதலை அடையாது என்றால் அது தேவை இல்லை.”
இது உஷாவின் தரப்பு.
இறுதியில், ‘படித்த பெண்ணை திருமணம் செய்தது தவறு என தான் இப்போது தெரிகிறது’ என ஒரே சொற்றொடரில் அவரின் நெடுநேர வாதத்தை முடித்து வைக்கிறார் ராஜன்.
வெளியில் குண்டு வெடிக்கிறது. அது குறித்த சேதங்களைப் பார்வையிட செல்லும் ராஜன், உஷாவைக் கட்டிப் போட்டு விட்டுச் செல்கிறார். உஷா கட்டை அவிழ்த்து, ராஜனின் வானொலி நிலையத்தை நொறுக்குகிறார்.
“நாட்டை ஏமாற்றினீர்கள், என்னை ஏமாற்றினீர்கள். இப்போது அம்புஜத்திற்கும் அவரது குழந்தைக்கும் என்ன பதில்?” எனக் கேட்டு அடுத்தக்கட்ட விவாதம் வருகிறது. ஏனென்றால், அம்புஜம் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது உஷா கையில்.
அதற்கும் ராஜனிடமிருந்து இளக்காரமாகப் பதில் வருகிறது. உஷாவைத் தன்னுடன் வரும்படி அழைக்கிறார். அதில் சண்டை ஏற்படுகிறது. உஷா துப்பாக்கியை எடுக்கிறார். ராஜன் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சி செய்ய, இருவருக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் துப்பாக்கி வெடிக்கிறது. பின்னர் காலணிகளைப் பிடித்துக் கொண்டு தான் அழுததாக நடந்தவற்றை உஷா சொல்கிறார்.
உஷாவிடம் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்ட ராஜன் பயன்படுத்திய வரைபடத்தைக் கேட்க, அதை ஏற்கனவே ராஜனுடன் ஏற்பட்ட சண்டையின் போதே உஷா கிழித்து விட்டார். ஆனாலும் அதை எடுக்கப் போவதாக அறைக்குள் உஷா செல்கிறார். உள்ளே துப்பாக்கி குண்டு வெடிக்கும் சப்தம் கேட்கிறது. “உஷா…” என CID கத்துவதுடன் திரைப்படம் நிறைவடைகிறது.
வீணை பாலச்சந்தர், நடிகராக, நடன இயக்குனராக, இசையமைப்பாளராக, சில திரைப்படங்களில் பணிபுரிந்து இருந்தாலும், இயக்குனராக அவர் பணிபுரிந்த முதல் திரைப்படம் இது தான். இது அவருக்கு வணிக ரீதியான வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும், இயக்குனராக பெரும் புகழைக் கொடுத்தது.
ராஜனாக சிவாஜி கணேசன், உஷாவாக பண்டரி பாய், சி.ஐ.டி. அதிகாரியாக ஜாவர் சீதாராமன், சின்னையாவாக பி.டி.சம்பந்தம், பட்டாபியாக டி.கே.பாலச்சந்திரன், அம்புஜமாக கே.சூரியகலா, ஹேமாவாக எஸ்.மேனகா நடித்துள்ளனர். இவர்கள் தவிர, ஒரு பெட்டிக்கடைக்காரராக ராஜபார்ட் ராமசாமி என ஒருவர் வருகிறார்.
வெள்ளைத்தோலுக்கிடம் கொடுத்ததாலே வந்த தோஷம்
அதனாலே வந்த மோசம் -இப்போ
ஐயா காந்திய உள்ளே வச்சு பாக்குதே இந்த தேசம்
பண்டித மோதிலால் நேரை பறிகொடுத்தோமே
ஜப்பான் குண்டால், பரிதவித்தோமே
என அவர் பாடுவதாகட்டும், இராவணன் பாத்திரத்தை நடித்து காட்டியதாகட்டும், யாரடா நீ இங்கே வந்தவன் என முடிக்கும் போது, சி.ஐ.டி. அதிகாரி வருவதாகட்டும் சிறப்பான பாத்திரம். நன்னாரி சர்பத் விற்கும் அவரின் கடையில் தூக்குத் தூக்கி நாடக நோட்டீஸ்; கதையை அடுத்த கட்டத்திற்கு நகருகிறது.
“கொண்டு வந்தால் தான்…
கொலையும் செய்வாள் பத்தினி” பார்த்ததும் நமக்கும் கொலையாளி யார் எனத் தெரிந்து விடுகிறது.
பண்டித மோதிலால் நேருவை பறிகொடுத்தோமே என்ற பாடல் ஒன்று வருகிறது. மோதிலால் நேருவிற்கு அவ்வளவு செல்வாக்கு இருந்ததா? என்ற வியப்பு வந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில், இந்திய முடிசூடா மன்னர், பண்டித மோதிலால் நேரு கிராமாபோன் சங்கீதம் என ஒரு பதினாறு பக்க நூலே இருந்திருக்கிறது. பாடல்களை மிஸ் K. B. சுந்தராம்பாள் , S. G. கிட்டப்பா , S. V. சுப்பையா பாகவதர் , T. M. காதர் பாஷா பாடியிருக்கிறார்கள். கீழே இருக்கும் இணைய பக்கத்தில் புத்தகம் இருக்கிறது. புத்தகம் 1932 ஆம் ஆண்டு வெளிவந்து இருக்கிறது.
ஜவகர்லால் நேரு மட்டுமல்ல அவரது அப்பாவும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறைக்குச் சொல்லும் நூல் இது.
////
கடிதம் கொண்டுவரும் இளைஞனாக வருபவர் பிரபல பின்னணிப் பாடகர் “எங்கிருந்தாலும் வாழ்க புகழ்” ஏ எல் ராகவன். ஏற்ற இறக்கங்கள் கொண்ட அவரின் நடிப்பு சிறப்பு. 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு சுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார் என்கிறது விக்கிப்பீடியா.
நாயகியின் வீட்டில் காந்தி படம் உள்ளது. சென்னை மாணவர் சங்க மேடையின் அருகில் காந்தி புகைப்படம், காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய், நேருஜி ஜிந்தாபாத், வந்தே மாதரம் போன்ற பதாகைகள் உள்ளன என்றால், கல்லூரி முதல்வரின் அறையில் விக்டோரியா அரசியின் புகைப்படம் உள்ளது.
மாணவர்கள் ‘இலவச சம்பளத்தில் படிப்பவரின் புத்தி வேறு எப்படி இருக்க முடியும் இலவச சம்பளம் ஒழிக’ என கூச்சலிடுவதன் மூலம், அன்றே இலவசங்களுக்கு எதிர்ப்பு இருந்ததை உணர முடிகிறது. ‘வளையலைப் போட்டுக் கொள்; புடவை கட்டிக்கொள்’ என்பதெல்லாம் ஆண்களை அவமானப் படுத்தும் செயல்கள் என்பனவாக உரையாடல்கள் உள்ளன.
நாயகியின் நேர்மையான வாதத்தை சமாளிக்க இயலாத நாயகன், இறுதியில் ‘படித்த பெண்ணை திருமணம் செய்தது தவறு என தான் இப்போது தெரிகிறது’ என ஒரே சொற்றொடரில் முடித்து விடுவார். இது இன்றும் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வது தான்.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.