முதல் நாள் இரவு உணவிற்காக புறக்கோட்டை (Pettah Market) சந்தைக்குச் சென்றோம். இந்தக் கடைவீதி, எங்கள் அறை இருந்த பகுதியின் கான் (Khan) மணிக்கூண்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. ஆனால் உணவகங்கள் அமைந்திருந்த பகுதி ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
அங்குள்ள முக்கிய உணவுகள் கொத்து பரோட்டா, கொத்து இடியாப்பம், பிரியாணி, பொரித்த கோழி போன்றவையே. ஒரு வேளைக்கான உணவு சுமார் இலங்கை ரூபாய் 1,600. இலங்கையில் பரிமாறப்படும் உணவின் அளவு மிகவும் கூடுதல். ஒரு கொத்து வாங்கினாலே இருவரும் பகிர்ந்து சாப்பிடமுடிந்தது.
ஆனால் அந்த உணவு எங்கள் சுவைக்கு மிகவும் பொருந்தவில்லை. மசாலா கூடுதல்; எலும்புத் துண்டுகளும் கலந்திருக்கிறது. பிரியாணியில் குழம்பை ஊற்றியது போலிருந்தது. பிரியாணியில் குழம்பு ஊற்றிச் சாப்பிடும் பழக்கம் எங்களுக்கு இல்லாததால் பிடிக்கவில்லை. அதன் பிறகு மீதமிருந்த நாள்களில் சைவக் கொத்தையே தேர்ந்தெடுத்தோம். உணவுப் பிரியராக இல்லாவிட்டால், புறக்கோட்டை உணவகங்கள் பெரிதாக உள்ளத்தில் இடம்பிடிக்காது என்பது எனது தனிப்பட்ட அனுபவம்.
உணவிற்குப்பிறகு ஆட்டோ கிடைக்காததால் நடந்தே அறைக்குத் திரும்பினோம். அப்போதுதான் இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஜாமி-உல்-அல்ஃபர் (Jami Ul-Alfar Mosque) பள்ளிவாசலை முதன்முறையாகக் கண்டோம்.
சிவப்பு-வெள்ளை வண்ணக் கட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் இது ‘சிவப்புப் பள்ளிவாசல்’ (Red Mosque) என்றும் அழைக்கப்படுகிறது. 1908ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1909ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், இந்தோ- சாரசனிக் (Indo – Saracenic) கட்டடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதன் கோபுரங்கள் வழக்கமான வெங்காய வடிவில் இல்லாமல், மாதுளம்பழத்தின் வடிவத்தை ஒத்திருப்பதே இதன் தனிச்சிறப்பு.
அந்த அழகு எங்களை அவ்வளவு ஈர்த்ததால், மறுநாள் விடியற்காலையிலேயே மீண்டும் அங்கே சென்றோம். பள்ளிவாசல் சாலையோரத்தில் இருப்பதால், பக்கவாட்டிலும் நுழைவாயில் உள்ளது. அதற்கு எதிரிலேயே ஸ்ரீ கதிர் வேலாயுத சவாமி கோவில் அமைந்துள்ளது. இலங்கையில் பல இடங்களின் பெயர்களுக்கு முன்னால் ‘ஸ்ரீ’ என்கிற அடைமொழி பயன்படுத்தப்படுவதைக் காணமுடிகிறது.

காலை சென்றபோது, பள்ளிவாசல் காலை 10.30 மணிக்குத்தான் திறக்கும் என்று தெரிவித்தனர். அதன் முன்பாக ஏராளமானோர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக மணமக்கள் புகைப்படப் பதிவு (Photoshoot) நடைபெற்று கொண்டிருந்தது.
நெற்றி நிறையக் குங்குமமும் பொட்டுமாக இந்துப் பெண்கள், அந்த இஸ்லாமியக் கட்டடத்தின்முன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த காட்சி, ‘அழகின் முன் சமய எல்லைகள் மங்கிவிடுகின்றன’ என்கிற எண்ணத்தை எனக்குள் எழுப்பியது.


மற்ற இடங்களைச் சுற்றிவிட்டு மீண்டும் வந்தபோதும் பள்ளிவாசல் பூட்டப்பட்டிருந்தது. பின்னர்தான் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுவதை அறிந்தோம். பொதுவாக காலை 10.30–12.00, பிற்பகல் 1.00–3.00, மாலை 4.15–6.00 ஆகிய நேரங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கிறார்கள். அந்த நேரங்களில் வழிகாட்டிகளும் உடன் வந்து பள்ளிவாசலைச் சுற்றிக்காட்டுகிறார்கள்.
எங்களுக்குப் பணம் மாற்ற வேண்டியிருந்தது; போனில் சிறு வேலை இருந்தது. அதனால் அது குறித்து ஒருவரிடம் கேட்டோம். அவர் ஆட்டோ ஓட்டுநரை அறிமுகப்படுத்தினார். அவர், இந்திய ரூபாய் ஆயிரம் தந்தால், அங்கும் அழைத்துச்சென்று, மீதமிருக்கும் நேரத்தில் சில இடங்களையும் சுற்றிக் காட்டிவிட்டு மீண்டும் பள்ளிவாசலுக்கு அழைத்து வருவதாகச் சொன்னார். நாங்கள் சரி என ஒப்புக்கொண்டு சென்றோம். இந்திய ரூபாய் கொடுத்து மாற்றினோம். இங்குக் கிடைத்ததைவிட தலைமன்னாரில் கூடுதல் பணம் கிடைத்தது; அதுபோன்று போனும் இதைவிடக் கண்டியில் குறைந்த கட்டணமாக இருந்தது. அதனால் அந்த இடத்தை நான் பரிந்துரைக்க விரும்பவில்லை.
நண்பகலில் மீண்டும் பள்ளிவாசலுக்குத் திரும்பியபோது, ஆட்டோ ஓட்டுநர் அருகிலிருந்த கோல்டன் கபே என்ற உணவகத்தையும் அறிமுகப்படுத்தினார். பகலுணவு மிகவும் சுவையாக இருந்தது. சாப்பாடு, குழம்பு, கூட்டு அனைத்தும் தரமாக இருந்தன. விலையும் இலங்கை ரூபாய் 400 மட்டுமே.
அந்த அனுபவத்தால் இரவிலும் அங்கேயே சென்றோம். ஆனால் அப்போது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் கிடைத்தது. இட்லி, வடை அனைத்தும் பழையதாக இருந்தன. இடியாப்பமும் சொதியும் மட்டுமே ஓரளவு சாப்பிடும்படி இருந்தன. சீக்கிரம் சென்று சாப்பிட்டால் சிறப்பாகவே இருந்திருக்கும் என்பது என் எண்ணம். உணவகத்தை மூடும் நேரமாக இருந்ததால் அப்படியிருந்திருக்கலாம். நண்பகலில் அன்பாக உபசரித்த பணியாளருக்கும், இரவில் விருப்பமின்றிப் பரிமாறியவருக்கும் இடையேயான பெரும் வேறுபாடு தெரிந்தது.

ஒரே உணவகத்தில் இரண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவங்கள்!
அந்த உணவகத்தின் முன்னாள் உரிமையாளர் திருநெல்வேலி மாவட்டம் சின்ன மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர். நாங்கள் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அவர் மறைந்திருந்தார். திருநெல்வேலியில் ‘ஹோட்டல் ப்ளூ ஸ்டார்’ என்ற உணவகத்தையும் நடத்தி வந்ததாக அங்கிருந்த இரங்கல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளிவாசலுக்குள் செல்லும்போது பெண்கள் தலையை மூடவேண்டும் என்றனர். எனது அளவுக்கு ஏற்ற பர்தா அவர்களிடம் இல்லாததால், சேலையின் முந்தானையைத் தலைக்கு மேலாகப் போர்த்திக்கொள்ளச் சொன்னார்கள்.
உள்ளே சென்றதும், ஆண்களுக்கான கழிவறை மட்டுமே இருப்பதாக ஒரு பலகை இருந்தது. பெரும்பாலும் ஆண்களே தொழுகைக்கு வருவதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் தேவையென்றால் பெண்களுக்காக வரவேற்பறை அருகிலிருந்த கழிவறையைப் பயன்படுத்த அனுமதி அளித்தனர். தேவையை உணர்ந்து செய்திருந்த அந்த ஏற்பாடு பாராட்டத்தக்கதாக இருந்தது.
இலங்கையில் நான் கண்ட கட்டிடங்களில், என்னை மிகவும் கவர்ந்தது ஜாமி-உல்-அல்ஃபர் பள்ளிவாசல்தான்.
இது நீண்ட காலமாக ‘சம்மாங்கோட்டுப் பள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து வந்து வணிகம் செய்த முஸ்லிம் வணிகர்கள் அக்காலத்தில் ‘சம்மான்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கட்டிய பள்ளிவாசல் என்பதால் ‘சம்மாங்கோட்டுப் பள்ளி’ என்ற பெயர் நிலவியதாக ஒரு கருத்து உள்ளது. மற்றொரு விளக்கப்படி, பள்ளிவாசல் சமூகத் தீர்ப்புகள் வழங்கப்பட்ட இடமாக இருந்ததால் ‘சம்மான் + கோடு’ என்கிற சொல் மருவி இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்திய இஸ்லாமிய வணிகர்கள் முன்னெடுத்த இந்தக் கட்டுமானத்திற்கு உள்ளூர் இஸ்லாமிய சமூகமும் பொருளாதார ஆதரவு வழங்கியது. 1908-இல் கட்டுமானம் தொடங்கி, 1909-இல் நிறைவடைந்தது. பின்னர் 1975-ஆம் ஆண்டு பள்ளிவாசல் விரிவுபடுத்தப்பட்டது.
வெளியிலிருந்து பார்க்கும்போதே சிவப்பும் வெள்ளையும் கலந்த வடிவங்கள், மாதுளம்பழங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. சில இடங்களில் பழைய கால கேண்டி ஸ்டிரைப் (Candy Stripe) அலங்காரத்தை நினைவூட்டுகின்றன. முதல் பார்வையிலேயே உள்ளத்தைக் கவரும் கட்டடம் இது.
எங்களுடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தெலுங்கு இளைஞர்களும் வந்திருந்தனர். பள்ளிவாசலைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவர்களுடைய நண்பராக வந்திருந்தார். நாங்கள் இந்தியத் தமிழர்கள் என்று அறிந்ததும், மிகுந்த அன்போடு பல தகவல்களைப் பகிர்ந்தார். வீட்டிற்குக்கூட வருமாறு அழைத்தார். நேரமின்மையால் செல்ல இயலவில்லை.
எங்களுக்குச் சுற்றிக்காட்டிய வழிகாட்டியும் அதே அளவு அன்போடு நடந்துகொண்டார். சிறிய குழுவாக இருந்தபோதிலும், அனைவருடைய கேள்விகளுக்கும் பொறுமையாக விளக்கம் அளித்தார். புகைப்படம் எடுக்க நாங்கள் தங்கியபோதெல்லாம் காத்திருந்து, அனைவரும் ஒன்றாக வருகிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே அழைத்துச்சென்றார்.



பள்ளிவாசலின் உள்ளே நுழைந்தபின் எதை ரசிப்பது என்று தெரியவில்லை. தரையா? சுவர்களா? வண்ணக் கண்ணாடிச் சன்னல்களா? அலங்கார விளக்குகளா? கூரையின் நுணுக்கமான வேலைப்பாடுகளா? ஒவ்வொன்றும் தனித்தனி கலைப்பாடமாக இருந்தது.
அப்படியே பார்த்துக்கொண்டே ஆறு மாடிகளை ஏறிச் சென்றபோது மேலிருந்த கோபுரக் கலசம்கூட மாதுளம்பழத்தின் நெளிவு சுளிவுகளோடு வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். செங்கலும் சிமெண்டும் மட்டுமே கொண்டு இவ்வளவு அழகை உருவாக்க முடியுமா!
அந்த நொடியில்,
“மாதுளை அதரங்கள்; அதில் மாணிக்கக் கலசங்கள்…”
என்கிற பாடல் வரிகளே நினைவிற்கு வந்தன.

கைப்பிடிச் சுவர்களிலுள்ள சிறிய மாதுளம்பழ வடிவக் குமிழ்கள், சுற்றிலும் தெரிந்த கோபுரங்கள், தூரத்தில் விரிந்த துறைமுகம், கொழும்பு நகரின் பரபரப்பு—இவை அனைத்தையும் மேலிருந்து பார்த்தபோது கீழே இறங்கி வரவே விருப்பமில்லை.



கட்டிடக்கலையின் அதிசயங்களில் ஒன்று என்று தயக்கமின்றி ஜாமி-உல்-அல்ஃபர் பள்ளிவாசலைக் குறிப்பிடுவேன்.
கொழும்பு சென்றால் தவறவிடக்கூடாத இடமிது!
தொடரும்
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.





