படுக்கையின் ஓரத்தில் சுருண்டு படுத்திருந்த ரம்யாவைப் பார்த்து, அவளின் அம்மாவால் கண்ணீர் சிந்த மட்டுமே முடிந்தது. ஒரு வாரமாக அழுதுகொண்டிருக்கிறாள். ஏதோ பிரச்னை என்பது புரிந்தாலும் எதையும் அவள் பேசவில்லை.

ஒரு காலத்தில் ரம்யாவின் குறும்புச் சிரிப்பால் நிறைந்திருந்த அந்த வீட்டில், இப்போது அடர்த்தியான மௌனம் மட்டுமே.

ஒரு திருமணம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுமா? திருமணம் செய்வதே வாழ்வில் செட்டில் ஆகத்தானே? ஏன் ரம்யாவின் திருமணம் அவளது வாழ்வையே சூன்யமாக்கியது? அவள் அம்மாவின் மனதில் இடையறாத கேள்விகள் எழுந்தன. பதில் சொல்லத்தான் யாருமில்லை.

“திருமணம் வாழ்க்கையை அமைதியாக்கும்” என்று தானே பெரியவர்கள் சொன்னார்கள்?

அது ஒருவரின் உயிர்ப்பையே மெதுவாகக் குடித்துவிடவும் செய்யுமா?

ரம்யாவின் பெற்றோர் குழம்பித் தவித்தனர்.

இத்தனைக்கும் அவர்கள் சல்லடை போட்டுச் சலித்துத் தேர்ந்தெடுத்த வரன் ராகவ். மிகுந்த புத்திசாலி, நல்ல படிப்பு, நல்ல சம்பளம், அமைதியான குணம். விசாரித்தவரை மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம். ராகவும் ஒழுக்கசீலன், அமைதியானவன். ரம்யாவைப் போலக் கலகலப்பானவன் இல்லை என்பது மட்டும்தான் அவளது பெற்றோருக்கு இருந்த சிறிய மனக்குறை.

திருமணத்தின் முதல் சில வாரங்கள் ரம்யாவுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால், அமைதி என்பது எல்லா நேரத்திலும் நல்லதல்ல என்பதைப் புரிந்துகொள்ள அவளுக்கு நாட்கள் பிடித்தன.

சில காயங்கள் வார்த்தைகளால் ஏற்படுகின்றன. சில காயங்கள், ஒருவரின் சுயத்தை மெல்ல மெல்ல அழித்துவிடுகின்றன.

ராகவ் இரண்டாவது வகை.

ராகவின் ஒழுங்கு, ஒழுக்கம் எதிலும் சின்ன குறைகூடச் சொல்ல முடியாது. அப்படி ஒரு கச்சிதம்.

அவன் வளர்ந்த விதமும் அப்படித்தான். சரியான நேரம், சரியான முறை, சரியான நடத்தை என எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்த்த அவனது தந்தை, எப்போதும் எதிலும் அவனிடம் குறை காண்பார்.

“இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம்” என்பதுதான் அவரிடமிருந்து கிடைக்கும் உச்சகட்டப் பாராட்டு. அதைப் பார்த்து வளர்ந்த ராகவும் அப்படியே பழகிவிட்டான்.

விமர்சனத்துடனேயே வாழப் பழகியவனுக்கு, அது மற்றவரைக் காயப்படுத்தும் என்பது புரியாமல் போனதுதான் சோகம்.

ராகவ் அன்பைப் பொழிந்தாலும், தொடர்ந்து விமர்சனங்களுக்கு நடுவில் சுயமரியாதையோடு வாழ்வது ரம்யாவிற்கு அத்தனை எளிதாக இல்லை. எப்போது எதில் குறை காண்பானோ என்ற அச்சத்தோடே ஒவ்வொரு நாளும் நகரும் வாழ்க்கை சலிப்பைத் தந்தது.

கலைநயம் மிக்க ரம்யா, ‘இம்பர்பெக்ஷன்’ வாழ்வை அழகாக்கும் என்பாள். எதிலும் ‘பர்பெக்ஷன்’ ரோபோவால்தான் முடியும் என்பாள். இப்போது ஒரு ரோபோவைத்தான் திருமணம் செய்துகொண்டோமோ என்கிற சந்தேகமே வந்துவிட்டது. ரோபோவாவது அதன் வேலையைச் சரியாகச் செய்யுமே தவிர, மற்றவரைக் குறை சொல்லாது. ராகவ் அவளின் ஒவ்வொரு செயலிலும் ‘பர்பெக்ஷன்’ எதிர்பார்த்தான்.

ரம்யா வாய்விட்டுச் சிரித்தால், “கொஞ்சம் மெதுவா சிரிக்கலாம்ல?”

அவள் பாடிக்கொண்டே சமைத்தால், “கவனம் சாப்பாட்டுல இல்ல. அதான் உப்பு உரப்பு சரியா இல்ல.”

ஓவியம் வரைந்தால், “அந்த பெயின்ட் வாசனையில மூச்சு முட்டுது.”

அவள் அணியும் புடவை, வைக்கும் பொட்டு, தலை வாரும் முறை… எதிலும் ஏதாவது ஒரு குறை.

ஆடை தேர்வில்கூட அவளது ரசனையில் குறை காண்பான். தான் எடுத்துக் கொடுப்பதுதான் சிறந்தது என்கிற எண்ணம். அவனும் ஒன்றும் குறைவாக எடுக்க மாட்டான். விலை, தரம் அனைத்திலும் உயர்ந்ததைத்தான் தேர்ந்தெடுப்பான். ஆனால், அது அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்றெல்லாம் கவலைப்பட மாட்டான்.

முதலில் ரம்யா சிரித்துக் கடந்து போனாள். தன்னை மாற்றிக்கொள்ள முனைந்தாள். பிறகு விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் அமைதியாகிவிட்டாள்.

எதைச் சொன்னாலும் அவன் கேட்க விரும்புவதை மட்டுமே அவன் காதுகள் உள்வாங்கும். பின் எதற்காக வீண் முயற்சி?

அவன் ரம்யாவைவிட அதிகப் படிப்பறிவும் புத்திசாலித்தனமும் கொண்டவனாக இருக்கலாம். ஆனால், அவளுக்கென்று திறமைகள் இருந்தன. அவற்றைத் திறமைகள் என்று ஒத்துக்கொள்ள அவன் தயாராக இல்லை. எது புத்திசாலித்தனம், எது திறமை என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை ராகவுக்கு யார் கொடுத்தது?

ஒருநாள் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, அவளுக்கே தன்னைப் புதிதாகப் பார்ப்பது போல் இருந்தது.

துள்ளிக் குதிக்கும் ரம்யா எங்கே? காது வரைக்கும் விரியும் அந்தச் சிரிப்பு எங்கே? எப்போது கடைசியாக மனதாரச் சிரித்தாள் என்றுகூட நினைவில்லை.

மெதுவாகப் பாடுவதை நிறுத்தினாள். ஓவியம் வரைவதை நிறுத்தினாள். அலங்காரம் செய்துகொள்வதையும் நிறுத்தினாள்.

ஒரு கட்டத்தில், தனியாக யோசிப்பதற்கே அவளுக்குச் சலிப்பாகிவிட்டது. எப்படியும் அவன் குறை கண்டறிவான்; எப்படிச் சரியாகச் செய்ய வேண்டும் என்று பாடம் எடுப்பான். பிறகு எதற்காக யோசிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது.

“எனக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் அவருக்குத்தான் தெரியும்” என்று அவளே நம்பத் தொடங்கினாள்.

ஒருநாள் காய்கறி வாங்கச் சென்றபோது ஒரு விபத்து நடந்தது.

ஒரு கார், பைக் மீது மோதியது. சுற்றியிருந்தவர்கள் பதறிக்கொண்டிருந்தார்கள்.

சில நொடிகள் உறைந்து நின்ற ரம்யா, அடுத்த கணமே சுதாரித்துக்கொண்டாள். 108-க்கு அழைத்தாள். காயமடைந்தவருக்கு உதவ ஏற்பாடு செய்தாள். அவருடைய குடும்பத்தினரையும் தொடர்புகொண்டாள். மருத்துவமனைக்குச் சென்ற பிறகு ரத்தம் தேவைப்பட்டபோது, தானே கொடுக்க முன்வந்தாள்.

அவள் சுறுசுறுப்பாகச் செயல்பட்ட விதத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகுதான் வீட்டின் நினைவு வந்தது. தாமதமாகிவிட்டதே என்கிற பதற்றத்தோடு ராகவுக்குப் போன் செய்தாள்.

அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு வந்தவன், “உனக்குத்தான் எதுவும் தெரியாதே… இந்தத் தேவையில்லாத வேலை எல்லாம் எதுக்கு?” என்று கோபப்பட்டான்.

அப்போது காயமடைந்தவர், “சார்… உங்க மனைவி இல்லைன்னா இங்க நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும். ரொம்ப ஸ்மார்ட்.”

அந்த நொடி ரம்யாவுக்கு மூச்சே நின்றுவிட்டது போல இருந்தது.

“ஸ்மார்ட்…”

எத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த வார்த்தையைக் கேட்கிறாள்!

அந்த இரவு அவளுக்குத் தூக்கமே வரவில்லை.

ஒரு கேள்வி மட்டும் மனதில் சுற்றிக்கொண்டே இருந்தது.

“நான் யார்?”

ராகவ் பார்க்கும் குறைகளின் தொகுப்பா?

இல்லை… ஒருகாலத்தில் எல்லாராலும் பாராட்டப்பட்ட, தன்னம்பிக்கையோடு வாழ்ந்த ரம்யாவா?

ஏதோ வெளியேற வழியில்லாத குகைக்குள் மாட்டிக்கொண்டதைப் போல இந்த வாழ்க்கை மூச்சு முட்டியது. தன் வீட்டிற்குத் திரும்பிப் போய்விடலாம். ஆனால் என்ன சொல்வாள்? ராகவ் கெட்டவனா, கொடுமைக்காரனா, பொறுப்பில்லாதவனா? எதுவுமே இல்லை. ஆனால், நல்லவனாக இருப்பதாலேயே ஒருவனோடு வாழ்வது அத்தனை எளிதாகிவிடுவதில்லையே!

சில நாட்களுக்குப் பிறகு ராகவின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

ரம்யாவைப் பார்த்ததும் உற்சாகமாக, “ஹேய்! நீங்க ரம்யாதானே? உங்க குரலுக்கு நான் பெரிய பேன்!” என்றார்.

ரம்யாவால் சில நொடிகள் பேசவே முடியவில்லை.

அவளே மறந்துபோன ரம்யாவை யாரோ இன்னும் நினைவில் வைத்திருந்தார்கள்.

அந்த இரவுதான் ஒரு முடிவுக்கு வந்தாள்.

இங்கே இன்னும் இருந்தால், உயிரோடு இருந்தாலும் உயிர்ப்பில்லாமல் போய்விடுவோம்.

மறுநாள் சில உடைகளை எடுத்துக்கொண்டு அம்மா வீட்டிற்குக் கிளம்பினாள்.

“அம்மா…”

அதற்கு மேல் பேச முடியவில்லை. பெற்றோரும் எதுவும் பேசவில்லை.

அழுது தீர்த்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அம்மா என்னவாயிற்று என்று விசாரித்தார்.

“நான் இனிமே அங்க போகலை…” அதையும் முடிக்க முடியாமல் தடுமாறினாள். அந்தக் காலத்து மனுஷியான அம்மா மறுப்பு தெரிவிப்பாரோ என்கிற தயக்கம்.

அம்மா அவள் தலையை வருடினார்.

“இது உன் வீடு. இங்க இருக்க உனக்குக் காரணம் வேணுமா?”

அந்த ஒரு பதிலில் ரம்யாவிற்குப் புதுத் தெம்பு வந்தது.

முதல் சில நாட்கள் அவள் நிறையத் தூங்கினாள். நிறைய அழுதாள். பிறகு அமைதியாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் மனம் மெதுவாகச் சாந்தமடைந்தது.

ஒருநாள் கண்ணாடி முன் நின்றபோது அவள் கவனித்தாள். முகத்தில் மெலிதான புன்னகை ஒன்று விரிந்தது. விரக்தியில்லாத, மலர்ந்த புன்னகை.

அவள் மெதுவாகப் பாட ஆரம்பித்தாள்.

“என் குரல்… நன்றாகத்தான் இருக்கே!”

அவள் சிரித்தாள்.

அந்த நொடிதான் ரம்யாவுக்குப் புரிந்தது:

தன்னைக் காயப்படுத்தியது ராகவின் வார்த்தைகள் மட்டுமல்ல; அந்த வார்த்தைகளை உண்மை என்று நம்பத் தொடங்கியதும்தான்.

ராகவை விட்டு விலகுவது ஒரு முடிவு. ஆனால், அதற்குப் பிறகு இந்த உலகத்தில் தன்னுடைய இடத்தை மீண்டும் உருவாக்கிக்கொள்வதுதான் உண்மையான பயணம்.

ரம்யா மீண்டும் பாட ஆரம்பிப்பாளா?

ஓவியம் வரைவாளா?

பெரிய கலைஞராக மாறுவாளா?

யாருக்கும் தெரியாது.

ஆனால், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்.

அடுத்த முறை நாம் ரம்யாவைச் சந்திக்கும்போது… அவள் மீண்டும் நானே நானாய் இருப்பேன் என்கிற நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பாள்.

வாழா என் வாழ்வை வாழவே…

தாழாமல் மேலே போகிறேன்…

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.