“You know that women are always looked upon as nothing; but we are your mothers; you are our sons. Our cry is all for peace; let it continue. This peace must last forever. Let your women’s sons be ours; our sons be yours. Let your women hear our words.” – Nanyehi/Nancy Ward (Cherokee War Woman/Beloved Mother)

“பெண்கள் என்றால் ஒன்றுமேயில்லை என எப்போதுமுள்ள பார்வை உங்களுக்குத் தெரியும்; ஆனால் நாங்கள் உங்களின் அம்மாக்கள்; நீங்கள் எங்களின் மகன்கள். எங்களின் கதறல் அனைத்தும் அமைதிக்கானதுதான்; அது தொடரட்டும். இந்த அமைதி என்றும் நிலைத்திருக்கட்டும். உங்கள் பெண்களின் மகன்கள் எங்களுடையவர்களாக; எங்களுடைய மகன்கள் உங்களுடையவர்களாக. உங்கள் பெண்களின் காதுகள்  எங்கள் சொற்களைக் கேட்கட்டும்.” –  நன்யெஹி/நான்சி வார்ட் (செரோக்கி போர் பெண்மணி/அன்பிற்குரிய அன்னை)

இன்றைய வெர்ஜினியா மாகாணத்தின் ஜேம்ஸ் நதிக்கரையோரத்தில் தொடங்கியது அமெரிக்க வரலாறு. கிழக்கே, அட்லாண்டிக் கடல் கரை கட்டி நின்றது; மேற்கில் அப்பலேச்சியன் மலைத்தொடர் குறுக்கே மறித்தது. அதனால், ஆங்கிலேயர்களால் கிழக்கிலும் உடனடியாக மேற்குப் பக்கத்திலும் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. மற்ற அனைத்து திசைகளிலும் குருதிப்புனல் கொப்பளித்ததை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். விடிந்தால் போர், விடியும் முன்னரும் போர் என்பதால், விடிவேயின்றி நகர்ந்தது பூர்வகுடிகளின் அன்றாட வாழ்க்கை. 

அமெரிக்க வரலாற்றில் மிகக் கசப்பான, நெஞ்சை உருக்கும், மறக்க முடியாத மனித உரிமை மீறல்களில் ஒன்று செரோக்கி பூர்வகுடியின் (Cherokee)  ‘கண்ணீர்த் தடம்’ (Trail of Tears) என்ற வரலாறு. இந்த ‘கண்ணீர்த் தடம்’ செரோக்கிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல, சொந்த மண்ணை இழந்த சோகம் கிழக்கு அட்லாண்டிக் கரை தொடங்கி மேற்கு பசிபிக் கடற்கரைவரை நீடித்த கண்ணீர்க் காவியம் என்கின்றனர் வரலாற்றாளர்கள். செரோக்கி இனம் சிந்திய செந்நீரின் பெருக்கால் இதுவொரு குறியீடாகவே மாறியுள்ளது எனலாம். 

சொந்த மண்ணில் அமைதியாகவும் வளமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து வந்தனர் செரோக்கி பூர்வகுடிகள். அமெரிக்க அரசாங்கத்தின் நாட்டு விரிவாக்கக் கொள்கையும் ஆதிக்க மனப்பான்மையும் அவர்களை பலவந்தமாக மண்ணைவிட்டுத் துரத்தியது. துப்பாக்கிமுனையில் மிரட்டி, உருட்டி விரட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சோகம், ஒட்டுமொத்த அமெரிக்க சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியாகும். அவர்களைச் சொந்த தேசத்தைவிட்டு விரட்டி அந்நியமாக்க அமெரிக்க நாட்டின் இராணுவமே அனுப்பப்பட்டது.

1838-ஆம் ஆண்டில் ஜெனரல் வின்பீல்ட் ஸ்காட் (Winfield Scott) அதிகார வேட்கையுடனும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுடனும் செரோக்கிக் கிராமங்களுக்குள் நுழைந்தார். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டுகால அவகாசம் முடிவடைந்ததையடுத்து, மக்களுக்குப் புதிய எச்சரிக்கையோ முன்னறிவிப்போ கொடுக்கப்படவில்லை. வீடுகளுக்குள் புகுந்த படையினர், பூர்வகுடிகளின் உடைமைகளைக்கூட எடுக்க அனுமதிக்கவில்லை; இராணுவக் கெடுபிடியில் அவர்களை மிரட்டி வீடுகளைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். 

அவ்வாறு வலுக்காட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் அடிப்படை சுகாதார வசதிகளற்ற தற்காலிகச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு பெரும்பான்மையான மக்களை, ஆயிரக்கணக்கான மைல் தூரத்திலிருந்த மேற்குப் பகுதிக்கு (இன்றைய ஓக்லஹோமா மாகாணம் – Oklahoma State) நடந்தே செல்லும்படி கட்டாயப்படுத்தினர். வறுத்தெடுத்த வெயிலும் பசியும் புரட்டியெடுத்த நோய்களும் பனிப்பொழிவும் கடுங்குளிரும் பூர்வகுடிகளை விரக்தியின் எல்லைக்கே விரட்டின. உயிரற்று வீழ்ந்தன எண்ணற்ற உடல்கள். அவற்றை சரியான முறையில் புதைக்கவும் வழியில்லை. வலியைமட்டும் சுமந்து, வழியற்ற பயணத்தில் வலுக்கட்டாயமாக செலுத்தப்பட்டனர்.  

ஐரோப்பியர்கள் முதன்முதலில் வட அமெரிக்காவிற்கு வந்தபோது, அப்பலாச்சியன் மலைத்தொடரின் தெற்குப்பகுதி பசுமையான மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகளாகக் காணப்பட்டது. நீர் வளமும், மண் வளமும் கொழித்தது. இன்றைய  வட கரோலினாவின் (North Carolina) மேற்கிலுள்ள கிரேட் ஸ்மோகி மலைகள்( Great Smoky mountains), மேற்கு வெர்ஜீனியா (West Virginia), டென்னிஸி (Tennessee), தெற்கு கரோலினா (South Carolina), ஜார்ஜியா (Georgia), அலபாமா (Alabama) வரையிலும் உள்ள பிரம்மாண்டமான நிலப்பரப்பு செரோக்கி பூர்வகுடிகளின் ஆளுகையில் இருந்தது. 

செரோக்கிகள் வேட்டை, வேளாண்மை, ஆட்சி நிர்வாகம் முதலியவற்றில் நுட்பமான திறன் மிக்கவர்களாக இருந்தனர். அன்றாட வாழ்க்கைக்கான நடைமுறைகளை அமைதியும் கருணையும் நிறைந்த வெண்மைத் தலைவர் (White Chief) மேற்கொள்வார். போர்க்கால நடவடிக்கைகள் செந்நிறத் தலைவர் (Red Chief) பொறுப்பில் விடப்பட்டன.

விவசாயப் பொறுப்புகளோடு, போர் நிர்வாகத்திலும் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. ‘வார் உமன்’ (Beloved Women / War Women) எனப்படும் போர்ப்பெண்டிரின் பங்கு முக்கியமாக இருந்துள்ளது. அவர்கள், போர்க்கைதிகளாகக் கொண்டு வரப்படும் பகைவர்களில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டுமென முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் இருந்துள்ளனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகளிலும் அவர்களின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, நன்யெஹி அல்லது நான்ஸி வார்ட்  (Nanyehi/Nancy Ward) என்ற செரோக்கி வீராங்கனையின் செயல்பாடுகளை வரலாறு வியப்புடன் விவரிக்கிறது. பெண்களின் முடிவெடுக்கும் திறனுக்கும், அவர்களுக்கு வாய்ப்பளித்து மதிப்பதிலும் செரோக்கி இனம் சிறந்த முன்னுதாரணமாக இருந்துள்ளது. 

ஜனநாயக முறையில் நிர்வாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டிருந்த தத்துவார்த்த முதிர்ச்சி, செரோக்கி இனத்தின் மாண்பை உணர்த்துகிறது. இவ்வாறு நாகரிகத்தில் சிறந்த பூர்வகுடிகளை ஆங்கிலேயக் காலனிவாசிகள் ‘காட்டுமிராண்டிகள்’ (Savages) என்று முத்திரை குத்தி நிலங்களைப் பிடுங்கிக்கொண்ட வரலாற்றுப் பொய்யை முரண்நகை என்று கூறுவதா? நயவஞ்சகம் என்று கூறுவதா? 

1540-ஆம் ஆண்டு, செரோக்கிகளின் நிலப்பகுதிக்குள் முதன்முதலில் காலடி எடுத்துவைத்த ஐரோப்பியர் ஸ்பெயின் நாட்டுத் தளபதி ஹெர்னான்டோ டி ஸோட்டோ (Hernando de Soto) ஆவார். தங்கச் சுரங்கங்களை தேடி இப்பகுதிக்கு வந்தவர் அவர். பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பியர்களின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புதிய பூமியின் வளங்கள் பற்றிய செய்திகள் ஐரோப்பாவில் தீயாகப் பரவியது. அதன் காரணமாக, இப்பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளின் மும்முனைத் தாக்குதல் தொடங்கியது. அந்நிலப்பரப்பு, உலக வல்லரசுகளின் சதுரங்கப் பலகையானது; அம்மண்ணின் மைந்தர்கள் புவிசார் அரசியலின் பகடைக்காய்கள் ஆயினர். 

செரோக்கி மண்ணில் கால்பதித்த ஐரோப்பியர்களுக்கு, பூர்வகுடிகளின் பண்பாட்டுக் கூறுகளும் ஆட்சியமைப்பும் பிரமிப்பைத் தந்தன. அவர்கள் தங்களுக்குள் ஏழு இனக்குழுக்களாகப் பிரிந்து மருத்துவம், ஆன்மிகம், போர் மற்றும் பாதுகாப்பு, வெளியுறவு நிர்வாகம், தகவல் தொடர்பு, காட்டு வளம் காத்தல், கலை கலாச்சாரமெனப் பங்கிட்டு, பண்பட்டு வாழ்ந்த நாகரிகமாக இருந்தனர்.

தென்மேற்கில், அப்பலாச்சியன் மலைத்தொடரின் பகுதியான கிரேட் ஸ்மோக்கி மலைத்தொடர் வரை இருந்த சிரோக்கிகளின் நிலப்பரப்பிற்குள் ஆங்கிலேய குடியேறிகள் ஊடுருவத் தொடங்கினர். இக்காலகட்டத்தில், இப்பகுதியில் கிடைத்த மான் தோல் ஐரோப்பியச் சந்தையில் பொன்முட்டையிடும் வாத்தாகக் கருதப்பட்டது. அரசியல்நுட்பமும், சூழலைத் தகவமைத்துக் கொள்வதில் வல்லமையும்கொண்ட செரோக்கி பூர்வகுடிகள், ஐரோப்பியர்களுடன் பண்டமாற்று வணிகம்மூலம் ஆயுதங்களையும், வணிக யுக்திகளையும் கற்றனர். மான் தோல் வணிகம் கொடிகட்டிப் பறக்கத்தொடங்கியது; ஆனால் பழங்குடியினரின் இயற்கை சமன்பாடு குலையத்தொடங்கியது. மான் தோல் வணிகம் அப்பழங்குடியினரின் பொருளாதாரத்தின்  முதுகெலும்பானது. அதைத் தொடர்ந்து, காட்டு வளங்கள், வேளாண்மையென தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ்ந்த வந்த பூர்வகுடிகளின் வாழ்க்கைமுறை முழுமையாக ஐரோப்பிய வணிகத்தைச்சார்ந்ததாக மாறத்தொடங்கியது. 

இந்நிலையில் செரோக்கிகள் தொலைநோக்குப் பார்வையுடன் ஸ்திரத்தன்மையை நோக்கி நகரட்ஹ் திட்டமிட்டனர். ஆங்கிலேர்களின் எழுத்தறிவே அவர்களின் முன்னேற்றத்திற்கு அச்சாணியென்பதை செகுவோயா (Sequoyah) என்ற செரோக்கி தலைவர் உணர்ந்து, அரும்பாடுபட்டு எழுத்து மற்றும் ஒலி வடிவத்தை (syllabary) உருவாக்கினார். அவரது பெருமுயற்சியால் அம்மக்களிடம் ஏட்டுக்கல்வி பரவியதுடன், ‘செரோக்கி ஃபீனிக்ஸ்’ (Cherokee Phoenix) என்கிற செய்தித்தாள் வெளிவரவும் அவர் முதன்மைக் காரணமாக விளங்கினார். செரோக்கி மொழியிலும் ஆங்கிலத்திலும் இருமொழிச் செய்தித்தாளாக வெளியிடப்பட்ட இத்தாள், பழங்குடியினரின் கண்ணோட்டத்தைப் பன்மடங்கு விரிவுபடுத்தியது. செரோக்கியர்கள் அமெரிக்க அரசியலமைப்பைப் போன்றே தமக்கெனச் சொந்தமாக நாடாளுமன்றம், நீதிமன்றம், முதன்மை அதிபர் (Principal Chief John Ross) ஆகியவற்றுடன் கூடிய அரசியலமைப்பை இயற்றி தங்கள் தேசத்தை திறம்பட நிர்விகிக்கத் தொடங்கினர். 

அதே நேரத்தில், அடுத்தடுத்த ஆங்கிலேயக் குடியிருப்புகள் கூடியதால்,  குடியேறிகளின் மக்கள்தொகைப் பல்கிப்பெருகியது. நிலத்திற்கான தேவை அவர்களின் அன்றாடப் பிரச்னையானது.

செரோக்கிகள் பொருளாதார நிலைத்தன்மையுடன், ஆங்கிலேயரின் நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளையும் ஏற்று அவர்களுடன் இணக்கமான நேச நாடாக வாழமுற்பட்டனர்.  அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுபோர்களும், எல்லைத் தகராறுகளும் நடந்தாலும், வீரமும் துணிவும் மிகுந்த குணத்தால் அப்பகுதியில் நிலைத்தன்மைத் தக்கவைத்துக்கொண்டனர். தவிர்க்கமுடியாத, தகர்க்கமுடியாத தலைமையிடத்தை பூர்வகுடிகள் தங்களுடையதாகக் கொண்டிருந்தனர். 

வெள்ளையினக் குடியேறிகளுக்கோ செரோக்கி மக்களின் வளர்ச்சியும் நிலவளமும் கண்களை உறுத்தின. அபரிமிதமான பருத்தி விளைச்சலுக்கு உகந்த நிலங்களும், குறிப்பாக ஜார்ஜியா மாநிலத்தில் செரோக்கி நிலங்களில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும், வெள்ளையர்களின் ஆக்கிரமிப்புவெறி உச்சமடைந்தது. 1830-களின் தொடக்கத்தில் மில்லியன் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் செரோக்கிகள் உட்பட ஐந்து பூர்வகுடி இனங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வந்தனர். ஆனால் அடுத்த பத்தாண்டுகளுக்குள், அந்த எண்ணிக்கை மிகச் சொற்பமான சதவீதமாகச் சுருங்கிப்போனது.

அப்போதைய அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் (Andrew Jackson) பழங்குடியினரைத் தமது பாரம்பரிய நிலங்களிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்துவதை (Indian Removal) தனது நிர்வாகத்தின் முக்கியக் கொள்கையாகக் கொண்டிருந்தார். அமெரிக்க அடித்தளத் தலைவர்களில் (Founding Fathers) ஒருவரான தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) போன்றோரின் சிந்தனைகளும் ஊக்கமும் அவரின் இக்கொள்கைக்கு விதையானது என்பது வரலாற்றாசிரியர்களின் கணிப்பாக உள்ளது.

சாமுவேல் வோர்செஸ்டர் (Samuel Worcester) என்கிற கிறித்துவப் பாதிரியார், பூர்வகுடி கிராமங்களில் வசித்து வந்தார். அவர் செரோக்கி மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்ததால், அவரைக் கைதுசெய்ய ஜார்ஜியா மாகாண அரசு துடித்தது. அவருக்கும் ஜார்ஜியா மாகாணத்திற்குமிடையே நடைபெற்ற வழக்கு (Worcester v. Georgia, 1832), பூர்வகுடிகளைக் கட்டாயமாக வெளியேற்றும் வரலாற்றுப் பிழையை மேலும் துரிதப்படுத்தியது. ‘இறையாண்மையுடன் தன்னாட்சி செய்யும் செரோக்கி தேசத்திற்குள் தலையிட ஜார்ஜியா மாகாணத்திற்கு எந்த அதிகாரமுமில்லை’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் இத்தீர்ப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

இதற்கிடையில், சொந்த மண்ணைவிட்டு வெளியேறுவது குறித்துச் செரோக்கி இனக்குழுக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவின. ஏற்கனவே இயற்றப்பட்ட ‘இந்தியர் அகற்றும் சட்டத்தின்’ (Indian Removal Act) கீழ், பூர்வகுடிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்காக அமெரிக்க அரசு காய்களை நகர்த்தியது. 1835-இல் ‘நியூ எகோட்டா’ (Treaty of New Echota) என்கிற போலியான உடன்படிக்கை வழியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு சிறு குழுவின் சம்மதத்தைப் பெற்று வெளியேற்றத்தை அமெரிக்க அரசு சட்டப்பூர்வமாக்கியது. இந்த அநீதிக்கு எதிராக முதன்மைத் தலைவர் ஜான் ராஸ் (John Ross) தலைமையில் செரோக்கிகள் பல்லாயிரக்கணக்கான கையெழுத்துகளைச் சேகரித்தனர். வலிமையாக ஓங்கிக் குரலெழுப்பியும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். ஆனால், அவர்களின் அறப்போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போயின.

.

ஏகாதிபத்திய எதேச்சதிகாரத்தின் எடுத்துக்காட்டாக ஆனது இந்த வலுக்கட்டாய வெளியேற்றம். இந்நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பழங்குடியினரின் உயிரைக் குடித்தது; வாழ்வாதாரத்தை அழித்தது. வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட செரோக்கிகள் மிஸ்ஸிஸிப்பி நதியைத் தாண்டி (இன்றைய ஓக்ஹோமா மாநிலம்) இந்தியப் பிரதேசம் (Indian Territory) என்கிற இடத்தில் சென்று வாழவேண்டுமென நிர்பந்திக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒதுக்கப்பட்ட பூர்வகுடி (இந்தியப்) பிரதேசம் (Indian Territory) அவர்களின் கட்டாயப் புகலிடமானது. அவ்வாறு வலிந்து குடியேற்றிய ஐம்பது ஆண்டுகளுக்குள் ஓக்லஹோமா பகுதியிலும் கணக்கற்ற நில அபகரிப்பு முழுவீச்சில் தொடர்ந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? 

ஒரு காலத்தில் முழுமையாக பூர்வகுடிகளின் நிலமாக அறிவிக்கப்பட்டிருந்த ஓக்லஹோமா, 1907-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாகாணமானது. 1800களில் நடைபெற்ற பல்வேறு அரசியல் தந்திரங்கள் செரோக்கி பூர்வகுடியை பல்வேறு பிரிவுகளாகச் சிதறடித்தது. இன்று ஒன்றுபட்டு உயரும் நோக்கத்தோடு கரங்களை இணைக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு பின்புலமாக பற்பல செரோக்கி பழங்குடித் தலைவர்களின் தியாகமும் அறிவார்ந்த செயல்பாடுகளும் அடித்தளமாக அமைந்துள்ளன.

 நவீன செரோக்கி வரலாற்றில் முதல் பெண் முதன்மைத் தலைவராகப் (Principal Chief) பதவியேற்றார் வில்மா மேன்கில்லர். சிதறிக்கிடந்த மக்களை ஒத்த சிந்தனையுடன் ஒருங்கிணைப்பதிலும், சமூகத்தின் பொருளாதார மற்றும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பிளவுபட்ட பூர்வகுடிகளை ஒன்றிணைத்து இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை கூடுகைகளை நடத்துவதில் வெற்றி கண்டுள்ளார். 2022-ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் அவரின் உருவப்படத்தை கால் டாலர் (25 சென்ட் / Quarter) நாணயத்தில் நாணயத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 

.

சொல்லப்போனால், இந்தக் கண்ணீர்த் தடப் பயணம் (Trail of Tears) 5,000 மைல்களுக்கு மேல் நீளமானது. ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கியதாகும். (அலபாமா (Alabama), அர்கன்ஸா (Arkansas), ஜார்ஜியா (Georgia State), இல்லினாய் (Illinois), கென்டக்கி (Kentucky), மிசோரி (Missouri), வட கரோலினா (North Carolina), ஒக்லஹோமா (Oklahoma), டென்னிஸி  (Tennessee)).

இவ்வளவு இழுபறி,  இழப்பு, ஆதிக்க வெறியாட்டத்திற்குப் பிறகும்  பழங்குடிகளின் அடையாளங்கள்  அழியவில்லை. வட கரோலினா, தென் கரோலினா, ஜார்ஜியா, டென்னிஸி, அலபாமா, ஃபுளோரிடா(Florida), மிசோரி, ஓரிகான்(Oregon state) ஆகிய இடங்களில் எண்ணற்ற அடையாளச் அடையாளச் சின்னங்களும் வரலாற்றுச் சுவடுகளும் அமைந்துள்ளன. உழைப்பிற்கு அயராத அம்மக்கள், முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும் முக்கிய பூர்வகுடி இனம் என்பது சற்று ஆசுவாசப்படுத்தும் அரிய செய்தியாகும். 

தொடர்ந்து ஒலிக்கும்…

பெட்டிச் செய்தி 

அமெரிக்க அரசுக் குறிப்புகளின்படி, ஆண்ட்ரூ ஜாக்சனின் நிர்வாகம் நடத்திய சுமார் 70 வெளியேற்ற ஒப்பந்தங்களின் காரணமாக கிழக்கு, தெற்குப் பகுதிகளில் வாழ்ந்த 18 முதல் 20-க்கும் மேற்பட்ட பிரதான பழங்குடி இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் (உதாரணமாக: செரோக்கி (Cherokee), சாக்டா (Choctaw), சிகாஷா (Chickasaw), க்ரீக் (Creek), செமினோல் (Seminole), பொட்டாவடோமி (Potawatomi), ஒட்டாவா (Ottawa), வயாண்டா (Wyandotte) போன்றவை). 50,000 முதல் 60,000-க்கும் அதிகமான பூர்வகுடி மக்கள் மிஸிஸிப்பி (Mississippi River) நதிக்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாகத் துரத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர். வடக்குப் பகுதியையும் கணக்கிட்டால், ஒட்டுமொத்தமாக பல்லாயிரக்கணக்கான (சுமார் 60,000 முதல் 1,00,000 வரை) பழங்குடி மக்கள் இந்த நேரடி இடம்பெயர்வு மற்றும் ஒப்பந்தங்களால் தங்கள் சொந்த மண்ணை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் கண்ணீர்த் தடமல்ல; தடங்கள் என்கிறோம். 

படைப்பாளர்

ராஜி வாஞ்சி ( ராஜஶ்ரீ வாஞ்சிநாதன்) 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வசிக்கும் ராஜி, கட்டுரையாளர், கவிஞர். இவரது ‘நீளிடைக் கங்குல்’ 2020ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலுக்கான விருது வென்றுள்ளது. கவிஞர் அமிர்தகணேசனுடன் இணைந்து, ‘ஏன் விரட்டினீர்கள், எங்களை?’ என்கிற அமெரிக்கப் பூர்வகுடிகள் பற்றிய வரலாற்றுக் கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார். ‘குறிஞ்சி பூத்த வேலி’, ‘ஜன்னல் உரசும் வண்ணத்துப்பூச்சி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். குழுவாக இணைந்து பல படைப்புகளைத் தந்துள்ளார். இவரது பல படைப்புகள் தொகுப்பு நூல்களில் வெளியாகியுள்ளன. இவரது ஹைக்கூ, சிவகாசி அய்யாநாடார் ஜானகிஅம்மாள் கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கப் பேரவையின் FeTNA கவியரங்கங்களில் இடம் பெற்றுள்ளார்; கவியரங்க ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மகாகவி ஈரோடு தமிழன்பன் 80 விருது, Women Achievement Award 2022 for exemplary service to the community, வெளிநாடு வாழ் பெண் கல்பனா சாவ்லா விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்தின் இலக்கிய இயக்குநராகப் பணியாற்றியவர், அதன் ‘தமிழ்ச்சாரல்’ இதழ் ஆசிரியராகவும் செயல்பட்டுள்ளார். ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்தின் ‘நாளைய பாரதி’ என்கிற வடஅமெரிக்க அளவிலான, அனைத்து வயதினருக்குமான இலக்கியப் பேச்சுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி வடிவமைப்பில் முக்கிய பங்கும் வகித்துவருகிறார். இவரின் படைப்புகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.