சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பறிக்கப்படும் பெண் உரிமைகள் குறித்து என் மனதுக்குள் சில கேள்விகள் எழுகின்றன.
ஆங்காங்கே தனித்தனியாக ஒரு தனி நபருக்கு நிகழும் பாலியல் மற்றும் இதர வன்கொடுமைகள் உண்மையில் ஒரு தனிநபரால் அல்லது சிலர் கூட்டாக இணைந்து ஒரு தனி நபருக்கு இழைக்கும் தீங்குதானா என்பது தான் எனது முதல் கேள்வி? இதை இதே போன்றதொரு கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டிருந்தால் இதற்கு ஒரு முடிவே ஏற்படாது என்பதுதான் உண்மை.
சமீபமாக நடந்த சில சம்பவங்களிலிருந்து பின்னோக்கிப் போய் பார்க்கலாம்.
சீமான் எனும் ஒரு தனி நபருக்கும் விஜயலட்சுமி எனும் ஒரு பெண்ணுக்கும் இடையில் சில ஆண்டுகளாகவே நிகழ்ந்து வரும் கருத்து மோதல்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இது, இரண்டு தனிநபர் சார்ந்த சிக்கலை மிக முக்கியமான பேசுபொருளாக்கி, பேச வேண்டிய பிரச்னைகள் திசை திருப்பப் படுத்தும் உத்தியாகவே இருக்கும்.
ஆனால் சில தினங்களுக்கு முன் சீமான் அவதூறாகப் பேசியது, விஜயலட்சுமி எனும் ஒரு தனிப் பெண்ணை பற்றி மட்டும்தானா? அவர் பேசிய அனைத்தும் பொதுவாக அனைத்துப் பெண்களின் மாண்பை இழிவுபடுத்தும் விதமாக இருந்ததா இல்லையா? ஆனால் அது பற்றி எந்தவிதக் கண்டனத்தையும் தெரிவிக்காமல் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், அவர்கள் இருவரையும் சமாதானமாகப் போகச் சொல்லி அறிவுறுத்தி இருப்பது ஏற்புடைய செயல்தானா?
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஒரு மூன்றரை வயது பெண் குழந்தையைப் பற்றித் தெரிவித்த கருத்து எந்த விதத்தில் சேரும்?
கொல்கத்தா மருத்துவருக்கு நிகழ்ந்த கொடூரமான பாலியல் வன்புணர்வுக் கொலை. அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி ஐஐடி போன்ற முக்கிய பல்கலைக்கழகங்களில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றை உற்று நோக்கும்போது இவையெல்லாம் ஒரு தனி நபர் மற்றொரு தனிநபருக்கு இழைத்த வன்கொடுமையாக மட்டுமே எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அடுத்ததாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொடூரச் சம்பவம். 13 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அந்த மூன்று பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தத் துணிவு எங்கிருந்து வந்தது?
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒன்றல்ல இரண்டல்ல, தினமும் இது போன்ற ஒரு செய்தியையாவது நாம் கட்டாயம் கடந்து செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதே போன்ற நிலை நீடித்தால், பெண்பிள்ளைகளைக் கல்வி கற்கவும் பணிக்குச் செல்லவும் வெளியில் அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சும் நிலை உருவாகிவிடும். இப்பொழுதே அத்தகைய பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிட்டது என்று கூடச் சொல்லலாம்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணமே அதற்கு சாட்சி.
சமீபமாக நடந்தேறிய குழந்தை திருமணம் பற்றிய காணொளி இணைப்புகள்.
பாலியல் குற்றச்சாட்டுகளில் பெண்கள் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற கருத்தைக் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி முன் வைத்திருப்பதும், மைனர் பெண் குழந்தைகளின் கருக்கலைப்பு குறித்து மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி குஜராத் உயர்நீதிமன்றப் பெண் நீதிபதி தன் கருத்தை வெளிப்படுத்தி இருப்பதும், நம் பெண்கள் சமுதாயம் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு முரணான சம்பவங்களை மையப்படுத்தி, பெண்கள் சொத்தில் பங்கு கேட்பதையும் மணமுறிவுக்குப் பிறகு பராமரிப்பு தொகை கேட்பதையும் குறை கூறத் தொடங்கி இருப்பது, ஆணாதிக்க வெறிக்குத் தீனி போடுவதாக இருக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு, பில்கிஸ் பானோவுக்கு நடந்தது போன்ற சமூகக் குற்றங்களும், குற்றவாளிகள் தண்டிக்கப் படாமல், இலகு வாழ்க்கை வாழ்வதும் வெகு சகஜமாக நடக்கிறது.
தனக்கு நடந்த பாலியல் அத்து மீறலுக்கு, பிரிஜ் பூஷன் சிங்குக்கு ஆதரவாக இருக்கும் ஒன்றிய அரசாகத்தை எதிர்த்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துடன் இணைந்து மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்துக்கு என்ன பலன் கிடைத்தது என்பதைத்தான் நாம் அறிவோமே!

கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பு, ஆண், பெண் இருபாலர் மட்டுமே என்பது போன்ற அறமற்ற அமெரிக்க புதிய கொள்கைகள் இன்னும் அதிகமாகப் பெண்கள் மற்றும் பால் புதுமையினரின் உரிமைகளை நசுக்குவதாக இருக்கிறது. இதுவரை நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் அனைத்துமே நாம் அறிந்ததே! இன்னும் சொல்லப்போனால் மேலோட்டமாகத்தான் இவற்றை ஒரு சேர நினைவுபடுத்தியிருக்கிறேன்.
இதுபோல, பெண்களுக்கு எதிராக தினமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளைப் பட்டியலிட்டால் அது சீனப் பெருஞ்சுவர் போல நீண்டு கொண்டே போகும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தால் அது குற்றச் செயல், இதுவே நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் தினம் தினம் தொடர்ந்து பரவலாக நடக்கின்றன என்றால் அது சமூகச் சீர்கேடு.
என்னைப் பொறுத்தவரை இவை எல்லாம் நேரடியாகப் பெண்களுக்கு நடந்தேறும் வன்முறைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகப் பெண்ணியக் கோட்பாடுகளுக்கு எதிராக நடந்து வரும் மறைமுகத் தாக்குதல் என்றே சொல்லுவேன்! உள்ளூர் அரசியல் தொடங்கி உலக நாடுகள் வரை வலதுசாரி சித்தாந்தம் மேலோங்கி கிடப்பதே இதற்கு முக்கிய காரணம். வேலியே பயிரை மேயும் கதையாக, அரசாங்கமே இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு மறைமுகமாக ஊக்கம் கொடுக்கிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லாமல் போனால் பெரும்பான்மையான ஆண்களுக்கு இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட எப்படித் துணிவு வரும்?
- குழந்தை திருமண ஒழிப்பு
- பெண் கல்வி
- பெண்களுக்கான வேலை வாய்ப்பு, சம ஊதியம்
- சொத்துரிமை
- மண முறிவு உரிமை
- கருக்கலைப்புரிமை உள்படத் தங்கள் உடல் சார் உரிமைகள்
- வாக்குரிமை
- அதிகாரத்தில் பங்கு
உள்ளிட்ட பெண் உரிமைகளை இன்றைய பெண்கள் இலகுவாகவே அனுபவித்து வருவதால், இவற்றின் அருமை பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டது என்று சொல்லலாம். இவற்றையெல்லாம் நமக்குப் பெற்றுத் தர, நம் முந்தைய தலைமுறை பெண்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
அகில இந்திய அளவில் இயங்கி வந்த பெண்ணுரிமை இயக்கங்கள், அவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய பெண்ணிய மாநாடுகள், அதற்கு அவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கொடுத்த உழைப்பு போன்றவற்றை சற்றேனும் புரிந்துகொள்ள ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கும் பெயரற்றவர்களின் குரல் புத்தகத்தின் ‘பெண்ணியம் ஓர் அரசியல்’ – மூத்த பெண்ணியலாளர் தோழர் வ.கீதா மற்றும் தோழர் நிவேதிதா லூயிஸ் இருவரின் உரையாடல் பகுதியை வாசித்தால் புரியும்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ ?
எனும் பாரதியின் வரிகளைப் போல, மிகவும் பாடுபட்டு நம் பெண்கள் வளர்த்தெடுத்த பெண்ணுரிமைப் பயிர் இன்று கருகிக் கொண்டிருக்கிறது.
முழுமூச்சுடன் இயங்கி வந்த பல பெண்ணிய இயக்கங்கள் இன்று பலமான ஆதரவு இல்லாமல் தளர்ந்து போய் கிடக்கின்றன. நலிந்து ஒலிக்கும் பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் குரல்கள் யார் காதிலுமே விழுவதில்லை. ஆதிக்க சக்திகளின் பேரிரைச்சல் அந்த மெல்லிய குரல்கள் யாருடைய செவியையும் எட்டாத அளவுக்கு அமிழ்த்தி விடுகிறது.
இவற்றையும் மீறித் துணிந்து சமூக வலைத்தளங்களில் வலுவான கருத்துக்களைப் பகிரும் பெண்களின் குரல் வளைகளும் ஆபாசக் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் நெறிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தச் சமூகத்துக்கே சுயமரியாதை இருக்கக் கூடாது என்பதுதான் வர்ணாசிரமத்தின் பெயரால் இயங்கி வரும் சாதியக் கட்டமைப்பின் அடிப்படை. குறிப்பாகப் பெண்களுக்குச் சுயமரியாதை என்கிற உணர்வே இருக்கக் கூடாது என்பதுதான் ஆன்மீகப் போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் சாதிய நூல்களனைத்தும் போதிக்கும் தத்துவமே!
தங்கள் விரலைக் கொண்டே தங்கள் கண்களைக் குத்திக் கொள்ளச் செய்வது போல, பெண்ணியக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பெண்களையே தூண்டி விடுவதுதான் இந்தச் சாதீய/பாசிச/ஆணாதிக்க/வலதுசாரி சித்தாந்தத்தின் தந்திரம் எனலாம். கருத்தியல் மோதல்களை ஏற்படுத்தி, பிரிவினையை உண்டாக்கி, மக்களைத் தனித் தனித் தீவுகளாகப் பிரித்து வைப்பது, பாசிசத்தின் மற்றொரு குயுக்தி.
இத்தகைய வலுவான சாதிய/பாசிச/ஆணாதிக்க/வலதுசாரி சித்தாந்த ஆதிக்கத்துக்கு அடி பணிந்து, நலிந்துபோய் கிடந்த சமுதாயத்துக்குச் சுயமரியாதையைப் போதித்தவர் தந்தை பெரியார். பெண்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்து, பெண்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தி, தங்களுக்காக தாங்களே போராட கற்றுக் கொடுத்தவர்.
அதனால்தான், ஆண்களுக்கு என்றில்லை ஆணாதிக்க சித்தாந்தத்துக்கு பலியாகிக் கிடக்கும் பல ஆதிக்கச் சாதிப் பெண்களுக்குமே தந்தை பெரியாரின் பெயரைக் கேட்டால் பற்றி எரிகிறது.
சுலபத்தில் யாரும் தங்களுடைய கட்டமைப்பை உடைத்துக் கொண்டு வெளியில் வந்து உண்மையான சமூக அக்கறையுடன் குரல் கொடுக்க தயாராகவே இல்லை. மறுத்து, முகநூலிலும் சமூக வலைத்தளங்களிலும் தங்களின் தற்குறித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றர். நாம் தினமும் பார்த்து, கடந்து போகும் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றில் நகைச்சுவை என்கிற பெயரில் பெண்களைக் கொச்சைப்படுத்தி ஆண்கள் செய்யும் வீடியோக்களில் பெண்களே இயல்பாக நடிப்பதைக் கூடச் சொல்லலாம்.
காரணம் இவர்களுக்கெல்லாம் சுயமரியாதை பற்றிய தெளிவே இல்லை, இத்தகைய சமூக மாற்றத்துக்குப் பலரும் பழகிப்போய் அரமற்றுப் போயிருக்கின்றனர் என்பதுதான். பகுத்தறிவுப் பாதையில் பயணப்பட்டு சற்றே தலைநிமிர்ந்த பெண் சமுதாயம் இன்று மீண்டும் பழைய நிலைக்கு இழுக்கப்படுவது காலத்தின் கேடு. ஆணாதிக்கத்தில் பீடிக்கப்பட்டு பெண்கள் ஏன் இவ்வளவு பகுத்தறிவு மங்கிக் கிடக்கிறார்கள் என்றே புரியவில்லை. அல்லது நாம், உச்சியில் ஏறுவது போல இத்தகைய சிந்தனைகளைப் பலரிடமும் கொண்டு போய் சேர்க்கத் தவறுகிறோமா?
பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும் என்பதில் தொடங்கி, பெண்கள் எப்படித் தியாகிகளாக வாழ வேண்டும், அவர்கள் சொத்தில் பங்கு கேட்பது எத்தகைய தகாத செயல்? விவாகரத்து எவ்வளவு கொடும் பாதகம்! பராமரிப்பு தொகை கேட்பது எத்தகைய கொடுஞ்செயல், அந்தக் காலத்தில் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தகைய உயர்வான வாழ்க்கையை வாழ்ந்தார்கள், அம்மியில் அரைத்து சட்னி செய்வதில் தொடங்கி வீட்டு வேலை செய்வதால் பெண்களில் உடல் நலம் எப்படிப் பராமரிக்கப்படுகிறது எனப் பற்பல விதமாகப் பெண்களுக்குக் கலாச்சாரத்தைப் போதிக்கும், யார் எழுதுகிறார்கள் என்பதே தெரியாமல், பலராலும் மறுபடி மறுபடி பகிரப்பட்டு எல்லோர் மூளையிலும் போய் அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கும் பிற்போக்கு சிந்தனைகள் ஏராளம் ஏராளம்.
சமீபமாகச் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்ட பாக்கெட் மாவு சர்ச்சை போன்று, ஒன்று போனால் மற்றொன்று என்று புதிது புதிதாகக் கிளப்பி விடுகிறார்கள். பலரும் இவற்றுக்கெல்லாம் எதிராகக் குரல் எழுப்பினாலும் வெட்ட வெட்ட முளைக்கும் காளான்களாய் இவை திரும்பத் திரும்ப முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள் மூலமாக நீண்ட நெடுங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட, பெண்ணியக் கோட்பாடுகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் இத்தகைய மறைமுகப் போர்கள் பன்முகத்தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன.
இன்று, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக, நம் தாய் மொழியாம் தமிழ் மொழியைக் காக்க நம் தமிழ்நாடு அரசாங்கத்தால் ஓங்கி ஒலிக்கும் எதிர்ப்புக் குரல், உலக அரங்கு எங்கிலும் எதிரொலிக்கிறது. அதேபோல பெண்களின் உரிமைகளுக்கும் நாம் பெரும் குரலை எழுப்பியே தீர வேண்டும்.
நமக்காகக் குரல் கொடுக்க மறுபடியும் தந்தை பெரியாரோ அல்லது பெரியார் போன்ற ஒருவரோ தோன்ற வாய்ப்பே இல்லை. எனவே நமக்கான குரலை நாம் தான் எழுப்ப வேண்டும். ஆணி வேர் வரை அழுகிப் போயிருக்கும் ஒரு செடியைத் துளிர்க்க வைப்பது எவ்வளவு கடினமோ அத்தகைய சவாலான ஒரு சூழ்நிலையை நாம் எதிர் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீண்டு வர நம் பெண்கள் அனைவரும் பெரும் திரளாக ஒருங்கிணைந்து ஒரு மிகப்பெரிய அறப்போராட்டத்தை முன்னெடுத்தே ஆகவேண்டும்.
முதல் மொழிப்போரில் தந்தை பெரியார் எனும் ஒரு மந்திரக் கோலுக்குக் கட்டுப்பட்டுத் துணிந்து, குழந்தைகளுடன் பெண்கள் பலர் சிறை நிரப்பும் போராட்டம் செய்ததைத் தோழர் நிவேதிதாவின் 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூல் மூலம் அறிந்து கொண்டேன்.
இன்றைய நவீன யுகத்தில் அது போன்றதொரு கடினமான போராட்டத்தில் எல்லாம் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தொலைதூரம் பயணம் செய்து, நாம் பெருந்திரளாய் ஒன்று கூடி சமூக அமைதிக்கு ஊறு விளைவிக்க வேண்டிய அவசியம் எதுவும் நமக்கு இல்லை. கொரோனா பேரிடரின் போது அவரவர் வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டு, விளக்கேற்றி மணி அடித்து, ‘கோ கொரோனா கோ’ என்று முழக்கமிட்டார்களே நினைவிருக்கிறதா?
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் இல்லாத கொரோனாவுக்கே தங்கள் வேண்டுதல் கேட்கும் என்ற நம்பி மக்களால் குரல் கொடுக்க முடியும் என்றால், இவை அனைத்தும் இருக்கும் நம் சமூகம் நம் குரலைச் செவிமடுக்காமலா போகும்?
//அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலகப் பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்- விக்கிப்பீடியா//
சர்வதேச மகளிர் தினத்தின் சுருக்கமான வரலாறு இதுதான்.
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பயன் பெறும் வகையில் இத்தகையதொரு பெரும் புரட்சி உதித்தால் மட்டுமே, இனி வரும் பெண் சந்ததிகள் நிம்மதியாகப் பொதுவெளியில் நடமாட முடியும். இன்றளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே இப்படி ஒரு புரட்சி சாத்தியம் என்றால், இன்றைய நவீன உலகில் எதுதான் சாத்தியம் இல்லை?
இனி, பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் என்றில்லை, சமூக வலைத்தளங்களில் பெண்களின் மாண்பைக் குலைக்கும் வகையில், பெண் உரிமைக் கோட்பாடுகளை சிதைக்கும் வகையில், ஓர் இடுகையோ, அல்லது சிறு பின்னூட்டமோ இடக்கூட மக்கள் விரோதத் தீய ஆதிக்க சக்திகளின் விரல்கள் நடுங்க வேண்டும். அதை சாத்தியப்படுத்தப் பேதங்களை மறந்து மகளிர் அனைவரும் ஒரு மனதாக ஒன்றிணைவோம்.
தோழர்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
படைப்பாளர்

கிருஷ்ணப்ரியா நாராயண்
தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர். புத்தகங்கள் வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டு. இவரது 10 நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. இவரின் ‘சூப்பர் கரடி பப்லுவும் சுட்டிப் பெண் அம்லுவும்’ சிறார் எழுத்து நூலை ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.