கண்டி நகரத்தில் எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும், ஒரு மலையின் உச்சியில் அமைதியாக அமர்ந்திருக்கும் அந்தப் பெரிய வெண்ணிற புத்தர் கண்ணில் படுகிறார். நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்ட அந்தச் சிலை அமைந்திருக்கும் இடம்தான் பகிரவகந்த (Bahirawakanda). அதன் உச்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ மஹா போதி விகாரை (Sri Maha Bodhi Viharaya).
‘Bahirawakanda’ என்கிற பெயர் பொதுவாக பைரவரின் மலை என்கிற பொருளில் விளக்கப்படுகிறது. ‘கந்த’ என்பது சிங்களத்தில் மலையைக் குறிக்கும் சொல். இந்த மலையுடன் பைரவர் என்னும் பாதுகாப்புத் தெய்வத்தைச் சுற்றிய பழைய நாட்டுப்புற நம்பிக்கைகளும் கதைகளும் பின்னிப் பிணைந்துள்ளன.
அச்சத்தைச் சுமந்த மலை
நாயக்கர் மன்னர்களின் காலத்தில் இம்மலையில் பைரவருக்கான வழிபாட்டிடம் இருந்ததாக ஒரு மரபுக்கதை கூறுகிறது. காலப்போக்கில் அந்த வழிபாட்டைச் சுற்றி பல அச்சமூட்டும் கதைகள் உருவாகின. அவற்றில் மிகவும் கொடூரமானது பலியைப் பற்றியது.
திருமணமாகாத பெண்களைப் பலியிட்டால் பைரவரின் கோபம் தணியும் என்று பூசாரிகள் மக்களை நம்பச் செய்ததாகக் கூறப்படுகிறது. அச்சத்தில் வாழ்ந்த மக்கள் பல பெண்களைப் பலியாகக் கொடுத்ததாக அந்தக் கதை தொடர்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில், அரச யானைப் படையின் தலைவரான துனுவில கஜநாயக்க நிலமே (Dunuwila Gajanayake Nilame) என்பவரின் வருங்கால மனைவியே பலிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் அரண்மனையில் தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை மீட்டதாகவும், அதன் பின்னர் அந்தப் பலியிடும் வழக்கம் முடிவுக்கு வந்ததாகவும் நாட்டுப்புற மரபு சொல்கிறது.
இதற்கு இன்னொரு கதையும் உண்டு.
ஒரு காலத்தில் இந்த மலையிலிருந்து எழுந்த விசித்திரமான ஓசைகள் மக்களை அச்சுறுத்தியதாகவும், அது ஏதோ தீய ஆவியின் செயல் என்று மக்கள் நம்பியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அரசவையில் இருந்த ஒருவன், ஒவ்வோர் ஆண்டும் திருமணமாகாதப் பெண்ணைப் பலியிட்டால் அந்தத் தீய சக்தி அமைதியாகிவிடும் என்று மன்னரிடம் கூறினான். அந்த நம்பிக்கையும் வழக்கமாகிவிட்டது.
ஆனால் ஒருநாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பலிப்பெண் அந்த அமைச்சரின் மகனின் காதலியாக இருந்தார். அவரை மலையின்மீது அழைத்துச் சென்றபோது, அவரைக் காப்பாற்ற அமைச்சரின் மகன் புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் நடந்த சம்பவங்களால் அந்தப் பழைய மூடநம்பிக்கை உடைந்ததாகக் கதை முடிகிறது.
இரண்டு கதைகளிலும் ஒரு பொதுவான இழை இருக்கிறது. அச்சம், அறியாமை, மூடநம்பிக்கை ஆகியவற்றால் உருவான பலியிடும் எண்ணம் அதுவும் பெண்களைப் பலியிடும் எண்ணம் இறுதியில் உடைக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட கதைகளைச் சுமந்த மலையின் உச்சியில், இன்று எந்த அச்சத்தையும் ஏற்படுத்தாமல், அமைதியாக அமர்ந்திருக்கிறார் புத்தர். அந்த மாற்றமே இந்த இடத்தின் மிகப் பெரிய முரண்பாடாகவும், அதே நேரத்தில் மிக அழகான செய்தியாகவும் எனக்குத் தோன்றியது.
மடாலயத்திலிருந்து மாபெரும் புத்தர் சிலை வரை
இந்த மலை உச்சியில் ஸ்ரீ மஹா போதி விகாரையின் தொடக்கம் 1972ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அக்காலத்தில் காணி அமைச்சராக இருந்த ஹெக்டர் கொப்பேகடுவ (Hector Kobbekaduwa), பௌத்த துறவியான அம்பிட்டியே தம்மராம தேரர் (Ven. Ampitiye Dammarama Thero) அவர்களுக்கு இப்பகுதியில் நிலம் வழங்கியதாகப் பதிவுகள் கூறுகின்றன. தொடக்கத்தில் அவர் ஒரு சிறிய தற்காலிகக் குடிலில் தங்கி, விகாரைக்கான பணிகளை முன்னெடுத்ததுடன், மக்களிடமிருந்து நிதியும் திரட்டினார்.
பல ஆண்டுகளின் முயற்சிக்குப் பிறகு, மலையின் உச்சியில் பெரிய புத்தர் சிலையை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. சிலை 1992ஆம் ஆண்டில் நிறைவடைந்து, 1993 ஜனவரி முதலாம் நாள் குடியரசுத் தலைவர் ரணசிங்க பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.
26.83 மீட்டர், அதாவது ஏறக்குறைய 88 அடி உயரமுடைய இந்த வெண்ணிற புத்தர் சிலை, கண்டி நகரத்தின் பல பகுதிகளிலிருந்தும் தெளிவாகத் தெரியும் வகையில் மலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தர் தியான முத்திரையில் (Dhyana Mudra) அமர்ந்திருக்கிறார். அந்த அமைதியான முகமும், வெண்ணிற மேனியும், உயர்ந்த மலையின் பின்னணியும் சேர்ந்து சிலைக்கு தனித்த அழகை அளிக்கின்றன.
சிலையின் கீழ்ப்பகுதியில், புத்தரை நோக்கி ஒருவர் நிற்பது போல அமைந்துள்ள உருவத்தையும் பார்த்தோம். இந்த விகாரையை உருவாக்குவதற்காகப் பெரும் முயற்சி எடுத்த தம்மராம தேரரின் நினைவாக அது அமைக்கப்பட்டதாக அங்கு விளக்கப்பட்டது.
கண்டி நகரம் எங்கள் கண்முன்னே!
இங்கிருந்து ஊரையே பார்க்கலாம்; ஊருக்குள் எந்த இடத்திலிருந்தும் இதைப் பார்க்கலாம் என்பதாக இதன் அமைப்பு உள்ளது. கண்டி நகரமே எங்கள் கண்முன்னே விரிந்து கிடந்தது. நடுவில் கண்டி ஏரி. அதைச் சுற்றி வீடுகள். வீடுகளுக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் மலைகள். அந்த மலைச்சரிவுகளிலும் வீடுகள் படிப்படியாக ஏறிச் சென்றிருந்தன. மழைக்குப் பிறகு கழுவித் துடைத்ததுபோலத் தோன்றிய கரும்பச்சை மரங்கள் இடையிடையே செம்பூக்களைத் தூக்கி நிற்க, நகரம் முழுவதும் பசுமையின் பல வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியம் போலத் தெரிந்தது.
கீழே பார்த்தால் தலதா மாளிகை (Temple of the Tooth) அமைந்துள்ள பகுதியும் தெரிந்தது. கண்டியின் பழைய நகரமும், ஏரியும், மலைகளும், வீடுகளும் ஒரே பார்வையில் அடங்கிவிட்டன.
இரவு நேரத்தில் சிலை முழுவதும் மின்விளக்குகளால் ஒளிரச் செய்யப்படுவதாகக் கூறினார்கள். அப்போது கண்டி நகரத்தின் விளக்குகளுக்கிடையில் வெண்ணிறமாக ஒளிரும் அந்தப் புத்தர் சிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொண்டேன். ஆனால் நாங்கள் பகல் நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டுவிட்டதால், அந்தக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மலையேற்றத்தின் அமைதியான அழகு
மேலே ஏறிச்செல்லச் சிவப்புக் கம்பளம் போன்ற நிறத்தில் படிக்கட்டு, அதன் மேல் ஒரு பெருந்தட்டு போன்ற வெள்ளைப் பரப்பு, சுற்றிலும் வெண் கிராதி, மூலையில் மணி என அப்பகுதியே ஒரு அமைதியை உருவாக்குகிறது. சுற்றுச் சுவரில் விளக்கு வைப்பதற்கு ஏற்றாற்போல் இடம் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான புத்த கோவில் சுவர்களில் இம்மாதிரியான அமைப்பு உள்ளது. இதனுடன் இணைந்து ஆங்காங்கே இருக்கும் பூந்தொட்டிகள் அவற்றில் இருக்கும் பூக்கள் என அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.
புத்த விகாரைகளில் இதுபோன்ற விளக்கு வைக்கும் அமைப்புகளை முன்பும் பார்த்திருந்தாலும், மலையின் உச்சியில் குளிர்ந்த காற்றுடன் அவற்றைப் பார்க்கும்போது அந்தச் சூழலுக்கு இன்னொரு அழகு கிடைத்திருந்தது.
அப்போது மேலே மூன்று ஆண்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் சென்னை நகரைச் சேர்ந்தவர்கள். சிறிது நேரம் அவர்களுடன் பேசினோம். பின்னர் அவர்கள் புறப்பட்டுச்சென்றனர்.
நிலவுக்கல்
புத்த விகாரைகளின் நுழைவாயில்களில் காணப்படும் அரைவட்ட வடிவக் கல் கொழும்பு நகரில் ஏற்கனவே அறிமுகமானதே. அந்த அரைவட்டக் கல், நிலவுக்கல் (Sandakada Pahana) என்று அழைக்கப்படுகிறது. இலங்கைப் பௌத்தக் கட்டிடக்கலையில் இது மிகவும் சிறப்பான கூறாகும். குறிப்பாக அனுராதபுரக் கால நிலவுக்கற்களில் தாமரை, அன்னங்கள், கொடிவேலைப்பாடு, யானை, குதிரை, சிங்கம், காளை போன்ற பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன.

புத்தர் சிலையின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய அறை போன்ற அமைப்பு இருந்தது. அதன் நுழைவாயிலில்தான் அந்த அரைவட்ட நிலவுக்கல் இருந்தது. இருபுறமும் வாயில் காவலர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் காவல் உருவங்கள் புனித இடத்தைக் காக்கும் பாதுகாவலர்களாக இலங்கைப் பௌத்தக் கட்டிடக்கலையில் காணப்படும் மரபின் ஒரு பகுதியாகும்.
உள்ளே சென்றபோது சிறிய பீடத்தில் இரண்டு புத்தர் உருவங்கள் இருந்தன. சிறிய புத்தர் மிகவும் எளிமையான தோற்றத்தில் இருந்தார். அருகில் தங்க நிறத்தில் பெரிய புத்தர் உருவம், தங்க நிறச் சிறிய ஸ்தூபி, அரசமரத்தின் குறியீட்டு வடிவம் என அந்தச் சிறிய பீடம் முழுவதும் தங்க நிறத்தில் ஒளிர்ந்தது. சிலையின் பின்னாலும் பல புத்தர் உருவங்கள் வரிசையாக அமைந்திருந்தன.

வலப்புறத்தில் நாட்டார் தெய்வங்களுக்கான சிறிய சந்நிதிகளும் இருந்தன. பௌத்த விகாரை வளாகங்களில் தேவாலயங்கள் (Devales) என்றழைக்கப்படும் தெய்வச் சந்நிதிகள் அமைந்திருப்பது இலங்கையின் பழைய சமய மரபுகளுடன் தொடர்புடையது.

அங்கு இருந்த ஒரு பொருள் என்னுடைய கவனத்தை ஈர்த்தது.
அது ஒரு திரியல். நடுவில் வைக்கப்படும் முளை போன்ற பகுதியும், அதைச் சுற்றி இயக்குவதற்கான கைப்பிடியும் இருந்தது. அங்கு பார்த்த திரியல் வெறும் காட்சிப்பொருள் அல்ல; இன்னும் பயன்பாட்டில் இருக்கக்கூடும் என்கிற எண்ணமே எனக்கு அந்தப் பொருளைப் புதிதாகப் பார்க்கவைத்தது. ‘குரக்கன் காலா’ (Kurakkan Gala) என அழைக்கப்படும் இந்த வகை அரைக்கும் கருவி, தேவாலயச் சடங்குகளோடு தொடர்புடையதாகவும், தெய்வங்களுக்கு வழங்கப்படும் முருதன் பூஜா (Muruthan Pooja) என்ற படையலுக்குத் தேவையான குரக்கன் அல்லது அரிசியை அரைப்பதிலும் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசமரத்தின் நிழலில்
புத்தர் சிலைக்குப் பின்னால் வழக்கமான விகாரைகளில் இருப்பது போன்று, அசோகரின் மகள் கொண்டுவந்த அரச மரத்திலிருந்து உருவான அரசமரம் நிற்கிறது.
மலையின் உச்சியில் இன்னும் சிறிது நேரம்…
புத்தர் சிலையின் பின்புறமாக மேலே செல்லும் படிக்கட்டுகளும் இருந்தன. மிகவும் உயரம் வரை ஏறிச் சென்று சுற்றுப்புறத்தைப் பார்க்க முடிந்தது. அந்த உயரத்தில் நின்றபோது, கீழே தெரிந்த கண்டி நகரத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தேன்.
வெயில் பெரிய அளவில் இல்லை. காற்று குளிர்ச்சியாக இருந்தது. சூழலும் மிகவும் இதமாக இருந்தது. அதனால் உடனே கீழே இறங்க வேண்டும் என்ற விருப்பமே வரவில்லை. அங்கேயே இன்னும் சிறிது நேரம் இருக்கலாம் என்று தோன்றியது.
ஒரு காலத்தில் பயத்தாலும் பலியிடும் கதைகளாலும் சூழப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு மலையின் உச்சியில், இன்று மக்கள் அமைதியாக வந்து செல்கிறார்கள். அந்த முரண்பாடுதான் பகிரவகந்தாவை எங்களுடைய கண்டிப் பயணத்தில் மறக்க முடியாத ஓர் இடமாக மாற்றியது.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.





