இரவு மணி ஒன்றரை. வீடு முழுவதும் அமைதியாக இருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஹாலில் மட்டும் மடிக்கணினியின் வெளிச்சம் இருளை வென்று எரிந்துகொண்டிருந்தது.

அந்த வெளிச்சத்தின் முன் அமர்ந்திருந்தாள் மீரா. மறுநாள் அலுவலகத்தில் வழங்க வேண்டிய முக்கியமான பிரசன்டேஷனை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக்கொண்டிருந்தாள்.

“இன்னும் ஒரே ஒரு ஸ்லைடு மட்டும்.. அதையும் முடிச்சுட்டா போதும்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அப்போது அறையிலிருந்து அவளது அம்மா  வெளியே வந்தார்.

“மீரா… இன்னும் தூங்கலையா?”

கணினியிலிருந்து பார்வையை எடுக்காமலேயே, “இந்த பிரசன்டேஷன் மட்டும் முடிச்சுட்டுth தூங்குறேன்மா…” என்றாள்.

“சாப்பிட்டியா?”

ஒரு நொடி மட்டும் தலையை உயர்த்திப் பார்த்தாள்.

“அப்புறம் சாப்பிடுறேன்.”

அம்மா வேறு எதுவும் பேசவில்லை.

அந்த ‘அப்புறம்’ பல நாட்களாக வரவே இல்லையென்பது அவருக்குத் தெரியும். அவர் அமைதியாகச் சமையலறைக்குச் சென்று, ஒரு டம்ளர் சூடான பாலை மேசையின் ஓரத்தில் வைத்துவிட்டு மீண்டும் தனது அறைக்குச் சென்றார்.

மீரா அதைக் கவனிக்கவே இல்லை. கடிகாரம் இரண்டு மணியைத் தாண்டிய பிறகுதான் மடிக்கணினியை மூடினாள். கண்களை மூடியவுடன் தூக்கம் வந்துவிடும் என்று நினைத்தாள். ஆனால் சோபாவில் சாய்ந்தபடியே, அங்கேயே எப்போது தூங்கினாள் என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

மறுநாள் காலை… அலாரம் பலமுறை ஒலித்தது. ஆனால், மீரா எழுந்திருக்கவில்லை. அது அவளுக்குப் புதிது. பொதுவாக அலாரம் அடிக்கும் முன்பே விழித்துவிடுவாள். தூக்கம் குறைவாக இருந்தாலும் முகம் கழுவிவிட்டு வேலையைத் தொடங்கிவிடுவாள். ஆனால் இன்று. உடல் முழுவதும் யாரோ கற்களைக் கட்டிவைத்ததுபோல கனமாக இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்காரவே சில நொடிகள் ஆனது.

“இன்னைக்கு மட்டும் விடுப்பு எடுத்துடலாமா…” என்று உடல் கெஞ்சியது. ஆனால் மனம் உடனே எதிர்த்தது.

“சும்மா களைப்புதான்… இதுக்கெல்லாம் ஓய்வு எடுத்தா எப்படி?”

மெதுவாக எழுந்து கண்ணாடி முன் நின்றாள். கண்களுக்குக் கீழே ஆழமான கருவளையம். முகத்தில் வழக்கமான சுறுசுறுப்பு இல்லை.

காபி கோப்பையை எடுத்தபோதுகூட கை லேசாக நடுங்கியது. படிக்கட்டில் இறங்கும்போதும் வழக்கத்தைவிட மூச்சுச் சற்று வாங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக… சரியான தூக்கம் இல்லை. நேரத்திற்கு உணவு இல்லை. வேலை… வீட்டு பொறுப்புகள்… அம்மாவின் உடல்நிலை… வங்கிக் கடன்… ஒன்றின் பின் ஒன்றாக வந்த பொறுப்புகளை எல்லாம் தனியாகச் சுமந்துகொண்டே ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் அவளுக்கு பெருமை, ’எதுவானாலும் நான் வலிமையானவள்’. அந்த எண்ணமே… அவளை ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை.

அன்று அலுவலகத்தில்  காலை முதலே சிறுசிறு தவறுகள். ஒரு மின்னஞ்சலுடன் தவறான கோப்பு இணைத்துவிட்டாள். ஒரு கூட்டத்திற்கு ஐந்து நிமிடம் தாமதமாகத்தான் போனாள். கண்முன்னே இருந்த கோப்பைகூட மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டிருந்தாள்.

“என்னாச்சு மீரா? நீங்க இப்படி இருக்க மாட்டீங்களே…” என்று சக ஊழியர் கேட்டார்.

மீரா உடனே ஒரு புன்னகையை வரவழைத்தாள்.

“ஒண்ணுமில்லை… நேத்து கொஞ்சம் தூக்கம் குறைஞ்சிடுச்சு.” என்று சமாளித்தாள். மதியம் அனைவரும் உணவு சாப்பிடச் சென்றனர். மீராவின் மதிய உணவு மட்டும் திறக்கப்படாமலே மேசையில் இருந்தது. “வா… சாப்பிடலாம்.”

“நீங்க போங்க… இந்த ரிப்போர்ட்டை முடிச்சுட்டு வர்றேன்.”

அவர்கள் சென்றார்கள், வேலை முடிந்தது. ஆனால்…  உணவுப் பெட்டி அப்படியே மூடியபடியே இருந்தது.

மாலை, அன்று வழங்கிய பிரசன்டேஷனில் ஒரு சிறிய தவறு. வேறு நாளாக இருந்திருந்தால்… “பரவாயில்லை…” என்று சிரித்தபடியே திருத்தியிருப்பாள். ஆனால் இன்று அந்தச் சிறிய தவறே அவளுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தது.

யாருடைய முகத்தையும் பார்க்காமல் வேகமாக வாஷ் ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டாள். கண்ணாடி முன் நின்றாள். அவளை அவளே பார்த்துக்கொண்டாள். “எனக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சோர்வா இருக்கேன்? நான் இவ்வளவு பலவீனமா ஆகிட்டேனா?”

கண்களில் கண்ணீர் தேங்கியது. அதைத் துடைத்துவிட்டு ஆழமாக மூச்சை இழுத்தாள்.

“இல்ல.. இல்ல.. இது ஆபீஸ்… அழக் கூடாது…” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிக்கொண்டு மீண்டும் தனது இருக்கைக்குத் திரும்பினாள். சில மணி நேரத்தில். மற்றொரு சிறிய தவறை ஜி.எம். ஆனந்த் அமைதியாகச் சுட்டிக்காட்டினார்.

“மீரா… இந்த பைலை இன்னொரு தடவை சரிபார்த்துடுங்க.”

அவ்வளவுதான். அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் ஒரே நொடியில் வெடித்தன. கையில் இருந்த கோப்புகளைப் பிடிக்கவே முடியவில்லை.

கைகள் லேசாக நடுங்கின. தலையைக் குனிந்து கண்ணீரை மறைக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை.

“சார்…”

குரல் உடைந்தது. “நான்  ராஜினாமா பண்ணிடுறேன்…” அலுவலகம் முழுவதும் அமைதியாகிவிட்டது.

அருகில் இருந்தவர்கள் எல்லாரும் அவளைப் பார்த்தனர். ஆனந்த் மட்டும் எந்தப் பதற்றமும் காட்டவில்லை.

அமைதியாக எழுந்து, “என் கேபினுக்கு வா.” என்று கூறி விட்டு நடந்தார்.

மீரா மெதுவாக அவரைப் பின்தொடர்ந்தாள். கேபினுக்குள் சென்றதும் ஆனந்த் முதலில் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினார்.

“முதல்ல கொஞ்சம் தண்ணி குடி.”

மீரா ஒன்றும் பேசாமல் வாங்கிக் குடித்தாள்.

அவளது கைகள் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தன. சில நொடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர். பிறகு ஆனந்த் மென்மையாக கேட்டார். “இன்று லஞ்ச் சாப்பிட்டியா?”

மீரா பதில் சொல்லவில்லை. அவளது அமைதியே பதிலாக இருந்தது.

“காலை?”

“அவசரமா கிளம்பிட்டேன் சார்…”

“நேத்து நல்லா தூங்கினியா?”

இந்த முறை அவள் மெதுவாகத் தலையைக் குனிந்தாள்.

ஆனந்த் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

“மீரா… நீ நல்லா இருக்கியா?” ஒரு நொடி யோசித்தாள். பிறகு வழக்கம்போல அதே பதில்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் சார்…”

ஆனந்த் புன்னகைத்தார்.

அந்தப் புன்னகையில் இரக்கமும், அனுபவமும் இருந்தது.

“இந்த ‘நல்லாத்தான் இருக்கேன்ன்னு சொல்றவங்கதான்… பல நேரம் அதிகமா கஷ்டப்படுறவங்க.”

மீரா ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள்.

அவர் தொடர்ந்து கேட்டார்.

“உனக்கு என்ன பிரச்னைன்னு நீ நினைக்கிற?”

மீரா மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

“எனக்கே புரியல சார்… முன்னாடி எவ்வளவு பெரிய பிரச்னையையும் சமாளிச்சிருக்கேன். இப்போ… ஒரு சின்ன தவறு நடந்தாலே அழுகை வருது. எனக்கு தன்னம்பிக்கையே போயிடுச்சுன்னு தோணுது.”

ஆனந்த் சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்தார்.

“நேத்து எத்தனை மணிக்குத் தூங்கின?”

“ரெண்டு மணி இருக்கும் சார்.”

“அதுக்கு முந்தின நாள்?”

“ஒண்ணரை…”

“அதுக்கு முந்தின நாள்?”

மீரா அமைதியாக இருந்தாள்.

“கடைசியாக… நேரத்துக்கு எப்போ சாப்பிட்ட?”

அவளுக்கு ஞாபகம் வரவில்லை.

“கடைசியாக… அரை மணி நேரமாவது எந்த வேலையும் இல்லாமல் அமைதியா உட்கார்ந்தது எப்போ?”

மீண்டும் அமைதி.

“கடைசியாக… மனசு விட்டுச் சிரிச்சது எப்போ?”

இந்த முறை மீராவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனந்த் தனது நாற்காலியில் சாய்ந்து மெதுவாகச் சொன்னார்.

“மீரா…ஒரு கேள்வி கேக்கட்டுமா?”

“சொல்லுங்க சார்.”

“ஒரு மொபைலை மூணு நாள் சார்ஜ் போடாம தொடர்ந்து பயன்படுத்தினா என்ன ஆகும்?”

“பேட்டரி காலியாகிடும்.”

“அப்போ… அந்த மொபைல் பலவீனமானதா?”

“இல்ல… அதுக்கு சார்ஜ் இல்ல.”

ஆனந்த் மெதுவாகத் தலையசைத்தார்.

“அதேதான் உனக்கும். நீ பலவீனமானவ இல்லை. தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்க… ஆனா மீண்டும் சார்ஜ் பண்ணிக்க நேரம் கொடுக்கல. காலியான பேட்டரியை யாரும் திட்ட மாட்டாங்க… சார்ஜ்தான் போடுவாங்க.”

அந்த ஒரு வாக்கியம்… மீராவின் மனதில் ஆழமாகப் பதிந்தது. மீரா அமைதியாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்களில் இருந்த குழப்பம் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது.

ஆனந்த் தொடர்ந்து பேசினார்: “உடம்பு சோர்ந்தா… மனசும் சோர்ந்து போகும்.”

“பல நாட்களா நல்லா தூங்கலன்னா… சின்ன விஷயத்துக்குக்கூடக் கோபம் வரும்.”

“நேரத்துக்குச் சாப்பிடலன்னா கவனம் குறையும்.”

“ஓய்வே இல்லாம தொடர்ந்து ஓடிட்டே இருந்தா… ஒரு கட்டத்துல உடம்பு சிக்னல் கொடுக்க ஆரம்பிக்கும்.”

அவர் சிறிது நேரம் நின்றார்.

“அந்த சிக்னல் எப்போதும் காய்ச்சலாகவோ, வலியாகவோ மட்டும் வராது. சில நேரம்… அழுகையாக வரும், எரிச்சலாக வரும், பயமாக வரும், தன்னம்பிக்கை போயிட்ட மாதிரி தோணும். வாழ்க்கையே சமாளிக்க முடியாத மாதிரிகூடத் தோணும். ஆனா… அது எல்லாம் மனசோட பிரச்னைன்னு அர்த்தம் இல்ல. சில நேரம் அது உடம்போட கூக்குரல்.”

அந்த வார்த்தைகள் மீராவின் உள்ளத்தை அப்படியே தொட்டன.

இத்தனை நாட்களாக… அவள் தன்னைத்தான் குறை சொல்லிக்கொண்டிருந்தாள்.

“நான் வலிமையானவ இல்ல…”

“என்னால சமாளிக்க முடியல…”

“எனக்கு ஏதோ ஆகிடுச்சு…”

ஆனால்… ஒரு நாள்கூட அவள் தன்னிடம் ஒரு கேள்வி கேட்டதே இல்லை.

*”என் மனசை மட்டும் கேட்டுக்கிட்டே இருந்தேன்… என் உடம்பு என்ன சொல்லுது என்று நான் எப்போதாவது கேட்டேனா?”*

அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் வந்தது. இந்த முறை… அது தோல்வியின் கண்ணீர் இல்லை. புரிதலின் கண்ணீர்.

“சார்… இப்போ நான் என்ன செய்யணும்?”

ஆனந்த் புன்னகையோடு, “பெரிய மாற்றம் எதுவும் தேவையில்லை. இந்த வாரம் மூணு விஷயம் மட்டும் செய். நேரத்துக்குச் சாப்பிடு. குறைந்தது ஏழு மணி நேரமாவது தூங்கு. வேலை முடிஞ்சதும் குற்ற உணர்ச்சி இல்லாம வீட்டுக்குப் போ. மீதியை உன் உடம்பே பார்த்துக்கும்.”

அன்று இரவு வீட்டிற்கு வந்ததும் பல நாட்களாக மேசையில் அப்படியே குளிர்ந்துபோகும் பாலை அவள் கவனித்தாள். அம்மா சமையலறையிலிருந்து வெளியே வந்தார்.

“இன்னைக்காவது குடிக்கறீயா?”

மீரா குழந்தையைப்போலச் சிரித்தாள். “குடிக்கறேன் மா…”

அந்த ஒரு டம்ளர் பால் அன்று ஒரு பானம் மட்டுமல்ல. தன்னையே மீண்டும் கவனிக்கத் தொடங்கிய முதல் முடிவு. அன்று இரவு பத்து மணிக்கே திறன்பேசியை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கம் உடனே வரவில்லை. ஆனால் பல நாட்களுக்குப் பிறகு வேலையைப் பற்றி யோசிக்கவும் இல்லை. தன்னையே குறை சொல்லிக்கொள்ளவும் இல்லை. அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டாள்.

மூன்றாவது நாள் காலை எழுந்தபோது உடல் வழக்கத்தைவிட லேசாக இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு பசி எடுத்தது. அம்மா வைத்திருந்த காலை உணவை ரசித்துச் சாப்பிட்டாள்.

அம்மா ஒன்றும் கேட்கவில்லை. அவள் சாப்பிடுவதைப் பார்த்து நிம்மதியாகப் புன்னகைத்தார்.

ஐந்தாவது நாள். அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவர் நகைச்சுவையைச் சொன்னார். பல நாட்களுக்குப் பிறகு மீரா மனம் விட்டுச் சிரித்தாள். “இதுதான் நம்ம மீரா…” என்று அவர் சொன்னபோது அவளுக்கே அவள் திரும்பக் கிடைத்ததுபோல் உணர்ந்தாள்.

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு முக்கியமான பிரசன்டேஷன். நடுவில் ஒரு சிறிய தவறு. இந்த முறை அவள் பதற்றப்படவில்லை. அமைதியாகத் திருத்திக்கொண்டு தொடர்ந்து பேசினாள்.

மீட்டிங் முடிந்ததும் ஆனந்த் வெளியே வந்தார்.

“இப்போ எப்படி இருக்க?”

மீரா சிரித்தாள். “பிரச்னைகள் இன்னும் இருக்கு சார். கடனும் இருக்கு. வேலையும் இருக்கு. அம்மாவோட சிகிச்சையும் இருக்கு. ஆனா… இப்போ அதைச் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கு.”

“ஏன்னா என் உடம்பும் என் மனசும் இப்போ ஒரே அணியில வேலை செய்ற மாதிரி இருக்கு.”

ஆனந்த் திருப்தியாகத் தலையசைத்தார்.

“அதுதான் வாழ்க்கை.”

“எல்லா நேரத்திலும் மனசுக்கு ஊக்கம்தான் தேவைன்னு இல்லை. சில நேரம் உடம்புக்கு ஓய்வு கொடுத்தாலே மனம் தானாகவே மீண்டும் நம்பிக்கையைக் கற்றுக்கொள்ளும்.”

அன்று இரவு மீரா தனது டையரியைத் திறந்தாள். சில நொடிகள் யோசித்தாள். பிறகு ஒரு வரி எழுதினாள்.

’ஓய்வு என்பது சோம்பேறித்தனம் அல்ல…
நாளை மீண்டும் முழு மனதுடன் வாழ்வதற்கான முதலீடு.’

அந்த வரியை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். டையரியை மூடினாள். விளக்கை அணைத்தாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல், எந்தப் பயமும் இல்லாமல், அமைதியாகத் தூங்கினாள்.

பூக்கள் பூக்கும் தருணம்…
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே…

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.