Netflixல் அடல்லசன்ஸ் (Adolescence) என்ற தொடர் இந்த மாதம் வெளியானது முதல், அது பற்றிய பல கருத்துகள் சமூக ஊடகங்களில் தென்பட்டன.

இங்கிலாந்தில் கத்தியால் குத்துப்பட்டு இறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக செய்திக் குறிப்பு கூறுகிறது. அடிப்படையில் ஒரு 13 வயது பையனுக்கு தன் பள்ளித் தோழியிடம் ஈர்ப்பு(?) ஏற்பட்டு, நிராகரிக்கப்பட்டதால் வந்த கோபத்தில், மாணவன் ஒருவன் அவளை கத்தியால் குத்துவதாக கதை அமைகிறது. இதன் பின்னே ப்ளைமௌத்தில் நடந்த உண்மைச் சம்பவங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

அவனது பெற்றோர்களின் அதிர்ச்சியை அழகாக படமாக்கியுள்ளாகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை பற்றி எந்த காட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் இதே சென்னையில் நடந்த சம்பவம் ஆகட்டும், மற்ற சம்பவங்கள் ஆகட்டும். எல்லாவற்றிலும் அந்தப் பெண்ணையே அலசி ஆராய்கின்றன நம் ஊடகங்கள். அவள் இரவில் வெளியே சென்றது தவறு; அவளும் தன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருக்க வேண்டும்; ஒரு ஆணின் கோபத்தைத் தூண்டும் வண்ணம் இணையத்தில் கமென்ட் செய்தது தவறு; அவள்தான் தனது புகைப்படத்தை வேறு பகிர்ந்து இருக்கிறாள்; அவள் தண்டனைக்குரியவள் தான் என்று ‘அவளைப்’ பற்றியே நாம் அதிகம் பேசி இருப்போம். கொலைக் குற்றம் செய்து ஆனால் குற்ற உணர்வின்றி பேசும் சிறுவனின் மனநிலையை எளிதாகக் கடந்திருப்போம்.

Male rage

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் தந்தையின் கோபம் (மேல் ரேஜ்).
பல குடும்பங்களில் இதுப் பற்றி பேசப்படுவதில்லை. ஒரு ஆணின் உரிமையாகவே இதைக்கடந்து செல்கிறோம். இதைப்பற்றி ஆண்களே தங்களை சுய பரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். அது குடும்ப நலனுக்கும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது.
இதுவும் ஒரு வகையான detox என்று நினைத்து கீழே உள்ள கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்கவும்.
(Anger management questionnaire for adults)
1) நான் அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபடுவேன்
(ஆம் /இல்லை /எப்போதாவது)
2) யாராவது என்னை கிண்டல் கேலி செய்தால் எனக்கு அதிகமாக கோபம் வரும் (ஆம் /இல்லை /எப்போதாவது)
3) கோபம் வரும் சமயத்தில் பொறுமையாக இருப்பேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)

4) நான் எப்பொழுதும் ஒரே மாதிரி மனநிலையில் இருப்பேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
5) குடும்பத்தினருடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
6) நான் கோபப்பட்டு பேசுவதற்கு முன் சற்று யோசிப்பேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
7) ஒரு பொருளை வாங்கி அது வேலை செய்யவில்லை என்றால் எனக்கு எரிச்சலும் கோபமும் வரும் (ஆம் /இல்லை /எப்போதாவது)
8) கோபம் வந்தால் பொருள்களை உடைத்து இருக்கிறேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
9) யாரையும் காய ப்படுத்தாமலும் சண்டையிடாமலும் எனது கோபத்தை என்னால் வெளிப்படுத்த முடியும் (ஆம் /இல்லை /எப்போதாவது)

10) யாராவது என்னை தொல்லை செய்தால், நான் அவர்களிடம் அதை நேரடியாக சொல்லி விடுவேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
11) என்னை மதிக்காவிட்டால் (தவறு தலாக நிகழ்ந்தால்)அந்த சந்தர்ப்பங்களில் எனக்கு அதிக கோபம் வருகிறது(ஆம் /இல்லை /எப்போதாவது)
12) எனது கோபத்தால் பிறரைக் காயப்படுத்துவதோ தொல்லை தருவதோ நடக்காமல் அடக்க முடியும் .(ஆம் /இல்லை /எப்போதாவது)
13) கோபத்தால் யாருக்கும் தீமை செய்ய மாட்டேன் எனது உள்ளுணர்வு அப்படி செய்ய விடாது (ஆம் /இல்லை /எப்போதாவது)
14) எனக்கு சிலரை பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டதுண்டு அதனால் எனக்கு அதிக கோபம் வரும் (ஆம் /இல்லை /எப்போதாவது)
15) எனக்கு கோபம் வந்தால் சீக்கிரம் அமைதி நிலைக்கு திரும்ப முடியும் (ஆம் /இல்லை /எப்போதாவது)
16) எது என் கோபத்தை தூண்டும் என்று புரிந்து அது ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும் (ஆம் /இல்லை /எப்போதாவது)
17) நான் ஒப்புக் கொள்வதை விட எனக்கு பல சமயங்களில் அதிக கோபம் வருவதுண்டு (ஆம் /இல்லை /எப்போதாவது)
18) என்னை தூண்டினால் நான் யாரையாவது அடிக்கும் அளவிற்கு கோபப்படுவேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)
19) என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று என் நண்பர்கள் கூறியுள்ளார்கள் (ஆம் /இல்லை /எப்போதாவது)
20) யாராவது முழு விவரம் தெரியாமல் வாக்குவாதம் செய்யும்போது எனக்கு எரிச்சல் ஏற்பட்டாலும் எதுவும் செய்யாமல் விட்டு விடுவேன் (ஆம் /இல்லை /எப்போதாவது)

இது பெரியவர்களுக்கான கோபக்கட்டுப்பாட்டை அறிய உதவும் கேள்வித் தொகுப்பு. இதற்கு பல சமயங்களில், கிடையவே கிடையாது என்று பதில் அளித்து, அதற்கு ஒவ்வொரு பதிலுக்கும் பூஜ்ஜியம் ஒன்று இரண்டு என்று ஸ்கோர் செய்து, ஒருவரின் கோபத்தை வெளிப்படுத்தும் தன்மை, சுயக் கட்டுப்பாடு ஆகியவற்றை சுயபரிசோதனை செய்துக் கொள்ளவும் முடியும். இதன்மூலம் மனநல நிபுணர் சோதித்து ஆலோசனை அளிப்பார்.

ஆண்கள் தங்கள் உண்மையான உணர்வுகளோடு தொடர்பில் இருப்பதில்லை. இந்தச் சமூகம் அவர்களுக்கு சில சலுகைகள் தந்துள்ளது. ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டுமே அறிவுறுத்துகிறது. தனது கோபத்தை ஆண்கள் வெளிப்படுத்தினால், பிறர் தான் அதற்கு ஏற்றவாறு அமைதி காக்க வேண்டும். இதுவே ஒவ்வொரு குடும்பத்திலும் எழுதப்படாத விதியாக உள்ளது. அந்தக் கோபத்தின் பின்னால் ஒளிந்திருப்பது இயலாமையாக இருக்கலாம்.

தனது பலவீனங்களை சரியான முறையில் பகிர்ந்துக் கொள்ள முடியாததால், கோபம் அவற்றை மறைப்பதற்காக மேலெழும் உணர்வாக இருக்கலாம்.
இதுவே பின்னாளில் குடும்ப வன்முறைக்கு அடித்தளமாக அமைகிறது. மௌனம் காப்பது இந்த விஷயத்தில் தவறு. பின்னாளில் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்பதை வீட்டில் உள்ள பெண்கள் உணர வேண்டும்.

கோபக்கார கணவர், சகித்துக் கொள்ளும் மனைவி, ஆதரவாக ஆறுதல் சொல்லித் தேற்றும் சுற்றத்தார் இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் வன்முறைக்கு உதவி செய்கிறார்கள் .

இந்த கோபத்தால் மனிதத்தன்மை இழந்து பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்த கோபத்தால் வளரும் பிள்ளைகளும் இது நியாயமானது என்று நினைத்து குற்ற உணர்வின்றி பெண்களிடம் அத்துமீறுகின்றனர்.

இந்தத் தொடரில் வரும் தந்தை, தனது மகன் சிறுவயதில் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும் தான் அவன் வளர வளர ‘ஆண்களுக்குத் தகுந்த விளையாட்டாக’ கால்பந்து மற்றும் குத்துச்சண்டையில் பயிற்சி கொடுக்க முயன்று தோற்றதாக கவலைப்படுவார். “நீங்கள் ஒரு நல்ல தந்தை” என்று அந்த தாயும் அவரை ஆறுதல் படுத்துவார். கூடவே இருந்தும், என்னால் எதுவும் உதவ முடியவில்லை என்று அந்தத் தாயும் தன்னை நொந்துக் கொள்வார். அந்தத் தந்தை தனது பிள்ளைப் பருவத்தில் தந்தை தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் தான் அவ்வாறு செய்ததில்லை ஒரு நல்ல தந்தையாகவே இருந்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றி சொல்கிறார்.
அதாவது குழந்தை வளர்ப்பில் அடிப்பது மட்டுமே தீங்கு விளைவிக்காது.

ஒரு தந்தையின் கட்டுப்பாடற்ற கோபம், அதை பொறுத்துக் கொள்ளும் ஒரு தாய் என ஒரு தவறான முன்னுதாரணத்தை அந்த மகனுக்குத் தந்துள்ளது. ‘பெண்களுக்கு எதிரான கோபமும் வன்முறையும் தவறல்ல’ என்று வீட்டிலும் இணைய வழியாக நடக்கும் போதனைகளும் ஒரு பிஞ்சு மனதில் தவறான எண்ணங்களை விதைத்து விட்டன. ஒட்டுமொத்த சமுதாயத்தின் தோல்வி இது என்று கூற வேண்டும்.

Bullying
பள்ளியில் கல்லூரியில் நடக்கும் புல்லியிங் எனும் ஒடுக்குமுறைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
இந்த ஒடுக்குமுறை இரு பாலருக்கும் நடக்கிறது. இதை மூன்று விதமாக பிரிக்கலாம்.
1) வார்த்தை/வசைச் சொற்கள்
2) பொது இடங்களில் அவமானப் படுத்துவது, பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டுவது, பொருள்களைச் சேதப்படுத்துவது, எச்சில் துப்புவது
3) அடிப்பது, உடல்ரீதியான துன்புறுத்தல்

School crime report இன் படி 12-18 வயதுடைய மாணவர்களில் 19 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாவதாக சொல்கிறது.
இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள், அவமானத்தின் காரணமாக யாரிடமும் இதைப்பற்றி பகிர்ந்து கொள்வதில்லை. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கீழ்க்கண்ட வகையில் மன அழுத்தத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.

பிள்ளைகளின் நடத்தையில் சில மாற்றங்களை காணும் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பொறுமையாகப் பேசி இவற்றை தெரிந்து கொள்ளலாம். பின்னர் மனநல ஆலோசகரிடம் தெளிவு பெறலாம்.

கடந்த இரண்டு வாரங்களில்
1)எனக்கு தூங்குவதற்கு சிரமம் உள்ளது
2)சரியான நேரத்தில் பசி எடுப்பதில்லை/ சாப்பிடப் பிடிக்கவில்லை

3)அதிகமாக சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது
4)என்னைப் பற்றி எதிர்மறை எண்ணங்கள் அதிகம் தோன்றுகிறது
5) வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருப்பது
6) தன்னையே காயப்படுத்திக் கொள்வது/ இறப்பதை பற்றி யோசிப்பது
7) முன்பு ஆசையாக ஈடுபட்ட விஷயங்களில் கூட விருப்பமில்லை
8) சோர்வு எதையும் செய்ய பிடிக்கவில்லை
9) நம்பிக்கை இன்மை
10) மெதுவாக பேசுவது /மெதுவாக நடப்பது
11) படிப்பிலும் வேலையிலோ கவனம் செலுத்த முடியவில்லை
12) அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறது

மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களில் நான்கு அல்லது ஐந்து இருந்தாலே, இது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தை குறிக்கிறது. நாம் நினைப்பது போல இது எங்கேயோ நடப்பதில்லை; நமக்குத் தெரிந்த பிள்ளைகளிடம் கூட இதைக் காணலாம். பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த புரிதல் வேண்டும். இப்படி அமைதியாக இருக்கும் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசி ஏதேனும் பிரச்சனை உள்ளதா, உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கலாம். பெற்றோர்களும் கோபப்படாமல் என்ன நடக்கிறது என்று காரணமே புரியாவிட்டாலும், பிள்ளைகளின் கைபற்றி முதுகை தடவி, ஆறுதலாக இருக்க முயல வேண்டும்.

பிள்ளைகள் தான் நம்பும் ஒரு பெற்றோரிடமோ, பெரியவரிடமோ தனது பிரச்னைகளை பகிர்ந்து கொள்ளும்படி உறவு இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் அதைப் பகிர்ந்து கொள்ள தைரியம் இருக்க வேண்டும். பலருக்கு அந்த தைரியமும் வாய்ப்பும் கிடைக்காமல் போகலாம்… அது அவர்களை மன அழுத்தத்திற்கு கொண்டு செல்லக் கூடும். வராமல் தடுப்பதே நல்லது. மன வலிமை என்பது உணர்வுகளை கட்டுப்படுத்த முயல்வது. பதின் பருவத்தினருக்கு இது சவாலான விஷயம் என்பதால் பெற்றோர் இதனை அறிந்திருக்க வேண்டும் .

ஈர்ப்பு – நட்பு, காதல் என்ற வழித்தடத்தில் முதல் படி. இணக்கம் ஏற்பட்டால் உறவு நீடிக்கும். சில, நீண்ட கால உறவாகவோ வாழ்நாள் வாழ்நாள் நட்பாகவோ இது மாறலாம். பொறுமையாக அன்பை வெளிப்படுத்துவது சிக்கலான ஒன்றாக இன்றைய ஆண் பிள்ளைகளுக்கு இருக்கிறது. புற அழகு, அந்தஸ்து, பயன்படுத்தும் பொருட்கள், கெத்து காட்டுவது, இணையத்தில் பதிவிடும் படங்கள் இப்படியாக எதிர்ப்பாலினரை வசீகரிக்க முயன்று விரக்தி அடைகின்றனர். தனக்குக் கிட்டாத உறவில் அத்துமீறல்களும் பழிவாங்கும் உணர்ச்சியும் எழலாம்.

விரக்தி+தன்னுடைய உணர்வுகளை சரியாக புரியாமல் தடுமாறுவது+தனிமைப்படுத்தப்படுவது, இதனால் தன்னையோ பிறரையோ காயப்படுத்துவது ஆண்களுக்கு சகஜமாகி விடுகிறது. பெரும்பாலும் பெண்கள் நிராகரிக்கப்பட்டால், தோல்வியால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண் பிள்ளைகள் நிராகரிக்கப்பட்டால், கட்டுப்பாட்டின் காரணமாக கோபம் அவர்களை பிறருக்கு தீங்கு விளைவிக்கத் தூண்டுகிறது.

தனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது, அந்த உணர்வில் இருந்து எப்படி வெளியேறுவது, அதற்கு எப்படி உதவி பெறுவது என்று யோசிக்க பிள்ளைகளை பழக்க வேண்டும். யாரையும் அடிப்பதற்கு முன் வார்த்தைகள் மூலம் கோபத்தை வெளிப்படுத்துவது, அதற்கு வடிகால் தேடுவது நல்லது. இந்தப் புரிதல் நாளடைவில் கட்டுப்பாடாக மாறும்.

டேவ் வில்லிஸ் என்பவர் நான்கு ஆண் பிள்ளைகளின் தந்தையாக உறவுச் சிக்கல்களில் மன ஆலோசகராக Raising boys who respect girls என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன்.

Raising boys to be good men, ஆரோன் என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் வாசிப்புக்கு உகந்தது. கட்டுப்பாடற்ற ஆணாதிக்க சிந்தனைகளில் இருந்து நம் ஆண் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமையும் ஆகும் என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன். ஆண் இல்லாமல் பெண் இல்லை, பெண் இல்லாமல் ஆண் இல்லை. இருவரும் இணைந்து புரிதலுடன் பயணிப்பதே வாழ்தலுக்கான வழி.

படைப்பாளர்

மரு. தென்றல்

சென்னையில் பணிபுரியும் கதிரியக்க மருத்துவர் . புலனங்களில் புதுக்கவிதை எழுத ஆரம்பித்து, 2023ல் வளரி எழுத்துக்கூடத்தின் மூலம் இவரது ‘பெண் எனும் போன்சாய்’ கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.