இருதயராணி! சிலர் நம் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் உடன் பயணிப்பார்கள். பின்னர் அவரவர் பாதையில் பிரிந்துவிடுவோம். அவர்களைப் பற்றிய நினைவுகள் கூட நம்மிடம் பெரிதாக எஞ்சியிருக்காது. ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களைப் பற்றிய ஒரு செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும். அப்படியொரு அனுபவம்தான் இருதயராணியைப் பற்றிய என்னுடைய நினைவுகள்.

நான் கல்லூரியில் இரண்டாமாண்டு வணிகவியல் படித்துக்கொண்டிருந்தபோது, இருதயராணி முதலாமாண்டு வேதியியல் பிரிவில் வந்து சேர்ந்தார். எங்கள் கள்ளிகுளம் TDMNS கல்லூரியில் அந்த ஆண்டுதான் வேதியியல் பிரிவும் புதிதாகத் தொடங்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி. நான் வணிகவியல் படித்ததால், பாடங்கள் சார்ந்து அவருடன் நெருக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், கல்லூரி மாணவிகள் அனைவரும் பயன்படுத்திய ஒரே காத்திருப்பு அறை (Waiting Hall) எங்களுக்கிடையே பழகுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.

அந்தக் காத்திருப்பு அறை எங்களுடைய உலகம் என்றே சொல்ல வேண்டும். கல்லூரியில் பெண்களுக்கென்று ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தாலும், அந்த அறை எங்களுக்கு ஒரு பெரிய வெளியைத் திறந்துவிட்டிருந்தது. சிறு சிறு குழுக்களாக அமர்ந்து உண்போம். பேசுவோம். சில உரையாடல்கள் அங்கேயே முடிந்துவிடும். சில உரையாடல்கள் அறை முழுவதும் பரவி, விவாதமாக மாறும். அப்படிப்பட்ட விவாதங்களை உருவாக்கிக்கொள்வதில் இருதயராணியும் நானும் எப்போதும் முனைப்பாக இருந்தோம்.

இருதயராணி பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்வார் என்று நினைக்கிறேன். நான் அத்தகைய போட்டிகளில் எதிலும் பங்கேற்றதில்லை. ஆனால், நிறைய வாசிக்கும் பழக்கம் இருந்ததால் எந்த வகையான உரையாடலாக இருந்தாலும் எனக்கென்று ஒரு கருத்து இருக்கும்; அதற்கு எதிரான கருத்தையும் முன்வைப்பேன். இருதயராணியுடனான உரையாடல்களும் அப்படித்தான் அமைந்தன.

நாங்கள் இருவருமே கிறிஸ்தவப் பின்னணியிலிருந்து வந்தவர்கள் என்பதால், சமயம் சார்ந்த உரையாடல்களும் எங்களுக்குள் நிகழும். இருதயராணிக்கு இருந்த அளவுக்குப் பக்தி எனக்கு இருந்ததில்லை. அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றும். ஆனால், அந்த வேறுபாடுகள் உரையாடலை முடித்துவிடுவதில்லை. மாறாக, இன்னொரு கேள்வியை எழுப்பும்; இன்னொரு கருத்தைப் பேச வைக்கும். அன்றைய காத்திருப்பு அறை எங்களுக்கு உணவைப் பகிர்ந்துகொள்ளும் இடமாக மட்டுமல்லாமல், எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் வெளியாகவும் இருந்தது.

அவருடைய பெயர்கூட எங்களுக்கிடையே ஒரு விவாதத்திற்கான பொருளாகியிருக்கிறது. “இருதயராணி என்பது காவல் கிணறு மக்கள் வைக்கும் பெயராயிற்றே! உங்கள் வீட்டில் எப்படி வைத்தார்கள்?” என்று நான் கேட்டேன். பொதுவாகவே ஊரில் இருக்கும் ஆலயத்திற்கும் பெயர்களுக்கும் தொடர்பு உண்டு. காவல் கிணற்றில் இயேசுவின் திரு இருதய ஆலயம் இருப்பதால் அங்குப் பலரின் பெயருடன் இருதயம் என்ற சொல் ஒட்டிக்கொண்டிருக்கும். அவர், அது தமது தாயின் ஊர் எனக் குறிப்பிட்டு, பெண்களுக்கும் பெயர் வைக்கும் உரிமை இருக்கிறது என்ற பொருளில் பதிலளித்தார். இருதயம் என்பது அவரின் அம்மாவின் அப்பா பெயராம்.

இப்படியாக அதற்கு முன்பு நடந்த எங்கள் உரையாடலுடன் அந்தப் பதிலை இணைத்துப் பேசியதும் நினைவுக்கு வருகிறது. இப்போது திரும்பிப் பார்க்கும்போது, அந்தச் சிறிய உரையாடல்கூட எங்கள் அன்றைய சிந்தனைப் போக்கையும், எதையும் கேள்விக்குட்படுத்திப் பேசிக்கொண்டிருந்த இயல்பையும் நினைவூட்டுகிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் அவரவர் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கத் தொடங்கினோம். அதன் பிறகு இருதயராணியைப் பற்றி நான் பெரிதாகச் சிந்தித்ததில்லை. எனக்குத் திருமணமாகி, குடும்பம், குழந்தை என்று வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்த ஒரு காலத்தில் திடீரென்று அவரைப் பற்றிய செய்தி வந்தது.

இருதயராணி வள்ளியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்!

இந்தச் செய்தி எனக்குப் பெரும் வியப்பை அளித்தது. நான் அரசியல் பேசுபவர். ஆனால், கல்லூரிக் காலத்தில் இருதயராணி அரசியலில் ஆர்வம் கொண்டவராகவோ, அரசியல் களத்தில் இறங்கப்போகிறவராகவோ எனக்குத் தோன்றியதில்லை. அப்படியிருக்க, அவர் எப்படி அரசியலுக்குள் நுழைந்தார்? அந்த முடிவை எப்படி எடுத்தார்? பொதுவாழ்வில் இறங்குவதற்கான எண்ணம் அவருக்கு எப்போது உருவானது? இத்தகைய கேள்விகள் எனக்குள் எழுந்தன.

பின்னர் அவர் தேர்தலில் வெற்றிபெற்றச் செய்தியும் வந்தது. பேரூராட்சித் தலைவராக இருந்தபோது அவரது திருமணம் குறித்த செய்திகளும் காதில் விழுந்தன. இப்படியாக, அவ்வப்போது அவரைப் பற்றிய செய்திகள் வந்து சென்றன. அந்தப் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர் அரசியலில் தொடரவில்லை என்றும், வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார் என்றும் கேள்விப்பட்டேன்.
அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

கடந்த ஆண்டு நண்பர் சுப்பிரமணியன் ஒருநாள் இருதயராணியைப் பற்றிப் பேசினார். அவர் இப்போது நீதிபதியாக இருக்கிறார் என்ற செய்தியைச் சொன்னதோடு, நான் எழுதிவரும் “சாதனை படைக்கும் சாமானியர்” தொடருக்காக அவரைத் தொடர்புகொள்ளுமாறும் கூறினார்.

எனக்கு மீண்டும் வியப்பு ஏற்பட்டது. கல்லூரிக் காத்திருப்பு அறையில் என்னுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அந்தப் பெண், வள்ளியூர் பேரூராட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, வழக்கறிஞராகப் பணியாற்றி, இப்போது நீதிபதியாக உயர்ந்திருக்கிறார்! அவர் கடந்து வந்த பாதையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அவரைத் தொடர்புகொண்டேன். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை.

அதற்குப் பிறகு அவரை மீண்டும் தொடர்புகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த முயற்சிக்கு இனி வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அவர் மறைந்துவிட்டார் என்ற செய்திதான் வந்து சேர்ந்தது. சில செய்திகள், நம்முடன் வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி நாம் அறியாமல் விட்டுப்போனவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. இருதயராணியின் மறைவுச் செய்தி எனக்கு அப்படித்தான் அமைந்தது.

கல்லூரிக் காலத்தில் அவருடன் பழகிய நாட்கள் சில நினைவுத் துணுக்குகளாகவே என்னிடம் எஞ்சியிருந்தன. அப்போது அவருடைய எதிர்காலம் இப்படியிருக்கும் என்று நான் கற்பனை செய்ததில்லை. காலம் எவ்வளவு பெரிய மாற்றங்களை மனிதர்களுக்குள் நிகழ்த்திவிடுகிறது!

இப்போது எழுத அமரும்போது, எங்கள் கல்லூரியின் அந்தக் காத்திருப்பு அறை கண்ணீருடன் நினைவிற்கு வருகிறது. அங்கே அமர்ந்து உரையாடிய இருதயராணி, பின்னாளில் நீதிபதியாக உயர்ந்தார் என்பதை அறிந்தபோது ஏற்பட்ட வியப்பும், அவரைத் தொடர்புகொள்ள முயன்று முடியாமல் போன ஏக்கமும், இப்போது அவரது மறைவை நினைக்கும்போது ஒன்றாகக் கலக்கின்றன.

ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறு என்பது அவர் கடந்து வந்த பாதையை மட்டும் பதிவு செய்வதல்ல; அவர் வாழ்ந்த காலத்தின் சமூகச் சூழலையும், எதிர்கொண்ட தடைகளையும், தமது உழைப்பால் உருவாக்கிய மாற்றங்களையும் பதிவு செய்வதாகும். அந்த வகையில், மறைந்த நீதிபதி வே. இருதயராணி அவர்களின் வாழ்க்கை, தனிப்பட்ட முன்னேற்றத்தின் கதையாக மட்டுமல்லாமல், பின்புலம் ஏதுமின்றி, தன்னம்பிக்கையுடன் முன்னேற விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டும் வரலாறாகவும் அமைகிறது.

வள்ளியூர் பேரூராட்சித் தலைவர்
வே. இருதயராணி அவர்களின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது 1996 முதல் 2001 வரையிலான வள்ளியூர் பேரூராட்சித் தலைவராகிய பணிக்காலம்.

1991-இல் தொடங்கிய பொருளாதாரத் தாராளமயமாக்கலின் தாக்கத்தால் வள்ளியூர் போன்ற பகுதிகளில் வணிகமும் நகர வளர்ச்சியும் வேகமடைந்தன. மக்கள் தொகைப் பெருக்கம், போக்குவரத்து நெரிசல், சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் அதிகரித்தன.
1994-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சிச் சட்டம் (அம்மாவின் ஆட்சிக்காலம்), 1992-ஆம் ஆண்டின் 73, 74-ஆவது அரசமைப்புத் திருத்தங்களின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிய அதிகாரங்களையும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டையும் வழங்கியது. இதன்படி, தமிழ்நாட்டில் 1996-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன.

1996–2001 காலகட்டத்தில் வள்ளியூர் பேரூராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற இருதயராணி, உள்ளாட்சியில் பெண்களின் பங்கேற்பு விரிவடைந்த புதிய சூழலில், வளர்ந்து வந்த நகரத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய சவாலை எதிர்கொண்டார். தார்ச்சாலைகள், தெருவிளக்குகள், தூய்மையான குடிநீர் விநியோகம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தி, ஊழல் புகார்களின்றி முன்மாதிரியான நிர்வாகத்தை வழங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது.

வழக்கறிஞரிலிருந்து நீதிபதியாக — இருதயராணியின் பயணம்
வள்ளியூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்குப் பிறகு, இருதயராணி சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், பின்னர் நீதித்துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியானார். வழக்கறிஞர் பணியிலிருந்து நீதிபதிப் பொறுப்பு வரை அவர் மேற்கொண்ட பயணம், பொதுவாழ்வில் பெற்ற அனுபவத்தைச் சட்டத்துறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது.

வள்ளியூர் பேரூராட்சித் தலைவர் பொறுப்புக்குப் பிறகு, இருதயராணி சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். வழக்கறிஞராகத் தொடங்கிய அவரது பயணம், நீதிபதிப் பொறுப்பு வரை நீண்டது. பொதுவாழ்வில் மக்களுடன் பழகிப் பெற்ற அனுபவமும், அவர்களின் சிக்கல்களை நேரில் அறிந்திருந்ததும், சட்டத்துறையில் அவர் மேற்கொண்ட பணிகளின் பின்னணியாக அமைந்தன
வழக்கறிஞராகத் தொடங்கிய பயணம், நீதிபதிப் பொறுப்பாக வளர்ந்தது;

நீதிமன்றப் பணியுடன் நின்றுவிடாமல், மக்களிடம் சட்ட விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் பணியிலும் அவர் ஈடுபட்டார். அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும்போது, பதவிகளையும் ஆண்டுகளையும் மட்டுமல்லாமல், சட்டத்தைப் பற்றிய புரிதலைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தென் தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றிய அவர், குற்றவியல் வழக்குகளின் விசாரணைகளிலும் நீதிமன்றப் பணிகளிலும் ஈடுபட்டார்.
பின்னர் பட்டுக்கோட்டை, உத்திரமேரூர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றினார். 2020 பிப்ரவரி 24 அன்று உத்திரமேரூர் நீதிமன்றத்திலிருந்து கடலூர் மாவட்டத்துக்குப் பணிமாறுதல் பெற்றார்.

பின்னர், விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும் சார்பு நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதிமன்றப் பணிகளுடன் சட்ட விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டார். 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று, அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பணிக்காலத்தின் இறுதிப் பகுதியில், விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளராகவும் சார்பு நீதிபதியாகவும் பணியாற்றினார். நீதிமன்றச் செயல்பாடுகளோடு சட்ட விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டார்.
2024 பிப்ரவரியில், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அனைவரும் அடிப்படைச் சட்டங்களை அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களை அறிந்திருப்பது, சமூகத்தில் நிகழும் அநீதிகளைத் தட்டிக்கேட்க உதவும் என்பதும் அவரது உரையின் மையக் கருத்தாக இருந்தது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் அடிப்படைச் சட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியதாகச் செய்திகளில் பதிவாகியுள்ளது. சட்டம் என்பது நீதிமன்றங்களுக்குள் மட்டும் இருப்பதல்ல; மக்களின் அன்றாட வாழ்விலும் உரிமைகளைப் பாதுகாக்க உதவுவது என்பதை அவரது சட்ட விழிப்புணர்வுப் பணிகள் எடுத்துக்காட்டுகின்றன. 13/02/1968 அன்று பிறந்திருக்கிறார். 2025 டிசம்பர் 27 அன்று, 57 வயதில் அவர் மறைந்த செய்தி அவரை அறிந்தவர்களுக்கும் அவர் பணியாற்றிய சமூகத்திற்கும் இழப்பாக அமைந்தது.

ஒருவரை நினைவுகூர்வது என்பது அவர் வகித்த பதவிகளை வரிசைப்படுத்துவது மட்டுமல்ல. அவர் எந்தப் பின்னணியில் இருந்து பயணத்தைத் தொடங்கினார், எந்தப் பொறுப்புகளை ஏற்றார், தமது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் எவ்வாறு முன்னேறினார் என்பதைப் புரிந்துகொள்வதுமாகும். நீதிபதி வே. இருதயராணி அவர்களின் வாழ்க்கை அத்தகைய நினைவுகூரலுக்கு உரியதாகும். அவர் மறைந்துவிட்டாலும், அவரது வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளும் பதிவுகளும் தொடர்ந்து பேசப்பட வேண்டும்.

“ஒரு நாள் விமானத்தை பெண்களிடம் கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு விட்டுவிடுவிக்கிறோம், மற்ற 364 நாள்களும் கொடுத்தால் ஓட்ட மாட்டாரா? கொடுக்கிறதில்ல! தலையில ஐஸ் வச்சு உக்கார வச்சிட்டு மீதி எல்லா நாளும் அடிமைகளாய் நடத்தக்கூடிய நிலைமைதான்! இதெல்லாம் பாக்கும்போது எனக்கு என்ன தோணும்னா? ரீசென்டடா ஒரு கவித படிச்சேன்! “பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது; குதிகால் செருப்புகளில் மட்டும்!” இத பாக்கும்போது எனக்கு என்ன தோணிச்சுன்னா! உண்மையிலே பெண்களின் நிலையை அப்படியே தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டக்கூடிய ஒரு கவிதை தான் இதுவோ?
அப்பத்தான் பாரதி பாடினாரே
“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோமென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.”

அந்த பாரதியாரின் கனவை எந்த அளவிற்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்? பெண்கள் தினத்தை / மகளிர் தினத்தை ஒரு கொண்டாட்டமாய் தான் வைத்திருக்கிறோம். மொதல்ல எல்லாரும் சொல்லிட்டாங்க போராட்டமா எடுக்கணும்னு! அந்த போராட்டம் எங்கிருந்து வரும்? யாரோ ஒருத்த வந்து நமக்கு விடுதல கொடுக்க முடியாது! அந்த விடுதலை, அந்த சுதந்திரம் நமக்குள் இருந்து வரவேண்டும். நம்மக்கிட்டதான் அது இருக்குது!அதை செயல்படுத்த தயக்கம். எல்லாரையும் பார்த்து நீ தரல நீ தரல என்று சொல்லிக்கிட்டு உக்காந்திருக்கோம். ஏன் நமக்குள் இருக்கும் அந்த சுயவிடுதலையை நாம் ஏன் பயன்படுத்த தயங்குகிறோம்? அதுக்கு ஆயிரம் தயக்கம்! நமக்குள்ளிருக்கும் சுய விடுதலையை நாம் வெளிக்கொணராமல் யாரோ நமக்கு சுதந்திரம் தரப்போறாங்க! நாம சொகுசா அனுபவிக்கப்போறோம் னு நெனச்சா அந்த பெண் விடுதலை, பெண்ணுரிமை நமக்கு எப்போதுமே கெடைக்காது. அதனால பெண்களுக்கு நான் என்ன சொல்வேன் அப்பிடின்னா

பெண்ணே!
உன் விழிகள் உறங்கினால் விடியல் உனக்கில்லை
உன் கனவுகள் உறங்கினால் காவியம் உனக்கில்லை
உன் செயல்கள் உறங்கினால் வெற்றி உனக்கில்லை
எல்லாமே உனக்குள்
சுதந்திரமாக சிறகு விரிக்கப் பழகினால் மட்டுமே
நீ எதிர்பார்க்கும் உண்மையான பெண் விடுதலை
நமக்கு வந்து சேரும்

ஆம்! கட்டிய நாய்களல்ல நாம் கட்டிய தூரம் பாய்வதற்கு!
தட்டிக்கொடுக்க ஆளில்லையே என்று தடம் புரள்வதற்கு!

நாம் பெண்கள் நம் நிலையை நம் பெருமையை நம் திறமையை நம் சாதிக்கும் தன்மையை புரிந்து கொண்டு நம்மை நாம் ஏற்றுக் கொண்டு நம் விடுதலையை நமக்குள் இருந்து வரவழைத்து நம் வாழ்க்கைக்கு உறுதி கூறுவோம்; பிறர் வாழ்க்கைக்கு மெருகூட்டுவோம்; பலர் வாழ்க்கைக்கு வழிகாட்டுவோம்”

அவரது இந்த சிறு உரையே அவரின் கொள்கையை நமக்கு எளிதாகச் சொல்லிவிடுகிறது.

நீதிபதி இருதயராணி அவர்களின் பணிக்காலத்தில் பல விமரிசனங்கள் எழுந்திருக்கலாம்; நிறைகுறைகள் இருந்திருக்கலாம். ஆனாலும், “வள்ளியூர் நகரின் உள்கட்டமைப்பைச் செப்பனிட்டவர்; நீதிமன்றக் கூண்டில் ஏழை மக்களின் குரலாய் ஒலித்த அரசு வழக்கறிஞர்; இறுதியாக, மகளிர் நீதிமன்றங்கள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழி அடித்தட்டு மக்களின் கண்ணீரைத் துடைத்த மாண்புமிகு நீதிபதி வே. இருதயராணி அவர்களின் வாழ்வு, பின்புலமற்ற பல நூறு கிராமப்புற மாணவர்களின் விடியலுக்கான ஆகச்சிறந்த ஆவணம்!”

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.